புகைப்படம் கலையா? -ஏ.வி.மணிகண்டன் [தொடர்ச்சி]

[தொடர்ச்சி]

எந்தக் கலைக்கும் இரண்டு இயங்கு தளம் உண்டு. ஒன்று அதன் பயன்பாட்டு தளம் (applied art) மற்றது தத்துவார்த்த தளம் அல்லது நுண்தளம் (work of art). புகைப்படக் கலையில் பயன்பாட்டு தளம் என்பது அன்றாடம் நம்மை வந்து சேரும் அனைத்து வடிவங்களையும் உள்ளடக்கியது. பத்திரிகைகளில், இணைய தளங்களில், சொந்த வாழ்வின் சுக துக்கங்களில் நாம் பதிவு செய்பவை உட்பட. சுருக்கமாக நமக்கு புகைப்படக் கலை என்பதே இவைதான். இவற்றைக் கொண்டு உருவாவதே புகைப்படக் கலை குறித்தான நமது புரிதல்களும்.

அந்தப் புரிதல்களை இவ்வாறு தொகுத்துக் கொள்ளலாம்.

1 புகைப்படம் உண்மையை பதிவு செய்கிறது.

2 அது பதிவு செய்வதாலேயே அது சொந்தமாக ஒரு படைப்பாகாது.

3 அது எதைக் காட்டுகிறதோ அதுவே அது.

4 எனவே அதில் நுட்பமாக புரிந்து கொள்ள ஏதுமில்லை.

அது ஒரு கருவியால் பதிவு செய்படுவதால் அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம், அதில் எந்த தனித்துவமும் இல்லை. (வேறு ஏதேனும் விட்டுப்போயிருந்தால் குறிப்பிடவும்).

உண்மையில் இவை எல்லாமும் நூற்றாண்டு காலமாக கலை உலகில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு, தொகுக்கப்பட்டு முன்வைக்கப்படுகின்றன.அவற்றை உள்வாங்கி ஓர் இயக்கமாக முன்னகர்ந்து கொண்டிருகின்றது புகைப்படக்கலை.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே இந்த “உண்மையை பதிவு செய்வது”குறித்த விவாதங்கள் நிகழத் துவங்கி விட்டன. மேற்பார்வைக்கு புகைப் படம் உண்மையை பதிவு செய்வது போலத் தோன்றினாலும் அது அப்படி இயங்குவதில்லை. புகைப்படத்தில் இரண்டு உண்மைகள் இயங்குகின்றன.

ஓன்று அதன் வடிவம் சார்ந்த உண்மை (objective truth) மற்றது அதன் உள்ளடக்கம் சார்ந்த உண்மை (subjective truth). உதாரணத்திற்கு ஒருவரின் கையில் ஒரு வயலினை கொடுத்து கொஞ்சம் ஏக்கமாக முகத்தை வைத்துக் கொண்டு இருக்கும்படி ஒரு புகைப்படத்தை எடுக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவரைத் தெரியாதவர்களுக்கு அவர் ஒரு வயலினிஸ்ட்டாகதான் தெரிவார். அவர் கையில் இருப்பது வயலின்தான், அந்த பாவம் கூட அப்படியே இருக்கக் கூடும், அந்த அளவில் அது உண்மையே (வடிவம் சார்ந்த உண்மையில்). உள்ளடக்க உண்மையில் அது அவ்வாறு இல்லை.

இதே பிரச்சனை மற்ற கலைகளில் இருப்பதில்லை, ஒரு ஓவியத்தில் அல்லது கதையில் நாம் ஒருபோதும் முழு முற்றான உண்மையை எதிர்பார்ப்பதில்லை.நீங்கள் கொலை செய்தீர்களா என்று ஒரு நாளும் ஒரு எழுத்தாளரை கேட்பதில்லை, செய்திருப்பார் என்று நினைத்துக் கொள்வதும் இல்லை. ஏனெனில் எல்லா கலைகளும் புனைவின் சாத்தியங்களே என்பதை நாம் அறிந்திருக்கின்றோம். அது இலக்கியம் என்றும் அதன் உண்மை படைப்புக்குள் இயங்கும் உண்மை என்றும் ஒரு புரிதல் இருக்கின்றது.

புகைப்படத்தில் நமக்கு அப்படி இல்லாமற் போனதன் காரணம் நம்முடைய பொதுப் புத்தியில் அது “உண்மை சார்ந்த வடிவமாக” தீவிரமாக பதிந்து இருக்கின்றது. ( அதன் காரணம் நமக்கு புகைப்படங்கள் வந்து சேரும் ஊடகங்களான நாளிதழ்கள் மற்றும் அன்றாட வாழ்வின் பதிவுகள் உண்மை சார்ந்த வடிவமாக இருப்பதால் )

உண்மையில் அது பயன்பாட்டுக் கலையாக இருந்தால் மட்டுமே அது உண்மையாக இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது, செய்தித் தாளில் வருவதைப் போல. தூய கலையில் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நாம் பயன்பாட்டுக் கலையின் புரிதலைக் கொண்டு தூய கலையை அணுகும் போதே இந்த பிரச்னை நிகழ்கின்றது.

இந்த புரிதல் நிகழ்ந்த பின் நமக்கு உடனே புகைப்படக் கலை ஒரு நம்பகத்தன்மையற்ற ஒன்றாக தோன்றக் கூடும். மாறாக இதையே அதன் சாத்தியமாக யோசித்தால் உங்களுக்கு ஒரு புனைவின் அல்லது படைப்பின் எல்லா சாத்தியங்களும் புகைப்படக் கலையில் இருப்பது தெரியவரும்.ஒரு வார்த்தையை அதன் முற்றான அர்த்தத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டியதில்லை எனும்போது உங்களுக்கு கிடைக்கும் சாத்தியம் நீங்கள் அதை எதாகவும் பயன்படுத்தலாம் என்பது.

அந்த எண்ணற்ற சாத்தியங்களுக்கு நடுவே எப்படி நீங்கள் சரியான சாத்தியங்களை உருவாக்குகின்றீர்கள் என்பதை பொறுத்தே அதன் அர்த்தமும் உருப்பெறுகின்றது. இதை நாம் ஒத்துக் கொள்ளும் பொழுது அங்கே படைப்பாளியின் தனித்துவமும் முக்கியமாகின்றது.

Elementary Calculus சமீபத்தில் வந்த புகைப்பட புத்தகங்களில் முதன்மையானது. இந்த புத்தகம் முன் வைப்பது புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் இருப்பை. (மனிதர்களுக்கிடையேயான தொடர்பு கொள்ளலை, அதன் மறு முனையான துண்டிக்கப்பட்டு இருத்தலைக் குறித்து அது எழுப்பும் கேள்விகள் என ஒரு நாவல் அளவுக்கு விரியும் நூல் அது.) புத்தகம் முழுவதும் அவர்கள் தெருவோரங்களில் இருக்கும் தொலைபேசிகளில் இருந்து தங்களுடைய வீட்டுக்கு, நண்பர்களுக்கு பேசிக் கொண்டே இருக்கின்றார்கள். நடு நடுவே பூனையின் மற்றும் எலுமிச்சையின் புகைப்படங்கள் வந்துகொண்டே இருகின்றன. வெறும் பூனைகளும் எலுமிச்சைகளும் தான். ஆனால் அவை இடம்பெறும் சூழ்நிலையில் அவை குறியீடுகளாக மாறுகின்றன.

[எலிமெண்டரி கால்குலஸ் நூலில் இரு படங்கள்]

( பெங்களூரில் வட கிழக்கில் இருந்து வந்த எண்ணற்ற இளைஞர்கள் கடைகளில், கட்டிடங்களில், ஹோட்டல்களில் பணி புரிகின்றார்கள். அவர்கள் தங்கும் இடம் எங்கே என்று தெரியவில்லை, நிச்சயம் அவர்கள் பணி புரியும் கடைகள் இருக்கும் இடங்கள் மிகுந்த பொருட்செலவு மிக்கவையாக இருக்கும். தொலைவில் தங்கி இருந்தால் காலையில் எப்போது வந்து இரவில் எப்போது செல்வார்கள் என்று தெரியவில்லை. ஆனால் எந்தக் கடைக்குப் போனாலும் அவர்களைப் பார்கலாம்.)

பூனைகள் நாம் வாழும் அதே சூழலில்தான் வாழ்கின்றன. நம்முடைய வீடுகளின் அறைகளில், உணவு மேசைகளில், சமையலறைகளில்தான் அவையும் வாழ்கின்றன. அனால் நாம் அவற்றை எதிர் கொள்வது அபூர்வமாகவே நிகழும்.

இரண்டு வெவ்வேறு வாழ்க்கை ஒரே உலகத்தில் அல்லது இரண்டு வெவ்வேறு உலகம் ஒரே வாழ்கையில் , ஒன்றை ஓன்று குறுக்கிடாமல் உராய்வின்றி இயங்கிக் கொண்டே இருக்கின்றன, அவை நம் கண்களுக்கு புலப்படுவதே இல்லை, நாம் இருக்கும் அதே உலகத்தில் . இதைப் புரிந்துக் கொண்டு புலம் பெயர்ந்தவர்களை நாம் அங்கே பொருத்திக் கொண்டால் கிடைப்பது தீவிரமான உண்மை.

புத்தகம் முழுவதும் வரும் எலுமிச்சைகள் வித விதமாக காய்த்து,கனிந்து கடைசியல் அட்டைப் பெட்டிகளில் அடைத்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இது ஒரு எளிய உதாரணமே, இவை உணர்த்துவது என்ன? எளிய புகைப்படமாகவே இருந்தாலும் அவை இடம்பெறும் வரிசையில், சூழலில், அவற்றின் பொருள் என்பது மாறிக் கொண்டே இருக்கின்றது. குழப்பமாக இருகின்றதா? ஏனெனில் மற்ற கலைகளைப் போல புகைப்படம் முற்றிலும் தனக்குள்ளேயே நிகழ்வதில்லை. இதைதான் சில மடல்கள் முன்னால் இதே திரியில் கூறி இருந்தேன் புகைப்படம் சுட்டுகின்றது, காட்டுவதில்லை என்று.

கவிதை எவ்வாறு இயங்குகின்றது? செறிவு படுத்தப்பட்ட வடிவில் அதனாலேயே வடிவில் சிறியதாக இருகின்றது. நல்ல வாசகனுக்கு விரிக்க விரிக்க அது விரிந்துகொண்டே போகின்றது. ஒரு புகைப்பட புத்தகம் அதையே செய்கின்றது, ஆனால் புகைப்படத்தில் உள்ள ஒரு வசதி நீங்கள் ஒரு புத்தகத்தில் வைக்கும் நூறு கவிதைகளை (புகைப்படங்களை) விரித்து விரித்து ஒரு நாவல் அளவுக்கே தீவிரமாக விரித்துக் கொள்ள முடிகின்றது

ஒரு ஓவியத்தில் இருக்கும் ஒரு கூறு அல்லது ஒரு நாவலில் குறிப்பிடப்படும் ஒரு விவரணை அந்த நாவலுக்கு உள்ளேயே உள்ள அர்த்தத்தில் இயங்குகின்றது. புகைப்படக் கலையில் அது அதனுடன் இடம்பெறும் மற்ற புகைப்படங்களை சார்ந்து இயங்குகின்றது. மற்ற கலைகள் ஆதியில் இருந்து உருவாக்கப்படுகின்றன. புகைப்படம் ஏற்கனவே பரப்பி வைக்கப்பட்டிருக்கும் வாழ்கையில் இருந்து அங்கங்கே எடுக்கப்படுகின்றது. இந்த வித்தியாசம் மிகவும் முக்கியமானது. எனவே ஒரு புகைப்படத்தை புரிந்துகொள்ளும் போது அது எங்கிருந்து ( எந்த பொருளில்) எடுக்கப்பட்டது, மீண்டும் எந்த இடத்தில் அல்லது பொருளில் வைக்கப்படுகின்றது என்பது முக்கியமாகிறது.

பெங்களூரில் ( நகரம் என்ற பொருளில்) எடுக்கப்பட ஒரு பசு மாட்டின் புகைப்படம் அவ்வளவு முக்கியம் இல்லை, அதுவே காசியில் என்றால் அதன் பொருள் மாறிவிடுகின்றது ( எடுத்தல் ).அதே போல இந்தியா என்ற தலைப்பில் ஒருவர் அந்த பசு மாட்டை வைத்தால், அதன் பொருள் மீண்டும் மாறுகின்றது ( வைத்தல் ).

இப்பொது எளிமைப்படுத்தி பார்த்தால் மற்ற கலைகளில் இந்த முன்னதும் பின்னதுமான செயல் முக்கியமற்றது என்றும் படைப்பு மட்டுமே முக்கியமென்றும், புகைப்படக் கலையில் படைப்பு இல்லை முக்கியம் அதை எடுப்பதும் வைப்பதுமான செயல்பாடு தான் முக்கியாமாக தோன்றுகிறது இல்லையா?

இப்பொது இந்த “அது பதிவு செய்வதாலேயே அதனால் சொந்தமாக ஒரு படைப்பாகாது. அது எதைக் காட்டுகிறதோ அதுவே அது.” போன்ற கருத்துக்கள் அர்த்தமிழந்து நிற்கின்றன. ஏனெனில் இந்த பதிவு செய்வது என்பது புகைப்படக் கலையில் வெறும் 30 சதவீதமே, அதன் பின்னான பார்வை, அதை பொருத்தும் இடம் இவற்றை பொறுத்தே அது அர்த்தம் கொள்கின்றது. எனவே அந்தக் கலைஞரின் பங்களிப்பே படைப்புக்கு அர்த்தம் தருகிறது. இந்தச் செயல்பாடு முற்றிலும் அந்தக் கலைஞரின் கட்டுபாட்டில் நிகழ்வதால் தான் அது தனித்தன்மைமிக்கதாகின்றது.

இப்படி சொல்லலாம், கருவியும் செயல் முறையும் பொதுவாக இருந்தாலும் அவை ஒரே எழுத்துருவை பயன்படுத்தி எழுதும் வெவ்வேறு எழுத்தாளர்களின் கதைகளே. எழுத்துரு எனும்போது நமக்கு இலக்கியத்தில் அது ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை, கொஞ்சம் பெரிதாக இருப்பதாலேயே கேமராதான் எல்லாமே புகைப்படக் கலையில் என்று நினைத்துக்கொள்கின்றோம். ( சிறு வயதில் நமக்கு கம்ப்யூட்டர் என்பதே மானிட்டர் தானே.)

அதில் நுட்பமாக புரிந்து கொள்ள ஏதுமில்லை என்பது மேலோட்டமாக அணுகும் ஒருவர் சொல்லக் கூடிய ஒரு கருத்து. மேற்சொன்ன பூனை விஷயத்தில் இந்த வாசிப்பு முறை அறியாத ஒருவர் இஸ்ரேலில் பூனைகள் அதிகம் என்ற முடிவுக்கே வர முடியும் அதை புலம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் வாழ்க்கையாக உணர முடியாது. இந்த நுட்பத்தை புகைப்படம் தன் படைப்பில் விளக்குவதே இல்லை. கவிதையைப் போலவே. அதை படைப்புக்குள் எதிர்பார்க்கவும் முடியாது. அதனாலேயே அப்படி ஓன்று இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்து சேர்ந்து விட முடியாது அல்லவா?

“அது எதைக் காட்டுகிறதோ அதுவே அது. எனவே அதில் நுட்பமாக புரிந்து கொள்ள ஏதுமில்லை” — இந்தப் பொதுக்கருத்தைப் புரிந்து கொள்ள கொஞ்சம் நம் மூளை செயல்படும் விதம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு நாவலை, கவிதையை நாம் வாசிக்கும் போது நாம் அதை நம் மனக்கண்ணில் கட்சியாக விவரித்துக் கொள்கின்றோம். காடு நாவலின் சித்திரம் நம் அனைவருக்கும் அவரவர் காடாக இருக்கிறது. அந்த சித்தரிப்புகளைக் கூட உணர்வுகளாகவே மாற்றிக் கொள்கிறோம். ஒரு மெய்நிகர் வாழ்க்கையை வாழ்கின்றோம்.

காட்சிக்கலையில் இது நேர் எதிராக நிகழ்கிறது. ஓவியத்தில், புகைபடத்தில் இருப்பதை வார்த்தைகளாக தொகுத்துக் கொள்கிறோம். உண்மையில் அது படைப்பை சுருக்கவே செய்கிறது.

இந்த புகைப்படத்தில் என்ன இருக்கிறது, இது எதைப் பற்றி பேசுகிறது?

horsepair

இரண்டு குதிரைகள் மற்றும் ஒரு லாயம்.நம் மூளை அதை அவ்வளவு சுலபமாக மொழிபெயர்த்து விடுகிறது.

நம் மூளை இயங்கும் விதம், குறிப்பாக அது எல்லாவற்றையும் வாசிக்கும் விதம் பற்றி நிறைய ஆராய்சிகள் நடந்துள்ளன. அவற்றில் முடிவு கொஞ்சம் நமக்கு தெரிந்ததுதான். ஒரு வார்த்தையை நாம் படிக்கும்போது எழுத்து எழுத்தாக படிப்பதில்லை. பெரும்பாலும் முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் பார்க்கப்பட்டு ஏற்கனவே மூளைக்குள் இருக்கும் வார்த்தை வடிவங்களுடன் ஒப்பிடப்பட்டு ஒரு மாதிரி அர்த்தம் எடுத்துக் கொண்டு அடுத்த வரிக்கு நகர்கின்றோம்.

இந்த பலவீனம் காட்சிக்கலையில் மிகவும் முக்கியம். இதைக் கொண்டே ஒருங்கமைவு விதிகள் (composition rules) தயாரிக்கப் பட்டு அது கலையில் நடைமுறைபடுத்தப் படுகிறது. இதை பார்ப்பவர்கள் அறிவதில்லை, காண்பியல் கலையில் தேர்ச்சி இருந்தால் ஒழிய.

நீங்கள் ஏற்கனவே பார்த்த சொக்ரடீஸ் ஓவியத்தை நினைவு கூறுங்கள், அது நிகழும் களம் இரவா பகலா? பெரும்பாலும் அது இரவென்றே முடிவு செய்திருப்போம் அதன் ஒளி அமைப்புக் காரணமாக. அதில் இருந்த இரண்டு ஜன்னல்களை பார்த்திருந்தால் தெரியும் அது பகல் என்று. அந்த ஜன்னல்களை ஒட்டி இருந்த மனிதர்களைக் கவனித்தீர்களா? அவரைக் கொல்ல அனுப்பிய ஓலை கீழே கிடந்ததை கவனித்தீர்களா?

பெரும்பாலும் தவற விட்டிருப்போம். இந்த புரிதல் பிழை நிகழ்வது எங்கே? நாம் அதை பார்க்கும்போது அதன் சாராம்சம் என்ன என்று தொகுத்துக் கொள்கிறோம். அதாவது சாக்ரடீஸ் கொல்லப்பட போகிறார், அவர் அதை சரிதான் போடா என்று எதிர் கொள்கிறார். அவ்வளவே. இந்த தகவல் தொகுப்புக்குப் பிறகு உங்கள் மூளை அதைப் பார்க்க விரும்பவில்லை. பார்த்தவற்றைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டது. எனவே அது ஜன்னல்களையும் ஓலையையும் பார்க்கவே இல்லை. இதை கவிதையின் பொருள் என்ன என்று புரிந்து கொள்வதைப் போலவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

கவிதை நமக்கு சொல்வதில்லை, உணர்த்த முயற்சிக்கிறது. எனவே அது என சொல்கிறது என்று யோசிப்பது அதை தகவலாக்குவதில்தான் சென்று முடியும்.இதை மீறி வரும் ஒருவருக்கே காண்பியல் கலை தன்னுடைய உலகத்தை ஏந்தி நிற்கிறது.

horse2

அந்த குதிரைப் படத்தை இப்பொழுது பார்க்கும் பொழுது அதற்குள் சற்று பயணம் செய்யும் ஒருவர் அது தோழமையை (companionship) பேசுகிறது என்பதை புரிந்துக் கொள்ளக் கூடும்.

இந்த புகைப்படத்தில் அதன் பொருள் இரண்டு குதிரைகளும் அதன் லாயமும் என்றாகிறது.

horse3

அடுத்ததில் ஒரு குதிரை, அதை தனிமையின் குறியீடாக கொள்ளலாம். நல்ல வாசகன் அதை இன்னும் விரித்துக் கொள்வான். குதிரை எதன் குறியீடு? வேகத்தின்குறியீடு, துடிப்பின் குறியீடு, வாழ்வாசையின் குறியீடு. அதை வெட்டவெளியோடேயே நம்மால் இணைத்துப் பார்க்க முடியும். இங்கே அது இருப்பது அதற்கு அனுமதிக்கப்பட்ட ஒரு சிறு துண்டு (அந்த ஜன்னல்) வெட்ட வெளியில்.

இதைத்தான் படைப்பைக் கொண்டு விரித்துக் கொள்வது என்கிறேன். இந்த வாசிப்பு அற்ற ஒருவருக்கே படைப்பை “புரிந்து” கொண்ட பின்பு (ஒரு குதிரை, அதுக்கு இப்போ என்ன?) அதற்கு மேலே அதில் ஒன்றும் இல்லை என்று தோன்றி விடுகின்றது. முடிந்த வரை மூளை மொழிபெயர்த்து சுருக்கி அப்புறம் என்ன என்று கேட்க ஆரம்பித்து விடும். நாமும் அடுத்த படம் என்று நகர்ந்து விடுவோம்.

இந்த மெல்லிய சாத்தியங்கள் வழியாகவே காட்சிக்கலை இயங்குகிறது. அதைப் புரிந்து கொள்ள கவிதையின் வாசகனைப் போல இருக்க வேண்டும்.

***

இதன் மற்றொரு முனையே படைப்பு என்பது (குறிப்பாக காண்பியல் கலைகள்) மிகுந்த தீவிரமான ஒன்றை முன்வைக்கவேண்டும் என்று நினைக்கிறோம். அதில் நுட்பத்துக்கு இடமிருப்பதை நாம் ஒத்துக் கொள்வதில்லை. நேற்று கல்பெட்டாவின் கவிதை ஒன்றை வாசித்தேன்.

-மாதங்கி-

எத்தனை வெள்ளம் கோரியிட்டும்
ஆனந்தன் வரவேயில்லை.

இரண்டு வரிக் கவிதை, யாரந்த மாதங்கி என்றும் ஆனந்தன் என்றும் தெரியவில்லை. அனால் அது முடிவற்ற ஒரு காத்திருப்பை சொல்லி விடுகின்றது. அங்கிருந்து மொத்த மானிட ஏக்கத்திற்கும் காத்திருப்புக்கும் சென்று சேர்ந்து விடலாம்.

இந்த நுட்பத்தை நாம் கவிதையில் ஏற்றுக் கொள்கிறோம். இதையே ஒரு புகைப்படம் சொன்னால், “அவன் வரல,அவ உட் காந்துருக்கா” அவ்வளவுதானா என்றே எண்ணுவோம். இந்த மயக்கமே “இரண்டு குதிரைகள் மற்றும் ஒரு லாயம் அவ்வளவுதானே, இதுல என்ன இருக்கு என்று நம் மூளை அதை அவ்வளவு சுலபமாக மொழிபெயர்த்து விடுகிறது.

உண்மையில் நாம் தீவிரத்தை எதிபார்கிறபொழுது கலையில் அது நுட்பமாகவே வெளிப்பட முடியும் என்பதை மறந்து விடுகிறோம். அதானாலேயே அந்த இரண்டு குதிரைகளுக்கிடையேயான சிநேக பாவம் நம் கண்களில் இருந்து தப்பி விடுகிறது. தீவிரத்தை எதிர்பார்க்கும் நம் மூளை அதை இரண்டு குதிரைகள் மற்றும் ஒரு லாயம் அவ்வளவுதானா என்று கேட்கிறது.

[குழும விவாதத்தில் இருந்து தொகுக்கப்பட்ட கட்டுரை]

முந்தைய கட்டுரைரப்பர் – ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஎழுத்துருக்கள்-எதிர்வினைகள்