அவலாஞ்சி

இணையம் வழியாக அறிமுகமானவர் நண்பர் லதானந்த். ஆனந்த் என்ற  இயற்பெயர்கொண்டவர்.’நாகம்மாள்’ ‘சட்டி சுட்டது’ போன்ற  புகழ்பெற்ற கொங்கு இலக்கியப்படைப்புகளின் ஆசிரியர் ஆர்.ஷண்முகசுந்தரத்தின் அண்ணாவின் மகன். தமிழக வனத்துறையில் சரக அலுவலராகப்பணியாற்றுகிறார். லதானந்த் என்றபேரில் விகடனில் கதைகள் எழுதுகிறார். சுட்டிவிகடனில் ரேஞ்சர்மாமா என்றபேரில் ‘வனங்களில் வினோதங்கள்’ என்ற புகழ்பெற்ற நூலை எழுதியவர். எனது காட்டுமோகத்தைச் சொன்னபோது ஒரு பயணத்துக்கு ஒழுங்குசெய்தார்.

சென்ற வாரம் நானும் குடும்பமும் கோவை ரயிலில் வந்து இறங்கியதுமே அவரது இனிய உபசரிப்புக்கு ஆளானோம். நேராக அவர் இல்லத்துக்குப் போய் தங்கினோம். அவரது மனைவியின் சிறந்த சமையல், மூச்சுத்திணறவைக்கும் உபசரிப்பு. அன்று முழுக்க கோவையைச் சுற்றியே பயணம். அவரது காரில்.

கோவைக்குற்றாலம் என்று அழைக்கப்படும் சிறு அருவிக்குப் போனோம். அருவியைச் சூழ்ந்து லாடவடிவில் செங்குத்தாக எழுந்து நிற்கும் மாபெரும் மலைச்சிகரங்கள் அளித்த பிரமிப்பே அங்கே முக்கியமான அனுபவம். மீண்டும் மீண்டும் கண்கள் அந்த மலைகளை நோக்கி எழுந்தமையால் அருவி ஒரு பொருட்டாகவே படவில்லை. சின்னஞ்சிறு நீரோடையாகவே நீர் கொட்டியது. செயற்கையான தடைகளில் தேங்கி கொட்டிய அருவியில் குளிக்கத்தோன்றவில்லை. எங்கள் ஊரில் திற்பரப்பு அருவியில் அந்நேரம் கண்ணாடி மலைகள் சரிவது போல நீர் கொட்டிக் கொண்டிருந்தது.

மதியம் சிறுவாணி நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்குச் சென்றோம். உலகிலேயே சுவையில் இரண்டாமிடம் பெறும் நீர் என்றார்கள். பெரிய தொட்டிகளில் நீ சுழற்றப்பட்டு சீனக்காரமும் குளோரினும் சேர்க்கப்பட்டு மாபெரும் கட்டிடம் ஒன்றுக்குள் சென்று அடுக்கடுக்கான கூழாங்கல் முதல் நுண்மணல் வரையிலான படிமங்களில் அரிக்கப்பட்டு வெளியே வந்தது. வாங்கி குடித்துப் பார்த்தோம். உலகைப்பற்றி தெரியவில்லை, நான் குடித்த நீர்களில் அதுவே சுவையானது. பேசாமல் உலகிலேயே சுவையானது என்று சொல்லிவிடலாம்தான். எதற்கு வம்பு என்றுதான் இரண்டாமிடம் அளிக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டேன்.

ஜக்கி வாசுதேவின் தவநிலையத்துக்குச் சென்றுவிட்டு பேரூர் பட்டீஸ்வரர் கோயில் சென்றோம். கொங்கு பகுதியில் அவினாசி கோயிலும் இதுவும்தான் பெரியது போலிருக்கிறது. ஓங்கிய மதில் சூழ்ந்த அழகிய ஆலயம். அருகே பேரூர் சாந்தலிங்க அடிகள் மடம். தமிழ்நாட்டில் மிக அதிகமான ஆலயங்களுக்கு தமிழில் குடமுழுக்கு செய்தவர் அவர்.

அன்றிரவு கோவை வனக்கல்லூரி விடுதியில் தங்கிவிட்டு அதிகாலையில் ஊட்டி வழியாக அவலாஞ்சி மலைப்பகுதிக்குச் சென்றோம். ஊட்டிசாலையில் போக்குவரத்து நெரிசலிட்டதனால் போய்ச்சேர மாலையாகிவிட்டது. போகும்போதே சமையலுக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொண்டோம். ஊட்டியிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அவலாஞ்சி. ஆனந்த் தான் வண்டியை ஓட்டினார். ஊட்டியை நெருங்குவது வரை வெயிலடித்தது.  அவலாஞ்சிக்கு திரும்பும்போதுதான் மலைக்குரிய அமைதியும் குளிரும் வர ஆரம்பித்தன.

150 வருடம் பழக்கமுள்ள மரத்தாலான அழகிய வனவிடுதியில் தங்கினோம். வசதியான அறை. மூன்று கட்டில்கள். தரையும் மரம். தம் தம் என்று நடக்கையில் ஒலியெழுந்தது. டீ குடித்துவிட்டு அருகே இருந்த காட்டுக்குள் நடக்கச் சென்றோம். குந்தா நீர்மின்சாரத்திட்டத்துக்காக கட்டப்பட்ட அணையின் நீர்நீட்சிப் பகுதி மாபெரும் ஏரி போல தேங்கிக் கிடக்க சுற்றும் குறுங்காடுகள் விரிந்த புல்வெளிகள். நானும் அஜிதனும் சைதன்யாவும் புல்வெளியில் ஓடினோம். மூச்சுக்குள் காட்டின் தூய காற்று நிறைந்து விம்மும்போதுதான் நாம் விட்டுவிட்டு வந்தவற்றில் இருந்து முழுக்க விலக முடியும்போலும்.

இரவு திரும்பி வந்து குளிர் ஏறும்வரை விடுதி முற்றத்தில் அமர்ந்து ஓய்வெடுத்தோம். பின்னர் சூடான அசைவ உணவு. விடுதியில் ஓர் அறை மட்டும் பூட்டப்பட்டிருந்தது. அதைப்பற்றி ஒரு கதை சொல்லும்படி சைதன்யா கேட்க நான் அங்கே தங்கியிருந்த ஒரு கொடூரமான துரை செண்பகப்பூக்களை பறித்து மாலைகட்டி அணியக்கூடிய ஓர் அழகிய படுகப்பெண்ணை அடைத்து வைத்துக் கொன்ற கதையை சொன்னேன். பயங்கரமான பேய்க்கதை. சொல்லச் சொல்ல கதை விரிவடைந்த்து அட, இதை எழுதலாமே என்று எனக்கே தோன்றிவிட்டது. சைதன்யா என்னுடன் ஒட்டிக் கொண்டாள். சிரித்து தைரியம் காட்டிய அஜிதன் விளக்கில்லாமல் தனியாக படுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டதனால் அருண்மொழி தனியாக படுத்துக் கொண்டாள்.

மறுநாள் காலையில் அங்கே என்ற டிரவுட் [ Brown trout, Loch Leven trout (Salmo levensis) ] என்னும் அரியவகை மீனை முட்டையிலிருந்து பொரிக்க வைக்கும் இடத்தைப் பார்க்கப் போனோம். நல்ல குளிர். போகும் வழியில் தொழிலாளர்கள் சுடச்சுட அண்டாவில் டீ போட்டு குடிப்பதைக் கண்டோம். வெள்ளையர்கள் அவர்கள் நாட்டு மீனை உண்ண ஆசைப்பட்டமையால் அங்கிருந்து இந்த மீனைக் கொண்டுவந்து இங்கே வளர்க்க முயன்றார்கள். பல முயற்சிகள் தோல்வியடைந்தன. 1909ல் H.C.வில்சன் என்பவர் ரெயின்போ டிரவுட் வகை மீன்களை அவலாஞ்சிக்குக் கொண்டுவந்து வளர்க்க ஆரம்பித்தார். டிரவுட் மீனின் முட்டைகளின் உள்ளே உள்ள கரு கண்கள் போல் இருக்கும். அவற்றை கண்ணுள்ள டிரவுட் முட்டைகள் என்கிறார்கள். வில்சன் அவற்றை நியூஸிலாந்தில் இருந்து கொண்டு வந்து வளர்த்ததாக தெரிகிறது. வில்சன் துரையின் நினைவாக ஒரு நடுகல்லை அவலாஞ்சியில் கண்டோம்.

டிரவுட் மீன் தன் முட்டைகளைதானே உண்ணும் வழக்கம் கொண்டது. ஆகவே மீன்கள் கருவுற்றதுமே முட்டையை பிதுக்கி எடுத்து பொரிக்க வைத்து மீன்கள் நீந்த ஆரம்பித்ததும் ஓடைவழியாக அணைக்கட்டுக்கு அனுப்பிவிடுகிறார்கள். 150 வருடம் முன்பு வெள்ளையர் கட்டிய முட்டைபொரிப்பறை இன்றும் செயல்படுகிறது. இருபது வருடம் முன்பு நம்மவர் கட்டிய பெரிய  அறை ஒருமாதம்கூட செயல்படாமல் பாழடைந்து கிடக்கிறது. அந்த இருண்ட தோட்டத்துக்குள் ஒரு சில ஊழியர் பொறுப்பில் நூறாண்டுகண்ட ஒரு நிறுவனம் இன்றும் செயல்பட்டு வருவது ஆச்சரியமூட்டியது. [மீன் பற்றிய மேலும் விரங்களை அறிய விரும்புகிறவர்கள் பார்க்க : http://www.fao.org/docrep/003/x2614e/x2614e06.htm

காலை ஏழு மணிக்குக் கிளம்பி அவலாஞ்சி மலைச்சிகரங்களுக்குச் சென்றோம். 1809ல் ஏற்பட்ட ஒரு பெரிய நிலச்சரிவினால் இப்பெயர் வந்தது என்கிறார்கள். ஏராளமான மலைகளின் உச்சிகளினால் ஆன ஒரு நிலவெளி என இதைச் சொல்லலாம். மண்ணுக்கு அடியில் சில அடி ஆழத்திலேயே பாறை இருப்பதனால் பொதுவாக மரங்கள் வளர்வதில்லை. கனத்த புல்மெத்தை மட்டுமே. அலையலையாக கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை புல்வெளி புல்வெளி….

மூச்சு வாங்க சிரித்தும் அமர்ந்தும் புல்மலைகளில் ஏறுவதும் புல்சரிவுகளில் இறங்குவதுமாக அங்கே திளைத்தோம். அருண்மொழி ஓர் மலையுச்சியில் அமர்ந்துகொள்ள நானும் பிள்ளைகளும் மேலும் மேலும் என புல்மலை மீது ஏறிச்சென்றோம். அங்கே எங்கும் மான்புழுக்கைகள். ஒரு மானை ஓநாய் தின்று போட்டுச்சென்ற எச்சத்தைப் பார்த்தோம். சுத்தமாக சதையில்லாமல் கரம்பிய , இன்னும் உலராத, இரு பின்னங்கால்கள், குளம்புடன். எதிர் மலையில் மான்கூட்டங்கள் இருந்தன. தொலைநோக்கி மூலம் பார்த்தோம். எங்களையே கூர்ந்து நோக்கி நின்றன. எங்கள் வாசனை காற்றில் சென்றிருக்கலாம்.

அங்கு நிறைந்திருந்த அமைதி மெல்ல மெல்ல நம் காதுக்குப் பழகி மனதுக்குள் குடியேறும்போது காலம் இல்லாமலாகிறது. என்ன நடக்கிறது என்ற போதமே இருப்பதில்லை. விசித்திரமான தனிமை. பச்சை நிறம்தான் உயிரின் நிறம். பூமி முழுக்க பரவியிருக்கும் பெரும் கருணையின் நிறம் அது. எப்போது கண்களை பச்சை நிறைக்கிறதோ அப்போதே நம் அகம் நிறைந்து விடுகிறது. உள்ளே இருக்கும் ஒன்று வெளியே இருப்பதைக் கண்டுகொள்கிறது. தாயைச் சேய் என சென்று அணைகிறது.

திரும்பும் வழியில் சைதன்யா பக்கவாட்டில் ”ஒரு நாயி…” என்றாள். அருண்மொழியும் பார்த்தாள். ஒருகணம் கழித்தே அது ஓநாய் என்று தெரிந்தது. அதற்குள் மறைந்துவிட்டது. அஜிதன் பார்க்கவில்லை. ”ஏண்டீ சொல்லல்லே?” என்று அவளை எட்டி அறையப்போனான். ”ஜெர்மன் ஷெப்பர்ட் மாதிரி இருந்துது அப்பா…” என்றாள் சைதன்யா. ”காட்டில ஏதுடீ ஜெர்மன் ஷெப்பர்ட்?” என்றான் அவன். ”செந்நாயா இருக்கலாமோ?” என்றேன். ”இல்லப்பா இது ஓநாய்தான். ஓநாய் இந்த உயரத்திலே மட்டும்தான் இருக்கும். செந்நாய்னா ரொம்பக்குள்ளமா சிவப்பா இருக்கும்..இதுக்கு லேசா பிரவுன் நெறம் உண்டு…. பாக்க ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் மாதிரியேதான் இருக்கும்…புக்ல போட்டிருக்கு… ”என்றான் அஜிதன் அழாக்குறையாக.

அவனை ஆறுதல்படுத்துவதுபோல சற்றுநேரம் கழித்து சாலைக்குச் சமானமாக ஒரு காட்டுகீரி ஓடியது. பெரிய கீரி. ஊர்க்கீரியைவிட இருமடங்கு பெரிது. சற்றுநேரம் ஓடி மறைந்தது. அஜிதன் எழுந்து நின்று அதை பார்த்தான். ”இந்த டிரிப் நல்ல டிரிப் அப்பா…இப்ப என்னோட பேர்ட் லிஸ்ட் நூறைத்தாண்டியாச்சு” அவன் நேரில் பார்த்த, அடையாளம் கண்டுகொள்ளக்கூடிய பறவைகளின் பட்டியல். பல பறவைகள் நீலகிரிக்கே உரியவை.

மதியம் தாண்டியபின் திரும்பி வந்தோம். சற்று ஓய்வெடுத்து சாப்பிட்டபின் காரில் ஊர் திரும்பினோம். மாலையில் கோவை ரயிலில் மீண்டும் நாகர்கோயில். ரயிலில் பிள்ளைகள் அமைதியாக இருந்தார்கள். வரும்போதிருந்த உற்சாகமான ஆட்டம் இல்லை. களைப்பு மட்டுமல்ல. ஒருவகை நிறைவும்கூட. அன்று கனவில் அவர்கள் பச்சைப்பெருவெளியையே காண்பார்கள்.

முந்தைய கட்டுரைமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை,தொடர்ச்சி
அடுத்த கட்டுரைசில இணையப்பதிவுகள்