அப்பாவின் குரல், கடைசிக்கண்- கடிதங்கள்

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு,

பெண்ணை அவளின் பாலியல் ஒழுக்கம் சார்ந்து தாக்கினால் அவளை எளிதாக வீழ்த்திவிடலாம் என்ற குறுக்குப்புத்தியையும் அது வழிவழியாக ஆணுக்கு ஏற்றப்படுவதையும் அதை வெற்றிகொள்வது ஆணின் மனதுக்கு எவ்வளவு பெரிய சவாலாக இருக்கிறது என்பதையும் ஜெயன் கோபாலகிருஷ்ணனின் அப்பாவின் குரல் சிறுகதை காட்டியது.ஆணுக்கு ஒரு பெண்ணைக் குறுக்கு வழியில் வெல்வதற்கு ஏற்படும் மன உந்துதலை இயல்பு நிலையில் அவனால் தடுக்க முடிவதில்லை என்பதைக் காட்டுவதாகக் கதையின் நாடகத்தனமான முடிவைக் கருதலாம்.

அக்கதை எனக்குள் இன்னுமொரு கேள்வியை எழுப்பியது.ஆணின் இந்த வெற்றி பெண்ணின் விட்டுக்கொடுப்பினால்தானே வருகின்றது.

மனைவியின் ஒழுக்கம் குறித்துத் தாக்குவதென்பது அவளை வீழ்த்துவதற்கான ஆணின் இறுதி அஸ்திரம்.அவள் ஒரேயொரு முறை நிமிர்ந்து ஆம்.நான் அப்படித்தான்.ஏனென்றால் நீ கையாலாகாதவன் என்று திருப்பி அடித்தாள் என்றாள் ஆணுக்கு அதுதான் இறுதியான அஸ்திரம்.

குடும்பத்தை நினைத்தோ,சமூகத்தை நினைத்தோ அல்லது அந்த ஆணின் மீது அடி மனதின் ஓரத்தில் எஞ்சியிருக்கும் அன்பினாலோ அவள் தனது தேரை நிலத்தில் தாழ்த்தாமல் ஆணின் இறுதிக்கணைக்கு தன்னை தின்னக்கொடுக்கிறாள்.என்றோ ஒரு நாள் அவள் பொறுமை எல்லை கடந்துவிடின் அந்த தேர்காலில் ஆணின் மரணம் நிகழ்ந்துவிடுகின்றது.

சிவேந்திரன்

அன்புள்ள ஜெ

கடைசிக்கண் சமீபத்தில் நான் வாசித்த நல்ல கதை. மரணத்தில் கொடூரமான மரணம் தீ விபத்தில் சாவதுதான். அல்லது தீ வைத்துக்கொளுத்திக்கொண்டு சாவது. அந்த பேஷண்டுகள் படக்கூடிய கொடுமைக்கு அளவே இல்லை. என் அம்மாவை ஆஸ்பத்திரியிலே சேர்த்திருந்தபோது பார்த்திருக்கிறேன். இன்றைக்கும் மறக்கமுடியாத நினைவுகள் அவையெல்லாம்

ஆஸ்பத்திரியிலே சென்று நின்றால்போதும் மனிதனின் மமதை எல்லாம் அப்படியே அழிந்துபோகும் என்று சொல்வார்கள். ஆனால் பலருக்கு அப்படி ஆவதே இல்லை என்று கவனித்திருக்கிறேன். காப்பி கிடைக்கவில்லை என்று மனைவி மீது சூடான டீயை ஊற்றிய ஒரு கிழவரை நானே கண்டிருக்கிறேன். அப்படிப்பட்ட ஒருவருக்கு மிகமோசமான தண்டனை என்றால் என்ன? அதுதான் இந்தக்கதை. இனிமேல் ஒன்றுமே செய்யமுடியாது என்ற நிலையில் தான் எவ்வளவு மோசமான ஆள் என்று உணர்ந்து அப்படியே செத்துப்போவது.

என்னால் அந்த கடைசிக்கண்களைக்கூட பார்க்கமுடியும்போல தோன்றுகிறது.

செல்வம்

ஜெ,

அப்பாவின் குரல்,கடைசிக்கண் இரண்டு கதைகளும் ஒரே கதைபோலத் தோன்றின. அப்பாவுக்கும் மகனுக்குமான இந்த வித்தியாசம் இன்று தமிழ்நாட்டில் ஒரு பொதுவான கலாச்சார விஷயம் என்று நினைத்துக்கொண்டேன்./ வேறு பலபேர் இதை வேறுவகையிலே எழுதியிருக்கிறார்கள்

சரவணன்

முந்தைய கட்டுரைசீர்மை (3) – அரவிந்த்
அடுத்த கட்டுரைசீர்மை புனைவின் மகத்துவம் -கடிதங்கள்