நீர்க்கோடுகள், அழைத்தவன், நூலகத்தில் – கடிதங்கள்

ஒரு அழகான கவிதையை சிலநேரங்களில் சட்டென ரசித்துவிட முடியாது, அதைப் புரிந்துகொள்ள சில நாட்கள்கூட ஆகியிருக்கும். உடனே நம் மனதைத் தொட்டுவிடும் ஒரு நுட்பமான கவிதையை நாம் மறப்பதேயில்லை. ‘அழைத்தவன்’ அப்படித்தான். எளிமையான உண்மைக்குப்புற அடையாளங்கள் தேவையில்லை என்பதை இளங்கோ மெய்யப்பன் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். படித்த முதல் முறையிலேயே இம்மாதிரியான கதையை நாம் எழுதவேண்டும் என நினைக்க வைப்பது பெரிய விசயம்தான். வாழ்த்துகள் இளங்கோ.

கே.ஜே.அசோக் குமார்

நூலகத்தில் – சட்டென்று பிடித்தது. ஏன் என்று விளக்கி சொல்ல தெரியவில்லை. எளிமையான ஒரு முடிச்சு ஆனால் அதில் ஒரு அபாரமான கற்பனை இருக்கிறது. மொழியும் சிறப்பாக இருக்கிறது.

அழைத்தவன் – யார் யாரை அழைத்துக் கொள்கிறார்கள்? மகனை அழைத்துக்கொள்ள தந்தை எண்ணுகிறார் ஆனால் அவன் வேறு எங்கோ அழைத்து செல்லப்பட்டுவிட்டதை உணர்த்தும் விதமாக வருகிறது தொலைபேசி அழைப்பு. நேரடியான கதைதான், புதிதாக எதுவும் இல்லைதான். ஆனாலும் ஒரு மெல்லிய பதட்டத்தை வெற்றிகரமாக கடத்த அவரால் முடிந்திருக்கிறது. மூளை வளர்ச்சியற்ற குழந்தையின் சித்திரத்தை அளிக்க முடிந்திருக்கிறது.

நீர்க்கோடுகள் – மூன்று பெண் பாத்திரங்கள் ஹென்றியைச் சுற்றி இருக்கிறார்கள். வாழ்க்கை சலனம் நீர்பரப்பில் ஏற்படுத்தும் சிறு சிறு பள்ளங்களை காலம் நிரப்பி விடுகிறது. பிளெசியின் வெற்றிடம் மித்ராவால் நிரப்பப்படுகிறது. ஆனால் அதை அவர் உணர்ந்துகொள்ள கொஞ்சம் காலம் பிடிக்கிறது. அந்த உறவு சார்ந்த சலனம் மிக அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.

சுனீல் கிருஷ்ணன்

அன்புள்ள ஜெ,

நூலகத்தில் – ஒரு முயற்சி என்ற அளவில் மட்டுமே ஓக்கே. முதிராத முயற்சி என்றுதான் சொல்லவேண்டும். நிகழ்ச்சிகளுக்கு செயற்கையாக மர்மத்தை ஏற்றுவதற்கு இலக்கியமதிப்பு இல்லை. இதோ என் சன்னல் வழியாக ஒரு அம்மா மீன் கொண்டு செல்கிறார்கள். ஒருவன் பைக்கில் செல்கிறான். ஒரு பசு போகிறது. மூன்றையும் சம்பந்தப்படுத்துவதுபோல எழுதினால் பெரிய மர்மம் இருப்பதுபோலத் தோன்றும். அது எங்கும் எப்போதும் இருக்கும் மர்மம், அவ்வளவுதான்.

சண்முகம்

முந்தைய கட்டுரைகதைகள் – கடிதங்கள்
அடுத்த கட்டுரை’சீர்மை’ மகத்தான அறிமுகம் -கடிதங்கள்