காந்தியும் சாதியும்

திரு ஜெயமோகன்,

காந்தியாரைப்பற்றிய உங்கள் புகழ்மாலைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். காந்தியார் சாதியைப்பற்றி என்ன சொன்னார் என்று உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் மழுப்பாமல் பதில்சொல்ல உங்களால் முடியுமா? வருணமும் சாதியும் இந்துமத்தை காத்தவை என்றுதானே அவர் சொன்னார்? சாதியமைப்பு இந்தியாவுக்கு தேவை என்று சொல்லவில்லை என்று நீங்கள் சொல்ல முடியுமா? இதோ நான் அனுப்பிய மேற்கோள்களை வாசியுங்கள். இன்னும் வேண்டுமென்றால் ஒரு நூறு பக்க மேற்கோள்களை உங்களுக்கு அனுப்புகிறேன்.

பூசைசெய்பவன் பூசைசெய்ய வேண்டும் , மலம் அள்ளுகிறவன் மலம் அள்ளவேண்டும் என்று சொன்னவர்தானே அந்த பனியா? அதற்காகத்தானே அவரை சாதி இந்துக்கள் மகாத்துமா என்று தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள்? இந்த உண்மையை மழுப்பிவிட்டு பூமாலைபோட்டு தெருவில் நிற்கவைத்தால் நம்புவதற்கு இன்னும் மக்கள் தயாராக இல்லை.

மனிதனை மனிதனாக மதிக்கத்தெரியாத ஒருவரை, மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே இருக்கும் ஒடுக்குமுறையை நியாயப்படுத்திய ஒருவரை மகாத்துமாவாக எப்படி ஏற்பது? நல்ல மனுஷனாகக்கூட ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு மோசடிப்பேர்வழியை அயோக்கியனை மகாத்துமாவாக ஆக்க நீங்கள் என்ன சப்பைக்கட்டு கட்டினாலும் தீராது.

சாதியை முன்வைத்து நியாயப்படுத்திய காந்தி இந்தியாவுக்கு என்ன நன்மை செய்தார். உங்களுக்கு நேர்மை இருந்தால் இதற்கு மட்டும் பதில் அளியுங்கள் பார்க்கலாம்

K.ஜெபமாணிக்கம்
**
அன்புள்ள ஜெபமாணிக்கம்,

காந்தியைப்பற்றிப் பேசும்போது சிற்பி லாரி பேக்கர் சொன்ன ஒருவரி என் நினைவில் நின்றது, அவர் சமகாலத்து காங்கிரஸ் தலைவர்கள் அனைவரையும்விட மேற்கத்தியர்களுக்கு நெருக்கமானவராகத் தோன்றினார் என்று. பேக்கரின் அந்த மனப்பிம்பத்தில் முக்கியமான ஓர் உண்மை மறைந்துள்ளது.

அந்த உண்மையை வேறு ஒரு கோணத்தில் சுந்தர ராமசாமி அவரது உரையாடலில் என்னிடம் சொன்னார், காந்தியின் மனம் என்பது ஒரு நவீன மேற்கத்திய மனம் என்று. கிட்டத்தட்ட ஓர் அறிவியலறிஞனின் மனம். காந்தி எல்லாவற்றையும் ‘சோதனை- விளைவுகளை அவதானித்தல்- பிழை திருத்தல்- மீண்டும் முயல்தல்’ என்ற தூய அறிவியல் நோக்கிலேயே செய்தார். இந்திய விடுதலைப்போராட்டம் முதல் தன் சொந்த மலக்குடலை சுத்தம்செய்வதுவரை.

ஆகவே காந்தியைச் சரிவரப்புரிந்துகொண்டவர்கள் மேலைநாட்டினரே என்று சுந்தர ராமசாமி வாதிட்டார். அது உண்மைதான் என நான் நினைக்கிறேன். காந்தி எப்போதும் எதையும் நடைமுறை சார்ந்துதான் புரிந்துகொள்ள முயன்றார். அவரே இந்தியகிராமங்கள் தோறும் அலைந்தார். மக்களின் வாழ்க்கையை அவரே கண்டார். அந்த வேறுபாடு அவரை பிற காங்கிரஸ், கம்யூனிஸ்டு தலைவர்கள் மற்றும் அறிவுஜீவிகளிடம் இருந்து பிரித்தது. அவர்கள் கட்சி ,அமைப்பு சார்ந்து பயணம் செய்திருப்பார்களே ஒழிய மக்களிடையே சென்றவர்கள் அல்ல. அவர் பேச்சைக்கேட்டு அவரைப்போல மக்களிடையே செல்ல துணிந்த அறிஞர்களில் மேலைநாட்டினரே அதிகம். லாரி பேக்கர் அவர்களில் ஒருவர்.

இன்னொரு விஷயத்தையும் நான் கவனித்தேன். அக்கால இந்திய அரசியல்வாதிகள் மற்றும் அறிவுஜீவிகளில் உள்ளூர வெள்ளையன்மீது தாழ்வுணர்ச்சி இல்லாத ஒரே மனிதரும் அவர்தான்.  காந்தியைத்தவிர பிறருக்கு வெள்ளையர்களின் பழக்கவழக்கங்களில், உடைகளில், அவர்களின் மொழியில், சிந்தனைகளில் இருந்த வெளிப்படையான பக்தியை நாம் சாதாரணமாகவே காணலாம். காந்தி அவற்றுக்கு அப்பாற்பட்டவர். அதனால்தான் பிற எவரையும் விட அவர் மேலைநாட்டினரைக் கவர்ந்தார்.

இந்தத் தாழ்வுணர்ச்சி இத்தியமறுமலர்ச்சியின்போதே உருவாகி இந்திய விடுதலைப்போராட்டகாலத்தில்கூட நம் சிந்தனைகளை ஆழமாகப்பாதிக்கும் அம்சமாக இருந்தது. மிகச்சிறந்த ஆரம்பகாலகட்ட உதாரணம் என்றால் பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்த ராஜா ராம் மோகன் ராயைத்தான் சொல்லவேண்டும். அவர் இந்தியமரபு சார்ந்த எல்லாவற்றையும் மேலைநாட்டினரின் பார்வையில்தான் பார்த்தார். அவர்கள் புரிந்துகொண்ட விதத்தையே பகுத்தறிவுமிக்க நவீன நோக்காக எண்ணி அதை அப்படியே தானும் ஏற்றுக்கொள்ள முயன்றார்.

மேலைநாட்டினருக்கு இந்தியாவில் பிரம்மம் என்ற கருத்துருவும் உபநிடதங்களும் ஏற்புடையதாக இருப்பதைக் கண்டு ராஜாராம் மோகன் ராய் அதை மட்டும் இந்திய மெய்ஞான மரபில் சிறந்த பகுதி என்றும் மையம் என்றும் என்று வகுத்துக்கொண்டார். அதன் அடிப்படையில் ஒரு புதிய இந்துமதத்தை கட்டி எழுப்ப எண்ணி பிரம்ம சமாஜத்தை உருவாக்கினார்.

பிரம்மசமாஜம் அப்படியே கிறித்தவர்களின் கூட்டுப்பிரார்த்தனை, பிரசங்கம் போன்ற மதவழிமுறைகளை பின்பற்றியது. பரிசுத்த ஆவியை அது பிரம்மம் என்றது, அவ்வளவுதான். ஆகவே வெள்ளையர்களுக்குப் பொதுவாக பிரம்மசமாஜம் மிகவும் அறிவார்ந்ததாக, நெருக்கமானதாக இருந்தது. இக்காரணத்தால் ஆங்கிலேயருடன் நெருங்க விரும்பிய கல்கத்தாவின் படித்தவற்கத்துக்கு பிரம்மசமாஜம் ஒரு அடையாளமாக ஆகியது. ஆங்கிலேயர் போனதும் அதுவும் போனது.

இந்தியாவை வெள்ளையரின் கண்ணால் பார்த்தல் என்பதையே நவீன நோக்காக கொள்ளுதல் என்பதை நாம் ஜவகர்லால் நேரு வரை மீண்டும் மீண்டும் காணலாம். அந்த நோக்கே அம்பேத்காரிலும் ஆரம்பத்தில் இருந்தது என்றாலும் தன் அபாரமான கல்வியால் சுயமான சிந்தனைக் கட்டுமானங்களை உருவாக்கிக் கொண்டு அம்பேத்கார் பின்னர் விலகிச்சென்று வளர்ந்தார்.

இவ்வாறு  ஐரோப்பியரின் நோக்கை கடன்வாங்கித்தான் இந்தியாவின் தனித்தன்மைகளான சாதியமைப்பு, மத ஆசாரங்கள், பண்டைய இலக்கியங்கள், இந்திய மெய்யியல்மரபுகள் அனைத்தையும் நம் அறிவுஜீவிகள் ஆராய்ந்தார்கள். கோட்பாடுகளை மட்டுமல்ல தரவுகளைக்கூட ஐரோப்பியரின் நூல்களில் இருந்தே பெற்றுக்கொண்டார்கள். நேருவின் புகழ்பெற்ற நூல்களில் இவ்வியல்பைக் காணலாம். இன்றுவரை  இந்திய அறிவுத்தளத்தில் நிகழ்ந்துகொண்டிருப்பதும் இதுவே.

இதன் விளைவாக ஓர் வியக்கத்தக்க நிகழ்வை நாம் இந்திய மறுமலர்ச்சிக்காலகட்டத்துச் சிந்தனைகளில் காணலாம். நூற்றாண்டுகளாக உருவாகிவந்து கோடானுகோடி மக்களின் வாழ்க்கையின் பகுதியாக இருந்துவந்த பல விஷயங்கள் அந்த மக்களின் அறிவுஜீவிகள் நடுவே எந்தவகையான விவாதமும் இல்லாமல் உடனடி நிராகரிப்புக்கு உள்ளாயின. சாதிமுறை அதில் ஒன்று.

சாதி என்ற அமைப்பு இந்திய சமூகத்தின் முக்கியமான ஒரு கூறு. அதன் வரலாற்றுப் பரிணாமம், சென்றகாலத்தில் அதன் சமூகப்பயன்பாடு, அதன் நிகழ்காலப்பணி எதைப்பற்றியும் எந்த ஆய்வும் இந்தியாவில் நடக்கவில்லை. இந்தியாவை நோக்கிய ஆங்கிலேயர் அதை இந்திய சமூகத்தைப் பீடித்திருக்கும் ஒரு நோய் என்று சொன்னார்கள். இந்திய படித்த வர்க்கம் அப்படியே ஏற்றுக்கொண்டு சொல்ல ஆரம்பித்தது. வெள்ளையனே சொல்லிவிட்டான் என்ற தாழ்வுமனப்பான்மையே காரணம்.

ஆனால் உண்மையில் இந்த நிராகரிப்பு என்பது நம் படித்தவற்கத்தின் நாக்குகளில் மட்டுமே இருந்தது. நெஞ்சில் நிகழவில்லை. இக்கணம் வரை அப்படித்தான். ஏன் என்றால் அவனுக்குள் சாதியைப்பற்றிய எந்த விவாதமும் நிகழவில்லை. அவ்வாறு விவாதம் நிகழ்ந்திருந்தால் சாதியின் சமூகப்பங்களிப்பு குறித்து அவன் சிந்தனை செய்திருப்பான். இப்போதும் சாதியைச் சுமக்க அவனுக்கு என்ன காரணங்கள், கட்டாயங்கள் உள்ளனவோ அந்தக் காரணங்கள் எல்லாமே விவாதத்துக்கு வந்திருக்கும். அவற்றை வேறு எவ்வகையில் தாண்டிச்செல்ல முடியும் என்று பார்த்திருப்பான். அந்த வழிமுறைகள் அவனுக்கு உதவியிருக்கும்.

காந்தியைப் பொறுத்தவரை அவர் அந்த தாழ்வுணர்ச்சி முற்றிலும் இல்லாதவர். இந்தியாவைப்பற்றிய மேலைநாட்டு நோக்கை அவர் எவ்வகையிலும் கடன் பெற்றவர் அல்ல. மேலைநாட்டின் தத்துவஞான மரபில் அன்று மிகுந்த படைப்பூக்கத்துடன் உருவாகிவந்த ஒரு தரப்புடன் அவருக்கு தீவிரமான உறவிருந்தது — தோரோ, ரஸ்கின், டல்ஸ்தோய் மரபில். ஆனால் அவர் சிந்தனைகளைக் கடன்கொண்டவரல்ல.

காந்தியின் தனித்தன்மை அவர் தன் சிந்தனைகளை நூல்களில் இருந்து பெறவில்லை என்பதே. அவர் தன் சொந்தச் சிந்தனைகளுக்கு  தேவையான அளவுக்கு மட்டும் நூல்களை பயன்படுத்திக்கொண்டார்.  அவர் நடைமுறைவாதி. சமூகம் குறித்த தன் தரவுகளை தன் சொந்த அவதானிப்புகளில் இருந்தே அவர் பெற்றுக்கொண்டார். தன் பகுத்தறிவுக்கு ஒரு விஷயம் உண்மையிலேயே திருப்தி அளிக்காத வரை அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

தன் தரப்பு முற்போக்காக, நவீனமாகக் கருதப்படுமா இல்லையா என்பதைப்பற்றி ஒருபோதும் கவலைப்பட்டவரல்ல காந்தி. எளிதாக ஒரு முற்போக்குக் கருத்தை வாயளவில் ஏற்றுக்கொண்டு  அதைப்பற்றி சொந்தவாழ்க்கையில் கவலையே இல்லாமல் முன்னால்செல்வதும் அவருக்கு உடன்பாடான விஷயம் அல்ல. அவர் ஒருபோதும் தன் கருத்தில் பிடிவாதமாக இருக்கவில்லை. தன் கருத்துக்களை பிறர் மாற்றும்பொருட்டு எப்போதுமே திறந்துவைத்திருந்தார். தன் பகுத்தறிவு எப்போது திருப்தி அடைகிறதோ அப்போது ஒரு முன்னுதாரண அறிவியலாளன் போல தன்னை அவர் மாற்றிக்கொண்டார்.

*

இந்தக் கோணத்தில்தான் நாம் காந்தி சாதியைப் பற்றி என்ன நினைத்திருந்தார் என்று பார்க்க வேண்டும். காந்தி அக்காலத்தில் ஒரு இந்து சாதியைப்பற்றி இயல்பாக என்ன நம்பிக்கை கொண்டிருந்தாரோ  அந்த நம்பிக்கையையே தானும் கொண்டிருந்தார். அவர் காலத்தில் ஐரோப்பியரை வழிமொழிந்து சாதிக்கு எதிராகப் பேசியவர்கள் அந்தரங்கத்தில் கொண்டிருந்த நம்பிக்கைதான் அது. காந்தியின் உண்மையுணர்ச்சியே அவரை அதை நேர்மையாக பதிவுசெய்ய வைத்தது.

காந்தியின் ஆரம்பகால எண்ணங்கள் இவை. வருணப்பிரிவு என்பது சமூகத்தில் ஓர் ஒழுங்கை உருவாக்கும்பொருட்டு இயல்பாக பரிணாமம் அடைந்துவந்த ஒன்று. அது சமூகத்தின் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறது. தந்தையரின் தொழிலை மகன் செய்யும்போது இயல்பாகவே அவனுக்கு அதில் திறமை உருவாகி வருகிறது. இந்திய சமூகம் உள்மோதல்களினால் அழியாமல் ஆக்கபூர்வமாகச் செயல்பட அது பலநூற்றாண்டுகளாக உதவி வந்திருக்கிறது.

இந்திய சமூகம் மீது நெடுங்காலமாக நிகழ்ந்த பல அன்னியத் தாக்குதல்களை வெல்லவும் தாக்குபிடிக்கவும் அது உதவியிருக்கிறது. மக்கள் பிறப்பின் அடிப்படையில் ஒரு தொழில்குழுவாகத் திரண்டு ,ஒரே உடலாக தங்களுக்கு வாழ்க்கை விடுத்த கடுமையான சவால்களை சமாளிக்க சாதியமைப்பு வழியமைக்கிறது. ஆகவே மையப்படுத்தப்பட்ட அரச அதிகாரத்தின் உதவி இல்லாமலேயே மக்கள் தங்களை சிறிய சுயநிர்வாக அமைப்புகளாக தொகுத்துக்கொண்டு தங்கள் வாழ்க்கையை தாங்களே அமைத்துக்கொள்ள சாதி உதவியிருக்கிறது. சாதியாசாரங்களும் சாதிவிதிகளும் அவ்வாறு உருவாகி வந்தவையே.

ஆகவே வர்ண அமைப்பும் அதில் இருந்து உருவாகி வந்த சாதியும் முழுக்க நிராகரிக்கத்தக்கவை அல்ல. அவை காலப்போக்கில் பல சிதைவுகளையும் திரிபுகளையும் அடைந்திருக்கலாம். அந்தத் திரிபுகளைக் களைந்து சாதி என்ற அமைப்பை தக்கவைத்துக்கொள்வதே முறை. சாதி உருவாக்கும் ஏற்றத்தாழ்வுகளைக் களையலாம். சாதிமோதல்களை இல்லாமல் ஆக்கலாம். ஆனால் இந்தியாவில் அதிகாரப்பரவலாக்கத்துக்குச் சாதி இன்றியமையாதது. சாதி என்பது மைய அதிகாரங்களுக்கு எதிராக மக்கள் தங்களை தாங்களே நிர்வகித்துக்கொள்ள உதவுகிறது– இவையெல்லாம்தான் காந்தியின் ஆரம்பகால எண்ணங்கள்.

காந்தி 1908 ல் அவரது இளமைப்பருவத்தில் தென்னாப்ரிக்காவில் இருக்கும்போதே எழுதிய ‘ஹிந்த் ஸ்வராஜ்’ என்ற சிறிய நூலில் இந்தக் கருத்துக்களை முதலில் வெளிப்படுத்தியிருந்தார். அந்த முதல்நூலை காந்தி தன் தாய்மொழியான குஜராத்தியிலேயே எழுதியிருந்தார். அந்நூலில் காந்தி ஐரோப்பாவில் உருவாகி வந்த தொழில்புரட்சியையும் அதன் விளைவான நவீனத்துவத்தையும் ஆழமாக சந்தேகப்படுகிறார். அவை உலக வளங்களைச் சுரண்டி தேவையற்ற போட்டியை உருவாக்கி அழிவுக்கே வழிவகுக்கும் என்கிறார். வலிமையான மையஅதிகாரம் அற்ற ஒரு தேசத்தை உருவகிக்கிறார். அது சுயநிர்வாகம் செய்துகொள்ளும்  தன்னிறைவுகொண்ட தொழில்கிராமங்களினால் ஆனதாக இருக்கும் என்றார்.

அதில் சொல்லியிருந்த சாதி குறித்த தன் அவதானிப்பை  காந்தி தன் நேரடியான இந்திய அனுபவத்தில் இருந்தே பெற்றுக்கொண்டிருக்க வேண்டும். இயல்பாக அவருக்கு அவரது சூழல் அளித்த புரிதலை அவர் தன் அவதானிப்புகள் மூலம் நிறுவிக்கொண்டார். வெள்ளையர் சாதியமைப்பை இந்தியாவின் நோய் என்று சொல்லிவந்தாலும் நடைமுறையில் அது அப்படி இருக்கவில்லை என்று காந்தி கண்டறிந்த்¢ருப்பார். சாதியமைப்புக்கு இந்திய சமூகத்தில் மிக ஆக்கபூர்வமான ஒரு பங்களிப்பு இருப்பதை அவர் உணர்ந்திருப்பார். அந்த நடைமுறை அறிவையே அவர் முன்வைத்தார்.

இன்றைய இந்தியாவை வைத்தே அவர் கண்டதென்ன என்று நாம் ஊகிக்க முடியும். உயர்சாதியினர் மட்டுமல்ல ஏழை அடித்தள மக்களும்கூட தங்கள் சாதியடையாளத்தை மிகுந்த உணச்சிகரத்துடன் முன்னிறுத்துவதைக் காந்தி கண்டிருப்பார். அந்தச் சாதி அடையாளம் அவர்கள்மேல் திணிக்கப்பட்டதாக, அவர்கள் மேல் வைக்கப்பட்ட நுகமாக, இருந்திருந்தால் அவர்கள் அதை அவ்வாறு தழுவிக்கொண்டிருக்க மாட்டார்கள். மாறாக அது அவர்களின் தனித்தன்மையின் சின்னமாக, அவர்களுக்கு பாதுகாப்பளிக்கும் குழு அடையாளமாக உள்ளது.

சாதி என்பது மக்களை திரட்டி இயல்பான ஒரு கிராமசமூக அமைப்பை உருவாக்குகிறது என காந்தி அறிந்தார். அது அவர்களுக்கு சேர்ந்து பணியாற்றவும் சேர்ந்து போராடவும் இன்றியமையாததாக இருந்தது. சாதி பெரும்பாலும் இந்திய சமூகத்தில் தொழிற்குழுக்களாகவே இருந்தது. தொழிலில் உள்ள சவால்களை மக்கள் சாதியின்மூலமே சேர்ந்து எதிர்கொண்டார்கள். போர் காரணமாகவோ பஞ்சம் காரணமாகவோ இடம்பெயரும்போதுகூட ஒருசாதியாக, கூட்டமாகவே அவர்கள் இடம்பெயர்ந்தார்கள். சென்ற இடங்களில் போராடி வேரூன்ற சாதியின் ஒற்றுமையே உதவியது.

இன்றும்கூட நவீன இந்தியாவில் சாதி மக்களை இயல்பான, வலிமையான, குழுவாக திரட்டி அவர்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கிறது. தொழில்களில் வணிகங்களில் ஈடுபடுவதற்கும் உரிமைகளுக்காக போராடுவதற்கும் ஜாதியாகத் திரள்வது அவர்களுக்கு உதவுகிறது.  உதாரணமாக தமிழ்நாட்டில் கொங்குவேளாளரையும் நாடாரையும் சொல்லலாம். சுதந்திரத்துக்குப் பின் வந்த கல்வியும் நவீனமயமும் சாதியை மேலும் வலுவடையச்செய்தன. காரணம் சாதிக்கு சமூகத்தின் முன்னேற்றத்தில் மிகப்பெரிய  பங்களிப்பு இருக்கிறது. அந்த பங்களிப்பு இருப்பது வரை சாதி அழியாது

ஆகவே சாதி வெள்ளையர் சொன்னதுபோல இந்திய சமூகத்தில் ஒரு முற்றிலும் எதிர்மறையான ஒரு கூறு அல்ல. மிக ஆக்கபூர்வமான பங்களிப்பை ஆற்றிய, ஆற்றி வருகிற ஓர் அமைப்பு. ஆகவேதான் சாமானிய இந்தியன் சாதியைக் கைவிடத் தயாராக இல்லை. இதுவே இன்றும் இந்தியாவின் யதார்த்தம் என்பதை வழக்கமான கோஷங்களை கொஞ்சம் ஒத்திவைத்துவிட்டு கொஞ்சம் திறந்தமனத்துடன் நோக்கினால் புரிந்துகொள்ள முடியும்.

கிராம சுயராஜ்யத்தைப் பற்றிப் பேசிய காந்தி இந்திய மக்கள் அவர்களின் நெருக்கடிகளை எல்லாம் தாண்டிவர உதவிய சாதி என்ற அமைப்பை தக்கவைத்துக்கொள்ள எண்ணியதில் என்ன பிழை இருக்கிறது? இன்று கொங்குவேளாளரும் நாடாரும் எப்படி ஒருங்கிணைந்து முன்னேறினார்களோ அப்படி எல்லா சாதியும் திரண்டு உழைத்து முன்னேறவேண்டும் என்றே அவர் கனவு கண்டார். காந்தி மக்களுக்குக் கற்றுக்கொடுக்க முற்பட்டவர் மட்டும் அல்ல, மக்களிடமிருந்தும் கற்றுக்கொண்டவர். சாதி அவர்களுக்கு உயிர்போன்றது என அவர் அறிந்திருந்தார்.

ஐரோப்பிய சிந்தனையை கடன்வாங்கிக்கொண்டு, இந்திய யதார்த்தத்தைப் பற்றி கொஞ்சம்கூட பிரக்ஞை இல்லாமல், தன்னிடம் விவாதிக்க வந்த அன்றைய ஆங்கில கற்ற முற்போக்கு வற்கத்திடம் காந்தி மீண்டும் மீண்டும் விவாதித்தார்.மக்களிடம் சென்று அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்க்கச் சொன்னார். சாதியின் வரலாற்றுப்பங்களிப்பை, நடைமுறைத் தேவையை விளக்கினார்.

காந்தி சாதியைப்பற்றி பேசிய அந்நாட்களில் இந்திய சமூகத்தில் சாதி உருவாகி வந்த விதத்தைப் பற்றிய ஓர் அறிவியல்பூர்வமான ஆய்வே நடக்கவில்லை. இந்தியாவை மதவிழிப்பற்ற காட்டுமிராண்டி நாடாகச் சித்தரித்த கிறித்தவ மதப்பரப்புநர்கள் உருவாக்கிய சித்திரமே பிரபலமாக இருந்தது. அதன்படி, சாதி என்பது இந்திய சமூகத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான கொடிய வழக்கங்களில் ஒன்று.  அது இந்து மதத்தாலும் பிராமணர்களாலும் அவர்களின் ஆதிக்கத்துக்காக ஒரு சதிவேலையாக உருவாக்கப்பட்டது. ஆகவே வேருடன் கெல்லி எறியப்பட வேண்டியது…

இன்றுவரை தமிழ்நாட்டில் அறிவுஜீவிகள் என்பவர்களிடையே பிரபலமாக இருப்பது இந்த ஒற்றைவரிப் புரிதல் மட்டுமே. இந்த மேலோட்டமான புரிதலை மக்களிடையே கொண்டுசெல்ல முடியாது, ஏனென்றால் அடிப்படையான ஒரு பயன்பாடு இருப்பதனால்தான் அவர்கள் சாதியை ஆரத்தழுவிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே சாதிநிராகரிப்பு என்பது மேடையில் செய்யப்படும் வெற்றுபாவனையாக நின்றுவிடுகிறது. நடைமுறை யதார்த்தத்துக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதில்லை.

தமிழ்நாட்டு யதார்த்ததையே பார்ப்போம். இங்கே கொஞ்சமாவது சாதியை விட்டு வெளியே வந்தவர்கள் ‘உயர்மட்ட’ சாதியினரே. இன்றும் ‘கீழ்மட்ட’ சாதியினரிடம் சாதிப்பற்று என்பது ஆழமாக வேரோடி இருக்கிறது. சாதிமறுப்பை மேடையில் கக்குபவர்கள், சாதியை உருவாக்கிய உயர்சாதிச்சதியை எதிர்த்து பொங்குகிறவர்கள் அனைவருமே சாதிக்குள்தான் வசதியாக இருந்துகொண்டிருக்கிறார்கள்.

காந்தி இறந்தபின்னர், டி.டி.கோஸாம்பியைப் போன்ற மார்க்ஸிய ஆய்வாளர்கள் மார்க்ஸிய சமூக ஆய்வுச் சட்டகத்தை இந்தியச் சமூகம் மீது போட்டுப்பார்த்தபோதுதான் சாதியின் உருவாக்கத்தைப் பற்றிய முதல் அறிவியல்ரீதியான விளக்கம் இந்தியச் சூழலில் உருவாகி வந்தது. அந்த விளக்கத்தை ரத்தினச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம்.

இந்திய நிலப்பகுதி வரலாற்றுக்கு முற்பட்ட காலகட்டத்தில் முற்றிலும் மாறுபட்ட வளர்ச்சிப்படிகளில் நின்ற பலவகையான மக்கள்கூட்டங்களினால் ஆனதாக இருந்தது. அந்நிலையில் நிலவளம் நீர்வளம் போன்ற காரணங்களினால் வளர்ச்சிபெற்ற மக்கள்கூட்டங்கள் பிற கூட்டங்களை வென்று தனக்குள் இழுத்துக்கொள்ள ஆரம்பித்தன. இவ்வாறு உள்ளிழுக்கும் போக்கின் விளைவாக உருவானதே சாதி என்ற அமைப்பு.

வெற்றிபெற்ற மக்கள்கூட்டமான ஆரியர்கள்  தங்களை தொழிலின் அடிப்படையில் நான்கு வருணங்களாக பிரித்துக்கொண்டிருந்தார்கள்.  தன்னுடன் இணைத்துக்கொண்ட மக்கள்கூட்டங்களை அவர்களின் தொழில் மற்றும் வளர்ச்சியின் அடிப்படையில் தங்களில் ஏதேனும் ஒரு வர்ணத்துடன் இணைத்துக்கொண்டார்கள். இவ்வாறுதான் வர்ண அமைப்பு பலநூறு சாதிகளால் ஆனதாக மாறியது. சாதி என்பது பழங்குடி இனக்குழுக்களே.

ஆக, சாதிகள் என்பவை உண்மையில் ஒரு சமூகம் சிலரால் ஆதிக்க நோக்குடன் திட்டமிட்டு பலவாக பகுக்கப்பட்டு உருவானவை அல்ல. மாறாக, பலநூறு சிறிய இனக்குழுக்கள், பழங்குடிச்சமூகங்கள் ஒரு பொது சமூகமாக தொகுக்கப்பட்டதன் விளைவாக உருவானவை. ஒருசாதிக்குள் உபசாதிகள், உபசாதிக்குள் சிறிய குலக்குழுக்கள், குலக்குழுவுக்குள் கூட்டங்கள் என உள்பிரிவினைகள் இருப்பதை இவ்வாறுதான் புரிந்துகொள்ள முடியும்.

பல்வேறு மக்கள்கூட்டங்களை ஒன்றாகத் தொகுத்து ஒரே அமைப்புக்குள் கொண்டுவருவதன் வழியாகவே அரசுகள் உருவாயின. மேலும் மேலும் அதிக மக்கள் அந்தச் சமூக அமைப்புக்குள் வருவதன் விளைவாகவே அரசுகள் பேரரசுகள் ஆக முடியும். ஆகவே அந்த உள்ளிழுக்கும் போக்கு மன்னர்களால் ஊக்குவிக்கப்பட்டது. அந்தச் சாதித்தொகுப்புக்கு தத்துவ விளக்கமும் புனிதத்தன்மையும் அளிக்கப்பட்டது. அவ்வாறாக அச்சமூகத்தில் அனைவரும் அந்த சமூக அடுக்கை ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டார்கள்.

கண்டிப்பாக இந்த அமைப்பு ஆதிக்க நோக்கம் கொண்டதே. நிலப்பிரபுத்துவ காலத்தில் உருவான இந்த அமைப்பு சமூகக் கூறுகளை கீழ் கீழாக அடுக்கி ஒரு ஆதிக்க கட்டுமானத்தை உருவாக்கியது. நிலப்பிரபுத்துவத்தின் அமைப்பு இது என்பதனால் யாரிடம் நிலம் இருக்கிறதோ அவர்கள் மேலே இருந்தார்கள். யார் நிலமில்லாதவர்களோ அவர்கள் கீழே சென்றார்கள். நிலத்தை அடைந்த கீழ்சாதிகள் மேலே சென்றமைக்கும் நிலமிழந்த மேல்சாதி கீழே வந்தமைக்கும் இந்தியாவில் உதாரணங்கள் பல உள்ளன.

இந்த சித்திரம் இந்தியாவின் எளிய மக்கள் ஏன் சாதியடையாளத்தை விட மறுக்கிறார்கள் என்பதற்கான விளக்கத்தை அளிக்கிறது. சாதி என்பது அம்மக்களின் புராதனமான குல அடையாளம்.  அது அவர்களுக்கு தனித்தன்மையை அளிக்கிறது. ஒரு குழுவாக உணரச்செய்கிறது. ஆகவே எந்நிலையிலும் அதை அவர்கள் இழக்க முடியாது. இன்று வரை இந்தியாவில் அது சாத்தியப்படவும் இல்லை.

இந்தக் கோணத்தில் பார்த்தால் காந்தி அவருக்கே உரிய நுண் அவதானிப்பால் சாதியின் சமூக முக்கியத்துவத்தையும் பங்களிப்பையும் கிட்டத்தட்ட இதே அளவுக்கு  உணர்ந்துகொண்டிருப்பதை காணலாம். அவர் அக்காலத்தில் சாதியை தூக்கிப்பிடித்த இந்து சனாதனிகளின் குரலை எதிரொலிக்கவில்லை. பழைமைவாதத்தை பேசவும் இல்லை. அவர் மிக அறிவியல்பூர்வமாகவே சாதியை அணுகியிருக்கிறார்.

காந்தியின் காலகட்டத்தில் அறிவுஜீவிகள் சாதியமைப்பை உதறிவிட்டு ஐரோப்பாவில் இருந்ததுபோல வர்க்க அமைப்பை கொண்டுவரலாம் என்ற எண்ணம் கொண்டிருந்தார்கள். நேருகூட சாதி அமைப்பு பழையது, வர்க்க அமைப்பே நவீனமானது தவிர்க்கமுடியாதது என்று எண்ணினார். ஆனால் காந்தி அதை ஏற்கவில்லை. வர்க்க அமைப்புக்குச் சாதியமைப்பு எவ்வளவோ மேல் என்றார்.

காந்தியின் நோக்கில், வர்க்க அமைப்பு மக்களை தனியர்களாக்குகிறது. சாதியமைப்பு மனிதர்களுக்கு அளிக்கும் இயல்பான குழுத்தன்மையும் அதன் பாதுகாப்பும் இல்லாமல் ஆகிறது. பொருளாதார அளவீடு மட்டுமே மனிதர்களை மதிப்பிட பயன்படுவதனால் செல்வத்துக்கான கழுத்தறுக்கும் போட்டியே வாழ்க்கையாக ஆகிவிடும். அதன்மூலம் நெறிகள் இல்லாமலாகி  மானுட உறவுகள் சீரழியும் என்றார் காந்தி. ஐரோப்பிய வர்க்கப்பிரிவினை சாதிப்பிரிவினையை விட சுரண்டல் மிக்கது என நேரில் கண்டவர் அவர்.

இன்றும் இந்த நிலை உள்ளதை நாம் காணலாம். நமது நகரங்களில் வர்க்க அடிப்படையில் பகுக்கப்பட்ட மனிதர்கள் வாழ்கிறார்கள். கிராமங்களில் சாதியடிப்படையில் பகுக்கப்பட்ட மனிதர்கள். நமது நகர மனிதனுக்கு இல்லாத சமூகப்பாதுகாப்பும்  நாம் என்ற தன்னம்பிக்கையும்  கிராமத்து மனிதனுக்கு இருக்கிறது.

மேலும் காந்தி உருவகித்த கிராமராஜ்யத்தில் பெரும் தொழில்நகரங்கள் இல்லை. ஆகவே அங்கே வர்க்க அடிபப்டையில் பிரிக்கப்பட்ட மக்களுக்கு இடமில்லை. மக்களுக்கிடையேயான பிரிவினை சாதியாகவே இருக்க இயலும்.

தான் உருவகித்த கிராமசுயராஜ்யத்தில் காந்தி ஏற்றதாழ்வு இல்லாத சாதியமைப்பு இருக்கலாம் என்று எண்ணினார். சாதி அந்தக் கிராம அமைப்பில் மக்கள் இயல்பான குழுக்களாக இயங்க உதவும் என நினைத்தார். இந்தியாவின் புராதனமான வளர்ச்சிப்போக்கு சாதியால் ஆனது என்பதனாலேயே அவர் அந்த முடிவுக்கு வந்தார்.

காந்தியின் அந்த முதல் நூல் எழுதப்பட்டு நூறுவருடம் ஆகிறது. ஆனால் அவரை அவர் சொல்வதென்ன என்று நோக்கி ஆராயும் போக்கு நம் நாட்டில் உருவாகவில்லை. அவரை ஐரோப்பியர்களின் கண்ணால் நோக்கி சாதிவெறியன் என்றோ மதவெறியன் என்றோ முத்திரை குத்தவே நாம் முயந்றிருக்கிறோம்.  நமது சாதிப்பற்றை அப்போது சட்டைப்பைக்குள் உள்ளே தள்ளிக்கொள்கிறோம்

இன்று,  அவர் சொன்னதென்ன என்று அவரது நூல்கள் வழியாக ஆராய்ந்து ஐரோப்பிய ஆய்வாளர்கள் எழுதும்போது அந்த நூல்களை வாசித்துவிட்டு நம்மில் சிலர் ‘ஆமாம், காந்தி பழமைவாதியல்ல பின் நவீனத்துவர், அவர் சொன்னது ஓர் அறிவியல்பூர்வமான ஆய்வின் ஒரு முடிவையே’ என்று அங்கீகரிக்கிறோம்.  நம் தாழ்வுணர்ச்சியில் இருந்து வெளிவர இன்னும் நம்மால் இன்னும் முடியவில்லை

*

காந்திய ஆய்வாளரான மார்க் லிண்ட்லே [Prof. Dr. Mark Lindley ] காந்தியைப்பற்றிய ஆய்வுகளைச் செய்த ஐரோப்பியர்களில் முக்கியமானவர். இசைஆய்வாளரும் இந்திய வரலாற்றாசிரியருமான மார்க் லிண்ட்லே அமெரிக்காவில் வாஷிங்டன் டி.சியில் 1937ல் பிறந்தார். ஹார்வார்ட் பல்கலையில் சமூகவியல் கற்றார். கொலம்பியா பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார். பல்வேறு பல்கலைகளில் ஆய்வுப்பேராசிரியராக பணியாற்றினார்.

லிண்ட்லே காந்தியின் எழுத்துக்களை முழுமையாகத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.  காந்தி, நாம் அறிந்த வகையிலேயே [ Gandhi as We Have Known Him]  என்ற நூல் முக்கியமானது. ஜெ.சி.குமரப்பாவின் வாழ்க்கை வரலாற்றையும், கோராவின் வாழ்க்கை வரலாற்றையும் நூல்களாக எழுதியிருக்கிறார். ஒரு கட்டுரையில் லிண்ட்லே காந்தி சாதியைப்பற்றி கொண்டிருந்த கருத்துக்களை தொகுத்து முன்வைக்கிறார்.

1920ல் காந்தி எழுதினார் :”சாதியமைப்பு இந்துமதத்தை அழிவிலிருந்து காப்பாற்றியது என நான் நினைக்கிறேன். ஆனால் எல்லா நிறுவனங்களையும்போல அதுவும் சீரழிந்துவிட்டது. நால்வருணம் என்ற பிரிவினை அடிபப்டையானது இயல்பானது தேவையானது என்றே எண்ணுகிறேன். எண்ணிக்கையிலடங்காத துணைச்சாதிகள் சிலசமயம் வசதியானவை சிலசமயம் தடையாக ஆகின்றவை. அவை எந்த அளவு சீக்கிரம் இணையுமோ அந்த அளவுக்கு நல்லது.

ஒருமுறை என்னைப் பேட்டிகண்ட ஒருவர் கேட்டார் நாம் இந்திய சாதியமைப்பை உதறிவிட்டு ஐரோப்பாவின் வர்க்க அமைப்பை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று “அதன்மூலம் சாதியமைப்பில் உள்ள பிறப்பு அடிப்படையை களையலாமென அவர் எண்ணுகிறார் என்று நான் ஊகிக்கிறேன் பிறப்பின் அடிபப்டையிலான அடையாளம் என்பது எப்போதைக்கும் உரியது என்றும் அதை மாற்ற நினைப்பதென்பது பெரும் குழப்பத்துக்கே இட்டுச்செல்லும் என்றும் எனக்குப் படுகிறது.”

1920ல் காந்தி மேலும் எழுதினார். ”சாதியமைப்பின் அழகு என்னவென்றால் அது செல்வத்தின் அடிப்படையில் அமைந்திருக்கவில்லை என்பதே. வரலாறு காட்டுவதைப்போல பணம் என்பது மிகப்பெரிய ஓர் அழிவுச்சக்திதான். சாதி என்பது குடும்பம் என்ற விதியின் நீட்சிதான். பாரம்பரியம் ரத்தஉறவு ஆகியவற்றின் அடிப்படையில் அவை நிர்வகிக்கப்படுகின்றன. மேலைநாட்டு அறிவியலறிஞர்கள் பாரம்பரியம் என்பது ஒரு பிரமைதான் என்றும் சூழல்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்றும் காட்ட கடுமையாக முயன்றுவருகிறார்கள். ஆனால் பலநாடுகளில்  உள்ள அனுபவம் என்பது அந்த முடிவுகளுக்கு நேர் எதிரானதாகவே செல்கிறது. ஆனால் சூழலே எல்லாம் என்ற அவர்களின் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டாலும் கூட வர்க்க அமைப்பைவிட சாதியமைப்பில்தான் சூழலை பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் எளிது என்று சொல்லலாம்.

சமூக வாழ்க்கையில் மாற்றம் என்பது மிகமிக மெல்லத்தான் வரமுடியும் என நாம் அறிவோம். ஆகவே இன்றைய சமூக மாற்றங்களுக்கு ஏற்ப சாதியானது புதிய குழுவமைப்புகளாக தன்னை மாற்றிக்கொண்டுள்ளது. இந்த மாற்றங்கள் மேகங்களின் வடிவம் மாறுவதுபோல எளிதாகவும் இயல்பாகவும் நடைபெறுகின்றன. இதைவிட மேலான மானுட பரிணாமத்தை கற்பனை செய்வது கடினம்

சாதியமைப்பு மேல் கீழ் என்ற பேதத்தைச் சுட்டுவதில்லை. அது வாழ்க்கைநோக்கில் உள்ள வேறுபாடுகளையும் அதற்குச் சமானமான வாழ்க்கை அமைப்புகளையும் அடையாளம் காட்டுகிறது அவ்வளவுதான். ஆனால் சாதியமைப்பில் ஒரு சமூக அடுக்குமுறை உருவாகி வந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் அது பிராமணர்களின் உருவாக்கம் என எவரும் சொல்லிவிட முடியாது. அனைவருக்கும் ஒரே வாழ்க்கை லட்சியம் உருவாகி வரும்போது ஒரு சமூகஅடுக்கு உருவாவது தடுக்கமுடியாத ஒன்று. காரணம் அந்த இலட்சியத்தை எல்லா சாதியும் ஒரே அளவில் உள்வாங்கிக்கொள்ள முடியாது”

இவ்வாறு காந்தி தன்னுடைய ஆரம்பகாலத்தில் சாதியை விளக்குகிறார். அதற்கு எதிரான கருத்துக்களுடன் வாதிடுகிறார். ஆனால் காந்தியின் குரல் மெல்ல மெல்ல மாறுபடுவதை மேற்கோள்கள் வழியாகவே மார்க் லிண்ட்லே காட்டுகிறார்.

1925ல் காந்தி எழுதினார் ” ஒருவர் பிற வருணத்தவர்களால் அவர்களின் பாரம்பரியமாக உருவாக்கப்பட்ட அறிவியல் கலை ஆகிய துறைகளின் அறிவை கற்றறிவதில் எந்த பிழையும் இல்லை. ஆனால் ஒருவன் அவனுடைய உயிர்வாழ்தலுக்கான தொழிலாக அவனது பெற்றோர் பாரம்பரியமாகச் செய்த அவனது வருணத்தின்  அதே தொழிலையே செய்வதே நல்லது”

1925ல் காந்தி மேலும் எழுதினார் ”என்னைப்பொறுத்தவரை மேல் கீழ் என்ற பேச்சுக்கே இடமில்லை. தன்னை உயர்வாக எண்ணிக்கொண்டு பிற வருணத்தவரை குனிந்து நோக்கும் ஒரு பிராமணன் பிராமணனே அல்ல.  அவன் முதலிடத்தில் இருக்கிறான் என்றால் ஆன்மீகமான சேவைக்கான உரிமை அவனுக்கு அதிகமாக இருக்கிறது என்பதனாலேயே”

இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன? காந்தி இந்தியாவுக்கு திரும்பிவந்தது இக்காலத்திலேயே. ரயிலில் இந்தியாவெங்கும் விரிவான ஒரு சுற்றுப்பயணம் செய்தார் அவர். இத்தருணத்தில் அவருக்கு ஒரு சமூகமாக இந்தியாவை தொகுக்கவேண்டியதன் அவசியம் புரிந்திருக்கக் கூடும். சாதி இந்தியாவை ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத தனி அறைகளாக பிரித்துவிடக்கூடும் என்று அவர் உணர்ந்தார் என தோன்றுகிறது. ஆகவே சாதி என்ற பிரிவினைக்கு மேலாக ஒரு பொதுவான சமத்துவத்தை உருவாக்கியாகவேண்டும் என்று அவருக்குப் பட்டிருக்கலாம்

மேலும் தன் இந்தியப் பயணங்களில் 1923ல் காந்தி நாராயணகுருவைச் சந்தித்தார். காந்தி நாராயணகுருவுடனான தன் சந்திப்பைப் பற்றி புகழ்ந்து சொல்லியிருக்கிறார். சாதி தேவைதான் என்ற தன் கருத்தை காந்தி நாராயணகுருவிடம் சொல்ல நாராயணகுரு அதை திட்டவட்டமாக மறுத்து பேசியிருக்கிறார். அதன்பின் அவர்கள் நடுவே சற்று அந்தரங்கமான உரையாடல் நடந்திருக்கிறது. நாராயணகுருவின் கருத்தை தான் பரிசீலனைசெய்வதாக காந்தி சொல்லியிருக்கிறார்.

மேலும், நாராயணகுருவிடம் காந்தி தீண்டாமையை நியாயப்படுத்தி இந்து ஞானமரபின் மூலநூல்களில் ஏதேனும் சொல்லப்பட்டிருக்கின்றனவா என்று கேட்டபோது நீதி நூல்களான ஸ்மிருதிகள் காலம் தோறும் மாறக்கூடியவை, ஞானநூல்களான சுருதிகள் அழியாதவை. சுருதிகளில் அப்படி ஏதும் சொல்லப்படவில்லை என குரு பதில் சொல்லியிருக்கிறார். ஒரு தீண்டத்தகாத சாதியினனாகிய நாராயணகுருவின் அபாரமான சம்ஸ்கிருத பயிற்சியும் இந்து மெய்யியலில் உள்ள ஞானமும் காந்தியின் மனதை ஆழமாகப் பாதித்திருக்கலாம்.

1931ல் காந்தி அம்பேத்காரைச் சந்திக்கிறார். காந்தியையும் அம்பேத்காரையும் ஒப்பிட்டு ஆராய்ந்த டி.ஆர்.நாகராஜ் காந்தியும் அம்பேத்காரும் ஒருவருக்கொருவர் முரண்பட்டு வாதிட்டு ஒருவரை ஒருவர் மாற்றியமைத்த இரு சக்திகளாக காண்கிறார். [The Flaming Feet: A Study of the Dalit Movement, D R Nagaraj ] இந்த சிந்தனை இன்றைய ஆய்வாளர் நடுவே மிகவும் வலுப்பெற்று வரக்கூடிய ஒன்றாகும். மார்க் லிண்ட்லேயும் அவ்வாறே எண்ணுகிறார்.

காந்திக்கும் அம்பேத்காருக்கும் நடுவே காந்தியின் இறப்பு வரை 17 வருடம் ஓய்வில்லாமல் விவாதம் நடந்திருக்கிறது. சில சமயம் அம்பேத்கார் சினம் கொண்டு அத்து மீறி பேசியிருக்கிறார். ஆனால் அவ்வாறு சினம் கொள்வதற்கான தார்மீகமான ஒரு உரிமை அம்பேத்காருக்கு இருப்பதாகவே மீண்டும் மீண்டும் காந்தி எண்ணினார். ஆகவே காந்தியின் குரல் பொறுமையுடன் மீள மீள அம்பேத்காருடன் உரையாடுவதாகவே இருக்கிறது.

இங்கே ஒன்றைச் சொல்லவேண்டும். காந்தி பிடிவாதம் மிக்கவர் என்ற ஒரு நம்பிக்கை பலரிடம் உண்டு. அது உண்மை. சாதாரணமாக காந்தி தன் கருத்துக்களை மாற்றிக்கொள்பவரல்ல. ஏன் என்றால் மிக விரிவான ஆராய்ச்சிகள் மூலம் தனக்குத்தானே நிரூபித்துக்கொண்டவற்றை உறுதியாக நம்பக்கூடியவர் அவர். அவற்றை ஒரு ராஜதந்திரமாகவோ பிறர் என்ன நினைப்பார்கள் என்பதற்காகவோ மாற்றிக்கொள்ளக்கூடியவர் அல்ல. சொல்லப்போனால் பிறர் தன்னைப்பற்றி என்ன நினைக்கவேண்டும் என அவர் எப்போதுமே கவலைப்பட்டதில்லை.

ஆனால் காந்தி அவரது கருத்துக்களுடன் அவரளவுக்கே ஆற்றலுடன் மோதியவர்களை கூர்ந்து கவனித்தார். அவர்களுடன் நுட்பமாக விவாதித்தார். காந்தியைப் போன்ற ஒருவரிடம் விவாதிக்கும்  மூளைத்திராணியும் ஆன்மபலமும் அம்பேத்காருக்கு இருந்தது. அது நேருவுக்கு இல்லை. ஆகவேதான் காந்தி நேருவால் கொஞ்சம்கூட மாற்றப்படவில்லை. அம்பேத்காரால் தலைகீழான மாற்றத்தை அடைந்தார்.குறிப்பாக சாதி விஷயத்தில்.

1931ல் காந்தி எழுதினார் ” நான் நவீன அர்த்தத்தில் சாதி அமைப்பில் நம்பிக்கை கொள்ளவில்லை. அது ஒரு சமூகத்தீங்கு, முன்னேற்றத்துக்கு தடை. மனிதர்கள் நடுவே உள்ள எவ்வகையான ஏற்றதாழ்வுகளையும் நான் நம்பவில்லை. நாமெல்லாம் மூற்றிலும் சமம். சமத்துவம் என்பது ஆன்மாவிலே ஒழிய உடல்களில் அல்ல….புறவயமாக தெரியும் இந்த சமமின்மைக்கு நடுவேதான் அந்த சமத்துவம் உள்ளது என்று நாம் புரிந்துகொள்ளவேண்டும். எந்த ஒரு மனிதனும் சகமனிதனைவிட மேலானவனாக எண்ணிக்கொண்டானென்றால் அது கடவுளுக்கு எதிரான குற்றமாகும். ஆகவே சாதியமைப்பானது மனிதர்களிடையே தரவேற்றுமைகளை சுட்டும்வரை அது ஒரு மாபெரும் தீமையே ஆகும்.

நான் பாரம்பரியமாக தொழில்களைப் பங்கீடு செய்யும் வருண அமைப்பிலும் நம்பிக்கைகொள்ளவில்லை. நான்கு வருணங்கள் என்பவை நான்கு பொதுவான மானுடச்செயல்பாடுகளைச் சுட்டுகின்றன. அறிவை அடைதல், எளியோரைக் காத்தல், தொழிலையும் வணிகத்தையும் செய்தல், உடலால் பிறருக்குச் சேவைசெய்தல். இந்த பணிகள் எல்லா மானுடருக்கும் பொதுவானவை. ஆனால் இந்துஞானம் அவற்றை நம்முடைய இருப்பின் ஆதார விதிகளாக அடையாளம் கண்டுகொண்டு சமூக உறவுகளையும் நடத்தைகளையும் ஒழுங்குபடுத்த பயன்படுத்திக்கொண்டது…

…ஆனால் என்னுடைய வரையறையின்படி இப்போதைய இந்துமரபில் வருணப்பிரிவினை செயல்படவில்லை. பிராமணர்கள் எனபப்டுபவர்கள் அறிவை அடைதலை விட்டுவிட்டார்கள். பிறதொழில்களை அவர்கள் செய்கிறார்கள். எல்லா வர்ணத்துக்கும் கிட்டத்தட்ட இது பொருந்தும்”

1932ல் காந்தி எழுதினார் ”பண்டைய முறை எதுவாக இருந்தாலும் எந்த ஒரு மனிதனும் தன்னை உயர்குலத்தவன் என்று கூறிக்கொண்டு வாழ்ந்துவிடமுடியாது. சமூகம் அத்தகைய உரிமைபாராட்டல்களை இனிமேல் அங்கீகரிக்காது.  உலகம் விழிப்புகொண்டுவிட்டது…”

காந்திக்கும் அம்பேத்காருக்கும் இடையேயான உரையாடலே காந்தியை தொடர்ச்சியாக சாதியையும் வர்ணத்தையும் மறுபரிசீலனைசெய்ய வைத்தது. சாதி என்பது திட்டமிட்டு மேலாதிக்கத்துக்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு என்பதை காந்தி ஏற்கவில்லை. சாதி அமைப்புக்கு அப்போதும் மக்களை சிறிய சமூக அமைப்பாக திரட்டி வலிமைப்படுத்தும் சக்தி உண்டு என்றே அவர் எண்ணினார். ஆனால் அந்த அமைப்பின் பிற தீமைகளை அவர் மேலதிக முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்க ஆரம்பித்தார்.

காந்தியின் இந்த மனமாற்றத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டிய ஒன்றுண்டு. காந்தி சாதியமைப்பின் சாதக அம்சங்களைக் கண்டபோது அவர் கிட்டத்தட்ட ஒரு சமூக அறிவியலாளனின் ஆய்வுப்பார்வையை மட்டுமே கொண்டிருந்தார். ஆனால் சாதியின் அடக்குமுறைக் குணத்தை அவர் அடையாளம் கண்டபோது கிட்டத்தட்ட காங்கிரஸ் அவரது கையில் இருந்தது. காங்கிரசுக்குள் இருந்த உயர்சாதிவெறியர்களை அவர் அன்றாடம் சந்தித்துவந்தார். காங்கிரசுக்குள் அவர்களே அவரது முக்கியமான எதிரிகளாக விளங்கினார்கள். சாதி என்பது எத்தனை சாதகமான பங்களிப்பு கொண்டதாக இருந்தாலும் அது ஓர் அடைக்குமுறைச் சாதனம் என்று காந்தி இக்காலத்தில்தான் தெளிவடைந்தார்.

சொல்லபோனால் காந்தி காங்கிரஸின் உயர்சாதிப்பின்புலத்துக்கு எதிராக அம்பேத்காரை நோக்கி நகர்ந்தார். அந்த நகர்வு அவரது முதுமையில் நிகழ்ந்ததை லிண்ட்லே ஆச்சரியத்துடன் குறிப்பிடுகிறார். பொதுவாக கருத்துக்கள் கெட்டிப்படும் காலம் அந்த வயது. ஆனால் காந்தி அவரது வாழ்நாள் முழுக்க அவர் கொண்டிருந்த கருத்துநிலையை தலைகீழாக மாற்றிக்கொண்டார்.

வருண – சாதி அமைப்பின் வரலாற்றுப்பணி என்னவாக இருந்தாலும்,  அது இப்போதும் முக்கியமான நிறுவனமாக இருந்தாலும் அது சென்ற காலகட்டத்தைச் சேர்ந்தது என்றும் நவீனகாலத்தில் அது சமத்துவத்துக்கு எதிரான உணர்ச்சிகளையே அதிகம் கொண்டிருகிறது என்றும் மக்களில் கணிசமானபேரை அது பிறருக்கு கீழே வைத்திருக்கிறது என்றும் காந்தி அறிந்தார். தான் உருவாக்க எண்ணிய கிராம சுயராஜ்யத்தில் அகிம்சை தழைக்க சமத்துவம் அவசியம் என்றும் அதற்கு சாதி அழியவேண்டும் என்றும் உணர்ந்தார்.

அவ்வாறு தன்  தரப்பை மாற்றிக்கொள்வதென்பது காந்தியைப் பொறுத்தவரை தன் மொத்த வாழ்க்கையையும் அதற்கேற்ப மாற்றிக்கொள்வதே. மேடையில் ஒரு கருத்தை ஏற்றுக்கொள்ளும் மனிதர் அல்ல அவர். சற்றும் தயங்காமல் காந்தி தன் கருத்துக்களை எழுதினார். ஆனால் இக்காலத்தில்கூட அம்பேத்கார் மையப்படுத்தப்பட்ட நிர்வாகம், உயர்தொழில்நுட்பம் போன்ற நவீனத்துவ கருத்துக்கள் கொண்டிருந்ததை காந்தி திட்டவட்டமாக மறுத்தார்.

1935ல் காந்தி எழுதினார் ”சாதி அழிய வேண்டும். நடைமுறையில் சாஸ்திரங்கள் சொல்லும் வருணாசிரம தர்மம் இப்போது எங்குமில்லை. இன்றைய சாதிமுறை என்பது சாஸ்திரங்கள் சொல்லும் இலட்சிய வருணாசிரமதர்மத்துக்கு நேர் எதிரான ஒன்று. எத்தனை வேகமாக பொதுமக்களின் பிரக்ஞையில் இருந்து அதை ஒழிக்க முடியுமோ அந்த அளவுக்கு அது நல்லது

சாதியை அழிப்பதற்கு மிகச்சிறந்த மிகவேகமான தடையற்ற வழி என்னவென்றால் சீர்திருத்தவாதிகள் அதை தங்களிடமிருந்தே தொடங்குவதுதான். தேவையென்றால் அதற்காக அவர்கள் சமூகத்தின் புறக்கணிப்பைக்கூட ஏற்றுக்கொள்ளவேண்டும் .மாற்றம் படிபப்டியாக ஆனால் உறுதியாக நிகழும்”

சொன்னதை தானே செய்வதற்கும் காந்தி தயாரானார். மார்க் லிண்ட்லே கோராவுக்கும் காந்திக்கும் இடையேயான உறவைச் சுட்டிக்காட்டுகிறார். பிறப்பால் பிராமணரான கோரா தன் சாதியை துறந்தார்.அதற்காக அவர் வேலையை விட்டு துரத்தப்பட்டார். தலித் மக்கள் நடுவே சேவைசெய்த கோராவை 1944 ல் காந்தி தன் ஆசிரமத்துக்கு அழைத்து தன்னுடன் வைத்துக்கொண்டார். அவரை தன் வழித்தோன்றலாக எண்ணியது மட்டுமல்ல சாதி, வருண அமைப்பை முள்காடு என்று வருணித்த கோராவின் கருத்தை தானும் முழுமையாகவே ஏற்றுக்கொண்டார்

பின்னர் காந்தி அவரது பழைய கருத்தான கிராமசுயராஜ்யத்தின் சாதி அமைப்பை முழுக்க மாற்றிக்கொண்டார். இனிமேல் சாதி இல்லை. அது அடக்குமுறைக்கான கருவி. அது அழிய வேண்டும். வருணத்தைப்பொறுத்தவரை நவீன காலகட்டத்தில் ஒரே வருணம்தான் இருக்க வேண்டும், அது சூத்திர வருணம் மட்டுமே. ஒவ்வொருவரும் உடலால் உழைக்கும் சூத்திரனாக மாறியாக வேண்டும். எந்தவேலை செய்தாலும் ஒருவர் கண்டிப்பாக உடலுழைப்பில் ஈடுபட்டாகவேண்டும் என்றார் காந்தி. அவரது இலட்சிய கிராமசுயராஜ்யம் தங்களை உடலுழைப்பு மூலம் சூத்திரர்களாக ஆக்கிக்கொண்ட மக்களால் மட்டுமே ஆனதாக இருக்கும் என்றார்.

அத்தனைபேரும் உடலால் உழைத்தாகவேண்டும் என்ற காந்தியக் கோட்பாட்டை மேடை சோஷலிசம் பேசிய சொகுசுக்காரரான நேரு முதலியோர் எப்படி எடுத்துக்கொண்டிருப்பார்கள் என்று சொல்லவேண்டியதில்லை.

1946 ல் காந்தி ஒரு அமெரிக்க நிருபரிடம்  வர்க்கமற்ற சாதியற்ற ஒரு இந்திய சமூகத்தை உருவாகக் முயல்வதாக்ச் சொன்னார். ஒரே சாதிமட்டும் இருக்கும் ஒரு நிலை வரவேண்டும் என்றும் பிராமணர்கள் தலித்துக்களை மணம்முடிக்கவேண்டும் என்றும் சொன்ன காந்தி சமத்துவமின்மை வன்முறையை உருவாக்கும், சமத்துவமே அகிம்சையை உருவாக்கும் என்றார். அந்தக் காலகட்டம் ஐம்பது வருடங்களுக்குள் வந்துவிடும் என்று தன் நம்பிக்கையை அவர் முன்வைத்தார்

ஆரம்பத்தில் கலப்புத்திருமணங்களை ஏற்க மறுத்த காந்தி பின்னர் கலப்புத்திருமணங்களை முழுக்க ஆதரித்தார். கடைசி காலத்தில் கலப்புத்திருமணங்களை மட்டுமே அவர் ஆதரித்தார். தன் ஆதரவாளர்கள் கலப்புத்திருமணம் செய்தாகவேண்டும் என்றும் அதன்மூலம் மட்டுமே சாதியை ஒழிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார். குறிப்பாக உயர்சாதியினர் தலித் சாதியினரை மணந்துகொள்வதை ஒரு முக்கியமான சமூகச்செயல்பாடாக காந்தி வலியுறுத்தினார்.

1945 ல் காந்தி எழுதினார். ”பெண்ணுக்கு எந்த தகுதி இருந்தாலும் திருமணம் ஒரே சாதிக்குள் என்றால் என் ஆசீர்வாதத்தை தயவுசெய்து கோராதீர்கள். அவள் வேறு சாதி என்றால் மட்டுமே நான் என் ஆசீர்வாதத்தை அனுப்புவேன்”

1946ல் காந்தியிடம் பேட்டியாளர் கேட்டார். ”கல்விகற்ற ஹரிஜனப் பெண்கள் விரலால் எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கிறார்கள். அவர்கள் உயர்சாதி ஆண்களை திருமணம் செய்துகொண்டால் கண்டிப்பாக தங்கள் சாதியை விட்டு துண்டிக்கப்படுவார்கள். அவர்கள் தங்கள் சொந்த சாதிக்குச் சேவை செய்யமுடியாமல் ஆகும். அவ்வாறு திருமணம் செய்வதென்றால் அந்த ஜோடி தங்கள் வாழ்க்கையை ஹரிஜன மக்களுக்கான சேவைக்கே அர்ப்பணிக்கவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் செய்யலாம்”

அதற்கு  காந்தி பதில் அளித்தார். ” ஹரிஜனப்பெண்கள் உயர்சாதி ஆண்களை திருமணம் செய்துகொள்வது வரவேற்கத்தக்கது. ஆனால் அது சிறப்பானது என்று சொல்ல கொஞ்சம் தயங்குகிறேன். அது ஆண்களை விட பெண்கள் குறைவானவர்கள் என்று காட்டுவது போல ஆகிவிடும். இப்போதெல்லாம் அந்தவகையான தாழ்வுச்சிக்கல் இருப்பதை நான் அறிவேன். ஆகவே ஹரிஜன பெண் உயர்சாதி ஆணை மணம்செய்வதைவிட உயர்சாதி பெண் ஹரிஜன ஆணை மணம்செய்வது சிறந்தது என்று நான் எண்ணுகிறேன். என்னால் முடிந்தால் என் பேச்சைக்கேட்கும் எல்லா உயர்சாதிப்பெண்களையும் ஹரிஜன ஆண்களை திருமணம் செய்துகொள்ளும்படிச் சொல்வேன்.”

தன் கொள்கையை திட்டவட்டமாக வெளியிட்டது மட்டுமல்ல அதை தீவிரமாக நடைமுறைப்படுத்தவும் செய்தார் காந்தி. காந்தியால் உந்தபப்ட்ட ஹரிஜன- உயர்சாதி மணங்கள் அக்காலகட்டத்தில் ஏராளமாக நடைபெற்றன. தமிழகத்தின் புகழ்பெற்ற காந்தியவாதிகளான கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் தம்பதியினர்கூட அவ்வகையான தம்பதியினர்தான்.

கலப்புத்திருமணத்தை காங்கிரஸ் தன் முதன்மை சமூகத்திட்டமாக கொண்டுவருமா என்று 1946ல் ஒரு நிருபரின் கேள்விக்கு தீண்டாமை ஒழிப்பு, சமபந்தி போஜனம், ஹரிஜனங்களுக்கு இட ஒதுக்கீடு போன்றவற்றில் காங்கிரஸ் ஒத்த கருத்து கொண்டிருக்கிறது என்றும் விரைவிலேயே கலப்புமணத்தை நோக்கியும் காங்கிரஸை கொண்டுவந்துவிடலாம் என்றும் காந்தி சொன்னார்.

அது காங்கிரஸை அவர் தவறாகப் புரிந்துகொண்டு சொன்னது. அப்போது இந்திய சுதந்திரம் நெருங்கிவிட்டிருந்தது. அதிகாரக் கனவுகள் ஆரம்பமாகிவிட்டிருந்தன. காந்தியின் சமூகத்திட்டங்கள் நேருவின் காங்கிரஸ¤க்கு உவப்பாக இருக்கவில்லை. காங்கிரஸ் அரசியல் கட்சியாகச் செயல்படக்கூடாது என்றும் கலப்புத்திருமணம் முதலிய சாதி ஒழிப்புச் செயல்பாடுகளில் அது ஈடுபடவேண்டும் என்றும் காந்தி வாதிட்டார். கிராம சுயராஜ்யம் அமைக்க வேண்டும் என்று கோரினார். நேரு காந்தியை சந்திப்பதையே தவிர்த்தார். காந்தி கொல்லப்படும் வரை.

ஒருவேளை மத ஒற்றுமைக்காக காந்தி உயிர்த்தியாகம் செய்யவில்லை என்றால் சாதி ஒழிப்புக்காக அவர் உயிர்தியாகம் செய்ய நேரிட்டிருக்கும். அவர் சென்றுகொண்டிருந்த திசை அது.

அன்புள்ள ஜெபமாணிக்கம், தயவுசெய்து யோசித்துப்பாருங்கள். இந்த வரலாற்றுப்பின்னணியில் நீங்கள் குறிப்பிட்ட ஆரம்பகாலகட்டத்து உதிரி மேற்கோள்கள் மூலம் காந்தியை ஒரு சாதி வெறியராக முத்திரை குத்துவதனால் யாருக்கு என்ன லாபம்? அந்தப்பொய்யை நாம் சுமந்துகொண்டு காழ்ப்பை வளர்த்துக்கொள்வதனால் நாம் அடைவது என்ன?

நம்மை இந்த குரூரமான , அநீதியான பொய்யை நம்பச்செய்யும் கும்பல்களுக்கு  அதனால் பெரும் லாபம் உள்ளது என உணருங்கள். காந்தி இந்த தேசத்தின் நீதியுணர்வின் அடையாளமாக நம் மனதில் இருக்கிறார். அந்த பிம்பத்தை இவ்வாறு திட்டமிட்டு உடைப்பதன் வழியாக இந்த தேசத்தின் அடித்தளமாக இருக்கும் இலட்சியங்கள் மேல் ஆழமான ஐயம் உருவாக்கப்படுகிறது. அதன் விளைவாக இந்த தேசம் பலவீனப்படுகிறது. சமூக மோதல்கள் உருவாகின்றன. நாம் போரிட்டு அழிய வாய்ப்பிருக்கிறது. அந்த உதிரத்தைக் குடிக்க எப்போதும் எங்கோ பலர் காத்திருக்கிறார்கள்.

இனிமேல் கவனியுங்கள், காந்தியை அவதூறுசெய்து வெளியிடப்படும் எந்த ஒரு ஆய்வேட்டுக்கு அல்லது நூலுக்குப் பின்னாலும் ஓர் அயல்நாட்டு பல்கலைக் கழகம் இருக்கும். அல்லது ஏதேனும் ஒரு கிறித்தவ மதப்பரப்பு நிறுவனத்தின் நிதியுதவி இருக்கும்.

காந்தியை நீங்கள் அவதூறுசெய்யும்போது சிலுவை ஏந்திச்சென்ற ஏசுவுக்குப் பின்னாலும் ஒரு பெரும்கூட்டம் அவரை கல்லால் அடித்து வசைபாடியபடி சென்றது என்பதை மறக்க வேண்டாம். நாம் சிந்தவைக்கும் நீதிமானின் ரத்தம் நம் ஆத்மாவை  இருளால் மூடிவிடும்.

நீதியுணர்வே கிறித்தவத்தின் சாரம் என நம்புகிறவன் நான், அந்த கிறித்தவ நீதியுணர்வை நோக்கி கேட்கிறேன். தயவுசெய்து சிந்தித்துப்பாருங்கள்.

ஜெ

http://www.bfg-muenchen.de/caste.htm

காந்தி குறித்த பழைய கட்டுரைகளின் இணைப்புகள்

http://jeyamohan.in/?p=3173

http://jeyamohan.in/?p=2815

http://jeyamohan.in/?p=2822

http://jeyamohan.in/?p=2810

http://jeyamohan.in/?p=2789

http://jeyamohan.in/?p=2783

http://jeyamohan.in/?p=2768

http://jeyamohan.in/?p=2773

http://jeyamohan.in/?p=2760

http://jeyamohan.in/?p=2745

http://jeyamohan.in/?p=2804

http://jeyamohan.in/?p=722

http://jeyamohan.in/?p=620

http://jeyamohan.in/?p=557

http://jeyamohan.in/?p=619

http://jeyamohan.in/?p=2760

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைகொற்றவை கடிதம்