பகவத் கீதையைப் பற்றி பற்பல கடும் விமர்சனங்களையும் வசைகளையும் காதில் கேட்ட பிறகுதான் ஒருவர் இன்று அந்நூலைக் கண்ணிலேயே பார்க்கிறார். இதற்கு பல காரணங்கள். கீதை ஒரு ஞான நூலாகவும் தியான நூலுமாகவும் மட்டுமே நீண்ட நாட்களாகக் கருதப்பட்டு வந்தது. ஆகவே அது ஞானத்தேடல் இல்லாதவர்களின் பொதுக் கவனத்திற்குக் கொண்டுவரப்படவில்லை.கீதையை அப்படி கவனத்திற்குக் கொண்டுவந்தவர்கள் ஜரோப்பியர்களே. கீதையின் மொழிநடை, புனைவு நேர்த்தி, வடிவ ஒழுங்கு மற்றும் தத்துவ நோக்கு ஆகியவை பல்வேறு ஜரோப்பிய ஆய்வாளர்களின் பாராட்டின் மையமாக இருந்தன. அவர்களின்பாராட்டின் மூலமாக ஆங்கிலம் கற்ற இந்திய உயர்வர்க்கமும் கீதையை அறியவும் பாராட்டவும் முன்வந்தது. விளைவாக பகவத்கீதை இந்தியாவின் பெருமைக்குரிய ஓர் அடையாளமாக மாறியது.
இக்காலகட்டத்தில் இந்தியாவில் மதச் சீர்திருத்த இயக்கங்கள் உருவாயின. அமைப்பு பலம் கொண்ட கட்டுறுதியான இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களைப்போல இந்துமதத்தையும் ‘நவீனப்படுத்தினால்’ மட்டுமே அம்மதங்களின் தாக்குதலை இந்து மதத்தால் சமாளிக்க இயலும் என்பது இந்த மதச்சீர்திருத்த அமைப்புகளின் திட்டமாகும். இரண்டாவதாக இந்து மதத்தின் சடங்குத்தன்மைக்கும் சம்பிரதாயத்தன்மைக்கும் மாறாக இந்துமதத்தின் சாரமாக உள்ள தத்துவத்தன்னைமயை இவை வலியுறுத்தின.
இக்காரணங்களால் உபநிடதங்கள், வேதாந்த நூல்கள் போன்றவற்றை அனைத்து மக்களும் கற்க வேண்டும் என்று கூறி அவற்றை முன்வைத்தன. இயல்பாகவே கீதை இவர்களின் மைய நூலாக மாறியது. மேலும் இஸ்லாமிய, கிறிஸ்தவ மதநூல்களைப் போல இந்துமதத்திற்கும் ‘மூல நூல்கள்’ (cannon) தேவை என்னும் எண்ணம் இவர்களில் பலருக்கு இருந்தது. கீதை அத்தகைய மூலநூலாக முனவைக்கபட்டது.
நித்ய சைதன்ய யதியின் சுயசரிதையில் வரும் ஒரு நிகழ்ச்சி இந்தக் காலகட்டத்து தத்துவச்சிக்கலை நமக்குக் காட்டுகிறது. நித்யா தத்துவ ஆசிரியராக கொல்லம் எஸ்.என். கல்லூரியில் பணியாற்றும் வேளை அங்கு சிறப்புப் பேச்சாளராக நடராஜ குரு வருகிறார். நித்யா அன்று பெரும் புகழ் பெற்று விளங்கிய டாக்டர் ராதாகிருஷ்ணனின் கீதை உரை நூலைக் கையில் வைத்திருக்கிறார். காரில் போகும்போது நடராஜ குரு அது என்ன நூல் என்று கேட்டு வாங்கிப் பார்த்துவிட்டு கார் ஜன்னல் வழியாக வெளியே வீசிவிட்டார். காரை நிறுத்தி ஓடிப்போய் அதை எடுத்துவந்த நித்யா நடராஜகுருவிடம் கோபித்துக்கொள்கிறார்.
“புத்தகத்தின் மீது மரியாதை உள்ள கீழைநாட்டினன்தான் நானும்” என்று கூறும் நடராஜ குரு, “அதன் முதல்வரியைப் படி” என்கிறார். நித்யா படிக்கிறார். ”கீதை இந்துமதத்தின் புனித நூல்” என்று முதல்வரி. நடராஜகுரு “பிரஸ்தானத் திரயம் என்றால் என்ன தெரியுமா?” என்று நித்யாவிடம் கேட்கிறார். நித்யா, ”உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், கீதை” என்கிறார். ”இப்போது நீயே கூறினாய் கீதை மூன்று தத்துவ நூல்களில் ஒன்று என்று. அது மத நூல் என்று இவர் கூறுகிறார். மதநூலா தத்துவநூலா, எது சரி?” என்கிறார். ”டாக்டர் ராதாகிருஷ்ணன் அப்படிச் சொல்லியிருக்கிறார் என்றால் உரிய காரணம் இருக்கும்” என்கிறார் நித்யா. பின்னர் டாக்டர் ராதாகிருஷ்ணனை நேரில் சந்திக்கும் வாய்ப்பு நித்யாவுக்கு கிடைக்கிறது. சென்னை விவேகானந்தா கல்லூரியில் அவர் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றும் காலகட்டம் அது. அக்கேள்வியை ராதாகிருஷ்ணனிடமே கேட்கிறார். அவரால் பதில் கூறமுடியவில்லை. பதிப்பாளர் அவசரப்படுத்தியதனால் எழுதிய நூல் அது என்று கூறி நழுவுகிறார். நடராஜ குருவிடம் இதைக் கூறிய போது நடராஜகுரு ”கவனமில்லாது எழுதப்படும் நூல்கள் ஆபத்தானவை” என்கிறார்.
இந்தக் காலகட்டத்தில் பல்வேறு மதச் சீர்திருத்தவாதிகளால் பொதுவாகச் செய்யப்பட்ட ஒன்றையே டாக்டர் ராதாகிருஷ்ணனும் செய்கிறார். கீதை மேலைநாட்டினரால் மிகவும் மதிக்கப்பட்ட நூலாக அதற்குள் மாறிவிட்டிருந்தது. இந்து மதங்கள் அனைத்திற்கும் பொதுவாகவும் கருதப்பட்டு வந்தது. ஆகவே அதை இந்து மதத்தின் மூல நூலாக அவர்கள் முன்வைத்து வந்தனர். குறிப்பாக பிரம்ம சமாஜம் (ராஜாராம் மோகன்ராய்) இப்போக்கைத் தொடங்கி வைத்தது.
மிகவும் கடுமையான மொழியில் நடராஜகுரு இதைக் கண்டிப்பதற்கான காரணங்கள்: ஒன்று, மூலநூல் என்ற ஒரு மையம் இல்லாமல் பன்மைத் தன்மையே தன் சிறப்படையாளமாகக் கொண்டுள்ள இந்துமதம் என்ற விரிவான ஞானமரபு இதன்மூலம் குறுக்கப்படுகிறது. கீதை மூலநூல் என்றால் கீதையை முழுமையாக எதிர்க்கும் ஒர் இந்து ஞானமரபை எங்கே கொண்டு சேர்ப்பது? பல்வேறு ஆதிசைவ மதங்களுக்கும் சாக்தேய மதப்பிரிவுகளுக்கும் கீதை ஏற்புடைய நூல் அல்ல. இரண்டு, ஒரு தத்துவ நூலாக, விவாதத்திற்கும் ஆராய்ச்சிக்கும் உரிய நூலாக விளங்கும் கீதையை இவ்வாறு மதநூலாகக் காட்டுவதன் மூலம் புனித நம்பிக்கைக்கு உரிய ஒன்றாக மாற்றிவிடுகிறார்கள் இவர்கள்.
ஆனால் படிப்படியாக கடந்த ஐம்பது வருடத்தில் இந்த மாற்றம் இந்திய சமூகத்தில் நிகழ்ந்து முடிந்துவிட்டது. கீதை இன்று பெரும்பாலானவர்களால் ஒரு மதநூலாகவே அணுகப்படுகிறது. இந்துக்களில் கணிசமானவர்கள் அதை வழிபடவே செய்கிறார்கள். நீதிமன்றங்களில் குர் ஆன், பைபிள் அல்லது கீதை மீது சத்தியம் செய்கிறார்கள். இன்று கிடைக்கும் உரைகளில் பெரும்பாலானவை கீதையை ஒரு மதநூலாக ஏற்றுக் கொண்டு எழுதப்பட்டவை. ஒரு தத்துவ நூல் மதநூலாக ஆக்கப்படும்போது உருவாகும் சிக்கல்களையே இன்று நாம் சந்திக்கிறோம் என்றால் மிகையல்ல.
கீதை மதநூலாக ஆகும்போது என்ன நடக்கிறது? முதலில் ‘நம்பிக்கை’ என்ற மாபெரும் கவசம் அந்நூல் மீது மாட்டப்படுகிறது. அதன்பின் அந்தநூலை எவருமே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள இயலாது. இரும்புச்சட்டை அணிந்த அந்நூல் தன் அனைத்துச் சலனங்களையும் இழந்து சிலையாக மாறிவிடுகிறது. அதை வழிபடலாம், அவ்வளவுதான். அதன் கவித்துவத் தருணம் – கீதா முகூர்த்தம் – உண்மையானது என்று நம்பப்படும் ஒரு புராணத்தருணமாக மாறிவிடுகிறது. உண்மையான ஒரு போரின்போது கடவுளால் நேரடியாக மனிதனுக்குச் சொல்லப்பட்ட ஒன்றாக அந்நூல் மாறிவிடுகிறது. கடவுளே சொல்லியபிறகு அதில் ஏது விவாதம்? அந்தக் ‘கடவுளே’ அந்த நூலில், ‘நான் சொன்னேன் என்று நம்பாதே நீயே யோசித்துப் பார்’ என்றுதான் கூறுகிறார் என்பது வேறு விஷயம்.
விவாதத்திற்கு உரிய ஒரு தத்துவ நூலானது மத நூலாக, நம்பிக்கை சார்ந்து, விரிவாக முன்வைக்கப்படும்போது அந்த நம்பிக்கையை தகர்க்க முயலும் அத்தனைபேரும் அதனுடன் விவாதிக்க முன்வருவார்கள். அதாவது விவாதம் அனுமதிக்கப்பட்ட ஒரு மதநூலாக அது மாறிவிடுகிறது. உண்மையான மதநூல்கள் விவாதத்திற்கு இடமற்றவை. ‘ஆதியில் வார்த்தை இருந்தது’ என்று பைபிள் ஆரம்பிக்கிறது. இரண்டாவது வரிக்கு போகவேண்டுமென்றால் இந்த முதல் வரியை நம்பியாக வேண்டும். குர் ஆன் நம்பாதவன் மீது போர் தொடுக்க அறைகூவும் மதநூல். இந்த மதங்களின் நம்பிக்கையாளரக்ள தங்கள் நம்பிக்கையை பாதுகாத்துக் கொள்வதில் உறுதி மிக்கவர்கள். அதில் அவர்கள் விவாதங்களை அனுமதிப்பதில்லை. ஏசு உயிர்த்தெழுந்ததையோ, நபி மீது வஹி இறங்கியதையோ ஐயப்படும் ஒருவரை, தங்கள் மத நம்பிக்கையை அவமதிப்பதாகக் கூறி அவர்கள் தாக்க முன்வருவார்கள்.
மாறாக ‘என்னைப்பற்றி விவாதிப்பாயாக’ என்று அறைகூவும் மதநூலாக நிற்கிறது கீதை. இந்து மன அமைப்பும் சரி, இந்திய சட்டமும் சரி, அதை ஆதரிக்கின்றன. இன்னொருபக்கம் பல அமைப்புகள் கீதையை பல்லாயிரக் கணக்கில் அச்சிட்டு வினியோகமும் செய்கின்றன. ஆகவே நுட்பமான ஒரு தத்துவ நூல் மனத்தயாரிப்பிலாத லட்சக் கணக்கானவர்களால் ஆராயப்படுகிறது. ஆகவே அது மேலும் மேலும் விவாதங்களை உருவாக்குகிறது.
இன்னும் முக்கியமான காரணம், கீதைமீதான தாக்குதலில் இந்தியாவில் உள்ள மதமாற்ற அமைப்புகளின் மறைமுகப் பங்கு. இதைப்பற்றி நான் விரிவாகவே பேச முடியும். மதமாற்ற அமைப்புகள் அறிவுலகில் ஊடுருவும் பொருட்டு, பற்பல ஆய்வு நிலையங்களையும் அறக்கட்டளைகளையும் நிறுவி, நிதி மூலமும் பிற வசதிகள் மூலமும் நம் அறிவுஜீவிகளைக் கவர்ந்து தங்கள் கருவிகளாகக் கொள்கின்றன. இந்து மதத்தின் மூலநூலாக கீதை முன்னிறுத்தப்படும்போது அது இவர்களின் முதல் இலக்காக மாறுகிறது. கீதை ஒரு பொதுவான நூல் என்ற முறையில் அதற்கு இந்து மதத்தில் உள்ள பல்வேறு வழிபாட்டு முறைகளை ஒருங்கிணைக்கும் சக்தியும் உண்டு. ஆகவே கீதை மீதான இவர்களின் தாக்குதல் மேலும் வலிமை கொண்டதாக ஆகிறது. இத்தாக்குதல்களில் ஈடுபடுபவர்களின் நேர்மையை அளக்க நான் கைக்கொள்ளும் அளவுகோல் ஒன்றுதான் – இதே விமர்சன நோக்கை இப்படியே இவர்கள் பிற மதநூல்கள் மேலும் போட்டுபார்க்கிறார்களா என்பதுதான் அது.
இவ்வாறாக ஒரு சராசரி வாசகன் கீதையை வாசிக்க கையிலெடுக்கும்போது அது குறித்த விமர்சனக் கருத்துக்களால் அவன் மூளை நிரம்பியிருக்கும் நிலை உருவாகிறது. மத நம்பிக்கையாளர்களால் உருவாக்கப்படும் புனித வட்டமும் அதைச்சுற்றி இருக்கிறது. அவை கீதையை அணுகுவதற்கு தடையாக உள்ள மதில்சுவர்களே. அவற்றைத் தாண்டுவது எளிதல்ல. நம்மில் பெரும்பாலானவர்கள் கீதையைப்பற்றி ஒருபக்கம் சாய்ந்த தீவிரமான பார்வைகளையே கொண்டுள்ளோம். இதன் மூலமாக நாம் அந்நூலை முற்றாகவே இழந்தும் விடுகிறோம்.
இன்றைய சூழலில் கீதையை ‘தனியாக’ பிரித்துப் படிப்பது சாத்தியமேயல்ல. குளத்துப் பாசியில் ஓர் இழையைப் பிடித்து எடுத்தால் மொத்த குளப்பரப்புமே கூடவருவது போல கீதையை எடுக்கும்போது ஒரு மாபெரும் விவாதப் பரப்பே கூட வருகிறது. இந்த விவாதப்பரப்பை எவ்விதம் எதிர்கொள்வது என்பதே இன்றைய முக்கியமான சிக்கல்.
நாம் கீதை வரிகளைப் படிக்கும்போது அவ்வரிகளை (பலவாறாக மேற்கோள் காட்டப்பட்டும், விவாதிக்கப்பட்டும்) ஏற்கனவே அறிந்திருப்பதை உணர்கிறோம். அந்த விவாதங்கள் முழுக்க நம் நினைவில் தொடர்ச்சியாக எழுகின்றன. ஆனால் இப்படி நாம் கீதையை அறிந்திருக்கும் பகுதி மிகமிகச் சிறியது. பெரும்பகுதி நம் கேள்விக்கே வராததாகவும் உள்ளது. ஒரு முக்கியமான தத்துவநூல் கடந்த ஐம்பது வருடங்களில் உதிரி மேற்கோள்களாக சிதறடிக்கப்பட்டுவிட்டது.
இன்னொருபக்கம் கீதைக்கு இந்திய ஞான மரபின் பல்வேறு போக்குகள் சார்ந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே உரைகள் புத்தகச்சந்தைகளிலும் நூலகங்களிலும் கொட்டிக்கிடக்கின்றன. நம்மில் பலர் பார்த்திருக்கும் கீதை உரைகள் மூன்று என்று கருதுகிறேன். சுவாமி சித்பவானந்தரின் புகழ்பெயற்ற கீதை உரை. இது ராமகிருஷ்ண பரமஹம்சரின் ‘பக்தி -அத்வைத’ நோக்கு சார்ந்தது. சுவாமி பிரபுபாதாவின் ‘பகவத்கீதை – உண்மையுருவில்’. இது சைதன்ய மகாபிரபு உருவாக்கிய பக்திக்களியாட்ட மரபு சார்ந்த உரை. மூன்று ராம்தயால் கோயந்தகா எழுதிய கோரக்பூர் உரை. இது மிகப் பெரிய புத்தகம். சம்பிரதாய பிராமணிய நோக்கு கொண்டதுமூன்றுமே மிகமலிவாகக் கிடைப்பவை. ஆதலால் பரவலாகச் சென்றடைந்தவை. இவை தவிர சுவாமி சின்மயானந்தா, கிரிதாரிபிரசாத் போன்றவர்களின் கீதைப் பேருரைகள் பரவலாக கவனத்தைக் கவர்ந்தவை.
இவற்றைத்தவிர குறிப்பிட்ட ஒரு நோக்கில் நின்று கீதையை புரிந்து கொள்ளும் முயற்சிகள் பல உள்ளன. காந்தி கீதையை ‘அனாஸக்தி யோகம்’ என்ற பெயரில் தன் கர்மயோக நோக்கில் விளக்கி உரை இயற்றியுள்ளார். அதே நோக்கின் நீட்சியை நாம் விநோபாவேயின் உரைகளில் காண்கிறோம். இன்னும் விரிவாக கர்மயோக நோக்கை வெளிப்படுத்துவது திலகரின் ‘கீதா ரகசியம்’ என்ற மாபெரும் நூல். கவித்துவ நோக்கில் பாரதி கீதையை ரத்தினச் சுருக்கமாக மொழியாக்கம் செய்துள்ளார். கண்ணதாசன் எளிய பட்டறிவுப் பார்வையில் விளக்கியிருக்கிறார். நவீன மனிதனின் இக்கட்டுகளின் பின்னணியில் கீதையை சுதந்திரமாக அணுகும் ஓஷோவின் அணுகுமுறை புகழ்பெற்ற ஒன்று. பலதொகுதிகளாக இது தமிழில் வெளிவந்துள்ளது.
காலத்தில் பின்நோக்கிச் சென்றால் கீதைக்கு வேதாந்தத்தின் மூன்று கிளைகளைச் சேர்ந்தவர்களும் விளக்கங்கள் எழுதியிருப்பதைக் காண இயலும். சங்கரர் ராமானுஜர் மத்வர் ஆகிய ஞானாசிரியர்களின் உரைகளை அவர்கள் பிரம்ம சூத்திரத்துக்கு எழுதிய உரைகள் மற்றும் பிறநூல்களுடன் இணைத்து வாசிக்கவேண்டும். எழுதப்படாத பலநூறு விளக்கங்கள் பல்வேறு தத்துவப் பள்ளிகள் சார்ந்து இருந்திருக்கும். இன்று கீதையைப் பற்றிய ஒரு விளக்கமாவது எழுதாத ஒரு இந்து அறிஞர் இல்லை என்று கூறுமளவுக்கு கீதை விளக்கங்கள் கிடைக்கின்றன. நடராஜகுரு கீதைக்கு பெரும்புகழ் பெற்ற உரை ஒன்றை எழுதினார். அவரது மாணவரான நித்ய சைதன்ய யதி மீண்டும் கீதைக்கு உரை வகுத்தார். இது ஒரு முடிவுறாத செயல்பாடாக உள்ளது. எதிர்காலத்தில் இன்னும் பலநூறு, பல்லாயிரம் உரைகள் வரலாம். கீதையின் இயல்பு அத்தகையது.
ஆக எப்படிப்பார்த்தாலும் கீதையை வெறும் ஒரு நூலாக அணுகுவது இன்று எவருக்கும் சாத்தியமில்லை என்பதே உண்மை. கீதையை ஒரு பெரும் விவாதபரப்பாக அல்லது உரையாடல் களமாக மட்டுமே அணுகமுடியும். தினம் காலை ஒரு சுலோகம் படித்து கும்பிடும் பக்தர்கள் தவிர வேறு எவரும் கீதையைப் பற்றி யோசிக்க ஆரம்பிக்கும் போதே இந்த பிரம்மாண்டமான விவாதப்பரப்பில் ஒரு குரலாக ஆகிவிடுகிறார்கள். ஆகவே இயல்பாகவே கீதையை இத்தகைய ஒரு உரையாடல்க்களமாக சாதக பாதகக் குரல்களுடன் இணைத்து புரிந்து கொள்ள முயற்சிப்பது இலகுவானது. கீதைக்கு எதிரான தாக்குதல்களினால் ஒருவன் சீண்டப்பட்டால் கீதைக்குள் நுழையவே முடியாது. அவன் கீதையை ‘பாதுகாக்கும்’ பொறுப்பு தனக்கு இருக்கிறது என்ற முட்டாள்தனத்தை சென்றடைவான். கீதையை தாக்குபவர்களோ ஒரு பண்பாட்டின் சாரமாக உள்ள ஒரு நூலை அதைப் புரிந்துகொள்ளாமலேயே உரக்கப்பேசி அழித்துவிட முடியும் என்கிற முட்டாள்தனத்தில் மகிழ்ந்திருப்பார்கள்.
வாசகன் கூரிய தர்க்க புத்தியுடன் கீதையை அணுகுவதே உகந்தது.கீதையே இதற்குத்தான் வழிகாட்டுகிறது. அதில் அர்ஜுனன் கிருஷ்ணனிடம் விவாதிக்கிறான். ஐயங்களைக் கேட்கிறான். மறுத்து வாதாடவும் செய்கிறான். அதாவது அவன் கிருஷ்ணனைக் குருவாக ஏற்று ‘அருகே அமர்கிறான்.’ இந்த ‘உபநிடதப் பயிற்சி முறை’யே கீதையைப் பயில்வதற்கு சிறந்தது என்று கீதையே கூறுகிறது. கீதையை நீண்ட காலமாகவே குருகுல முறைப்படி கற்று வந்தார்கள் என்பதற்குக் காரணம் இதுவே. நாம் அந்நூலைப் படிக்கும்போது எழும் ஐயங்களை நம் எதிர்நிலையாக நின்று நம்முடன் உரையாட நம்மைவிட மேலான ஓர் ஆளுமையின் ‘அருகமைதல்’ தேவை. எதிர்த்தும் ஆதரித்தும் விவாதிப்பதன் வழியாகவே கீதையின் தளம் நம்முள் விரிவடையும்.
அதற்கு முக்கியமாக கீதை மீதான வழிபாட்டுணர்வு நம்மிடம் இருக்கலாகாது. இது ஒரு மதநூல் அல்ல. இதை நம்பி ஏற்றுக்கொண்டாக வேண்டிய கட்டாயம் எந்த இந்துவுக்கும் இல்லை. இது புனிதமானதோ இறை வாக்கோ அல்ல. இது ஒரு தத்துவநூல் என்று மீண்டும் நாமே சொல்லிக் கொள்வதே சிறந்தவழியாகும். கீதை எந்தக் காலத்திலும் ஒரு பொதுவான மதநூலாக நிலைநின்றதில்லை என்றும் அது ஞானத்தேடலுடன் வருபவர்கள் குருகுல முறைப்படி கற்று விவாதிக்க வேண்டிய ஒரு படைப்பு என்றும் நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும். ஒவ்வொரு கணமும் இந்தக் கவனத்தை நிலைநிறுத்தியபடி அளிக்கப்பட்ட உரை என்பதனால் நான் நடராஜகுருவின் உரையைத் தவிர்த்தால் ஓஷோவின் கீதை உரைகளையே மிகவும் முக்கியமானவையாகக் கருதுகிறேன்.
‘எழுக! விழிப்புறுக! குறிக்கோளை அடையும் வரை சோர்வுறாது செல்க!’ என்றுதான் உபநிடத அறைகூவல். உபநிடதக் கல்வியின் அடிப்படையே அதுதான். இன்றைய சூழலில் இத்தகைய ‘அருகர்மதல்’ கல்விக்கான வாய்ப்பு இல்லை என்பதே உண்மை. தகுதியான ஒருவரை நாம் ஆசிரியராகக் கொண்டிருக்க வேண்டும் என்பதும், நாம் தேடினால் கண்டடையக்கூடும் என்பதும் உண்மையே. ஆனால் இன்றைய சூழலில் கீதையைப் பற்றி எழுதியுள்ள முன்னோடிகள் அனைவரையும் நாம் நமது எதிர்முனையாக, ஒரு பெரும் குருபீடமாக உருவகித்துக் கொள்ளலாம். அரவிந்தர், திலகர், விவேகானந்தர், ஓஷோ, நடராஜகுரு முதல் டி.டி.கோசாம்பி, ராகுல் சாங்கிருத்யாயன் வரை இப்பட்டியலைத் தயக்கமில்லாது விரித்துக் கொள்ளலாம்.
இந்நூல்கள் மீதான வாசிப்பபை நம்முடைய விவாதமாகக் கொள்வது நம்மை விரிவடையச் செய்யும். கீதையைப் பற்றி சாதகமாகவோ, பாதகமாகவோ, ஆழ்ந்த கவனத்துடன் கூறப்படும் எதுவும் நம்மை வளர்ப்பவையை. அவர்கள் அனைவருமே நம் குருநாதர்களே. நான் என் ஆசிரியர்களாகக் கொள்பவர்களில் ஆற்றூர் ரவிவர்மா, பி.கெ. பாலகிருஷ்ணன், கோவை ஞானி ஆகியோர் கீதை மீது கடும் விமர்சன நோக்கு உடையவர்கள். நித்ய சைதன்ய யதி கீதையை தன் வழிகாட்டு நூலாக முன்வைப்பவர். இரு சாராரும் கீதையை அறிய எனக்கு உதவியுள்ளனர்.
மீண்டும் இவ்வாறு அழுந்தச் சொல்லி முடிக்கிறேன், கீதை ஒரு தத்துவநூலாக அதைக் கற்றவர்களின் அருகே அமர்ந்து கற்று விவாதித்து அறிய வேண்டிய ஒரு நூலாகும்.