பி.ராமன் கவிதைகள்

1raman9919_n

 

வாசகர்கள் இல்லாத ஒரு கவிஞன் கண்ட கனவு
==================================

தங்கள் மொழியை உதறிவிட்டுப்போன
என் மக்களை
என் கவிதையின் அடித்தளத்தில்
சத்தித்தேன்.

உங்களுக்கு இங்கே என்ன வேலை
என்று சீறினேன்
பொருட்படுத்தாமல் சென்ற
கூட்டத்தில்ருந்து ஒருவர்
அலட்சியமாகச் சொன்னார்.

”நாங்கள் இப்போது சுதந்திரமானவர்கள்
எல்லைகள் இல்லாதவர்கள்
எங்கள் காலடிபட்டு
சுயநிறைவடைந்தது உன் கவிதை”

அவர்கள் நடந்து
கவிதையைத் தாண்டிச்
சென்ற இரைச்சல் கேட்டு
விழித்துக் கொண்டேன்.

மொழியும் குழந்தையும்
===============

வீட்டுத்திண்ணையில்
புதிய ஒரு சொல்லுடன்
விளையாடிக் கொண்டிருக்கிறாய்.

உன் கரையில்
தேர்வுசெய்த சொற்கள் மட்டுமே
உருண்டு ஆடுகின்றன.
எத்தனை முயன்றும் புரியவில்லை
எந்தச் சல்லடையால்
நீ அரித்தெடுக்கிறாய் என

முதலில் தேர்வு செய்யப்படும் சொற்கள்
உன் கரையில்
முடிவிலாது இருக்கும் என்றால்
அல்லது முடிவிலியை நினைவூட்டும்படியாவது
இருக்கும் என்றால்
கோடிக்கணக்கான சொற்கள்
சிக்கிப்பிணைந்து கிடப்பதில் இருந்து
அவற்றை பிரித்தறிய
உன்னால் முடியாது போகுமோ
என்று எண்ணி
நீ முதலில் சொன்ன சொற்களை
நான் இதோ குறித்து வைக்கிறேன்

ஒரு கவிஞனின் நீண்ட மௌனம்.
=======================

ஒரு தாளைப் புரட்டுவது போல
ஒரு மனிதக் கூட்டத்தை விட்டு
நான் விலகி

பிறகு அதைப்பற்றி எழுதினால்

ஒரு மனிதக்கூட்டத்தைப்
பிரிந்து செல்லும் இதயத்துடன்
மனிதர்கள் அந்த தாளைப் புரட்டினால்

அந்த இதயபாரத்தை
எப்படித்தாங்கும் இவ்வுலகு?

அதுதான் இந்த நீண்ட மௌனம்.

நான்
மனிதக் கூட்டங்களை விட்டு
விலகிக் கொண்டே இருக்கிறேன்

படித்துறைகளை விட்டு
ஊர்ந்து போகும்
ஆறு போல

இப்போதும் உயிர்
=============

ஒரு காற்று
ஒரே உலுக்கலில்
பனித்துளிகளை உதறுகிறது
மரம் மெல்ல
உயிர்பெறுகிறது.

எழுத்து நிலைத்த பேனாவிலிருந்து
ஒரு கை
இரு துளி மையை
உதறுகிறது
ஒரு கருத்து முழுமையாகிறது

தளர்ந்த ஒரு முச்சு
உடலை அப்படியே தூக்கி
இடப்பக்கமும் வலப்பக்கமும்
உலுக்குகிறது
வேறெதுவும் நிகழாமல்
நள்ளிரவாகிறது.

இமையம்
======

நண்பர்களும் தெரிந்தவர்களும் எல்லாம்
இமயமுடி ஏறிவரும் களேபரத்தில்
இரண்டுமாதம் பிந்திவந்த சேதி.

தெரிந்தவர் ஒருவர்
இமயத்தில்
குளிர்ந்து உறைந்து
கைகால்கள் வெட்டி
மீட்கப்பட்டு
நகரத்து மருத்துவமனையில் இருக்கிறாராம்.

அவரைப்போய்ப் பார்க்கவேண்டும் என்று எண்ணவில்லை
அறுத்து கைவிடப்பட்ட
அந்த கணுக்கால்களை
இன்றுமுழுக்க கண்டேன்.
இன்று முழுக்க இமயத்தைத் தாங்கி நின்றவை
உதிரம் இறுகிய
அந்தக் கால்பாதங்கள்தான்.

மேல் நோக்கி ஏதோ
சைகை காட்டி நின்ற
பனிமுடிகள்
வெட்டி எடுக்கப்பட்ட
அந்த உள்ளங்கைகள்தான்
அந்தக் கைமுத்திரைகளுடன்
ஏகாந்தமான இமயத்தின் சரிவுகள்
நெடுங்காலத்துக்குப் பின்
சற்றே ஒளிவிட்டன. 

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Apr 30, 2008

முந்தைய கட்டுரைபி. ராமன் எழுதிய மலையாளக் கவிதைகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 64