நிர்வாணம், நீர்க்கோடுகள் – கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

புதியவர்களின் கதைகள் வரிசையில் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு தளத்தில் இருப்பது ஆச்சரியமளிக்கிறது. கடலாழம் போன்ற நுட்பமான தகவல்கள் கொண்ட சாகசக்கதையும் கிறிஸ்தவமதத்தின் உள்ளே ஊடுருவக்கூடிய பரிசுத்தவான்கள் கதையும் இந்துமதத்தின் உள்ளே ஊடுருவக்கூடிய பூ கதையும் ஒரே வரிசையில் வருவது ஆச்சரியம்தான். நன்றி.

எனக்கு ரொம்பப்பிடித்த கதைகள் நீர்க்கோடுகள், நிர்வாணம் இரண்டும்தான். பிடித்தவை என்று சொல்லமுடியுமா என்றும் தெரியவில்லை. இரண்டு கதைகளுமே ரொம்ப தொந்தரவு செய்தன. என்னுடைய ரசனையின் போக்கு இதுவாக இருக்கலாம். மற்றக் கதைகளெல்லாம் புனைவு என்று தோன்றும்படி இருந்தன. இந்த இரண்டு கதைகளுமே எந்தவித வர்ணனைகளும் இல்லாமல் சாதாரணமாக உண்மைச்சம்பவத்தைச் சொல்வதுபோல இருந்தன.

அதோடு இக்கதைகளில் உள்ள பிரச்சினை எனக்கு முக்கியமாகத் தோன்றியது. இரண்டுமே மேலோட்டமாகப் பார்த்தால் பாலியல் பிரச்சினைகள். ஆனால் யோசித்துப்பார்த்தால் பாலியல்பிரச்சினைகளாக அவை வெளிப்படுகின்றன என்று தோன்றுகிறது.

நிர்வாணம் கதையில் பையனின் நிர்வாணத்தில் குறுக்கிட்ட அந்த அப்பா அவனுடைய வாழ்க்கையில் எவ்வளவுபெரிய பாதிப்பை உருவாக்கினார் என்று முதலில் தோன்றினாலும் பிரச்சினை அது அல்ல என்றும் தோன்றியது. அந்தக்கதையில் புத்தனின் அம்மாதான் மையம். அந்த அம்மாவின் ‘நிர்வாணம்’தான் கதையிலே பேசப்படுகிறது.

அதேபோல நீர்க்கோடுகள் கதை. சாதாரணமாக வாசித்தால் ஒரு நடுவயது மனிதருக்கு மகள் பிராயமுள்ள ஒரு பெண்ணிடம் வரக்கூடிய சின்ன ஈர்ப்பும் அவள் இவரை பயன்படுத்திக்கொண்டு விலகிச்செல்வதும்தான் கதை. ஆனால் இந்தக்கதையில் எதற்காக பிளெஸி வருகிறாள் என்று யோசிக்கையிலேதான் கதையின் மையமே வேறு என்ற எண்ணம் வந்தது.

பிளெஸிக்கு அப்படி ஒரு நல்ல தந்தையாக இருந்த ஹென்றி ஏன் மித்ராவிடம் அப்படி ஒரு ஈர்ப்பினை அடைந்தார்? இந்த இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? பிளெஸி இறந்தபோது வந்த வெறுமையிலே அவர் ஸ்டெல்லாவிடம் நெருங்கத்தானே செய்கிறார்?

எனக்கு நிறைய கோணங்களில் யோசிக்கத் தோன்றியது. பிளெஸியின் இன்னொரு ரூபம்தான் மித்ரா என்று சொல்லலாம். அது ஒரு நல்ல கோணம்தான்.

ஆனால் இன்னொரு பார்வைதான் எனக்கு சரியாகப்பட்டது. பிளெஸி இருந்தவரை ஹென்றி உலக வாழ்க்கையையே வேண்டாம் என்று இருந்திருப்பார். அவள் இறந்தபின் எல்லாவற்றையும் புதியதாகத் தொடங்கலாமென்று நினைத்திருப்பார். டைபாயிடு வந்தபிறகு பயங்கரமான பசி வருவதுபோல. எல்லாவற்றையும் அவர் மீண்டும் தொடங்குகிறார். எரிந்துபோன மரங்கள் புதிதாக முளைப்பதுமாதிரி.

இந்த இருகதைகளிலும் புனைவின் நுட்பத்தைவிட வாழ்க்கையின் நுட்பங்கள் வெளிப்படுகின்றன. இந்தவகையான கதைகளை கற்பனைசெய்து எழுதமுடியாது. எங்கேயோ கண்டதையோ கேட்டதையோதான் எழுதமுடியும். அதோடு அவற்றுக்கு ஒரு தீர்ப்பையோ முடிவையோ சொல்லமுடியாது. அப்படியே எழுதிவைக்கவே முடியும். வாசகனும் ஒன்றையும் முடிவாக சொல்லமுடியாது. உண்மையில் வாழ்க்கையில் கண்ட ஒருவிஷயத்தைப்பற்றி யோசிப்பதுமாதிரி யோசிக்கலாம்.

அப்படி என்றால் இதிலே புனைவு எங்கே வருகிறது? இதை எழுதுவது எப்படி இலக்கியமாக ஆகும்? அதை என்னால் சொல்லமுடியவில்லை.

சாமிநாதன்.

அன்புள்ள சாமிநாதன்,

உங்கள் வாசிப்பு நன்றாக உள்ளது.

இத்தகைய எழுத்தைத்தான் 0 டிகிரி விவரணை என்கிறார்கள். எவ்வளவு சாதாரணமாக முடியுமோ அவ்வளவு சாதாரணமாக எழுதுவது. தமிழில் இதன் முன்னோடி சா.கந்தசாமி.

இங்கே படைப்பூக்கம் எங்குள்ளது என்றால் இந்தப்பிரச்சினைகளை நுட்பமாக வாழ்க்கையில் இருந்து கண்டு எடுக்கக்கூடிய பார்வையில்தான்.

ஓர் உதாரணம் சொல்கிறேன். ஒருவர் மரத்தைச் செதுக்கி சிற்பம் செய்கிறார். அது கலை. இன்னொருவர் மரக்கிளைகள் மற்றும் முண்டுகளை தேடித்தேடி விசித்திரமான வடிவங்களைக் கண்டுபிடித்து சரியான கோணத்தில் பொருத்திவைத்து சிற்பமாக ஆக்கிவிடுகிறார். எதையும் செதுக்குவதில்லை. இரண்டாவதும் சிற்பக்கலையே என அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

ஜெ

முந்தைய கட்டுரைலூசிஃபர் ஜே வயலட்
அடுத்த கட்டுரை9. நூலகத்தில் – லூசிஃபர் ஜே வயலட்