கல்வி – பதில்கள்

இந்து தமிழ் நாளிதழில் நான் எழுதிய கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளுக்கான என் பதில்களை ஒட்டுமொத்தமாகச் சொல்லிவிடலாமென நினைக்கிறேன்.

1] என் கட்டுரை போதிய அளவு ஆய்வுசெய்யாமல் 23 பேரை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது, போதிய புள்ளிவிவரங்கள் இல்லை என்று சொல்லி சிலர் எழுதியிருந்தனர்.

23000 பேரிடம் பேசி எழுதியிருந்தால் கூட அவர்கள் தமிழகத்தில் மிகச்சிறுபான்மையினர் அல்லவா என்று வாதிடமுடியும். நான் இங்கே கருத்துவாக்கெடுப்புடன் முடிவுகளை வெளியிடவில்லை.

என் கட்டுரை opinion என்ற தலைப்பின்கீழ் வருவது. எண்ணப்பதிவு என தமிழ். உலகமெங்கும் நாளிதழ்களில் அவ்வகை கட்டுரைகள் வருவது வழக்கம். அது ஆய்வுரை அல்ல. செய்திக்கட்டுரையும் அல்ல.

அவற்றை எழுதுபவர் அந்தத் தளத்தில் எண்ணப்பதிவு ஒன்றைச் செய்வதற்கான தகுதி கொண்டவர் என அந்நாளிதழ் நினைப்பதனால் அவர் கருத்தைக் கேட்கிறார்கள். அவர் தன் தளத்துக்குள் நின்றபடி, அதுவரையிலான தன்னுடைய பணிகளின் பின்னணியில், தன் கருத்தைச் சொல்கிறார். அக்கருத்து அவர் அதுவரை சொல்லிவரும் கருத்துக்களின் நீட்சி.

எழுத்தாளன் என்ற முறையில் என் தகுதியை நான் நிரூபித்திருக்கிறேன். ஆகவே ஓர் எழுத்தாளன் கருத்துசொல்லக்கூடிய தளங்களைப்பற்றி மட்டும் என் எண்ணப்பதிவை அளிக்கிறேன். பொருளியல், வெளிநாட்டுக்கொள்கை, கிரிக்கெட் எதைப்பற்றியும் நான் கருத்து சொல்லமாட்டேன்.

நான் சொல்லும் கருத்துக்களின் பின்னணியில் என் எழுத்துவாழ்க்கை உள்ளது. என் நூல்கள் உள்ளன. அதை கருத்தில்கொண்டு என் கருத்துக்களை பரிசீலிப்பவர்களுக்காக நான் பேசுகிறேன். அது பொருட்படுத்தத் தக்கதல்ல என்பவர்கள் என் கருத்தை யாரோ ஒருவனின் அபிப்பிராயம் என புறக்கணிக்கலாம்.

நான் பொருட்படுத்தி பதில் சொல்வதானால் அதைத்தான் பார்ப்பேன். அதைச் சொல்பவர் என்ன எழுதியிருக்கிறார், அவரது தகுதி என்ன என்று.

இவை புள்ளிவிவரங்களோ ஆய்வுக்கோட்பாடுகளோ செய்திகளோ அல்ல. உலகமெங்கும் எழுத்தாளர்கள் இலக்கியம்-மொழி-பண்பாடு சார்ந்து சொல்லிவரும் கருத்துக்களைப்போல எண்ணப்பதிவுகள் மட்டுமே.

2] என் இவ்வாரக் கட்டுரையில் நான் தமிழில் எவ்வாறு கருதுகோள்கள் புரிந்துகொள்ளப்படுவதேயில்லை என எழுதியிருந்தேன். எனக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள், ஃபேஸ்புக் இணைப்புகள் எல்லாமே நான் சொன்னது எவ்வளவு சரி என்பதற்கான தெளிவான ஆதாரங்கள்.

இங்கே ஒரு கருத்தைச் சொல்லவருபவன் கடைசி வரை ’நான் சொன்னது அதில்லை’, ’ ஐயா, நான் சொல்லவந்ததே வேறு’ என்றுதான் கத்திக்கொண்டிருக்கவேண்டும் என எழுதியிருந்தேன். ஆகவே இப்படி மீண்டும் மீண்டும் விளக்க நேர்வது எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை, வருத்தமளிக்கவுமில்லை.

நான் சொல்ல வந்தது நாம் கருத்துக்களை புரிந்துகொள்வதில்லை, அவற்றை வெறுமே தெரிந்துகொள்கிறோம் என்பதைத்தான். அதற்கு நாம் கொண்டுள்ள ’போதனைமுறை’ கல்விதான் காரணம், அதற்கு மாற்று ’விவாதமுறை’ கல்வியே என்று சொல்லியிருந்தேன். அவ்வளவுதான்.

நான் என்னென்ன சொல்லவில்லை என்பதை விளக்கிவிடுகிறேன். நான் பகுத்தறிவின் விளைவாக ஒழுக்கம் இல்லாமலாகும் என்று சொல்லவில்லை. அதை கேட்பவர்களைச் சீண்டி எதிர்வினையாற்றவைக்கும் ஒரு கருதுகோளாக மட்டுமே முன்வைத்தேன். அதற்குச் சரியான பதில் என்ன என்பதையும் அக்கட்டுரையிலேயே சொல்லியிருந்தேன்.

நான் இந்திய குருகுலக் கல்விமுறை தேவை என்று சொல்லவில்லை. விவாதித்துக் கற்கும் dialectical கல்விமுறை சிறந்தது என்றே சொல்லியிருந்தேன். அது இந்தியாவின் குருகுலமுறையில் தத்துவக்கல்வியில் இருந்தது என்று சொல்லும்போதே கிரேக்கக் கல்விமுறையும் அதுவே என்று சொல்லியிருந்தேன். ஐயன்மீர் தயைகூர்ந்து கவனியுங்கள், மன்றாடி கேட்டுக்கொள்கிறேன், கிரேக்கக் கல்விமுறையையும் சுட்டிக்காட்டியிருந்தேன்.

சமீபகாலமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் அனைத்தையும் குழந்தைகள் விவாதித்து கற்றுக்கொள்ளும் வகையிலான கல்விமுறை இருப்பதைக் கண்டேன். அதை நாம் ஏன் பின்பற்றக்கூடாது என்றே என் கட்டுரை சொல்கிறது. நியாயமாரே, கவனியுங்கள், காலைப்பிடித்து கெஞ்சிக் கேட்கிறேன், குருகுலமுறை தேவை என்று சொல்லவில்லை.

3] புரட்சிப்பெரியோர்களே, மீண்டும் கும்பிடுகிறேன். குருகுலக் கல்விமுறை என்பது பிராமணர்கள் கல்விகற்கும் முறை மட்டும் அல்ல. இங்குள்ள எல்லா கல்வியும் குருகுலமுறைப்படிதான் கற்றுக்கொடுக்கப்பட்டது. சிற்பக்கலை மருத்துவக்கலை இசைக்கலைகள் ஆயுதக்கலைகள், ஏன் வேளாண்மைகூட.

விவாதமுறைக்கல்வி குருகுலமுறையில் தத்துவம் கற்பிப்பதற்கு மட்டும்தான் இருந்தது. மனப்பாடம் செய்ய மட்டுமே சொல்லிக்கொடுக்கும் வேதபாடசாலைகள் குருகுலமுறை உடையவைதான்.

இந்தியாவில் குருகுல முறைப்படி கல்வியை பரப்பியவர்கள் சமணர்கள். பள்ளி என்ற சொல்லே அவர்களிடமிருந்து வந்ததுதான்.

ஆகவே தயவுசெய்து எல்லாவற்றையும் உங்கள் பரிபூரணமான அறியாமையால் ஒற்றைப்படையாக்கி ,மொண்ணையாக்கி எவரும் எதுவும் பேசமுடியாத நிலையை உருவாக்காதீர்கள். சனங்களீடம் கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்.

4] கலைச்சொற்களை புதிது புதியதாக உருவாக்குவதில் எனக்கு நம்பிக்கை இல்லை என பலமுறை சொல்லியிருக்கிறேன். அது தேவையற்ற குழப்பத்தையே உருவாக்கும். எல்லா கலைச்சொற்களும் எவ்வளவு காரணத்துடன் உருவாக்கப்பட்டாலும் ஒருகட்டத்தில் இடுகுறிச்சொற்களாகவே புழங்கும்.

ஆகவே சொற்கள் சுட்டிக்காட்டும் பொருள் மாற மாற சொற்களை மாற்றிக்கொண்டிருப்பதில் பொருளில்லை. கான்செப்ட் என்பது கருதுகோள் என சோவியத் மொழியாக்கங்கள் வழியாக அறுபதுகளிலேயே கையாளப்பட்டுவிட்ட ஒன்று. ஹைபோதீஸிஸ் என்ற சொல்லுக்கு முற்கோள் என்பதே புழங்கப்படுகிறது. பிரிஜுடிஸ் என்பது முன்முடிவு என்ற சொல்லால் சுட்டப்படுகிறது.

ஓர் எண்ணம் ஊகம் மட்டுமாக முன்வைக்கப்பட்டால் அது முற்கோள். அதற்குரிய வாதங்களும் இணைந்திருந்தால் கருதுகோள், அவ்வளவுதான் எளிய விளக்கம்.

5] அனல்காற்றுகளே, உங்கள் திசைநோக்கி ஒரு கும்பிடு. ஒன்றைமட்டும் தெரிந்துகொள்ளுங்கள். ஆதிச்சநல்லூர் தாழியை ஆரய்ந்த ஐராவதம் மகாதேவன் முதல் அயோத்திதாசபண்டிதர் வரை சொல்லும் ஒரு விஷயம் இந்தியாவில் எல்லா சாதிகளுக்கும் அவர்களுக்குரிய கல்விமுறை இருந்தது என்பதே.

தங்கள் சாதிக்கு தங்கள் பெரியோர்கள் வழி ஒருவகை குருகுலக் கல்வி இருந்தது என அயோத்திதாசர் திரும்பத்திரும்ப வாதிடுகிறார். அவர்கள்தான் ஈராயிரம் வருடம் திருக்குறளையும் நாலடியாரையும் கற்றார்கள், பேணி கொண்டுவந்து நமக்குத் தந்தார்கள் என்பது வரலாறு.

திருவள்ளுவரும் கம்பரும் குருகுலமுறைப்படி கற்றவர்களே. பிராமணனுக்கு மட்டுமே கல்வி இருந்தது என்பது பிராமணர்களே உருவாக்கிய ஒரு பொய். அதை வெள்ளைக்காரன் வழியாக கற்று நம்மவரே நம்பி அதைச் சொல்கிறார்கள் என்பது பெரும் இழிவு.

இன்று ‘முற்போக்குப்பிராமணர்கள்’ அல்லது அயோத்திதாசர் சொல்வதுபோல ‘வேஷப்பிராமணர்கள்’ அந்த வாதத்தையே இந்தியாவின் கோடானுகோடி மக்கள் மேல் திருப்பி விடும் தந்திரத்தையாவது புரிந்துகொள்ளுங்கள்.

இந்தியாவில் ஈராயிரம் வருடமாக பிராமணன் தவிர எல்லாருமே கல்வியறிவற்ற தற்குறிக்கூட்டமாக இருந்தனர் என இவர்கள் சந்தடிசாக்கில் நிறுவுகிறார்கள். பிறருக்கு கல்வி மறுக்கப்பட்ட கொடுமையை கண்டிக்கிறேன் பேர்வழி என்ற பாவனையில் இவர்கள் முன்வைக்கும் வரலாற்று மோசடி இது.

ஆக ஒரு சாரார் கல்வி பற்றி எது பேசப்பட்டாலும் சந்தர்ப்பம் பார்த்து உள்ளே புகுந்து இந்தியாவில் பிராமணனுக்கு மட்டுமே கல்வி இருந்தது என நிறுவப்பார்க்கிறார்கள். ஒரு கட்டத்தில் அதனடிப்படையில் பிராமணர்கள் இந்தியாவில் அடைந்திருந்த மேலாதிக்கம் கல்வியின் வலிமை என்று நிறுவ முயல்வார்கள்.

இன்னொருசாரார் மண்ணாந்தைகளாக அதை ஏற்று திருப்பிச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். குருகுலக் கல்வி என்பது பிராமணர்களுக்குரிய வழக்கம் அல்ல. அது இந்தியாவின் ஆதி கல்விமுறை. எல்லாதுறைகளிலும். அன்று சாத்தியமான மிகச்சிறந்த கல்விமுறை அதுவே.

அந்த குருவைத்தான் ஆலமர்செல்வன் என தென்னக மரபு கடவுளாக்கி வழிபடுகிறது. தட்சிணாமூர்த்தி அதாவது தென்திசை முதல்வன் என்று இன்றும் நம் ஆலயங்களில் அந்த தெய்வம் அமர்ந்திருக்கிறது. நாம் வணங்கும் கடவுள் முருகவேளே குருநாதன்தான்.

எத்தனைநாள்தான் இந்த அசட்டு முக்காரியிடல்களுக்குச் செவிகொடுக்கப்போகிறோம்?

முந்தைய கட்டுரை7. நீர்க்கோடுகள் – துரோணா
அடுத்த கட்டுரைகடலாழம் – கடிதங்கள்