காந்தியும் இந்தியும்

காந்திய தரிசனம் என்பது மையப்படுத்தலுக்கு நேர் எதிரானதுஎனலாம்’  [ லாரி பேக்கர் ]

காந்தி மையப்படுத்தலுக்கு எதிரானவர் என்றால், “இந்தி தேசிய மொழி. அதை எல்லாரும் படித்தே ஆகவேண்டும்” என்று ஏன் சொன்னார்? நம்முடைய காங்கிரஸ்காரர்களின் இந்தி எதிர்ப்பை ” Nuisance of these minority” என்று விமர்சித்ததாக படித்துள்ளேன்.

காந்தியின் இந்த ஒரு கொள்கைக்காக மட்டுமே எனக்கு காந்தியை அறவாக பிடிப்பதில்லை. எவ்வளவு முயன்றும். காந்தி ஒருவித பிடிவாதக்காரர் என்பது எனக்கு கசப்பைத்தருகிறது.
பெரியாரின் குணம் எங்கள் ஊர் பஞ்சாயத்து தலைவர்களின் குணம். வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பேசும் நேர்மை. காந்திக்கு கொஞ்சமாவது “பனியா” புத்தி இருந்தது என்று தோன்றுகிறது. பிடிவாதம், தந்திரம்…அப்புறம் என்ன மகாத்மா?

காந்தி சொன்னார் என்பதற்காக தாங்கள் இந்தியை ஏற்பீர்களா?

தெளிவான ,விளக்கமான பதிலை எதிர்பார்க்கிறேன்!!

வெங்கடேஷ்

***

அன்புள்ள வெங்கடேஷ்,

காந்திக்கு எதிரான சிந்தனைகளில் பெரும் பகுதி அவரில் ஒரு மத நிறுவனரை தேடுவதில் இருந்தே ஆரம்பிக்கிறது. அவரை ஒரு மகாத்மாவாக முன் வைத்த காங்கிரஸாரில் பெரும் பகுதியினரே இதற்கு வழி வகுத்தவர்கள். அவரை மகாத்மா என்றதன் வழியாக அவரைப் பற்றிய விவாதங்களே நிகழாமல் செய்து விட்டார்கள். ஒரு பக்கம் அவர் மகாத்மாவென்று கொண்டாடப்படுகையில் இன்னொரு பக்கம் அவரை எதிர்ப்பவர்கள் அவரை சதிகாரன், போலி, மடையன், மானுட மிருகம் என்ற அளவுக்குக் கொண்டு செல்கிறார்கள்.

எந்த ஆதாரமும் இல்லமல் இந்த அளவுக்கு வெறுப்புணர்ச்சிகள் கொட்டப் பட்ட இன்னொரு மனிதர் உலகில் உண்டா என்பதே ஆச்சரியம்தான். இதன் மர்மம் என்ன என்பதை நான் எனக்குத்தோன்றிய அளவில் ஊகித்திருக்கிறேன். காந்தி அவரது ஆதரவாளர்களில் பெரும்பாலானவர்களால் ஒரு மதநிறுவனரின் இடத்திற்கு நகர்த்தப் பட்டார். அதே சமயம் அவரை ‘பாதுகாக்க’ ஒரு மதம் கிடையாது.

காந்தியைப் பற்றிய இம்மாதிரியான வசைகளை நபி மீதோ ஏசு மீதோ கொட்டினால் அதற்கு ‘எதிர்வினையாற்ற’ பெரும் கும்பல் திரளும். ஆகவே அனைத்துச் ‘சிந்தனையாளர்’களுக்கும் காந்தி ஒரு மென்மையான இலக்கு. அவரை வசை பாடி தங்களை ‘அமைப்புக்கு எதிரான’ கலகர்களாக காட்டிக் கொள்ளலாம். அதே நிலைபாட்டையும் தீவிரத்தையும் அவர்கள் பிற அமைப்பு நிறுவனர்கள் மேல் –மதத்தாலும் சாதியாலும் பாதுகாக்கப்பட்டவர்கள் மேல்- காட்டுவார்களா என்ற வினா மூலமே நான் அவர்களைப் புரிந்து கொள்வேன்.

காந்தி தன்னை ஒரு மகாத்மாவாகச் சொல்லிக் கொண்டவர் அல்ல. அனைத்துக்கும் இறுதித் தீர்வுகளைச் சொன்னவர் அல்ல. மாற்ற முடியாத அருள் வாக்குகளை ‘இறக்கி’ அருளியவரும் அல்ல. அவர் தன்னை விரிவான ஆய்வுகள் நடத்தி தன் முடிவை முன் வைத்த சமூக ஆய்வாளராகவோ, அல்லது நுண்ணிய விவாதங்கள் வழியாக மையத் தரிசனங்களுக்குச் சென்ற தத்துவவாதியாகவோ, காட்டிக் கொண்டதில்லை. முக்கியமான கருத்துக்கள் சொல்லும் போதெல்லாம் காந்தி தெளிவாகவே தன்னை நடைமுறை அனுபவங்கள்  சார்ந்து பேசும்  அரசியல் சிந்தனையாளராக வரையறை செய்து கொண்டுதான் மேலே பேசுகிறார்!

நான் காந்தியை ‘மகாத்மா’வாக ஏற்றுக்கொண்டவன் அல்ல. நான் அச்சொல்லை ஒரு போதும் பயன் படுத்துபவனல்ல என்பதைக் கண்டிருப்பீர்கள். நான் அவரை ஒரு நடைமுறை அரசியல் சிந்தனையாளராகவும்,  நவீனத்துவ காலத்தின் எல்லைகளைத் தாண்டிப் பார்க்க முடிந்த தத்துவவாதியாகவும்,  அரசியலைத் தன் தளமாகக் கொண்ட கர்ம யோகியாகவும்தான் பார்க்கிறேன்.

ஆகவே அவர் பிழைகள் செய்யாதவர் என்றோ எல்லாவற்றுக்கும் விடைகள் சொன்னவர் என்றோ எண்ண நான் தயாரல்ல. அவர் பாதிக்குப் பாதி தவறான விஷயங்களைச் சொல்லியிருந்தால் கூட அவற்றை நிராகரிக்கவும் சொல்லியவற்றில் முக்கியமானவற்றின் அடிப்படையில் அவரை மதிப்பிடவும் எனக்குத் தயக்கம் இல்லை. அதைத் தான் இக்கட்டுரை உட்பட எல்லாவற்றிலும் செய்கிறேன்.

இனி இந்திக்கு வருவோம். பலர் கவனத்தில் கொள்ளாத ஒருவிஷயம், காந்தி ஒரு இந்திக்காரர் அல்ல என்பதே. அவரது தாய்மொழி குஜராத்தி.  குஜராத்தி மொழி மேல் தீவிரமான ஈடுபாடு கொண்டிருந்தார் காந்தி. குஜராத்தி மொழியில் தான் தன் எழுத்துக்களில் பெரும் பகுதியை அவர் எழுதினார்.

காந்திக்கு முன்னர் குஜராத்தி மொழி பெரும்பாலும் பக்திக்கு மட்டுமே பயன் படுத்தப் பட்டமையால் ஒருவகையான அடுக்குச் சொல் தன்மை, செய்யுள் தன்மை கொண்டதாக இருந்தது. நவீன ஆங்கிலத்துடன் அறிமுகம் உள்ளவரான காந்தி மக்களிடம் உரையாடும் தன் நோக்கத்துக்காக கச்சிதமான, சிறிய சொற்றொடர்களில் குஜராத்தியில் எழுதி நவீன குஜராத்தி உரைநடையை தொடங்கி வைத்தார். அரசியல், தத்துவக் கலைச்சொற்களை உருவாக்கினார். இன்றும் குஜராத்தி நவீன இலக்கியத்தின் பிதாமகராக எண்ணப்படுகிறார்!

இந்தி காந்திக்கும் அன்னிய மொழிதான். அவர் பிறந்து வளர்ந்த கத்தியவாரில் இந்தி எக்காலத்திலும் பேசப்பட்டதில்லை. தென்னாப்ரிக்காவில்தான் அவர் நன்றாக இந்தி பேசவும் எழுதவும் கற்றுக்கொண்டார். ஆகவே காந்தி தன் தாய்மொழியை பிறர் மேல் திணித்தார் என்று நினைத்தீர்கள் என்றால் அதைக் கைவிடுங்கள். அப்படி திணித்தால்தான் அதை அடிப்படை வாதம் என்று நீங்கள் சொல்ல முடியும்.

காந்தி மீண்டும் மீண்டும் தாய்மொழிக் கல்விக்காக வாதிடுவதை நீங்கள் அவரது எழுத்துக்களில் காணலாம். கல்வி ஆங்கிலத்தில் மட்டுமே சாத்தியம் என்று காந்தியின் சீடர்களில்கூட பெரும்பாலானவர்கள் நம்பிய காலகட்டத்தில், தாய்மொழியில் நவீனக் கல்வி என்பது அனேகமாக எங்குமே இல்லாமல் இருந்த காலகட்டத்தில், காந்தி அதைச் சொல்லிக் கொண்டிருந்தார். தாய் மொழியில் ஒரு குழந்தை கல்வி கற்க ஆரம்பித்தால் மட்டுமே அதனால் சுயசிந்தனையுடன் வளர முடியும் என காந்தி நம்பினார். தாய்மொழியிலேயே அதற்கு நவீன உயர் கல்வியை அளிக்க முடியும் என்று வாதிட்டார்.

காந்தியின் வழிகாட்டலில் இருந்த காங்கிரஸ் அரசு பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கீழே சுதேசி அரசுகளை அமைத்த போது தான் இந்தியாவில் தாய் மொழி வழிக் கல்விக்கான பள்ளிகள் ஆரம்பிக்கப் பட்டன. அவையே இன்றைய தாய் மொழிக் கல்விக்கான அடித்தளங்கள். இப்பள்ளிகள் சுதேசிப் பள்ளிகள் என்று அழைக்கப் பட்டன. இவற்றுக்கு எதிராகச் சிந்தனை செய்த ஆங்கில அனுதாபிகளும் காங்கிரஸில் இருந்தார்கள். காந்தி அவர்களிடமும் தொடர்ந்து விவாதித்தபடித்தான் இருந்தார்.

ஆகவே காந்தி இந்திவழி கல்விக்காக வாதிட்டார் என்றும் எவரும் சொல்லிவிட முடியாது. இந்தியில் இந்தியாவெங்கும் கல்வி கற்றுக்கொடுக்கப்பட இந்திய அரசு முடிவெடுத்திருந்தால் அவர் அதை கடுமையாக எதிர்த்திருப்பார்.

அப்படியானால் காந்தி எதற்காக இந்தியை முன்வைத்தார்? அப்பட்டமான நடைமுறை அனுபவம் வழியாக அவர் அடைந்த விவேகம் அது. அவர் ஒரு மாபெரும் தேசிய இயக்கத்தை நடத்தியவர். காஷ்மீர் முதல் கன்யாகுமரிவரை பரந்த ஓர் இயக்கம். அதன் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் படிப்பறிவில்லாதவர்கள். அவ்வியக்கத்தின் மொழியாக இயல்பிலேயே இந்தி இருப்பதை அவர் கண்டார். ஆகவே அவர் இந்தியை ஒரு தொடர்புமொழியாக வெற்றிகரமாகப் பயன்படுத்தினார். இந்தியாவுக்கான தொடர்புமொழியாக இயல்பிலேயே இந்திதான் இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார்.

இந்தியை காந்தி முன்வைத்தமைக்கு அவர் நடைமுறைக் காரணங்களையே சொல்லிவந்தார். ஒன்று அது இந்தியாவில் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்த மொழி. இரண்டாவதாக அது முஸ்லீம்களுக்கும் நெருக்கமான மொழி. ஏதாவது ஒரு இந்திய மொழியை இந்தியா அனைத்துக்கும் பொதுமொழியாக ஆக்கவேண்டும் என்றால் அது இந்தியாகவே இருக்க இயலும் என்பதை எவரும் உணரமுடியும்.

காந்தியின் காலகட்டத்தில் இந்தியாவெங்கும் பரவி மிக வெற்றிகரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த காங்கிரஸ¤க்கு இந்தியாவை இணைப்பதற்கு நடைமுறையில் இந்திதான் இணைப்பு ஒழியாக இருந்தது. எதிர்கால இந்தியாவுக்கு ஓர் இந்திய மொழி இணைப்புமொழியாக இருக்கவேண்டும் என காந்தி விரும்பினார். அது இந்தியர்களின் தன்னம்பிக்கைக்கு இன்றியமையாதது என நம்பினார். அந்த நடைமுறை ஞானத்தையே அவர் திடமாக முன்வைத்தார்.

அதேசமயம் அவர் பிடிவாதமாக இந்தியில் பேசி எழுதிக்கொண்டிருக்கவில்லை. தன் வாழ்நாளெல்லாம் ஆங்கிலத்தை தொடர்புமொழியாக பயன்படுத்திகொண்டுதான் இருந்தார். விடாப்பிடியாக இந்தியைப் பிடித்துக்கொண்டிருந்தால்கூட அவரை ஒருவகை முரட்டுநம்பிக்கையாளர் என்று சொல்லலாம். ஆங்கிலத்தின் இடத்தை அவர் நன்றாகவே அறிந்திருந்தார். காரணம் அவர் நடைமுறைவாதி.

எதிர்கால இந்தியாவின் இணைப்புமொழியாக ஆங்கிலம் இருக்கமுடியாது என காந்தி நிராகரித்தமைக்கு அவருக்கு இருந்த கிராமசுயராஜ்யம் குறித்த கனவுகளும் திட்டங்களும் ஒரு முக்கியமான காரணம். காந்தி தன் இளமைக்காலத்திலேயே அந்த கனவை தனக்குள் உருவாக்கிக் கொண்டிருந்தார். இந்தியா முழுக்க சுற்றி பல்லாயிரம் கிராமங்களை கண்ணால் கண்டறிந்து தன் கோட்பாடுகளை வலுப்படுத்திக்கொண்டார்.தன் வாழ்நாளின் கடைசிக்கணம் வரை காந்தி கிராமசுயராஜ்யம் என்ற கருத்துக்காக நேருவிடமும் பிறரிடமும் வாதாடினார்.

காந்தி உருவாக்க எண்ணிய இந்தியா பல்லாயிரக்கணக்கான தன்னிறைவுபெற்ற, கிட்டத்தட்ட தனியாட்சி கொண்ட கிராமசமூகங்களின் தொகை ஆகும். அக்கிராமங்களில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு அங்கேயே உற்பத்திசெய்யப்படும் பொருட்களினால் அவர்களின் வாழ்க்கை அமைந்திருக்கும். குறைவான விஷயங்களே அவர்களுக்கு வெளியே இருந்து வரும். ஆகவே ஒவ்வொரு கிராமமும் தனக்கே உரிய தனித்தன்மையான வாழ்க்கைமுறை கொண்டிருக்கும். அந்தத் தனித்தன்மையே அவற்றின் அடையாளமாகவும் அழகாகவும் இருக்கும்.

காந்தி உருவாக்க எண்ணிய கிராமசுயராஜ்யத்தில் கிராமங்கள் மேல் மைய அதிகாரத்தின் கட்டுப்பாடு மிகவும் குறைவாகவே இருக்கும். அந்தக் கிராமத்தின் எல்லைக்குள் உற்பத்தி நிகழ்வதனால் பெருந்தொழில்கள் இருக்காது. ஆகவே இயற்கைச்சூழல் கெடுக்கப்படாது. மக்களின் படைப்பூக்கத்தை பெருக்கும் தொழில்நுட்பம் இருக்கும், அவர்களை இயந்திரங்களாக ஆக்கும் தொழில்நுட்பம் இருக்காது. அவர்களின் தாய்மொழியிலேயே அவர்கள் அனைத்தையும் கற்பார்கள். அவர்கள் தேசிய அளவில் ஒருங்கிணைவதற்கே இந்தி ஊடகமாக இருக்கும்

இவ்வாறு தான் கனவுகண்ட கிராமசுயராஜ்யத்தின் இணைப்புமொழியாகத்தான் காந்தி இந்தியை முன்வைத்தார். ஏற்கனவே அக்கிராமங்களில் பெரும்பாலானவற்றுக்குச் சென்று சேர்ந்த மொழி இந்தி என்பதுதான் அவ்வாறு அவர் முன்வைக்க காரணம்.

காந்தியின் கிராமசுயராஜ்யக் கனவை நேரு ஒரு முட்டாள்தனமான இலட்சியவாதம் என்றே எண்ணினார். நேரு ஸ்டாலினின் மையப்படுத்தப்பட்ட அதிகாரம், பெருந்தொழில்கள் ஆகியவற்றைத்தான் தனக்கு முன்னுதாரணமாகக் கண்டுகொண்டிருந்தார்! நேரு உருவாக்கிய மைய அதிகார இந்தியாவில் மைய அதிகாரத்தின் மொழியாக இந்தி முன்வைக்கப்பட்டதற்கும் காந்தி கிராமசுயராஜ்யங்களின் இணைப்புமொழியாக இந்தி இருக்கவேண்டும் என்று சொன்னதற்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது.

தன் கிராமசுயராஜ்யத்துக்கான இணைப்புமொழியாக காந்தி ஏன் ஆங்கிலத்தை முன்வைக்கவில்லை? ஒன்று, அப்போதும் இந்தியாவில் மிகமிகக் குறைவானவர்களின் மொழியாகவே ஆங்கிலம் இருந்தது. அதுவும் உயர்வற்கத்தின் மொழி. அதில் சாமானியர்களுக்கு எந்த இடமும் இல்லை. காந்தி கனவுகண்ட கிராமசுயராஜ்யம் சாமானியர்களின் சமூகம். அதில் ஆங்கிலத்தை இணைப்புமொழியாக உருவகிப்பது சாத்தியமே அல்ல.

ஆங்கிலம் என்றும் இந்தியாவில் ஒரு உயர்வர்க்க மொழியாகவே இருக்கும் என்றும், அது ஒருபோதும் சமானியர்களின் மொழியாக ஆகமுடியாது என்றும் காந்தி எண்ணினார். ஆங்கிலத்தை முன்வைப்பது வழியாக உயர்குடிகளுக்குச் சாதகமான ஓர் அமைப்பே உருவாகும், புதிய உயர்குடிகளை அது உருவாக்கும், ஒருபோதும் அது சாமானிய இந்தியமக்கள் அனைவருக்குமான மொழியாக ஆகமுடியாது என்றார். இது அப்பட்டமான ஒரு நடைமுறை யதார்த்தமாக இன்றும் நீடிக்கிறது.

நேருவின் இந்தியாவில் காந்தியின் சுயராஜ்யக் கனவு நிராகரிக்கப்பட்டது. நேரு-அம்பேத்கார் கூட்டணி வலுவான மைய அதிகாரம் கொண்ட ஒரு அரசை உருவாக்கியது. அப்படி ஒரு அரசு உருவாக்கப்படும்போது அதன் மொழியாக ஒரு இந்திய மொழி இருப்பதென்பது அம்மொழி பேசாத பிற மக்கள் இரண்டாம்குடிகளாக ஆக வழிவகுக்கும். ஆகவேதான் நான் இந்தியை ஏற்றுக்கொள்ளவில்லை.

காந்தி இருந்திருந்தால் ஒருபோதும் மத்திய அரசின் அதிகாரமொழியாக இந்தி பிறர் மேல் திணிக்கப்படுவதை ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார் என்றே நான் எண்ணுகிறேன். எப்போதும் மைய அதிகாரத்துக்கு எதிராகவே காந்தி பேசியிருக்கிறார். கிராமசுயராஜ்யம் என்ற கருத்தின் மையத்தரிசனமே பன்மைத்தன்மைதான்.

சுதந்திரத்துக்குப் பின்னர் நாம் உருவாக்கியது நவீனத்துவ [modernist] சமூகம் ஒன்றை. மைய அதிகாரம், ஒருங்கிணைக்கப்பட்ட நிர்வாகம், தரப்படுத்தப்பட்ட கல்வி, பெருந்தொழில்கள், பெருமுதலீடு, அறிவியல்மீதான பக்தி ஆகியவை. நவீனத்துவத்தின் மொழி ஆங்கிலமே. ஆகவே சுதந்திரத்துக்குப் பின்னர் ஆங்கிலம் காந்தி கற்பனை செய்திருக்க முடியாத வேகத்தில் இந்தியாவில் பரவியது. [பலர் எண்ணுவது போல பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலம் மக்களிடையே பரவலாகவில்லை. சுதந்திர இந்தியாதான் ஆங்கிலத்தை மக்கள்மயமாக்கியது] இயல்பாகவே நவீனத்துவ இந்தியாவின் இணைப்புமொழியாக ஆங்கிலம் ஆகியது.

இன்றைய இந்தியா காந்தி கண்ட கனவுக்கு நேர் எதிரான திசையில் வெகுதூரம் வந்திருக்கிறது. இன்று காந்தி கனவு கண்ட தாய்மொழி வழிக்கல்வியே கிடையாது. அங்கும் ஆங்கிலம் அமர்ந்திருக்கிறது. காரணம் ஆங்கிலம் தொழில்நுட்பத்தின் மொழி. பூமியைத்தழுவி விரிந்திருக்கும் நவீனத்துவ புத்துலகின் மொழி. இன்று நாம் நவீனத்துவ உலகில் நமது பங்குக்காக போராடுகிறோம். ஆங்கிலம் அதற்கான கருவி.

இன்றையநவீனத்துவ இந்தியா ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியை இணைப்புமொழியாகக் கொள்ள வேண்டும் என்று சொல்பவர்கள் எந்தவிதமான புரிதலும் இல்லாமல் வெறும் மொழிவெறி காரணமாகவே அதைச் சொல்கிறார்கள். சம்பந்தமே இல்லாமல் அதற்கு காந்தியை உள்ளே கொண்டுவருகிறார்கள். காந்தி இந்த நவீனத்துவ யுகத்தில் இதன் மொழியாக இந்தி இருக்கவேண்டும் என்று சொன்னவரல்ல. நவீனத்துவத்துக்கு அப்பால்சென்று சிந்திக்க முயன்றவர் அவர்.

நவீனத்துவ இந்தியாவில் ஆங்கிலம் இணைப்புமொழியாக இயல்பாகவே அமைந்தது. ஆனால் அதில் உள்ள பிரச்சினைகளை நாம் பார்த்துத்தான் ஆகவேண்டும். அது தொழில்நுட்பம் அறிந்த, கல்வியையே அதிகாரமாகக் கொண்ட ஒரு புதிய ஆளும்வற்கத்தை உருவாக்கி இந்தியாவின் கோடானுகோடி மக்களின் தலைமீது நிறுவியிருக்கிறது.  அவர்களை ஆங்கிலம் இங்குள்ள மக்களிடம் இருந்து முழுமையாகவே பிரித்துவிடுகிறது. ஆங்கிலம் இன்று ஒரு கண்கூடான அதிகாரமாக நம் சாமானிய மக்களை ஆட்கொண்டிருக்கிறது.

இந்திய மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் விஷயங்கள் இன்றும்கூட இந்தியமக்களில் தொண்ணூறு சதவீதம்பேருக்குப் புரியாதபடி விவாதித்து முடிவெடுக்கப்படுகின்றன. இந்திய வேளாண்மையைப் பற்றிய ஒரு விஷயத்தை இந்திய வேளாண்மைவிஞ்ஞானி இந்திய விவசாயிகளிடம் பேசமுடியாத நிலை இருக்கிறது. நமது சட்டங்கள்கூட நம் மக்களுக்குப் புரிவதில்லை!

ஏன் தொலைக்காட்சியில் வந்துபேசும் ஒரு மருத்துவ நிபுணரை கவனியுங்கள், அவர் நம் உடலைப்பற்றிப் பேசுகிறார். ஆனால் நமக்குப்புரிவதுபோல அவரால் நான்கு சொற்றொடர்கூட சொல்ல முடியவில்லை. ‘டாக்டர் என் உடம்புக்கு என்ன?’ என்று கேட்டால் அதற்குப் பதில் சொல்லத்தெரிந்த டாக்டர்களே இன்று இல்லாமலாகிவிட்டார்கள். அவரது கல்வியின் அதிகாரத்துக்குப் பணிந்து நம் உடலை நாம் அவர்களிடம் ஒப்படைக்கிறோம்.

காந்தி ஆங்கிலத்தை அஞ்சியது இதனாலேயே. இந்தியை அவர் முன்வைத்தது இந்திபேசும் கோடானுகோடி எளிய மக்களின் தரப்பில் நின்றபடி அவர் வரும்காலத்தை அவர் பார்த்தார் என்பதனாலேயே. நாம் மக்களுக்குச் சொல்வதைப்போல மக்களுக்கும் நம்மிடம் சொல்ல சில விஷயங்கள் இருக்கும், அதற்குத்தான் நமக்கு இணைப்புமொழி தேவை என்று உணர்ந்தமையாலேயே. நேருவின் வழி மாட்டுவைத்தியனின் சிகிழ்ச்சைபோல. மாட்டுக்கு என்ன பிரச்சினை என்று அதனிடம் கேட்பதில்லை.

அந்தப்போக்குதான் இன்றுவரை இந்தியாவில் நீடிக்கிறது. இன்றுவரை நம் அரசும் ,நம் வல்லுநர்களும், நம் அறிவுஜீவிகளும் மக்களிடம் சென்று அவர்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டதில்லை. அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டதில்லை. ‘எல்லாம் உன் நன்மைக்காகத்தான், கண்ணைமூடிக்கொண்டு சாப்பிடு’ என மருந்தை வாயில் ஊற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.  அழிவு ஏற்பட்டாலும் அதற்கும் அம்மக்களையே பழிசாற்றுகிறார்கள். பசுமைப்புரட்சி முதல் சொட்டுமருந்து வரை எத்தனை உதாரணங்கள். நகரங்களில் வாழ்ந்து கொண்டு நாம் கிராமங்களை விவாதிக்கிறோம். கிராமங்களை ஆட்சி செய்கிறோம்.

அந்த நிலையை அஞ்சித்தான் காந்தி ஆங்கிலத்தை சந்தேகப்பட்டார். இந்தியை அவர் மக்களின் மொழியாகவே கண்டார். தன்னைச் சந்திக்க வந்த ஒவ்வொருவரிடமும் காந்தி கிராமிய இந்தியாவைச் சுற்றிப்பார்க்கும்படிச் சொன்னார். ஆனால் அவரது பிரதான சீடரான நேரு இந்தியக் கிராமங்களைச் சுற்றிப்பார்க்கவே இல்லை. ஒரு கிராம விவசாயி எப்படி சப்பாத்தி தட்டுவான் என கடைசிவரைக்கும் தெரியாமலேயே அவர் இந்தியாவை ஆண்டார்.

காந்தி இந்தியை முன்வைத்தது இந்த நவீனத்துவ அதிகாரத்தின்மீது அவருக்கு இருந்த ஆழமான ஐயம் காரணமாகத்தான். இக்கணம்வரை காந்தி என்னென்ன காரணத்துக்காக ஆங்கிலத்தை ஐயப்பட்டாரோ அதே காரணங்கள் தொடர்கின்றன–மேலும் பிரம்மாண்டமாக!

காந்தியின் கிராமசுயராஜ்யம் என்பது நேரு எண்ணியது போல ஒரு பழமையான கருத்துருவம் அல்ல. பின்நவீனத்துவ சமூகம் ஒன்றுக்கான வரைபடம் அதில் உள்ளது. அதை விரிவாக தனியாகவே பேசவேண்டும். மைய அதிகாரம் கொண்ட, பெருநகர் சார்ந்த, பெருந்தொழில் சார்ந்த நவீனத்துவ சமூக உருவகத்துக்கு  மாற்றான ஒரு உருவகம் அது.

அச்சமூகம் ஓர் எதிர்காலச் சாத்தியம் என்றே நான் எண்ணுகிறேன். நவீனத்தொழில்நுட்பத்தின் வளர்ச்சியே நவீனத்துவத்தில் இருந்து காந்தி சொன்ன பின்நவீனத்துவ சமூகம் ஒன்றுக்கு நம்மைக் கூட்டிச்செல்ல முடியும். இப்போதே வளர்ந்த நாடுகளில் பெருநகரங்கள் தேவையற்றவையாக ஆகி வருகின்றன. நவீன தகவல்தொடர்பும் போக்குவரத்து வளர்ச்சியும் மக்கள் நெருக்கியடித்து வாழவேண்டிய தேவை இல்லாமல் செய்துகொண்டிருக்கின்றன. பின்நவீன கிராமசுயராஜ்யங்கள் வரக்கூடும்!

அந்தக் காலகட்டத்தில் இந்த இணைப்புமொழி மையமொழி போன்ற பிரச்சினைகளுக்கே இடமில்லை. காந்தி கனவுகண்டதுபோல தாய்மொழியே போதுமானதாக இருக்கும். பலர் எண்ணுவது போல எதிர்காலத்தில் ஆங்கிலம் முழுமுற்றான மேலாதிக்கம் செலுத்தும் என நான் நினைக்கவில்லை. சிந்தித்துப் பாருங்கள், ஆங்கிலத்தில் உள்ள எந்தநூலையும் கணிப்பொறியின் உதவியால் கனநேரத்தில் தமிழில் வாசிக்க முடியும் என்றால் ஏன் ஆங்கிலம் நீடிக்க வேண்டும்? எந்த மொழியில் இருந்தும் இன்னொரு மொழிக்கு கணநேர மொழியாக்கம் சாத்தியம் என்றால் எதற்காக இணைப்புமொழி?

மீண்டும் உங்கள் கேள்விக்கே வருகிறேன். காந்தி இந்தியை வலியுறுத்துவதன்மூலம் பன்மைத்தன்மைக்கு எதிராக ஒற்றைமையத்தை வலியுறுத்தவில்லை. அவர் உருவகித்த பன்மைத்தன்மை மிக்க கிராமசுயராஜ்யத்தின்   தேசிய அளவிலான பொதுஇணைப்புமொழியாக ஒரு நடைமுறை யதார்த்தமாக இந்தியை முன்வைத்தார். வரும் காலங்களில் அந்த இணைப்புமொழி என்ற தேவை இருக்காது என நான் நினைக்கிறேன்.

ஜெ

***

[பி.கு. பொதுவாக இம்மாதிரி விவாதங்களில் ஈவேராவை இழுக்காதீர்கள். அவர் நின்றுபேசும் தளத்துக்கும் இத்தகைய விவாதங்களுக்கும் ஒரு பொருத்தமும் இல்லை. இருவரையும் ஒப்பிடுவதே சிந்தனைக்கு எதிரானது

காந்தியைப்பற்றி இப்படியெல்லாம் ஆழமாக முரண்பட்டு விவாதிப்பவர்கள் ஈவேரா போகிறபோக்கில் சொன்ன மட்டையடிகளுக்கெல்லாம் சப்பைக்கட்டு கட்டுவதற்காகவே முயல்கிறார்கள் என்பதைக் கண்டிருக்கிறேன். தாய்மொழிக்கல்வியே தேவையில்லை,ஆங்கிலம் மட்டுமே போதும், அதுதான் அறிவின் மொழி என்றார் ஈவேரா. தமிழர்கள் தங்கள் பண்டைய இலக்கியங்கள் அனைத்தையும் கொளுத்திவிட்டு ஆங்கிலம் வழியாக தொழில்நுட்பத்தை மட்டுமே கற்றுக்கொண்டால் போதும் என்றார்.

இவ்வாறு அவர் சொல்லிய எந்தக் கருத்துக்கும் பின்னால் எந்தவகையான பொதுவான தரிசனமும் திட்டமும் இருக்கவில்லை. வெறும் எதிர்வினைகள் மட்டும்தான் அவை. எவற்றுக்கும் அவர் பொறுப்பேற்றுக் கொண்டதில்லை. காரணம் அவர் தன் எதிரிகளிடம் விவாதிக்கவோ எவ்வகையிலேனும் தன்னை மாற்றிக் கொள்ளவோ வளரவோ இல்லை.

மாறாக காந்தியிடம் நடைமுறையில் இருந்து பெற்றுக்கொண்ட விவேகமும், ஒரு பெரிய இலட்சியக் கனவும், அவை இணையும்போது உருவாகும் தரிசனமும் இருந்தன. அந்தத் தரிசனத்தை முன்வைத்து தன் எதிர்தரப்புடன் தொடர்ந்து விவாதித்துக்கொண்டே இருந்தார். அந்த விவாதங்கள் வழியாக அவர் மாறினார், வளர்ந்தார்]

***

லாரி பேக்கர்

காந்தி குறித்த முந்தைய கட்டுரைகளின் இணைப்புகள்:
http://jeyamohan.in/?p=3173

http://jeyamohan.in/?p=2815

http://jeyamohan.in/?p=2822

http://jeyamohan.in/?p=2810

http://jeyamohan.in/?p=2789

http://jeyamohan.in/?p=2783

http://jeyamohan.in/?p=2768

http://jeyamohan.in/?p=2773

http://jeyamohan.in/?p=2760

http://jeyamohan.in/?p=2745

http://jeyamohan.in/?p=2804

http://jeyamohan.in/?p=722

http://jeyamohan.in/?p=620

http://jeyamohan.in/?p=557

http://jeyamohan.in/?p=619

http://jeyamohan.in/?p=2760

முந்தைய கட்டுரைபின் தொடரும் நிழலின் குரல் -அருணகிரி
அடுத்த கட்டுரைசம்ஸ்கிருதம்:கடிதங்கள்