கடலாழம் கதை நன்றாக வந்திருக்கிறது… உரையாடல்கள் எல்லாம் செறிவாக இருக்கிறது.. தொய்வில்லாமல் படிக்க முடிகிறது.
விவரிப்புகளில் நிறைய குட்டி குட்டி வாக்கிய அமைப்புகள்.. அது நல்லதுதான்.. ஆனால் சில விவரிப்புகளாவது நீண்டு சென்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். கடல் சார்ந்த கதைகள் எல்லாமே எனக்கு பிடிக்கும்… அந்த உலகத்தில் இன்னும் நிறைய எழுதப்படாத விஷயங்கள் இருக்கிறது.. உங்கள் கதை அந்த இடைவெளியை நிரப்புகிறது..வாழ்த்துக்கள் கிறிஸ்.
இன்னும் விரிவாக எல்லா கதைகளை பற்றியும் விரைவில் எழுதுகிறேன்…
அர்விந்த்
ஜெ,
நமக்கு இவ்வளவு பெரிய கடல் இருந்தும்கூட கடல்பற்றிய கதைகள் மிகக்குறைவு. அந்தக்குறையை வரும்காலத்தில் எழுத்தாளர்கள் நீக்குவார்கள் என்ற எண்ணத்தை கடலாழம் கதை உருவாக்கியது. கடலை வைத்து எவ்வளவு அற்புதமான கதைகளை எழுதியிருக்கிறார்கள் ஆங்கிலத்திலே. ஆனால் அதெல்லாமே வேறு கடல். அந்தக்கடல் குளிரானது இருண்டது. நம்முடைய கடல் சூடானது. புயலடிப்பது. நம்முடைய மான்ஸூன் பற்றி ஒரு நல்ல கதை இன்றுவரை எழுதப்படவில்லை. கிறிஸ்டோபரின் கதையை மிகுந்த ஆர்வத்துடன் வாசித்தேன். நுட்பமான தகவல்கள் வழியாக கடலை கண்ணுக்குக் காட்டிவிடுகிறார். அருமை.
ஜெகன்
ஜெ,
கடலாழம் அருமையான கதை. கடல் கொந்தளித்துக்கொண்டே இருக்கிறது. அங்கே smooth ஆன casual ஆன விஷயங்களே நடக்கமுடியாதென்று தோன்றுகிறது. தியாகம் வீரம் மரணம் மட்டுமே இருக்கமுடியும். எல்லா கடல்கதைகளும் அப்படித்தான். இதுவும் அதே கதைதான். ஆனால் இது நம்ம கடல்.
ஜார்ஜ் சாமுவேல்