மதிப்பிற்குரிய திரு.ஜெயமோகன்,
எனக்கு மஹாபாரதம் படிக்க வேண்டும் என்ற எண்ணமே தங்களுடைய எழுத்துக்களைப் படிக்கப் படிக்கத்தான் ஏற்பட்டது. கும்பகோணப் பதிப்பைப் பற்றி எனக்குத் தெரிய வந்ததே சொல்புதிது குழுமம் வழியாகத்தான்.
தமிழில் மஹாபாரதம் படிக்க வேண்டும் என்று எத்தனையோ பேருக்கு ஆர்வம் உள்ளது. பெரும்பாலானவர்கள் ராஜாஜி எழுதிய வியாசர் விருந்துதான் முழு மஹாபாரதம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். கும்பகோணப் பதிப்பு தமிழர்களுக்குக் கிடைத்த பொக்கிஷம். தமிழிலும் சமஸ்கிருதத்திலும் நன்கு தேர்ந்த பாண்டித்துவம் பெற்ற பல்வேறு அறிஞர்களால் பலமுறை பரிசோதிக்கப்பட்டு திருத்தப்பட்டு வெளிவந்த ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த படைப்பு. அக்கால அறிஞர்களால் நன்கு பாராட்டப்பட்ட படைப்பு. இதற்கான ஆதாரங்களும் உள்ளன.
இக்காலத்தில் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் நன்கு தேர்ச்சி பெற்று எத்தனை பேர் இருக்கிறார்கள்? அப்படி இருந்தாலும் இந்தப் பணியைச் செய்ய வேண்டும் என்று யாருக்குத் தோன்றும்? அப்படி இருந்தாலும் யார் இதை ஒருங்கிணைக்கப் போகிறார்கள்?
இதிலுள்ள நடை ஓரளவு வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு பெரிய சவாலாக இருக்காது. பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு படிப்பதற்கு இதன் நடை ஒரு பெரிய சவாலும் அல்ல. நீண்ட சொற்றொடர்கள் இருந்தால் அது கடினமான நடை என்று சொல்லி புறக்கணித்து விடலாமா? மணிப்பிரவாளம் என்று சொல்லிவிடலாமா? பக்கத்திற்குத் தோராயமாக ஐந்து சமஸ்கிருதச் சொற்கள் இருக்கலாம். விட்டுவிட்டாலும் பொருள் புரிகிறது. சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்ட நூல்களைப் பார்த்திருக்கிறேன். உண்மையாலும் அவை அந்நியாகமாகவே தோன்றுகிறது. ஆனால் உண்மையில் இந்த நூல் அப்படிப்பட்டதல்ல. நன்றாக புரியும்படிதான் உள்ளது. ஆதலால் இந்த நூலைப் பற்றித் தெளிவு படுத்தும் தேவை உள்ளது.
காலத்திற்கேற்ப தமிழ் மொழியின் நடை மாறிக்கொண்டேதான் வருகிறது. அபிதான சிந்தாமணியில் வரும் நடை இப்போது உள்ள நடைக்கு அந்நியாமாகிவிட்டதுதானே? அதற்காக அபிதான சிந்தாமணியைப் புறக்கணிக்கலாமா? புரியாத நடை என்று ஒதுக்கி விடலாமா? வேறு ஒரு பதிப்பைக் கேட்கலாமா? அப்படிச் செய்தால் எத்தனை நூல்களுக்குச் செய்வது?
சங்க இலக்கியங்களுக்கும் இப்போது உள்ள நடைக்கும் எவ்வளவு பெரிய வேறுபாடு? ஆதலால் சங்க இலக்கியங்களைப் புறக்கணித்துவிடலாமா? செய்யுள் நடை வேறு. உரைநடை வேறு. உரைநடை ஓரளவு படிக்கப் படிக்கப் புரிந்துவிடும். விதிவிலக்காகச் சில கடினமான உரைநடைகளும் உண்டு. குறிப்பாகப் பரிமேலழகர் உரை. ஆனால் செய்யுள் நடையைப் புரிந்து கொள்வதற்கு தேர்ந்த ஆசானிடம் பயின்றிருக்க வேண்டும். நல்ல உரைநூல் வேண்டும்.
சேக்ஸ்பியரின் நூல்களை அதன் நடை மாறிவிட்டது என்று புறக்கணிக்கிறார்களா? பழகிக்கொண்டு எத்தனையோ பேர் இன்றும் படிக்கிறார்களே? ஏன் தமிழகத்தில் மட்டும் இந்த நிலை? ஏன் இந்த வதந்தி பரப்பப்படுகிறது? தமிழில் மஹாபாரதத்தைப் படிக்க இதுதான் சிறந்த ஒரே வழி என்றிருக்க அந்த வழியையும் ஏன் அடைக்கிறார்கள்? எழுத்தென்ற ஆயுதத்தை ஏனோ சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். தலைசிறந்த எழுத்தாளர்கள் என்று மதிக்கப்படும் சிலர் ஏன் இந்தச் செயலைச் செய்கிறார்கள்? இலக்கியப் பத்திரிகை என்று வரும் சிற்றிதழ்கள் ஏன் இந்த நூலை முன்னிலைப் படுத்தத் தயங்குகிறது?
மற்ற நூல்களைக் கவனத்தில் கொண்டு வரவில்லை என்றாலும் பரவாயில்லை. இது ஒரு மாபெரும் இதிகாசமாயிற்றே! இதைவிட வேறு பேரிலக்கியம் உலகத்தின் எந்த மூலையிலும் படைக்கப்படவில்லையே! அப்படி இருக்க மஹாபாரதம் கும்பகோணப் பதிப்பு தமிழர்களுக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம் ஆயிற்றே! இந்தப் பொக்கிஷம் யாருக்கும் கிடைக்காமலிருக்கும்படி செய்துவிட்டோமே! இதற்காக எல்லோரும் குரல் கொடுக்கலாமே! புரட்சி செய்ய வேண்டாம். எல்லோரும் ஆளுக்கொரு சிறு கல் எறிந்தாலே போதுமே! தன்னுடைய பனுவல் போற்றுதும் நூலில் நாஞ்சில் நாடன் எத்தனையே அரிய நூல்கள் பதிப்பில் இல்லை என்று கூறுகிறாரே? சும்மா கவலைப் பட்டால் போதுமா? அதற்கான முயற்சியை எடுக்க வேண்டாமா? அல்லது பங்களிப்பையாவது கொடுக்கலாமே?
மக்களின் இந்த மனநிலை நீடித்தால் தாங்கள் எழுதிய விஷ்ணுபுரம் நடை மாறிவிட்டது படிக்கக் கடினமானது என்று ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு புறக்கணித்தும் விடலாம். அச்சில் இல்லாமலும் செய்து விடலாம். இதை ஒரு மக்கள் மத்தியில் புகழ் பெற்ற ஒரு எழுத்தாளர் எளிதாகச் செய்து விடலாம்.
உங்கள்மீது எனக்கு ஒரு நல்ல மரியாதை எப்போதும் உள்ளது. ஏனென்றால் உங்களிடம் ஒரு உண்மை எப்போதும் இருக்கிறது. ஓர் உண்மையான அற உணர்ச்சி உள்ளது. உங்களது வாசகர்களை நீங்கள் மூளைச்சலவை ஒரு போதும் செய்வதில்லை. அதனால் இந்த நீண்ட மின்னஞ்சல். தவறிருந்தால் மன்னிக்கவும். பிழையிருந்தால் கூறுங்கள். யோசித்துப் பார்க்கிறேன்.
அன்புள்ள
பா.மாரியப்பன்