கடிதங்கள்

திரு ஜெ அவர்களுக்கு

அய்யா நான் இரண்டு வருடங்களாக தங்களது தளத்தை வாசித்து வருகிறேன். இந்த இரண்டு வருடங்களில் தமிழ், மதம் மற்றும் இந்தியா பற்றி நான் கற்றுக் கொண்டவை ஏராளம். தங்கள் புத்தகம் படிக்கும் பாக்கியம் இன்னும் அமையவில்லை, இந்த வருடம் கண்டிப்பாக தொ டங்கி விடுவேன்.

சமீபமாக தங்கள் பேச்சுக்கள் பல youtube இல் கேட்டு வருகிறேன். நேசமணி கல்லூரியில் தாங்கள் பேசியது அருமை. http://www.youtube.com/watch?v=8iF8Aa2oZrM. இப்பேச்சில் தாங்கள் கூறிய புத்தகத்தின் பெயர் அறிய அவா. ஒலிப்பதிவில் எடு படவில்லை.

எட்டு ஆண்டுகளுக்கு முன் தென் அமெரிக்காவில் பெரு நாட்டில் உள்ள இன்கா மக்களால் கட்டப்பட்ட தொன்மையான Machu Pichu வுக்கு சென்றேன். மூன்று நாட்கள் காட்டு வழி நடை பயணம். கம்பீரமான கட்டிடங்கள். பெரிய பெரிய கற்களால் கட்டப்பட்டவை.

இந்தக்கற்கள் அனைத்தையும் slope பயன் படுத்தி இழுத்தே சென்று கட்டி இருக்கிறார்கள். இந்த நகரம் 15 ஆம் நூற்றாண்டில் உருவானது. இராமாயணம் தசரதனின் சக்கரத்தில் தொடங்கிய கதை என்ற பாரம்பரியத்தில் வந்தவனுக்கு; அன்று எனக்கு மிகவும் ஆச்சரியம் மற்றும் புதிருமானது, இந்த மக்கள் 15 ஆம் நூற்றாண்டில் கூட சக்கரம் அறியவில்லை என்பது.

தங்களது பேச்சு எட்டு ஆண்டுகளுக்குப் பின் அந்தப் புதிருக்குஒரு விடை.

நன்றி

சதீஷ்

எழுத்து பிழைகள் மன்னிக்கவும், ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு பின் தமிழில் எழுதுகிறேன். முடிந்தால் அந்தப் பேச்சில் குறிப்பிட்ட புத்தகத்தின் பெயரை அனுப்பவும்.

https://www.youtube.com/watch?v=8iF8Aa2oZrM

அன்புள்ள சதீஷ்

நன்றி

நூலின் பெயர் Guns, Germs, and Steel அந்த உரையில் நான் டெஸ்மண்ட் மோரிஸின் The Naked Ape நூலைப்பற்றியும் சொல்லியிருந்தேன்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

நலமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன். அஜய் நவாரியா என்ற ஹிந்தி எழுத்தாளரின் ‘unclaimed terrain’ என்ற ஆறு சிறுகதைகள் அடங்கிய தொகுதி படித்து முடிக்கும் தருவாயில் இருக்கிறேன்.

ஆறு கதைகளையும் ஒரு வசதிக்காக தலித் இலக்கியம் என்று வகைப்படுத்துகிறேன். நான் எழுத வருவது வேறு. நான் படித்த ஐந்து கதைகளில் ‘Subcontinent’ and ‘Yes Sir’ படிக்கும் போது என்ற இரு கதைகளைப் படிக்கும் போது, குறிப்பாக Subcontinent, வணங்கானும், நூறு நாற்காலிகளும், குருதியும் அலைமோதிக்கொண்டே இருந்தன. அஜய் நவாரியாவின் இந்தத் தொகுப்பு நன்றாக, மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது. என்றாலும் உங்களுடைய கதைகள் கொடுத்த தாக்கம் விவரிக்க இயலாது. நூறு நாற்காலிகளும், குருதியும் தூக்கமிழக்க செய்பவை.

என் கேள்வி இது. நவாரியா ஹிந்தியில் எழுதுபவர், ஜாமியா மிலியாவில் ஹிந்தி துறையில் பணியாற்றுகிறார். இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பது University of Colorado வில் professor ஆக இருக்கும் Laura Breuk (Prof of Hindi Lit and South Asian Studies). வெளியிட்டிருப்பது நவயனா பதிப்பகம். மிக நேர்த்தியான வெளியீடு, எல்லா விதத்திலும். Rave reviews by leading papers.

அறம் வரிசைக் கதைகளில் சில கதைகளும் அடுத்து வந்த குருதி போன்ற கதைகளும் Pan Indian appeal உள்ளவைதானே. உங்களுக்கும் வாசகர்கள், தொடர்புகள் இருக்கின்றனவே. ஒரு விதமான ஆதங்கத்தில் எழுதுகிறேன். இதற்கு மேல் எழுத ஒன்றும் இல்லை. பதில் எழுதுங்கள்.

அன்பின்
மங்கை

அன்புள்ள மங்கை

தமிழில் இருந்து இயல்பாக ஆங்கிலத்திற்கு இன்று மொழியாக்கங்கள் நிகழ்வதில்லை. அமைப்புகளுடனும் பதிப்பு நிறுவனங்களுடனும் தொடர்புள்ள வலுவான மனிதர்கள் முன்முயற்சியினால் மட்டுமே சில மொழியாக்கங்கள் நிகழ்கின்றன. அவற்றுக்கு அரசியல் உட்பட பலகாரணங்கள் உள்ளன. பொதுவாக ஏதேனும் அரசியல் உள்ளடக்கமில்லாத நூல்கள் சரியான மொழியாக்கத்தைப் பெறுவதில்லை.

நான் அதற்கான முயற்சிகளில் ஈடுபட விரும்பவில்லை

ஜெ

முந்தைய கட்டுரைவாழ்தமிழ்!
அடுத்த கட்டுரைகோவை ஞானியின் இணையதளம்