தாத்தாவின் பெயர்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நேரம் இருப்பின் எனது இந்தக் கட்டுரை குறித்த உங்கள் கருத்துக்களை வேண்டுகிறேன்…

சமீபகாலமாக எனக்குத் தெரிந்த சிலர் அவர்களின் அடுத்த தலைமுறைகளுக்கு சூட்டும் பெயர்கள் சற்று அதிர்ச்சியை தந்த வண்ணம் உள்ளன. பாலின வித்தியாசமின்றி இந்தமுறை தமிழர்களிடையே மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்களைவிட தமிழர்களாகிய நமக்குத் தனிப்பட்ட குடும்பப்பெயர் என்று ஒன்று கிடையாது, நமது தகப்பனார் பெயரின் முதல் எழுத்தையோ அல்லது முழுப்பெயரையோ நாம் பயன்படுத்தி வருகிறோம். ஏனையோர் அவர்களின் சாதி மற்றும் அதன் உட்பிரிவுகளின் அடிப்படையில் குடும்பப் பெயர்களை சூட்டிக்கொள்வார்கள்.

பெயர் ஒரு மனிதனின் தனிப்பட்ட அடையாளம் மட்டுமின்றி அது அவன்/அவள் சார்ந்த சமூக, இன, மற்றும் மொழி இவற்றின் ஒட்டுமொத்த குறீயீடு ஆகும். அதோடல்லாமல் இம்மூன்றினையும் அவர்களது எதிர்வரும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து கடத்தும் ஒரு தொடர்நிகழ்வு.இந்தச் சங்கிலி இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலும் இதுவரை துண்டிக்கப்படவோ, இனி துண்டிக்கவோ சாத்தியமில்லை. ஆனால் தமிழ்நாட்டில் நாம் இதன் கடைசி இணையை அதற்கடுத்ததுடன் இணைந்துவிடாமல் இருக்கும்படி மிக கனகச்சிதமான பெயர்களை இட்டு வருகிறோம். இதுபோன்று ஒரு இனம் தன்னைத்தானே அழித்துக்கொண்ட ஒரு சுய இன அழிப்பு இப்புவியில் தமிழகத்தில் மட்டுமே சாத்தியம்.

இன்று நாம் தினம் சந்திக்கும் நபர்களில் [தமிழர்களில்] 99.999% பேருக்கு அவர்களின் தாத்தாவினுடைய தாத்தாவின் தாத்தாவிற்கு தாத்தா பெயர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம் அதற்கான போதிய ஆவணங்கள் நம்மிடம் கிடையாது. ஆனால் மற்ற மாநிலத்தவர்களுக்கு குறைந்தபட்சம் தாத்தாவினுடைய தாத்தாவின் தாத்தாவிற்கு தாத்தாவின் குடும்பப் பெயர் தெரியும். காரணம் அவர்கள் தங்கள் இனத்தின் எந்த ஒரு காலகட்டத்திலும் பெயர் வழங்கலின்வழியே தங்கள் அடையாளத்தை தொலைக்கவில்லை.

உதாரணத்திற்கு என் பெயர் மணிகண்டன். என் த/பெ கருப்பையன், என் முழுப்பெயரைக் கொண்டு இந்தியாவில் நான் எந்த மாநிலத்தவன் என்று எளிதில் அடையாளம் காணமுடியும். நான் எனது மகனிற்கு லோகேஷ் என்று பெயரிட்டால் அவனது முழுப்பெயரான லோகேஷ் மணிகண்டனின்படி அவனது அடையாளம் பாதி அழிந்து விட்டது. அதோடில்லாமல் அவன் மலையாளியாக அடையாளம் காண வாய்ப்புகள் அதிகம். இதுதான் நமது இன்றைய நிலை. ஆகப்பெரிய சோகம் இனிவரும் தலைமுறைகளுக்குத்தான். என் மகன் அவனது மகனுக்கு மிதுன் என்று பெயர் வைத்தால் என் பேரனின் முழுப்பெயரான மிதுன் லோகேஷ் எந்த இனத்தைச் சேர்ந்தவன் என்பது அமிதாப்பச்சனின் கொள்ளுப்பேரன் நடத்தும் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் பத்துகோடி ரூபாய்க்கான கடைசி கேள்வியாக கேட்கப்படலாம்.

உலகில் இதுவரை நடந்த, நடக்கும், நடக்க இருக்கும் போர்களின் கரு ஒரு இனம் தன்னையும் தன் தலைமுறைகளையும் அழிந்துவிடாமல் காக்கத்தான். ஆனால் நாமோ இதுபற்றிய சுயபிரக்ஞை கொஞ்சமும் இன்றி ஒரு இன அழிப்பில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.

மொழி மற்றும் இனப்பற்று, குறைந்தபட்ச தமிழின் புணர்ச்சி விதிகள் சார்ந்த அறிவு இவையிருந்தாலே நீங்கள் எதிர்பார்க்கும்படியான உங்கள் மத மற்றும் இத்யாதி நம்பிக்கைகளுக்குட்பட்டு மிக அருமையான தமிழ்ப்பெயர்களை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சூட்டி மகிழலாமே.

அன்புள்ள,
மணிகண்டன்

அன்புள்ள மணிகண்டன்,

மூதாதை பெயர்களை சூட்டிக்கொள்ளும் வழக்கம் உலகமெங்கும் இருந்தது, பெரும்பாலும் நீடிப்பது. ஆனால் அதை ஓர் நியதியாகக் கொள்ளமுடியுமா என்று தெரியவில்லை. ஏனென்றால் பிள்ளைகளுக்குப் பெயரிடுவதில் பெற்றோரின் கனவுகள் அனைத்தும் உள்ளன. நான் என் மகனுக்கு என் நாவலின் இலட்சியக் கதாபாத்திரத்தின் பெயரை வைத்தேன். என் மகளுக்கு என் குரு நித்யசைதன்ய யதியின் பெயரை.

ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த கனவே பெயர்களில் வெளிப்படுகிறது. நாற்பதுகளில் அரவிந்தன், நரேந்திரன், ஜவகர், மோகன்தாஸ், சுபாஷ்சந்திரன் போன்ற பெயர்களைப்போல. அறுபதுகளில் தூய தமிழ்ப்பெயர்களைப்போல.

அவற்றை ஒரு சடங்கைக் கொண்டு தடுக்க முடியாது.

ஜெ

முந்தைய கட்டுரைபுரியாதகதைகள் பற்றி….
அடுத்த கட்டுரைபுகைப்படம் கலையா? -ஏ.வி.மணிகண்டன்