அறம் ஒரு கடிதம்

அறம் விக்கி

அன்புள்ளஜெயமோகன்,

வணக்கம்.நான் மூர்த்தி.ஜெயமோகன் என்றால் எனக்குள் வேறு ஒரு படிமம் இருந்தது. வலைதளத்தில் நிறைய விமர்சிக்கப்படும், மற்ற எழுத்தாளர்களை வசைபாடும், ஒரு மனிதன் என்று. நான் ஒதுங்கியே இருந்தேன்.உங்களின் எழுத்துக்களின் வாசிப்பும் எனக்கு இருந்ததில்லை. இந்த நிலையில் எங்கள் நாடகக் குழுவில் இருக்கும் நண்பன் ஜெ.வெங்கட்ஸார் அறம் வாங்கிப் படிச்சிண்டு இருக்கேன். என்னவோ பண்றது ஸார் படிங்கோ. என்றான். கொடுத்தான் படித்தேன்.

இது விமர்சனம் இல்லை.எழுத நீங்கள் ஒரு இடைவெளி இல்லாக் காலம் தேர்ந்தெடுத்தது போல நான் இதனைப் படிப்பதற்கும் அப்படி ஒரு காலத்தை உருவாக்கிக்கொண்டேன். படித்துமுடித்தேன். இதன் சில பகுதிகளைப் படிக்கும்போது மஹாபாரதம் சன் டிவி படப்பிடிப்பிற்கு ஒரு காட்டுப்பகுதியில் வெட்டவெளியில் பசுமைக்கும் மலைக்கும் நடுவில் ஒரு பெருவெளியில் படிக்கவாய்த்த்து. இது சிறுகதையா நெடுங்கதையா நாவலா என்று என்னால் சொல்ல முடியவில்லை. இதை 385 பக்க நாவல் என்றும் சொல்லத்தோன்றுகிறது. ஒவ்வொரு தனிக்கதையும் தன் முடிவில் பிறிதொன்றின் தொடக்கத்தில் கண்ணுக்குத் தெரியாத மனத்துக்குத் தெரிந்த ஒரு தொடர்தலைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

மென்மையான பளபளப்பான தோலால் மூடித்தைக்கப்பட்ட மனிதனின் நிறத்தையும் மேடுபள்ளங்களையும் அழகென்று ஆராதித்து வியந்து மயங்கிப்போன எனக்கு இந்த மனிதப்பையின் தோலுரித்து சதையையும் ரத்தத்தையும் சீழையும் மலத்தையும் மூத்திரத்தையும் காட்டி அதன் நடுவில் அல்லது முடிவில் அந்த உடல்கள் தாங்கும் மனத்தையும் காட்டியது. இந்த எழுத்துக்கள் என்னை சில மாறுபட்ட முரணான சிந்தனைகளுக்கும் அனுபவத்திற்கும் உட்படுத்தியது. உங்களோடு நானும் சேற்றிலும் சகதியிலும் இறங்கினேன். முதலில் அருவருப்பு, பிறகு எந்த முயற்சிக்கும் ஒரு பலன் இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.

என் கையில் ஒரு அழகான செந்தாமரையைக் கொடுத்திருக்கிறீர்கள். கடையில் விலைக்கு வாங்கியதில்லை இது. யாருக்கும் அணிவிப்பதற்கும் இல்லை. என் முயற்சியில் எனக்குக் கிடைத்தது. அழகாக இதழ் விரித்த இந்த செந்தாமரை என் கையில் இருப்பது போலவே மனம் இந்த சேற்றின் குழைவை உலர்ந்த இழுப்பை மறக்கமுடியாமல் இருக்கிறது. பலாப்பழத்தை என் முன்வைத்தீர்கள் மு்ள் சதையைத் தாண்டி யானை டாக்டர் யானைக்குப் பண்ணிய போஸ்ட்மார்ட்டம் போல தடிமனான தோலைப் பிரித்தேன். சடை நார்களின் பிசுபிசுப்புக்கு உள்ளே இருக்கும் சுளையை சுவைத்தேன். நாவில் சுவை இருந்தும் மனம் இன்னும் அந்த பிசுபிசுப்பை நீக்கவில்லை. காட்டில் பூத்த ரோஜாவைப் பறிக்கவைத்தீர்கள். என் கண்முன்னே தெரிந்த ரோஜா என் கைக்கு வருவதற்குள் கையில் முள்ளின் கீறல்.மென்மையான ரோஜாவை முகர்கிற நான் முள்ளின் கீறல் உடலில் தந்த வலியை உணர்கிறேன்.எனினும் ரோஜாவும் வலியும் என்னுடன். பசுமை போர்த்திய மலையின் உயரத்தின் வசீகரம் என்னை மலையேறச் சொன்னது. பசுமைமுள் என்றும் பாறை கடினம் என்றும் வழுக்குதல் அதன் இயல்பென்றும் ஏறும்போது உணர்ந்தேன். உயரம் போகப்போக எனக்குப் பார்வைமாறியது. எட்டாத உயரத்தை எட்டிப்பிடித்த களிப்பில் முகட்டில் நின்று இதுவரை நான் கண்டிராத காட்சியைக் கண்டேன். எல்லாம் சமமாய், எல்லாவற்றிற்கும் இடையில் உள்ள பேதம் குறைவாய் எல்லாம் அருகருகாய், தொலைவில் சிறியதாய் வானக் கூரையின் அடியில் ஒரு குவியலாய்க் காண்கிற உன்னதம் பரவசப்படுத்தியது. ஆனால் மலையேற்றம் கால்களில் தசையில் பிடிப்பும் காற்றுவாங்க மூச்சிரைப்பும் மறுபடி குவியலில் ஒரு துகளாய் இணையும் நிர்ப்பந்தமும் உணர்ந்து கீழேவந்தேன். படித்துமுடித்தவுடன் ஆஸ்பத்திரி ரத்தம் வலி சீழ் ரணம்தான் என் மனதில்.

உங்கள் சிறுவயதில் நீங்கள் பார்த்த அல்லது வாழ்ந்த வாழ்க்கை இந்த அனுபவங்களைத் தந்திருக்கும்.உங்கள் வாசிப்பும் இந்த அனுபவத்தை எழுத்தாக மாற்றும் பணியில் உங்களுக்கு உதவியிருக்கிறது. ஒரு தொடர்சிந்தனையின் ஓட்டத்தில் இந்தக் கதைகள் உங்களிடமிருந்து வெளிவந்திருக்கின்றன. நானும் அதேமனநிலையில் அவைகளைப்படித்து முடித்த மகிழ்வில் அல்லது நெருக்கடியில் தளர்வில் இந்தக் கடிதம் எழுதுகிறேன். இது பதில் பெறும் கடிதம் இல்லை. உங்கள் படைப்பிற்கு இது பதில்.

வலி என்பது துன்பமாகவும்,சில இடங்களில் வலிமையும் வலி என்றே ஆகிறது. வலியை வலிமையாகக் கையாண்டிருக்கிறீர்கள். உங்கள் வாசிப்பில் கசிந்தவையாக தாயார்பாதம் தெரிகிறது. ஜானகிராமன் படைப்பான ரங்கண்ணாவும், காவிரியும் தம்புராவும் மரணமும் அங்கு காணமுடிகிறது. வேறிடத்தில் ஜானகிராமனே பாத்திரமானதுபோல் இருந்தார். (ராமன்பாலுமயில்கழுத்தில்). அங்கும் சங்கீதம் இருந்த்து. நடனமாது பொல்லாத கட்டைக்குரல் மிகநுணுக்கமான உருவெளித்தோற்றம் ஆண்களை அடக்கியாள நினைக்கும் பெண்மையின் யத்தன்ங்கள் அழகை ரஸித்துமாயப் பிறந்தவன்.

உங்கள் சமூகக் கவலை நன்றாக வெளிப்படுகிறது. முழுவதுமாய் மாற்றமுடியவில்லையே என்கிற ஆற்றாமை தெரிகிறது. காடுகளை மனிதன் ரஸிக்கக் கற்றுக்கொள்ளவில்லை,அங்கு வாழும் எண்ணற்ற ஜீவன்களை மதிக்கக் கற்றுக்கொள்ளவில்லை. காட்டின் அமைதியைக் கெடுக்கும் வகையில் சிரிக்கிறான், கூச்சலிடுகிறான், குடிக்கிறான். குடித்துவிட்டு அவன் போடும் பீர்பாட்டில் சிதிலங்கள் யானைக்கு யமனாவதைப் படிக்கும்போது இதைப் படித்தாவது அந்த மனிதமிருகங்கள் திருந்தமாட்டார்களா என்று ஒரு ஏக்கம் பிறக்கிறது.

வறுமையின் வலி, அறியாமையின் வலி, அதிகாரத்தின் வலி, பசியின் வலி, அறிவின்வலி மதங்களின் தொண்டு, நிர்ப்பந்தம் அலட்சியம் எல்லாம் உணந்தேன். முரட்டு மனிதர்களுக்குள் கனிவு இருப்பது பல இடங்களில் சுட்டிக்காட்டப்படுகிறது. மத நல்லிணக்கம் குருவாயூர் கண்ணனை பாதிரியார் மழலை இழந்த பெண்ணிடம் தரும் போதும் வயிற்றுக்காக நான் பைபிள் படிக்கிற என்னால் நன்றி கூறமுடிகிறது என்னும் அந்த பையன் இயேசுவை விசுவாசிக்கவில்லை என்கிற பேருண்மை என்னை ஆக்ரமித்தது.

நிஜமனிதர்கள் உலவவிட்டிருக்கிற பல கதைகளில் எனக்கு அவர்களின் உரையாடல்கள் அவர்கள் சொன்னதா அல்லது நீங்கள் எழுதியதா என்று ஒரு குழப்பம் இருக்கிறது. பேராசிரியர், பூமேடை, ராமன் கோமல் போன்றவர்களின் நிஜவார்த்தைகளா அல்லது உங்கள் வரைவுகளா என்பது வேறுபடுத்த முடியாமல் இருக்கிறது.

உலகம்யாவையும் ஓருலகம் என்ற ஒரு அமைப்பை உருவாக்க வேதாத்ரிமஹரிஷியும் முனைந்தார் என்பதை அவரின் ஒரு நாடகம் புதுமைப்படுத்த நான் பணித்தபோது அவர்கள் கொடுத்த நூல்களின் வாயில் அறிந்தேன். நடராஜகுரு நித்யானந்தருமாக நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.

வணங்கான் கதையில் மகன் சொல்லும் கதையில் அவன் பிறப்பதற்கு முன் அவன் அப்பா கறுத்தான் வாழ்ந்த வாழ்க்கை அவர் நோக்கில் வருவது எனக்கு ஒரு முரண் போலத்தெரிகிறது. தெரியவில்லை. புது யுக்தியோ என்னவோ.

மொத்ததில் ஜெயமோகன் இந்த படைப்பு படித்தபின் என்னவோ செய்கிறது. எதையாவது செய்யவேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது. பலதெறிப்புக்களை என்னால் உதாரணம் சொல்லிப்பாரட்டலாம். அவை என்னோடு இருக்கட்டும். வாழ்த்துக்கள்.

பூவராகமூர்த்தி

முந்தைய கட்டுரைகூடங்குளம் மின்சாரவெள்ளத்தில் குமரி
அடுத்த கட்டுரைஅண்டைவீட்டுக்காரர்