பூ- கடிதங்கள்

ஆசிரியருக்கு,

வணக்கம். போகனை தொடர்ந்து கூகிள் பிளசில் படித்து வருகின்றேன்.

நல்ல மொழி. பெண்ணில் தெய்வம் காணும் கதை. போகன் மனிதர்களை சித்தரிப்பதில் நுட்பம் காட்டுபவர், இந்த க்கதையிலும் ஒவ்வொரு பாத்திரமும் தனி இயல்போடு இருக்கின்றது. போகன் விரிவான பின்புலக் காட்சிகளின் நடுவே கதை மொழியை சொல்கிறார்.

நாகலிங்க பூ, கொன்றை பூ , நிஷாகாந்தி பூ போன்றவை ஏதேனும் குறியீடுகளா என தெரியவில்லை.

கனவுகளில் இருந்து எழுந்த உக்கிரமும் தோய்ந்த குல தெய்வங்கள் குறித்து அ.கா பெருமாள் எழுதியது நினைவுக்கு வந்தது. போகனும் தான் உபாசனை செய்யும் ஒரு தெய்வத்தைதான் எழுத்தில் தந்து இருக்கின்றார்.

நிறைய வரிகள் வாசித்த பின்னும் கதையினுள் இழுத்து பிடிக்கின்றன.

/அவன்கிட்டே அவ பின்னால பாண்டியனுக்கும் ஆசாரிக்கமார்க்கும் மதுரைக்கும் காமிச்ச முகத்தை கோவலன்கிட்ட ஒரு நொடி காமிச்சிருந்தாலும் அவன் உயிர் தரிச்சு இருந்திருப்பானா ? எல்லா ஸ்திரீகமார்க்கும் உள்ளே உள்ள முகம் அது அந்த முகத்தை அவ ஒருபோதும் தனக்கு பிரியமானவங்களுக்குக் காமிக்க மாட்டா/

/*இவனுக்கு எப்படி குணமாகக் கூடும் ? விசுவாசம் வேணும் விசுவாசக் குறைவு பாவம் என்று வைத்தியர் மகன் சொன்னது நினைவு வந்தது
ஒருகணம் அவன் சீக்கிரமே இறந்துவிட்டால் நல்லது என்று தீவிரமாக தோன்றியது.நான் அந்த எண்ணத்தின் சுயநலத்தை கொடூரத்தை எண்ணித் திடுக்கிட்டேன் மனம் கசந்தது*/

/எவ்வளவு நிம்மதியான நிதானமான வாழ்க்கை இவர்களுடையது.பூசாரிகளின் வாழ்க்கை.தொழுபவர்களின் வாழ்க்கை.அவர்கள் தொழுகிற தெய்வங்களின் வாழ்க்கை எவ்வளவு தனிமையானது உக்கிரமானது அலைக்கழிப்புக்கு உள்ளானது என்று அவர்கள் அறிவார்களா ?/

/*நான் இறங்கி இருபது வருடங்களுக்கு முன்பு எனது அம்மை தீயிட்டு எரிந்து போன வீட்டின் முன்பு நின்றேன்
அது ஒரு தூசு துடைத்த ஓவியம் போல எழுந்துவந்தது
மெல்ல ஒரு கருப்பு வெளுப்பு புகைப் படத்தில் வண்ணங்கள் சேர்வது போல நினைவுகள் பொருந்திக் கொண்டு துலங்கின*/

/ஏனோ அம்மையின் அதீத அன்பு என்னை நாணம் கொள்ளவைத்தது .மற்ற பிள்ளைகள் என்னை ஒரு ஆணாய் மதிக்க மாட்டார்கள் என்று நினைத்தேன் அன்பை வெளிப்படுத்துவது ஒரு பெண்டுகள் காரியம் என்று ஏனோ நினைத்தேன்.ரொம்ப அன்பில் தோய்கிறவன் பெண்ணாகி விடுவான்./

/.விஜய் அழுவது கூட சிரமப்பட்டுத்தான் .ஒரு மாதிரி மயில் அகவுவது போல கூவி அழுவான்.பல நேரங்களில் மூச்சுத் திணறி வெறுமனே கண்ணீரும் எச்சிலும் மட்டுமே வழிந்து கொண்டிருக்கும்.மூவரும் விஷம் தின்று இறந்து போகலாம் என்றுகூட லலிதா சொன்னாள்/

அன்புடன்
நிர்மல்

அன்புள்ள ஜெயமோகன்,

புறப்பாடு ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து மீள்வதற்கு முன்பே புதியவர்களின் கதைகள் வந்திருக்கிறது. அருமை.

பூ படிக்கும்போது பீதியும் ஏக்கமும் சேர்ந்து அப்படியே கவ்விக் கொள்கிறது.

புறப்பாடு இரண்டாம் பகுதியில் தொடக்கத்தில் வரும் ஆதிகேசவன் கோவில் மற்றும் “பின் நின்றவர்” பதிவிலிருந்து அப்படியே எழுந்து பயணம் செல்வது போல் இருந்தது பூ.

முக்கியமாக கிருஷ்ணனின் மகன் விஜயின் ஊனம் என்ன அவன் படும் பாடு என்ன என்பதை விவரிக்காமலே அது மனதில் ஏற்படுத்தும் வலி அபாரம்.

அப்படியே அந்த இடங்களுக்கு நம்மை எடுத்துச் செல்கிறார் எழுத்தாளர். “காடு” நாவலில் வரும் யட்சி (அல்லது நீலி) மீண்டும் கனவில் நேற்று வந்தாள்.

மிகவும் உணர்ச்சிகரமான படைப்பு.

உங்கள் பல படைப்புகளின் மூலம் தென் தமிழகத்தை கனவில் வரித்துக் கொண்டேன். இந்தக் கதை அந்தக் கனவின் நீட்சியாக உள்ளது.

மீண்டும் புதியவர்களின் படைப்பை பதிப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் நன்றி.

அன்புடன்
ஸ்ரீதர்

முந்தைய கட்டுரை5. கதாபாத்திரங்களின் பிரதேசம் – துரோணா
அடுத்த கட்டுரைரா. கிரிதரன்