புதியவர்களின் இருகதைகள் – கடிதம்

ஜெ

போகன் எழுதிய பூ வாசித்தேன். முதலில் நான் பார்ப்பது அது நல்ல புனைவா இல்லையா என்பதைத்தான். பூ நல்ல புனைவு. வாழ்க்கையை தீவிரமாக அனுபவிக்க வைப்பதுதான் நல்ல புனைவு இல்லையா? போகனின் கதை அந்தவகையிலே நான் சமீபத்தில் வாசித்த மிகச்சிறந்த படைப்பு. மிகமுக்கியமான அறிமுகம் அவர். வாழ்த்துக்கள்.

கதைமுழுக்க வரக்கூடிய உறவின் சிடுக்குகள்தான் இந்தக்கதையை ஆழமான கதையாக மாற்றுகின்றன. முதலில் வாசிக்கையில் ஒரு எளிய பழிபாவக் கதையாகத்தான் தெரிகிறது. ஆனால் இரண்டு அம்சங்களைக் கருத்தில்கொள்ளவேண்டும். கதைசொல்லியின் அம்மாவின் அதே குணச்சித்திரம் எப்படி அவன் பெரியப்பாவின் மகளிடம் வந்தது என்று.

என்னுடைய வாசிப்பில் அது அந்தப்பெரியப்பாவிடமிருந்தே வந்தது. அவரது குற்றவுணர்ச்சிதான் அவருக்குள் அந்தச் செத்துப்போன பெண்ணின் குணச்சித்திரமாக ஆழத்திலே பதிந்திருக்கிறது. அவர் வழியாக அது மீண்டும் பிறந்து அவருக்கு முன்னால் வந்து நின்றது. அது அவரே எதிர்பார்த்ததுதான். அல்லது அவரே தேடிய முக்திதான்.

கதையின் இன்னொரு கோணம் ஒரு பாவத்தின் பலன் இரண்டு முனைகொண்டு வந்து நிற்பது. கொல்லப்பட்டவள் பேயாக வந்து நிற்கிறாள். அடுத்த தலைமுறையாகவும் வந்து நிற்கிறாள். ஒன்று மாயம் ஒன்று யதார்த்தம். இரண்டுமே வந்து நிற்கிறது.

இந்தவகையான கதையில் பெரிய புதுமை எதிர்பார்க்கமுடியாது. improvization மட்டுமே இதிலே உள்ள கலையாக இருக்கமுடியும். பலவகையிலே எழுதப்பட்ட கதைதான். கிட்டத்தட்ட இதேவகையான சில கதைகளை லா.ச.ரா எழுதியிருக்கிறார். இந்தமாதிரிக் கதைகளுடைய வலிமை என்னவென்றால் சொல்லப்படும் கதைக்கு புத்திக்குத்தோதான விளக்கம் கொடுப்பதும் அதேசமயம் அதன் பயங்கரமும் மர்மமும் கலையாமல் இருப்பதும்தான். அதை போகன் சாதித்திருக்கிறார்.

அதற்கும் மேலே சென்றிருக்கலாமா என்றால் சென்றிருக்கலாம். இந்தக்கதை இப்போது உணர்ச்சிகரமானதாக இருக்கிறது. ஒரு மித்திற்குரிய அழகுடன் இருக்கிறது. மித்துகளுக்கு பயங்கரத்துடன் கவித்துவமும் இருக்கும். அது இதிலே குறைகிறது. கவித்துவம் என்பது சிந்திக்கும்போது வளர்ந்துகொண்டே போகிற குறியீட்டு அர்த்தத்தில் இருந்து வரக்கூடியது.

இந்த அளவிலேயே முக்கியமான கதை.

*

கோபாலகிருஷ்ணன் ஜெயன் எழுதிய அப்பாவின் குரல் கதை ஒரு உணர்ச்சிகரமான இடத்தை நன்றாகச் சொல்கிறது. பாராட்டுக்குரிய கதை. அந்த வசைபாடும் நாக்கு ஒரு பண்பாட்டுப்பாரம்பரியம் என்று அவன் உணரக்கூடிய இடம், அதிலிருந்து அறுத்துக்கொள்வது வலிமையாக உள்ளது. அதாவது அது அப்பாவின் நாக்கு அல்ல, அவனுடைய நாக்கேதான்.

ஆனால் நேரடியாக கதை உள்ளது. வேறு ஒருதளத்துக்கு கதை சென்றிருக்கலாம். நாக்கை ஏதேதோ உருவகங்களாக ஆக்கியிருக்கலாம். நாக்கை அறுப்பது வலிமையாக இருக்கும் அளவுக்கு கவித்துவமாக இல்லை.

இருகதைகளுமே சிறப்பானவை. இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.

சண்முகம்

முந்தைய கட்டுரைதுரோணா
அடுத்த கட்டுரைகடலாழம் – கடிதங்கள்