10. கடைசிக் கண் – விஜய் சூரியன்

[மீண்டும் புதியவர்களின் கதைகள்]

கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை, அவசரப்பிரிவு. அப்பாவை ஆம்புலன்சை விட்டு இறக்கி உள்ளே நுழைந்ததும் சட்டென்று நுரையீரலை அடைக்கும் வாசம். உள்ளே சென்று அவரை ஒரு கட்டிலில் இருத்திய பின் சுற்றும் முற்றும் பார்த்தேன். கிட்டத்தட்ட பதினைந்து படுக்கைகள். அனைத்திலும் ஆட்கள். அய்யோ அம்மா என்ற முனகல்களும் இனம் புரியா ஈனக்குரல்களும்.. பக்கத்து பெட்டில் ஒரு உருவம் உடையை வைத்து பெண் என்று மட்டும் தெரிந்தது. முழுவதும் வெந்து போய் கிரில்ட் சிக்கன் போல சற்றும் அனுமானிக்க முடியாத முகம். தீக்குளித்து வந்தவளாம். அவள் கதறல் என்ன மொழி?

அடுத்து இடுப்புக்கு கீழே ஒரு காலில் சதையே இல்லாமல் வெறும் எலும்பை கொண்ட ஒரு இளைஞன் திறந்தவாயுடன் எவ்வித சப்தமும் இன்றி தூங்கிக் கொண்டு இருந்தான். ஐந்து அல்லது ஆறு வயது குழந்தையின் காலை பற்றியபடி வாயில் கோழையுடன் எங்கோ வெறித்தபடி கசங்கிக் கிடந்த ஒருத்தி.

என்னுள் எதோ நிகழ சட் என ஒரு குரல் ‘யாருப்பா இந்தா ஆளுடன் வந்தது?’

திரும்பி பார்க்க ஒரு அம்பது வயது மதிக்கத்தக்க நர்ஸ்.

‘நாந்தாங்க ‘

‘வா டாக்டர் கூப்புடார் ‘

சென்றேன் . என் வயது ஒத்த இளைஞன் ‘என்னப்பா பிரச்னை?’

நான் என் தந்தை கடந்த சில மாதமாய் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கோப்பை நீட்டினேன். அதி மேதாவித்தனத்துடன் அதை அவர் புரட்ட, சட்டென உள்ளே புகுந்த கோட்டு அணிந்த பெண் ஒருத்தி (டாக்டர்?) ஏதோ சொல்ல வெடித்துச் சிரித்த அவர் சட் என என்னை நோக்கி சீரியசான முகத்துடன் ‘அங்கே நில்லு கூப்புடுறேன் ‘

அந்த சின்ன டேபுளை விலகி சற்று தூரத்தில் போய் திரும்பி என் தந்தையை நோக்கினேன். அந்த தீக்குளித்த பெண் பெரும் கேவலை எழுப்பினாள். அருகே ஓடிய நர்சு ஒருத்தி அருகே சென்று அவளைத் தொடாமல் நோக்கி திரும்பி ‘முடிஞ்சிச்சு’ என்றாள்.

எதுவும் புரியாமல் நின்றேன் .பின்னால் டாக்டர் குரல் கேட்க அருகே சென்றேன் ,’ என்ன பிரச்சினை ?’

‘MRI ஸ்கேன் எடுக்க சொன்னாங்க. டாக்டர் லெட்டர் இது உள்ள இருக்கு.

‘சரி இங்க நாலு block தள்ளி போ அங்க கேன்சர் வார்ட் இருக்கும் அங்க டாக்டர் காத்தவராயன்னு இருப்பார் அவருகிட்ட இந்த ஃபைல காட்டு’

‘சரி சார் ‘

என் அப்பாவின் ஓசையைக் கேட்டு அவர் அருகே ஓடினேன். நர்சும் அவரும் குரைத்துக்கொண்டு இருந்தனர் .

’என்னாச்சு ..என்னாச்சு ..’

’இந்தாள இப்ப வெளிய அனுப்புலேனா இப்ப என் பேரமாத்திக்கிறேன்’

அப்பாவை நோக்கி “என்னப்பா?’ என்றேன்.

எதிர்ப்புறம் கழுத்தைத் திருப்பி ‘மயிரெ போச்சுன்னு விட்டுட்டுப் போறானுங்க மைரான்டிங்க தண்ணி கொடுக்கக் கூட நாதியில்ல எட்டி மொஞ்சிமேல ஒதைச்சி மொகறகட்டிய திருப்பினா எல்லாம் சரியாயிடும் ‘ என்றார் அப்பா.

பேசாமல் அருகில் இருந்த கூடையில் இருந்து தண்ணி பாட்டிலை எடுத்து அவர் வாய் அருகே நீட்டினேன்.முகத்தைத் திருப்பிக்கொண்டார். எனக்குத் தெரியும் இப்போது கோபத்தில் நான் கொடுக்கும் தண்ணீரை குடிக்கமாட்டார்.

‘ஏம்பா இப்ப டாக்டர கூப்புடுரையா இல்ல கிளம்பி வீட்டுக்கு போகட்டா மனுஷனுக்கு வலி உசுருபோகுது”

அவருக்கு தனியார் மருத்துவமனையில் இருக்கும் நினைப்பு. அங்கேயே இவரைப் பார்த்தால் பலர் அலறி ஓடுவர். வாசல் அருகே ஏதோ களேபரம் கேட்டு திரும்ப ஏதோ விபத்தில் சிக்கிய சிலரை ரத்தம் தோய்ந்த உடல்களுடன் கொண்டுவந்தனர். அந்தச் சிறுமியும், தீக்குளித்த பெண்ணும் இருந்த படுக்கையிலும் இன்னுமொரு படுக்கையிலும் இட்டபின் மீதம் இருந்த இரண்டுபேரை பாய் விரித்து தரையில் கிடத்தினர். அங்கு கேட்ட அலறல்களைக் கேட்டு அப்பா கண்களை மூடி படுத்துக்கொண்டார்.

கும்பலாய் ஒரு டாக்டர் குழு உள்ளே நுழைய அந்த இடமே பரபரப்பானது. ’வெளிய போங்க… வெளிய போங்க’ நர்சுகள் விரட்டினர்.

அப்பாவிடம் சொல்லாமல் டாக்டரை பார்க்கச் செல்வது எப்படி என விழித்துக்கொண்டு மூலையில் நின்றேன். டாக்டர்கள் பரிசோதிக்க ஆரம்பித்து இரண்டு பேரைக் கீழே கொண்டுவந்து கிடத்திக் கீழே இருந்த ஒருவரைக் கட்டிலுக்கு கொண்டு சென்றனர்.

இறந்துவிட்டனர் போலும் என நினைத்து அவர்களைப் பார்க்க ஒருவரின் விழிகள் மட்டும் சுற்றக்கண்டேன். அதிர்ச்சியாய் உற்று நோக்க உண்மைதான் காதோரம் அனைத்தும் ரத்தத்தால் நனைத்திருக்க நெற்றியின் மேல்பரப்பே இல்லை பம்பரமாய் சுற்றும் விழிகள் சில வினாடிகள் கழித்து அப்படியே நின்றன.

தவிப்பாய் வெளியே வந்து நின்றேன். அவசர சிகிச்சை வார்டை ஒட்டியபடி இருந்த மார்ச்சுவரியை வெறித்துப் பார்த்தேன், என் எட்டு வயதில் என் அக்கா, தங்கச்சியை மூட்டையாய் கட்டி குதிரை வண்டியில் கொண்டு சென்றது நினைவில் வர நெஞ்சு கனத்தது. ஸ்கூட்டரை நிறுத்தியபடி அருள் வந்தான். ஆறுதல்தேடும் மனோநிலையுடன் அவனிடம் போனேன்.

அருள் என் அம்மாவின் தம்பி மகன். அதற்கு மேல் என் ஒரே உற்ற நண்பன். 1-ஆம் வகுப்புமுதல் இப்போது MA இறுதி ஆண்டு வரை ஒன்றாய்ப் படிக்கிறோம்.

’ஏண்டா என்னங்கறார் மாமா?’

“எட்டி ஓதச்சி மூஞ்சிய பேப்பங்கிறார்”.

சத்தம் இல்லாமல் சிரித்தான். என் அப்பாவுக்கு இடுப்புக்குக் கீழே எந்த உணர்ச்சியும் இல்லை. கால்கள் மரத்து சில நாள் ஆச்சு. மலமும், மூத்திரமும் போவது அவருக்கே தெரியாது.

‘நல்ல வேள, வந்தடா. டாக்டர பாக்க போகணும். இங்கயே இருந்து பாத்துக்கோ நானு போயிட்டு வந்தறேன்’

அப்போது என் பெரிய மாமாவும் வந்தார் .அம்மாவின் அண்ணன் .

‘ஏ, மாப்ள என்னங்கராங்க?’ அவரை முந்திக்கொண்டு வந்தது மது வாசம்.

இவரு வேறயா என பெருமூச்சு வந்தது . ’டாக்டர போய் பாக்கோணும்’ என்றேன்.

‘இரு, நான் ஒரு எட்டு உள்ளபோய் பாத்துட்டு என்ன ஏதுன்னு கேட்டுட்டு வந்தறேன்’’

‘ இரு மாமா உள்ள டாக்டருங்க இருக்காங்க”

‘டாக்டருங்க உள்ளேங்கற, பின்ன நீ யாரைப் பாக்கப் போற’

‘சும்மா இரு பெரிப்பா’அருள் அதட்டினான்.

‘சரி இரு வந்தறேன் ‘ என நான் கிளம்ப, அருள் அவரைக் கூட்டிப் போகச்சொல்லி கண்ணாலே மிரட்டினான். அதுவும் சரிதான். இவர் உள்ளே நுழைந்தால் பாடு பந்தல் ஆகிவிடும்.

‘வா மாமா” நான்கு எட்டு சென்றபின் திரும்பி ‘ டே அவருக்குக் கொஞ்சம் தண்ணி கொடுத்துட்டு வந்துரு ‘ என்றேன்.

’என்ன விசயம்?’ என கேட்ட வார்ட் பாயிடம் ”IC இல பாக்கச்சொன்னாங்க” என்றேன்.

“ரௌண்ட்ஸ் போயிருக்கார் வருவார் இருங்க” என்றார்.

மாமா ‘ஆமா இவனுக எங்க வேலைபார்க்கப் போறானுக அவனுக கிளினிக்க பாக்கவே பொழுது சரியாருக்கும் ‘ என்றார். வார்ட்பாய் முறைக்க ‘சும்மா வாங்க ‘ என்று அழைத்துப் போய் அருகில் இருந்த திட்டில் உட்கார்ந்தோம்.

‘எல்லாம் உன்னை சொல்லணும். உங்கப்பா எப்படிப்பட்ட மனுஷன்? இங்க கொண்டு வரலாமா?’

‘பொழப்புக்கு இருந்த லாரிகள வித்தாச்சு. நகையெல்லாம் போச்சு, தெரிஞ்சவங்க அத்தனை பேருகிட்டயும் கடன் வாங்கியாச்சு. இனி எங்க KG ல போயா சேர்க்க முடியும் அட போ மாமா ‘

’உனக்கு என்ன தெரியும்? அந்தக் காலத்திலேயே பெரிய கிளப்பு கோயம்புத்தூர்ல. அத்தன பெரியமனுசனும் சீட்டாட இங்கதான், பெரிய பெரிய சில்வர் டப்பால வாட்ச்சு, செய்னு,மோதரம், பணம்னு குவிஞ்சிகிடக்கும். உக்கப்பன்கிட்ட வாங்கி திங்கவே எத்தனபேர் சுத்திட்டே இருப்பானுக தெரியுமா? என்ன குடிச்ச பின்னாடி மனுஷனுக்கு கோபம் வந்தா மனுசனாவே இருக்கமாட்டார், அவருக்கு பயம்னா என்னன்னே தெரியாது, அப்படிதான் ஒருதடவ ஒரு சப்இன்ஸ்பெக்டர் உள்ளபுகுந்து உங்கப்பன அடிக்க சட்டுனு அருவாள எடுத்து அவன் கைய வெட்டிபுட்டார் . அதிலேயே பாதி சொத்து போச்சு”

‘உங்கம்மாவுக்கும் உங்கப்பனுக்கும் எப்பவுமே சண்டைதான், ஒரு நாள் உன் கூடப்பொறந்தவளுகளை கூட்டிட்டுபோய் நீலிக்கோணம்பாளையம் கல்லுகுழில விழுந்தாடா. உங்கம்மா மட்டும் மிச்சம். அந்தக் கேசுல மொத்தமும் போச்சு, உங்கப்பா வெளிய வந்ததே பெருசு ம்ம்’, மாமா இறங்கி மரத்தடி சென்று சிகரட்டை பற்றவைத்தார்.

எனக்கும் அந்த நினைப்பு வந்தது. நான் மூணாம் வகுப்பு, என் அக்கா ஏழாம் வகுப்பு தங்கச்சி ரெண்டு. ஒரு நாள் கொல்லைப்புறம் பட்டத்தை நூலில் கட்டி விளையாடிக் கொண்டு இருக்கையில் அழுதபடி அம்மா வந்தார். தம்பி எங்க கூட வர்றயா ?

‘எங்கமா?

‘கண்காணாத இடத்துக்கு ‘

எப்போது என் அம்மா அழுதாலும் அவரிடம் சென்று ஒன்றிக்கொள்வேன். அன்று விதி விளையாடியது. உயரத்தில் பறந்த பட்டத்தை அண்ணாந்து பார்த்துவிட்டு தலை குனிந்து சும்மா நின்றேன்.

அக்கா சொன்னாள் ‘அம்மா இவன் ஆம்பள பையன் அவன் பாத்துக்குவான் வா போலாம் ‘

என் அம்மா பேரழகி. நல்ல உயரம். சிவந்த மேனி. என் அப்பாவிற்கு நேர் எதிர் உருவம். குனிந்து முட்டி போட்டவர் ஒரு நிமிடம் என்னை இறுக அணைத்து கேவி எழுந்து திரும்பிப் பார்க்காமல் வேகமாய் நடந்தார். என் ஆறு வயது தங்கை திரும்பி அண்ணா டாடா என்றபடி சென்றாள்.

கண்ணீரோடு எதோ பொத்துகொண்டு வந்தது என்னுள். தோளில் கைவிழ திரும்பினேன். ‘கவலைப்படாத மாப்ள உங்கப்பாவுக்கு ஒன்னும் ஆகாது’

கோணலாய் சிரித்தேன்.

”உனக்கு தெரியாது மாப்ள. உங்கப்பா யாரு கஷ்டப்பட்டாலும் விடமாட்டார். உங்க சின்ன மாமனுக்கும் எனக்கும் தொழில் நசிஞ்சுபோச்சு. ரெண்டு மூணு வருசம் உங்க கடைல இருந்துதான் சாமானம் வரும். சும்மா இல்ல பத்து பேருக்கு”

என் மனதில் நினைத்துக் கொண்டேன். அப்ப அவரு என்ன செஞ்சாரு? நானும் எங்கம்மாவும் அல்லவா உழைத்தோம்! அப்போது ஒன்று தோன்றியது. எனக்கு கிட்டத்தட்ட இருபதிற்கும் மேற்பட்ட உறவுமுறை சகோதர சகோதரிகள். பல உறவுகள். அனைவருக்கும் என் அப்பா ஹீரோ. அனைவரிடமும் சிரித்துப் பழகுபவர். நாங்கள் தனித்து இருக்கும்போது மட்டும் இறுக்கமாய் இருப்பார். அதற்கும் என் அம்மா மிக சாந்தமானவர். வீண் பிரச்னைக்கு செல்லாதவர். தேவையில்லாமல் தன் மீது அடி விழும்போது மட்டுமே சீறுபவர். அதுவும் அடியை வாங்கிக்கொண்டே .

என் அப்பாவிற்கு எப்படியும் காரணம் கிடைக்கும். ‘சாமி கும்பிட்டு கும்பிட்டே குடும்பத்த அழிசிடுவா கண்டாலொழி’ ‘மனுஷன மதிச்சு என்ன வேணும் ஏது செய்யன்னு கேக்கறாளா மயிரே போச்சுன்னு கடையில உக்காந்துகிறா. மனுஷன் இந்த சோத்த தின்பானா? ‘

சகோதரிகள் இறந்தபின் மூன்று வருடங்கள் ஆளுக்கொரு திசையில் வாழ்ந்தோம். என் அம்மா அவர் அப்பா வீட்டில். நான் எங்கு எங்கோ. பின் ஒன்றாய் வந்தபின் அவர் தன் வழக்கத்தை தொடர ஒரு முறை என் அம்மாவிற்கு அடி விழுந்து கொண்டு இருக்கையில் குறுக்கே புகுந்து உக்கிரமாய் முறைத்தேன். கை ஓங்கி வந்தவர் ஒரு கணம் நிதானித்து பின்வாங்கினார். அன்று முதல் என் அம்மாவிற்கு அடி இல்லை. வெறும் திட்டு மட்டுமே. அதுவும் நான் இல்லாதபோது. அது முதல் அவர் என் முகம் நோக்கி பேசுவது இல்லை. நானும் அப்பா என்று அழைத்ததில்லை..

வார்ட்பாய் குறுக்கே வந்தார்.

‘ சார் டாக்டர் இன்னும் வரலையே’

‘ஆறு மணி ஆச்சே இனி காலைலதான்’

’என்னங்க இப்படி சொல்றிங்க?’

‘நீ ஒரு பொழப்பு கெட்டவன் மாப்ள …கொழுத்த நண்ட வங்குல தேடற ‘

கூடி இருந்த சொந்தங்களை பேசி அனுப்பிவிட்டு உள்ளே சென்றேன். அப்பா சத்தமாய் கத்திக்கொண்டிருந்தார். ’மத்தவங்க இருக்க வேண்டாமா’ என புலம்பிக்கொண்டு இருந்த நர்சுடன் அருள் சமாதானம் பேசிக்கொண்டு இருந்தான். அப்பாவிற்கு ஒரே மருந்தில் எல்லா நோயும் போக வேண்டும். ஒரே ஊசியில் மொத்த வலியும் தீரவேண்டும். புற்றுநோய் தாக்கத்தால் நடு முதுகு எலும்பு நொறுங்கியதால் உச்சகட்ட வலியில் இருந்தார்.

புண்ணியவான் டாக்டர் பெரிய பொறுப்பில் இருந்து கோவை அரசு மருத்துவமனையில் இருந்து ரிட்டையர் ஆனவர். மிக நீண்ட வருடமாய் அப்பாவை பார்ப்பவர். வீட்டின் அருகிலேயே அவர் மருத்துவமனை. அவர் அப்பா இரண்டு நாட்களில் இறந்துவிடுவார் என்று சொல்லி இருபது நாட்களுக்கு மேலாகிறது. ‘என்றா பண்றது உங்கப்பன் நெஞ்சழுத்தக்காரன் அவன் நாளைக்கே ரேசில ஓடற மாதிரி பேசறான், அவன் நம்பிக்கை ஒடியற வர சாக மாட்டன்’ உடம்பு பூரா புழு வந்து சாக அவன் விதி போல ‘

‘சரிடா நீ போயிட்டு காலைல நேரத்தில வா’ அருளுடன் பேசி அனுப்பினேன். அவன் நர்சிடம் சிறிது பணத்தை திணித்தபடி கிளம்பினான்.  மணி ஒன்பது ஆகி இருந்தது. படுத்து தூங்கி நாற்பது நாட்களுகு மேலாகி இருந்தது. அங்கங்கே அமர்ந்தபடி கண் அயர்வதுதான்.

நரகத்தில் தண்டனை நிறைவேற்றும் இடம் போல் இருந்தது அந்த அறை. எத்தனை சாவு. கலவரமாய் ஏதுஏதோ நினைத்தபடி துண்டு விரித்து அமர்ந்து இருந்தேன்.

பதினான்கு அல்லது பதினைத்து வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தியை பக்கத்து பெட்டில் படுக்க வைத்தனர். அலறியபடி இருந்தாள். எழுந்து நின்று கொண்டேன் . கூட ஒருசிறுவன். பன்னிரண்டு வயது இருக்கலாம்.

‘எங்க இருந்து வர்ற’ என்றாள் நர்ஸ்.

‘வால்பாறைங்க’

‘என்னாச்சு? கூட வந்தது யாரு? ‘

நர்சு கேட்டுக் கொண்டு இருக்க சிறுவன் பதில் சொல்லிக்கொண்டு இருந்தான். யார் பெயரையோ சொல்லி கூட்டிவரச்சொல்லி அவனை அனுப்பினாள்.

அழுதபடி அருகில் வந்தவன் என்னைப் பார்த்து ‘அக்காவை சித்த பாத்துக்கோண்ணா இப்ப வந்துடுதேன்’ என வெளியே ஓடினான் .

அவள் எதோ ஒரு பெயரைச் சொல்லி ‘வலிக்குதுடா வலிக்குதுடா’ எனச் சொல்லி தன் மார்பை அழுத்திக்கொண்டு இருந்தாள் . செய்வதறியாது நின்றேன், அவளுடைய சப்தம் அதிகமாகவே நர்சிடம் ஓடினேன்.

‘ஏங்க, ஏங்க ரொம்ப வலிகுதாம்’

‘நீ போப்பா டாக்டர் இப்ப வருவார் ‘

தவிப்பாய் மீண்டும் அவள் அருகே ஓடினேன்.

‘இருமா, இருமா இப்ப வந்துடுவாங்க’

தோள்களைத் தொட்டுச் சொன்னேன். மூடிய அவள் இரு விழிகளின் ஓரமும் கண்ணீர் பாய்ந்து தலையணையை நனைத்திருந்தது. தோள்களைத் தொட்ட என் கைகளை சட்டென பற்றி தன் நெஞ்சின்மேல் வைத்து அழுத்தத் துவங்கினாள். ‘வலிக்குதுடா வலிக்குதுடா அமுத்துடா வலிக்குதுடா’

‘ஒண்ணும் இல்லமா, ஒண்ணும் இல்லமா, ஒண்ணும் ஆகாது. சும்மா இரு’ கண்ணீரோடு பிதற்றினேன்.

அவள் நகங்கள் கண்டபடி என் கைகளை கீறத்துவங்க இரத்தம் கசிய ஆரம்பித்தது. ‘இறைவா இறைவா என்ன செய்ற நீ எதுக்கு இந்த பேயாட்டம்’ என்னென்னமோ புலம்ப என் உடம்பு நடுங்கத் தொடங்கியது. சடாலென அவள் இடுப்பு உயர, என் கைகளின் மேல் அவள் இறுக்கம் அப்படியே இருக்க மொத்த அசைவும் நின்றது. ஒரு நிமிடம் அவள் முகத்துக்கு அருகே சென்று உற்றுப் பார்த்தபடி இருந்தேன். சிரமப்பட்டு அவள் விரல்களை என் கையில் இருந்து எடுத்தேன். கோபமாய் என் அப்பாவை திரும்பிப் பார்த்தேன்.  இங்கேயே வெறித்தபடி அவர் விழி நிலைகுத்தி நின்று போயிருந்தது.

முந்தைய கட்டுரைவிஜய் சூரியன்
அடுத்த கட்டுரைகோபிகா செய்தது என்ன?