உச்சவழு [சிறுகதை]

ஆனைமலை என்று பெயர் இருந்தாலும் அது சமநிலத்தில்தான் இருந்தது. அதிகாலையில் அந்த ஊரில் கார் நின்றபோது அவன் வினோதமான ஒரு பறவைக்குரலை முதலில் கேட்டு, அது என்ன என்ற உணர்வுடன் விழித்துக் கொண்டு, அதை நின்றுகொண்டிருந்த காருக்கு வெளியே ஒரு பால்காரரின் சைக்கிளின் ஊதல் ஒலியென அறிந்தான். உட்கார்ந்து தூங்கியதனால் தோள்கள் இறுகி வலியெடுத்தன. கால்களை இதமாக நீட்டி சோம்பல் முறித்தபின் கொட்டாவிவிட்டபடி இறங்கி கதவைச்சாத்திய ஒலிகேட்டு டிரைவர் திரும்பி ”டீ குடிக்கிறிங்களா சார்?” என்றார்.

”இது எந்த ஊர்?” என்றபடி அருகே சென்றான். கரிப்பிசின் படிந்தஒயரில் தொங்கிய புகையடித்த சிவப்பு குண்டுவிளக்கின் ஒளியில் அகலமான அலுமினியப் பாத்திரத்திலிருந்து பாலாவி எழுந்து பரவிக் கொண்டிருந்தது. பக்கவாட்டுபெஞ்சில் காது மறைய மப்ளர் கட்டிக்கொண்டு இரு கன்னம் குழிந்த கிராமவாசிகள் அமர்ந்து, பீடி ஒருகையிலும் டீ டம்ளர் ஒரு கையிலுமாக அவனை கவனித்தனர்.

”டீ போடவா சார்?”

”காப்பி இல்லியா?”

”தூளுபோட்டு குடுப்போம்…” என்றார் கடைக்காரர்.

”சரி போடு” என்றபடி அவன் கைகளை மார்புடன் கட்டிக் கொண்டு சுற்றும் பார்த்தான். செம்மண் பரவிய சாலையோரங்களில் நிலையிழந்து விம்மி ஓடத்தயங்கி புல்நுனிகளில் தங்கி படபடத்தன பாலிதீன் கவர்கள். காப்பிக்கு பச்சைப்பால் வாசனை. பாதிவரை வெறும் நுரை.

”இது எந்த ஊர்னு சொன்னீங்க?”

”ஆனைமலை சார்”

”இல்ல இந்த ஊரைக்கேட்டேன்…’

”ஆனைமலை அடிவாரம்னு சொல்லுவாங்க… இப்ப மாசாணியம்மன் கோயிலுக்கு ஏகப்பட்ட சனம் வருதுங்க”

ஊரே அமைதியாக இருந்தது. வீடுகள் எதுவும் கண்விழிக்கவில்லை. அவற்றின் கனவுகள் போல முற்றங்களில் நிழல்கள் ஆடின. அவன் ஏதோ பாடலை முணுமுணுத்தான். உடனே திடுக்கிட்டு நிறுத்திக்கொண்டான். டம்ளரை வைத்துவிட்டு பணத்தைக் கொடுத்தான்.

கார் கிளம்பியபோது அவன் எதிரே தெரிந்த மலைகளைப் பார்த்தான். விடிகாலையின் கலங்கிய வானத்திற்குக் கீழே மலையடுக்குகள் சாம்பல்நீலத்தில் ஒன்றுக்கு மேல் ஒன்றாக பதிந்து மையூறிய காகிதச்சித்திரங்கள் போல நின்றன. உச்சிமலைமீது கருமை கலந்த சாம்பல்நிற மேகம் ஒன்று தீற்றப்பட்டதுபோலத் தெரிந்தது. நாலைந்து நட்சத்திரங்கள் ஒளியில்லாமல் உப்புப்பரல்கள் போலத் தெரிந்தன. இவற்றில் எது யானைமலை? எல்லாமே யானைகள்தான். நெருக்கமாக நிற்கும் யானைகள். நாலைந்து சின்னக் குட்டிகள் அன்னையின் கால்சாய்ந்து நிற்கின்றன. அதோ அடிவானில் மத்தகம் உரச நிற்பதுதான் தலைவன். காட்டின் அரசன்.

அதன் மத்தகத்தின் முன்பு நீண்ட வெண்தந்தங்கள் இருக்கின்றனவா என்று பார்த்தான். அந்த வெண்மேகத்தின் இரு பிசிறுகள் அங்கே இருந்திருந்தால் நன்றாக இருக்கும். இல்லை வெண்தந்தங்களால் அது தொடுவானை முட்டிக் கொண்டிருக்கிறது. வெண்பாறைவளைவுக்குள் தந்தங்கள் புதைந்துவிட்டன..

குளிர்ந்த காற்று அவனைச் சிலிர்க்க வைக்க கண்ணாடியை மேலே தூக்கப்போனான். பிறகு அப்படியே விட்டுவிட்டு உடலை மட்டும் குறுக்கிக் கொண்டு சாய்ந்து அமர்ந்தான். தலைமுடி சிதறிப்பறந்தது. காற்றுபட்டு கண்கள் கலங்கி வழிந்தன. அறுவடைமுடிந்த வயல்களில் காகங்கள் அடைக்கலாங்குருவிகளும் வந்தமர்ந்து எழுந்து சிறகடித்தன. இன்னும் சூரியன் எழவில்லை, ஆனால் காற்றுவழியாக பரவிய வெளிச்சம் எல்லாவற்றையும் துலங்க வைத்தது. படிகவெளி போன்று அசைவில்லாமல் நிறைந்துகிடந்த காலைநேரம்.

மெல்லமெல்ல மலைக்குளிர் தெரிய ஆரம்பித்தது. அம்பாசிடர் கார் கியர் மாற்றிக் கொண்டு உறுமியபடி மேலேறியது. சாலை நாலைந்துமுறை வளைந்ததும் இருபக்கமும் மரங்கள் செறிந்த இருள் பரவி எதிர்காற்றில் நுண்பனித்துளிகளின் சிதறலை உணர முடிந்தது. காட்டுக்குள் பனித்துளிகள் சொட்டிய ஓசை எழுந்தது. சருகு ஒலிக்க ஏதோ சிற்றுயிர் சாலையை தாண்டிச்சென்றது– கீரி என அதன் பூக்குச்ச வாலை மட்டும் வைத்து ஊகித்தான்.

இருபக்கமும் மூங்கில்காடுகள் வந்ததும் அவன் ”மெள்ள போப்பா” என்றான். மூங்கில்கள் வளைந்து சாலையை மேலே மூடி கூரையிட்டிருந்தன. மூங்கில் படர்ப்புக்குள் யானை நிற்கக் கூடும். மூங்கில்தான் யானைக்குப் பிடித்தமான உணவு என்பார்கள். அவரது கண்களும் காதுகளும் யானைக்காகக் கூர்ந்தன. மூங்கில் ஒடியும் ஒலியில் அவன் கற்பனையில் ஒரு கணம் யானை கருமை எழ ,செவியசைய, நின்று மறைந்தது. மெல்லிய சீறல் ஒலியில் அதன் துதிக்கை நெளிவு. மூங்கில்காடுகளில் காற்று காட்டுஓடையின் ஒலியுடன் சீறிச்சென்றது. அப்பால் ஒரு அருவி கொட்டுவதுபோலிருந்தது. தூரத்தில் டாக் டபக் டாக் டபக் என்று ஒரு ஒலி. ஏதோ பறவையின் ஒலி. அல்லது யாராவது மரம் ஏதாவது வெட்டுகிறார்களா?

”இதுக்கு முன்னாடி டாப்சிலிப் வந்ததில்லிங்களா சார்?” என்றார் டிரைவர்.

”இல்ல” .

உண்மையில் அவன் காட்டுக்கே வந்ததில்லை. காடு வழியாக காரில் சென்றதுண்டு. பெரும்பாலும் தூங்கியபடி அல்லது எதையாவது வாசித்தபடி. அவ்வப்போது வெளியே அடர்ந்த மரக்கூட்டங்களைக் கவனித்ததுண்டு. ஆனால் காட்டைப் பார்த்ததில்லை.

வந்தபடியே இருந்தது காடு. மரங்கள் மீண்டும் மரங்கள்.இலைகள் பின்னி கொடிகள் அணிந்து கிளைகள் விரித்து வேர்களால் மண்ணை இறுக்கி நின்றன அவை. ஒரு கணத்தில் அந்த நிலவிரிவை ஒரு பொருளற்ற வெளியாக தன் மனம் எண்ணுகிறது என்பதை கண்டுகொண்டு அவன் தலையை அசைத்தான். அத்தனை மரங்களும் அங்கே ஏதோ ஒரு லாபத்துக்காகத்தான் நிற்க வேண்டும் என மனம் விரும்புகிறது. ஒருமரத்தைப் பார்த்ததுமே அது எதற்கு பயன்படும் என்று எண்ணுகிறது. காட்டுமரங்கள் பல எதற்குமே பயன்படுவதில்லை. அவை காடாக ஆகின்றன, அவ்வளவுதான்…

மரம் என்பது காடு.மரத்தைப் பார்த்தால் காடு மறைகிறது. காடு என்றால் மரமில்லை. விசித்திரமான அர்த்தமின்மை கூடிய எண்ணங்கள். இத்தகைய எண்ணங்கள் எழும் வாழ்க்கை இதுவரை அமையவில்லை. இங்கே வெளியே உள்ள காடு உள்ளேயும் சொற்களாக மாறுகிறது. செறிந்து இருண்டு ஓங்காரமாக முழங்கியபடி…

சாலையில் புதிய யானைப்பிண்டம் கிடந்தது. காரை நிறுத்தச் சொல்லி கதவின் பிடியில் கையை வைத்ததும் டிரைவர் ”எறங்க வேண்டாம் சார்”என்றார்.

அவன் பின் தலையில் ஒரு அதிர்வு ஏற்பட்டது. ”இங்க எங்கியாம் நிக்குமா?” என்றான்

”இல்லீங்க சார்..இது ராத்திரி போட்டதுங்க….ரொம்ப தூரம் போயிருக்கும். ஆனா எறங்காம இருக்கிறது நல்லதுங்க”

அவன் அந்த பிண்டத்தைப் பார்த்தான். பச்சைச்சாணியில் மட்கிய வைக்கோலைக் குழைத்து உருட்டியதுபோல. அதன் வெம்மை பறக்கும் தழைநாற்றம். சாலையின் வலப்பக்கம் நீரில்லாத ஓடைபோல மண் இடிந்து ஒரு வழி தெரிந்தது. அதுதான் யானையின் வழிபோல. இங்கே எங்காவது நின்றுகொண்டு அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறதா என்ன? அக்கணம் அவன் அந்த உணர்வை மிக வலுவாக உணர்ந்தான். ஆம், அது அவரை பார்த்துவிட்டது. அதன் சிறியகண்கள் அவரை வெறித்து நோக்குகின்றன. காது அசைவிழக்க , துதிக்கை மெல்ல எழுந்து வாசனை தேட, அது அவனை நோக்கியபடி நிற்கிறது. தொலைவில் அல்ல, மிக அருகே. இந்த மூங்கில்புதருக்கு அப்பால். அல்லது பாறையின் மீது…

அந்தத் துல்லியமான உணர்வுடன் இணைந்தே அவனால் அது பிரமை என்ற எண்ணத்தையும் அடைய முடிந்தது. ”போப்பா”என்றபடி சாய்ந்துகொண்டான். அதை பின்னால் விட்டுவிட்டு கார் முன்னால்சென்றது. ஆனால் அது விலகவில்லை. மிக அருகே அது இருந்தபடியே இருந்தது.

டாப்சிலிப்பை அடைந்தபோது மெல்லிய செம்மஞ்சள் ஒளிகற்றைகள் மரங்கள் வழியாக வந்து தரையில் படர்ந்திருந்தன. புற்களுக்குக் கீழே நிழல்புற்கள். மஞ்சள் டிஸ்டெம்பர் பூசப்பட்ட வன அலுவலகம் முன்பு விரிந்திருந்த புல்வெளியில் நாலைந்து புள்ளிமான்கள் நின்றிருக்க ஒரு காரிலிருந்து இறங்கிய இரு குழந்தைகளும் பெண்ணும் அவற்றை உற்சாகமாக கைநீட்டி சுட்டிக்காட்டி பேசியபடி, வேடிக்கை பார்த்தனர். ”டேய் புல்மேலே ஏறப்பிடாது கேட்டயா?” என்றபடி ஸ்வெட்டர் அணிந்த சிவந்த கொழுத்த மனிதர் உள்ளே சென்றார்.

ஆதிவாசிகளா கூலிக்காரர்களா என்று சொல்ல முடியாத தோற்றத்துடன் ஏழெட்டுபேர் அலுவலகம் முன்பாக பைகளுடன் காத்து நின்றார்கள். சில பெண்கள் மிட்டாய்ச்சிவப்பு, ஊதாநீல நிறங்களில் செயற்கையிழைப் புடவைகள் கட்டி குந்தி அமர்ந்து கைகளை முட்டுமேல் கூப்புவதுபோல வைத்துக் கொண்டு வெற்றிலை மென்றார்கள். ஒட்டிய கரிய கன்னங்கள், சின்னஞ்சிறிய உடல்கள். ஐயம் தெரிய மின்னும் கண்கள், குழிமிருகங்களின் கருமணிக்கண்கள்.

அவன் அலுவலகத்திற்குள் சென்றார். அங்கே அந்த ஸ்வெட்டர்ஆள் ஆங்கிலத்தில் பரம்பிக்குளம் போக வழிகேட்டுக் கொண்டிருந்தார். அவர் நகர்ந்ததும் அவன் முன்னால் சென்று மெல்லிய குரலில் ”டெல்லியிலே இருந்து வரேன். இங்க தங்கணும்…”என்றான்

”ரிசர்வ் செஞ்சிருக்கீங்களா?” என்றபடி பேரேட்டை எடுத்தார் வனஅலுவலர்.

”இல்லை. திடீர்னு தோணி அப்டியே வந்திட்டேன்…”

‘இது ஆப் சீசன்….கூட்டம் இல்ல.. ஆனாலும் ரூம் இருக்கிறது கஷ்டம்தான் சார்” என்றபடி அவன் பார்த்துவிட்டு உதட்டை பிதுக்கி ”இல்ல”என்றார்.

”வந்தாச்சு…”என்றான்.

‘ரூம் இல்லீங்க’

‘எதாவது பண்ணுங்க….இவ்ளவ்தூரம் வந்தாச்சு…’

”அதுக்கு என்ன பண்றது?’

‘பிளீஸ்’

‘சார்….நாங்க ரிசர்வ் பண்ணாம குடுக்கக் கூடாது…டியெஃபோ ஓரல் ஆடர் இருக்கு”

அவன் பேசாமல் நின்றான்.

அலுவலர் எங்கோ நோக்கி காதைத் தடவினார். பின்பு அவனை ஏறிட்டுப் பார்த்து ”சரி வந்திட்டீங்க…”என்றபின் இன்னொரு பேரேட்டை புரட்டினார். ”எத்தனைபேர்?”

”நான் மட்டும்தான்”

”லேடீஸ் இல்லல்ல?’

‘இல்ல’

‘அப்ப காட்டுக்குள்ள தங்கறீங்களா?”

”சரி..”

”பழைய பங்களா. ரொம்ப பழசு. மெயிண்டெனன்ஸ் கெடையாது. பெட் இருக்கும். தண்ணிபிடிச்சு வைக்கச் சொல்றேன்…தனியாவா?”

”ஆமா”

”யாராவது வருவாங்களா?”

”இல்ல’

”தனியா அங்க தங்கறதுன்னா…” அவனைக் கூர்ந்து நோக்கி ”இங்க லிகர் அனுமதி கெடையாது”

”நான் குடிக்கிறதில்லை”

”அதுசரி…எதுக்கும் இண்ணைக்கு தங்குங்க.நான் நாளைக்கு வேற ஏற்பாடு செய்யறேன்…” அவனை மீண்டும் கூர்ந்து நோக்கி ”உங்களுக்கு உடம்புக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லல்ல?”

”இல்ல. ஏன்?”

”ஒருமாதிரி இருக்கீங்க…”

”நலைஞ்சுநாளா சரியா தூக்கமில்ல. அதான்” என்றான் ‘பிஸினஸ் டென்ஷன்’

”அப்ப சரி. நல்லா தூக்கம் வரும் அங்க…முருகா”

பணம்கட்டி ரசீதுபெற்றுக் கொண்டபோது அருகே முருகன் வந்து நின்றதைக் கண்டார். வெற்றிலைக்காவி படர்ந்த பெரிய பற்கள் தெரியும் சிரிப்பு. ”லக்கேஜ் காரிலே இருக்கா சார்?”

”ஆமா”

”நானு இங்க கார்டு சார். பேரு முருகன்… வெள்ளஅம்பாசிடரா சார்?”

காரிலிருந்து ஒரேயொரு சிறிய பெட்டியை எடுத்தபோது முருகன் ”பெரிய பெட்டி டிக்கியிலே இருக்கா சார்?” என்றான்

”இல்ல.இதுமட்டும்தான்”

”டிரெஸ்ஸா சார்?”

”ஒருநாள்தான் தங்கறதா இருக்கேன்…” டிரைவருக்கு பணம் தந்தான்.

”வேணுமானா நான் நிக்கறேனுங்க சார்”என்றார் டிரைவர்

”வேண்டாம்.”

”கீழ எறங்கிறப்ப கூப்பிடுங்க சார். செல் நம்பர் இதிலே இருக்குதுங்க…”என்று ஒரு கார்டை நீட்டினார். அதை மௌனமாக வாங்கிக் கொண்டான்.

முருகன் பெட்டியுடன் நடக்க அவன் பின் தொடர்ந்தான்.

”…இந்தக்காடு இப்டியே நூத்தம்பது கிலோமீட்டர் இருக்கு சார். அந்தபக்கம்லாம் கேர்ளா.பரம்பிக்குளம் சாஞ்சுரி ஆரம்பிச்சிரும்…”

”இங்க யானை உண்டா?”

”இந்த சீசனிலே அதிகமா இருக்காது. தண்ணி கெடையாதுல்ல? அப்டியே கேரளா பக்கமா போயிரும்… ஆனியாடிமாசத்திலே நெறைய வரும் சார்…”

”பங்களா பக்கமா வருமா?”

”இப்பவா?”

அவன் ஒன்றும் சொல்லவில்லை

”இப்ப வராது சார். சீசனிலே சில சமயம் வரும். இப்ப பைசன் வந்தாலும் வரும்… பங்களாவிலே லைட் இருந்தாக்க மான்கூட்டம் வரும். லைட் இருந்தா அங்க புலி வரதில்லேண்ணு மானுக்கு தெரியும். அதனால வந்து படுத்துக்கும்…சார் டாக்டரா?”

”இல்ல…”என்றான்.

காட்டுப்பாதை மூங்கில்ச்செறிவுகள் வழியாக ஊடுருவிச் சென்றது. மூங்கில்முள்நீட்சிகள் முகத்தில் படாமலிருக்க அவ்வப்போது விலக்கியபடியும் தலைகுனிந்தும் நடந்தான். மூங்கில்காட்டுக்குள் வெயிலே வரவில்லை. இலையடர்வு கூரைபோல செறிந்திருக்க அதன்மேல் காற்று நதிபோல ஓடிக் கொண்டிருந்தது. அப்பால் குட்டைமரங்கள் அடர்ந்த காடு தெரிந்தபோது அதற்குள் இலைகளினூடாக வந்த வெயில் விரித்திருந்த நிழல்சித்திரவெளியை பார்த்து ஒரு கணம் அடையாமல் நின்றான். பாசிப்படலம் நெளியும் ஒரு நீலநீர்வெளி போலிருந்தது.

வியர்வை குளிர்ந்து, மூச்சுவிடுவது நெஞ்சை இறுக்க, சற்று வாய் திறந்தபடி அவன் நடந்தான்.”பக்கம்தான் சார்…வேணும்னா ஒக்காந்துட்டு போலாம்…வண்டியெல்லாம் போகாது சார்… லாரன்ஸ் சார் சி எ•ஃபா இருந்தப்ப ஜீப் போகும். இப்ப போறதில்ல”

பங்களா அவன் நினைத்ததைவிட பெரியது. கருங்கல் சுவர் கொண்ட ஓட்டுக் கட்டிடம். பழங்காலத்துக் கண்ணாடிச்சுவர் கொண்ட சுற்றுவராந்தாக்கள். கண்ணாடிச்சன்னல்களின் சட்டங்களும் கதவுகளும் எல்லாம் ஒருகாலத்தில் ஆழ்ந்த இலைப்பச்சை நிறத்தில் இருந்து நிறமுதிர்ந்து போயிருந்தன. ஓட்டுக்கூரை கருகி ஒரு பெரிய பாறைச்சரிவுபோல தெரிந்தது. அதன்மேல் சருகுகள் பரவி மட்கிபடிந்திருந்தன.

பங்களாமுன்னால் இருந்திருந்த தோட்டம் புதர்க்காடாக மாறியிருந்தது. மீண்டும் அவன் அந்த உணர்வை அடைந்தான். எங்கிருந்தோ யாரோ அவனை பார்த்துக்கொண்டிருந்ததுபோல.

பங்களாவைச் சுற்றி மரங்களை வெட்டி ஒரு திறப்பை உருவாக்கியிருந்தார்கள். இருண்டகாட்டுக்குள் அந்த சதுர இடைவெளி இளவெயில் தேங்கிய குளம் போல் இருந்தது. பங்களாவின் கண்ணாடிப்பாளங்களில் பச்சை நெளிய கட்டிடம் நீர் நிழல் போல பிரமையெழுந்தது.

முருகன் பூட்டை திறந்தான். மட்கும் துணிகளின் வாசனை. ஒரு சோபா கிடந்தது. திரைச்சீலைகள் அழுக்காக இருந்தன. தேக்குப்பலகைம் வேயப்ப‌ட்ட தரை பல ஆண்டுக்காலம் கால்பட்டு வழவழவென்றிருந்தது.. உள்ளே பெரிய இரு கூடங்கள், இரண்டு படுக்கையறைகள். பின்கட்டு தனியாக இணைக்கப்பட்டிருந்தது. ”ரெண்டு ரூம்பு இருக்குசார். மெத்தை கம்பிளி எல்லாம் இருக்கு. கரெண்டு இல்லை..”

மரத்தரையில் நடந்தபோது பங்களாமுழுக்க நிறைந்திருந்த மௌனத்தில் அது எதிரொலி செய்தது. பெரிய கட்டிலில் மெத்தைமீது தலையணைகளும் கம்பிளியும் மடித்து வைக்கப்பட்டிருந்தன. மிகப்பெரிய சன்னல்கள். அவன் பெட்டியை வைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான்.

முருகன் பின்கட்டில் தண்ணீர் கொண்டுவரும் ஒலி கேட்டது. சற்று நேரத்தில் அவன் வந்து ”டீ எதுனா குடிக்கிறியா சார்?” என்றான் ”பால் இல்லாம வெறும்டீதான்”

”சரி போடு…”என்றான்.

”லாரன்ஸ் சார் இருந்தப்ப எப்பவும் பாலுத்தூள் ரெடியா இருக்கும் சார்…அப்பப்ப இங்க வந்து தங்குவார்…இப்பல்லாம் யாரும் வாறதில்ல. இங்க வந்து தங்கறதுன்னா பயப்படுறாங்க…ஏன்னு கேட்டீங்கன்னாக்க இங்க பாம்பு உண்டுங்கிறாங்க…பாம்பு அதுபாட்டுக்கு இருக்கு .ஏன் சார்…” தனியாக இருந்து இருந்து முருகனுக்கு அவனே பேசும் பழக்கம் கைகூடியிருந்தது.

முருகன் போனதும் எழுந்து வெளியே சென்று வராந்தாவில் நின்று கண்ணாடிச்சன்னல் வழியாக அப்பால் செறிந்து சூழ்ந்திருந்த காட்டை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது எழுந்த சோர்வு மெல்ல மெல்ல அவனைச் சூழ்ந்து உடனே ஊருக்குத் திரும்பிவிடவேண்டும் என்று தோன்றச் செய்தது. செல்பேசியை எடுக்க இடுப்புக்குச் என்ற கை தயங்கி சறுக்கி நின்றது. அவன் கோவை விமானநிலையம் தாண்டியதுமே செல்லை எடுத்துவெளியே வீசிவிட்டிருந்தான்.

பெருமூச்சுடன் மெல்ல நடந்து முன்வாசலுக்கு வந்து அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்துக் கொண்டு சென்று முற்றத்து புல்மேல் போட்டுக் கொண்டு அமர்ந்தான். புல்லிதழ்களில் இருந்து சிறிய பூச்சிகள் துடித்துத் துடித்துப் பறந்தன. காலைத்தூக்கி நாற்காலிமேல் வைத்து சப்பணமிட்டு அமர்ந்தபடி தூரத்து மலையுச்சியையே பார்த்தான். வானம் நன்றாக ஒளிபெற்று விட்டிருந்தது. கண்கள் கூசினாலும் மலைமுகட்டு பாறைமீதே பார்வையை நிலைக்கவிட்டான். மேகப்பிசிர் ஒன்று அதனருகே மிதந்து நின்றது. அந்தப்பாறையும் மேகமும் தங்களுக்குள் எதையோ மௌனமாக மிக மௌனமாக பகிர்ந்துகொள்வது போலிருந்தது.

முருகன் டீயுடன் வந்தான். நன்றாகவே இருந்தது டீ. அவன் பாலில்லாத டீ குடிப்பதில்லை. இந்தச்சுவை அவனுடைய களைப்பு காரணமாக இருக்கலாம். அந்த இடத்தின் குளிர்ந்த தனிமை காரணமாக இருக்கலாம்

அடர்ந்த காட்டுக்குள் வெயில் இறங்கியதனால் அதன் பசுமையின் அடர்த்தி குறைந்துவிட்டிருந்தது. அந்த நிலல்வெளிக்குள் ஒரு யானை தன் செம்பூ படர்ந்த மாபெரும் மத்தகத்துடன் நிலாநிறமுள்ள தந்தங்களுடன் வந்து நின்றால் எப்படிக் காணமுடியும் அதை?

முருகன் அருகே வந்து நின்று ”உச்சிப்போதுக்கு என்ன சமைக்கணுங்க?” என்றான்.

அவன் அவன் கேள்வியை உள்வாங்காமல் அவனையே பார்த்தான். முருகனின் உதடுகளின் அசைவை மட்டுமே அவன் கண்கள் கண்டன. பின்பு திடுக்கிட்டு,”என்ன?” என்றான்

”மதியத்துக்கு சாப்புடறது?”

”எதாவது போதும்”

”சோறு பொங்கி ஒரு சாம்பார் செய்றேனுங்க. ராத்திரிக்கு சப்பாத்தி போட்டுடறேன்…”

”ம்…” என்றான்

”சப்பாத்திக்கு குருமா செஞ்சுப்போடலாம். பச்சப்பட்டாணி இருக்குங்க…”

அவன் தலையாட்டி பெருமூச்சு விட்டான்.

‘இங்க அந்தக்காலத்திலே பெரிய தொரை இருந்தாருங்க…அவருதான் இந்த வங்ளாவ கட்டினது… அவரு இருக்கிறவரைக்கும் எங்கப்பாதான் சமையல். அப்ப நான் சின்னப்புள்ளையா இங்க வருவேன். தொரை பிஸ்கோத்து முட்டாயி எல்லாம் குடுப்பாரு…நல்ல தொரை…ஆட்டுத்தாடிமாதிரி தாடி…மூக்கு அம்மாம் பெரிசு. செவந்து பளுத்து இப்பிடி நீட்டிட்டு நிக்குமுங்க’

‘தனியாவா இருந்தாரு?’

‘ஆமாங்க…தொணைக்கு எங்கப்பா இருப்பாரு. இல்லேன்னா வாச்மேன் யாராச்சும் இருப்பானுங்க… பாவம் நல்ல தொரை…செத்துட்டாரு ’

அவன் துரை எப்படி எங்கே செத்தார் என்று கேட்க விரும்பினான். ஆனால் முருகன் உடனே திரும்பிச் சென்றுவிட்டான்.

மதியம் வரை அவன் காட்டுக்குள் வெயில் சிதறி கரைந்து பின் தெளிந்து விளையாடுவதை பொருளில்லாமல் ஓடும் எண்ணங்களைக் கலைத்துக் கலைத்து மீண்டு வந்து பார்த்துக்கொண்டிருந்தான். முருகன் வைத்த சாம்பார் நீர்த்திருந்தது. பருப்பு வேகாமல் திப்பிகளாகக் கிடந்தது. ஆனால் காய்கறிகள் மிகப்புதியவை. அந்தச்சுவையை ஊரில் எப்போதுமே அவன் அறிந்ததில்லை.

‘கத்திரிக்கா எங்க வாங்கினே?’

‘வாங்கலீங்க…இங்க பின்பக்கம் வெண்டிக்கா கத்ரிக்கா பொடலங்கா அல்லாம் காச்சு கெடக்குதுங்க…வந்து பறிக்கிறதில்லீங்க…எப்பனாச்சும் வந்தா பறிச்சு கழுவி சாம்பார் வைக்கிறதுங்க… இங்கல்லாம் கத்ரிக்கா நல்லா வருமுங்க…ஊரிலே மாதிரி அதிகமா பூச்சில்லாம் வர்ரதில்லீங்க…’

சாப்பாட்டுக்குப்பின் அவன் நன்றாகத்தூங்கினான். குளிர்ந்த நீல நிற விரிப்பு பரவிய மெத்தை ஒரு சிறிய தடாகம்போலிருந்தது. அல்லது சேற்றுப்பரப்பு.அதில் படுத்தபோது மட்கிய பஞ்சின் வாசனை வந்தது. உள்ளே உளுப்பு பூச்சிகள் இருக்கலாம். அவை பஞ்சின் பல்லாயிரம் அறைகளுக்குள் கூட்டம்கூட்டமாக வாழலாம். அவன் இப்போது உளுப்புப்பூச்சிகளின் ஒரு பெருநகரம் மீது படுத்திருக்கிறான். பிரபஞ்சம் மீது பள்ளிகொண்ட பெருமாளைப்போல

சிலநிமிடங்களில் மெத்தை அவன் உடலின் வெப்பத்தை சேமித்து அவனுக்கு அளித்தது. மென்மையான தசையின் வெம்மை. அம்மாவுக்கும் அப்படி ஒரு துணி மட்கும் மணம் இருந்தது. துவைத்துத்துவைத்து காயவைத்த துணியின் வாசனை. அம்மாவின் சேலை எப்போதும் கொஞ்சம் ஈரமாகவே இருக்கும் என்று அவன் நினைவில் பதிந்திருந்தது. சமையற்கட்டிலும் கொல்லைப்பக்கங்களிலும் வாழ்ந்து முடிந்த ஒரு வாழ்க்கை.

அவன் கண்களை மூடிக்கொண்டு அம்மாவின் சேலைக்குள் புகுந்துகொண்ட வெட்கிய மெலிந்த சிறுவனாக தன்னை கற்பனைசெய்துகொண்டான். அம்மாவின் காய்த்து முரடான கைகள் தலையை தடவுகின்றன. விறகுச்சுள்ளி போன்ற விரல்கள். உடைந்து காய்ந்த நகங்கள் கொண்ட கட்டைவிரல்கள். அம்மா அவனிடம் அதிகம் பேசியதில்லை. எப்போதாவது இரவில் அவன் கண்விழிக்கும்போது அம்மா அவனை அணைத்துக்கொண்டு மெலிதாக விசும்பி அழுதுகொண்டிருப்பதை அறிவான். இருட்டே அழுதுகொண்டிருப்பதுபோலிருக்கும். மேலும் அம்மாவிடம் ஒண்டிக்கொண்டு அப்படியே தூங்கிவிடுவான்.

அம்மா இறந்தபோது அவன் டெல்லியில் இருந்தான். சரோஜா அக்கா கடிதங்களிலும் தொலைபேசியிலும் தெரிவித்துக்கொண்டே இருந்தாள், அம்மாவுக்கு உடல்நலமில்லை என்று. ‘ரொம்பநாள் போகாதுன்னு டாக்டர் சொல்லிட்டார். நல்ல வீஸிங் இருக்கு…ஒருவாட்டி வந்துட்டு போறது…அவ வரமாட்டா…புள்ளைங்களையும் கொண்டுவாறது நடக்கிற சோலி இல்ல…நீ மட்டுமாவது வந்துட்டு போனா என்ன? தந்தையில்லா புள்ளைய வளத்து ஆளாக்கினவள்லா அம்மை?’ என்றாள் சரோஜா. அவன் வருவதாக உறுதியளித்தான். ஆனால் இன்னும் கொஞ்சம் பணம் அனுப்ப மட்டும்தான் முடிந்தது.

அம்மா எதிர்பார்த்திருப்பாளா? எதிர்பார்த்திருந்தாலும் அதை தெரிந்துகொள்ள முடியாது. அம்மா அவன் நினைவறிந்த நாளுக்கு முன்னாலே இறுகிவிட்டாள். அழுந்தி அழுந்தி நிலக்கரிபோல கருமையும் கனமும் கொண்டவளாக ஆகிவிட்டாள்.. ‘கோமதியா, அவ கரும்பாறையில்லா?’ என்றுதான் அம்மா வேலைசெய்த வீடுகளில் சொல்வார்கள். கருஞ்சுழி. தனக்குள் தானே சுழல்வது. பிரபஞ்சத்தையே அள்ளி உண்பது. என்ன ஒரு இருட்டு. இருட்டு மேலும் மேலும் இருட்டாகிக்கொண்டே செல்லக்கூடிய ஒரு சுழி.

விழித்துக் கொண்டதும் அவனுக்கு மெல்லிய உற்சாகம் ஏற்பட்டது. முருகன் ‘சார் டீ குடிக்கிறிங்?’ என்றான்

டீயுடன் மீண்டும் அதே இடத்தில் அதேபோல சென்று அமர்ந்துகொண்டான். மாலையே வரவில்லை. மதியம் நேரடியாக இரவாகிக்கொண்டிருந்தது. காட்டுக்குள் இருட்டு ஊறித்தேங்க மரங்கள் பச்சைநிறத்தை இழந்து அதில் கரைந்துகொண்டிருந்தன. பறவைகளின் ஒலிகள் பெரிய சந்தை ஒன்று தூரத்தில் ஒலிப்பதுபோல எழுந்தன. சூரியன் இலையடர்ந்த காட்டுக்கு அப்பால் எங்கோ மேகங்களுக்குள் இருக்கிறது என நினைத்துக்கொண்டான். குளிருக்கு ஒண்டி மேகங்களைப்போர்த்தி அது விரைத்து அமர்ந்திருப்பதுபோல கற்பனை செய்தான். எந்த நினைப்பும் குளிரில் சென்று முடிகின்றன என்ற எண்ணம் வந்தது.

நன்றாகவே குளிர ஆரம்பித்தது. அடிக்க்டி புல்லரித்து உடல் நடுங்கியது. உள்ளே போய் ஸ்வெட்டரை எடுத்துப்போடவேண்டும் என்று நினைத்துக்கொண்டாலும் சோம்பியவனாக அங்கேயே அமர்ந்திருந்தான்.

முருகன் எட்டிப்பார்த்து ‘குளிரு எறங்குதுங்க’ என்றான்.

அவன் ஒன்றும்சொல்லவில்லை.

“ஸ்வெட்டர் எடுத்தாரவா?’

அப்போதுதான் அவன் தன்னிடம் ஸ்வெட்டர் என ஏதும் இல்லை என்பதை அறிந்தான். ‘ஸ்வெட்டர் இல்லியே’ என்றான்.

‘ஏனுங்க?’

‘கொண்டாரலை’

முருகன் அர்த்தமில்லாமல் பார்த்தான். இம்மாதிரி நிலைமைகள் அவனுக்குள் நுழைந்து அர்த்தமாக ஆக கொஞ்ச நேரம்பிடிக்கும்போலும்.

‘இங்க ஸ்வெட்டர் இல்லீங்க’ என்றான் முருகன். அவன் எப்போதுமே ஒரு ஸ்வெட்டர் போட்டிருப்பான்போல.அது நைந்த சாக்குத்துணியாலானதுபோலிருந்தது.

‘பரவாயில்லை’

‘குளிருமுங்க…உள்ள உக்காந்தாலே தாங்க முடியாதுங்க’

‘பாப்போம்’

முருகன் உள்ளே போனான். அவனால் அங்கே அமர முடியவில்லை. காதும் கழுத்தும் தொடர்ந்து புல்லரித்தன. பற்களைக்கிட்டித்துக்கொண்டான். கைகளை அக்குளுக்குள் செருகிக்கொண்டு உடலை குறுக்கினான்.

முருகன் வந்து ‘தொரைக்கு கோட்டுசூட்டு இருந்ததுங்க…அறைக்குள்ள எங்கியோ இருந்திச்சு…பாத்தேன். இப்ப காணும்…அல்லாத்தையும் சாவாலபோற பயக்க அள்ளிக்கிட்டு போய்ட்டானுங்க’ என்றான்

அவன் புன்னகையுடன் தலையசைத்தான். குளிர் ஏறிக்கொண்டே இருந்தது. அல்லது உடல் வெப்பத்தை இழந்துகொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் எழுந்து பங்களாவை நோக்கி ஓட நேர்ந்தது. அப்போது கால்கள் கைகள் எல்லாமே விரைத்திருந்தன.

பங்களாவுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டான். குளிர் சட்டென்று குறைந்து இதமான வெப்பம் காதுமடல்களை வருடியது. அது சமையலறையில் முருகன் சமைப்பதன் வெப்பம். குளிர்பிரதேசத்துக்காகவே கட்டப்பட்ட பங்களா. கண்ணாடிச்சன்னல்கள் எல்லாமே இரட்டை அடுக்கு கொண்டவை. தரை சுவர்கள் கூரை எல்லாமே மரம்.

அவன் சோம்பலாக பங்களாவிற்குள் நடந்தான். அவனுடைய காலடியோசை மரத்தரையில் வினோதமாக ஒலித்தது. பல அறைகள் கொண்ட பெரிய பங்களா. நான்கு அறைகளில் படுக்கைகள் இருந்தன. எல்லா படுக்கைகளுமே அதே மட்கிய வாசனையை வெளிவிட்டன. ஓர் அறையில் மட்டும் மேலே ஓட்டுக்கூரையும் மரத்தாலான பொய்க்கூரையும் பிய்ந்து விழுந்து அதன் வழியாக சருகுகள் உள்ளே கொட்டி தரையில் குப்பையாக மட்கி கிடந்தன. மழைநீர் கொட்டி அந்த அறையெங்கும் ஈரநைப்புள்ள பாசியும் நிறைந்திருந்தது.

அந்த அறையின் ஒளி வித்தியாசமாக இருப்பதை கவனித்தபடி அவன் நின்றான். அப்போதுதான் அவ்வறையின் ஓரமாக சுவரோடு சேர்ந்து நான்கு கால்கள் கொண்ட ஒரு பெட்டி இருப்பதை கவனித்தான். ராணுவத்தினர் வைத்திருப்பது போன்ற மரப்பெட்டி. அரையடி உயரமான நான்கு கால்கள் கொண்டது. பித்தளையாலான பிடிகள் இருபக்கமும் களிம்பேறி ஒட்டியிருந்தன. பெட்டிக்குமேல் சருகுகள் மட்கிப்பரவியிருந்த படலம்

அவன் அந்தப்பெட்டியை அணுகி அதை திறக்கமுடியுமா என்று பார்த்தான். அது பூட்டியிருக்கும் , உடைத்துத்தான் திறக்க முடியும் என்று நினைத்தான். ஆனால் அது சாதாரணமாகத்தான் மூடப்பட்டிருந்தது. அந்த கனமான மூடியை இருகைகளாலும் தூக்கி திறக்கமுடிந்தது. நீர்புகாத விளிம்புள்ள தரமான பெட்டி.

பெட்டிக்குள் அவன் எதிர்பார்த்ததுபோல ஏதுமில்லை. துணிகள்தான். கனமான கம்பிளித்துணிகள். அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து வெளியே வைத்தான். சாம்பல்நிறம், கருப்புநிறம், தவிட்டுநிறம் கொண்ட கோட்டுகள். சூட்டுகள். மஃப்ளர்கள். ஒரு துணியை எடுத்து முகர்ந்து பார்த்தான். மட்கியவாசனை அந்தத் துணிகளிலிருந்துதான் கிளம்பி பங்களாவை நிறைக்கிறது என்று பட்டது. ஆனால் துணிகள் நன்றாகவே இருந்தன

‘முருகா’

‘சார்!’

‘இது யாரோட பெட்டி?’

‘சார் இதான் தொரையோட பெட்டி…தொரையோட சூட்டு கோட்டு சார்…’

‘’ஓ’’

‘குளிரிச்சின்னா போட்டுகுங் சார்’

‘வேண்டாம்’

‘இங்கெல்லாம் நல்லாவே குளிரும்’

‘பாப்பம்…நீ டீ போடுறியா?’

‘மறுபடியுமா சார்?’

‘ஆமா’

இன்னொரு டீயுடன் அவன் சமையலறையிலேயே நின்றான். அடுப்பில் முருகன் பெரிய விறகுகளைச் செருகியிருந்தான். செக்கச்சிவந்த வைரக்குவியல்போல கனல்துண்டுகள் உள்ளே காற்றுக்கு ஏற்ப சினந்து சினந்து கறுத்தன

‘துரை எப்டிச் செத்தார்?’

‘செத்துட்டாருங்க…பாடி கெடைக்கலை…’

‘அப்டியா?’

‘காட்டுக்குள்ர துணிங்கதான் கெடைச்சுது… ராத்திரி வெளியே போயிருக்காருங்க…துணிமட்டும்தான் மிச்சம்’

‘தனியா போனாரா?’

முருகன் அதைக் கேட்கவில்லை. திரும்பவும் கேட்க அவனுக்குத்தோன்றவில்லை.

அவன் கண்ணாடிச்சன்னலில் முகம் பதித்து வெளியே பார்த்தான். மூக்குபட்ட இடத்தில் மூச்சுக்காற்றின் நீராவி படிந்து உடனே துளிகளாகியது. வெளியே நன்றாகக் குளிரக்கூடும். நிலா தென்படவில்லை. ஆனால் வானத்தில் மெல்லிய வெளிச்சமிருந்தது. மேகங்களின் விளிம்புகள் சாம்பல்நிறத்தில் ஒளிவிட்டன.

பார்த்துப்பார்த்துக் கண் பழகியதா என்று தெரியவில்லை. காட்டின் அடிமரங்களின் உருட்சியும் கிளைகளின் விரிவும் எல்லாம் தெரிய ஆரம்பித்தன. மரக்கூட்டங்களின் இலைநுனிகளுக்கும் வானத்துக்கும் இடையேயான கோடு ஒளியுடன் துலங்கிவந்தது. கொஞ்சநேரத்திலேயே சாம்பல் வண்ணத்தால் வரையப்பட்ட சித்திரம் போல காடு துல்லியமாக கண்முன் விரிந்தது.

இன்று என்ன பௌர்ணமியா? நிலவை கண்ணால் பார்க்கமுடியவில்லை. வானம் முழுக்க மலை உருண்டு பரவிக்கிடப்பதுபோல மேகங்கள். எப்போதாவது இங்கே வானம் தெளிந்து நிலவு தெரிந்திருக்குமா என்ன?

அவன் கதவை மெல்லத்திறந்தான். இடைவெளிவழியாக குளிர்ந்த நீர் போல காற்று உள்ளே வந்தது. கதவை முழுக்கத் திறந்ததும் அறைகளுக்குள் எல்லாம் ஏதேதோ அசைந்து பங்களா உயிர்கொண்டதுபோலத் தோன்றியது. வெளியே சென்று முற்றத்தில் நின்றான். அவனுக்கு முன்னால் காடு நிழல்களால் ஆனதாக நின்றது. நிழல்களின் பெருவெளி. பகல்முழுக்க அங்கே நின்ற மரங்கள் மறைந்துவிட்டன. அவற்றின் நிழல்கள் மட்டும் எஞ்சியிருக்கின்றன. அவனுடைய நிழல் பகல் முழுக்க அவனுடன் இருந்தது. அது இப்போது கிளம்பிச்சென்று அந்த நிழல்வெளியில் கலந்துவிட்டதா என்ன?

‘சார்…சார்.!’

தொலைவில் என்பதுபோல முருகனின் குரலைக்கேட்டு நின்றான். முருகன் கையில் சிறிய மின் கைவிளக்குடன் ஓடிவந்தான். புதர்களுக்குமேல் விளக்கின் ஒளிவட்டம் ஆடியது. விசித்திரமான ஒளிவிடும் பூச்சி ஒன்று பதற்றம் கொண்டு ஒளிய முயல்வதுபோல

‘என்னாசார். காட்டுக்கு உள்ர போறீங்க?’

அவன் திகைத்துநின்றான். காட்டுக்குள் அவ்வளவுதூரம் வந்திருப்பதை அப்போதுதான் உணர்ந்தான். அங்கிருந்து பார்க்கையில் பங்களா சாம்பல்நிற ஒளியின் வட்டத்துக்குள் கண்ணாடிச்சன்னல்கள் மின்ன அப்பால் தெரிந்தது

‘நீங்க கெளம்பறத பாத்துட்டேன் சார்…நல்லவேளை….அப்டியே பின்னால வந்திட்டேன்…என்னாசார் இது? அப்டீல்லாம் ராத்திரி காட்டுக்குள்ள போகக்கூடாதுசார்….பெரியவங்க உள்ள எடம்…’

‘பெரியவங்கன்னா?’

‘அதான் சார் தும்பிக்கை….ராத்திரி அதுங்க பேரச்சொல்லக்கூடாது…வாங்க’

திரும்பும்போது அவன் வியந்துகொண்டான். என்னசெய்தேன்? காட்டை பார்த்துக்கொண்டே இருந்தேன். கால்கள் நடப்பதை உணரவில்லை

‘ஏன் சார் காட்டுக்குள்ள போனீங்க?’

‘தெரியல்ல….நான் இவ்ளவுதூரம் வந்ததே தெரியல்ல’

‘அதான்சார்…காடு அப்டியே ஆள கூப்பிடும்சார். காடும் கொளமும் வா வான்னு கூப்பிடும்னு எங்கப்பாரு சொல்வார்…தனியா போயி பக்கத்திலே நிக்கக்கூடாது. கூப்பிட்டு உள்ளார வச்சுக்கிடும் சார்…’

‘கூப்பிட்டா மாட்டேன்னு சொல்லமுடியாதா?’

‘நம்மளோட மனசு இதினிக்கூண்டு மனசு சார்…காடோட மனசு அம்மாம் பெரிசு…அது கூப்பிட்டா நம்மால போவாம இருக்க முடியாது…போய்ட்டே இருப்போம்…சப்பாத்தி போட்டாச்சு சார்’

உள்ளேசென்று சோபாவில் அமர்ந்தான். கதவைச்சாத்தி முருகன் தாழிட்டான். தன் உடல் துள்ளித்துள்ளி விழுவதை அப்போதுதான் உணர்ந்தான். அவ்வளவு குளிர்ந்திருக்கிறது.ஆனால் தெரியவில்லை. காட்டின் அழைப்பு அவ்வளவு வலுவானதா என்ன? மனமே இல்லாமலாகிய நிமிடங்கள். அப்படி ஒரு இன்மையை அவன் எப்போதுமே உணர்ந்ததில்லை. இசைகேட்கையில், உக்கிரமான வலியில், கோயில்சன்னிதியில் சிலகணங்கள் அது நிகழும். ஆனால்…

அவன் உடலை இறுக்கிக் கொண்டான். ஒருகட்டத்தில் அந்த அவஸ்தையை அவனே பீதியுடன் கவனித்தான். இரவெல்லாம் இப்படி வதைபடவா போகிறேன்? எழுந்துசென்று அறைக்குள் இருந்த பெட்டியைப்பார்த்தான். அவன் எடுத்து வெளியே வைத்த கோட்டும் சூட்டும் இருந்தன. ஒன்றை எடுத்துப்பார்த்தான். சாம்பல்வண்ண கோட்டு. அது அவ்வளவு கனமாக இருக்குமென அவன் எதிர்பார்க்கவில்லை. இருமுறை உதறினான். மீண்டும் முகர்ந்துபார்த்தான். போட்டுக்கொண்டான். அது ஈரமாக இருப்பதுபோலத் தோன்றியது. இரு சிறிய குழந்தைகள் இரு தோளிலும் ஏறித் தொங்குவதுபோல கனத்தது

சோபாவில் அமர்ந்துகொண்டான். மெல்லமெல்ல உடல்சூடு உள்ளே பரவ குளிர் விலகியது. கைகளை பைக்குள் விட்டுக்கொண்டான்

‘தொரை கோட்டா சார்?’ முருகன் சப்பாத்தி பரிமாறினான்

‘ஆமா’

‘அவுரோட கோட்டு நல்லா குளிருதாங்கும் சார்….உள்ர தீ உள்ள துணி’

உள்ளே நெருப்பு வாழும் ஆடை. நல்ல வரிதான். ‘ஏன் முருகன், தொரை தனியாவா இருந்தாரு?’

‘அவரு சமுசாரம் இருந்திச்சு சார்…அப்பால அது குருதக்காரனோட ஓடிப்போச்சு இல்லீங்களா?’

அவன் பார்த்துக்கொண்டே இருந்தான்

முருகன் ‘அப்பால இவுரு மட்டும்தான் சார் இருந்தாரு…பாட்டெல்லாம் பாடுவாரு… பிராந்தி குடிப்பாரு…பாவம் நல்லமனுஷன்‘ அவனைப்பார்த்து ‘ஏன் சார்?’

‘என்ன?’

‘அளுவுறீங்க?’

‘இல்லியே…’

‘காரமா சார்? இங்க உண்ணிமொளகா நல்ல காரமுங்க’

‘கொஞ்சம்…’

‘சப்பாத்தி பிய்ச்சு மெல்லுங்க’

அவன் மீண்டும் கண்ணாடியில் முகம்பதித்து வெளியே பார்த்தான். காட்டின்மீது பரவிய ஒளி எங்கிருந்துவருகிறது?

’அப்ப நான் படுத்துக்கலாமுங்களா?’

’இன்னிக்கு பௌர்ணமியா?’

‘இன்னிக்கா? இன்னிக்கு நெலா இல்லீங்க. பௌர்ணமி தாண்டி எட்டுநாள் ஆச்சுதே?’

‘அப்ப எப்டி காடு வெளிச்சமா இருக்கு?’

‘வானத்திலே எப்பவும் வெளிச்சம் உண்டுங்க’

முருகன் சென்ற ஐந்துநிமிடங்களில் குறட்டை ஒலி கேட்க ஆரம்பித்தது. அவன் கண்ணாடிச்சுவர் வழியாக வெளியே பார்த்துக்கொண்டே நின்றான். காட்டுக்கு மேலே எண்ணை மழையாகப்பெய்துகொண்டிருப்பதுபோல இலைகள் பளபளத்து மெல்ல அசைந்தன. நினைவுகள் எங்கெங்கோ சென்றன. அம்மாவை கடைசியாகச் சென்று பார்த்திருக்கலாமோ? என்ன சொல்லியிருப்பாள்? ஒன்றும் சொல்லியிருக்க மாட்டாள். சொன்னாலும் எதுவும் அவனுக்குப்புரியப்போவதில்லை. வாழ்நாளெல்லாம் பெண்கள் பேசிய எதுவுமே புரிந்ததில்லை. புரிந்ததேயில்லை….

கால்கள் தளர்ந்தன. படுத்துக்கொள்ளலாம் என்று தோன்றியது. சரியாகத் தூங்கி எத்தனை நாளிருக்கும்? ஆனால் இந்த பங்களாவில் அன்னிய ஒலிகளும் கடும்குளிரும் சூழ்ந்த படுக்கையில் தூங்கமுடியுமா?

ஆச்சரியமாக படுத்ததுமே அவன் தூங்கிவிட்டான். கடைசியாக அம்மாவைப்பற்றி ஏதோ நினைத்தான். அவனை திகைத்துப்பார்த்த முகங்கள் வழியாக பார்வை சென்றுகொண்டே இருக்க தூக்கத்தில் மூழ்கி மறைந்தான். உதிரி உதிரிக் கனவுகள் வழியாக சென்றுகொண்டே இருந்தான். ஏன் இப்படிப் பார்க்கிறார்கள்? அவன் அம்மாவின் மடியில் புடவைச்சுருளில் சுருண்டு படுத்திருந்தான். குனிந்துபார்க்கும் முகங்கள். இல்லை அத்தனைபேரும் கண்ணாடிச் சன்னல் வழியாக பார்க்கிறார்கள். கண்ணாடிச் சன்னல்களா? ஆமாம். அவன் பங்களாவில் மெத்தையில் படுத்திருந்தான். வெளியே காடு பகல் போல வெளிச்சத்துடன் இருந்தது. பங்களாவின் எல்லா கண்ணாடிச்சன்னல்களிலும் முகங்கள். எல்லாரும் திகைப்புடன் அவனைப்பார்த்துக்கொண்டிருந்தனர். இல்லை நான் வேண்டுமானால் இந்தக்கோட்டை கழற்றிவிடுகிறேன். நானில்லை….

விழுத்துக்கொண்டான். வாயின் ஓரம் எச்சில் வழிந்திருந்தது. தொண்டை வறண்டு மணலை விழுங்குவதுபோலிருந்தது. எழுந்து அமர்ந்தான். கோட்டுக்குள் உடல் கதகதவென்றிருந்தது, காய்ச்சல் வந்ததுபோல.

அப்போதுதான் கவனித்தான், அறையின் எல்லா சன்னல்கள் வழியாகவும் நிலவொளி உள்ளே வந்து நீள்சதுரவடிவங்களாக மரத்தரையில் விழுந்துகிடந்தது. சன்னல்கண்ணாடிப்பரப்புகள் வெளிச்சம்பட்ட திரவப்பரப்புபோல ஒளிவிட்டன. நிலவா?

அவன் எழுந்து வெளியே நடந்தான். பங்களாவின் எல்லா சன்னல்களும் நிலவொளியில் தகதகத்தன. சில சன்னல்களை கண்ணால்பார்க்கக்கூட முடியவில்லை. முன்வாசல் கதவைத்திறந்தான். வெளியே காடு நிலவொளியில் வெள்ளித்தகடுகளாக மின்னிக்கொண்டிருக்கும் இலைக்கூட்டங்களுடன் பிரமித்து அசைவிழந்து நின்றிருந்தது. வானில் மேகங்கள் காற்றில் புடைத்த வெண்பட்டுத்திரைச்சீலைகள் போலத் தெரிந்தன. நடுவே நிலவு.

ஆம் முழுநிலவு. முழுநிலவா? பௌர்ணமி இல்லை என்று முருகன் சொன்னானே. தவறாகச் சொல்லியிருப்பான். இது முழுநிலவேதான். பரிபூர்ணமான வட்டம். வட்டத்தைச் சுற்றி பெரிய செவ்வொளிவட்டம். அதைச்சுற்றி மின்னும் மேகங்களின் வட்டம். வானமே ஒரு பெரிய வட்டமாக அதைச்சூழ்ந்திருந்தது

அவன் முற்றத்தில் இறங்கினான். அத்தனை ஒளி இருந்தும்கூட அவன்கீழே ஒளிவிழவில்லை. மெல்லிய காற்றில் காட்டின் அனைத்து வெள்ளிதகடுகளும் மெல்ல அசைந்தன. இலைகளுக்குள் ஒரு மெல்லிய சலசலப்பு

அவன் பார்த்துக்கொண்டே நின்றான். இலையடர்வுக்குள் இருந்து இரு வெண்ணிறத் தந்தங்கள் நீண்டு வந்தன. ஒளிவிடும் பளிங்காலானவை. தரையை முகர்ந்து மெதுவாக நெளியும் நுனி கொண்ட துதிக்கை. கனத்தபெரும் கால்கள் மண்ணில் வைக்கப்படும்போது பஞ்சுப்பரப்பின்மீது பஞ்சுச்சுருள் விழுந்த மென்மை. கரிய உடல்மீது எண்ணைவிழுந்து வழிவதுபோல நிலவின் ஒளி. மத்தகத்தின் இருபுடைப்புக்குமேல் முள் எழுந்ததுபோன்ற முடி நிலவொளியை ஏற்றுச் சுடர்விட்டது. மெல்ல அவனைநோக்கி அது வந்தபடியே இருந்தது.

[தினமணி தீபாவளிமலர்]

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்-கடிதம்
அடுத்த கட்டுரைநடராஜகுரு நூல்கள்