பெரிய உயிர்களின் தேசம்

[ 1 ]

ஏறத்தாழ இருபதாண்டுகளுக்கு முன்பு தமிழ்ச்சூழலில் ஒரு கூற்று மிக அதிகமாக விவாதிக்கப்பட்டது. எஸ்.பொன்னுத்துரை அதைச்சொன்னார் என்று நம்பப்பட்டது.’அடுத்த நூற்றாண்டு தமிழிலக்கியத்தை புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் எழுதுவார்கள்’. அந்தவரி அன்றைய புலம்பெயர்ந்த ஈழத்தவர்களை பெரிதும் கவர்ந்தது. இந்தியாவில் பலர் அது ஈழத்தவர்களை மகிழ்விக்குமென்பதனாலேயே திரும்பச் சொன்னார்கள். இன்னும்சிலர் இலக்கியமென்பது அனுபவப்பதிவு என்ற எளிய சமவாக்கியத்தின் மீதான நம்பிக்கை காரணமாக அதைச் சொன்னார்கள்.

அதற்கேற்ப அன்று புலம்பெயர்ந்த ஈழத்தவர்கள் நடத்திய இதழ்கள் வந்து குவிந்தன. 1990ல் சுந்தர ராமசாமியின் இல்லத்தில் ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் இருபத்திரண்டு புலம்பெயர்ந்த ஈழத்தவர்கள் நடத்திய சிற்றிதழ்களை அவர் போட்டுவைத்திருந்ததை நான் எண்ணிப்பார்த்தேன். புலம்பெயர்ந்தவர்களின் ஏராளமான நூல்கள் வெளிவந்தன. மணிமேகலைப்பிரசுரம் அவற்றை அச்சிட்டுத்தள்ளியது. நானே அந்த உத்வேகத்தை பெரிதும் நம்பினேன்

ஆனால் வழக்கம்போல சுந்தர ராமசாமி அவரது யதார்த்தபோதத்துடன் இருந்தார். ‘இது ஒரு ஆற்றாமையோட வெளிப்பாட்டு, அவ்வளவுதான். சீக்கிரமே நிப்பாட்டிருவாங்க’ என்றார் ‘அதிகபட்சம் ஒரு பத்து வருஷ. இவங்க அந்தந்த ஊர்களிலே காலூணினதுமே எழுதவேண்டிய அவசியமில்லாம ஆயிடும். அடுத்த தலைமுறை தமிழே பேச வாய்ப்பில்லை’

‘ஏன் சார், இவ்ளவு புத்தகங்கள் வருதே?’ என்றேன்

‘ஆனா உள்ளடக்கம் என்னன்னு பாருங்க. எல்லாமே கடந்தகால ஏக்கங்கள்தான். புதிசாப்போன ஊரிலே அவங்களுக்கு இன்னும் மனசு தரிக்கலை. அவங்க விட்டுட்டு வந்த மண்ணை நினைச்சுப்பாக்கிறாங்க, அதுக்காக எழுதறாங்க’ என்றார் சுந்தர ராமசாமி. ‘இல்லேன்னா சமகால அரசியலை எழுதறாங்க. ரெண்டுக்குமே நிரந்தர மதிப்பு இல்லை’

‘நிரந்தர மதிப்புள்ளது என்ன?’

‘சொந்த அனுபவங்களும் சுயமான நுண்ணிய அவதானிப்புகளும்தான். அதெல்லாம்தான் இலக்கியத்தை உண்டுபண்ணுது.. இலக்கியத்தோட சதை அதுதான். அந்தச்சதையிலேதான் இலக்கியத்தோட உயிர் இருக்க முடியும்’ சுந்தர ராமசாமி சொன்னார் ‘…இவங்க இலங்கையிலே வாழ்ந்த வாழ்க்கையை எழுதுறதைக் கவனியுங்க. எல்லாருமே கிட்டத்தட்ட ஒரே விஷயங்களைத்தான் எழுதறாங்க. இலக்கியவாதி எழுதினா அது அவன் மட்டுமே எழுதக்கூடிய விஷயங்களா இருக்கும். அந்தக்கோணம் அவன் மட்டுமே காட்டக்கூடியதா இருக்கும். அவனைப்படிச்சா மட்டும்தான் அது கிடைக்கும். அது சும்மா நினைவுகூர்ந்து எழுதறதில்லை. அது வேற. அது ஆழ்மனசிலே இருந்து நேரடியா கிளம்பி வரக்கூடிய ஒண்ணு. uniquness இல்லேன்னா இலக்கியமே இல்லை.’

அதை பின்னர் நானே உணர்ந்தேன். எல்லாரும் சொல்லும் அரசியல் எல்லாரும்பார்க்கும் வாழ்க்கைத்தருணங்கள். அவற்றுக்கு அப்பால் சென்றவர்கள் சிலரே. அவர்களும் மிக விரைவிலேயே எழுதாமலானார்கள். புலம்பெயர்ந்த ஈழத்தவர்களின் இதழ்கள் அலைபின்வாங்குவதுபோல நின்றன. இலக்கியவேகம் மறைந்தது. எஸ்.பொன்னுத்துரை சொன்ன வரியை மேற்கோள் காட்டினால் இன்றைய வாசகன் ஆச்சரியப்படக்கூடும்.

சுந்தர ராமசாமி சொன்னார் ‘பெருவெட்டான விஷயங்களை எழுதறவங்க எழுத்தாளர்களே கெடையாது. சாதாரணமக்கள் ஏதோ சில காரணங்களுக்காக எழுத ஆரம்பிச்சா சீக்கிரமே சலிச்சு வெளியேபோயிடுவாங்க. எழுத்தாளனுக்கு மட்டும்தான் தொடர்ந்து எழுதற வேகம் இருக்கும்…’

எழுத்தாளர்கள் வாழ்க்கை அனுபவங்களால் உருவாவதில்லை. வாழ்க்கையை அவதானிப்பதனால் உருவாகிறார்கள். மிக எளியவாழ்க்கையிலிருந்துகூட மேதைகளான படைப்பாளிகள் கிளைத்திருக்கிறார்கள். அனுபவங்கள் நிகழும்போதே அவற்றை அவதானிக்கும் ஒரு மனவிலகல் எழுத்தாளனிடம் இருக்கிறது. ஒருபோதும் அவன் மக்களில் ஒருவன் அல்ல. மக்களுக்காக அவன் வாழலாம், மரிக்கலாம், ஆனாலும் மக்களை விலகிநின்று பார்க்கும் அன்னியன்தான் அவன். அந்த விலகல் மூலம் அவன் அடையும் வேறுபட்ட கோணமே அவனுடைய தனித்துவத்தை உருவாக்குகிறது

இக்காரணத்தாலேயே எழுத்தாளன் சமகால உணர்வலைகளை, கருத்துப்போக்குகளை முழுக்க ஏற்காதவனாகவே இருப்பான். அவன் ஊர்வலத்தில் ஒருவனல்ல. ஊர்வலங்களால் அவன் வெறுக்கப்பட்டு விமர்சிக்கப்படுவதும் இதனாலேயே. ஈழ எழுத்துக்களில் அந்த விலகல் கொண்ட எழுத்து மிகமிகக் குறைவாகவே கண்ணுக்குப்பட்டிருக்கிறது. அவ்வாறு கண்ணுக்குப்பட்ட அனைத்தையும் நான் கவனப்படுத்தியிருக்கிறேன்

[ 2 ]

புட்டுக்குழலில் இருந்து புட்டை வெளியே தள்ளுவதுபோல வாழ்க்கை யாழ்ப்பாண மக்களை வெளியுலகம் நோக்கித்தள்ளியது என்கிறார் நடேசன் இந்நாவலில். கொதிக்கக் கொதிக்க. அந்த வெளித்தள்ளலின் வலியையும் அதற்குப்பின்பான வாழ்க்கைப் போராட்டத்தின் அலைக்கழிப்பையும் அரிதாகவே நாம் இலக்கியமாகக் காண்கிறோம். காரணம் இலக்கியம் நேரடியாகச் சொல்லப்படக்கூடியவற்றால் ஆனதல்ல. மெடுசாவின் தலை போன்றது இலக்கியம் இலக்காக்கும் அதிஉண்மை. அதை புனைவின் மீது பிரதிபலித்து மட்டுமே பார்க்கமுடியும்.

புனைவை உருவாக்குபவை கூர்ந்த அவதானிப்புகள். புறத்தின் சிறு தகவல்கள். அகத்தின் நுண் நிகழ்வுகள். அவற்றால் தன் உடலை ஆக்கிக்கொள்ளும் படைப்புகளில் மட்டுமே நாம் ஒரு நிகர்வாழ்க்கையை வாழமுடியும். வாழ்ந்துபெறும் துயரை பரவசத்தை அறிதலை உணர்தலைப் பெற முடியும். அத்தகைய ஆக்கங்களில் ஒன்று நோயல் நடேசனின் வண்ணாத்திக்குளம். அந்நாவலுக்குப் பின் அவர் எழுதிய இரண்டாவது நாவல் இது.

இந்நாவலின் முக்கியமான அம்சமாக நான் கருதியது புலம்பெயர்ந்த ஆஸ்திரேலியச் சூழலில் பொருத்திக்கொள்ள ஈழத்தவர் அடையும் தவிப்பு நுணுக்கமாகப் பதிவாகியிருப்பதுதான். ஓர் இடைவெளியில் ஒரு உலோகத்துண்டை கச்சிதமாகச் செருக முயலும் இயந்திரத்தொழிலாளியை காணும் அனுபவம் போலத் தோன்றியது. வைத்துப்பார்க்கிறார், எடுத்து சூடாக்கி கூடத்தால் அடிக்கிறார். வைத்துப்பார்த்து எடுத்து அடிக்கிறார்.மீண்டும் ராவுகிறார். மீண்டும் வைக்கிறார். உரசுகிறார். மீண்டும் பொருத்திப்பார்க்கிறார். நசுங்கி உரசி சூடாகிப்பழுத்து உருமாறிக்கொண்டே செல்லும் உலோகத்துண்டின் வதைபோலிருக்கிறது அந்த வாழ்க்கை

பெயரை மாற்றிக்கொள்கிறார்கள். மிஸ்டர் சிவா மன்னிக்கவும் வேலை காலி இல்லை என்று எஜமானர்கள் அன்பாகச் சொல்வது எளிதாக இருக்கும்பொருட்டு. கோட்டும் சூட்டும் போட்டுக்கொள்கிறார்கள். நாவில் உச்சரிப்பைப் பழக்குகிறார்கள். மெல்ல மெல்ல தன்னைத்தானே அறைந்து ராவி உரசி இன்னொன்றாக மாற்றிக்கொள்கிறார்கள். அது ஒரு தொடர்பயணம்போல. அதன் முடிவில் ஓர் இடத்தில் நின்று திரும்பிப்பார்க்கையில் விட்டுவந்த தன் உருவம் நினைவுவெளியில் எங்கோ நின்று தன்னைநோக்கிப் பதைப்பதைக் காண்கிறார்கள்.

மண்ணிலிருந்து வெளியேறியவன் அடையும் முக்கியமான சவால் தன்னுள் ஊறிநிறையும் தன்னிரக்கத்தை வெல்வதுதான். தன் நிறத்தை, தன் மண்ணை , தன் பண்பாட்டைப்பற்றிய தாழ்வுணர்ச்சியாக அது நிறைகிறது. அதைவெறுத்துப் பழித்து விலக்கி இன்னொன்றாக தன்னை மாற்றிக்கொள்ளாமல் வாழமுடியாமலாகிறது. புலம்பெயர்ந்தவனின் பேரிழப்பு என்பது இதுதான். அதை உணர்ந்துகொண்டதும் அடையும் மிதமிஞ்சிய போலிப்பெருமிதம் இன்னொரு வகை திரிபு

“இந்த சுயபச்சாதாபம் மனிதர்களுக்கு மட்டுமல்ல இனங்களுக்கே ஏற்படக் கூடியது. சில இனங்கள் தொடர்ச்சியாக பழி வாங்கப்பட்டன என அரசியல்வாதிகளால் தொடர்ச்சியாக கூறப்படும்போது இந்த மன உணர்வு தேசிய உணர்வாக மாறிவிடுகிறது. இவைகளைப் புரிந்து அறிந்து கொள்ள பகுத்தறிவு உதவினாலும் பலர் மனஉணர்வுகளின் கைதியாக ஆகிவிடுவது தவிர்க்க முடியாதது” என உணரும் சிவா சுந்தரம்பிள்ளையின் தன்னறிதல் இந்நாவலின் முக்கியமான மையம்

நிற ஒதுக்குதலை மெல்லத் தாண்டிவந்துகொண்டிருக்கும் தேசம் ஆஸ்திரேலியா. ஆனால் எங்கோ அதை மீண்டும் மீண்டும் சந்திக்கநேர்கிறது. உன்னை இங்குள்ள விவசாயிகள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று சொல்லப்படுகையில் “அந்தப் பதில், காச நோய் உள்ளவன், கோழையும் இரத்தமும் கலந்து முகத்தில் காறித் துப்பியது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தியது. நீ ஒரு வெளிநாட்டவன் என்பதை அந்தப் பதில் உணர்த்தியது” என உணரும் சிவாவின் மனம் அவனுடைய இருத்தலின் உண்மையான பெறுமதியை உணர்ந்துகொள்கிறது. பிறகு அவனுடைய முயற்சியெல்லாம் அந்த யதார்த்தத்தின் மீது, அதை மறைத்தும் மறந்தும் இன்னொரு இருத்தலை கட்டிக்கொள்வதுமட்டுமே

[ 3 ]

நான் விரும்பும் அங்கத எழுத்தாளர்களில் ஒருவரான ஸக்கி எழுதிய டாபர்மெரி என்ற சிறுகதையில் டாபர்மெரி ஒரு பூனை பேசும். பூனை பேச ஆரம்பித்தபோதுதான் அதன் ஓர் இயல்பு அனைவருக்கும் தெரியும். சத்தமில்லாத காலடிகளுடன் நடக்கும் வல்லமை கொண்டது பூனை. பதுங்கியிருக்கும் உடல் கொண்டது. காத்திருக்கும் பொறுமையும் உடையது. மனிதனை அது நூற்றாண்டுகளாக வேவு பார்த்துக்கொண்டிருக்கிறது. அத்தனைபேரின் அந்தரங்கமும் அதற்குத்தெரியும். கடைசியில் டாபர்மெரி கொல்லப்படுகிறது. ‘நீ ஏன் ஒரு யானையை பேசப்பழக்கக் கூடாது? குறைந்தபட்சம் நம்முடைய படுக்கைகளுக்கு அடியில் வந்து படுத்துக்கொள்ளாதல்லவா?’ என்று அதைப் பேசப்பழக்கிய நிபுணரிடம் சொல்கிறார்கள்.

டாபர்மெரியை நினைவுறுத்துகிறது நடேசனின் இந்நாவலில் வரும் கொலிங்வூட் என்ற பேசும் பூனை. ’கோலிங்வுட் மெதுவாக வயிற்றில் முன்காலை வைத்து பின்னங்கால்களில் நின்றபடி சுந்தரம்பிள்ளையின் காதருகே முகத்தை உராய்ந்தது.

‘இந்த மனிதன் இப்படித்தான். கொஞ்சம் நாகரீகம் குறைவு. நீ அதை பொருட்படுத்தாதே. மனதில் எதையும் மறைத்து வைத்திருக்கத் தெரியாது’ – என அது பேச ஆரம்பிக்கும் கணம் இந்நாவலின் அடுத்த தளம் திறந்துகொள்கிறது

சிவாவின் சவால் அவன் முன் விரிந்திருக்கும் ஆஸ்திரேலிய வாழ்க்கைக்குள் ஓர் இடைவெளியில் பொருந்துவது. அவனால் அங்குள்ள வாழ்க்கையை அன்னியனின் கண்களுடன் மட்டுமே பார்க்கமுடிகிறது. அந்த வாழ்க்கையில் இருந்து அவனை நோக்கி நீண்டுவரும் பிரியத்தின் குரல் என்று கோலிங்வுட்டைச் சொல்லலாம். அவன் மனைவி சொல்வதுபோல அது அவனுடைய பிரமையாக, மனச்சிக்கலாகக் கூட இருக்கலாம். ஆனால் இறுகி உறைந்த அந்த அன்னியநாகரீகத்தின் நெகிழ்ந்த ஒரு துளி அந்தப்பூனை.
கோலிங்வுட் தமிழனிடம் பேசும் ஆஸ்திரேலியாவின் ஆன்மா என்று நினைத்துக்கொண்டேன். வெறுமொரு அனுபவப்பதிவாக நின்றுவிட எல்லா சாத்தியங்களும் கொண்ட இந்நாவலை ஒரு முக்கியமான கலைப்படைப்பாக ஆக்குவது இந்தப்பூனையின் கதாபாத்திரம்தான். தமிழில் பேசும்பூனைகளும் கிளிகளும் முன்னர் வந்திருந்தாலும் ஆசிரியரின் மறைமுகக்குரலை ஒலித்து தத்துவம்பேசாமல் தெளிவாக குணச்சித்திரத்துடன் தெளியும் கோலிங்வுட்டின் புன்னகைக்கும் முகத்தைத்தான் முதன்மையானதாகக் கருதுகிறேன்.

மாமன்னர் அசோகர் மிருகங்களுக்காக ஒரு வைத்தியசாலையை அமைத்தார் என்பது வரலாறு. ஓர் அம்மையார் தர்மத்துக்காக அமைத்த மிருகவைத்தியசாலையில் பணிபுரியும் சிவாவின் அனுபவங்களே இந்நாவலின் உடல். அறியப்படாத ஒரு தனியுலகம். நோயுற்ற மிருகங்கள் வந்தபடியே உள்ளன. அவை ஒவ்வொன்றும் தெளிவான குணங்கள் கொண்ட ஆளுமைகள். அவற்றின் உரிமையாளர்களுக்கும் அவற்றுக்குமான உறவும் பல உள்ளோட்டங்கள் கொண்டது.

ஒவ்வொன்றாகச் சொல்லிச்செல்லும் இந்நாவல் ஒருகட்டத்தில் இரண்டு எண்ணங்களை நோக்கிச் செலுத்துகிறது. ஒன்று , இந்தவாழ்க்கை மனிதர்களால் மட்டும் ஆனது அல்ல, மிருகங்களும் வாழ்க்கையின் பிரஜைகளே என்ற பார்வை. இன்னொன்று இங்கே மிருகங்கள் என சொல்லப்பட்டிருப்பவை மிருகங்கள்தானா என்ற எண்ணம். இவ்விரு கோணங்களும் இந்நாவலை இருவேறு வாசிப்புச்சாத்தியங்களை நோக்கிச் செலுத்துகின்றன. அதுவே இந்நாவலின் அழகியலின் வெற்றி.

மிருகங்களின் நோயுலகத்துக்குச் சமானமாக ஓடுவது அந்த வைத்தியசாலையின் ஊழியர்களின் உள்ளரசியல். காமமும் பொறாமையும் தொழில்போட்டியும் புரிதலின்மைகளும் நட்பும் கலந்து உருவாகும் ஒரு விளையாட்டாக அது நாவலின் உடலெங்கும் விரிகிறது. ஒவ்வொருவருக்கும் ஓர் ஆளுமையை, வாழ்க்கைப்புலத்தை, வரலாற்றுப்பின்னணியை முன்வைக்கிறது நாவல். அராபியர்கள் சீனர்கள் ஐரோப்பியர்கள் என பல்வேறு இனங்களில் இருந்து அந்தப்புதியநிலத்தில் வாழவந்த சமூகங்களின் பிரதிநிதிகள் அவர்கள்.
எளிய உறவுவிளையாட்டாக ஆரம்பிக்கும் இந்த சித்தரிப்பு நாவல் விரிய விரிய ஆஸ்திரேலியாவின் சமூக-அரசியல் வாழ்க்கையின் சித்திரமாகவே தென்படுகிறது.

ரிமதி, பார்தோலியஸ், ஜோஸே, மரியா,மிஷேல், பாலின்,கார்லோஸ்,சாருலதா என நினைவில் மோதும் பெயர்கள் வழியாக பண்பாடுகள் குழம்பிக்கலந்து உருவாகும் ஒரு புதியபண்பாட்டின் துளியை வெற்றிகரமாகச் சித்தரிக்கிறார் நடேசன் என்னுடைய வாசிப்பில் தமிழில் எழுதப்பட்ட ஒரு நாவலில் ஓர் அன்னியநாட்டைன் சமூகவியலும் பண்பாடும் இத்தனை நுட்பமாக விவரிக்கப்படுவது இதுவே முதல்முறை. இதற்குச் சமானமாகச் சொல்லப்படவேண்டியது ப.சிங்காரத்தின் புயலிலே ஒருதோணி நாவலின் ஆரம்பப் பக்கங்களை மட்டுமே.

ஒரு வாசகன் எளியவாசிப்பில் இவ்விரு உலகங்களையும் தொடர்பற்றவையாக எடுத்துக்கொள்ளக்கூடும். ஆனால் கற்பனையால் அவற்றை இணைக்கமுடிந்தால் ஆசிரியர் உருவாக்கும் வாழ்க்கைத்தரிசனம் முழுமையாகக் கிடைக்கலாம்.

[ 4 ]

வாழ்க்கை கைக்குள் நிற்காமல் வழிந்து விரிந்து  பரவிக்கொண்டிருப்பதை எப்போதும் இலக்கியவாதி உணர்வான். அனைத்தையும் சொல்லிவிடமுடியாதென்ற பதைப்பை ஒவ்வொன்றைச் சொல்லும்போதும் அவன் உணர்வான். ஆகவே வாழ்க்கையை முழுக்கச் சொல்லிவிடக்கூடிய வாழ்க்கையின் ஒரு பகுதியை அவன் வெட்டி எடுத்துக்கொள்வான். ஒரு குடுமபம்,ஒரு தெரு, ஒரு நகரம். இது ஒரு மருத்துவமனை
ஒருவாசகனாக இந்த மருத்துவமனை எனக்கு ஆண்டன்செகோவின் ஆறாவது வார்டை, தாம்ஸ்மன்னின் மேஜிக்மௌண்டனை, ஷோல்செனித்ஸினின் கான்சர்வார்டை நினைவுறுத்தியது. நோயில்பிரதிபலிக்கும் வாழ்க்கை. உதிர்ந்தவற்றால் காட்டப்படும் காடுபோல. இங்கே வேறுபாடு விதவிதமான நோயாளிகளாக வந்துகொண்டே இருக்கும் மிருகங்கள்.

என் தந்தையின் வழியில் நான் அடைந்தது மிருகங்கள் மீதானபிரியம் இந்த நாவலை பெரும் பரவசத்துடன் என்னை வாசிக்கவைத்த அம்சம் அதுதான். குறிப்பாக நாய்கள். இருபத்துமூன்று சகநாய்களின் கூண்டுகளிலும் புகுந்து மிஞ்சியதை முழுக்கத் தின்னும் அந்த லாப்ரடாரைக் கண்டால் அதை கொஞ்சாமல் என்னால் நகரமுடியாது. அந்த வேகம் உணவாக முன்னால் வந்து நிற்கும் இவ்வுலகின்மீதான பெரும் பற்று அல்லவா?

ஞானியின் சமநிலைமிக்க எளிமையுடன் இவ்வுலகை விட்டுச் செல்கிறது காலிங்வுட். ”கொலிங்வுட், உனது கடைசி ஆசை என்ன? ” “எனக்குப் புரிந்து விட்டது. ஒழுங்காக என்னைக் கருணைக்கொலை செய்’என்ற வரிகளில் இந்நாவலின் உச்சத்தை நான் கண்டறிந்தேன். இயல்பாக இருந்து இயல்பாக உதிரும் கோலிங்வுட்டின் நிமிர்வுக்கு முன்னால் விதவிதமாக திருகி வளைந்து நெளிந்து நின்றிருக்கிறார்கள் மனிதர்கள். எளிய உயிர்கள்.

[நோயல் நடேசன் எழுதி வெளிவரவிருக்கும் ‘அசோகனின் வைத்தியசாலை’ நாவலுக்கு எழுதிய முன்னுரை]

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 6
அடுத்த கட்டுரைவெண்முரசு – வாசிப்பின் வாசலில்…