«

»


Print this Post

அப்பாவின் குரல்-கடிதங்கள்


ஆசிரியருக்கு,

வணக்கம். மனதை உலுக்கும் கதை. உறவு என்பது அன்பினால் இல்லாமல் போனால், அன்பின் சுவடுகளை அடையாளம் காணாமல் போனால் வரும் தனிமையையும், அன்பு மறுக்கப்பட்டவர் தரும் அருகாமையையும் கடும் வறட்சியை காட்டுகின்றன. வாசிப்பும், வாசிப்பை தொடர்ந்த சிந்தனையும்,வாசிப்பின் வரிகளை மீண்டும் மீண்டும் தனக்குள் பேசி கொள்வதும் அருகில் உள்ளவர்களை அப்பாலும், எழுத்தில் உள்ளவர்களை அருகிலும் வைக்கின்றது.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

என்புதோல் போர்த்த உடம்பாக இல்லாமல் இருக்க உயிர்நிலையை கை கொள்ள வேண்டுமென்ற துடிப்பே நாக்கை அறுக்க வைத்ததோ என்னமோ?

கடும்சொற்கள் மிக பலமானவை. திரும்ப திரும்ப சொல்லப்படுவதின் மூலம் மண்புழுக்கள் உடலின் ஈரத்தை வெயில் துளி துளியாக இழந்து துடிப்பது போன்ற உக்கிரத்தை/சூட்டையே வைக்கின்றன. அதில் இருந்து தப்பி விட வேண்டுமென துடிப்பு உண்டு. ஆக கூடுவது இல்லை. துளி துளியாய் மரணம். நான் இப்போது நிம்மதியாக இருக்கிறேன் என குடிகார மகனையும், கணவனையும் விபத்தில் தொலைத்த தாய் ஒருவள் சொன்னதை கேட்டிருக்கின்றேன். அந்த நிம்மதி என்ன என்பதை என்னால் உணர முடியாது. தினமும் அடியும், உதையும், ஏச்சும் வாங்கி கொண்டு இருந்தவள் சொன்னதை என்னால் உள்வாங்கவும் முடியாது. மண்புழு ஈரம் இழப்பது போன்ற இடம் அது. அங்கு மீட்பு வேறு வடிவில் வந்தது. இங்கு கதையில் அப்பாவின் எதிரொலிப்பு கதாநாயகனின் உள்ளே இருந்து ஈரத்தை உறிஞ்சும் முன் மீட்டு எடுக்க போராடுகின்றான். அந்த போராட்டமே இதை நல்ல கதையாக்குகின்றது.

அன்புடன்
நிர்மல்

அன்புள்ள ஜெ,

அப்பாவின் குரல் வலுவான கதை. ஆனால் கதை சரியாகப்புரியவும் இல்லை. அப்பா அம்மாவை அவமானம்செய்கிறார். புண்படுத்தும் சொற்களை அள்ளி இறைக்கிறார். அது அவரது ஆணவத்தால்மட்டும்தான். மற்றபடி அவருக்கு பெரிய வன்மம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அல்லது கதையிலே எனக்குத் தட்டுப்படவில்லை. அப்படியிருக்க‌  செத்துப்போனபிறகும் அவர் வந்து எதற்காக மகனிடம் மனைவியைத்திட்டும்படிச் சொல்லவேண்டும்? ஆனால் அவர் வந்து அப்படிச் சொல்லும் அந்த இடம் high drama.

சரவணன் எஸ்

அன்புள்ள ஜெ

அப்பாவின்குரல் வாசித்தேன். அற்புதமான கதை. எல்லா வீடுகளிலும் உள்ள எளிமையான விஷயம்தான். நானே பார்த்திருக்கிறேன். மனைவியை குடும்பத்தலைவர் அவமானம் செய்தால் அவரது குழந்தைகளும் கொஞ்சம் கொஞ்சமாக அதைக் கற்றுக்கொள்கின்றன. அதாவது எப்படிப்பட்ட நல்ல குழந்தைகளாக இருந்தாலும் அந்த மனநிலை உள்ளே அப்படியே பதிந்துவிடுகிறது. அப்பாவால் அம்மா அவமானப்படுவதைக் கண்டு மனம் வருந்தி வளரக்கூடிய பிள்ளைகள்கூட அறியாமல் அப்பாவைப்போலவே பேசுகின்றன. எங்கள் குடும்பத்திலும் அப்படித்தான் நடந்தது. கதாநாயகனின் நாக்கிலே வந்து அமர்ந்திருக்கும் அப்பாவை மிக அற்புதமாக காட்டியிருந்தார் ஜெயன். வாழ்த்துக்கள்

சிவா

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/40734