பூ – கடிதங்கள்

ஜெ,

போகனின் பூ அற்புதமான கதை. ஒரு உணர்ச்சிகரமான கதையுடன் மீண்டும் புதியவர்களின் கதைகள் ஆரம்பித்திருப்பது ஆவலைத்தூண்டுகிறது. ஒரு நல்லகதை என்னைப்பொருத்தவரை வாசித்துமுடித்தபிறகு ஏதோ கனவு கண்டதுபோல அல்லது எங்கேயோ போய்விட்டு வந்ததுபோல ஒரு நல்ல ஞாபகமாக இருந்துகொண்டிருக்கவேண்டும். அதைப்பற்றி யோசிக்கும்போது சடசடவென்று உள்ளே ஒரு சினிமா ஓடவேண்டும். பூ அப்படிப்பட்ட கதை. அதிலே யட்சியாக ஆகிவிட்ட அம்மா ஜன்னல்வழியாக பார்த்துக்கொண்டு நிற்கும் சித்திரம் மிகவும் பயங்கரமானது. அதேசமயம் அழகாகவும் உள்ளது. அது மறக்கமுடியாத ஒரு படம் போல மனதிலே தங்கிவிடுகிறது.

சிவராமன்

ஐயா,

​​போகனின் ‘பூ’ சிறுக​தை வாசித்​தேன். அதில் இ​யேசு கிறிஸ்து ​​​ஜெபிப்ப​தை சித்திரிக்கும் ஓவியத்​தைப் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அக்குறிப்பில் சீனாய் வனாந்தரம் என்பதற்குப் பதிலாக, ​கெத்​செம​னே ​தோட்டம் என்றிருக்க ​வேண்டும்.

மத்தேயு

26 அதிகாரம்

36. அப்பொழுது, இயேசு அவர்களோடே கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீஷர்களை நோக்கி: நான் அங்கே போய் ஜெபம்பண்ணுமளவும் நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி;

37. பேதுருவையும், செபதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார்.

லூக்கா

22 அதிகாரம்

44. அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.

​கெத்​செம​னே ​ஜெருச​லேமில் (எருச​லேம் – ஒலிவம​லை) உள்ளது.

இஸ்ர​வேல் புத்திரர் கடந்து வந்தது சீனாய் வனாந்தரம். அது எகிப்து பகுதியில் உள்ளது.

யாத்திராகமம்

19 அதிகாரம்

1. இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே, சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்தார்கள்.

அன்புடன்
ஆசீர்

முந்தைய கட்டுரை2. அப்பாவின் குரல் – ஜெயன் கோபாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரை3. கடலாழம் – கிறிஸ்டோபர்