புறப்பாடு – வறுமை – கடிதம்

அன்புள்ள ஜெ சார்,

புறப்பாடு குறித்த எனது மனப்பதிவுகளை பகிர்ந்து கொள்ள இந்த கடிதத்தை எழுதுகிறேன். அதற்கு முன்னரே ஒரு disclaimer: நான் வாசிப்பின் ஆரம்பத்தில் இருக்கும் மிக மிக ஒரு எளிய வாசகன் மட்டுமே. நீங்கள் எழுத்தினூடாக மறைபொருளாக சொல்லும் விஷயங்களில் பல என் தலைக்கு மேல் தாண்டிச் செல்வதே வழக்கம் :-) ஆனாலும் தொடர்ந்து வாசிப்பவன் என்ற தகுதியிலும், படித்ததின்பாற் தோன்றியவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலிலும் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

புறப்பாடு வரிசையில் நான் மீண்டும் மீண்டும் கண்டு வியக்கும் ஒரு கூறு, மிக மிக நேர்த்தியாக, இயல்பாக வெளிப்படும் கால யதார்த்தம். சிற்சில சொற்றொடர்கள் மூலமாக, வர்ணனைகள் மூலமாக இயல்பாக, இயைந்து வெளிப்படும் காலயதார்த்தம் அப்பதிவுகளுக்கு மிகவும் வலு சேர்க்கின்றது. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் பம்பாயும், சென்னையும், ஹரித்வாரும், காசியும் எப்படி இருந்தன என்ற காட்சியை மிக எளிதாகக் காண முடிகிறது.

அடுத்தது, நெற்றிப் பொட்டில் அறையும் படிமங்கள். முதிராத எள்ளாக தற்கொலை ஆத்மாக்கள் அலைகிறார்கள். அப்போது முழுவதுமாக வாழ்ந்தவர்கள்? தங்களை வாழ்க்கை நசுக்கும் போதும் அதை எதிர்கொள்பவர்கள், இறையையே குளிர்விக்கும் நல்லெண்ணை ஆகிறார்கள்.

மனிதனின் ஆன்மீக இருப்பை பாயசத்துடன் ஒப்பிட்டு வெகு எளிதாக, வாழ்க்கையின் சாரத்தை சொல்லும் விராஜர். இந்த உடலும், மனமும், வாழ்க்கையும் வெறும் தட்டுதான். வெறும் தொன்னைதான், உண்மையான இருப்பு ஒருவரின் ஆன்மீக அகம்தான். ஆனாலும் தட்டை உதாசீனப்படுத்தக்கூடாது, அழுக்காக வைக்கக்கூடாது. அது கிருஷ்ணப் பிரசாதமான பாயசத்தை ஏற்க தகுதியுடன் இருக்க வேண்டும். ஆமாம், எனக்கும் மூச்சடைத்தாற் போல் இருந்தது, எனக்கும் உங்கள் கைகளை பற்றிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. உங்களாலும் முடியவில்லை, என்னாலும் முடியவில்லை.

அருளப்ப சாமியுடன் செல்லும்போதும் உங்களால் தூக்கிப்போட முடியாத பென்சில். ஒரு வேளை தூக்கிப் போட்டிருந்தால்? நீங்களும் இன்னொரு அருளப்ப சாமியாகி இருப்பீர்களோ என்று தோன்றுகிறது. இங்கே பென்சில் சுட்டுவது எதை? உங்கள் தர்க்கபுத்தியுன் கூடிய அறிவையா? அல்லது எழுத்தையா? அல்லது இரண்டையுமேயா?

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். பாம்பின் மீது படுக்க முடிந்தால் நல்லது என்று நீங்கள் நினைப்பது ஏன்? அதன் விஷம் அஞ்சியாவது பிறர் நம்மிடம் வரமாட்டார்கள் என்றா? தன் மனைவியை அன்னையாகவும், இணையாகவும் நினைக்கும் கேசப். அவர் வருடாவருடம் பலி கொடுக்கும் எருமை அது? அவரிடம் இருந்த பயத்தையும், தாமச குணத்தையுமா? வீட்டிற்குள்ளேயே மல நீர் வழியும்போதும் ராஜூவால் தன்னை சுத்தமாக வெள்ளையாக வைக்க முடிகிறது. அங்கே அவரிடம் எக்ஸிடென்ஷியலிச துக்கம் இருந்தாலும் அவர் மனதால் கங்கையை நினைக்கவும் வழிபடவும் முடிகிறது.

அடுத்தது, படிக்கும்தோறும் நமக்கு ஏற்படும் அசௌகரியம். ஆம், அதை அப்படித்தான் சொல்ல வேண்டும். இன்னும் ஆயிரம் ஆயிரம் மக்கள் மிக மிக மோசமான நிலையில் வாழ்கிறார்கள். இரயில் பரிசோதகரால் காறி உமிழப்படுகிறார்கள். இரத்தப்போக்கு இருந்த போதிலும் புணரப்படுகிறார்கள். சகிக்க முடியாத சாக்கடை நாற்றத்திலும், கொசுக்கடியிலும் சமைத்து, பேசி தூங்குகிறார்கள். அமிலமும், கந்தகமும் அவர்கள் உடலில் ஆறாத புண்களாகின்றன. பன்றியின் பிரேதம் மழை நீரில் மிதந்து அவர்கள் வீட்டிற்கே வருகிறது. இவர்களை நாம் தினசரி பார்க்கும்போதும், இவர்களின் நிலை தெரிந்த போதும், நாம் நம் வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்துகொள்கிறோம். நமக்கு அறச்சிக்கலே எழுவதில்லை. ஏனெனில் நம்மை சமாதானப்படுத்திக் கொள்ள நிறைய வாதங்கள் உள்ளன. இவை இவர்கள் போன ஜென்மத்தில் செய்த பாவத்தின் விளைவு. இவர்களது வாழ்க்கைத்தரம் அதிர்ச்சியும் சங்கடமும் அளிப்பது நமக்கே. அவர்களுக்கு அது இயல்பே. அவர்கள் நுண்ணுணர்வு அற்றவர்கள், ஆகவே இவை அவர்களை பாதிப்பதில்லை. இப்படி ஓயாமல் சமாதானம் சொல்லிக் கொள்கிறோம். பின்பு அசோகமித்திரன் கதையின் நாயகன் சொல்வது போல நமக்கு ‘பின்னர் எல்லாம் சரியாகிவிட்டது’. [இப்படி எழுத்தாளருக்கு கடிதம் எழுதுவதுகூட ஒரு வகை சமாதானம் தானோ? “என்ன சார் இப்படி இருக்காங்க? சே படிக்கும் போது கஷ்டமாயிடுச்சு” என்று சொல்லிவிட்டால் சற்று லகுவாகிவிடுகிறது. அடுத்த வேலையை நிம்மதியாக பார்க்கச் செல்லலாம் :-( ]

இந்த இடத்தில் ஒரே ஒரு கேள்வி. உங்களுடைய அவதானிப்பில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பை விட இப்போது ஏழை எளியவர்களுக்கு சற்றேனும் வாழ்க்கைத்தரம் மேம்பட்டு உள்ளதா? குறிப்பாக 92-இல் நிகழ்ந்த பொருளாதார மாற்றத்தின் மூலம் வாழ்க்கைத்தரம் அனைவருக்கும் உயர்ந்துள்ளது என்பதே எங்களின் மனபிம்பம். இது உண்மைதானா? உங்கள் கருத்து என்ன?

இரயிலை குறித்த பதிவுகள் எனக்கு nostalgia கிளப்பியது. பால்யத்தில் நிறைய இரயில் பயணங்கள் போன அனுபவம் எனக்குண்டு. பழைய சினிமா பாடல்கள் குறித்த பதிவில் நல்ல வேளையாக இளையராஜா பாடல்கள் வரவில்லை. எம்.எஸ்.வி. பாடல்களும் பிடிக்கும் என்றாலும், அந்த இடத்தில் ராஜா சார் பாடல்களாக வந்திருந்தால் உணர்ச்சி வேகம் மட்டுப்பட வெகு நேரம் ஆகியிருக்கும். [இது என்னுடைய தனிப்பட்ட அவதானிப்பு. கொஞ்சம் இளையராஜா பாட்டையும் mention பண்ணியிருக்கலாமே சார் என்று சொல்ல வரவில்லை].

இன்னும் சொல்லாமல் விட்டது நிறைய உள்ளது. உங்களுடைய ஒவ்வொரு பதிவும் ஒரு அறிதலாக, ஒரு திறப்பாக உள்ளது. உள்ளம் நிறைந்த நன்றிகள் பல.

அன்புடன்
கிருஷ்ணன் ரவிக்குமார்.

அன்புள்ள கிருஷ்ணன் ரவிக்குமார்,

நன்றி. புறப்பாடு ஒரு தொடர் அனுபவம் என்பதைக்காட்டிலும் ஒரு தொடர்நினைவுகூரல் என்று சொல்வதே பொருந்தும். நினைவுகூரச்செய்யும் அம்சமாக உள்ளது மையமான உணர்ச்சி, அதை ஏற்று நிற்கும் குறியீடு.

நான் சென்ற முப்பதாண்டுக்காலமாக பயணம் செய்துகொண்டே இருக்கிறேன். வருடத்தில் ஒரு முறையேனும் ஒரு நீண்ட இந்தியப்பயணம் உண்டு.

எண்பதுகளில் சென்னையில் உயர்நீதிமன்ற வளாகத்தின் முன்னால் ஊழியர்களுக்கு சாப்பாடு கொண்டுவரும் கூடைக்காரிகள் அமர்ந்திருப்பார்கள். சாப்பாட்டு அடுக்குபாத்திரங்களில் கண்டிப்பாக கொஞ்சம் சோற்றை மிச்சம் வைக்கவேண்டுமென்பது விதி. எச்சில் சோறு. பலவகையான கூட்டுக்கள் பொரியல்கள் குழம்புகள் மோர் எல்லாவற்றையும் சோற்றுடன் ஒன்றாகக் கொட்டி பெரிய கவளங்களாகப்பிடித்து உருட்டி ஒரு கவளம் இருபது பைசாவுக்கு விற்பார்கள். ரிக்‌ஷாக்காரர்கள் நாடோடிகள் எல்லாம் வாங்கி கையிலேயே வைத்து உண்பார்கள். இன்று அப்படி ஓர் உணவை எந்த பிச்சைக்காரனும் சாப்பிடமாட்டான்.

எண்பதுகளில் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுமிடங்களில் கூட்டம் முண்டியடிக்கும். இன்று அன்னதானம் உண்ண நம்மை வருந்தி அழைக்கிறார்கள் வேண்டுதல் செய்பவர்க.ள்

என் நினைவில் உள்ள இந்தியசித்திரத்தில் இந்தியாவில் முதல்நிலை வறுமை பெருமளவு இல்லாமலாகிவிட்டது. அதாவது இன்று உணவும் உடையும் ஒரு பெரிய விஷயமல்ல. அனேகமாக அனைவருக்குமே அவை கிடைக்கின்றன. இன்று ஒருவர் குறைந்தபட்சம் சம்பாதிக்க முடிவதில் ஐந்தில் ஒருபங்கு போதும், உணவு கிடைத்துவிடும். இந்தியாவெங்கும் இதுவே நிலை.மீண்டும் மீண்டும் இதையே நான் கண்டுகொண்டிருக்கிறேன்.

ஆகவே வறுமையின் இலக்கணம் மாறிவிட்டது. இன்றைய வறுமை நகரங்களில் உறைவிட பிரச்சினையாக வெளிப்படுகிறது. தரமான கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்கான பற்றாக்குறையாக உள்ளது.

இன்று இந்திய அளவில்கூட உடலுழைப்புத்தளத்தில் வேலையில்லா திண்டாட்டம் இல்லை. பிகாரிலும் மத்தியப்பிரதேசத்திலும் கூட.

ஆக இந்தியாவில் வறுமை ஒழிப்பின் முதல்கட்டம் வெற்றிகரமாக நிகழ்ந்துவிட்டதென்றே நினைக்கிறேன். ஆனால் அடுத்தகட்டம் நோக்கி நம்மால் நகரமுடியவில்லை.

முதன்மைக்காரணமாக உள்ளது கிராமப்புறங்களில் பூதாகாரமாக வளர்ந்திருக்கும் குடிப்பழக்கம். மிகமிக மோசமான மது – உண்பதற்கு தகுதியற்ற ஒரு ரசாயனத்திரவம் – நம் உழைக்கும் மக்களால் குடிக்கப்படுகிறது. பெரும்பாலானவர்களின் வருமானத்தில் தொண்ணூறு சதவீதத்தை அது உறிஞ்சிவிடுகிறது. நாற்பதுவயதுக்குள் உழைக்கமுடியாதவர்களாக ஆக்கிவிடுகிறது. இந்தியாவில் இன்று குழந்தைகள் பட்டினிகிடக்க, நோயுற்றுச்சாக முக்கியமான காரணம் இதுவே.

இந்த யதார்த்தத்தை மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இந்தியாவின் அரசுகளே மக்களுக்கு கீழ்த்தரமான மதுவை அதன் மதிப்புக்கு முப்பது மடங்கு அதிகவிலைக்கு விற்று பணம் சேர்க்கின்றன. அந்தப்பணத்தில் தொண்ணூறு சதவீதம் ஊழல்கள் வழியாக அரசியல்வாதிகள் மற்றும் முதலாளிகள் கைகளுக்குச் செல்கிறது.

இங்கே இடதுசாரிகளும் வலதுசாரிகளும் இந்த யதார்த்தம் பற்றி பேசுவதில்லை. இதை கட்டுப்படுத்துவது பற்றி கவலைப்படுவதில்லை. ஏனென்றால் எல்லாருமே மது விற்ற பணத்தின் மீதுதான் அமர்ந்திருக்கிறார்கள். இந்தியாவின் அடித்தள மக்களின் மதுப்பழக்கம் கட்டுப்படுத்தப்படாவிட்டால் வறுமை ஒழிப்பின் அடுத்தகட்டம் நிகழவே போவதில்லை.

ஜெ

முந்தைய கட்டுரைஜெயன் கோபாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரை2. அப்பாவின் குரல் – ஜெயன் கோபாலகிருஷ்ணன்