வாக்களிக்கும்பூமி 9, சட்டச்சபை

ஜூலை பதினெட்டாம் தேதி நானும் ஓப்லா விஸ்வேஷ¤ம் அவரது குட்டிமகனும் அல்பெனி நகரத்தைப் பார்க்க கிளம்பினோம். அல்பெனி ஹட்சன் ஆற்றின் கரையில் உள்ளது.  ஆரம்பகால பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட உள்நில நீர்ப்போக்குவரத்து வழிகளில் ஹட்சன் ஆற்றுப்போக்குவரத்து முக்கியமான ஒன்று என்கிறார்கள்.  இது ஏரீ கால்வாய் வழி என்று சொல்லபப்டுகிறது.

வெள்ளையர் இங்கே வருவதற்கு முன்னர் இங்கே மாஹிகான் [Mahican] குலத்தைச் சேர்ந்த பூர்வகுடிகள்  வசித்திருந்தார்கள். கடுமையான இன ஒழிப்புக்குப் பின்னர் இவர்கள் இன்று மக்கள் தொகையில் .02 சதவீதம் மட்டுமே இருக்கிறார்கள்.  1609ல் பிரிட்டிஷ் மாலுமி ஹென்றி ஹட்சன் ஆற்று வழியாக அங்கே வந்து அப்பகுதியை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்காக அடையாளப்படுத்தினார். அந்த ஆற்றுக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. 1914ல் அங்கே வெள்ளையர் குடியேறினார்கள். டச்சுக்காரர்களால் உருவாக்கப்ப்ட்ட நாசாவ் கோட்டை [Fort Nassau] அவர்களின் முதல் மையம்.

காலப்போக்கில் அங்கிருந்த பிற ஐரோப்பியர்களை வென்று பிரிட்டன் அந்நிலத்தை கைப்பற்றியதும் அந்நகரம்  பிரிட்டனின் யார்க் மற்றும் அல்பனி பகுதியின் குறுநில மன்னர் ஜேம்ஸ் இரண்டாமனின் பெயரால் அல்பெனி என்று பெயரிடப்பட்டது. பின்னர் நியூயார்க் மாகாணத்தின் தலைநகரமாக நிறுவப்பட்டது.

 

சிறிய நகரங்கள் நம் மனதுக்கு உவப்பானவையாக இருப்பதற்குக் காரணம் அவற்றை நாம் நம் மனதால் அள்ளமுடிகிறது என்பதே. அதாவது நாம் அவற்றை ஒரு நகரம் என்ற அளவிலேயே மனதுக்குள் உருவகிக்க முடிகிறது. மாபெரும் நகரங்கள் நமக்கு திகைப்பை அளிக்கின்றன. ஒருபோதும் அவற்றின் நிலவடிவம் நம் மனதில் உருவாவதில்லை. மாநகரங்களின் சில பகுதிகளிலேயே நாம் மானசீகமாக வாழ்வோம். அவையே அந்நகரம் என எண்ணியிருப்போம்.

ஆனால் மாபெரும்நகரங்கள் அளிக்கும் பெரும் விடுதலை ஒன்றுண்டு. அவை நம்மை கூட்டத்தில் ஒருவனாக, அலைகளில் ஒரு துளியாக  உணரச்செய்கின்றன. அவற்றில் நாம் தொலைந்துபோய்விட முடிகிறது. அந்தக்காரணத்தால்தான் சாதாரண மக்களுக்கு எப்போதும் நகரங்களை பிடித்திருக்கிறது.

அல்பெனி சாலையில் விரையும்போது ‘முட்டை’ [The Egg] என்று சொல்லப்பட்ட ஒரு கட்டிடத்தைப் பார்த்தேன். விசித்திரமான அமைப்புள்ளது அது. எம்பயர் ஸ்டேட் பிளாஸா என்ற நிறுவனத்தின் முன்னால் உள்ளது இந்த கட்டிடம். இது ஒரு நிகழ்த்துகலைஅரங்கம். காரில் அங்கே இறங்கி அந்த கட்டிடத்தைச் சுற்றிப்பார்த்தேன்.

ஒருபெரிய சிப்பியை மல்லாக்க வைத்தது போல் இருக்கிறது. அல்லது சிறிய ஆமைஓடு போல. அதன் சுவர்கள் நீர்வாழ் உயிரினங்களுக்குள்ள வழவழப்பான மேல்செதில்களால் ஆனவை போலிருக்கின்றன. ஆனால் அது ஒரு தோற்றம். அருகே சென்றால் அச்செதில்கள் கற்களால் ஆனவை என்று தெரியவரும்

பெரும் கற்களை தூக்கிவைத்து அக்கட்டிடத்தின் அடித்தளத்தையும் சுற்று மதில்களையும் எழுப்பியிருந்தார்கள். அக்கற்களுக்கு இடையே உள்ள இடுக்குகளில் இருந்த இணைப்புப் பூச்சை கையால் தொட்டால் அமுங்கியது. ரப்பர்க் குழம்பை ஊற்றி அவற்றை இணைத்திருந்தார்கள். ஆச்சரியமாக இருந்தது. நிலநடுக்கத்தாலோ நிலம் சாய்வதனாலோ அக்கற்கள் கொஞ்சம் அசைந்தால்கூட கட்டுமானங்கள் விரிசல்விடாமலிருக்க அப்படிச் செய்கிறார்கள் போலும்!

நியூயார்க் மாகாணத்தின் சட்டச்சபைக் கட்டிடம் அல்பனியில்தான் உள்ளது. நகர்நடுவே ஒரு அழகிய புல்வெளிச்சத்துக்கத்தில் நின்றது அது. அதிகாரத்தின் அழகு என்று அந்த கட்டிடத்தைச் சொல்லலாம். ரோமாபுரிக் கட்டிடக்கலையின் சாயல் இக்கட்டிடத்தின் சிறப்பு. [ரோமாபுரிக் கட்டிடக்கலை மறுமலர்ச்சிக்கால ஐரோப்பாவில் மறுவடிவம் எடுத்தது. அந்தப்பாணியில் அமைந்த கட்டிடம் இது]

பொதுவாக அமெரிக்கா முழுக்கவுமே இதைக் கவனித்தேன். தங்களை ஒரு நவீன ரோம் என்றே அவர்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் பெரும்பாலான பழைய கட்டிடங்களில் காணக்கிடைக்கும் உருண்டைத்தூண்களில், கட்டிடங்கள் மேலே உள்ள மகுடங்களில் எல்லாம் ரோமாபுரி நினைவு. அமெரிக்காவின் இலச்சினையேகூட ரோமாபுரிக் கழுகுதான்.

மாநிலச் சட்டச்சபையின் இக்கட்டிடம் 1867ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. 1899ல் முழுமை பெற்றது.  தாமஸ் ·புல்லர் Thomas Fuller  இதன் முதல் சிற்பி. பின்னர் இது லியோபால்ட் எட்லிட்ஸ் Leopold Eidlitz மற்றும் ஹென்றி ரிச்சர்ட்சன்  Henry Hobson Richardsonகென்னும் சிற்பிகளால் மறுவடிவமைப்பு செய்யபப்ட்டது. கடைசியாக ஐசக் பெர்ரி இதை முழுமைப்படுத்தினார்.

கிட்டத்தட்ட முப்பத்திரண்டு வருடம் இந்தக் கட்டிடம் கட்டப்பட்டது.  திட்டமிட்டபடி வேலை நடக்காமல் செலவு எகிறிக்கொண்டே இருந்ததாம். இதற்காகவே பளிங்குக்கல் வயல்களை கண்டுபிடித்து வெட்டி எடுத்தார்கள் குத்தகைதாரர்கள். ·புல்லரை கவர்னர் வில்லியம்   டார்ஷைமர் நீக்கிவிட்டு ரிச்சர்ட்ஸனை நியமித்தாராம். இக்கட்டிடத்தின் அமைப்பு பெரும்பாலும் ரிச்சர்ட்ஸனுடையது. ஆனால் இழுத்துக்கொண்டே போன செலவுகளால் கடுப்பான கவர்னர் குரோவர் கிளீவ்லாண்ட் ரிச்சர்ட்ஸனை நீக்கிவிட்டு பெர்ரியை நியமித்து கட்டிடத்தை முடித்தார்.

வெள்ளைக்கலால் கட்டப்பட்ட கட்டிடம் இது. ஹாலோவெல் சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வெள்ளைக்கற்கள் இதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சற்றே மங்கலான ,சொரசொரப்பான சுதையால் ஆனதுபோன்ற  தோற்றம் உள்ளது . வழக்கமாக இத்தகைய கட்டிடங்களில் வெங்காயக் கும்மட்டம் மகுடமாக அமைந்திருக்கும். பதிலுக்கு இதில் ஏராளமான கூம்புகள். ஒரு சிறிய மலைச்சிகரத்தொகுதியைக் காணும் எண்ணம் ஏற்பட்டது.

பெரிய வெண்படிகளில் ஏறிச்செல்லும் இடத்தில் ஜார்ஜ் வாஷிங்டனின் கற்சிலை நின்றது. அருகே பிற சிலைகள். படிகளில் ஏறி உள்ளே நுழைந்தோம். நாநூறடி நீளமும் முந்நூறடி அகலமும் கொண்ட ஐந்துமாடிக் கட்டிடம் இது.  இரு  எல்லைகளிலும் இரு  ஓங்கிய மாடங்கள். எல்லா சாளரங்கள் மேலும் வளைந்த குறுமாடங்கள். இந்திய கோபுரக்கலையில் இவற்றை சிகரங்கள் என்பார்கள்.

உள்ளே சென்று கட்டணம் கட்டினோம். அக்கட்டிடத்தை ஒரு வழிகாட்டி அழைத்துச்சென்று காட்டினார். கட்டிடத்தின் உள்ளே சலவைக்கல்லால் ஆன சுவர்களும் கைப்பிடிச்சுவர்களும் இருந்தன. சுவர்கள் சலவைக்கல்லால் ஆனவை. மெருகுடன் வழவழப்பாக நம் நிழலசைவைக் காட்டின. மிதமான ஒளியூட்டும் அடுக்கு விளக்குகள்.

பழைய சட்டச்சபைக்கூடம் இப்போது புதுப்பிக்கப்படும் நிலையில் இருக்கிறது. இங்குள்ள வளைந்த உட்கூரைகள் எனக்கு கோல்கும்பாஸ் போன்ற மசூதிகளில் உள்ள அமைப்பு என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. பின்னர் ஆராய்ந்தபோது அவை மூரிஷ் -கோதிக் பாணி என்று தெரிந்தது. அராபிய–மத்திய கால ஐரோப்பிய என்று பொருள். பழைய சட்டச்சபை கூடத்தின் கூரைவளைவில் மாபெரும் சுவரோவியங்கள் இருந்தன. அங்கே புராதனமான ஓவியங்கள் இருந்திருக்கின்றன. அவை இப்போது தெரிவதில்லை. கூரையில் ஓவியங்கள் இருப்பது ஒரு விசித்திரமான உணர்வை உருவாக்கும். நாம் பார்க்காதபோதுகூட ஓவியங்கள் நம் மீது பரந்திருப்பதாக. வான்வெளியில் தேவர்கள் நிறைந்திருப்பது போல

மின்தூக்கியில் மேலே சென்று இப்போதைய சட்டச்சபைக் கூடத்தைப் பார்த்தோம். பார்வையாளர் மாடத்தில் நாற்காலிகளில் நாங்கள் அமர்ந்துகொள்ள வழிகாட்டி அங்கே சட்டச்சபை நிகழும் விதத்தை விளக்கினார். அரைவட்ட வடிவமான அரங்கில் சிவப்பு மொராக்கோ தோல் உறையிடப்பட்ட நாற்காலிகள். ஒவ்வொரு மேஜை மேலும் சட்டச்சபை ஆவணங்கள் கட்டுக் கட்டாக இருந்தன. ‘இந்த சட்டச்சபை வரலாற்றில் அனேகமாக எவரும் அதைப் படித்திருக்க மாட்டார்கள்…”என்றார் வழிகாட்டி.

அந்த விஷயம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக இத்தகைய அதிகாரபூர்வ வழிகாட்டிகள் சம்பிரதாயமான வரிகளைச் சொல்வதுபோலன்றி அவர் நகைச்சுவையுடன் பேசினார். நக்கலும் அங்கதமும் வழிந்தன. ”…ரூஸ்வெல்ட் இங்கே கவர்னராக இருந்தார். அவர் இதையெல்லாம் படித்திருப்பாரா? மாட்டார், ஏனென்றால் அவர் பிற்பாடு ஜனாதிபதி ஆனாரே..” அங்கே பெரும்பாலும் பேசுபவர்களும் பேசப்போகிறவர்களும்தான் இருப்பாகள் என்றார்.

ஹென்றி ஹோப்ஸன் ராபர்ட்ஸன் என்பவரால் வடிவமைக்கப்பட்ட அறை அது. மேற்கூரை செந்நிறமான ஓக் மரத்தால் ஆனது. அதன் சித்திரவேலைபபடுகள் கம்பீரமான ஒரு சூழலை அங்கே உருவாக்கின. இருபக்கமும் சுவர்கள் 23 காரட் பொன் தகடுகளால் வேயப்பட்டு ஜொலித்துக்கொண்டிருந்தன. ஐந்து வாசல்களிலும் அக்கட்டிடத்தை உருவாக்கிய ஐந்து சிற்பிகளின் சிற்ப முகங்கள் வாசலுக்கு மேல் பொறிக்கப்பட்டிருந்தன.

சட்டச்சபை போன்றவை அவற்றுக்கே உரிய கம்பீரமான கட்டிடங்களில் அமைந்திருப்பதற்கு அபாரமான ஒரு பொருள் இருப்பதாக எனக்குப் பட்டது. அந்த அறையின் சுவர்களில் இருந்த அமெரிக்காவின் கொள்கை வாக்கியம் வேறெங்கும் இருந்திருந்தால் நகைச்சுவையாக ஆகியிருக்கும். அங்கே அதற்கு ஒரு செவ்வியல்தன்மை, ஒரு இலட்சியக்கனவுத்தன்மை உருவாகி வருகிறது. விக்தர் யூகோவின் நாவலில் ஒரு இலட்சியவாத வரி வந்தால் அது பொருத்தமாக இருப்பதைப்போல!

அதற்கப்பால் உள்ள கேப்பிடல் ·ப்ளாக் ரூம் எனப்படும் கொடிக்காட்சிசாலையின் அமெரிக்காவின் கடந்தகாலத்தை சார்ந்த ஏராளமான பெரும் கொடிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. கணிசமான கொடிகள் அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது வீரர்கள் ஏந்திச்சென்றவை. உலகப்போர்களில் கொண்டுசெல்லப்பட்ட கொடிகள், ரூஸ்வெல்ட் கியுபாவில்போரிட்டபோது ஏந்திச்சென்ற கொடி ஆகியவை இருந்தன.

அல்பனிக்கு அமெரிக்க விடுதலைப்போரிலும் பின்னர் உருவான அமெரிக்க ஒருமைப்பாட்டு அமைப்பிலும் முக்கியமான பங்கு உண்டு. 1754ல் அல்பெனி காங்கிரஸ் என்ற மாநாடு இங்கே கூடி பெஞ்சமின் ·ப்ராங்கிலின் உருவாக்கிய ஒருமைப்பாட்டு செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்டது. இதுவே பின்னர் அமெரிக்க மாநிலங்கள் ஒன்றிணைவதற்கான கொள்கை வரைவாகும்.  1775 முதல் 1783 வரை நடந்த அமெரிக்க சுதந்திரப்போரில் இந்த நகரம் கடுமையான நாசத்தை அடைந்தது.

அந்தப் போர்களைச் சித்தரிக்கும் ஓவியங்கள் காட்சிக்கு இருந்தன. அல்பெனியில் உள்நாட்டுப்போரில் ஏராளமானவர்கள் இறந்திருக்கிறார்கள். அவர்களின் நினைவாக கவசங்கள் பதக்கங்கள் ஆகியவை கண்ணாடிப்பெட்டிக்குள் இருந்தன. கண்ணாடிப்பெட்டிக்குள் வைக்கமுடிந்த வரலாறு ஆபத்தற்றத்து. காலம் அதிலிருந்து கசப்புகளையும் குரோதங்களையும் கழுவி களைந்திருக்கிறது.

மேலிருந்து இறங்கும்போது இக்கட்டிடத்தின் மிகச்சிறந்த அம்சமாக சொல்லப்பட்ட மாபெரும் படிக்கட்டு வழியாக வந்தோம். இது மில்லியன் டாலர் படிக்கட்டு என்று சொல்லப்படுகிறது– இதைக் கட்டுவதற்கு ஆன செலவின் அடிப்பப்டையில்! வெண்கல்லாலும் பளிங்காலும் அமைக்கப்பட்ட இந்த படிக்கட்டுகள் சதுர வடிவில் ஒன்றுக்குள் ஒன்றாக ஐந்து அடுக்குகள் இறங்கிச் சென்றன. ஹென்றி ஹாப்ஸன் ரிச்சர்ட்ஸனால் வடிவமைக்கப்பட்டு பெர்ரியால் கட்டப்பட்டது இது. 444 படிகள் 119 அடி உயரம் கொண்டது.

இந்தப்படிக்கட்டை ஒரு கலைபப்டைபபக ஆக்குவது இதில் உள்ள சிற்பங்கள்தான்.  ஜார்ஜ் வாஷிங்டன், ஆபிரஹாம் லிங்கன் உள்ளிட்ட 77 முக்கிய மனிதர்களின் முகங்கள் இங்கே பளிங்கில் கிரேக்கபாணியில் மிகத்துல்லியமான யதார்த்தத் தோற்றத்துடன் செதுக்கப்பட்டிருக்கின்றன. பொதுவாக கிரேக்க பாணிச் சிற்பங்களில் தாடியைச் செதுக்குவதில்தான் அபூர்வமான அழகு வெளிப்படுகிறது என்று எனக்குப் படுவதுண்டு. லிங்கனின் தாடியை கொஞ்சநேரம் பார்த்தேன்

இதைத்தவிர ஏராளமான சாமானியர்களின் முகங்கள் உள்ளன. பெர்ரியின் இரு பேரக்குழந்தைகளின் முகங்கள் அங்கே செதுக்கப்பட்டிருக்கின்றன என்று வழிகாட்டி சுட்டிக்காட்டினார். அந்த பேரக்குழந்தைகள் இப்போது முதிர்ந்து மறைந்திருப்பார்கள்.கல்லுக்கு என்றும் இளமைதான்.

அமெரிக்காவில் நான் கண்ட மாபெரும் கட்டிடங்களில் ஒன்று இது. பலவகையிலும் பின்னர் கண்ட கட்டிடங்களுடன் ஒப்பிட்டுக்கொண்டே இருந்தேன். இத்தகைய கட்டிடங்கள் ஆழமான ஒரு பாதிப்பை நம்மில் உருவாக்குகின்றன. காரணம் இவை செவ்வியல்கலை என்பதனாலேயே. செவ்வியல்கலை என்பது ஒட்டுமொத்தமான ஒரு வடிவம். அந்த ஒத்திசைவுக்குள் நூற்றுக்கணக்கான வடிவங்கள். அந்த வடிவங்களுக்குள் பல்லாயிரம் நுண்வடிவங்கள். ஒரு செவ்வியல்வடிவம் ஒருபோதும் ரசித்து முடிக்காத ஒன்றாக இருக்க வேண்டும்.

இத்தகைய கட்டிடங்கள் காவியங்கள்தான். மதுரை, சிதம்பரம் கோயில்களைப்போல. அவை கம்பராமாயணம் என்றால் இவை ஒடிஸி.

[மேலும்]

என் ஆல்பெனி படங்கள்

http://ovishvesh.jalbum.net/Jeyamohan/

முந்தைய கட்டுரைநூல்கள் கடிதங்கள்
அடுத்த கட்டுரைபின் தொடரும் நிழலின் குரல் -அருணகிரி