விஷ்ணுபிரசாத் கவிதைகள்

பசு

ஒருநாளாவது
கட்டு அறுத்து ஓடாவிட்டால்
சுதந்திரத்தைப் பற்றி
தனக்கு ஒரு கனவும் இல்லை என்று
கருதிவிடுவார்களோ என்றெண்ணி போலும்
அடிக்கடி தும்பறுத்து
ஓடுவதுண்டு
மாமியின் பசு.

பசு முன்னே.
மாமி பின்னே.
முன்னாலுள்ளதையெல்லாம் கோர்த்துவிடுவேன்
என்ற பாய்ச்சல்.
யாரானாலும் ஒதுங்கி நின்றுவிடுவார்கள்.
பிடியுங்கள் தடுங்கள் என்றெல்லாம் மாமி
கூவுவதை புரிந்துகொள்வதற்குள்
மாமியும் பசுவும்
தாண்டிச் சென்றிருப்பார்கள்.

இரண்டு கிலோமீட்டர் ஓடினால்
தேவையான சுதந்திரம் ஆகிவிட்டது பசுவுக்கு.
மூச்சிளைத்து ஒரு இடத்தில் நிற்கும்.
‘சனியன்பிடிச்ச பசு’ என்று அதன் முதுகில்
ஒரு அடிவிழும்.
பிறகு இரண்டுபேரும்
சாவகாசமாக வீட்டுக்கு.

இத்தனை சாதுவான இரண்டு உயிர்களா
சற்றுமுன்பு அப்படி பாய்ந்தார்கள் என்று
அச்சு அண்ணன் கடையில் டீகுடிப்பவர்கள்
மூக்கில் விரல் வைப்பார்கள்

கயிறு அறுத்தோடிய
அந்த இரண்டு கிலோமீட்டரைத்தான்
பசு பிற்பாடு அசைபோடுகிறது போல.

அலறல்

முனிசிபாலிட்டி மூத்திர அறையில்
காவலிருப்பவனின் வாழ்க்கையா
ப்ரீதா டாக்கீஸில்
டிக்கெட் கிழிப்பவனின் வாழ்க்கை?
டிக்கெட் கிழிப்பவனின் வாழ்க்கையா
கள்ளுக்கடையில் கள் பரிமாறுபவனின் வாழ்க்கை?
கள் பரிமாறுபவனின் வாழ்க்கையா
நடைபாதையில் இஸ்திரி போடுபவனின் வாழ்க்கை?
இஸ்திரிபோடுபவனின் வாழ்க்கையா
சட்டைப்பைகளிலிருந்து சட்டைப்பைகளுக்குச் செல்லும்
ஜேபடிககரனின் வாழ்க்கை?
ஜேபடிககரனின் வாழ்க்கையா
இஞ்சி விவசாயியின் வாழ்க்கை?
இஞ்சி விவசாயியின் வாழ்க்கையா
செவியில் பென்சில் வைத்திருக்கும்
மூத்த ஆசாரியின் வாழ்க்கை?
மூத்த ஆசாரியின் வாழ்க்கையா
நடைக்காவு ஆற்றில் வலைவீசுபவனின் வாழ்க்கை?
வலைவீசுபவனின் வாழ்க்கையா
இவன்களில் அவள்களின் வாழ்க்கை?
அதுதானா குழந்தைகுட்டிகளின் வாழ்க்கை?
அதுவேதானா தாய்தகப்பன்களின் வாழ்க்கை?

வாழ்க்கையே, எந்தெந்த ரூபங்களில்
எந்தெந்த விகிதாச்சாரங்களில்
நீ இப்படி மூத்திரமடித்தும் பீயிட்டும்
சிரித்தும் கண்ணீர் விட்டும் தொண்டை உடைத்தும்
‘நிறுத்துங்கடா டேய்!’ என்று
என்னைச் சொல்ல வைக்கும்படி
ஓயாது
ஓலமிட்டுக் கொண்டே இருக்கிறாய்!

அறையிலுள்ளவை

மேஜைமீது ஒரு
கடலுயிரின்
உடலை பாடம்போட்டு
வைத்திருக்கிறது.
கடிகாரம் எட்டுமுறை
அழுதது.
அழுவதற்காக உருவாக்கப்பட்ட
ஓர் உயிர்.
பல்ப் என்று இன்னொரு உயிர்
சுட்டு பழுத்த
நாக்கு நீட்டி
அறையின் மூலைகளில்
ஒளிந்திருக்கும் இருட்டை
பிடித்து தின்கிறது.
மேஜை என்ற இந்த
அறுத்துப்பிளந்த
மரத்தின் சடலம்
மற்ற சடலங்களைத்
தாங்குவதற்கான ஒர் அமைப்பு.
உயிருள்ளவற்றைப் பொறுத்தவரை
உயிரற்றவை சடலம்.
உயிரற்றவைக்கு
உயிருள்ளவை சடலம்.
நான் என்னும் சடலத்தின் சடலம்
இனி இந்த அறையில்
எஞ்சுவது அது மட்டுமே.

கோழியம்மா

கோழியம்மா
ஒரு முட்டையைப் போட்டாள் என்பதற்காக
இந்த அளவுக்கு கூப்பாடு போடவேண்டுமா என்று
ஜிம்மி என்ற நாய் கேட்டது.
நந்தினிக்குட்டி என்ற பசு கேட்டது.
பஞ்சவர்ணம் என்ற கிளி கேட்டது.
இடுப்பு நிறைய குழந்தைகளுடன்
நின்ற பலாவம்மா கேட்டாள்.
ஆகாசவாணியிலிருந்து ஊறிவரும்
ஏசுதாஸ் கேட்டார்.
தென்னையோலைகளில் ஆடும்
காற்று கேட்டது.
கிட்டிபுள் ஆடும்
பிள்ளைகள் கேட்டார்கள்.
வாழைகளும் சேம்புகளும் கேட்டன.
தேங்காயெண்ணெய் பூசிய
வெயில் கேட்டது.
குளித்து துவைத்து
விலக்குப்பாயை கழுவிச்சுருட்டி திரும்பிய
தங்கமணியும் கேட்டாள்.

யார் என்ன கேட்டாலென்ன,
கூவிக்கொண்டே இருந்தாள் கோழியம்மா.

மேலும் கேள்விகள் எழுந்தன,
இபப்டி கூச்சலிட்டதனால்
ஆம்லெட் போட கொண்டுபோன
முட்டை திரும்பவருமா என்ன?
இப்படி கதறினால் நாளை
முட்டையிடுவதிலிருந்து விடுமுறை கிடைக்குமா?
இப்படிப் புலம்புவதனால்
உன் தியாக உள்ளத்தை அறிந்து
விருந்தினர் வரும்போது
அறுக்காமல் விட்டுவிடுவார்களா?
உன் குரலை ஓர் அறைகூவலாக எடுத்துக்கொண்டு
கோழி வர்க்கமெல்லாம் திரண்டு
அரசமைப்புச் சட்டத்தை திருத்தப் போகிறார்களா?

இதையெல்லாம் கேட்டபின்
‘யாருய்யா நீங்கள்லாம்?
இது நான் போட்ட முட்டை,
இது நான் போட்ட கூச்சல்’
என்று சொல்லி
ஓடிபோயிற்று கோழியம்மா

நதி

பள்ளி விட்டதும்
குடைகளினாலான ஒரு கரிய நதி
ஒழுகியது.
இருகரைகளிலும் உள்ளவர்கள்
நதியில் இறங்காமல்
அதைப் பார்த்து நின்றனர்.
வழியருகே நின்ற வீடுகள்
ஆளுக்கொரு கை அள்ளியதனால்
அதிக தூரம் போவதற்குள்
வற்றிப்போயிற்று அது.
போக்குவரவுகளின் காவலாளான
கரிய ஈரச்சாலையில் இப்போதும்
அதன் நினைவு மிச்சமுள்ளது.
இருந்தாலும்
போனவர்களைப் பற்றியும் வந்தவர்களைப் பற்றியும்
எந்த நினைவும் இல்லை என்றுதான்
எல்லா பாதைகளும்
பொய் சொல்லும்.

புரட்சியாளன்

கடிக்கவேண்டும் என்று நினைத்துத்தான்
எப்போதும் வருவது.
காணும்போது
எல்லாம் மறந்து போகிறது.
‘அரணை கடித்தால்
உடனே மரணம்’ என்று ஒரு
சொலவடை இருப்பதனால்
ஒருமாதிரி காலம் ஓடுகிறது.
பகுத்தறிவாளர்களான கோழிகளும்
பூனைகளும்
எண்ணிக்கையில் குறைவு என்பதனால்
பயமொன்றுமில்லை.
கடிப்பதில்லை என்றாலும்
கடிக்கவேண்டும் என்ற எண்ணம் இருப்பதனால்
ஒரு புரட்சியாளனுக்குக் கிடைக்க வேண்டிய
சலுகைகள் எல்லாமே கிடைக்கின்றன.
பூர்வஜென்ம புண்ணியம்!

கொலையறிவு

கசாப்பு மிருகமே
மரணத்தை நீ
உணர்ச்சியற்று
எதிர்கொள்கிறாய்.
உன் உணர்ச்சியின்மை
என்னை
துயரம் கொள்ளச் செய்கிறது.
கொலைக்கத்தி
உன் கழுத்தைக் காத்திருப்பதை
நீ அறிவதில்லை.
நீ மிருகம்.
பூகம்பமும்
எரிமலைகளும்
வருவதை
நீ முன்கூட்டியே அறிவாய்.
ஆனால் உன்
வாழ்நாள் சேவையைப் பெற்றவன்
உன்னைக் கொல்லப்போவதை
அறிவதில்லை.
துரோகம்
அத்தனை மர்மமானது,
துயரம் நிறைந்தது.

தமிழில்: ஜெயமோகன்

 மலையாளக் கவிதைகளை தனியாகக் காண்க

http://jeyamohan.in/?p=26

முந்தைய கட்டுரைஜக்கி குருகுலம்:ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைகீதைவெளி