அன்புள்ள ஜெயமோகன்,
புறப்பாடு தொடர் படித்து வருகிறேன்.
எத்தனையோ வாழ்வியல் அனுபவங்களை படித்தும் கேட்டதுமுண்டு.
இந்தப் பதிவுகள் பலருக்கு பல விதத்திலும் ஒரு சிகரமாக இருக்கப் போகின்றன.
முழுதும் முடிந்த பின்னர் ஒரு மிக நீண்ட உணர்வுக்குறிப்பு எழுத திட்டம்.
ஆனால் முதலில் சொல்ல வேண்டுவது முதலில்.
ஐம்பது வயதின் அனுபவங்களோடு முப்பது நாற்பது வருடங்கள் பின்னோக்கிப் பார்த்து எழுதும்போது, இயற்கையாக நிகழ்ந்து விடக்கூடிய, இப்போதைய அறிவும் அனுபவமும் தற்குறிப்பாக நிகழ்வுகளை ஆராயும் எந்த சாத்தியங்களும் தென்படா வண்ணம், அந்த வயதுக்கே உரிய அறியாமையும், அலைக்கழிப்பும், உணர்ச்சிகளும் மிக எழுதுகிறீர்கள். இது ஒரு அரிய எழுத்து சாதனையென எண்ணுகிறேன்.
பற்பல சம்பவங்களில் என்னை நான் கண்டதுபோல் உங்கள் வாசக நண்பர்கள் அனைவரும் தங்களைக் காண்பார்கள்.
பதற்றமுடன் ஒவ்வொரு நாளின் விடிகைக்கும் காத்திருக்கும்,
சரவணன்
சிங்கப்பூர்
ஜெ,
புறப்பாடு வாசித்து முடித்ததும் இருத்தல் என்பது அலைந்துகொண்டிருக்கும்போது மட்டும்தான் தெரியவருமோ என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வாசலைத் திறந்தன. சாதாரணமாகத் தெரிந்த காற்றில் நடப்பவர்கள் கூட யோசிக்கும்போது ஆழமான அர்த்தங்களைத் தந்தது. கலைஞனின் மனம் நாடோடிகளை அடையாளம் காண்கிறது. கண்ணாடிக்கு அப்பால் அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் காண்பவன் கலைஞன் மட்டுமே. காலை பத்துமணிக்கு ரேடியோ கேட்டுக்கொண்டு சும்மா கிடக்கும் நரிக்குறவர் ஒரு பெரிய படிமம் ஜெ. அவர் அப்படி இருப்பதனால்தான் அவரால் பொய்சாட்சி சொல்லமுடியவில்லை. அவர் ஜெயிக்க ஒன்றும் சாம்ராஜ்யங்கள் இல்லை. கடவுளிடம் அவர் பேரம்பேசவேண்டியதில்லை. கண்ணாடிக்கு இந்தப்பக்கம் நின்று அவரைப்பார்த்து ஏங்குகிறான் கலைஞன் இல்லையா?
புரமும் அபாரமான கட்டுரை. புரம் என்றால் அது வானில் உள்ள நகரம். ஆனால் இங்கே பாதாளத்தில் இருக்கிறது. கட்டுரை முழுக்க எல்லாமே எக்ஸிஸ்டென்ஷியலிச படிமங்கள். abyss , labyrinth என்று வந்துகொண்டே இருக்கின்றன. மரணமும் தூக்கமும் மாறி மாறி நிறைந்துள்ளன. ஆனால் கடைசிவரி எல்லா எக்ஸிஸ்டென்ஷியலிச கருப்புப்பார்வையையும் தாண்டி ஒளியைப் பார்த்துவிடுகிறது. அது நீங்கள் இன்று பார்க்கும் பார்வை என்று நினைத்துக்கொண்டேன்.
எல்லா கட்டுரை/கதைகளைப்பற்றியும் சொல்லிக்கொண்டே போகலாம்.
சண்முகம்