[மீண்டும் புதியவர்களின் கதைகள்]
குழந்தைக்கு உணவு ஊட்டியபடி வாசலுக்கு வந்தேன். எங்கள் தெருவில் மினிபஸ் வருமென்றாலும் அந்த வேளையில் தெருவே அமைதலாயிருந்தது. எங்கள் தெருவே அப்படித்தான். வீட்டிற்கு பின்னால் ஒரு சிறிய சானல், அதைத்தாண்டினால் பேருந்து செல்லும் வழித்தடம். ஆகையினால் எல்லாரும் இறங்கி வீட்டின் பின்வாசல் வழியே செல்லவும், வீட்டிற்குள் நுழைந்துவிடவும் முடியும்.
பிள்ளை அழத்துவங்கிவிட்டான். வீட்டிற்கு திரும்பலாம் என்று நினைத்தபோதுதான் தெருவில் யாரோ ஓடுவதுபோல் இருந்தது. யாரு என்று பார்ப்பதற்குள் என்னை அவள் தாண்டிவிட்டிருந்தாள்.
“ஆ… அனிதாளே எஞ்ச போற?”
அவள் வேகமாக நடந்தபடியே திரும்பிப் பார்த்து “இல்லேக்கா…. வீட்டுக்கு… “என்றபடி ஆயினி மூட்டுக்கு அடுத்துள்ள சிறிய சந்தில் நுழைந்தாள்.
மூன்று நாட்களுக்கு முன் நடந்த திருமணத்தின் எச்சங்களாக தூவப்பட்ட கடல் மணலும் அதன் மேல், ஒலத்தி குலையின் பூக்களும் சிதறிக் கிடந்தது.
பிள்ளையை அமர்த்தியபடி வீட்டிற்குள் நுழைந்தேன். கிண்ணத்தில் பாதி உணவு அப்படியே இருந்தது. சில வேளையில் இப்படித்தான். பால் வெண்டுமென்றால் அவன் அடம்பிடிப்பதற்கு ஒரு அளவே இருக்காது. அழுகையினூடாக அவன் முகத்தைக் கழுவி எனது சுடிதாரில் துடைத்து நேராக கட்டிலுக்கு சென்றேன். பால் குடிக்கத்துவங்கியவுடன் அவன் அழுகை சிணுங்கலாகி உச்சுக்கொட்ட ஆரம்பித்தான்.
அனிதாவிற்கு என்ன ஆயிற்று? ஏன் தனது வீட்டிற்கு காலை வேளையில் செல்லுகிறாள் அதுவும் ஓடோடி. என்னைத் திரும்பிப்பார்த்த கண்களில் கண்ணீர் உறைந்திருந்ததா? ஆம் அப்படித்தானிருக்க வேண்டும். கல்யாணமான மூன்றாவது நாளே அவள் தனியாக தனது வீட்டிற்குப் போகிறாள் என்றால்? என்ன ஆயிற்று?
எனது திருமணத்திற்கு முன் நான் ஆராதனைக்குச் செல்லும்போது எல்லாம் என்னோடு வருபவள் அனிதா. தலைக்கு காய்த்த தேங்காய் எண்ணையிட்டு குளித்துவிட்டு மிகவும் நேர்த்தியாக நடு வகிடு எடுத்து வாரப்பட்ட தலையில் அவர்கள் வீட்டில் வளருகின்ற ஏதாவது ஒரு பூவோடுதான் வருவாள். காதில் ஒரு கம்மல் மட்டும்தான் போட்டிருப்பாள். முத்தை பொன்னில் உருட்டியெடுத்ததுபோல் இருக்கும். மிகவும் தளர்வான பாவாடை சட்டை அணிந்திருப்பாள். முகத்தில் பூசியிருக்கும் பவுடர் வீட்டிற்கு திரும்புவது வரை இருக்கும்படியான அழுத்தமான தேய்ப்பு அதில் இருக்கும். கையை மடக்கி நெஞ்சோடு அணைத்த ஒரு புதிய ஏற்பாடும் சண்டே ஸ்கூல் பாடப்புத்தகமும் இருக்கும். மறுகையில் சுற்றிய கர்சீப்பின் நடுவில் சிறிய பென்சில் இருக்கும் பவுடர்மயமாக.
நாட்கள் செல்லச்செல்ல, பவுடர் பூசிய பென்சில் இல்லாமலானது. பின் பவுடரின் அழுத்தம் மெல்லக் குறைந்தது. பூசிமொழுகி அவள் உருவாகும் நேரம் சடை தளர்ந்து கூந்தல் விரிவடைந்தது. உடைகள் முற்றிலும் உள்ளூர் வழக்கப்படி அமைந்தாலும் இறுகிக்கொண்டே வந்தன. கழுத்தில் ஒரு கோவிகண்ணி செயின், கையில் முத்தூட்டில் வாங்கிய கேரள பாணியிலான ஒற்றைக்காப்பு, விரலில் இதய வடிவில் நெளிந்து செல்லும் மோதிரம் என எட்டாம் வகுப்பு வரும்போதே மிகவும் மாறிவிட்டாள்.
அக்காளுக்க கிளாசுக்குதான் வருவேன் என்று அடம் பிடித்து எனது வகுப்பில் இருக்க ஆரம்பித்தாள். பிற்பாடு எண்ணை தேய்ப்பும் நின்று போனது. பவுடர் போய் லிப்ஸ்டிக் எட்டிப்பார்த்தது. மிகவும் மெல்லியதாக அவள் அப்பா அனுப்பிய எல்லி. அவள் அதைப் போட்டிருக்கிறாளா இல்லையா என்பதே தெரியாதபடி இட்டிருப்பாள். சுடிதாருக்கு தமிழக பெண்கள் மாறிவிட்ட சூழலில் அவள் குடும்பத்தார் அவளை அவ்வளவு சீக்கிரம் மதம் மாற விடாததால் தாவணியோடே அவள் சர்ச்சுக்கு என்னோடு வந்து போய்க்கொண்டிருந்தாள். அவளைப் பின் தொடரும் கூட்டம் தினம் ஒரு பேருந்தை நிறைக்க வல்லது. தனக்கு எதுவும் தெரியாதது போலவே என்னோடு வருவாள் போவாள். ஆனால் அத்தைனைபேரின் ஜாதகமும் அவள் கையிலிருந்தன. எனக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருந்ததால் அம்மா ஒருநாள் சொல்லிவிட்டார்கள். நீ இனி அந்த மினிக்கி கூட நடக்கப்பிடாது கேட்டியா, வல்லவளும் ஏதும் வலிச்சி இட்டினுமெங்கி பின்ன என்னக்கொண்டு பற்றாது. நல்ல வேளை, அடுத்த வாரம்தானே உயர் படிப்பிற்காக தஞ்சாவூர் சென்றேன்.
எப்போது தூங்கி எழுந்தேன் என்று தெரியவில்லை… பிள்ளை அசைந்தான் மெல்ல தட்டிக்கொடுத்துவிட்டு எழும்பி முகம் கழுவினேன். யாரிடம் கேட்பது? அனிதாவுடைய வீட்டில் ஏதும் பிரச்சனையா? என்னவாக இருக்கும் என்று யோசித்தேன்… ஏதோ ஒரு பெரிய வித்தியாசம் காணப்பட்டதுபோல் தோன்றியது.
அப்பா மாட்டைக் கட்டிவிட்டு வீட்டிற்குள் வந்தார்கள். நேராக கை அலம்பிவிட்டு காலை உணவுக்காக மேஜையில் இப்போது அமருவார்கள். அம்மா சந்தைக்குச் சென்றிருப்பதால் நான்தான் அனைத்தையும் எடுத்து வைக்கவேண்டும்.
அப்பா வந்து அமர்ந்து அமைதியாக சாப்பிட ஆரம்பித்தார்கள். ‘ஜோமணிக்க வீட்டுக்ககத்த ஒரே கூக்குவிளி? அவன் தேச்சியத்தில எறங்கி போறான்? கொத்தவேல எங்கியது சும்மாளா? அறவிக்க வீடு கெட்டியதும் பாப்பனா கோட்ட கெட்டியதும் ஒண்ணாக்கும். பைசா எறக்கி பெண்ண கெட்டி குடுத்தாண்ணு சென்னா சும்மாளா? வெசெர்ப்பொக்க அவனுக்க கண்ணீராக்கும். அந்த குட்டி மூணு நாளுல இப்படி தவப்பன கண்ணீர் குடிக்கவெச்சுப்போட்டே.?”
அப்பா பேருக்கே சாப்பிட்டிருந்தார். முகத்தில் எந்த உணர்ச்சியும் காணக்கிடைக்கவில்லை. இறுகியிருந்ததுபோல் தோன்றியது. அப்பா எப்பொதும் இப்படித்தான். தான் பேசவேண்டியதை மாட்டிடம் கூட மனம் திறந்து பேசுவார் ஆனால் பதிலை எதிர்பார்க்க மாட்டார். கட்டளைகளும் அப்படித்தான். ஜோமணி என்பது அனிதாவுடைய அப்பா ஜெபமணி. பிள்ளை அழத்துவங்கினான். ஏனோ இவ்வேளையில் அவர் என்னை நினைத்திருக்கவேண்டும், பேச்சை நிறுத்திவிட்டார். நான் ஓடிப்போய் அவனைத் தூக்கினேன். தொழுவத்திற்குப் போய் கன்றுக்குட்டியையும் பசுவையும் காட்டினால் சற்று விளையாடுவான்.
பின்னால் சென்று விளையாடிக்கொண்டிருக்கும்போது ஆனப்படுவால் சீலி மாமி வெள்ளைச் சீலை கட்டிக்கொண்டு, தேக்கிலையில் மீனைச் சுருட்டிக்கொண்டு மீனுடன் போய்க்கொண்டு இருந்தவர்கள் ’பிள்ளா! எப்பம் வந்த? அவிய நல்லா இருக்கினுமா?’ என்றபடி கதவைத் திறந்து பின் முற்றத்திற்கு வந்து தோளில் கிடந்த பையனை நோக்கி கையை நீட்டினார்கள். அவனும் கையை நீட்டி தன் உடல் மொத்தத்தையும் சரியவிட்டான். மாமி பிடித்துக்கொண்டார்கள். மீன் மேல் இருக்கும் கடல் மணல் லேசாக அவன் கையில் ஒட்டிக்கொண்டது. கையைக் கழுவ வேண்டும்.
மாமியின் வீட்டின் அருகில்தான் அனிதாவை திருமணம் செய்துகுடுத்திருந்தார்கள். மாமியிடம் கேட்டால் என்ன?
“பிள்ளைக்கு என்ன பேரு இட்டிருக்கியா? நாலுமாவடிக்கு எழுதியிட்டா நல்ல பேராக் கிட்டும். பின்ன பெதஸ்தால பேர பதிஞ்சிட்டா போரும். பயலுக்கு இஞ்சினியரிங் படிக்கலாம். என்னெல மக்கா படிப்பியால? என்றாள் மாமி. பயலோ இரெண்டே கீழ்வரிசைப் பற்களைக் காட்டி ஜொள்விழ சிரித்தான்.
நான் மெல்ல கேட்டேன். ‘மாமி… அனிதா இனி அஞ்சோட்டு வரமாட்டாளா?’
‘அதிப்பம் நமக்கொண்ணும் அறிஞ்சூடா பிள்ளா… அவளொக்க நல்ல விசுவாசிண்ணாக்கும் செல்லி கெட்டிச்சினும். இப்பம் அவளுக்க மினுக்கல இன்னும் விடேல. பின்ன மாப்பிள்ள என்னெய்வான்? மீனு கழுவணும் கேட்டியா?’ என்றபடி நழுவிவிட்டார்கள்.
அனிதா மிகவும் நல்லவள் என்றே என் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டிருந்தது. என்னாயிற்று? பிள்ளையை தூக்கிக்கொண்டு வந்தேன். அவன் கைகளைக் கழுவிக்கொண்டிருந்தபோது அம்மா வந்துவிட்டார்கள். கருங்கல் சந்தையிலிருந்து காய்கறிகளும் மீன் தலையும் முள்ளும் கொண்டு வந்திருப்பார்கள்.
‘மக்களே இந்த அனிதா குட்டிக்க கதய கேட்டியா நீ?’ என்று அங்கலாய்ப்புடன் பேச ஆரம்பித்தார்கள். ‘நல்லோரு குட்டி, பாள அறுவான் இப்படியா தாலிய அறுப்பான்? பிள்ளைய கெட்டுன அண்ணு ராத்திரியே அடிச்சிருக்கியான். இயேசுவே எனக்க நல்ல ஆண்டவரே இந்த நாறப்பயலுக்க கை அழுவாதா?
““என்னெம்மா செல்லுதிய? யாரு உனெக்கிட்ட இப்படியொக்க செல்லிச்சினும்?”
“ நம்ம கோவில்ல ரொக்காடு இடுத ஜாண்சன் அண்ணன் அப்பெடியொக்க செவ்வினுமா?”
அம்மா அப்படியே பேயுருவம் கொண்டுவிட்டாள். “ஓ ஒனக்கு யெல்லாம் அறியிலாம். அனிதாளுக்க அம்மயும் எனக்கூட சந்தைக்கு வந்தொப்ப செல்லி செல்லி என்ன ஒரு கரச்சி. வெளங்கமாட்டான்…”
திடீரென அம்மா மாறிவிட்டாள். ”எனக்க மக்களு பாட்டிய தேடுனியளா?’என்று பயலை எடுத்து கொஞ்சத்துவங்கினாள்.
இனி அம்மா ஏதும் பேசப்போவதில்லை. என்ன செய்யலாம். காயப்போட்டிருந்த துணிகளை எடுக்கப் போனேன். மொட்டை மாடியிலிருந்து பார்த்தபோது பாஸ்டர் அனிதா வீட்டிற்குச் செல்லுவது தெரிந்தது. கூடவே கோயில் பிள்ளையும்.
நான் கீழிறங்கி வந்தபோது எலிசபெத் மகா வெட்கத்துடன் நின்றுகொண்டிருந்தாள். தம்பியுடன் விளையாடுவதற்கு வந்திருக்கிறாள். “சித்தி தம்பி…” என்று வெட்கத்துடன் சொன்னாள்.
“செரி வா” என்று அழைத்துக்கொண்டு சென்றேன். “எஞ்சட்டி கெடந்து பெறண்டுட்டு வாறெ? கை காலிலயெல்லாம் மணலாயிருக்கு? ”
“அனிதாக்காளுக்க வீட்டுக்கு… ” வெட்கம் இன்னும் கூடியது.
“ செரி அஞ்ச யாரொக்க இரிக்கினும்?”
“மணி தாத்தா… சாமுவேல் அண்ணன்…”. கண்களை உருட்டி யோசித்தபடி “அனிதா அக்கா!”
“ பின்ன நீ எதுக்குட்டி இன்சோட்டு வந்த? ”
“அஞ்ச… சண்ட பிடிக்கினும்”
“யாரு சண்ட பிடிச்சுதா?”
“சாமுவேல் அண்ணன்…. வெட்டோத்தி எடுத்துட்டு நிக்குது”
“செரி தம்பி பின்னால பாட்டிக்ககூட இருக்குதான் நீ போய் வெளயாடு”
சற்று நேரத்திற்கெல்லாம் பாஸ்டர் தனது குடையுடன் வீட்டிற்கு வந்தார். “எப்படி பிள்ளே? எத்தன நாள் இங்கே? கோவிலுக்கு பொறியா? சார அன்னளிச்சதா செல்லணும். தங்கமான மனுஷன்.அம்மையவிளி.”
வீட்டிற்குள் திரும்பி “அம்மா” என்றேன். அப்பா புல்வெட்டப் போயிருந்தார். அம்மா மீன் கழுவினதை முடித்துவிட்டு குசினியில் மூடி வைத்துவிட்டு வந்தார்கள். எலிசபெத்து தூக்க முடியாமல் தம்பியை தூக்கிக்கொண்டு வந்தாள்.
“ராவட்டு வந்தா என்ன பாக்கச் சொல்லணும். இனி அந்த சாமிவேல் பய இஞ்ச நமக்க கோயில்ல ரொக்காடு ஒண்ணும் இடண்டாம். குட்டிய கொல்லதுக்கா அப்பனும் அம்மையும் கெட்டிகொடுக்கினும்? இயேசுவே அந்த பிள்ளய கண்ணு கொண்டு காண சகிக்கேல. இவனுக்க தவப்பனும் தள்ளையும் இஞ்ச ரெக்காட வெச்சுட்டு எனக்கிட்டயாக்கும் வெளையாடினும்… ”
பாஸ்டர் இவ்வளவு கோபமாக இருந்து நான் பார்த்ததில்லை.
அம்மா “செத்தாலும் மணியடிச்சப்பிடாது. இவம்மார பூத்திய எடத்துல புல்லுகுருக்காது”என்றாள். விஷயம் மிகவும் உக்கிரமாகிக்கொண்டே போவது எனக்கு பயமாக இருந்தது. பாஸ்டர் ஜெபித்து சென்றுவிட்டார்.
பிள்ளை மறுபடியும் பசித்து அழுதான். அம்மா அவனுக்கு சத்துமாவை ஊட்டிக்கொண்டே அடுப்பை கவனித்துக்கொண்டார்கள். சாப்பாட்டு நேரம் நெருங்கியதால் எலிசபெத் மறுபடியும் வெட்கப்பட்டுக்கொண்டே “அக்கா” என்றாள். போய் வருகிறேன் என்பது அர்த்தம். சிரித்து கையில் ஒரு மிட்டாய் கொடுத்தேன். வெட்கி வாங்கிச் சென்றாள்.
நான் அவளை தெரு மட்டும் வந்து வழி அனுப்பிய போது ஜெபப்பிரையிலுள்ள இரண்டு பெண்களும் பாஸ்டரும் வெள்ளையும் வெள்ளையும் அணிந்து சென்றுகொண்டிருந்தார்கள். இவர்கள் வருகிற திசையைப் பார்த்தால்…ஒருவேளை அங்கிருந்துதான் வருகிறார்களோ… யோசித்துக்கொண்டிருக்கும்போதே தெருவில் அந்த பைக் வந்தது. தம்பியோடு சாலமோனும் சேர்ந்து வீட்டின் முன்னால் இறங்கினார்கள்.
“அக்காளே சோந்தானா?” என சாலமோன் கேட்டான்.
“வாடே வா. ஒனக்க கத தான் இப்பம் ஓடிட்டு இருக்கு” என்றேன்.
அனிதாவின் பின்னால் மிகத் தீவிரமாக சுற்றியவன் இவன் மட்டும்தான். அவளுக்காகவே பிசியோதெராபி படிக்கச் சென்று இன்று நெய்யூர் ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கிறான். இவனுக்கு பயந்தே அனிதாவை சீக்கிரம் கட்டிக்குடுத்ததாக ஒரு பேச்சு ஊருக்குள் உண்டு.
மிகவும் கலகலப்பாக இருக்கிறவன் எனது வார்த்தைகளால் காயப்பட்டான். பீறிடும் கண்ணீரை அடக்கியபடி “நான் பெரவு வாறேன்’ என்று சொல்லிவிட்டு நடந்தான்.
“……லேய்… வண்டிய எடுத்துட்டுப் போ” என தம்பி அழைத்ததையும் கேட்காமல் போய்விட்டான்
தம்பி என்னைப் பார்த்து “வாய கழுவுட்டி.. ” என எரிந்து விழுந்தான்.
“லே ராவட்டு என்னெல ஆச்சு? ”
“நீ எதுக்கு ரோட்டுல நிக்கிய? உள்ள வா” என்றான்.
சாப்பாட்டு மேசையிலே அமர்ந்தோம். அப்பா வருவதற்கு இன்னும் நேரம் இருந்தது.
“லே செல்லுல …என்னாச்சிண்ணு…”
“ஒனெக்கு அறியிலாமில்லியா, பயவ அவளுக்கெ பெறெத்தெண்டு போனதொக்க. சாலமெனுக்கும் ஜாண்சனுக்குமாக்கும் மத்திரம். யாரு அவள தூக்கியதுண்ணு. பின்னே இதொக்கே வெளியே செல்லப்பற்றாதில்லியா? அதொண்டு, இவன்மாரு ரெண்டு பேரும் ஆளுக்கோரு வளியாட்டு அவளுக்க பெறத்த போச்சினும். சாலமெனுக்க தவப்பன் எல் எம் எஸ் ஸ்கூள்ல வாத்தியாரானது கொண்டு பய பைசாவக்கொண்டு அவளுக்க பெறத்தால சுத்தினான். ஜாண்சனு யாரு, குடிச்ச கஞ்சி வெள்ளம் இல்லாத்த பய. சமயம் பாத்து தான் காரியத்துல எறங்கணும்னு இருந்திருக்கிறான். நல்ல பிள்ள போல இத்தன நாளும் வேசம் போட்டு பெண்ண தூக்கியிருக்கியான். எட்டு வரியமாட்டு பயலுக்க வீள்ல ஒரே ஜெபமும் பாட்டுமாக்கும்”
“பின்னே ஏம்பிலே அவள அடிச்சிருக்கியான்?”
“எனக்கு ஒண்ணும் தெரியாதிடியே, சாலமோன் பயலும் ஒண்ணும் வாயத்தெறெக்கேல. நல்லோரு பய. கெட்டிகுடுத்திருந்தினுமெங்கி அவள பொன்னுபோல பாத்திருப்பான்.”
பிள்ளையின் அழுகை துவங்கியது. சென்று அமர்த்திவிட்டு உணவிற்காக அமர்ந்தோம். ஒருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. நான் போய் பிள்ளையுடன் படுத்துக்கொண்டேன். மிகவும் துக்கமாக இருந்தது. பாசத்துடன் வளர்க்கப்பட்ட பிள்ளை. போட்டிபோட்டுக்கொண்டு அவளைத் திருமணம் செய்ய நின்ற பெரிய வரிசை இருக்கும்போது எப்படி இந்தத் தவறு நிகழ்ந்தது?
ஜாண்சன் அண்ணன் குடிக்க மாட்டார், புகையிலை, வெத்திலை, பீடி சிகரெட் என்று எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. ஆனால் அவளை அடிப்பது இதெல்லாவற்றையும் விட பெரிய குற்றமில்லையா? இன்னொருவர் மீது வன்முறை செலுத்துவது எப்படிச் சரியாகும்? கல்யாணத்தன்று அவள் போட்டிருந்த நகைகள் அளவிற்கு ஊரில் வேறு எவரும் போட்டிருக்க இயலாது. அவளது நகைகளைக் கழற்றவேண்டுமென்றால்? அப்படி என்னதான் நடைபெற்றது?
சாயங்காலம் தூங்கி எழுந்தபோது, அம்மாவுடன் செல்வி சித்தி பேசிக்கொண்டிருந்தார்கள். திருமணத்தை பேசி நிச்சயித்தவர்கள்.
“மப்பிள்ள செல்லியது கியாக்கணுமா? இல்லியா? அஞ்ச போய் இவளுக்க இஸ்டப்படி இருக்கணுமுண்ணா அவன் என்ன பெண்ணா பெறந்த பயலா?ஆணப்பொறந்தவண்ணா நாலு சவிட்டு சவிட்டி வீள்ள கெடட்டீண்ணு செல்லணும். இந்த மினுக்கிக்க காலு தரையில நிக்காதோ? அப்பனுக்க வீள்ள போய் எவனுக்கு கூட கெடப்பாண்ணு நானும் பாக்கியேன்.”
அம்மா கொதித்துவிட்டாள் “நாற வாய வெச்சிட்டு எறங்கிப்போ. கூதற கெட்டெவளே. நல்லோரு பெண்ணா பெறந்தவள வெச்சி காப்பாத்த வக்கிலாத்த வெறும்பயலுக்கு வக்காலத்து வாண்டதுக்கு நீ எறங்கி இச்சோட்டு வந்தியாட்டி. வெள்ளையும் சொள்ளையும் கெட்டீட்டு நீங்க ஆடுத ஆட்டம் என்னெண்ணு எனக்கு அறியிலாம்டியே…. தூ…. எரப்பாளிக்க மக்க”
“ன்னேரு… அவிய எட்டு வரியமாட்டு ஆவிக்குரிய சவைக்கு போறவியளாக்கும். உங்களப்போல செத்த சவைக்கு ஒண்ணும் யாரும் போவோலே”
“அறுத்த மூளி நீ, உனக்கு எல்லாரும் அறுத்துட்டு திரியணும்னாக்கும் நெனப்பு இல்லியா?” அம்மா ஓவென்று அழ ஆரம்பித்தார்கள். பிள்ளையும் அழத்துவங்கிய சத்தம் கேட்டது. எனக்கும் கண்ணீர் துளிர்த்தது.
மூன்று வருடங்களுக்குப் பின்பு நான் மறுபடியும் வீட்டிற்கு வந்திருந்தபோது அனிதா என்னைப்பார்க்க வந்திருந்தாள். வெள்ளைச் சேலையிலும் தேவதை போன்று அழகாகவே இருந்தாள்.
“அக்கா நாங்கம் இப்போ புதிசாயிட்டு ஜோப்பெர தெரக்கப்போறோம்” என்றாள்.
பிள்ளையும் எலிசபெத்தும் குதூகலித்து விளையாடும் சத்தம் வெளியே கேட்டது.