மலையாளவாதம் மேலும் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

வணக்கமும் வாழ்த்துகளும் !
இன்று தங்கள் ‘வலைப் பதி’விலுள்ள கடிதம் ஒன்றினையும் அதற்கு நீங்கள் அளித்த விளக்கத்தினையும் பார்த்தேன்.
இக்கடிதத்தை எழுதுவதற்கு அதுவே காரணம்.
இதில் எனது அனுபவங்களையும் இணைத்து எழுதியுள்ளதால் இதனை நீங்கள் வெளியிடுவதாயின் சிலவற்றைத் தணிக்கைசெய்யவும்.
நானும் ஏற்கனவே உங்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.நீங்களும் பதில் தந்திருக்கிறீர்கள்.
உங்கள் கருத்துகள் அத்தனையுடனும் எனது எண்ணங்கள் ஒத்துவராவிடினும், தொடர்ந்து உங்கள் ‘பதிவுகளை’ப் படிக்கிறேன்.
காரணம் உங்களது ஆழ்ந்த வசிப்பு அனுபவம் உங்கள் கட்டுரைகள் வழியாகவும் கதைகள் மூலமகவும் வெளிப்படுகின்றன. அதுவும், மிகவும்
கவர்ச்சிகரமான ’நடையில்’!
உங்கள் சிறுகதையான “பத்ம  வியூக”த்தினை ’காலச்சுவட்டி’ல் படித்ததிலிருந்துதான் உங்களது எழுத்துகளில் எனக்கு நாட்டம் ஏற்பட்டது.
பிரமிக்கத்தக்க எழுத்தாற்றல் கொண்டவர் என்னும் எண்ணம் அப்போது என் மனதில் தோன்றியது. அதனைத் தொடர்ந்து ‘விஷ்ணுபுரம்”!
இதன் வெளியீட்டு விழாவுக்கு ( சென்னையில் நடந்தது )  நானும் வந்திருந்தேன் ! இது குறித்து முன்பு ஓர் மடல் எழுதியது ஞாபகமிருக்கலாம்.
சரி…. சொல்லவந்த விஷயத்துக்கு வருகிறேனே.
உங்கள் பதிலில் தூக்கலாகத்தெரியும் ‘எழுத்தாளக் கர்வம்”  எனக்கும் பிடிக்கும்.
நான் பாடசாலை மாணவனாக இருந்த காலத்தில், எமது வீட்டில் ஏனைய நாள்,வார இதழ்களோடு “கல்கி”யும் வாங்குவார்கள்.
அதனால், திரு நா.பா அவர்களது நாவல்களைப் படிக்கும் வாய்ப்புக் கிட்டிற்று. எனது பதின்ம வயதில் நான் நா.பா ரசிகனாகவே இருந்தேன். அவரது
எழுத்தில் ஓர் எழுத்தாளனுக்கான ’மிடுக்கு’   மிகுந்திருக்கும்! அதே சமையம் அதில் உண்மையும், உறுதியும் மேலோங்கியிருக்கும்.தனக்குச் சரி
என்று தோன்றுவதை ஒருவித ‘ வித்துவச் செருக்குடன்’ கூறும் ஆண்மை அவரது எழுத்துகளில் பளிச்சிடும்.
அதேபோன்றதோர் ‘செருக்கும்’ ஆண்மையும்’ வெளிப்படும் எழுத்துக்குச் சொந்தக்காரர் என்பதால் உங்கள் எழுத்தும் எனக்குப்பிடிக்கும்.
எனது பொழுதுபோக்கு ‘புத்தகம் வாசித்தல் ’ என்று இருந்ததால் பாடசாலை மாணவப்பருவம் தமிழ் நூல்களோடும், உயர்கல்வி (பட்டப்படிப்பு) ப்
பருவம் ஆங்கில நூல்களோடும் நெருக்கத்தை ஏற்படுத்திற்று.
ஆனாலும், எனது ஆர்வம் பெரும்பாலும் அரசியல்,அறிவியல் துறைகளில் இருந்ததால், நான் எண்பதுகளின் ஆரம்பத்தில் சிங்கப்பூர் வந்தபின்னர்
இங்கு வெளியாகிய எல்லாப் பத்திரிகைகளிலும் எனது அரசியல் மற்றும் அறிவியல் கட்டுரைகள் தொடர்ந்து ஆறேழு வருடங்களாக
இடம்பெற்றுவந்தன.
இக்காலப்பகுதியில் சுமார் நான்காயிரம் கட்டுரைகள்வரை எழுதியுள்ளேன்! இவற்றுள் 28  கட்டுரைத் தொடர்கள்!
அரசியல், அறிவியல், சமூகம் மற்றும் ஜோதிடம் உட்பட பலதுறைகளிலும் எனது ஆக்கங்கள் வெளியாகின. நான் உயர் கல்வியின்போது
வானியலையும் பாடமாகக் கற்றதால் ‘அண்டவெளிப் பயணங்கள்’ பற்றியும், பின்னர் சுயமுயற்சியின்பேரில் ஜோதிடத்தினைக் கற்று அதுகுறித்த
விளக்கக் கட்டுரைகளையும் எழுதியுள்ளேன்.
மலேசியாவில் எனது கட்டுரைகள் வெளியான சமையத்தில் எனக்குப் பலர் நண்பர்களானார்கள். அதிலும் குறிப்பாக, நான் ஓர் ‘ஈழத்தமிழன்’
என்று தெரிந்து கொண்டதும் மலையாள நண்பர்களது எண்ணிக்கை அதிகமாகியது.அதே போன்று என்னோடு நெருங்கி நட்புடன் எனது
கட்டுரைகளை வெளியிட்டுவந்த பத்திரிகையாளர்கள்; இந்த நாட்டில்; தமிழகத்திலிருந்து ஆங்கிலேயர்களால் தோட்டவேலைக்கு
அழைத்துவரப்பட்ட தமிழர்களை  இலங்கையிலிருந்தும், இந்தியாவின் கேரளாவிலிருந்தும் வந்து, ஆங்கில அரசில் குமாஸ்த்தாக்களாகவும்,
ஆசிரியர்களாகவும்,மற்றும் உயர்நிலை அதிகாரிகளாகவும் இருந்தவர்கள் ‘தீண்டத்தகாதவர்கள் போன்று’ நடாத்தியதாகக்
குறைப்பட்டிருக்கிறார்கள்.
ஒருவகையில், இங்குள்ள தமிழர்களோடு கலந்து பழகும் நிலையை எனது எழுத்தும், மலையாளிகளோடு நட்புடன் உறவாடும்  நிலையினை
எனது தொழிலும், இலங்கைத்தமிழன் என்னும் அடையாளமும் பெற்றுத்தந்தன என்றுதான் சொல்லவேண்டும்!
அதுமட்டுமல்லாமல், இலங்கையர்களும், மலையாளிகளும்  படிப்பறிவுமிக்கவர்களாக இருப்பதால்  அவர்கள் சுலபத்தில்
நண்பர்களாகிவிடுகிறார்கள்
மேலும், இலங்கைத் தமிழர்களது ’பேச்சுத்தமிழ்’  கேட்பதற்கு மலையாளம் போலவே இருக்கும்.
மோனெ; என்ர, உன்ர, கண்டாயம், எங்ஙன, அங்கின , குறச்சல், எவ்விட …..   இப்படி அடுக்கிக்கொண்டேபோகலாம்
.
நான், எனது குடும்பத்தினருடன் கேரளா சென்றபோது, அங்குள்ளவர்கள் எம்மை  மலையாளிகளாகவே பார்ப்பதையும்
அதன் காரணமாக மதித்து நடப்பதையும் உணர்ந்திருக்கிறேன்.
வெளிநாடுகளில் மலையாளத்தவரும், இலங்கைத்தமிழரும்  சுலபமாக நெருங்கி உறவாடுவதையும்  , தமிழகத்தவர்களை  அவர்கள் ஒருபடி
கீழாகவே பார்ப்பதையும் கண்டிருக்கிறேன். இதனை நீங்களும்  வெளி நாட்டுப் பயணங்களின்போது அவதானிக்கலாம்.
இந்தத் தாழ்வு மனப்பான்மை காரணமாகவும்  உங்கள் படைப்புகளில்  குறைசொல்லும் ‘மனப்பாங்கு’ சில தமிழர்களிடம் ஏற்பட்டிருக்கலாம் என
நினைகிறேன்.
‘குவெய்த்’ நண்பர்களது கடிதமும் இதுபோன்ற ஒன்றுதான். காலப்போக்கில் எல்லாம் சீராகிவிடும்.
உங்களுக்கு எது சரியாகப் படுகிறதோ அதனைத் துணிந்து சொல்லும் உங்கள் குணம் தொடரட்டும்.
எது சரி எது பிழை எனபது காலத்தின் கரங்களில்!
நட்புடன்,
“சர்வசித்தன்”

 

 

 

அன்புள்ள சர்வசித்தன்

வெளிநாட்டுப்பயணம் காரணமாக கொஞ்சம் தாமதமாக இக்கடிதத்தை எழுதுகிறேன். தங்கள் நீண்ட கடிதத்துக்கு நன்றி.

மீண்டும் மீண்டும் நாம் காணும் சித்திரம்தான் இது, பிறன் என்ற ஒருவரை உருவகித்து  அவன் மேல் வெறுப்பை உருவாக்குதல். அதன் மூலம் பெரும்பாலும் நமக்கே இழப்பு உருவாகிறது.

உலகின் மாபெரும் மொழிகளில் எல்லாம் பிற மொழியாளர்கள் வந்து பெரும் ஆக்கங்களை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த மொழியை வளப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு மொழியை ஒரு புறப் படைப்பாளி நாடுகிறான் என்பதே அம்மொழியின் வல்லமைக்கு அடையாளாம்.

கொஞ்ச வருடங்கள் முன்பு அக்கினிபுத்திரன் என்பவர் இவ்வாறு என்னை மலையாளி என வசைபாடியபோது கோவை ஞானி சொன்னார், உலகம் முழுக்க இருந்து எழுத்தாளர்கள் வந்து தமிழில் எழுதவேண்டுமென்றே நான் சொல்வேன் என்று. அதுவே ஓர் அறிஞனின் நோக்காக இருக்க முடியும்

எந்த ஒரு சமூகமும் எழுத்தாளனிடம் என்ன எழுதவேண்டும் என்று சொல்ல முடியாது என்றே நான் நினைக்கிரேன்

ஜெ

 

 

 

அன்புள்ள ஜெயமோகன் சார்,

நலமா. மலையாளவாதம் கடிதம் பார்த்தேன்.  அவர்கள் உங்கள் வாசகர்களே அல்ல. அவர்களை இவ்வளவுதூரம் பொருள்படுத்தி எழுதியது அவர்களுக்கு மிக
மிக அதிகம். வார பத்திரிகைகளை படித்துவிட்டு தங்களை இலக்கிய வாசகர்களாக உருவகித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். உங்கள்   வாசகர்களை பற்றி நீங்கள்
கூறியிருப்பது,

”என் வாசகர்களின் தரமும் நிலையும் வேறு. அதை நீங்கள் தொட இன்னும் வெகுதூரம் முன்னகர வேண்டும்”

இது உண்மைதான். நானும் உங்கள் வாசகர் வட்டத்தில் ஒரு துரும்பு என்பதால் எனக்கும் ஒரு சிறிய பெருமிதம். நன்றி சார்.

அன்புடன்
குரு

Thanks & Best Regards

Gurumoorthy

அன்புள்ள குருமூர்த்தி

உண்மை, இவை மிக அபத்தமான மேலோட்டமான கருத்துக்கள் மட்டுமே. இவற்றை பொருட்படுத்தி பதில் சொல்வதென்பது எழுத்தாளனின் தீவிரத்துக்கு எதிரான செயல்பாடே. ஆனால் இணையதளச் சூழலில் செயற்கையாகப் பெருக்கப் பட்டிருக்கும் தமிழ் அடிப்படைவாதச் சூழலில் இவ்வினாக்களுக்கு ஒரு பதிலைச் சொல்லியாக வேண்டியிருக்கிறது
ஜெ

முந்தைய கட்டுரைபண்பாடு கடிதங்கள்
அடுத்த கட்டுரைவேதசகாயகுமார்’60