சீர்மை (4) – அரவிந்த்

[ஐந்து]

த்ரேயா இறந்தபின் அடுத்த இரண்டாண்டுகளுக்கு அலைகளற்ற கடலில் மிதக்கும் தெப்பம்போல் வீற்றிருந்தேன். உப்புநீர் என்னை வருடி, என்மேல் தவழ்ந்து, என்னுடலை மெல்ல கரைத்தபடி இருந்தது. அமைதியின் அந்தக் கருவறையில் நீந்தினேன். தனிமையுள் பெருந்தனிமையாக அங்கு துயில் கொண்டிருந்தேன்.

நண்பர்களெல்லாம் நான் இன்னும் மீளாத் துயரத்தில் இருப்பதாக எண்ணி ஆறுதல் சொல்லியபடி இருந்தார்கள். அவர்களுக்கு நான் சொல்லி புரியவைக்க முயலவில்லை, இது அவள் எனக்களித்த ஆசி என. இது வெறும் பிரிவு ஏக்கம் அல்ல என. அவள் உடுத்திய துணிகளை, விட்டுச் சென்ற பொருட்களை, இறக்கும் முன் எனக்கு அளித்த அவளது நாட்குறிப்பை எதையுமே நான் எடுத்துப் பார்க்க முனையவில்லை. அதற்கான தேவை எதுவும் எனக்கு இருந்ததில்லை. அவளது ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு தொடுகையும்,  ஐந்தாண்டுகளாக அவளோடு கழித்த ஒவ்வொரு கணமும் என் ஆழங்களில் எங்கோ பதிந்திருந்தன.

ஆனால் என்றோ எப்படியோ ஒரு தருணத்தில் நடுக்கடலில் கூழாங்கல் விழுந்து சிறிய அலையொன்று எழுந்தது. அது மெல்ல பெருகி விரிந்து முழு சமுத்திரத்தையும் ஆட்கொண்டது. முதலில் அந்த வண்ணக் கண்ணாடி ஓவியம் என் கண்ணில் படவில்லைதான். அவள் வரைந்து எங்கள் அறையின் உட்பக்கமாக மாட்டி வைக்கப்பட்டிருந்தது. எத்தனையோ முறை அந்த இடத்தை கடந்து சென்றிருந்தாலும் அதன் மீது என் கவனம் குவிந்ததில்லை. ஆனால் அன்று அது என்னை ஏனோ அசைத்தது. நாற்காலியில் ஏறி கையிலெடுத்துப் பார்த்தேன். சிறிது தூசு படிந்திருந்தது. துணியால் அதை துடைத்துக் கொண்டிருந்தபோது அதன் மிகச் சிக்கலான வடிவமைப்பு மெல்ல தெரிய வந்தது. எங்கெங்கோ எழுந்து மறையும் சுழற்கோடுகளில் தெரிந்த சீற்றம். வண்ணக்கலவைகளில் பெருக்கெடுத்தவொரு வீச்சு. இழையமைப்புகளில் தெரிந்த பாங்கு. தூரிகை தீற்றல்களை கவனமாக பின்தொடர முயன்றேன். முழு ஓவியமும் படிப்படியாக என் கண்முன் விரிந்தது. லேசாக கை நடுங்க ஆரம்பித்தது.

சட்டென எழுந்து சென்று பெட்டிக்குள் சால்வை போட்டு மூடி வைக்கப்பட்டிருந்த அவளது எல்லா ஓவியங்களையும் பிரித்து வெளியே வைத்தேன். அதன் வலதோரத்தில் இருந்த அவளது கையொப்பத்தை வைத்து அவற்றை தேதி வாரியாக அடுக்கினேன். நாள் முழுக்க அவற்றையே பார்த்தபடி இருந்தேன். முதல் சில ஓவியங்களில் தெரிந்த சிக்கலான அமைப்பு, படிப்படியாக அதிகரித்துக் கொண்டே சென்றது. அதன் வண்ணத் தீற்றல்கள் ஒன்றோடொன்று முயங்கி புயல்போல் எழுந்து வந்தது. அதன் கோடுகள் பின்னிப் படர்ந்து மாபெரும் வலைபோல் விரிந்தது. ஆனால் அதன் அத்தனை சிக்கல்கள் நடுவிலும் மையமானவொரு ஒழுங்கமைவு தெரிந்தது. அதுவும் மெல்ல நுட்பமாகியபடியே சென்று, ஒருகட்டத்தில் உச்சத்தை அடைந்தது. ஆம், பரிபூரண சீர்மை! கண்வாங்காமல் அந்த ஓவியத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அதற்குப் பிறகு அவள் வரைந்த எல்லா ஓவியங்களிலும் அந்த உச்சத்தை, அந்த முழுமுதல் சீர்மையை எவ்வித எத்தனிப்பும் இன்றி மிக எளிதாகத் தொட்டு விட்டாள் என்று எனக்குப் பட்டது. பேச்சற்று அமர்ந்திருந்தேன். இல்லை.. இல்லை… ஒரு நிமிடம்… அந்தக் கடைசி சில ஓவியங்கள்…. அவற்றில் ஏதோவொரு மாறுபாடு தெரிந்தது. ஆம், முதல் சில ஓவியங்களில் இருந்த சிக்கல் அவற்றில் இல்லைதான். ஆனால் அதையும் மீறி வேறெதோவொரு வித்தியாசம்… குனிந்து முழு கவனத்துடன் அவற்றையே உற்றுப்பார்த்தேன். அனிச்சையாக எழும் கோடுகள்…வெகு லாவகமாக வளைந்து செல்லும் தீற்றல்கள்… எல்லாம் அந்த பரிபூரண சீர்மையை நோக்கி. ஆனால் ஓவியத்தின் மையத்தில் கை தடுக்கிவிட்டது போல ஒரு தீற்றல். வரைந்து கொண்டிருக்கும்போது தும்மல் வந்தது போல். ஒருவேளை அது அவளது இடதுகண் பார்வை போனதால் இருக்குமோ என்றால் கடைசி நாட்களில் அவள் வரைந்த எல்லா ஓவியங்களிலும் அதே போன்றதொரு ஒற்றைத் தீற்றல். எல்லாக் கோடுகளும், வண்ணங்களும் குவியும் அந்தப் புள்ளியில். ஒரு நமுட்டுச் சிரிப்பு போல்… அல்லது நம்மை எள்ளி நகையாடுவது போல்…..

உத்வேகமா, வெறியா என சொல்லமுடியாதொரு உணர்வால் அடித்துச் செல்லப்பட்டேன். “God, Thou great symmetry” என்ற வரி திமிங்கலம் அதன் அத்தனை எடையையும் தூக்கி கடலில் இருந்து எம்பி குதிப்பது போல் என் அடிவயிற்றிலிருந்து எழுந்து வந்தது. அவ்வரியை மனதினுள் மறுபடி மறுபடி ஒலிக்க வைத்தபடி இருந்தேன். “God, Thou great symmetry.” என் மனம் சிலிர்த்து எழும். உடல் முழுக்க ரத்தம் வெள்ளமாகப் பாயும். நிறுத்தி வைத்திருந்த எனது புத்தகத்தை மீண்டும் எழுத ஆரம்பித்தேன்.

அடுத்த மூன்று வருடங்கள் பேய் பிடித்தது போல் படித்தேன். அதுவரை எழுதப்பட்ட முக்கியமான முக்கியமில்லாத எல்லாவற்றையும். இறையியலில் இருந்து இயற்பியல் வரை. மரபியலில் இருந்து மானுடவியல் வரை. மதம், தத்துவம், வரலாறு அறிவியல், ஆன்மீகம் என எல்லா தளத்திலும். ஒட்டுமொத்தத்தையும் தொகுத்து அதற்குள் ஒரு சீர்மையைக்கண்டடைவது என்ற பெருங்கனவு என்னை மீண்டும் ஆட்கொண்டது. வெளியுலகத் தொடர்பு முழுக்க நின்று போனது. வாரம் ஒருமுறை மளிகை சாமான் கொண்டு வந்து தருபவன், குப்பை எடுத்துச் செல்பவன் இவர்களைத் தவிர்த்து ஒட்டுமொத்தமாக மூன்றே மூன்று பேரை மட்டுமே இந்நாட்களில் சந்தித்தேன். இடைவிடாது எழுதி படித்து வந்தேன். இந்த மூன்று வருடங்களில் உடல் இச்சைகளும், காம உணர்வுகளும் ஏனோ எழவில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் தொடுகைக்கான மெல்லியதொரு ஏக்கம் உருவானது. சாதாரண மனிதத் தொடுகை. நாளாக நாளாக அந்த ஏக்கம் அதிகரித்தபடியே சென்றது. தினம் அதிகாலை எழுந்து நாள் முழுக்க படித்து எழுதிய பின் கைகள் இரண்டையும் இறுகப் பற்றியபடி சத்தமின்றி அழுவேன்.

உருவரை ஒன்று மெல்ல வடிவம் கொள்ள ஆரம்பித்தது. பெரும் உற்சாகத்தோடு எழுத ஆரம்பித்தபோது இன்னும் ஏதோ ஒன்று விடுபடுவது போலவே இருந்தது. ஆம், எல்லாவற்றையும் இணைக்கும் சரடு, ஒரு தொகுப்புச் சட்டகம். எத்தனை முயன்றும் அது பிடிகிடைக்கவில்லை. ஏதேதோ செய்து பார்த்தேன். விடுபட்ட புத்தகங்களை வாசித்தேன். அதுவரை எடுத்திருந்த பத்தாயிரம் பக்கங்களுக்கு மேலான குறிப்புகள் அனைத்தையும் மீண்டும் படித்துப் பார்த்தேன். ஆனாலும் கைக்குள் சிக்கவில்லை. அனுதினமும் அவதியுற்றேன். ஒருகட்டத்தில் சோர்ந்து மனமுடைந்து போனேன். அதுவரை எழுதிய எல்லாவற்றையும் போட்டு தீ வைத்துக் கொளுத்திவிடலாம் என நினைத்தேன்.

பிறகொரு நாள் பிணம் போல் படுத்துக்கிடந்து சுவாரசியமின்றி நாளிதழைப் புரட்டிய போது “ஆர்தர் கீஸ்லரின் பத்தாவது நினைவு நாள்” என்ற தலைப்பு கண்ணில் பட்டது. முழுப் பக்கத்திற்கு நினைவுக் குறிப்புகள், அவரது படைப்புகள் பற்றிய கட்டுரைகள். திடீரென்று மூளைக்குள் மின்னல் வெட்டிச் சென்றது. ஹோலான்ஸ்! ஆம், ஹோலான்ஸ்! ஒரே சமயம் ஒன்றை உள்ளடக்கியும் மற்றொன்றின் பகுதியாகவும்! ஓடிப்போய் கீஸ்லரின் “தி கோஸ்ட் இன் தி மெஷின்” புத்தகத்தை எடுத்து அந்தப் பகுதியை மீண்டும் வாசித்தேன். பிறகு உட்கார்ந்து மடமடவென்று எழுத ஆரம்பித்தேன். அணு ஒன்று உருவாகி அதில் உயிர் குடிகொண்டு அது செடியாகி மரமாகி கனிந்து பழமாகி நீர் நனைந்து வித்தாகி வித்து ஜடமாகி ஜடம் நெஞ்சில் கை வைத்து தான் என்று உணர்ந்து அதில் பிரக்ஞை தோன்றி மெல்ல கிளைபரப்பி போர் தொடுத்து கோட்டைகளை எழுப்பி கலைகளை நாகரீகங்களை உருவாக்கி….. எல்லாம் சரியாகப் பொருந்தி வந்தது.

மலர்களைத் தொடுத்து பெரும் மாலையாக்குவது போல் ஹோலார்க்கிகளை உருவாக்கியபடி சென்றேன். ஒருகட்டத்தில் முழு உருவரையும் தெரிய ஆரம்பித்தது. அதை ஒரு வரைபடமாக்கினேன். இடதுபுறம் உள்ளவை அனைத்தும் உள்வடிவங்கள். வலதுபுறம் உள்ளவை வெளிவடிவங்கள். மேற்புறம்  உள்ளவை தனிமனிதன் சார்ந்தவை. கீழ்ப்புறம், குழு மற்றும் சமூகம் சார்ந்தவை. அப்படி அந்த வரைபடத்தை நான்கு காற்பகுதிகளாகப் பிரித்தேன். ஒவ்வொரு காற்பகுதியின் உள்ளேயும் ஹோலார்க்கிகளை அடுக்கினேன். வெவ்வேறு கருத்தியல்களை, சிந்தனைமுறைகளை அதற்குள் பொருத்தி வைத்தேன். ஒவ்வொரு காற்பகுதியும் மற்றவற்றோடு பிசிறில்லாமல் முழுமையாகப் பொருந்தியது. நாட்டிலஸ் அதன் ஓட்டைப் பரப்பி ஆழ்கடல் முழுக்க விரிந்து செல்வது போல் பரிபூரண சீர்மை!

அடுத்த மூன்று மாதங்களில் முழு புத்தகத்தையும் எழுதி முடித்தேன். கிட்டத்தட்ட ஆயிரத்தைநூறு பக்கங்கள். அந்த வருட இறுதியிலேயே புத்தகம் வெளிவந்து பெரும் பரபரப்பை உண்டாக்கியது. “மகத்தான மானுட சாதனை”, “நம் காலத்தின் ஆல்ஃபிரட் நார்த் வைட்ஹெட்”, “இதுவரை நாம் உருவாக்கிய தத்துவங்கள் அனைத்தும் பிளாட்டோவின் நூலுக்கு சேர்த்த அடிக்குறிப்புகள் என்றால் இனி அடுத்த சில நூற்றாண்டுகளில் நாம் எழுதக்கூடியவை எல்லாம் இந்தப் புத்தகத்திற்கான அடிக்குறிப்புகளாகத்தான் இருக்கும்” என ஏராளமான மதிப்புரைகள். புத்தகத்தில் இருந்த உருவரையும் அதை காட்சிப்படுத்திய அந்த வரைபடமும் அதன் சீர்மைக்காக இருபதாம் நூற்றாண்டின் பெரும் பங்களிப்பாக பல அறிஞர்களால் முன்வைக்கப்பட்டது.

வெளியீட்டு விழா, கருத்தரங்கக்கூட்டம் என எதற்குமே போகப் பிடிக்காமல் வீட்டிலேயே இருந்தேன். பதிப்பகத்தார் மட்டும் தொடர்ந்து என்னை நச்சரித்து, புத்தகத்தின் மிகப்பெரிய வெற்றியைக்கொண்டாட சான் பிரான்சிஸ்கோவில் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த விருந்துக்கு வரச் சொல்லி கேட்டுக்கொண்டார்கள். முக்கியமானவர்கள் பலர் சந்திக்க ஆசைப்படுகிறார்கள், தயவுசெய்து கலந்துகொள்ள வேண்டும், இல்லையேல் எங்களுக்கு பெரிய பிரச்சினை உண்டாகிவிடும் என்றார்கள்.

பத்தாண்டுகள் கழித்து பொதுவெளிக்கு வருவதால் ஏதோ ஒரு தயக்கம் இருந்தது. மெல்ல எழுந்து வந்து கண்ணாடியில் முகம் பார்த்தேன். முழுக்க சுருக்கங்கள். கண் எங்கோ உள்ளுக்குள் தள்ளிப் போய் இருந்தது. கைகளில் லேசானதொரு நடுக்கம். காலம் அதன் அத்தனை தேய்மானங்களையும் முகத்தில் விட்டுச் சென்றிருப்பதாகப்பட்டது. துணிகளை பெட்டியில் எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

மோட்டார் படகு கிளைபிரித்து அல்கட்ராஸ் தீவு நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சுழல் விளக்குகளின் ஒளி நீரெங்கும் படர்ந்து சுற்றிச் சுற்றி வந்தபடி இருந்தது. கோல்டன் கேட் பாலம் மெல்ல ஒரு சிவப்பு பென்சில் கோடு போல ஆகிக்கொண்டிருந்தது. கரையில் இருந்து சாம் கையாட்டியபடி இருந்தான். என்னுடைய பதிப்பாளன். கைகுலுக்கி வரவேற்று “இப்படி…” என்றான். மெதுவாக கட்டிடத்திற்குள் நுழைந்தோம். “அல்-கபூனை இங்குதான் ஒருகாலத்தில் வைத்திருந்தார்கள்” என ஏனோவொரு பெருமிதத்துடன் சொன்னான். அறைக்கதவை அவன் திறக்க நான் உள்ளே நுழைந்த மறுநொடி கைதட்டல் ஒலி பெருமழை போல் எழுந்தது. முன்னூறு பேர் அங்கு ஏற்கனவே குழுமியிருந்தார்கள். வெகுநாட்களுக்குப்பிறகு அத்தனை பேரை ஒரே சமயத்தில் பார்த்ததில் திடீரென்றொரு பதற்றம் ஏற்பட்டது. கூச்சத்தால் நெளிந்தபடி தரைவட்டுகளையே பார்த்தபடி நின்றிருந்தேன்.

“பென்ரோஸ் டைலிங்…” என்றான் சாம். “இந்த விழாவிற்காகவே போட்டது…”

“ஹம்ம்.”

“ஐ-மடிப்புகள் கொண்ட சூழல்-சீர்மையின்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது…”

“ஹம்ம்.”

“ஃபைவ் ஃபோல்ட் ரொட்டேஷனல் சிமெட்ரி! அற்புதம் என்ன…”

“ஹம்ம்.”

”டேனியல் ஷெக்ட்மேனும், ரோஜர் பென்ரோஸும் மேதைகள்தான்…”

“ஹம்ம்.”

“இது போன்ற டைலிங்கை உலகத்தில் வெகு சில இடங்களில் மட்டுமே பார்க்க முடியும்….”

“ஹம்ம்.”

எல்லோரும் வந்து கை கொடுத்தபடி இருந்தார்கள். திடீரென எங்கோ நுழைந்துவிட்டதொரு உணர்வு ஏற்பட்டது.

புத்தகத்தில் இருந்த அந்த வரைபடத்தை மட்டும் மென்தகடாக்கி அதைச்சுற்றி ஒரு மரச்சட்டகத்தைப்போட்டு வைத்திருந்தார்கள். “மக் ஷாட்…மக் ஷாட்” எனச் சொல்லி ஒருவன் மணியடித்தபடி அறை முழுக்க வலம் வந்தான். கூட்டத்தில் சிரிப்பு எழுந்தது. எல்லோரும் வந்து விரிசையில் நின்றார்கள். பின்னர் ஒவ்வொருவராகச் சென்று அந்தச் சட்டகத்தை கையில் பிடித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். “நேராக… எடுத்தாகிவிட்டது… இப்போது இடதுபக்கம் திரும்புங்கள்….. முடிந்துவிட்டது…  இப்போது வலதுபக்கம்..”

சாம் பக்கத்தில் வந்து நின்றபடி சிரித்தான். “எப்படி இருக்கிறது… எல்லாம் என்னுடைய யோசனைதான்!” என்றான். “உனது இந்தத் தலையணை புத்தகத்தை இந்த ஆட்களுக்குக் கொடுத்தால் அதை அவர்கள் தூக்குவதற்குள் கை ஒடிந்து விடும். பின்னர் மருந்துச் செலவும் என் தலையில்தான் விழும்….ஹ்ஹா”

மெதுவாக அங்கிருந்து வெளியே சென்றேன். புல்வெளியில் க
ரி அடுப்பு வைத்து வான்கோழி சுட்டுக் கொண்டிருந்தார்கள். காற்று சற்று பலமாக அடித்துக் கொண்டிருந்தது. தூரத்தில் கோல்டன் கேட் பாலம் மெல்லியதொரு முக்கோணம் போல் அல்லது புறப்படத் தயாராக இருக்கும் போர் விமானம் போல் தெரிந்தது. சிறுவயதில் அது போல் நிறைய விமானங்களை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அப்பா அது போன்றதொரு விமானத்தைதான் ஓட்டுவார்.

அடுப்பில் எண்ணை ஊற்றப்பட்டதால் நெருப்பும் புகையும் அதிகமாகிக்கொண்டே போனது. புகை எங்கும் பரவி கண் எரிச்சலை உண்டாக்கியது. பிறகு திடீரென சதை கருகும் மணம் ஒன்று தோன்றி மறைந்தது. உள்ளுக்குள் எங்கோவொரு வலி மெல்ல மிகமெல்ல எழுந்து என் முழு உடலையும் போட்டு உலுக்கியது. கண்மூடி சுவற்றைப் பிடித்தபடி நின்றிருந்தேன். தூரிகையின் ஒற்றைத் தீற்றல் “இல்லை..” என்ற சொல்லாக தழல் விட்டு எரிந்தது. அது நெஞ்சில் மெல்ல பெருகிப் பெருகி தீயாக வளர்ந்தது. இல்லை இல்லை இல்லை. அர்த்தமற்ற வெறும் சொல். புற்றீசல் போல் அது என்னை சுற்றிச் சுற்றி வந்தது. வாய் விட்டுக் கதறி அழ வேண்டும் போல் இருந்தது. தழலையே பார்த்துக் கொண்டிருந்தேன். நடுவீட்டில் நாற்காலி போட்டு நான் உட்கார்ந்திருக்க சுற்றிலும் பூந்தோட்டம் பற்றி எரிந்தது. அதில் ஓராயிரம் முலைகள் வந்து விழுந்தது. தழல் நின்றும் சுடரில்லா நெருப்பில் அது எரிந்தெரிந்து சாம்பலானது. பின்னர் தரிசு நிலத்தில் ஒரு புல் முளைத்தது. அது வளர்ந்து காடாகியது. காட்டின் எங்கோவொரு ஆழத்தில் மின்மினிகள் தோன்றின. அவை சேர்ந்து பின்னலிட்டு முடிவில்லா பெருவலை ஒன்றை நெய்து எழுப்பின. கை நீட்டித் தொடுவதற்குள் மாயமாய் மறைந்தன.

“நேரமாகிறது…. இதென்ன…. இப்படி கையை நீட்டிக் கொண்டு… எல்லோரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். புகைப்படம்…?”

“ஹ்ம்ம்”

என் முழு எடையையும் தாங்கி நடந்தேன். சப்பாத்துகள் பாறாங்கற்கள் போல் கனத்தன. கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பது போல் இடறின.

“இன்னும் கொஞ்சம் உயர்த்தி… அவ்வளவு தூரம் வேண்டாம்… கொஞ்சம் கீழே… நெஞ்சருகே… ஆம், அங்குதான்… கச்சிதம்… அப்படியே வைத்திருங்கள்… தயார், ஒன்று… இரண்டு… மூன்று”.

சட்டகத்தைப் பிடித்தபடி விறைத்து நின்றிருந்தேன். காமிரா ஒளி மின்னி அணைந்தது.

[முற்றும்]

pic

[கென் வில்பர், த்ரேயா]

 

முந்தைய கட்டுரைசீர்மை புனைவின் மகத்துவம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைமேற்கத்திய மருந்துகள்