சீர்மை (3) – அரவிந்த்

[நான்கு]

இரும்புக் கதவுகளை மெல்ல அடைத்துவிட்டு கிடங்கில் இருந்து வெளியே வந்தேன். அதுவரை பின்தொடர்ந்து வந்த காலடியோசை திடீரென்று மறைந்தது. கொட்டகையின் இருள் தலைசுற்றலை உண்டாக்கியது. திசை மறந்து ஒருகணம் ஸ்தம்பித்து நின்றேன். கண் இமையின் எதிரொளி சிறு பிம்பங்களாக  சுழன்று வந்தன. கைகளை விரித்து சுவரை தொட்டபடி வெளியே வந்தேன்.

தெருமுகப்பை அடைந்ததும் வெயில் முகத்தில் அறைந்தது. டாஹோ ஏரி நிறமின்றி வெளிறி காட்சியளித்தது. வாய் கசக்கவே, காறிக்காறித் துப்பியபடி நடந்து சென்றேன். எதிரே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பந்தை இறுக அணைத்தபடி என்னை அச்சத்துடன் பார்ப்பது தெரிந்தது. ஏரிக்கரை மணல் வெப்பத்தால் எரிந்து கொண்டிருந்தது. அங்கே சிறிதுநேரம் கால்களை நன்கு நீட்டி கழுத்தை சாய்த்தபடி உட்கார்ந்திருந்தேன். வேர்த்துக் கொட்டியதால், உடல் இலகுவாகியது, தலை கனமாகியபடியே சென்றது. பின்னர் எழுந்து என்னை இழுத்துக் கொண்டு கரையோரம் நடந்தேன். முதுகுக்குப் பின் சிறுவன் என்னையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.

வந்த புதிதில் த்ரேயாவும் நானும் இங்கு காலை நடை செல்வோம். வடக்கு ஏரிக்கு அருகில் உள்ள மலை மீதுதான் எங்கள் வீடு உள்ளது. த்ரேயா அந்த இடத்தைதான் விரும்பினாள். வீட்டில் இருந்து மூன்று திசைகளில் எங்கு நோக்கினாலும் டாஹோ ஏரி தெரியும். ஏன் இங்கு குடிவர முடிவெடுத்தோம் என்பதை இன்னமும் எங்களால் சரிவர புரிந்து கொள்ள முடியவில்லைதான். சில மாயக் கணங்களில் எடுக்கும் முடிவுகளை ஒருபோதும் நம்மால் முழுக்க அறிந்து கொள்ள முடியாது போல. அறுவை சிகிச்சைக்குப் பின் இரண்டரை வருடங்கள் எங்கள் சான் பிரான்சிஸ்கோ வீட்டில்தான் இருந்தோம். அப்போது வாரம் இருமுறை டாக்டரைப் பார்க்க செல்ல வேண்டும். விட்டமின் சிகிச்சையும் போய்க் கொண்டிருந்தது. கண்மூடித் திறப்பதற்குள் நடந்து முடிந்துவிட்ட நிகழ்வுகளின் கனத்தில் இருந்து மெல்ல எங்களை மீட்டபடி இருந்தோம். முதல் சில மாதங்களில் த்ரேயா வெளியே வரப் பிடிக்காமல் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்தாள். யாரையும் சந்திக்க அவள் விரும்பவில்லை. உடை மாற்றும்போது என்னை படுக்கை அறையில் இருந்து வெளியே போய் விடச் சொல்வாள். எப்போதும் ஒரு சால்வையை தன் உடலைச் சுற்றி போர்த்தியிருந்தாள்.

தொடர்ந்து அவளை சிரிக்க வைக்க ஏதாவது முயற்சி செய்தபடியே இருப்பேன். பேக்-மேன் அதன் வாயைத் திறந்து கேன்சர் செல்களை எல்லாம் வரிசையாக கடக் கடக் கடக் என சாப்பிட்டுச் செல்வது போல விளையாடிக் காண்பிப்பேன். வெள்ளை கோட் மாட்டிக்கொண்டு பைத்தியக்கார விஞ்ஞானி போல நடிப்பேன். டெஸ்ட் ட்யூப்களில் விட்டமின் கரைசல்கள் மற்றும் ஊட்டச்சத்து திரவங்களை எல்லாம் கலக்கும்போது அவை வெடிச் சத்தத்துடன் எழுவது போலவும், அதை உட்கொண்ட அந்த விஞ்ஞானி பெரும் பலசாலியாகி வெள்ளை மாளிகையைக் கைப்பற்ற, அவனை வீழ்த்துவதற்காக நெப்ராஸ்காவின் எங்கோ ஒரு மூலையில் வாழும் கென் என்ற ஒரு பயோகெமிஸ்ட்டை பென்டகனும், எஃப்.பி.ஐ-யும் தேடிப் பிடித்து அனுப்புவது போலவும் விதவிதமாக நடித்துக் காண்பிப்பேன். த்ரேயா “போதும் போதும், கல்லூரியில் பயோகெமிஸ்ட்ரி படித்தாய் என்பதை நம்புகிறேன். வா…” எனச் சொல்லி சிரிப்பாள்.

மெல்ல அவள் தனது கூட்டில் இருந்து வெளியில் வந்தாள். தினமும் ம்யூர் காடுகளை ஒட்டி நீண்டதொரு காலை நடை செல்ல ஆரம்பித்தோம். அப்படி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது ஒருநாள் காலை நடையின்போது திடீரென்று “நீ என்ன நினைக்கிறாய்?” என்றாள். “ஹ்ம்?” என்று புருவத்தை உயர்த்தினேன். “இல்லை… எனக்கு ஏன் கேன்சர் வந்தது என்று நீ நினைக்கிறாய்?” ஒன்றும் பேசாமல் நடந்தேன். “ஏதாவது காரணம் இருக்கும்தானே?” “ஒரு காரணமும் இல்லை… பேசாமல் வா”  “முன்பு செய்த ஏதோவொரு தவறு, பாவம்….” “உளறாதே…” “இல்லை, அதெப்படி திடீரென்று வரும்? ஏதாவது காரணம் இருக்கும்…” “ஆம், என்னைத் திருமணம் செய்து கொண்டதால்தான்…” “ஐயோ, உன்னை சொல்லவில்லை…ஏன் இப்படி கோபப்படுகிறாய்? சிறுவயதில் இளமையில் நான் செய்த ஏதோவொரு பாவத்தால்தான்…”

எவ்வளவு சொல்லிப் பார்த்தும் அவள் கேட்பதாய் இல்லை. காரணத்தைத் தேடியபடி இருந்தாள். இதுபோல யோசிப்பவள் அல்ல அவள் என்பது எனக்கு தெரிந்தே இருந்ததால், சில நாட்கள் கழித்து சரியாகிவிடும் என்று விட்டு விட்டேன். பின்னர் ஒருநாள் நான் மருந்து வாங்க வெளியே சென்று திரும்பியபோது அவளுடைய தோழிகள் அவளுடன் ஏதோ பேசிக் கொண்டிருப்பது கேட்டது.

“உனக்குள் கொதித்துக் கொண்டிருக்கும் அந்தச் சீற்றம் எங்களுக்கு புரியாமல் இல்லை…”

“அடக்கி வைக்கும் உணர்வுகள் கூட கேன்சர் வருவதற்கு காரணமாக இருக்கலாம்..”

“இதை நீ ஒரு நல்வாய்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்… முன்பு எப்போதோ செய்த பாவம்… காரணம் என்ன என்பதைத் தேடு. கண்டுபிடி… நோய் தன்னாலேயே குணமாகிவிடும்.”

கடும் கோபம் வர நான் அவர்களை நோக்கிக் கூச்சலிட்டேன். “ஒன்றும் தெரியாமல் இப்படியெல்லாம் வாய்க்கு வந்ததை சொல்லி குழப்பாதீர்கள்” எனக் கத்தினேன். அவர்கள் வெளியே சென்ற மறுநொடி த்ரேயா என் மீது பாய்ந்தாள். அவளது தோழிகளை நான் அவள் கண்முன்னே அவமானப்படுத்திவிட்டேன் எனச் சொல்லி கதவை படாரென்று மூடிவிட்டு அறைக்குள் சென்றாள். முதல் முறை எங்களுக்குள் பெரியதொரு சண்டை வெடித்தது.

பிறகு மெல்ல சமனமடைந்து கொண்டிருந்தபோது அடுத்த செய்தி எங்களுக்காகக் காத்துக் கிடந்தது. வாரப் பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றபோது த்ரேயா கருவுற்றிருக்கிறாள் என்பது தெரியவந்தது. அவள் மனவெழுச்சி அடைந்தாள். நடுங்கிய கரங்களுடன் என் கைவிரல்களைப் பற்றியபடி, கண்களில் எனக்கு மட்டுமே தெரியக்கூடிய அளவு துளி நீர் நின்றிருக்க, என்னைப் பார்த்து முகம் மலர புன்னகைத்தாள். அந்தப் பெரும் மகிழ்வு என்னை அடைவதற்கு முன் செய்தியின் குரூர யதார்த்தம் உறைத்தது. அதிர்ந்து பேச்சற்று அமர்ந்திருந்தேன். நான் அப்படி அமர்ந்திருப்பதைக் கண்ட மறுநொடி அவளது முகம் சுருங்கியது.  நான் எதுவும் சொல்வதற்கு முன் டாக்டரே ஆரம்பித்தார்.

“உங்கள் கேன்சர் எஸ்ட்ரோஜன் பாசிடிவ் என்பது உங்களுக்கே தெரியும்… புதிதாக நான் எதுவும் சொல்லத் தேவையில்லை… இப்போதுதான் நன்கு முன்னேறி வருகிறீர்கள்… பிரசவத்தின்போது ஹார்மோன் நிலைதடுமாற்றங்கள் நிறைய இருக்கும்… அது மீதமிருக்கும் கேன்சர் செல்களுக்கு உரம் போல! ஒரு வருடம் கழித்து என்றால் பிரச்சினை இருந்திருக்காது. அப்போது உடல் நலமும் தேறியிருக்கும்… ஆனால் இப்போதைக்கு கலைத்து விடுவது தவிர வேறு வழியில்லை…”

அப்படி நான் சலனமின்றி உட்கார்ந்திருந்தது அவளை மிக ஆழமாக காயப்படுத்திவிட்டது என்பதை சில நாட்கள் கழித்தே புரிந்து கொண்டேன். எவ்வளவு சமாதானம் செய்ய முயன்றும் அவள் நம்பவில்லை. விருப்பமின்மையின், நிராகரிப்பின் சின்னமாகவே அதை எடுத்துக் கொண்டாள். கருக்கலைப்பு நடந்தது. அவளுடன் கூடவே இருக்க நினைத்தும் படிவங்களை நிரப்புவதிலும், வரிசையில் நின்று பணம் செலுத்தி மருந்து வாங்கி வருவதிலுமேயே என்னுடைய நேரத்தில் பாதி சென்றது. அந்நிகழ்விற்குப் பின் மெல்லியதொரு திரை எங்கள் நடுவே எழுந்தது. பேச்சு குறைந்தது. சேர்ந்து காலை நடை செல்வது நின்றது. மாலை முழுக்க அறையிலேயே படுத்துக் கிடப்பாள். இரவு நான் எங்கள் அறைக்குச் செல்லும்போது அவள் தூக்கம் வரவில்லை எனச் சொல்லி எழுந்து வரவேற்பறையில் போய் தனியாக உட்கார்ந்து கொள்வாள். சோபாவில் படுத்தபடி பின்னிரவு வரை தொலைக்காட்சி பார்ப்பாள்.

எல்லாவற்றையும் எப்படியாவது சரிப்படுத்திவிடலாம் என நினைக்கும் முன் நிகழ்வுகள் அடுத்தடுத்து நடந்தன. புற்றுநோய் நெஞ்சுக் கூட்டிற்குள் பரவி வருவதாக பரிசோதனையில் தெரிய வந்தது. “லோக்கல் ரிக்கரன்ஸாக இருக்கும் என்றுதான் நினைத்தோம். ஆனால் செஸ்ட்-வால் வரைக்கும் வந்துவிட்டது. வெவ்வேறு வகையான திசுக்களை கேன்சர் செல்கள் ஊடுருவக் கற்றுக் கொண்டு விட்டன என்றுதான் இதற்கு அர்த்தம். மெடாஸ்டெடிக் கான்சர்… உடனடியாக கீமோதெரபி ஆரம்பிக்க வேண்டும். முதலில் சி.எம்.எஃப் ரெஜிமன் ஆரம்பித்து எப்படிப் போகிறது என்று பார்ப்போம்”

அழுவதற்கு நேரமோ கண்ணீரோ இரண்டுமே என்னிடம் எஞ்சியிருக்கவில்லை. தொடர் வேலைகள். இடப்பதிவு செய்ய வேண்டும். மருந்துகளுக்கு ஆர்டர் கொடுக்க வேண்டும். மருத்துவர்களின் காலஅட்டவணைகளை ஒருங்கிணைக்க வேண்டும். ரத்தப் பரிசோதனையின் முடிவுகளை வாங்கி வரவேண்டும். பிரான்ஸிஸ் ஒரு வாரம் விடுப்பு எடுத்துக் கொண்டு த்ரேயாவின் அருகிலேயே இருந்தாள். ரோஜர் பல டாக்டர்களிடம் கலந்தாலோசித்து எனக்கு உதவிகளைச் செய்தான்.

முதல் இரண்டு சுற்று முடிவதற்குள் அவளுக்கு அசதியும் சோர்வும் ரத்தசோகையும் எல்லாம் ஏற்பட்டது. தொண்டையில் ஏற்பட்ட எரிச்சலால் எச்சில் கூட முழுங்க முடியாமல் படுத்துக் கிடந்தாள். மூன்றாம் சுற்று முடிவடைந்தபோது தலைமுடி கொட்டவும் ஆரம்பித்தது. “கேன்சர் கேன்சர் கேன்சர்” என அவள் காதுகளில் முரசொலி விடாது ஒலித்துக் கொண்டிருப்பதாக சொல்லி அழுதாள். நான் அவள் படுக்கை அருகிலேயே அமர்ந்து கொண்டேன். மீண்டும் மெல்ல நெருக்கமானோம். எப்போதும் முத்தங்கள் கொடுத்தபடி இருந்தோம். அவளுக்கு “டாக்ஸ் வித் ரமண மகரிஷி” புத்தகத்தில் இருந்து வாசித்தேன். அதன் அமெரிக்கப் பதிப்பு நான் எழுதிய சிறு முன்னுரையோடு வெளியாகி இருந்தது. பின்னர் ஷெர்லாக் ஹோம்ஸ் படித்தேன். கால்வின் அண்ட் ஹாப்ஸ் வரைபடங்களை நடித்துக் காண்பித்தேன். அவளுடைய மொட்டைத் தலையை என்னுடைய தலையால் மெல்ல முட்டினேன். கண்ணாடியில் இரு மொட்டைத் தலைகளையும் பார்த்தபடி “சேஃப்வேயில் தர்பூசணிப்பழம் விற்கும் பகுதி போல் இருக்கிறது” எனச் சொல்லி சிரித்தாள். மீண்டும் பழையதொரு உறுதி அவளது கண்களில் தென்பட ஆரம்பித்தது.

சி.எம்.எஃப் சிகிச்சை ஒருவழியாக முடிந்தது. பரிசோதித்துப் பார்த்த டாக்டர் “கட்டுப்படுத்தியாகி விட்டது. ஆனால் தொடர்ந்து மருந்துகளை எடுத்துக்கொண்டு, இங்கு வந்து போய்க் கொண்டிருக்க வேண்டும்” என்றார். இருமாதங்களுக்குப் பிறகு மீண்டும் டாக்டரிடம் சென்ற போது கேன்சர் செல்கள் பரவுவதை முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விட்டதாகவும், உடலின் தடுப்பாற்றலும் அதிகரித்திருப்பதாகவும் சொன்னார்.

அந்த வார இறுதியில் எங்காவது வெளியே போகலாம் என முடிவெடுத்தோம். வெகு நாட்களுக்குப் பிறகு சான் பிரான்சிஸ்கோ எல்லையைத் தாண்டி! ஈரம் கனிந்த காற்று காரின் ஜன்னல் இடைவெளிகளுக்குள் புகுந்து முகத்தில் அடிக்க, பைன் மரங்கள் சூழ்ந்த நெடுஞ்சாலையில் விடியல் நதி போல் பொழிவதைப் பார்த்தபடி விரைந்து டாஹோ ஏரிக்குச் சென்றோம். தனியாக இருவரும் டாஹோ ஏரிக்கு முன்பே சிலமுறை வந்திருந்தாலும், அப்போது அந்த ஏரியின் விரிவும், அதன் அடர் நீலமும் எங்களை ஏதோ செய்தது. ஏரி முடிவே இல்லாத நீலக்கம்பளம் போல் சென்று கொண்டே இருந்தது. கரையோரம் சுற்றிச் சுற்றி நடந்தபடி இருந்தோம். திரும்ப சான் பிரான்சிஸ்கோ வீட்டிற்கு வந்த பிறகு அன்றிரவே டாஹோ ஏரியின் அருகே இடம் பார்த்து செல்லலாம் என்ற முடிவை எடுத்தோம். டாக்டரிடம் கேட்டதற்கு “பிரச்சினையில்லை, இங்கிருந்து மூன்றரை மணிநேரம்தானே, மேலும் உடனடி அவசரம் என்றால் எனக்குத் தெரிந்த டாக்டர்கள் அங்கு கார்சன் சிட்டியில் இருக்கிறார்கள்” என்றார். வடக்கு ஏரியின் முகப்பில் இருந்த மலை மீது பெரியதொரு வீடு பார்த்து அடுத்த இரு மாதங்களில் அங்கு குடிபுகத் தயாரானோம். புத்தகங்களை இடம் மாற்றுவதுதான் பெரும் பாடாக இருந்தது. கிட்டத்தட்ட ஐந்தாயிரம் இருக்கும். ரோஜர் எப்படியாவது அனுப்பி வைப்பதாகச் சொன்னான். அவனது கண்கள் கலங்கிப்போய் இருந்தன. புதுவீட்டிற்குச் சென்ற பிறகு மெல்ல மீண்டும் எழுத ஆரம்பிப்பதாக அவனிடம் உறுதி அளித்தேன். “எந்த உதவி வேண்டுமானாலும் தயங்காமல் எங்களிடம் சொல், அடுத்த வார இறுதியில் அங்கு வருகிறோம்” என்று ஃபிரான்சிஸ் சொன்னாள். அனைவரையும் தழுவி விடைபெற்றோம். கொடும் கனவுகளும், சில இனிய நினைவுகளுமாக எங்கள் சான் பிரான்ஸிஸ்கோ இல்லம் காரின் கண்ணாடியில் சிறிதாகியபடியே சென்று மெல்ல மறைந்தது. பசிபிக் கடலின் அலைச்சத்தமும், ம்யூர் காடுகளிலுள்ள செம்மரங்களின் பேரோலமும் மட்டும் இன்னும் சிறிது தூரம் எங்கள் கூடவே வந்தது.

புதிய இடத்தில் ஆட்களை அமர்த்தி பொருட்களை இறக்கி வைத்தோம். வீட்டை மெதுவாக தயார்படுத்தினோம். அருகே மரக்கடைக்குச் சென்று ஒட்டுப்பலகைகளையும், பூச்ச மரத்தின் விறகுகளையும் வாங்கி ஆட்களின் உதவியோடு நானே ஒரு பெரிய புத்தக அலமாரி செய்தேன். அதில் ரோஜர் அனுப்பி வைத்திருந்த எனது புத்தகங்களை மெல்ல அடுக்கினேன். நல்ல எழுத்து மேஜை ஒன்று வாங்கி எனது படிப்பறையில் ஜன்னலருகே போட்டு வைத்தேன். த்ரேயாவும் நானும் மீண்டும் சேர்ந்து காலை நடை செல்ல ஆரம்பித்தோம். இளஞ்சிவப்பு நிற தொப்பியும், சந்தன நிறத்தில் அழகியதொரு கழுத்துச் சுற்றாடையும் அணிந்தபடி வருவாள். மூடுபனி எங்கும் வீற்றிருக்க டாஹோ ஏரி நீலப்பட்டாடை போர்த்தியபடி சலனமின்றி துயில் கொண்டிருக்கும். விரைந்து வரும் மழைமேகங்களுள் அசைவின்றி உட்புகும் பறவைகள் போல் கரையோரம் நடந்து வருவோம். தொடுகையின், விரல் இணைப்புகளின் வழி ஒரு உலகத்தை மீண்டும் அங்கு கட்டியெழுப்பினோம்.

ஆனால் கைத்தட்டி சிரித்தபடி ஒளிந்து விளையாடும் குழந்தை கதவிடுக்கில் மறைந்து மறைந்து தெரிவது போல் புற்றுநோய் எங்களிடம் கண்ணாமூச்சு ஆட்டம் ஆடியது. மாதப் பரிசோதனைக்காக சான் பிரான்சிஸ்கோவிற்குச் சென்று டாக்டர். அன்டர்சனை எப்போதும் போலவே அந்த மாதமும் போய்ப் பார்த்தோம். டாக்டர் கொஞ்சம் சோர்ந்து களைத்திருப்பது போலப்பட்டது. வேலை அதிகம் இருக்கும் போல என நினைப்பதற்குள் “சாரி, மீண்டும் எப்படியோ செஸ்ட்-வால் ரிக்கர்ன்ஸ் ஆரம்பித்திருக்கிறது… சி.எம்.எஃப் போதவில்லை. டோசேஜ் அதிகப்படுத்த வேண்டும். அட்ரியாமைசின் ரெஜிமன் உடனே தொடங்க வேண்டும்” என்றார்.

“இதற்கும் மேலுமா?” என்ற கேள்வி மட்டுமே எங்கள் இருவரிடமும் எஞ்சி நின்றது. சோர்ந்து தளர்ந்துபோய் பிறகு மெல்ல திடப்படுத்திக் கொண்டு மறுபடியும் சிகிச்சைக்குத் தயாரானோம். படிவங்களில் கையழுத்துப் போடும் முன் டாக்டர் எங்களிடம் வந்து தயங்கியபடி சிகிச்சையால் சூலகம் மற்றும் கருப்பையில் பாதிப்பு இருக்கும், அது நிரந்தர பாதிப்பாக இருந்துவிடக் கூடிய சாத்தியமும் உண்டு என்றார். பேச்சற்று அமர்ந்திருந்தோம். வேறெதாவது மாற்றுமருத்துவ முறைகள் செய்து பார்க்கலாமா என     பலரிடம் விசாரித்தோம். கெல்லி நொதியூக்கி சிகிச்சைமுறை, கெர்சன் உணவுக் கட்டுப்பாட்டு முறை, ஆயுர்வேதம், ஹாக்சி சிகிச்சை, லிவிங்க்ஸ்டன் – வீலர் சிகிச்சை என்று எல்லாவற்றையும் விசாரித்துப் பார்த்தோம். ஆனால் இந்த நிலையில் உள்ள புற்றுநோய்க்கு வேறெதுவும் பலனளிக்காது என்ற பதிலையே கிடைக்கப்பெற்றோம். கடைசி முயற்சியாக த்ரேயாவின் கேன்சரின் நிலமை குறித்து நேரடியாக பெதாலஜிஸ்டிடமே கேட்க முயற்சித்தேன். அவர் “நான் சொல்வது முறையல்ல. டாக்டர் ஆன்டர்சனிடமே கேளுங்கள்” எனச் சொல்லி பேச மறுத்தார்.  தயவுசெய்து சொல்லுங்கள் என கெஞ்சி மன்றாடினேன். நீண்டதொரு யோசனைக்குப் பிறகு அவர் “இந்தத்தொழிலில் பதினைந்து வருடங்களுக்கு மேலாக இருக்கிறேன். இதுபோன்ற வீரியமும், ஊடுருவும் தன்மையும் உள்ள கேன்சர் செல்களை வெகு அபூர்வமாகவே பார்த்திருக்கிறேன். அட்ரியாமைசின் ரெஜிமன் தவிர வேறு வழியில்லை” என்றார்.

மீண்டும் மருத்துவமனையில் தீவிர கேன்சர் சிகிச்சைப் பிரிவில் காத்துக் கிடந்தோம். ஒரு கணம் யதேச்சையாக திரும்பிப்பார்த்தபோது அறையின் மறுதிசையில் ஆறு வயது சிறுமி ஒருத்தி கேன்சரால் விழுங்கப்பட்ட தனது காலின் விளிம்பை மெல்லத் தடவிக் கொடுத்தபடி அதனோடு ஏதோ பேசிக் கொண்டு இருந்தாள். அவளை அடுத்து இருபது வயதுகூட ஆகியிருக்காத பெண், முழுக்க வெள்ளை தலைமுடியுடன். அவளருகே தனது மரக்காலை சரிசெய்து கொண்டிருந்த இன்னொருத்தி. எனக்கு தலை சுற்றிக் கொண்டு வந்தது.

நர்ஸ் வந்து எங்களை உள்ளே அழைத்துச் சென்றாள். முதலில் அட்ரியாமைசின். பிறகு ரெக்லான். சிறிது நேரம் கழித்து பெனாட்ரில், மிக அதிக அளவில். அட்ரியாமைசின் மற்றும் ரெக்லான் எடுத்துக் கொண்ட பிறகு உடனே பெனாட்ரில் கொடுக்கக் கூடாது. ஆனால் அப்போது ஹிஸ்டாமைன் விளைவால் மிகையச்ச உணர்வு ஏற்படும், பொறுத்துக் கொள்ளவும் என்று செய்முறையை உணர்ச்சியின்றி படித்துக் காட்டினாள்.

ஆரஞ்சு நிறத்தில் அட்ரியாமைசின் த்ரேயாவின் உடலில் இறங்கியது. அது முடித்து ரெக்லான் கொடுக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் அவளது உடல் நடுங்க ஆரம்பித்தது. முகமும் காதுநுனிகளும் சிவந்து செந்நிறமாகியபடியே சென்றது. பதறியபடி நர்ஸைக் கூப்பிட்டேன். அவள் அலட்டிக் கொள்ளாமல் வந்து தலைகுறுக்கிப் பார்த்துவிட்டு “ஐந்து நிமிடம்” என சொல்லிவிட்டு சென்றாள். த்ரேயாவின் உடல் நடுக்கம் அதிகமாகிக் கொண்டே போனது. இரு கைகளால் அவளது தோளை மெல்ல பற்றியபோது உயர் அழுத்த மின்சாரத்தைத் தொட்டது போல் இருந்தது. ஒருகணம் இருவரும் டாஹோ ஏரியில் குதித்து உயிர்துறப்பது போன்றதொரு பிம்பம் என்னுள் தோன்றி மறைய அடுத்த நொடி அவள் நடுங்கிய குரலில் “கென், தற்கொலை பண்ணிக் கொள்ளலாம் போல இருக்கிறது” என்றாள்.

அன்றிரவு முழுக்க அவளுக்கு நடுக்கம் குறையவில்லை. மூச்சு விட முடியாமல் தவித்தாள்.  அடுத்த ஒன்பது மணிநேரத்தில் அரை மணிக்கொருமுறை வாந்தி எடுத்தபடி இருந்தாள். “இப்படியே இங்கிருந்து குதித்து விடுகிறேன்… அல்லது என்னை விஷம் வைத்துக் கொன்றுவிடு… புத்தகம் எல்லாம் எழுதுகிறாய்… பெரிய ஆள் நீ… ஆனால் இப்போது எதுவுமே செய்ய முடியாமல் தவிக்கிறாய்… எல்லாம் என்னால்தானே… அப்படியே கழுத்தை நெறித்து கொன்று விடு… வா, வந்து என்னை விடுவித்துவிடு… இங்கிருந்து கொண்டுபோய் விடு… வா… சீக்கிரம் வா… வாடா… ஏன் வரமாட்டேன் என்கிறாய்? ஓ, நான் அசிங்கமாக இருக்கிறேனா… அதுதான் விஷயமா? நாயே, அப்படியென்றால் வேசியிடம் போ” என ஏதேதோ சொல்லியபடி இருந்தாள்.

இருமாதம் கழித்து அட்ரியாமைசின் சிகிச்சை நான்கு சுற்று முடிந்தது. அவளது தோல் வெளிறிப் போயிருந்தது. உடல் வலுவற்று கன்ன எலும்புகள் தெரிய ஆரம்பித்தன. வெள்ளை அணுக்கள் குறையும் போதெல்லாம் அட்ரியாமைசின் கொடுக்க வேண்டும் என்றும், அதனால் ஏற்படும் திடீர் தாக்கத்தைக் குறைக்க திரவத்தை சொட்டுச் சொட்டாக உடம்பில் ஏற்றுவதற்கான கருவி ஒன்றையும் டாக்டர் தந்தார். அதையும், பிவிசி பைகளில் அட்ரியாமைசினையும் எடுத்துக் கொண்டு திரும்பினோம். காரில் அந்த ஆரஞ்சு நிற திரவம் தளும்பியபடி இருந்தது. த்ரேயா அதையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென்று “விஷம்…இது விஷம்” என்று கத்தினாள். மெல்ல எடுத்து அதை மறைவாக வைத்தேன்.

மீண்டும் டாஹோ ஏரிக்கு வந்து சேர்ந்தபோது பனிக்காலம் ஆரம்பித்திருந்தது. மாலை நான்கு மணிக்கே இருட்டத் தொடங்கியது. பனி எங்கும் சாம்பல் போல் விரிந்திருந்தது. பெரியவர்கள் பனிச்சறுக்கு விளையாடியபடியும், சிறுவர்கள் பனி உருண்டைகளை ஒருவர் மீதொருவர் வீசியபடியும், சிறுகச் சிறுக பனி சேர்த்து பனிமனிதனை கஷ்டப்பட்டு கட்டி எழுப்பியபடியும், அதன் மீது பனி உருண்டைகளை எறிந்து நொடிப் பொழுதில் உடைத்து நொறுக்கியபடியும் இருந்தார்கள்.

வெள்ளை அணுக்கள் குறையும் போதெல்லாம் சிகிச்சையை ஆரம்பித்தோம். காலர் எலும்பின் அருகே டாக்டர் கொடுத்த அந்தக் கருவி பொருத்தப்பட, அது குழாயின் வழியாக பிவிசி பையில் இருக்கும் அந்த ஆரஞ்சு திரவத்தை உறிந்து, த்ரேயாவின் உடம்பினுள் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு ஏற்றியபடி இருக்கும். சிகிச்சை நாட்களின்போதெல்லாம் அவளுக்கு கடுமையான வயிற்று வலி எடுக்கும். வயிற்றைப் பிடித்துக் கொண்டு சுருண்டு விடுவாள். உடல் நடுங்க, வலியால் முனகியபடி இருப்பாள்.

அப்படி ஒரு சிகிச்சை நாளின்போது ஒருமுறை நள்ளிரவு தாண்டி அவளுக்கு உடல் நடுக்கம் ஏற்பட அருகே படுத்திருந்த நான் அவளது கைவிரல்களைப் பற்ற முயன்ற போது வெடுக் என்று உதறினாள். அதிர்ந்துபோய், பின்பு அனிச்சையாக எழுந்து வெளியே சென்று பால்கனியில் நெடுநேரம் அமர்ந்திருந்தேன். கடுங்குளிர்காற்று முகத்தில் மாறி மாறி அறைந்தது. உதடுகள் வெடித்து ரத்தம்கட்டியது. டாஹோ ஏரி உறைபனியால் மெல்ல இறுகிக் கொண்டிருக்கும் ஒலி கேட்டபடி இருந்தது.

சிகிச்சை இல்லாத மற்ற நாட்களில் தினம் மூன்று நான்கு முறை படுக்கை விரிப்பை மாற்றுவாள். அதன் சுருக்கங்களை சரியாக்கியபடி இருப்பாள். அவளது துணிகளை அலமாரியில் அடுக்கி வைப்பாள். சிறிது இடம் மாறினாலும் பெருங்கோபம் கொண்டு, என்னிடம் எரிந்தெரிந்து விழுவாள். ஏதாவது விளக்கம் சொல்ல முனைந்தால் மேலும் எரிச்சல் கொள்வாள். எங்களிடையே மீண்டும் பேச்சு குறைந்தது. சேர்ந்து உணவுண்பது நின்றது. எல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும் என எனக்குள் சொல்லியபடி, கவனத்தை வேறெங்காவது செலுத்தலாம் என இரண்டரை வருடங்களாக நிறுத்தி வைத்திருந்த புத்தக வேலையை தொடர முயன்றபோது எழுத்து வரவில்லை. வார்த்தைகள் எதுவும் எழவில்லை. எதையும் கவனித்துப்படிக்க முடியவில்லை. வாசிப்பறையில் சேர்ந்தாற்போல் இரு நிமிடம் கூட உட்கார முடியவில்லை.

அன்றிரவு கனவில் மயில் அகவும் ஒலி கேட்டது. வெண்பனியில் அது தோகை விரித்தது. நடனத்தில் அதன் ஒருபக்க தோகை முழுக்க உதிர்ந்தபடி இருந்தது. பிறகு எங்கும் சதை கருகும் மணம் புகை போல் எழுந்து மூச்சுத் திணறலை உண்டாக்கியது. தலைக்குள் ஏதோவொரு பிம்பம் கலைந்து சிதறியது.

அடுத்த நாளில் இருந்து குடிக்க ஆரம்பித்தேன். ரத்தத்தில் எப்போதும் கொஞ்சம் மது ஓடிக் கொண்டிருந்தால் ஒழிய இவற்றையெல்லாம் சகித்துக் கொண்டிருக்க முடியாத நிலைக்கு ஆளானேன். காலையில் சரியாக நான்கு அவுன்ஸ் வோட்கா. பிறகு கொஞ்சம் ஜின். மதியம் முழுக்க ஏழெட்டு பாட்டில்கள் பியர். மாலை சிங்கிள் மால்ட் விஸ்கி. இரவு முழுக்க ரம் அல்லது மீண்டும் வோட்கா. ஆனால் ஒருநாளும் நிலை தடுமாறியதில்லை. ஒருபோதும் சுயநினைவு இழந்ததில்லை. விஸ்கியை மெல்ல பருகிக்கொண்டு ஜன்னலருகே உள்ள நிறுத்தத்தில் ஏற்றி வைக்கப்படிருக்கும் மெழுகுவர்த்திச் சுடரின் ஆட்டத்தைப் பார்த்தபடி நெடுநேரம் மௌனமாக அமர்ந்திருப்பேன். தூரத்தில் டாஹோ ஏரியின் மேல் அஸ்தமன வானம் சிவப்பும் ஆரஞ்சும் கலந்த வண்ணச்சிதறல்களாய் கரைந்தழுதபடி இருக்கும்.

சில மாதங்களிலேயே சலிப்புற்றேன். காலம் பாறாங்கல் போல தலைக்குள் வீங்கி கனத்தது. வீட்டில் குடித்து முடித்து பின்னர் வெளியே மதுவகத்திற்குச் சென்று அங்கு அதன் அத்தனை இரைச்சல்களின் மத்தியில் தன்னந்தனியாக குடிக்க ஆரம்பித்தேன். அப்படி ஒருநாள் இடுங்கிய மூலையில் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்தபோதுதான் டேனியலையும் அவனது சகாக்களையும் சந்தித்தேன். தடித்து, முறுக்கேறியிருந்த அவனது புஜங்களில் பச்சை குத்தப்பட்டிருந்த புலி மெதுவாக என்னை நோக்கி வந்தது. நான் முகத்தை வேறுபக்கமாக திருப்பினேன். வந்து அருகில் உட்கார்ந்தவன் என் மொட்டைத் தலையில் டபடபவென்று தாளமிட்டான். சினம் ஏற, கோப்பையில் இருந்த விஸ்கியை அவன் முகத்தில் ஊற்றுவது போல சைகை செய்தேன். ”கோபத்தைப் பார்…” என்று அவனது சகாக்களிடம் சொல்லி சிரித்தான். “அங்கு வந்து வெளிச்சத்தில் குடிக்கலாம்தானே….எங்களோடு சேர்ந்து?” என்றான். பேசாமல் இருந்தேன். “ஓ…தம்பிக்கு இருள்தான் பிடிக்குமோ… உள்ளுக்குள் பேசி அழுதபடி இருப்பீரோ? பெரிய புனிதரோ? தஸ்தயேவ்ஸ்கி என்று நினைப்பு…”

“யார் அண்ணா அது?” என்றான் கூட இருந்த குள்ளமான மனிதன்.

“கஞ்சா விற்பவன்… ரஷ்யாக்காரன்”

“மாஃபியா?” அவனிடம் ஜாக்கிரதையாக இருங்கள் அண்ணா… பேச்சு கொடுக்க வேண்டாம்”

“ஹ்ஹஹா… ப்ருனோ, நீ ஒரு மடையன், வாயை மூடிக் கொண்டு பேசாமல் இரு” என்றவன் என்னைப் பார்த்து “நீ என்னோடு வா… ரொம்ப யோசிக்காதே.. எழுந்து வா…. வந்து முட்டியிட்டு என் கரங்களைப் பற்றி முத்தமிடு… வெளிச்சத்திற்கு உன்னை கொண்டு செல்லும் மீட்பன் நான்… ஆம், ஒளி எழுக. அது எங்கும் பரவுக” எனச் சொல்லி என்னை அரவணைப்பது போல் கைகளை வான் நோக்கி எழுப்பி சத்தமிட்டு சிரித்தான்.

புலி ஒருகணம் கண்சிமிட்டி, அதன் முழு உடலையும் குலுக்கியது. பிறகு இயந்திரம் கிணுங்கி உயிர்த்தெழுந்தது. அதன் சுழலி எண்களை அதிவேகத்தில் சுற்றியது. கசீனோவின் மிளிரும் விளக்கொளி பகல் இரவுகளை முயக்கி அனைவரையும் களிவெறி கொள்ளச் செய்தது. சுற்றிலும் ஜன்னல்கள் ஒன்றுகூட இல்லை. கடிகாரங்களும். ஆனால் குளிர்காற்று வாசனையை எழுப்பி எல்லோர் மனதிலும் போதையை ஏற்றியது. பாடல் துணுக்கு ஒன்று திரும்பத்திரும்ப ஒலிக்க கண்ணாடிப் பெட்டகத்திற்குள் எண்கள் சுழன்றபடி இருந்தன. சுற்றி உட்கார்ந்திருந்த அனைவரும் அதிலிருந்து கண்ணெடுக்காமல் “ஏழு ஏழு ஏழு….” என்று உரக்கச் சொல்லியபடி இருந்தார்கள். சுழலியின் வேகம் மெல்ல குறைந்து கொண்டே போனது. ஒரு ஐந்தும், இரு ஏழும் வந்து நிற்க பளிச்சென்ற ஒளியை இயந்திரம் இருமுறை எழுப்பி மௌனத்திற்குச் சென்றது. டேனியல் கைகளைக் குவித்து முத்தமிட்டு நடுவிரல் இரண்டையும் மேலே உயர்த்திக் காட்டினான். ப்ருனோ துள்ளிக் குதித்தான்.

“ஏழு விழும்போதெல்லாம் கடவுளின் முகத்தில் குசு விடுவதுபோல் இருக்கிறதண்ணா… புர்ர்..புர்ர்”

“ஹஹ்ஹா…விழாதபோது அவன் நம் முகத்தில்”.

புலி கனைத்தது. எங்கும் வெடிச்சிரிப்பு எழுந்தது. தொடைதட்டி சத்தம்போட்டு சிரிப்பு.. அழுகை வர சிரிப்பு….

மெல்ல அவர்களோடு இணைந்துகொண்டேன். தினமும் காலை கிடங்கிற்குச் சென்று சேர்ந்து கஞ்சா புகைக்க ஆரம்பித்தேன். பிறகு மாலை மதுவகம். அங்கிருந்து மீண்டும் கிடங்கு. அங்கிருந்து கசீனோ. நாள் அட்டவணை ஒன்று மெதுவாக உருவாக ஆரம்பித்தது. அதை பிசிறின்றி செயல்படுத்தும் கருவியாக உருமாறினேன். எட்டு மாதத்தில் திரும்பமுடியாதொரு தூரத்திற்குச் சென்றிருந்தேன்.

கண்கள் சுழற்றிக் கொண்டு வர மெல்ல ஏரிக்கரையோரம் நடந்து மலையேறி வீட்டை அடைந்தேன். சட்டை தொப்பலாக நினைந்திருந்தது. த்ரேயா வரவேற்பறையின் நடுவே சோபாவில் தனியாக என்னையே முறைத்துப் பார்த்தபடி பேசாமல் உட்கார்ந்திருந்தாள். பார்வை நான் செல்லும் திசையையே ஈட்டி போல் துளைத்துச் சென்றது. நேராக சென்று சட்டையைக் கழற்றி உடல் வியர்வையை, பளபளவென்றிருந்த மொட்டைத் தலையை எல்லாம் துடைத்து தூர எறிந்தேன். பின்னர் ஃபிரிட்ஜைத் திறந்து பியர் பாட்டிலை எடுத்து அதன் மூடியைக் கழற்றி தோளுக்குப் பின் எறிந்துவிட்டு ஒரே மூச்சில் குடித்தேன். மூடி மெல்ல உருண்டு போய் த்ரேயாவின் கால் அடியில் நின்றது. இன்னொரு பாட்டிலை எடுத்துக்கொண்டு போய் அவளுக்கு வலப்புறம் உள்ள நாற்காலியில் உட்கார்ந்தேன். எதிரே புத்தக அலமாரியின் தடுப்புக்கண்ணாடியில் எனது முகம் மங்கலாகத் தெரிய, தலைதிருப்பி உட்கார்ந்தேன். கண்கள் ஒருகணம் வெட்டிச் சென்றன. நான் இருப்பதையே முழுக்க உதாசீனப்படுத்தியபடி அசைவற்று உட்கார்ந்திருந்தாள். வலிந்து ஒரு அலட்சியத்தை உருவாக்கிக் கொண்டு அவளைப் பார்வையிட்டேன். எதிரே டீப்பாயில் இருவரும் கை விரல்களை விரித்து வைத்திருக்க, கத்திமுனை ஒன்று டக் டக் டக் டக் என இடைவெளிகளுள் விரைந்து கொண்டிருந்தது. எந்தக் கணமும் ரணமாகலாம். குருதி எப்போது வேண்டுமானாலும் பீறிட்டு எழலாம்.

துர்நாற்றம் அடிக்கிறது என்பது போல் கைகளை விசிறி மூக்கை மூடியபடி ”உஃப்….” என சத்தம் எழுப்பினாள். வெறி ஏறவே பாட்டிலைத் தூக்கி சுவரில் எறிந்தேன். பெரும் சத்தத்துடன் அது வெடித்துச் சிதறியது. த்ரேயா உடல் குறுக்கி காதுகளை மூடினாள். பின்னர் அவள் எழுந்து டீப்பாயில் இருந்த பூச்சாடியை எடுத்து வீச, அது புத்தக அலமாரியின் கண்ணாடியில் பட்டு தெறித்தது. மறுநொடி கண்ணாடியும் பொலபொலவென உதிர்ந்து நொறுங்கியது. அறைக்குள் சென்று கதவுகளை மடாரென்று சாத்தினாள். ஒரு நொடி வீடு அதிர்ந்து பின்னர் எங்கும் நிசப்தம் நிலவியது.

சாய்ந்து படுத்தபடி கூரையையே பார்த்துக் கொண்டிருந்தேன். குரூர சிரிப்பொன்று உதட்டோரம் ஒருநொடி எழுந்து மறைந்தது. பின்னர் இலக்கற்று நாளிதழைப் புரட்டிப் பார்த்துவிட்டு தூர வைத்தேன். ஏதோ கண்ணில் பட்டதாக நினைவு எழ, மீண்டும் நாளிதழை எடுத்துப் புரட்டினேன். ஓரத்தில் இருந்த பத்தி ஒன்றுக்கு “அச்சமூட்டும் சீர்மை” என்று தலைப்பிடப்பட்டிருந்தது. மெல்லியதொரு அதிர்வு ஏற்பட தொடர்ந்து படித்தேன்.

“இன்று ஆர்தர் கீஸ்லரின் மூன்றாவது வருட நினைவு நாள். படைப்புச்செயல், தோல்வியுற்ற கடவுள், நடுப்பகலில் இருள் போன்ற புகழ்பெற்ற நூல்களை எழுதியவர். அவரது கடைசி தொகுப்பான அக்கிலிஸின் குதிகால் 1974-ஆம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு அடுத்த ஒன்பதாண்டுகள் அவர் அதிகமாக எழுதவில்லை. இறுதிக்காலத்தில் பார்க்கின்சன்ஸாலும், ரத்தப்புற்றுநோயாலும் அவதியுற்றிருந்தார். அவரது மனைவி சின்த்தியாவோடு ஒப்பந்தம் செய்துகொண்டு இருவரும் ஒரே தினத்தில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு அவர்களது லண்டன் கென்ஸிங்க்டன் இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்களது மரணத்தின் அச்சமூட்டும் சீர்மை அழியா ஓவியம் போல் நம் நெஞ்சங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும்”

அன்றிரவு முழுக்க துப்பாக்கியால் த்ரேயாவை நெஞ்சில் சுட்டுவிட்டு பின்னர் என்னையும் நெற்றிப்பொட்டில் சுட்டுக் கொள்வது போல் ஆயிரம் முறை விதவிதமாக கற்பனை செய்தபடி தூங்கிப் போனேன். மறுநாள் காலை எழுந்தவுடன் வழக்கம் போல் என் கைகள் வோட்கா பாட்டிலை தேடிச் சென்றன. கிடைக்கவில்லை. வழக்கமாக வைக்கும் இடத்தில் பாட்டில் இல்லை. நிறைய இடங்களில் தேடி சலித்துப்போய் வரவேற்பறைக்கு வந்தேன். எனக்கு முன் த்ரேயா எழுந்து கண்ணாடி உடைசல்களையெல்லாம் அப்புறப்படுத்தி சுத்தம் செய்திருந்தாள். “வோட்கா எங்கே?” என்றேன். பேசாமல் இருந்தாள். “கேட்கிறேன் அல்ல, சொல்…” “எனக்கெப்படி தெரியும். இந்த வீட்டில் இருக்கும் குடிகார முட்டாள் எங்காவது வைத்திருப்பான்” என்றாள். “ஒழுங்காக எங்கு வைத்திருக்கிறாய் சொல்….” எனக் கத்தினேன். அவள் எழுந்து நடுவிரலை உயர்த்திக் காண்பித்துவிட்டு அவளுடைய அறைக்குவ் செல்ல முற்பட்டாள். கூச்சலிட்டபடி நான் அவளை துரத்திக் கொண்டு வர, டீப்பாயில் கால் இடறி புத்தக அலமாரியில் மோதி தரையில் விழுந்தேன். அலமாரி மெல்ல ஆட்டம் கண்டது. மறுநொடி அத்தனை புத்தகங்களும் தடதடதடவென என் மீது சரிந்தன.

த்ரேயா தலைதிருப்பி எட்டிப் பார்த்தாள். அப்போது அவள் கண்களில் தெரிந்த வெறுப்பையும் ஏளனத்தையும் மனதுக்குள் அன்று முழுக்க திரும்பத் திரும்ப மீட்டபடி இருந்தேன்.

மறுநாள் காலை தளர்ந்து போயிருந்தேன். போதும், இதெல்லாம் போதும் என உள்ளுக்குள் சொல்லியபடி படிப்பறைக்குச் சென்று இருநிமிடங்கள் கண்மூடி கைகூப்பி மன்றாடியபின் மீண்டும் எழுத முயற்சித்தேன். சிறிது நேரத்தில் த்ரேயா படிப்பறையின் மறுஓரத்தில் வந்து உட்கார்ந்து நாளிதழ் வாசிக்க ஆரம்பித்தாள். அவளை சட்டை செய்யக் கூடாது என சொல்லிக் கொண்டு தொடர்ந்து எழுத முற்பட்டேன். ஆனால் அவள் தாள்களைப் புரட்டும், செய்திகளை வாசித்து முணுமுணுக்கும் ஒலி மெல்ல என் காதுக்குள் அதிகரித்தபடியே இருந்தன.

“வெளியே போய்ப் படி… சத்தம் தொந்தரவாக இருக்கிறது” என்றேன். கேட்காதது போல் தலையைக் கூட நிமிர்த்தாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். “சொல்லிக் கொண்டே இருக்கிறேன்… நீ பாட்டுக்கு திமிரெடுத்துப் போய் உட்கார்ந்திருக்கிறாய்…. காதும் பழுதாகிவிட்டதா உனக்கு?” என்றேன். அவளது முகம் ஒருகணம் சுருங்கிப் போனது. பின்னர் கருந்தேளின் கொடுக்கு நுனி போல் துளைத்தெடுக்கும் பார்வை ஒன்றை வீசிவிட்டு தொடர்ந்து நாளிதழை வாசித்தாள்.

“நாளிதழை வாயசைக்காமல் படிக்க முடியாதவர்களுக்கெல்லாம் என்னுடைய படிப்பறையில் இடமில்லை… ஒழுங்காக வெளியே போ” என்று கத்தினேன். “நீ முதலில் போ வெளியே….” என்றாள். “என்ன…..என்ன… நீ என்ன சொன்னாய்?” என்று கத்திக் கூச்சலிட்டபடி அவள் அருகே சென்றேன். அசைவற்று முறைத்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள். இருவரது  கண்நுனிகளும் துடித்து மாறி மாறி வெறுப்பை உமிழ்ந்தபடி இருந்தன. தூரத்தில் டாஹோ ஏரி தகதகத்துக் கொண்டிருந்தது.

ஓங்கி அவளை அடித்தேன். பிறகு மறுபடியும்….மறுபடியும்…. ஒன்று..இரண்டு…மூன்று… தொடர்ந்து ஏழெட்டு முறை. தசைநார்களில் வலி விண் விண் என்று தெறித்தது. என் முழுஉடலும் நடுங்கிக் கொண்டிருந்தது. பெருங்கோபத்துடன் எழுந்து என்னைத் தள்ளினாள். அவள் உடலில் இருந்து வேறுயாரோ ஒருத்தி எழுந்து வந்தது போல்… முகத்தில் அப்படி ஒரு ஆக்ரோஷம். தடுமாறி கீழே விழுந்தேன். பின்னர் என் நெஞ்சில் முட்டியிட்டு என்னை மாறி மாறி அறைந்தாள். ஒவ்வோரு அடியும் என் உடம்பின் அறியா ஆழங்களுக்குச் சென்றது. சென்று அதன் அத்தனை நாளங்களையும் இளக்கியது. அழுது களைத்து உடல்விரித்து வெறும்தரையில் படுத்து கண்மூடினோம். இசைத்து முடித்த ஓராயிரம் வயலின் கம்பிகளின் அதிர்வு அந்த அறைக்குள் ஒலித்தபடி இருந்தது.

அந்நிகழ்வுக்குப் பிறகு இருவரும் மெல்ல மீண்டு வந்தோம். பருத்தி வெடித்து பஞ்சு ஒன்று அதன் எல்லா மென்மைகளுடன் எல்லா அமைதிகளுடன் மிதந்து எங்களிடையே வந்து அமர்ந்தது. அபூர்வமானதொரு புரிதல் எங்களிடையே உருவானது. மீண்டும் அதே கை இணைப்புகளில், விரல்நுனி தொடுகைகளில் எங்களுக்கான ஒரு பெருவெளியை கட்டி எழுப்பினோம்.

டாஹோ ஏரியில் இருந்து கிளம்பி சிறுவயதில் அவள் வளர்ந்த பௌல்டர் கொலராடோவுக்கு வீடு பார்த்து சென்றோம். அங்கு போனதும் புது வீட்டைச் சுற்றி பூந்தோட்டம் ஒன்றை அமைத்தாள். பிறகு கண்ணாடி ஓவியங்கள் வரைய ஆரம்பித்தாள். தினமும் அதிகாலை தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றியபடி சுற்றிச் சுற்றி வருவாள். பிறகு நாள் முழுக்க வரைந்தபடி இருப்பாள். அடுத்த பத்து மாதங்கள் வரைந்து தள்ளினாள். வெளியிலிருந்து பார்க்கும்போது அவள் வேலை செய்வதுபோலவே தெரியாது. முகம் தூய ஓடை நீர் போல் தெளிந்திருக்கும். எத்தனை முறை தேடித் தேடிப் பார்த்தும் அந்த முகத்தில் ஒரு துளி கோணலையோ, அசதியையோ என்னால் கண்டெடுக்க முடியவில்லை. ஆனால் அவளது தூரிகையின் சுழல் தீற்றல்களை, அதில் பெருக்கெடுத்த வண்ணச்சேர்க்கைகளை எல்லாம் காணும்போது என் கைகளில் சிறு நடுக்கம் உண்டாகும். மெல்ல அவற்றைப் பார்ப்பதைத் தவிர்த்தேன்.

அவளது புற்றுநோய் மேன்மேலும் மோசமாகியபடியே சென்றது. கல்லீரலுள், கணையத்துள் எல்லாம் பரவ ஆரம்பித்தது. தொடர்ந்து சிகிச்சைக்குச் சென்று கொண்டிருந்தபோது, ஒருகட்டத்தில் தீர்க்கமாக கையை உயர்த்தி ”போதும்” என்றாள்.

தோட்டத்தில் இளஞ்சிவப்பு ரோஜாக்களும், நீல ஐரிஷ்களும் பூத்து மலர்ந்தன. அவற்றின் பனி போர்த்திய பூவிதழ்களை மெல்ல தொட்டபடி தோட்டத்தை சுற்றி வருவாள். பிறகு ஜன்னலருகே உட்கார்ந்து மாலை வரை தொடர்ந்து வரைவாள். அப்போது அவள் வேறெங்கோ தொடமுடியாதொரு வெளியில் இருப்பதுபோல எனக்குத் தோன்றும். புற்றுநோய் மூளைக்குள் பரவ ஆரம்பிக்க,  அவளது இடதுகண் பார்வை முழுக்க பறிபோனது. ஆனாலும் அவள் வரைவதை நிறுத்தவில்லை. நுணுக்கி நுணுக்கி அவள் வேறெதையோ தேடிக் கொண்டிருந்தாள். கைவிரல் அசைவுகளில் வேறொரு பிரபஞ்சத்தை அவள் உருவாக்கிக் கொண்டிருந்தாள். அந்தக் கணங்களில் விவரிக்கமுடியாதொரு முழுமை அவளில் குடிகொண்டது. மிரட்சியும் பிரமிப்பும் கலந்து நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

சரியாக ஒரு மாதம் கழித்து, கன்னத்தை மெல்லத் தட்டிக்கொடுத்தபடி, “அவ்வளவுதான்…” என்றொரு சிரிப்பை உதிர்த்துவிட்டு, என் மடியில் உயிர் துறந்தாள்.

(மேலும்)

முந்தைய கட்டுரை’சீர்மை’ மகத்தான அறிமுகம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅப்பாவின் குரல், கடைசிக்கண்- கடிதங்கள்