11. சீர்மை (1) – அரவிந்த்

[மீண்டும் புதியவர்களின் கதைகள்]

[ஒன்று]

இடது தோள்பட்டையில் கடும் வலியெடுக்க முழித்துக் கொண்டேன். நேற்றிரவு ஒருக்களித்து சாய்ந்தபடி அப்படியே தூங்கிவிட்டேன் போல. நெடுநேரம். சிறு அசைவு கூட அன்றி. இப்போது தசை எங்கும் பெருவலி. இமை நரம்புகள் அதிர்ந்ததிர்ந்து அடங்கின. ஒற்றைத் தலைவலியும் சற்று நேரத்தில் ஆரம்பமாகிவிடும் என்று அதற்கு அர்த்தம்.

கட்டிலின் மறுகோடியில் இருந்து சீரான மூச்சுக்காற்று என் பின்கழுத்தில் படிந்தபடி இருந்தது. புரண்டுபடுத்தால் தோள்வலி கொஞ்சம் குறையும்தான். ஆனால் த்ரேயா எழுந்துவிடுவாள். அவள் முழிப்பதற்குள் வீட்டிலிருந்து கிளம்பி டேனியலின் கிடங்கிற்கு சென்றுவிட வேண்டும். பின்னர் எல்லாம் முடித்து பதினொன்றரை மணி அளவில் மதிய உணவிற்கு வீடு வந்து சேர்ந்தால் சரியாக இருக்கும். உணவு முடித்து சிறு தூக்கம். பிறகு தொலைக்காட்சி முன் அர்த்தமற்ற மேய்தல். மாலை நடை. மீண்டும் டேனியலின் கிடங்கு. அங்கிருந்து ஜோஷுவாவின் மதுவகம். பின்னர் இரவுணவுக்கு வீடு. முழுத்தனிமையில் இன்னும் கொஞ்சம் மது. பிறகு தூக்கம்.

கடந்த இரு மாதங்களாக இப்படித்தான். சிறிது காலம் ஒட்டவைத்து ஒட்டவைத்து சமாளித்துக் கொண்டு இருந்தேன். ஆனால் குமிழ் எப்போது வேண்டுமானாலும் உடைய நேரலாம் எனும்போது விட்டுவிட்டேன். ஒட்டவைக்க முனைந்தால் கண்டிப்பாக வெடித்துச் சிதறும்.

படுக்கையில் இருந்து மெதுவாக எழுந்து வரவேற்பறைக்கு வந்தேன். கண்களை இன்னும் முழுவதுமாக திறக்க முடியவில்லை. வெப்பத்தால் பீளை பிடித்து இருந்தது. சில்லென்ற நீரில் கழுவினால் நன்றாக இருக்கும். ஆனால் அதற்கு முன் இரண்டு மிடக்காவது அருந்த வேண்டும். உணவுமேஜையில் இருந்த கோப்பையை எடுத்து அதில் மிகச்சரியாக நான்கு அவுன்ஸ் வோட்காவை ஊற்றி ஒரே மூச்சில் குடித்தேன். நாக்கில் காரம் நீங்கிய பிறகு காப்பிச்சுவை எழுந்தது. நேற்று மாலை அருந்திய காப்பியின் மிச்சம் அந்த பீங்கான் கோப்பையின் அடியில் படிந்திருந்தது. கோபம் தலைக்கேற கோப்பையை ஜன்னலில் வீசியெறிந்தேன். சமையலறையில் இருந்து புதிய கண்ணாடிக்கோப்பை ஒன்றை எடுத்து அதில் வோட்காவை ஊற்றி கடைசி சொட்டுவரை மடமடவென்று குடித்தேன். தூரத்தில் டாஹோ ஏரி தன் நீலப்போர்வையை மெல்ல மிகமெல்ல களைந்து கொண்டிருந்தது.

சப்பாத்துகளை அணிந்துகொண்டு புறப்பட்டேன். இன்னும் முழு வெளிச்சம் வரவில்லை. நல்லது. கொஞ்சம் மூடுபனியும் இருந்தது. இப்போதெல்லாம் பாதி கண்ணை மூடிக்கொண்டே மலையில் இருந்து இறங்கிவிட முடிகிறது. இறங்கினவுடன் ஏரியிலிருந்து குளிர்ந்த நீரை எடுத்து முகத்தில் பளாரென்று அறையவேண்டும். இங்கிருந்து பார்க்கும்போது ஏரி மிகப்பெரிய நீலப் படிகக்கல் போல குளிர்ந்திருந்தது. ஆனால் அருகில் செல்லச் செல்ல அந்த குளிர்ந்த கனிந்த நீலம் மின்சார நீலமாக மாறும். மின்சார நீலம்! மோகத்தின் நிறம்…

கால்களை அகல வைத்தபடி தாவித்தாவி இறங்கிக் கொண்டிருந்தேன். நீண்ட தசையேறிய கால்கள் இன்னும் என் கட்டுப்பாட்டிற்குள்தான் இருந்தன. மொட்டைத் தலையை மட்டும் மரக்கிளைகளில் மோதாமல் பார்த்துக் கொண்டேன். ஆறரை அடி மனிதனொருவன் குனிந்து நிமிர்வது என்பது ஒன்றும் சாதாரணமான விஷயம் அல்ல.

மெல்லிய ஒளிப்பட்டை ஒன்று மூடுபனியைக் குறுக்குவெட்டாகத் துளைத்தபடி சென்றது. அதன் பாதை முழுக்க பைன் மரங்களின் வண்ணச் சிதறல்கள். இலைநுனியெங்கும் உதிரக் காத்திருக்கும் வைரக்கற்கள். இளவேனிற் காற்று இன்னும் கொஞ்சம் பலமாக அடித்தால் பனித்துளிகள் உதிர்ந்து சிறுமழை ஒன்று இக்கணம் இப்பிராந்தியத்தில் பெய்யும்.

ஆனால் இவை எதுவுமே என்னுள் செல்லவில்லை. உள்ளே எந்த ஒரு சலனமும் இல்லை. இவை அனைத்தும் என்மீது ஏறிஏறிச் சென்றபடி இருந்தன. தூக்கக் கலக்கத்தில் பேருந்தில் செல்லும்போது எதிர் திசையில் வரும் செடிகொடி முள்மரங்கள் நம்மீது ஏறிச்செல்வது போல். அல்லது பாறை ஒன்று மலையுச்சியில் இருந்து உருள்வது போல்.

ஆச்சரியமாக இருந்தது. அப்படியென்றால் இத்தனையையும் பார்த்தபடி சாட்சியாக எவனோ ஒருவன் கூடவே வந்திருக்கிறான். ஆம். சாட்சி. அவன்தான். அந்த வேசி மகன் மட்டும் கையில் கிடைக்கட்டும்…

இல்லை. இல்லை…இல்லை. இப்படியெல்லாம் தறிகெட்டபடி பேசக்கூடாது. யோசிக்கக்கூடாது. யோசிக்கவே கூடாது. எதைப்பற்றியும் யோசிக்கக் கூடாது.. ஆம், வேறு வழி இல்லை. வேறு வழியே இல்லை. யோசனை எதுவும் கூடாது. அதுதான் சரி. அதுதான் நல்லது. தவறி யோசிக்க ஆரம்பித்தால் வெடுக் என்று இருமுறை கழுத்தை திருப்பலாம். அல்லது ஷ்ஷ் ஷ்ஷ் என்று சொல்லியபடி ஆள்காட்டி விரலை உதட்டருகே கொண்டு செல்லலாம். அல்லது ஏதாவது ஒரு வார்த்தையை வரியை திரும்பத் திரும்ப முனகியபடி செல்லலாம்.

“இனிய காலை… அழகிய காலை…அற்புதமான காலை” என்பதையே திரும்பத் திரும்ப சொல்லியபடி மலையடிவாரத்தை அடைந்தேன். அங்கிருந்து கிழக்கு நோக்கி இரண்டு மைல்கள் நடந்தால் டேனியலின் கிடங்கு வந்துவிடும். ஆளரவமற்ற முட்டுச்சந்தில் உள்ளது அவனது கிடங்கு. பழுப்பேறிய சாம்பல் நிறம். சுற்றிலும் களைப்புதர்கள். முன்வாசல் எப்போதும் பூட்டியே கிடக்கும். வலதுபக்கம் வேறு ஒரு வழி உண்டு. நுழைந்தும் சிறியதொரு கொட்டகை. எங்கும் பூஞ்சை வாடை அடித்தது. நேராகச் சென்று அந்த துருப்பிடித்த இரும்புக் கதவின் தாழ்ப்பாளை எப்போதும் போல் இருமுறை  ஓங்கித் தட்டினேன். காலடியோசை.

“கென்?”

“ஆம்”

“கேட்கவில்லை.. யாரது? உரக்கப் பேசு”

“ஆம். நான்தான்”

“கேட்கவில்லை. இன்னும் உரக்க.. நான்தான் என்றால்? போலீசா?”

“விளையாடாதே.. சீக்கிரம் கதவைத் திற”

“ஹஹ்.. வா வா.. நேற்று நீ போன வேகத்தை வைத்து இன்று கண்டிப்பாக வரமாட்டாய் என்றல்லவா நினைத்தேன். இந்த உதாவாக்கரை ப்ருனோவுடன் பத்து டாலர் பந்தயம் வேறு கட்டினேன்! பரவாயில்லை. உள்ளே வா”

கிடங்கிற்குள் நுழைந்தேன். சிறிய குகையிலிருந்து மற்றொரு பெரிய குகைக்கு வந்துவிட்டதொரு உணர்வு. அறுபதடி உயரத்தில் கூரை. தரையெங்கும் வாகன உதிரிப் பொருட்கள் திருகாணிகள் இழுப்பான்கள் முடுக்கிகள் சிதறிக் கிடந்தன. டீசல் மணம் தலைவலிக்கு இதமாக இருந்தது. இரு பக்க ஜன்னல்களில் இருந்தும் சூரியஒளி புழுதியை கிளப்பியது. சப்பாத்துகளின்  சத்தம் கிடங்கெங்கும் எதிரொலித்தது.

வடக்கு மூலையில் ஏழு பேர் ஏற்கனவே முக்கால்வட்ட வடிவில் குழுமியிருந்தார்கள். நானும் டேனியலும் சென்று அங்கு உட்கார்ந்து வட்டத்தை முழுமையாக்கினோம். ப்ருனோ முழு கவனத்துடன் வேலையில் இறங்கியிருந்தான். அவன் முன் சன்னமாக கத்தரிக்கப்பட்ட இளமஞ்சள் தாள்கள். சிறியதொரு சல்லடை மற்றும் அரைவை எந்திரம். நாளிதழ் நடுவே புகையிலை சிறு குன்று போல் குவிக்கப்பட்டிருந்தது. அருகே நொறுக்கிய கீஃப் துகள்கள். ஓரத்திலுள்ள புட்டியில் டிங்ச்சர். அதி வேகத்தில் சுருள்கள் தயாராகிக் கொண்டிருந்தன. கூடவே நாலைந்து சிரிஞ்களும்.

நிமிர்ந்து மற்றவர்களின் கண்களைப் பார்த்தேன். வெறிகொண்ட ஆனால் உயிரற்ற கண்கள். என் கண்களும் இப்போது இப்படித்தான் இருக்கின்றனவா? தெரியவில்லை…

முதல் சுற்று தொடங்கிவிட்டது. நான் பெரும்பாலும் எதுவும் பேசாமல் மௌனமாக அமர்ந்திருப்பேன். அவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். ஆரம்பத்தில் உற்சாகப் பேச்சுகள். சிரிப்பொலிகள். பிறகு கால்பந்து. “ஜோ மொன்டானா ஒரு திமிர்பிடித்த கொழுப்பேறிய பன்றி” “வாயை மூடு” “நீ வாயை மூடு… அவனால்தான் சான் ஃபிரான்ஸிஸ்கோ தோற்றது” “ஆனால் அவன் டான் ஃபவுட்ஸ் அளவு மோசமில்லை” “டான் ஃபவுட்ஸ் பற்றி எவனாவது ஏதாவது சொன்னால் கொலை விழும்.” பின்னர் குடும்பப் பிரச்சினைகள், உடல்உபாதைகள், நேற்று கசினோவில் ஜெயித்து கோட்டைவிட்ட காசு, மதுவகத்தில் நடந்த அடிதடி. எட்டு சுற்று முடிந்தவுடன் சுயபெருமைகள். வீரசாகசப் பிதற்றல்கள். அதன் மறுகரையில் சுயபுலம்பல்கள். தன்னிரக்கக் கதைகள். அபூர்வமாக சில அழுகைகள்.

மூன்றாவது சுற்றில் நான் எனக்கென ஒரு சுருளை எடுத்துக்கொண்டு கிடங்கின் மறுமூலைக்குச் சென்றேன். அவர்களுக்குத் தெரியும். எதுவும் கேள்வி கேட்க மாட்டார்கள். அமர்ந்து சம்மணமிட்டு சுவற்றில் சாய்ந்தபடி இரு இழுப்புகள். புகை என்னை உள்ளிழுத்துக் கொண்டது. பேச்சுக் குரல்கள் தூரத்தில் வெகு தூரத்தில் எங்கோ கேட்டன. என் அக நதிக்குள் குதித்துப் பாய்ந்தேன். கன்னங்கரிய நதி. சொற்களற்ற தூய்மை. பின்னர் ஒரு துளி நீர் வானில் இருந்து ஒற்றைக்கோட்டில் இறங்கி நதியில் பட்டுத் தெறித்தது. நதி கொப்பளித்தது. அலைகள் புயல் போல மேலெழுந்தன. அர்த்தமற்ற ஒலிகள் ஒசைகள் வண்ணக்குவியல்கள் என்னை ஒற்றைத் தாளத்தில் சுழற்றியடித்தன. திரும்பத் திரும்ப. நினைவுகளின் சந்தத்தில் என் விரல்நுனிகள் மட்டும் எதையோ துழாவியபடி இருந்தன. தூரத்தில் தனித்த இலை ஒன்று எங்கோ மிதந்து சென்று கொண்டிருந்தது. அதை நீந்தி துரத்திப் பிடித்தேன். பச்சைப் பசேலென்ற இலை. அதன் இருபக்க நரம்புகளும் ஒப்பற்ற ஒழுங்கமைவுடன் இருந்தன. கண் வாங்காமல் அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென என் உடல் சில்லிட்டது. நாளங்களில் ரத்தம் கரைபுரண்டோடியது. இதுதான், இதேதான் என்று கத்தினேன். கனக்கச்சிதம். என் முடிவற்ற அலைக்கழிப்புகளுக்கான அர்த்தம். இதற்குத்தான் காத்துக் கிடந்தேன்.

வடுவற்ற சீர்மை.

அப்பழுக்கற்ற சீர்மை.

அச்சமூட்டும் சீர்மை.

மறுகணம் யாரோ ஒருத்தியின் மார்பில் முகம் புதைத்து தேம்பி அழுதேன்.

[இரண்டு]

பெர்க்லி பல்கலைக்கழகத்தின் வீலர் அரங்கம் கரகோஷத்தால் நிறைந்திருந்தது. உயிரியல் அறிஞர் ஃபிரான்செஸ்கோ வர்ரேலா ரிப்பனை அகற்றி புத்தகத்தை வெளியிட அதை ஸ்டான்சிலோவ் கிரோஃப் பெற்றுக்கொண்டு என்னை நோக்கி புன்னகைத்தார். காமிராவின் ப்ளாஷ்கள் கண்ணை வெட்டிச் சென்றன. முன்வரிசையில் ஹஸ்டன் கைதட்டிக் கொண்டு அருகில் இருந்த ரோஜரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். அவர் மிக மகிழ்ச்சியாக இருப்பது எனக்கு இங்கு மேடையில் இருந்து தெரிந்தது. ரோஜர் என்னை நோக்கி கையசைத்து “ஆறு ஆறு… நீ நீ” என சைகை செய்தான். இச்சமயங்களில் சிரிப்பை அடக்கிக் கொண்டு தீவிரமான முகத்துடனும் லேசான புன்னகையுடனும் காமிராவை பார்த்தபடி நிற்க பயிற்சியாகிவிட்டது. முன்பென்றால் கூச்சத்தில் நெளிந்து தரைவிரிப்பைப் பார்த்தபடி நின்று கொண்டிருப்பேன்.

எனது முதல் புத்தகமும் இதே போன்றதொரு வியாழன் அன்று ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபத்தி ஏழாம் ஆண்டு மே மாதம் வெளியானது. அதன் பின் வருடம் ஒன்றென நான்கு புத்தகங்கள் எழுதி, அவை அனைத்தும் மூன்றாம் பதிப்பு வரை வந்துவிட்டன. ஆனால் அந்த முதல் புத்தகத்தை எழுபத்துமூன்றிலேயே எழுதிவிட்டேன் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். பின்னட்டையில் வந்திருந்த புகைப்படத்தை கல்லூரி கால நண்பர்களால் கூட அடையாளம் காண முடியவில்லை. முன்பெல்லாம் மிக மெலிதாக இருப்பேன். உயரம் அதை இன்னும் அடிக்கோடிட்டுக் காட்டியது. “உன்னை இரண்டாக ஒடித்து ஒரு பெட்டியில் போட்டுக் கொண்டு ரயிலில் டிக்கெட் எடுக்காமல் போய் விடலாம்” என்பாள் அம்மா. மொட்டையும் அடித்திருக்கவில்லை. நெற்றியில் படரும் தலைமுடியை நொடிக்கொரு தடவை நீவி விட்டபடி இருப்பேன். சிறுது காலம் நீள்முடியும் வளர்த்து அப்பாவை வெறுப்பேற்றியபடி இருந்தேன். அது கூட செய்யாவிட்டால் நான் என்னவொரு ஹிப்பி யுகத்தின் குழந்தை?

அப்பா ராணுவத்தில் விமானியாக இருந்தார். இரண்டாம் உலகப் போரில் கலந்துகொண்டவர். ஆனால் அது குறித்து என்னிடம் இதுநாள் வரை ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை. உண்மையில் அவர் என்னிடம் அவ்வளவாக பேசியதே இல்லை. ஒருமுறை வீட்டுப்பாடம் ஒன்றிற்காக ஜெட் எஞ்சின் செயல்படும் முறை குறித்து படம்போட்டு விளக்கியதுதான் அவர் என்னிடம் பேசிய அதிக பட்ச நிமிடங்கள். பெரும்பாலும் வீட்டிலேயே இருக்க மாட்டார். என் பொழுதுகள் அம்மாவுடனே கழிந்தன.

அப்பாவுக்கு அடிக்கடி பணிமாற்றம் நடக்கும். இரு வருடங்களுக்கு மேல் நான் ஒரே பள்ளியில் தொடர்ந்து படித்ததே இல்லை. கொலம்பஸ், எல் பாஸோ, இடாஹோ, ஒமஹா என ராணுவ விமானதளவாடங்கள் உள்ள பல ஊர்களில் படித்தேன். பதிமூன்று வயதுக்குள் நட்பும் பிரிவும் எல்லாம் ஒருமாதிரி பழகிவிட்டது.

ஒருவகையில் நான் மிக உற்சாகமான சிறுவன். இல்லையேல் புது ஊர் புது பள்ளிகளில் நண்பர்களை பெறுவது கடினம். என்னை அறியாது பல வித்தைகளை கற்றறிந்திருந்தேன். குட்டிக்கரணம் அடிப்பேன். பெஞ்சுகளின் மீது தாவித் தாவி குதிப்பேன். டீச்சர்கள் பாடமெடுப்பது போல் மிமிக்ரி செய்வேன். கூடைப்பந்து அசாத்தியமாக விளையாடுவேன். நீச்சல்குளத்தில் தலைகீழாக குதித்து நீரில் மூழ்குவது போல் எல்லோரையும் பயமுறுத்துவேன். ஓரளவு நன்றாக படிக்கவும் செய்வேன். எங்கும் எதிலும் என்னால் எளிதாக  ஒட்டிக் கொள்ள முடிந்தது. அதே சமயம் இதெல்லாம் இன்னும் சில மாதங்கள்தான், பிறகு வேறு ஊர் வேறொரு பள்ளி என்ற எண்ணமும். எப்போதும் அந்தத் தனிமை என்னோடு கூடவே இருந்தது.

மாலை வேளைகளில் வீட்டில் அம்மாவிடம் கதை சொல்லியபடி அவளுக்கு சமையல் உதவி செய்வேன். பெரும்பாலும் சாகசக் கதைகள். இல்லையேல் வாகனக்கூடத்தின் மூலையில் அப்பா எனக்கு அமைத்துத் தந்திருந்த குட்டி ஆய்வகத்திற்குப் போய் எதையாவது உருட்டிக் கொண்டு இருப்பேன்.  புன்சன் பர்னரை அணைக்க மறந்து அம்மாவிடம் பலமுறை அடிவாங்கி இருக்கிறேன். டெஸ்ட் ட்யூப் விபத்துகளில் பல வீரத் தழும்புகளும் உண்டு. அறிவியலில் மெல்ல எனக்கு ஆர்வம் உண்டானது. பள்ளியில் நல்ல மதிப்பெண் பெற்று நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தில் உயிரியல் இளங்கலை படித்தேன். அங்கேயே முழு உதவித்தொகையுடன் பயோகெமிஸ்ட்ரியில் முனைவர் பட்டம் படிக்க இடம் கிடைத்தது. ஆராய்ச்சியில் சிறந்து விளங்கினேன். கூடைப்பந்து விளையாட்டில் பல்கலைக்கழக அணியில் இடம்பெற்றிருந்தேன். அணியின் பாயிண்ட் கார்ட் நான்தான். மிசோரி அணியை வென்று கோப்பையை கைப்பற்றியது மறக்க முடியாத நிகழ்வு. நெப்ராஸ்கா மாநிலத்தில் ஒரு வாரம் அதே பேச்சு. அப்படி நிறைய பரிசுகள். பயணங்கள். சாகசங்கள். இரவு முழுக்க நீளும் கொண்டாட்டங்கள். பல்கலைக்கழகத்தைச் சுற்றி ஏராளமான நண்பர்கள் தோழிகள். மிகவும் பிரபலமான மாணவனாக இருந்தேன். எந்த ஒரு சிக்கலும் கோபங்களும் இல்லாமல் வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது.

ஆனால் என்றோ ஒருநாள் அந்த துக்கம் என் கண்களில் குடிகொண்டது. சவரக்கத்தி வெட்டிச் செல்வது போன்ற கூர்மையான கண்கள் உனக்கு என அம்மா அடிக்கடி சொல்வாள். அதில் இழைஊசி நுனி போல் ஒருதுளி துக்கம் வந்து எப்படியோ ஒட்டிக்கொண்டது. இலக்கற்ற துக்கம். பொருட்களற்ற துக்கம். துக்கத்தால் மட்டுமே ஆனதொரு துக்கம். கூடைப்பந்தை ஒரு திசையில் கொண்டு செல்வது போல நடித்து பின்னர் மறுதிசையில் எதிர் அணியின் வளையத்தை அதிவேகத்தில் ஊடுருவி உடலதிர ஓடி கோட்டில் இருந்து ஓரே தாவலில் கூடைக்குள் போட்ட அக்கணத்தின் முடிவில்லா பரவசத்திற்குப் பிறகு எழும் அந்த துக்கம்.

ஏதேதோ செய்து பார்த்தேன். மணிக்கணக்கில் கூடைப்பந்து விளையாடினேன். மைதானத்தைச் சுற்றி இருபது முறை வந்தேன். ஆய்வகத்தில் இரவுபகலாக உழைத்தேன். இருந்தும் துக்கம் நீங்கியபாடில்லை. ஆனால் கண்களில் மட்டும் அழகு கூடியபடியே சென்றதாக நண்பர்கள் சொன்னார்கள். “உன் கண்களை பார்க்கும்போதெல்லாம் கத்தி அழவேண்டும் போல இருக்கிறது… ஆனால் பார்க்காமலும் இருக்க முடியவில்லை” என முயங்கி லயித்து இணைவுற்றிருந்த போது சாரா சொன்னாள்.

ஒருகட்டத்தில் நிலைகொள்ளாதவனானேன். இலக்கற்று அலைந்தேன். ரயில் பிடித்து மராக்கேஷ்  சென்றேன். மெஸ்கலைன் எடுத்துக்கொண்டு பாப் டிலனையும் டோர்ஸையும் ஜிமி ஹென்ட்ரிக்ஸையும் தினமும் கேட்டேன். கூட்டத்தோடு கூட்டமாக சாண்டா லூசியா மலைகளில் அலைந்தேன். பிக் சர்ரில் உள்ள கம்யூனில் சிலகாலம் தங்கினேன். அதன் அருகே உள்ள வென்னீர் ஊற்றுக்கு மாலை வேளைகளில் சென்று கஞ்சா அடித்தபடி கின்ஸ்பர்க்கும் பரோஸும் படித்தேன். அங்குதான் அல்டஸ் ஹக்ஸ்லி தனது புகழ்பெற்ற உரை ஒன்றை நிகழ்த்தி உளவியலில் ஒரு புது இயக்கத்தை தொடங்கி வைத்தார் என்பது அப்போது எனக்குத் தெரியாது.

ஆனால் எதிலும் எளிதாக ஒட்டிக்கொள்ள முடிந்த என்னால் கம்யூனில் ஏனோ ஒன்ற முடியவில்லை. வெளியே ஏகப்பட்ட போதனைகள் காதில் விழுந்தபடி இருந்தன. சுயத்தை அழி, மனதை விரிவாக்கு, அன்பு செலுத்து, காதல் செய், இங்கு இக்கணத்தில் இரு என்று. ஆனால் உள்ளே மண்டைக்குள் சுத்தியல் ஒன்று நங் நங்கென்று அடித்து தெறிப்பது போல் எல்லோரும் நான் நான் என்றபடி இருந்தார்கள்.

உச்சமாக ஒரு நிகழ்ச்சி அல்டமாண்ட்டில் நடந்தது. கம்யூனில் இருந்து நாங்கள் அனைவரும் புல்லட்களில் டிசம்பர் ஆறாம் தேதி மாலை வுட்ஸ்டாக் இசைத் திருவிழாவிற்காக அல்டமாண்ட் சென்று சேர்ந்தோம். இளஞ்சிவப்பு வானத்தின் கீழே மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட எங்களைப் போன்றோர் குழுமியிருந்தார்கள். எல்எஸ்டியும் மெஸ்கலைனும் கஞ்சாவும் மதுவும் எல்லாம் சேரும்போது எழும் அந்த மணம் காற்றில் அப்போது அங்கிருந்தது. எங்கும் கட்டற்ற கொண்டாட்டங்கள். முத்தங்கள். நடனங்கள். கர்லோஸ் சன்டானாவின் கிட்டார் அதிர்வுகள் களிவெறியை ஏற்றியபடி இருந்தன. ஒரே தாளத்தட்டில் ஓராயிரம் உடல்கள் ஒன்றாக அசைந்தன. ஜடாமுடிகள் எங்கெங்கும் காற்றில் அலையாடின.

ஹெல்ஸ் ஏஞ்சல்ஸ் ஆட்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்று கூடவே கொஞ்சம் கஞ்சாவையும் இழுத்தபடி இருந்தார்கள். சன்டானா வாசித்து முடித்தபோது கிரேட்ஃபுல் டெட் வராமல் ரத்து செய்துவிட்டார்கள் என்ற செய்தி கசியத் தொடங்கியது. கூட்டத்தில் பலர் சட்டையைக் கிழித்து தலைக்கு மேல் ரெண்டு சுற்று சுற்றி தூர எறிந்தபடியும், கத்தி கூப்பாடு போட்டபடியும் இருந்தார்கள். பிறகு ரோலிங் ஸ்டோன்ஸ் வாசிக்கத் தொடங்கியதும்தான் கொஞ்சம் அமைதியானார்கள். ஆனால் மிக் ஜாகர் ‘சிம்பதி ஃபார் த டெவில்’ பாட ஆரம்பித்தபோது மேடைக்கு அருகே சிறு சண்டை ஒன்று வெடித்தது. ஹெல்ஸ் ஏஞ்சல்ஸ் ஆட்கள் வந்து சண்டையிட்டவர்களை முடக்கினார்கள். சிறிது நேரம் எல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டதால் கூட்டம் சலசலத்தபடி இருந்தது. அடுத்து ரோலிங் ஸ்டோன்ஸ் ‘அன்டர் மை தம்ப்’ வாசிக்க ஆரம்பித்த பிறகு எல்லோரும் இசைக்குள் மூழ்கினார்கள். மீண்டும் உற்சாக நடனங்கள். முத்தங்கள். சிரிப்பொலிகள். எல்லாம் சுமுகமாக போய்க்கொண்டிருப்பது போலவே இருந்தது.

திடீரென தேன்கூட்டில் கல்லெறிந்தது போல் கூட்டம் வெடித்தோட ஓரம்பித்தது. ஒருவர் மீதொருவர் காட்டெருது போல ஏறி ஓடிக்கொண்டிருந்தார்கள். வெறிபிடித்த ஓட்டம். ஹெல்ஸ் ஏஞ்சல்ஸ் ஆள் ஒருவன் யாரோ ஒரு பார்வையாளனை குத்திவிட்டான் என்றார்கள். ஓடு ஓடு நிற்காமல் ஓடு என குரல்கள். மிதிக்காதே… தயவுசெய்து என்னை மிதிக்காதே என மன்றாடல்கள். யாராவது என்னை தூக்கிவிடுங்கள் என கல்லீரல் அதிர அழுகைகள்… எங்கும் விரலெலும்பு உடையும் ஒலிகள். ரத்தக் காயங்கள். அடிதடி சண்டைகள்.

கம்யூன் வந்து சேர்ந்ததும் ஊர் திரும்பிச் செல்ல முடிவெடுத்தேன். பார்க்கர் ஏன் கிளம்புகிறாய் எனக் கேட்டான். சொன்னேன்.

“இதெல்லாம் வெறும் பேச்சு. நியாயப்படுத்தல். நீ கோழை. எதிர்காலம் மீதான பயம் வந்துவிட்டது உனக்கு. அதுதான் கிளம்புகிறாய். மேலும் மெஸ்கலைன் தரும் முடிவற்ற போதையில் மெய் மறந்து மூழ்கியிருக்க நிறைய தைரியம் வேண்டும்… சின்னப் பையன் நீ” என்றான் அவன்.

“உனக்கு எப்போதும் மெஸ்கலைனில் மூழ்கி மெய்மறந்து உன்னிலிருந்து மறைந்திருக்க பிடிக்கும். எனக்கு விழித்திருக்க. நீ என்னை விட கோழை என்பதை என்றாவது புரிந்து கொள்வாய்” என்று அவன் கண்ணைப் பார்த்து சொல்லிவிட்டு முதுகுப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

பல்கலைக்கழகத்திற்கு திரும்பியதில் இருந்து வகுப்புகள் எதிலும் மனம் ஒன்றவில்லை. சில மாதங்கள் எதுவுமே செய்யாமல் அறைக்குள் முடங்கிக் கிடந்தேன். துக்கம் இன்னும் பல மடங்காகியது. என் முழு உடலும் என்னை போட்டு அழுத்தியது. இல்லை, இப்படி இருக்கக் கூடாது, எதையாவது செய்ய வேண்டும் என மனம் உள்ளுக்குள் நெம்பி துடிதுடித்துக் கொண்டிருந்தது. ஆனால் எதுவுமே செய்ய முடியவில்லை. ஏதாவது ஒன்றை செய்ய ஆரம்பித்த சில மணிநேரத்தில் சோர்வடைந்தேன். காதுக்குள் ஓராயிரம் எலும்புகள் உடையும் ஒலி. செயலின்மை மிகக் கனமான போர்வை போல் என் மீது படர்ந்திருந்தது. அதை உதற முடியாமல் தினமும் நெடுநேரம் அடித்துப் போட்டது போல் தூங்கினேன். மெல்ல என் கண்கள் மங்கி ஒளியற்றுப் போயின.

ஆளற்றிருக்கும் விளையாட்டரங்கில் கூடைப்பந்தின் மும்மடி ஓசை எங்கும் நிறைந்திருக்க தனியே நான் கூடையில் இருந்து கையெடுக்க முடியாமல் பற்றித் தொங்கிக்கொண்டிருப்பது போன்றதொரு கனவால் நடுங்கி எழுந்தேன். பின்னர் நெடுநேரம் இலக்கின்றி பல்கலைக்கழகம் முழுக்க அத்து அலைந்தேன். புழுக்கத்தால் உடல் தொப்பலென நனைந்திருந்தது. களைத்து மைதானத்தின் தென்திசையிலுள்ள மரத்தடியில் ஒதுங்கினேன்.

அப்போது பெருமழை ஒன்று சுற்றியடித்தது. செம்மண்ணில் நீர் பட்டுத் தெறிப்பதையே முறைத்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். அழுகையும் கோபமும் ஆற்றாமையும் என உள்ளுக்குள் ஏதேதோ கொப்பளித்துக் கொண்டிருந்தது. மரத்தின் அடியில் இன்னொருவன் உடல் தொப்பலென நனைந்திருக்க பெருமழை மண்ணில் பட்டுத் தெறிப்பதை பார்த்தபடி தன்னுள் ஆழ்ந்து அமர்ந்திருக்கும் சித்திரம் மின்னலென வெட்டிச் சென்றது. சிறகடிப்பின் மெல்லிய ஒலி நெற்றிப்பொட்டை சுற்றிச்சுற்றி வந்தது. புழுதியை உதறிவிட்டு எழுந்தேன்.

பிறகு அடுத்த மூன்று வருடம் கையில் கிடைத்ததையெல்லாம் படித்தேன். தம்மபதமும், தாவோ தே ஜிங்கும் என்னுள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின. புத்தம் புதிய உலகம் ஒன்று என் கண்முன் பூத்து விரிந்தது. மேற்கத்திய உளவியலிலும் இயல்பாக ஆர்வம் ஏற்பட்டது. உள்ளுக்குள் ஏராளமான உபதுறைகள் கோட்பாடுகள் என உளவியல் துறையே அப்போது சிதறுண்டுக் கிடந்தது. ஒருவர் சொல்வது மற்றொருவருக்கு புரியவில்லை. அல்லது அவர் கேட்கும் நிலையில் இல்லை. எனக்கு எல்லோர் சொல்வதிலும் கொஞ்சம் உண்மை இருப்பது போலவே தோன்றியது. ஒவ்வொருவரும் மன அமைப்பின் வெவ்வேறு அடுக்குகளில் நின்றுகொண்டு மனதைப் பற்றி பேசுவது போல எனக்கு பட்டது. அவற்றிற்கிடையே ஒருவித ஒழுங்கமைவை ஏற்படுத்துவதே என்னுடைய பணி என்பது எனக்குப் புலனாகியது. நான் செல்ல வேண்டிய திசை எது என்பதும் ஒருவாறு எனக்குப் புரிந்தது.

பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிய பின் கொலராடோ எல்பர்ட் மலையடிவாரத்தில் மிகக் குறைந்த வாடகையில் வீடு பார்த்து குடி புகுந்தேன். வீடு என சொல்ல முடியாது. சிறிய அறை மற்றும் கட்டில். சுவரோரம் ஒரு புத்தக அலமாரி. வெளியே கழிப்பறை. அவ்வளவுதான். வாசிப்பு மேஜை எதுவும் வைக்க இடமில்லை. தரையில் அமர்ந்து படிப்பேன். குனிந்து கையை ஒருபக்கமாக தரையில் அழுத்தியபடி நெடுநேரம் குறிப்புகள் எடுப்பேன். தினமும் கிட்டத்தட்ட பதினைந்து மணிநேரம். அதனால் வலது தோள் கொஞ்சம் இடமருவி இடது தோளை விட சிறிது குட்டையாக இருப்பது போல் கூட சிலசமயம் எனக்கு தோன்றுவதுண்டு.

பக்கத்தில் இருந்த பலசரக்குக் கடையில் வார இறுதிக் கணக்கு எழுதி அதில் வரும் பணத்தில் வாழ்ந்து வந்தேன். மாதம் முன்னூறு டாலர்கள். அதில் இருநூறு புத்தகங்களுக்குப் போனது. எளியதொரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டு கடுமையாக உழைத்தேன். மிகமிக மகிழ்ச்சியான நாட்கள் அவை. மலைக்காற்று முகத்தில் படர தினமும் அதிகாலை விழித்துக் கொள்வேன். காற்றின் முதல் ஸ்பரிசத்தில் எப்போதும் மலரும் அந்த இதழ்விரித்த புன்னகை, இன்று புத்தம்புதிய நாள் என சொல்லியபடி. எழுந்து முகம்கழுவி வாசல் வந்து வெண்பனி பூத்திருக்கும் அந்த மலைஉச்சியை இரு நிமிடம் பார்த்த பிறகு படிக்க, எழுத ஆரம்பிப்பேன். முழுகவனத்துடன் தொடர்ந்து எட்டு மணிநேரம். நடுவே இருமுறை தேநீர். எளிய மதிய உணவு. பின்னர் மீண்டும் இரவு வரை படிப்பதும், குறிப்பெடுப்பதும். வெளியே வெயில் மழை பனி என பருவங்கள் மாற உள்ளுக்குள் மாறாக் களிப்புடன் திகட்டாத அந்தத் தேனின் பேரினிப்பைப் பருகியபடி ஒவ்வொரு கணமும் பெருவிழிப்பில் இருந்தேன்.

அந்த ஊரில் இருந்த கடாகிரி ரோஷியிடம் தியானம் பயிலச் சென்றேன். முடி மழித்து வரச் சொன்னார். மொட்டைத் தலையும், முரட்டு ஜீன்சும், மூக்குக் கண்ணாடியுமாக ஊரில் வலம் வந்தேன். ஊர்க்காரர்கள் என்னையும் ஒருவித நவீன புத்தபிட்சு என்றே நினைத்தார்கள். இரு மாதங்கள் கழிந்த பின் ரோஷி என்னை அருகில் வந்து அமரச் சொன்னார். “தியானத்தோடு தினமும் நீ ஏதாவது உடல் உழைப்பும் செய்ய வேண்டும்” என கட்டளை விடுத்தார். அரை மனதுடன் ஒப்புக் கொண்டேன். கணக்கு எழுதும் வேலையை விட்டுவிட்டு அருகில் உள்ள உணவகத்தில் மாலை எச்சில் தட்டு கழுவும் வேலையில் சேரச் சொன்னார். தினமும் கிட்டத்தட்ட நானூறு தட்டுகள். முதலில் வேண்டா வெறுப்பாகதான் வேலையைச் செய்தேன். குமட்டிக் கொண்டு வந்தது. என்னைப் போய் இந்த வேலையைச் செய்யச் சொல்கிறாரே என கடாகிரி ரோஷியின் மீது கோபம் பொங்கியது. பின்பு மெல்ல சமனமடைந்தேன். ரோஷி ஏன் அப்படி கட்டளை விடுத்தார் என்பது ஒருவாறு புரிந்தது.

கூச்சப்பட்டுக் கொண்டே அவரிடம் சொன்னேன். சிரித்தார். “தினமும் நீ நிறைய படிக்கிறாய். படிப்பதெல்லாம் ஒழுங்காக ஜீரணம் ஆக வேண்டும் அல்லவா? அதற்குத்தான் அந்த உணவகத்தில் போய் சேரச் சொன்னேன். ஆம், அங்கு சமையலைறையில் அவர்கள் செய்யும் சமையலைப் பார்த்த ஒருவனுக்கு பசியே எடுக்காது என்கிறார்கள்” எனச் சொல்லி மீண்டும் வெடித்துச் சிரித்தார்.

பிறகு “ஒரே மாதிரி வேலையை திரும்பத் திரும்ப சந்தம் மாறாது செய்யும் போது எங்கோவொரு வாசல் நம்மில் திறக்கிறது. ‘அது அழிவற்றது’ என நம்மை உணரச் செய்கிறது. அல்லது ‘அவ்வளவுதான் அது’ என்று. ஒருகை ஓசையை கேட்டு பயணி ஒருவன் விழித்தெழுவது போல்” எனச் சொல்லி மௌனமாக இருநிமிடம் அமர்ந்திருந்தார். பின்னர் “ஞானமும் அறிதலும்தான் உனது வழி. தவறிப் போய் இந்தக் கிழவனிடம் மாட்டிக்கொண்டாய். ஆனால் எனது ஆசிகள் எப்போதும் உனக்கு உண்டு” என சொல்லிவிட்டு எழுந்து சென்றார்.

தொடர்ந்து நான் படித்தும் எழுதியும் வந்தேன். உணவக வேலையோடு தினமும் ஒரு மணிநேரம் எடை தூக்கினேன். என் தசைநார்கள் இறுகின. உடல் வலுவுற்றது. மூச்சுக்காற்று சீரடைந்தது. முகம் தெளிந்தது. கண்கள் ஒளியேறி மின்னின. கடல் நடுவே வீற்றிருக்கும் கரும்பாறை ஒன்றை அலைகள் மோதி மோதிச் செதுக்குவது போல் நானும் ஏதோவொரு கண்காணா உளியால் செதுக்கப்பட்டுக் கொண்டிருப்பதை போல உணர்ந்தேன்.

அடுத்த ஓராண்டில் என் முதல் புத்தகத்தை எழுதி முடித்தேன். பிரக்ஞை என்பதை ஒரு அலைக்கற்றை போல் உருவகித்து கிழக்கத்திய மெய்யியலை மேற்கத்திய உளவியலோடு இணைக்கும் ஒரு முயற்சி.

எழுநூறு பக்கங்களுக்கு மேல் வந்த கைப்பிரதியை எனக்குத் தெரிந்த பதிப்பகத்தார் ஒருவரிடம் கொடுத்திருந்தேன். ஒரு வாரத்தில் தபாலில் திரும்ப வந்தது. “மன்னிக்கவும்… நாங்கள் கல்வித்துறை சார்ந்த மதிப்புமிகு பதிப்பகம். இப்படிப்பட்ட நூல்களை எல்லாம் எங்களால் பதிப்பிக்க முடியாது” என்ற சிறு குறிப்புடன்.

மேலும் பல நிராகரிப்புகள். புத்தரும் நாகார்ஜுனரும் கௌடபாதரும் ரமணரும் கார்ல் யூங்கும் பியாஜேவும் ஃபிரிட்ஸ் பெர்ல்ஸ்சும் எல்லாம் ஒரே பத்தியில் பேசப்பட்டதால் என்னவோ புத்தகத்தை எப்படி வகைப்படுத்துவது என்பது பலருக்கும் புரியவில்லை. ஹிப்பி வகை நவ-யுக புத்தகமாக இருக்குமோ என்றால் அதுவும் இல்லை. எழுநூறு பக்கத்துக்கு மேல் போகும் கனமான ஆய்வுப் புத்தகம். ஆக தொடர்ந்து பல திசைகளிலிருந்தும் ஏராளமான நிராகரிப்புகள். கேலிப் பேச்சுகள். அறிவுரைகள்.

“என்ன சொல்வது….கவனமாக இருக்க வேண்டும்… ஆராய்ச்சி நூல் என்றல்லவா சொன்னாய்? நானாக இருக்கவே தப்பித்தாய்.. மற்ற யாரோ ஒருவரென்றால் புத்தகத்தை கிழித்து தூரப் போட்டிருப்பார்கள். உளவியல் ஆய்வில் இப்படி உன் இஷ்டத்துக்கு எல்லாவற்றையும் எடுத்து கோர்க்க முடியாது என்பதை முதலில் புரிந்து கொள்”

“யோகசாரம் என்றால் என்னவென்றே உனக்குத் தெரியவில்லை. மத்யமிகாவோடு போட்டு குழப்பிக் கொள்கிறாய். அசங்கரையும் வசுபந்துவையும் முதலில் ஒழுங்காகப் படி. அதாவது பரவாயில்லை… தாமரை சூத்திரத்தை போயும் போயும் விவேகசூடாமணியோடும், உத்திர மீமாம்சையோடும் எல்லாம் ஒப்பிட்டு உன்னையே நீ அசிங்கப்படுத்திக்கொள்ளாதே..”

“பௌத்தத்தில் என்ன பெரிய தத்துவம் இருக்கிறது? எல்லாம் நியாயப் பிரஸ்த்தனத்தில் இருந்து பிரதி செய்யப்பட்டது தானே?. அதைப் போய் மெனக்கட்டு இத்தனை பக்கங்களை வீணடித்து எழுதிக் கொண்டிருக்கிறாய்!”

“ஆஷ்விட்சுக்குப் பிறகு இதுபோன்ற பெருங்கதையாடலை எழுத எப்படி உனக்கு மனசு வந்தது…”

“ஹ்ம்… எழுத்து சிந்தனை இதெல்லாம் சரிதான். ஆனால் மௌனம். மௌனம். காலவெளி எங்கும் அலையென வீற்றிருக்கும் பெரும் மௌனம். அதை முதலில் உணர்ந்து கொள். எழுதுவதைப் பற்றியெல்லாம் அப்புறம் யோசிக்கலாம்…”

இருபதுக்கும் மேற்பட்ட பதிப்பகத்தார்களால் தொடர்ந்து நிராகரிக்கபட்ட பின் நான் அந்த முதல் புத்தகத்தை தூர வைத்துவிட்டு அடுத்த புத்தகத்தை எழுதுவதற்கு தயாரானேன். அப்போது கொலராடோ பல்கலைக்கழகத்தில் புதிய பேராசிரியர் ஒருவர் சேர்ந்திருப்பதாக சொன்னார்கள். “ரமணர் வாழ்ந்த மண்ணில் பிறந்தவர். ஆரோவிலில் வேறு தங்கி படித்தவராம். நீ கண்டிப்பாக அவரைப் போய் பார்த்துவர வேண்டும்” என நண்பர்கள் வற்புறுத்தினார்கள். கடிதம் போட்டு, புத்தகப் பிரதியையும் அவருக்கு அனுப்பி வைத்து, பின்னர் அவர் நாள் சொன்னதும் போய் பார்த்தேன்.

பேராசிரியர் மெதுவாக, மிக மெதுவாக நடந்து வந்தார். இரு முறை தலையசைத்தபின் மெல்ல என் கைகளைப்பற்றிக் குலுக்கினார். குரலில் மிகப் பணிவு. உடல் மொழியில் அதி பவ்யம்.

“மதிய வயது ஆளாக இருப்பாய் என்றல்லவா நினைத்தேன்.. ஆனால் இவ்வளவு சின்னப் பையனாக இருக்கிறாயே… உன் வயதென்ன?”

“இருபத்தி நான்கு”

“ஆஹா… என்ன ஒரு துடிப்பு. இளமைக்கே உரித்தான வேகம்…” என்று வியந்தார். பின்னர் மோவாயை தடவியபடி சிறுது நேரம் மௌனமாக இருந்தார். “ஹ்ம்ம்.. ஹ்ம்ம்..” என்று எதோ தனக்குள் முனகினார். பார்வை எங்கோ தொடுவானில் பதிந்திருந்தது.

”பரவாயில்லை எதுவாயிருந்தாலும் சொல்லுங்கள்’ என்றேன்.

”உனது ஆர்வத்தை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. குழந்தைக்கு பசி எடுத்தால் கைக்குக் கிடைக்கும் அனைத்தையும் விட்டுவைக்காமல் தின்பதைப்போல்… ஆனால் நீ ஒன்றை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்… உன் எழுத்தில் புரிதலில் இருக்கும் ஒரு அடிப்படை பிரச்சினையை… சொல்லப்போனால் இது உன்னுடைய பிரச்சினை மட்டும் அல்ல.. மேற்கத்திய மனதிற்கே உரித்தான ஒரு குறைபாடு. அதாவது சாமானியம் விசேஷம் என்று இரு தளங்கள் உண்டு… விசேஷ தளத்தில் உள்ள உண்மையை சாமான்ய தளத்தில் போட்டுப் பார்க்கக் கூடாது.. அதே போல் சாமான்ய தளத்திலுள்ள உண்மைக்கு விசேஷ தளத்தில் ஒரு பொருளும் இல்லை…. இது இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.. என்ன புரிந்ததா?”

“இதை நான் நூலின் ஐந்தாம் பக்கத்திலேயே எழுதியிருக்கிறேனே. மீண்டும் எதற்கு என்னிடம் இவ்வளவையும் சொல்கிறீர்கள் என புரியவில்லை.”

”கோபப்படாதே.. இது போன்ற புத்தகங்களை நான் ஏராளமாக வாசித்திருக்கிறேன் என்பதை முதலில் புரிந்து கொள்.. இன்னும் தெளிவாக விளக்கமாக நீ எழுதியிருக்க வேண்டும்.”

‘மேலும் ஏழெட்டு இடங்களில் சாமான்யம் விஷேசம் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறேன். அதை கிரேக்க மெய்யியலோடும், நவீன அறிவியங்கியலோடும் ஒப்பிட்டு அதன் தனித்தன்மையை எடுத்துச் சொல்லும் பல பக்கங்கள் நூலில் உள்ளன.” என்றேன்.

”ஹ்ம்ம்…” என்று ஒருவித கேலிச் சிரிப்புடன் தலையாட்டினார். பார்வையில் ’பையா உன்னைப் போல எத்தனை பேரை பார்த்திருப்பேன்’ போன்றதொரு அலட்சியம்.

“நீங்கள் புத்தகத்தை மேய்ந்து பார்த்திருக்கிறீர்கள் என்பது மட்டும் தெரிகிறது… என் நூலில் குறைகள் போதாமைகள் இருக்கலாம். ஆனால் அது நீங்கள் வைக்கும் தளத்தில் இல்லை என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். உங்கள் நேரத்திற்கு மிக்க நன்றி…வருகிறேன்” என்றேன்.

“நில்..நில்… கோபப்படாதே… அடடா…இளமைக்கே உரித்தான உனது கோபம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது…”

“நன்றி வருகிறேன்”

வீடு வந்து சேர்நததும் முதல்முறையாக மிகப்பெரிய ஏமாற்ற உணர்வு என்னை வந்து சூழ்ந்து கொண்டது. அதுவரை அத்தனை பதிப்பகத்தாரும் புத்தகத்தை நிராகரித்தபோது கூட நான் தளரவில்லை. ஆனால் இப்போது ஏனோ மனமுடைந்து போனேன். யாருக்கும் எதைப்பற்றியும் ஒரு கவலையும் இல்லை. எல்லோரும் தலைக்குள் தங்களை சுமந்தபடி திரிந்தலைகிறார்கள். மேற்கு கிழக்கு ஒரு வித்தியாசமும் இல்லை. யாரடா நீ புது ஆள் என்னுடைய பேட்டையில் என்கிறார்கள். இந்த எல்லையைத் தாண்டி காலை வைத்தால் உதை விழும் என்கிறார்கள். நீ எழுதியதை நான் எதற்கு படிக்க வேண்டும், அப்படி என்ன பெரிதாக எழுதி நீ கிழித்துவிட்டாய் என்கிறார்கள்.. ‘சொல்வதைக் கேள், நான் சொல்வதை நீ முதலில் கேள்’ என்பதே இவர்களின் வேள்வி மந்திரம். இதற்கு இத்தனை பாவனைகள்!. இத்தனை கோட்பாடுகள் நியாயப்படுத்தல்கள்!. களைத்து சோர்வுற்று படுத்துறங்கினேன்.

ஒரு வருடம் கழித்து எரிக்ஸன் பதிப்பகத்தில் இருந்து கடிதம் வந்திருந்தது. புத்தகம் அவர்களுக்கு பிடித்திருந்ததாகவும், அதை பதிப்பிக்க விரும்புவதாகவும், உடனே கிளம்பி நியூயார்க் வருமாறும் கேட்டுக் கொண்டார்கள். எழுதி முடித்த நாளிலிருந்து கிட்டத்தட்ட நான்காண்டுகளுக்குப் பிறகு புத்தகம் வெளிவந்தது. எதிர்பாரா தருணத்தில் ஹஸ்டன் அதற்கு ஒரு மதிப்புரை எழுத விற்பனை பன்மடங்காகியது. கல்வித்துறையிலும் அதற்கு வெளியிலும் புத்தகம் பிரபலமாகியது. அதன் பின் நான் எழுதிய எந்தவொரு புத்தகத்திற்கும் பதிப்பகங்களை தேடி அலைந்ததில்லை. மிக விரைவிலேயே ஊடக கவனம் என் மீது குவிந்தது. விருதுகளும். கருத்தரங்கில் பேச, கல்லூரிகளில் சிறப்புரை ஆற்ற, தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ள என தொடர் அழைப்புகள்.

ஒரு கட்டத்தில் நிறுத்திக் கொள்வது என முடிவெடுத்தேன். ஊடகங்களை வீட்டருகே வரவிடாது தடுத்தேன். கருத்தரங்க அழைப்புகளை நிராகரித்தேன். மீண்டும் என் கூட்டுக்குள் சென்று வருடம் ஒன்றென இன்றோடு ஆறு புத்தகங்கள்.

அபூர்வமாக பொதுவெளிக்கு வரும் தருணம் இது என்பதால் நிறைய ஊடக நண்பர்கள் வந்திருந்தார்கள். நேர்காணல் எடுக்க முயன்றபடி இருந்தார்கள். ஒருவருக்கு கொடுத்தால் மற்றொருவர் கோபித்துக் கொள்வார் என்பதால் யாருக்குமே தருவதில்லை. ஏதாவது சொல்லி தப்பித்துவிடுவேன்.

நெடுநாட்களுக்குப் பிறகு ஹஸ்டனைப் பார்த்த மகிழ்ச்சி எனக்கு. அங்கே ஓரத்தில் உள்ள மேஜையில் ரோஜருடன் உணவருந்திக் கொண்டிருந்தார். போய் அவருடன் உட்கார ஆசைப்பட்டேன். ஆனால் எதிரே ஜெஃப்ரி என்னை நோக்கி கை அசைத்தான். கல்லூரிக் கால நண்பன். இப்போது பத்திரிகையாளன். கண்டிப்பாக ஏதாவது விவகாரமாகதான் கேள்வி கேட்பான். அவனைத் தவிர்க்க முயன்று தோற்றுப் போனேன்.

“கென்… அற்புதமான உரை… இன்னும் கொஞ்ச நேரம் பேசியிருக்கலாம்… சட்டென்று முடித்துவிட்டாய். பரவாயில்லை…. பிரக்ஞை ஆராய்ச்சியின் ஐன்ஸ்டீன் என குரோனிக்கல் உன்னை வர்ணித்துள்ளதே…” என்றான்.

“ஆமாம்… கான்சாஸ் மாநிலத்திலேயே மிக உயரமான கட்டிடம் என்பதைப் போல்..”

”ஹ்ஹ.. எப்போதும் உனக்கு விளையாட்டுதான்..” எனச் சொல்லி செல்லமாக வயிற்றில் குத்தினான். “என்னது இது…. என் முட்டிதான் வலிக்கிறது… வயிறு என்றால் கொஞ்சமாவது சதை இருக்க வேண்டும் கேட்டாயா.. இரும்புக்கல் மாதிரி இருக்கிறது… வரவர உன்னைப் பார்க்கும்போது எனக்கு பயம்தான் வருகிறது… நீட்சேவின் அதிமனிதன் போல இருக்கிறாய்… சர்வாதிகாரி ஆன பின் இந்த நண்பனை ஞாபகம் வைத்துக்கொள், என்ன? குறைந்த பட்சம் என்னை வதைமுகாமிலாவது போடாமல் இரு.”

வேண்டுமென்றே சீண்டுகிறான். கவனமாக இருக்க வேண்டும் என உள்ளுக்குள் சொல்லிக் கொண்டேன். “சேச்சே.. அப்படியெல்லாம் செய்வேனா? உனக்கென்று சிறப்புச் சலுகை.. குளிரூட்டப்பட்ட வதைமுகாம். கொசு கடிக்காது” என்றேன்.

“அது சரி…நீ செய்தாலும் செய்வாய். இளம் ஸ்டாலினும் உன்னைப் போல் தினமும் ஐநூறு அறுநூறு பக்கம் படித்தான் தெரியுமா? உண்மையிலேயே உன்னைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு உள்ளுக்குள் எங்கோ எச்சரிக்கை மணி அடிக்கிறது.” என்றான்.

அவமதிப்புகளும், அற்ப அறிவுரைகளும் எனக்கு புதிதல்ல. நான் அதனூடாகவே வளர்ந்தவன். துளி கண் அசைவில் இவர்களது சிறுமையை உணர்த்திவிட என்னால் முடியும். பெரும்பாலும் கிண்டலாக ஏதாவது சொல்லி தாண்டிப் போய்விடுவேன். ஆனால் இன்று இவனை விடக்கூடாது எனத் தோன்றியது.

“ஹ்ம்ம்.. உன்னோடு சேர்த்து இதுவரை பதினைந்து பேர் என்னிடம் இப்படி அதிமனிதன் குறித்து ஆழ்ந்த கவலையோடும், கலக்கத்தோடும், கரிசனத்தோடும் எச்சரித்திருக்கிறார்கள். அக்கறைக்கு மிக்க நன்றி.

‘அதிமனிதன் கட்டற்ற அதிகாரத்தை நோக்கியே செல்வான். பேரழிவை உருவாக்கிய பின்னரே மறைவான் என்கிறாய். சரிதான். ஆனால் மனக்குறையும் நிறைவேறா ஏக்கங்களும் சோம்பலும் ஆங்காரமும் கலந்த சாதாரண மனிதன்? எல்லோரும் வந்து தன்னை விதவிதமாகப் புகழ்ந்து தன் கையை நக்கிவிட்டுச் செல்வதுபோல் ஆயிரமாயிரம்முறை கனவு காண்பான். அந்தக் கனவு சலித்த பின் ஆற்றாமையால் புழுங்கி வெதும்பி புறம்பேசி குழிபறித்து தன் முதுகை தானே சொறிந்து, தன்னால் ஆனதொரு நரகத்தை மற்றவர்களுக்கு அளித்து, தனக்கு சாத்தியமானதொரு அழிவை உருவாக்கிய பின் தானும் தடமின்றி அழிவான்.

‘ஆகவே உனது தார்மீகக் கவலையை எல்லாம் வேறெங்காவது போய் சொருகிவை. நீ மாலை வீட்டிற்குப் போனதும் தினமும் என்ன செய்வாய் என்பது எனக்குத் தெரியும். மனைவி சமைத்து வைத்திருக்கும் சாப்பாட்டை தின்னுவாய். புட்டத்தை தேய்த்தபடி கால்பந்துப்போட்டியை கண் எரிய பார்ப்பாய். பியரோ விஸ்கியோ குடித்துவிட்டு ஏப்பம் விட்டபடி மேஜை டிராயரைத் திறந்து அதில் நீ ஒளித்து வைத்துள்ள உலகத்தையே கலங்கடிக்கப்போகும் புத்தகத்தின் முதல் இரண்டரை பக்கத்தை மீண்டும் படித்து புளகாங்கிதம் அடைந்து மிச்சமுள்ள நானூத்தி அறுபத்தெட்டு பக்கங்களை சீக்கிரம் முடிக்க வேண்டும் என மனதிற்குள் சொல்லிக்கொண்டு பாரிஸ் ரிவ்யூவிலும் நியூயார்க்கரிலும் வரப்போகும் அற்புத விமர்சனங்களை, அதற்கு நீ எழுதப்போகும் எதிர்வினைகளை, மிகப்பணிவுடன் பெற்றுக்கொள்ளப்போகும் பரிசுகளை, அப்போது ஆற்றப்போகும் பேருரைகளை எல்லாம் நினைத்தபடி வயிற்றைத்தடவிக் கொண்டு மனைவியுடன் போய் படுப்பாய். பின்னர் குப்புறப் படுத்துக்கொண்டு தூங்குவாய். காலையில் எழுந்தவுடன் மலச்சிக்கல் பற்றியும் அதிமனிதர்களால் உலகிற்கு ஏற்படப் போகும் ஆபத்துகள் குறித்தும் யோசித்து யோசித்து களைப்பேறி அலுவலகம் சென்று மேலதிகாரிக்கு வணக்கம் வைப்பாய்”

“நீ கொடூரமானவன்”

”இல்லை, நான் உன் நண்பன். போய் வேலையைப் பார்”. என்றேன்.

கண்களில் அடிபட்ட பாவனையோடு அரங்கில் இருந்து ஜெஃப்ரி வெளியேறினான். பாவமாக இருந்தது. ஓடிப்போய் அவனை திரும்பக் கூப்பிட வேண்டும் போலத் தோன்றியது. ஆனால் கூடாது. இதுதான் சரி. வேறு வழி இல்லை. கண்மூடி ஒரு கணம் மூச்சை உள்ளிழுத்து விட்டபடி ஹஸ்டன் அமர்ந்திருக்கும் மேஜையை நோக்கி நடந்தேன்.

ஹஸ்டன் மிகவும் இளைத்திருந்தார். குழந்தை போல ரசித்து ஸ்ட்ராபெர்ரி ஜஸ்கிரீமை சாப்பிட்டுக் கொண்டிருந்தவரின் தாடை மட்டும் தனித் தாளத்தில் ஆடிக் கொண்டிருந்தது. நெற்றிச் சுருக்கங்கள் மேன்மேலும் அவரை அழகாகக் காட்டியது. என்னைக் கண்டதும் முகம் மலர சிரித்தார். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் இனம் புரியாத உற்சாகமும் நன்றியுணர்வும் வந்து என்னுள் ஒட்டிக்கொள்ளும். அது அவர் மீதுள்ள நன்றியுணர்வு மட்டும் அல்ல என்பதை சில காலம் கழித்தே உணர்ந்து கொண்டேன். இத்தனைக்கும் அவர் சிரிப்பும் வேடிக்கையுமாக சரளமாக பேசக் கூடியவர் ஒன்றும் அல்ல. தன்னை மிக உற்சாகமானவனாக துறுதுறுப்பானவனாகக் காட்டிக் கொள்ள முனைந்து இருநொடிக்கு ஒருமுறை கண்ணைச் சிமிட்டும் பேராசிரியரும் அல்ல. அப்படி ஏராளமான பேராசிரியர்களைப் பார்த்து சலித்தவன் நான். அவர்களது நம்பிக்கைக்கு மாறாக இரண்டு எதிர்க்கேள்விகள் கேட்டால் கூட அந்தப் பேராசிரியப் பெருந்தகைகளின் குறுந்தாடியில் கருமை கூடிவிடும். அவர்களுக்கு மத்தியில் ஹஸ்டன் எனக்கு ஒரு தேவதையைப் போலவே தோன்றினார். யூங்கிய-உளவியலின் பிதாமகர்.  பௌத்தம் குறித்தும், உலகின் தொன்மரபுகள் குறித்தும்  முக்கியமான புத்தகங்கள் பலவற்றை எழுதியவர். அல்டஸ் ஹக்ஸ்லியின் மாணவர். கிரிஸ்டபர் இஷர்வுட்டின் நண்பர்.

“வா.. வந்து இப்படி உட்கார்” என்றார். “இவன் ஏதோ சொல்கிறான் கேள். கண்டதையும் படித்து வைத்திருக்கிறான்” என ரோஜரை நோக்கி கைகாண்பித்தார்.

“ஒன்றுமில்லை… இவாரிஸ்த் கால்வாஹ் பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன். பிரஞ்சுக்காரன். கணித மேதை. அவன் எழுதியதில் மொத்தமே அறுபது பக்கங்கள்தான் இதுவரை கிடைத்திருக்கிறது. ஆனால் க்ரூப் தியரியை ஆரம்பித்து வைத்தவன் என சொல்கிறார்கள். பெரிய கலகக்காரன். பாவம் இருபது வயதில் ஒரு சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டான்….”  என்றான் ரோஜர். எனது நெருங்கிய நண்பன். சான் டியாகோ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் உளவியல் பேராசிரியன். தத்துவ ஆர்வமும் கொஞ்சம் அதிகம். வழுக்கைத் தலையும் அடர் மீசையுமாக முழுத்தீவிரத்துடன் கையாட்டியபடி அவன் வகுப்பெடுப்பது பல்கலைக்கழகம் முழுக்க பிரசித்தி. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கால்வாசி மிமிக்ரி கலைஞர்கள் உருவாவதற்கு அவனும் ஒரு முக்கிய காரணம் எனத் தோன்றுவதுண்டு.

ரோஜர் தொடர்ந்தான். “அவனுடைய சாதனை இதுதான்… சீர்மை குறித்து பேசுவதற்கு புத்தம் புதிய கணிதமொழியை தொடங்கி வைத்தது! அவ்வளவுதான். அப்போது அது பெரிய விஷயமாக தெரியவில்லை. அவனது தேற்றங்களின் முக்கியத்துவம் யாருக்கும் புரியவில்லை. ஏதோ கிறுக்கன் என நினைத்தார்கள். பிறகுதான் அவன் சொல்ல முயன்றதன் கனம் அவர்களுக்குப் புரிந்தது. அதுநாள் வரை சீர்மை என்பதை ஏதோ ஒருவித சமன் அல்லது ஒழுங்கு என்றே நம்பிக் கொண்டிருந்தார்கள். ஒருவகையில் அது சரிதான் ஆனால் அதைத் தாண்டி யோசித்தவன் கால்வாஹ். சீர்மை என்பதை கால-வெளியில், உருமாற்றத்தில் – அல்லது மாற்றமின்மையில் – வைத்து அதை ஒருவித நிகழ்வாக உருவகித்தவன். ஒரு பொருளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சீர்மைகள் இருக்கலாம் என்பதை எடுத்துரைத்து பெரியதொரு சிந்தனைப் பாய்ச்சல் ஒன்றை தொடங்கி வைத்தவன். இன்றைய கணிதம், நுண்பௌதீகம் எல்லாமே சீர்மை விடுக்கும் புதிர்களை சுற்றித்தான் இயங்குகின்றன. நவீன அறிவியல் என்பதே புதுப்புது சீர்மைகளை கண்டுபிடிப்பதும் அதன் மையப் புதிர்களை அவிழ்ப்பதும்தான். நுண்பௌதீகத்தில் இருந்து மூலக்கூறு வேதியியல் வரை எல்லாம் சீர்மையை சுற்றியே இயங்குகின்றன. கால்வாஹ் க்ரூப், லாரண்ட்ஸ் க்ரூப், பாய்ன்கேர் க்ரூப் இவற்றின் சீர்மை விதிகளை மட்டும் வைத்து இயற்கையின் அடிப்படை இயக்கத்தை இன்று நம்மால் ஓரளவு தொகுத்துவிட முடியும்” என்றான்.

“சரிதான், ஆனால் இயற்கையில் உள்ளூர இருக்கும் சீர்மை இன்னும் பிரம்மாண்டமானதாக அல்லவா இருக்கிறது?” என்றார் ஹஸ்டன். “பூவிதழில் இருந்து பனித்திரள் வரை, தேன்கூட்டில் இருந்து சிலந்தி வலை வரை எங்கும் இந்த மாயம்தானே?. அதிலும் இந்த நாட்டில்லஸ் இருக்கிறதே… உலகம் முழுக்க எத்தனை கணித வல்லுனர்களை அறிவியல் அறிஞர்களை பித்துப் பிடித்து அலையச் செய்தது அது? அதன் உருவமும் ஓடும் மட்டும் அல்ல… ஒட்டுமொத்த இருப்பே அதி அற்புதமான சீர்மைதான். நாட்டில்லஸ் குட்டியாக இருந்து பின்னர் சடசடவென வளரும் போது ஒருகணத்திலும் அதன் சீர்மையை இழப்பதில்லை என்கிறார்கள். விந்தைதான், என்ன? ஆழ்துயிலில் சுருண்டு படுத்திருக்கும்போதும் சீர்மை. பின்னர் எழுந்து சோம்பல் முறித்து விரியும் கணம்தோறும் சீர்மை! ஏன், அந்த விரிவின் சுழல் பாதையே சீர்மைதான்.. ஒப்பற்ற சீர்மை!

யோசித்துப் பார். நாட்டில்லஸ் தன் ஓட்டை பரப்பி விரியும் கணத்தில் இருந்து முடியும் கணம் வரை இதோ இந்த வீடியோவில் படம் பிடித்தால் ஒவ்வொரு நொடியும், ஏன் ஒவ்வொரு சட்டகமுமே செஞ்சீர்மையில்தான் இருக்கும். எவ்வளவு பெரிய அற்புதம் அது..” என்றார். அப்போது அவரது குரல் லேசாக விம்மி துடிதுடித்துக் கொண்டிருந்தது.

ஹஸ்டனுடைய கைகளை மெல்ல பற்றிக் கொண்டேன் “உண்மைதான். உலக நாகரீகங்கள் எல்லாமே ஏதோ ஒரு கட்டத்தில் சீர்மை எனும் மர்மத்தை பின்தொடர்ந்தவைதான். கிரேக்க சிற்பங்களில், சுமேரியாவின் வெள்ளி ஜாடிகளில், அலாஹ்ம்ப்ராவின் கோட்டை தரைவட்டுகளில், அங்குள்ள நுண்ணிய அணிகலன்களில், பெர்சியாவின் சுவர் ஓவியங்களில் எல்லாம் அதுவே காணக்கிடைக்கின்றன. ஹோமரின் எலியட் ஒடிசி இவற்றின் வரி ஓசைகளில் கூட! நாட்டிய சாஸ்திரத்தின் பெரும்பகுதியும் சீர்மை குறித்தே.. அபினவ்குப்தர் அது பற்றி நிறைய எழுதியிருக்கிறார். தாந்த்ரீக சடங்குகளிலும், யந்திரங்களிலும், வஜ்ராயன சக்கரங்களிலும் அடிநாதமாக இருப்பதும் அதுதான். சொல்லப்போனால் நடராஜர் சிலை என்பதே சைவசித்தாந்தம் உணர்த்திய சீர்மை எனும் ஆதி தத்துவத்தின் கலைவடிவுதான்” என்றேன். “இன்று பக்மின்ஸ்டர் ஃபுலர் வடிவமைக்கும் கட்டிடங்களின் மையவிசையும் அதுதான். ஏன் ஐரோப்பிய பேராலயங்களின் முன்றில்களிலும், அதன் உட்புற வில்வளைவுகளிலும் சீர்மை தொகுதிகள் உண்டு. பாக்கின் கன்டடாக்களிலும் சிம்பொனி இசைக் கட்டமைப்புகளிலும் கூட! அவை அந்த தனித்து விரிந்த பேராலயங்களில் வாசிக்கப்படும்போது சீர்மை காற்றலைகளில் கலந்து சீர்மையில் முட்டி எதிரொலிக்கும்”

ரோஜர் புருவத்தை உயர்த்தினான். “ஆம், இதுநாள் வரை கலைஞர்களுக்கு சீர்மை என்பது ஒரு அடிப்படை தேடலாகவே இருந்து வந்திருக்கிறது… டாவின்சி அதன் பின் பைத்தியமாக அலைந்தான் எனப் படித்திருக்கிறேன். ‘விட்ரூவிய மனிதன்’ என்ற கனவை முழுமையை நோக்கி…  எம்.சி. எஷரும் அப்படித்தான்.. அதிலும் அந்த ‘வரையும் கைகள்” என்ற ஓவியம்! இடது கை வலதை வரைந்து அதை இருப்புக்குக் கொண்டு வரும் அதே சமயம் வலது கை இடதை வரைந்து கொண்டிருக்கிறது! இரு கைகளும் ஒன்றை ஒன்று தொடர்ந்து மாறி மாறி வரைந்தபடி கண்காணாதொரு சீர்மைக்குள் சென்று முடிகின்றன” என்றான்.

“ஆனால் இன்று கலைகளும் தத்துவமும் அறிவுத்துறைகளும் எல்லாம் மிகப்பிரம்மாண்டமாக கிளைபிரிந்து வளர்ந்து தங்களுக்குள் தனித்து பேசியபடி சிதறுண்டு கிடக்கின்றன! ஒன்றுடன் ஒன்று தொடர்பே இல்லாமல்!. இதில் சீர்மை, இணக்கம் என்பதெற்கெல்லாம் இடமே இல்லை” எனச் சொல்லி பெருமூச்சிட்டான். “இது கிழக்கத்திய பிரபஞ்சவியலை சேர்க்காமல். அதையும் சேர்த்தால் இன்னும் மோசம். மனச்சோர்வு மட்டுமே எஞ்சும். இது எப்படி இப்படி ஆனது என்றே எனக்குப் புரியவில்லை. ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருவகை இணைவை உருவாக்க யாராவது வந்து கொண்டேதான் இருக்கிறார்கள். முன்பு ஆல்ஃப்ரெட் நார்த் வைட்ஹெட்டும் அரவிந்தரும். அதன் பின் ஜீன் கெப்ஸர். பிறகு சி.பி.ஸ்நோ. பின்னர் இப்போது நீ ஏதோ கொஞ்சம் முயன்று பார்க்கிறாய். ஆனால் வெறும் உளவியலை மட்டும் கட்டிக்கொண்டு ஏன் அழுகிறாய் என்பது மட்டும் எனக்குப் புரியவேயில்லை. சரியான சோம்பேறிப் பயல் நீ…” என சொல்லிவிட்டுச் சிரித்தான்.

“அது சரி. ரிமோட்டை எடுக்க கஷ்டப்பட்டு டிவி சேனலை கால் விரலைக் கொண்டு மாற்றும்போது அடிவாங்கினவன் நீ எனக்குச் சொல்கிறாய்! சரிதான்” என்றேன்.

”உனக்கு அவ்வளவுதான் திராணி என்றால் விடு… வேறு யாரோ ஒருத்தன் வராமலா போய் விடுவான்?. எனது ஆய்வு மாணவன் ஒருவன் இருக்கிறான். அவனை தயார் செய்வேன். அல்லது எனக்கு பிறக்கப் போகும் மகனை” என்றான்.

”ஹ்ம்ம்… நீயுமா? இன்று ஏனோ எல்லாரும் என்னை சீண்டிக் கொண்டே இருக்கிறார்கள்” என்றேன். “முடிந்தளவு உழைத்தாகிவிட்டது. அடுத்த சில வருடங்களுக்கான திட்டங்களும் கொஞ்சம் உள்ளது. இதற்கு மேல் என்னை என்ன தான் செய்யச் சொல்கிறாய்?”

“அதெல்லாம் சில்லறைத் திட்டங்கள்… நான் சொல்வதைக் கேள்” எனச் சொல்லி தலைநிமிர்த்தி என்னை ஊடுருவிப்பார்த்தான். அவனது கண்கள் என்னுடையதை ஒருகணம் வெட்டிச் சென்றன. “ஒட்டுமொத்தத்தையும் கையில் எடு. ஆம், பரிணாம உயிரியலில் இருந்து சார்பியல் வரை, நுண்கணிதத்தில் இருந்து நரம்பியல் வரை, உளவியலில் இருந்து மானுடவியல் வரை. எல்லாவற்றையும். ஒட்டுமொத்தத்தையும். அதிலிருந்து ஒரு மாபெரும் சிலந்தி வலையை பின்னி உருவாக்கு. உன்னால் மட்டுமே பின்னக்கூடியதொரு வலை! முழுமுதல் சீர்மை. அனைத்தையும் உள்ளடக்கிய பரிபூரண சீர்மை”

ஒருகணம் மிரண்டு பின்பு உயிர்த்தெழுந்தேன். கைகளில் சிறியதொரு நடுக்கம். ஒட்டுமொத்தம், ஒட்டுமொத்தம் என்று மனம் சொல்லியபடி இருந்தது.

ஹஸ்டன் இடைமறித்தார். “இவன் சொல்வதையெல்லாம் கேட்காதே. இப்படித்தான் ஏதாவது சொல்லி தூண்டிவிட்டபடி இருப்பான்” என்ற அவரது குரலில் வழக்கத்துக்கு மாறானதொரு பதற்றம் தெரிந்தது. “திசையின்மையின் பின்னணியில் மட்டும்தான் திசை பொருள் கொள்ளும் என்றதொரு சீனப் பழமொழி உண்டு. அதை ஞாபகத்தில் வைத்துக் கொள். ஐரோப்பியப் பேராலயங்களைக் கட்டிய ஆசான்கள் வேண்டுமென்றே சிறு குறைபாட்டை அதன் தூண்களில் ஜன்னல் வளைவுகளில் விட்டுச் சென்றிருப்பதை இன்றும் பார்க்கலாம்.” என்று தொடர்ந்தார். “உண்மையில் சீர்மையின் மீது கலைஞர்களுக்கு எப்போதும் வியப்பும் மிரட்சியும் ஒரு சேர உண்டு. பயம் பதற்றம் பித்து எல்லாம் அவர்களை சுழற்றி அடித்திருக்கிறது. தாமஸ் மன்னின் ஹான்ஸ் காஸ்ட்ராப் பனிச் சறுக்கு விளையாடச் செல்லும்போது புயலில் மாட்டிக் கொள்கிறான். அப்போது அவன் தோளில் விழும் பனித்திரளில் உள்ள இரக்கமற்ற சீர்மையைப் பார்த்து நடுநடுங்கியிருக்கிறான்.

‘God, Thou great symmetry,

Who put a biting lust in me

From whence my sorrows spring,

For all the frittered days

That I have spent in shapeless ways,

Give me one perfect thing’

என அன்னா விக்ஹம் கரைந்தழுதிருக்கிறாள். எப்பேர்ப்பட்ட உணர்ச்சிகரமான வாழ்க்கை அவளுடையது! ஆனால் இக்கவிதையில் உள்ள ஏக்கமும் மன்றாடலும் எல்லாம் நம்மை ஏதோ துணுக்குறச் செய்கின்றன. மகா கவிஞன் வில்லியம் பிளேக்கும் சீர்மை என்பதை புரிந்துகொள்ள முடியாமல் தவிதவித்திருக்கிறான். ”What immortal hand or eye, Could frame thy fearful symmetry?” என்று ஆரம்பித்தவன் மனம் குழம்பி விக்கித்து “What immortal hand or eye, Dare frame thy fearful symmetry?” என முடிக்கிறான். ஆமாம், புலியைப் பற்றிதான் சொல்கிறான். ஆனால் அவனால் எதையும் தீர்மானமாக சொல்ல முடியவில்லை. புலி அவனைக் குழப்புகிறது. பயம் கொள்ளச் செய்கிறது. அச்சமூட்டும் சீர்மை! என்ன மாதிரியானதொரு வரி! இந்த ஒரு வரியை விளக்க இதுவரைக்கும் பல்லாயிரம் பக்கங்களுக்குமேல் எழுதப்பட்டிருக்கும். எத்தனை எத்தனை விளக்கங்கள், விவரிப்புகள்.. ஆனால் பெரும்பாலானவை ‘நன்மை தீமைக்கிடையே உள்ள முரண், அதனிடையே உள்ள சீர்மை’ போன்றதொரு சாதாரண விளக்கத்தைத் தாண்டி செல்லவே இல்லை. ஆனால் பிளேக் சாதாரணக் கவிஞன் ஒன்றும் அல்ல. ஓவியனும் தத்துவவாதியும் கூட. அவன் சொல்வது இன்னும் பிரம்மாண்டமானதொரு விஷயத்தை. ஆமாம், எந்த ஒரு சட்டகத்துக்குள்ளும் அடங்காத, எவற்றாலும் பணிய வைக்க முடியாத இயற்கையின் பேராற்றலை, அதன் புரிந்து கொள்ள முடியாத தன்மையைதான் பரவசத்துடன் கூறுகிறான். அதன் மீது மனிதன் ஏற்றும் ஒழுங்கை, ஒருங்கிணைவை, சீர்மையை ஓரத்தில் கைகூப்பி நின்றபடி திகைப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறான். தினவாழ்வின் சலிப்பூட்டும் சுழற்சி! அச்சமூட்டும் சீர்மை! ஆம், வில்லியம் பிளேக் சொல்லாத எதையும் இதுவரை வைட்ஹெட் சொல்லிவிடவில்லை” என்றார்.

ரோஜர் இடைமறித்து “உங்களுக்கு வயதாகிவிட்டது ஹஸ்டன். அதனால்தான் வேலையற்று பிரிட்டிஷ் கவிதையெல்லாம் படித்துக்கொண்டிருக்கிறீர்கள்” என்று சொல்லி என்னைப் பார்த்து கண்ணடித்தான். “ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு பெருந்தொகுப்பாளன் தேவை. இல்லையேல் அழிவுதான். ஆனால் கடந்த முப்பது வருடங்களாக அப்படி யாருமே நமக்கு வரவில்லை என்பதுதான் சோகம். அதனால்தான் இந்த முட்டாளை முயற்சி செய்யச் சொன்னேன். நான் சொல்லி முடித்ததுமே இவனது கண்களில் மின்னி மறைந்த ஆர்வத்தைக் கண்டுகொண்டேன். நீங்கள் ஏதாவது பேசி இவனது மனதை மாற்றி விடாதீர்கள்…”.

“ஹ்ம்ம்…அது சரி… அவரவர்க்கு ஒரு சிறை! இவனுக்கு இதுதான் என்றால் என்னால் என்ன செய்ய முடியும்” என்ற ஹஸ்டன் கண்மூடி இரு நிமிடம் மௌனமாக அமர்ந்திருந்தார். “என் பேரன் ஆண்ட்ரு இருக்கிறானே… காலையில் தினமும் என் படிப்பறைக்கு வருவான்.. என்னுடைய ஷிஃபர் பேனாவிற்கு மை ஊற்ற. அவனது குட்டிக் கைகளில் மை புட்டியையும் ஃபில்டரையும் எடுத்து மேஜையின் ஓரத்தில் வைத்து பேனாவுக்கு மை ஊற்றுவான். ‘பார்த்து… சிந்திவிடாதே… விளிம்புக்கு கொஞ்சம் முன்னாலேயே நிறுத்திக் கொள்’ என்பேன். ஹ்ஹா.. ஆனால் பயல் ஒவ்வொரு முறையும் நுனி வரை ஊற்றி சிந்திவிடுவான்… மூன்று மாதத்தில் என் மேஜை விரிப்பின் மீது அழகியதொரு ஓவியம் படிந்திருந்தது. சீர்மை ஒழுங்கு எதுவுமே கிடையாது. ஆனால் பேரழகு…”. மீண்டும் ஆழ்ந்தவொரு மௌனத்திற்குள் ஹஸ்டன் சென்று சேர்ந்தார். அப்போது அவர் மிகத் தனிமையான மனிதராகக் காணப்பட்டார்.

“நீ சொன்னது சரிதான். இந்தக் கிழவனுக்கு வயதாகிவிட்டது” எனச் சொல்லி எங்கள் இருவரையும் பார்த்து புன்னகைத்தார். பின்னர் ஏதோ ஒரு யோசனைக்குப் பிறகு மறுபக்கம் பார்த்தபடி “The Citadel is Crumbling” என்றார். நாண் அறுந்த வில் போல் பேச்சு திடீரென தளர்வுற்றது. மௌனம் எங்கள் மூவரையும் சூழ்ந்து கொண்டது. ரோஜர் அதை சுமுகமாக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.

ஹஸ்டன் எங்கள் இருவரையும் கட்டித் தழுவி விடைபெற்றார். அந்த ஸ்பரிசம் இன்னும் என் கைகளிலேயே இருந்தது. மெலிந்த அந்த மனிதரின் நிழல் மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன்.

ஆனால் அன்று என் மனதில் அந்தக் கனவு குடிகொண்டது. ஒட்டுமொத்தம். பரிபூரணம். முழுமுதல் சீர்மை! கிழக்கிலிருந்து மேற்கு வரை நான் நெய்யப் போகும் முடிவிலாத அந்தப் பெருவலை!. கட்டி எழுப்பப் போகும் பிரம்மாண்டமான தேன்கூடு! தீட்டப் போகும் பேரோவியம்! உளிகொண்டு இம்மண்ணில் செதுக்கப் போகும் நடராஜன்! ஆம், இது என் நடனம்! பனிப்புயல் புகுந்து தோகை விரித்தாடும் நர்த்தனம்!

[மேலும்]

முந்தைய கட்டுரைஅரவிந்த்
அடுத்த கட்டுரைமு.வ-வும் புதுமைப்பித்தனும்