6. நிர்வாணம் – ரா.கிரிதரன்

[மீண்டும் புதியவர்களின் கதைகள் ]

சின்ன மணிக்கூண்டுக்கு பக்கத்தில் சண்டே மார்க்கெட் கூட்டத்தில் புத்தனை மீண்டும் பார்த்தேன். அதற்கு முன்தினம்தான் வேகமாக சைக்கிளில் கடந்து கூப்பிட்ட குரலுக்கு நில்லாமல் போய்விட்டான் புத்தன். இன்று, அது போல சைக்கிளை விரட்டிக்கொண்டிராமல் மார்க்கெட் விளக்கு கம்பத்துக்கு அருகே நின்றுகொண்டிருந்தான்.

நேற்று போலில்லாமல் இன்று அவனை சந்தித்தே ஆகவேண்டும் எனும் உந்துதல் குறைவாகத்தான் இருந்தது. நெருக்கமானவரிடம் சிறிது காலம் பேசாமல் இருந்துவிட்டால்கூட மீண்டும் பழைய குதூகலம் வந்துவிடாது போலும். ஊர் திரும்பியதும் பட்ட அனுபவத்தில் தெரிந்தவரிடமெல்லாம் விலகிப்போய்விட வேண்டும் எனும் ஆவேசம் சூல்கொண்டுவிட்டதில் தெரியாத ஒருவரை வழியில் பார்ப்பதுபோல புத்தனைக் கடந்துவிட்டால் என்ன? சரிதான், சந்தித்தபின் விலகினால்தான் என்ன?

`ஏய், புத்தா, புத்தா!`, என உரக்கக் கத்தியபடி மீன் வண்டிகளைத் தாண்டி அவனிடம் போனேன்.

ஒரு வினாடி என் முகத்தையே குழப்பத்தோடு பார்த்தவன், நினைவு வந்ததும், `டேய், ராஜேஸ், ராஜேஷா! பார்த்து எவ்வளவு வருஷம் ஆச்சு`, என முழு சந்தோஷத்தையும் கைவழியே கடத்திவிடுவது போல் கைகுலுக்கினான். வண்டிகளின் கூட்டம் அதிகமானது. `வா, அப்படி போய் பேசலாம்`, என அருகே இருந்த காப்பி கடை பக்கத்துக்கு கைபிடித்துக் கூட்டிப்போனான்.

`எப்படிடா இருக்கே? ஊருக்கு எப்ப வந்தே?`

`வந்து ரெண்டு வாரம் ஆச்சு. நேத்து கூட உன்னை காதி கிராஃப்ட் கடைகிட்ட பார்த்தேன். வேகமா வண்டிய மிதிச்சி போயிண்டிருந்தே. பார்த்து பத்து வருஷத்துக்கு மேல இருக்கும்ல?`, எனக் கேட்டேன்.

`ம்ம்..போன மாசம் அப்பா செத்துப்போயிட்டாருடா. ரொம்ப வருஷமா உடம்பு சரியில்லாம இருந்தாரு..`

`அப்படியா?! முன்ன உன்னைப் பத்தி விசாரிச்சப்ப நீ மொத்தமா எங்கியோ வெளியூருக்கு போயிட்டேன்னு சொன்னாங்க?`

`ஆமாண்டா..அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வரை ஒரிசாவுல, அப்புறம் எல்லாத்தையும் மூட்டை கட்டிட்டு ஒரேடியா இங்கியே வந்துட்டேன்..வீட்டுக்கு வாடா..இப்ப படேல் வீதிலதாண்டா இருக்கேன்` என கையைப் பிடித்து இழுத்தான்.

புத்தனின் வீடு வெளிப்புறத்தோற்றத்தில் அவனது சிறுவயது வீட்டைப்போல மிகச் சாதாரணமாக இருந்தது. வாசல் சுவரில் வண்டியை சாய்த்துவைத்தான்.

`நீ எப்படிடா இருக்கே?`, எனக்கேட்டபடி கதவைத்திறந்து உள்ளே சென்றான்.

`ம்ம்..ஏதோ இருக்கேண்டா..வீட்ல யாரும் இல்ல?`

`உக்காருடா..மனைவி, பசங்க எல்லாம் ஊருக்குப் போயிருக்காங்க..ஒரு பையன் ஒரு பொண்ணு..இரு காப்பி போட்டு எடுத்து வர்றேன்`, எனச் சொல்லிவிட்டு உள்ளே போனான்.

ஹாலின் ஓரத்தில் பிள்ளைகள் ஸ்கூல் பையும், ப்ளாஸ்டிக் பொம்மைகளும் இறைந்து கிடந்தன. சுவரில் கல்யாணப்புகைப்படம் பெரிதாக மாட்டப்பட்டிருந்தது. முப்பந்தைந்து வயது புத்தனுக்கும் புகைப்பட புத்தனும் ரெண்டு தலைமுறை இடைவெளி இருந்தது போல அவனது தோற்றம் வெகுவாக மாறியிருந்தது.
கல்யாணப் புகைப்படத்தையே பார்த்து நின்றிருந்தேன். இத்தனை வருட இடைவெளியில் என் பெஸ்ட் ஃபிரெண்டிடம் நான் அறிந்த மிச்சத்தைத் தேடினேன். புகைப்பட புத்தனை நெருக்கமாக அறிந்துகொண்டவன் என்றாலும் என் முன்னே உயிரும் சதையுமாக இருப்பவனுக்குப் பிடித்தவனாக மாற முயற்சி செய்ய வேண்டும் எனத் தோன்றியது எனக்கு வியப்பாயிருந்தது.

புத்தன் அவனது சொந்தப்பெயரில்லை. நாங்கள் பள்ளிக்கூடத்தில் வைத்த பெயர். நரேனும் நானும் ஒரே நாளில் எங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பில் சேர்ந்திருந்தோம். கடற்கரை அருகே இருந்த கிறிஸ்துவப் பள்ளி அது. பிரம்படிக்குப் பெயர் போனது. ஒரே வகுப்பாயிருந்தாலும் நரேன் யாருடனும் பேசாமல் கடைசி பெஞ்சு மூலையில் உட்கார்ந்தபடியே ரெண்டு மாதங்களைக் கடத்திவிட்டான். கணக்கு வாத்தியார் வராத ஒரு நாளில், சப்ஸ்டிடூட்டாக வந்திருந்த கனகரத்தினம் சார் பசங்க உயரத்தை அளந்து இடங்களை மாற்றிவிட்டதில் முதல் பெஞ்சில் என் பக்கத்தில் வந்தமர்ந்தான் நரேன்.

நாங்கள் அப்போதும் நண்பர்களாக இருக்கவில்லை. அருண் உடன் நான் பெஸ்ட் பிரெண்ட்ஸாக இருந்த நாட்கள். நான் அருண் பக்கம் திரும்பிப் பேசுவேன். பைபிள் கிளாஸ் தான் என்னையும் நரேனையும் இணைத்தது. மதிய உணவுக்குப் பிறகு நடக்கும் மாரல் வகுப்புகளில் கிறிஸ்துவர் அல்லாத பிள்ளைகள் தங்க வேண்டிய அவசியம் கிடையாது. அதுக்காக பள்ளி வளாகத்தில் சுற்றிக்கொண்டிருக்கவும் முடியாது. ஃபாதர் அறைக்கு அருகே இருந்த பெஞ்சில் உட்கார்ந்து வீட்டுப்பாடங்கள் எழுத வேண்டும்.

நரேனுக்கு மாரல் வகுப்பு பிடிக்காது. `சாமியார் பள்ளிக்கூடமே இப்படித்தான்`, என அலுத்துக்கொள்வான். அவனுக்கு யாரோ அப்படி சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும் எனத் தோன்றும்.

ஃபாதர் அறைக்கு வெளியே உட்காரவும் அவனுக்குப் பிடிக்காது.

சாப்பிட்டு முடித்ததும், பள்ளிக்கூடத்துக்கு வெளியே விற்கும் மிளகாய் தடவிய மாங்காய் சீப்பு, சீத்தாப்பழம், கமர்கெட் என எதையாவது கொறித்துவிட்டு பாக்கெட் நிறைய நெல்லிக்காயும் வாட்டர் பாட்டிலுமாக பூனை போல ஃபாதர் அறைக்கு வெளியே வந்து கூட்டத்தோடு உட்கார்ந்துவிடுவான். தினமும் செய்ய முடியாது என்றாலும் சில்லறை இருக்கும்நாளெல்லாம் அவன் வாய் நிறைய சீத்தாபழத்தோடு எச்சில் ஒழுக என் பக்கத்தில் உட்கார்ந்திருப்பான்.

வந்து சேர்ந்த ஒரே மாதத்தில் எல்லா வாத்தியாரிடத்திலும் உதை வாங்கியிருந்தான். நரேனும் என்னைப்போலப் படித்ததால் சுமாராகப் படிக்கும் நானும் சில காலம் தப்பிப்பிழைத்தேன். உங்க ரெண்டு பேருக்குள்ள மிக ஆரோக்கியமான போட்டிடா என அறிவியல் வாத்தியார் பரிட்சை பேப்பரை வீசி எறிந்தார். மாரல் வகுப்பில் இணைந்த நாங்கள் கிளாசிலும் பெஸ்ட் பிரண்ட்ஸாக விரைவில் மாறிவிட்டோம்.

ஒரு நாள் முதல் பீரியட் ஆங்கிலம் முடிந்ததும் கணக்கு வாத்தியார் வருவதற்குள் நரேன் க்ளாஸிலிருந்து நழுவுவதைப் பார்த்தேன். `வர்றேன்`, எனச் சொல்லிவிட்டு அறக்கி அறக்கி க்ளாஸை விட்டு வெளியேறினான். எனக்கு குப்பென வேர்க்கத்தொடங்கிவிட்டது. கணக்கு வாத்தியார் கேட்டால் என்ன சொல்வது? பெஸ்ட் ஃபிரெண்டை மாட்டி விடவும் முடியாது. என்றைக்கும் இல்லாததாக கணக்கு வாத்தியார் வகுப்பு தொடங்கியதும் வீட்டுப்பாடங்களை சரிபார்க்காது கரும்பலகையில் வகுப்பெடுக்கத் தொடங்கிவிட்டார். ஒரு சிக்கல் தள்ளிப்போனது என நிம்மதியோடு நுனியிலிருந்து சற்று பின்னுக்குத் தள்ளி உட்கார்ந்தேன். ரெண்டிடம் தள்ளி உட்கார்ந்திருந்த அருண் என்னையே முறைத்துப்பார்த்துக்கொண்டிருந்தான். `மாட்டிவிடறேன் பாரு`, என வாயசைப்பில் பழிப்பு காட்டினான். எனக்கு அடக்கமுடியாமல் மூத்திரம் வந்துவிட்டது.

`சார்!`

`என்னடா?`

ஒரு விரலைக் காட்டியபடி டிராயரையும் பிடித்துக்கொண்டு முகத்தை கோணலாக்கினேன்.

`இன்னும் ரெண்டாவது பீரியட்ல பாதி கூட முடியலை..அதுக்குள்ளையா..சீக்கிரம் வந்துத்தொலை`, என அனுமதி வந்ததும் டிராயரைப் பிடித்தபடி டாய்லெட்டுக்கு ஓடினேன்.

ரெண்டாவது பீரியட் முடிந்ததும் பத்து நிமிடம் ப்ரேக் உண்டு. டாய்லெட்டில் நுழைந்ததும் ஃபெனாயில் வாடை மூக்கைத் துளைத்தது. முதல் பாத்ரூம் கதவைத் தள்ளப்போகும்போது உள்ளிருந்து சின்ன முனகல் சத்தம் கேட்டது. கதவில் காதை வைத்துக் கேட்டேன். சந்தேகமேயில்லை. நரேன் தான்.

`டேய் நரேன்`

`…`
`டேய் நரேன்`, என கதவைத் தட்டினேன்.

`என்னடா? இங்க எதுக்கு வந்தே?`

`கிளாசுக்கு வாடா. வாத்தியாரு தேடறாரு`

ஒரு கணம் சத்தமே வரவில்லை.

`வரமாட்டேன்..இல்ல இல்ல. நான் எங்க இருக்கேன்னு தெரியாதுன்னு சொல்லிடு`

`டேய் நீ டாய்லெட்டுக்குள்ள போறதை ஆயா பார்த்துட்டாங்க..பிரின்சிபால் கிட்ட சொல்லிடுவாங்க..வெளிய வா..`

`சீ..போடா`

`நானே போய் சொல்றேன் பாரு..போடா`

இன்னும் ரெண்டு தடவை கூப்பிட்டால் வெளியே வந்து அடிப்பான் எனத் தோன்றியது. ஒன்றும் பேசாமல் கிளாசுக்குத் திரும்பிவிட்டேன்.

கணக்கு வாத்தியாருக்கு நரேன் வராதது தெரியவேயில்லை. முதல் பீரியடில் பிள்ளைகளை கணக்கு எடுத்தபின் மாலை கடைசி பீரியடில் தான் மீண்டும் எடுப்பார்கள் என்பதை நரேன் பல நாட்கள் பயன்படுத்திக்கொண்டான். சம்பந்தப்பட்ட இருவரும் கவலையில்லாமல் இருக்க எனக்கு மட்டும் ஒவ்வொரு முறையும் வயிற்றைப் புரட்டும். அருணுக்கு எல்லாம் தெரிந்தும் ஒரு தடவை கூட நரேனை மாட்டிவிடவில்லை. எங்களுக்குள் ஒரு புரிதலில் நரேன் நாடகம் நடந்துகொண்டிருந்தது. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் கிளாசை விட்டு வெளியேறியதால் நானும் அருணும் அவனை புத்தன் எனக் கூப்பிடத் தொடங்கினோம்.

பள்ளி இறுதி ஆண்டுகளில் நான் பயாலஜி க்ரூப்பிலும், நரேன் காமர்ஸ் க்ரூப்பிலும் சேர்ந்தபின்னர் நாங்கள் தினம் சந்திப்பது நின்றுபோனது. பள்ளிமுடியப்போகும் நாட்களில் டாய்லெட்டில் ஒளிந்துகொண்டிருந்த நாட்களைச் சொல்லி பலமாக சிரித்துக்கொள்வான் நரேன்.

பன்னிரெண்டாம் வகுப்பு பரிட்சைக்கு முன்னர் மாதிரி பரிட்சைக்காக பள்ளிக்குச் சென்றபோது புத்தனை சந்தித்தேன். ஸ்டடி லீவில் ரொம்பவும் இளைத்திருந்தான்.

`என்னடா விழுந்து விழுந்து படிக்கிறயா?`

புத்தன் எதுவும் சொல்லவில்லை.

`ஏண்டா மூஞ்சிய தூக்கிவெச்சிருக்கே? வீட்ல சண்டையா?`

`ஒண்ணுமில்லை`, எனச் சொன்னாலும் புத்தன் மிகப் பெரிய வேதனையில் இருப்பது புரிந்தது. தூரத்தில் பள்ளிக்கூட மைதானத்தில் நடந்த பி.டி உடற்பயிற்சிகளை பார்த்துக்கொண்டிருந்தான்.

`அப்பா பிஸினஸில் கஷ்டம். அவர் தொட்டதெல்லாம் துடைச்சுகிட்டு போகுது..`

`ஐயோ பாவமே!`

`பாவம் சின்ன அம்மாவால முடிஞ்சது சாமியார் கிட்ட கூட்டிகிட்டு போறாங்க..`

நரேன் அப்பாவுக்கு ரெண்டு மனைவிகள் எனச் சொல்லியிருந்தான். நரேனின் வீட்டு ஹால் முழுவதும் சாமியார் படங்கள் வரிசையாக மாட்டப்பட்டிருக்கும் எனச் சொல்லியிருக்கிறான்.

`சின்னம்மா தினமும் பூஜை நடத்தறாங்க… சின்னம்மாவுக்குத் தெரிஞ்ச சாமியார் ஒருத்தர் ஒவ்வொரு வியாழக்கிழமையும் வந்து ரொம்ப நேரம் ஏதேதோ செய்யறார்`, என அலுத்துக்கொண்டான்.

`என்னடா இந்த காலத்துல போயி சாமியார் அது இதுன்னு..எத்தனை ஏமாத்துக்காரங்க பார்க்கிறோம்`, என அருண் சலித்துக்கொண்டான்.

`அதில்லடா..என்னோட சின்ன அம்மா வந்ததும் குடும்பத்தில் சுபிட்சம் அதிகமாச்சுன்னு அப்பா சொல்லியிருக்கார். நான் அஞ்சு வயது வரைக்கும் பேசாமல் இருந்தவன். யார் கூப்பிடுவதும் காதில் விழாது. வீட்டுக்கதவு திறந்திருந்தால் வாசல் வழி தெருவுக்குள் ஓடிடுவேன். ரயில் பிடிக்கப்போவது போல வேகவேகமாக திரும்பிப் பார்க்காமல் நடந்து செல்வேனாம். சின்ன அம்மா வந்ததும் வீட்டில் இருப்பதற்கு கொஞ்சம் செளரியம் ஆனது என அப்பா சொல்லுவார்`

`புத்தன்னு உனக்கு பேரு வெச்சது சரிதாண்டா`, எனச் சொன்னதும் ஜோக்கைக் கேட்டது போல கொஞ்சமாகச் சிரித்தான்.

அவனது சொந்த அம்மாவை ஒரு முறை மார்க்கெட்டில் பார்த்திருக்கிறேன். கழுத்தில் சங்கிலி, கையில் வளை என ஏதும் இல்லை. அவனது அம்மாவுக்குப் பிடிக்கவில்லையா இல்லை சின்ன அம்மா எடுத்துகிட்டாங்களான்னு நரேனிடம் கேட்க வேண்டும் என நினைத்து அவன் தப்பாக எடுத்துக்கொள்வானோ எனக் கேட்காமல் விட்டிருந்தேன்.

`விடுடா..பரிட்சைல கவனத்தை வையி..சங்கர் சார் டியூஷனில் நாளான்னிக்கு ஒரு மாடல் எக்ஸாம் இருக்கு..வந்திடுவல்ல?`, அவனை எப்படியேனும் உற்சாகப்படுத்த வேண்டிய பொறுப்பு எனக்கு இருப்பது போலத் தோன்றியது.

மூன்று மாத விடுமுறை முடிந்து பன்னிரெண்டாம் வகுப்பு ரிசல்டுக்காகக் காத்திருந்த ஒரு நாள் நானும் அருணும் நரேனைப் பார்க்க அவன் வீடிருந்த வாய்க்கால் வீதிக்கு சென்றிருந்தோம். இத்தனை வருடங்களில் நான் வாய்க்கால் வீதிக்கு ஒரு முறை கூடப் போனதில்லை. கழிவு அகற்றுவதற்கு அகலமாக வெட்டப்பட்ட கால்வாய் பிளாஸ்டிக் பொருட்களால் அடைத்துக்கிடந்தது. நரேனின் அப்பா மில் ஓனர் எனச் சொல்லியிருந்தான். மில் அடையாளத்தைச் சொல்லி அவனது வீட்டைச் சுலபமாகக் கண்டுபிடித்துவிட்டோம்.
வீட்டுக்குள் ஆறேழு நபர்கள் இருந்திருப்பார்கள். நாங்கள் வந்தது கண்டு நரேன் அப்பாவுக்கு குழப்பம்.
`என்னப்பா எதாவது பிரச்சனையா?`, எனக்கேட்டார்.

`இல்லைங்க அங்கிள். நரேனைப் பார்த்து ரெண்டு மாசம் ஆச்சு..அதான்..`, என்றேன்.

நரேனின் நண்பர்கள் என்றதும் உள் அறையிலிருந்து அவனது முகச் சாயல் கொண்ட சின்ன பெண்கள் இருவர் எட்டிப்பார்த்தனர். எண்ணெய் வைக்காத தலை. சீப்பைப் பார்த்து பல நாட்கள் ஆகியிருக்கும் போலிருந்தது. ஹால் ஓரத்தில் கீரை ஆய்ந்துகொண்டிருந்தவர், `அவன் மாடிலதான் இருப்பான்…`, என்றார். `எப்பவும் வெளியேதானடி கிடப்பான்..உம் பிள்ளையாச்சே..விட்டுக்கொடுப்பியா `, எனச் சொன்னபடி எங்களை மாடிக்கு அழைத்துச் சென்றார். நரேனின் சொந்த அம்மா ஹாலில் உட்கார்ந்திருந்தார்கள். முன்னர் மார்க்கெட்டில் பார்த்த அதே பார்வை.

குறுகலான மாடிப்படிக்கட்டில் மூவரும் ஏறி மாடியறைக் கதவை அடைந்தோம். மேல் படியில் கிழிந்த பாய், ஒரு பானை என ஓரமாக இருந்தது. சாத்தியிருந்த கதவை பட்டெனத் திறந்து நரேன் எனக் கூப்பிட்டபடி உள்ளே சென்ற எங்களுக்கு அதிர்ச்சி.

`அப்பா`, என எழுந்து நின்றவனின் கைலி முழுவதுமாய் தொடை வரை இறங்கியிருந்தது. மேல் சட்டையும் இல்லை. எங்களைப் பார்த்து மிரண்டவன் கைலியைத் தூக்கி மறைத்துக்கட்டுவதற்கு சிரமப்பட்டான். எத்தனை முயன்றும் கைலியின் புடைப்பை அவனால் மறைக்க முடியவில்லை.

அவனை அந்த கோலத்தில் பார்த்த அதிர்ச்சி மீள்வதற்குள் நரேனுக்கு பலத்த அடி விழுத்தொடங்கியது.
`நாயே, எச்சகல நாயே..இதுக்காகவாடா உனக்கு தனி ரூமு கட்டிக்கொடுத்தேன்?`

நொடிப் பொழுதில் தரதரவென படிக்கெட்டில் அவனை இழுத்துக்கொண்டு ஹாலுக்குள் நுழைந்துவிட்டார் அவனது அப்பா. அவருக்கு பின்னாலேயே படியில் உதைத்துத் தெறித்த பானை உருண்டு உடைந்தது. என்ன செய்வதெனத் தெரியாமல் நாங்கள் அவர்களைத் தொடர்ந்து கீழே இறங்கினோம்.

`கம்மனாட்டி நாயே..எருமை மாதிரி வளர்ந்திருக்கியே..வீட்டில ரெண்டு பொட்டை புள்ளைங்களை வெச்சிகிட்டு செய்யற வேலையாடா இது..தறுதலை ராஸ்கல்`

நரேனின் அப்பா கண்ணு மண்ணு தெரியாமல் அடித்துக்கொண்டிருந்தார். திபு திபுவென வளர்ந்த நரேன் அடி வாங்குவதை இரு பெண்களும் பயத்தோடு பார்த்து நின்றனர்.

`வேண்டாம்பா அடிக்காதீங்க, அடிக்காதீங்க..விடுங்க`, என ஒரு கட்டத்தில் அவரது கையைத் தள்ளி விடத்தொடங்கினான் நரேன்.

நரேனின் அப்பாவுக்கு இது ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்க வேண்டும். பயத்தோடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கு ஹாலில் உட்கார்ந்திருந்த நரேன் அம்மாவின் செய்கை தான் மிகுந்த ஆச்சர்யத்தைத் தந்தது. தன் பிள்ளை அடிவாங்குவதைத் தடுக்க இயலாமல் இருக்கும் தாயைப்போல அவள் இல்லை. அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்பதுபோல அவள் உட்கார்ந்திருந்ததுதான் எங்கள் வேதனையை அதிகப்படுத்தியது.

என் கண்கள் அவனது சின்ன அம்மாவைத் தேடின. அவர் வலது பக்கம் இருந்த அறையில் இருந்தது இங்கிருந்து தெரிந்தது என்றாலும் ஹாலில் வந்த சத்தத்தை உணர்ந்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை. நரேன் விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தான். அவனது லுங்கி அவிழத் தொடங்கிய நிலைமையின் தீவிரத்தை இன்னும் முழுவதாக உணர்ந்ததாகத் தெரியவில்லை.

நாங்கள் என்ன செய்வது எனத் தெரியாமல் நின்றிருந்தோம். சொல்லிக்கொள்ளாமல் நழுவி ஹாலுக்கு வெளியே வந்து நின்றோம். உள்ளே நரேனின் அழுகை ஒலி சீராகக் கேட்டபடி இருந்தது. வாசல் கேட்டுக்கு வந்தபின்னும் அவனது அப்பா வசவு வார்த்தைகளால் அர்ச்சனை செய்துகொண்டிருந்தது கேட்டது.

அதன் பிறகு நரேனை வெளியில் அதிகமாகப் பார்க்கவில்லை. பல தடவை நான் படித்த கல்லூரிக்கு வெளியே நின்று பேசியிருக்கிறோம். அப்போதெல்லாம் வீட்டில் நடந்த சம்பவம் பற்றி பேசுவதைத் தவிர்த்தோம். வேறு என்ன பேசுவது என்றும் தெரியாது. அவனது அப்பாவை ஆத்திரத்தோடு வெறுக்கத் தொடங்கியிருந்தான்.
பள்ளி முடித்தபின்னும், ரெண்டு வருடங்களுக்குப் பிறகு தான் அவனால் கல்லூரியில் சேர முடிந்தது. குடும்பத்தில் சிக்கல் என மில்லில் உட்கார்ந்திருந்தான். சில நாட்களில் அங்கிருந்தும் வெளியே வந்துவிட்டான்.

பின்னர், ஆர்ட்ஸ் காலேஜில் படித்துக்கொண்டிருந்த அவனோடு எனக்கு சுத்தமாக தொடர்பு அறுந்திருந்த நாட்கள். வழியில் சந்தித்தாலும் பொதுவாக குசல விசாரிப்புகளைத் தாண்டி சொற்களை பொறுக்கி எடுத்துப் பேசத் தெரியாது நின்றிருப்போம். வேலை விஷயமாக நான் வெளியூருக்கு அடிக்கடி போன பின்னர் தொடர்பு மொத்தமாக முடிவுக்கு வந்திருந்தது.

திருமண நாள் புத்தனின் கண்களில் ஏதோ ஒரு வருத்தம் மிச்சம் இருந்தது போலிருந்தது. அவனது கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

`ஏண்டா, பொண்டாட்டி ஊரில இல்லைன்னா ஃபோட்டோவைக் கூட துடைச்சி வெக்க மாட்டியா?` என அவனை திரும்பிப் பார்த்தேன்.

புத்தன் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தான். எங்கள் கடைசி சந்திப்பை நினைத்து யோசனையில் இருக்கிறான் என நினைத்தேன். தூரத்தில் ஒரு சிமெண்ட் லாரி. சிமெண்டு கெட்டிப்போய்விடக்கூடாது என்பதற்காக மெல்ல மிக்ஸர் சுழண்டு கொண்டிருந்தது.

`அப்புறம் அப்பாவுக்கு என்ன உடம்புக்கு?`

`என்ன? வயசுதான்..சும்மாவா சின்ன வயசில ஆடியிருக்காரு..ஹே..மில்லெல்லாம் போச்சு..அப்படியே படுத்தவர்தான்`, எனச் சிரித்தவன் முகம் தீவிரமடைந்தது..

`ஆரம்பத்துல என்னைப் பத்தி ரொம்ப மோசமா நினைச்சிருந்தார். அன்னிக்கு நடு ராத்திரி வரை அவரோட கை ஓயவேயில்லை. அடுத்த ரெண்டு நாள்ல சாப்பிடாம தூங்காம அவரையே ரொம்ப வருத்திக்க ஆரம்பிச்சிட்டார். நெனைச்சுப் பார்க்க முடியாத அசிங்கம் எனக்கு. அக்கம் பக்கத்துவீடுகள்ல எல்லாம் விஷயம் பரவியாச்சு. அடுத்த நாள் ராத்திரி எல்லாரும் தூங்கின அப்புறம் காசு கொஞ்சம் எடுத்துகிட்டு அம்மாகிட்ட சொல்லிட்டு திருவண்ணாமலைல எங்க மாமா வீட்டுக்குப் போயிட்டேன்.`

`சரி..விடுடா..எதுக்கு பழசையெல்லாம் பேசி சங்கடப்பட்டுகிட்டு`, முன்னிருந்ததை விடத் தீவிரமாக அதைப் பற்றி பேசக்கூடாது என்றிருந்தேன்.

`இல்ல ராஜேஷா, அது இப்ப ஒரு சங்கடமான நினைவா இல்லை ஏன்னா அதுக்கு அப்புறம் அவர் என்கிட்ட நெருங்கி வரத்தொடங்கிட்டார். அவர் அந்தளவுக்கு ரியாக்ட் செய்ததிருக்கத் தேவையில்லைன்னு ரொம்ப நாள் சொல்லிகிட்டே இருந்தார். மனுஷனுக்கு ஒரு நொடில வர்ற முடிவு இருக்கே அது ரொம்ப உண்மையானது..ஆனா நிதானமா யோசிக்கைல எதன் மீதாவது அந்த பழியைப் போடும் வேகம் வந்திடுது..நம்ம பலமும் பலகீனமும் அதுதான்..என்னோட அந்த செயலை நினைக்கும்போதெல்லாம் அவருக்கும் சின்ன அம்மாவுக்கும் உறவு நினைப்பு வந்து தொந்திரவு செய்யும்னு புலம்பியிருக்கார். எப்படியோ அந்த உறவும் போச்சு..ம்..மூணு வருஷம் அவர் ஒவ்வொரு நாழிகையா அடங்கிட்டே வருவதைப் பார்த்தேன்..ஒரு விதத்தில், அவரும் நானும் ரொம்ப நிம்மதியா இருந்த நாட்கள்.`சொல்லும்போதே அவனது கண்களில் ஒரு பெருமிதம் தோன்றியது.

`அப்புறம் அப்பா கோபம் எப்படிடா சரியாச்சு?`

`நான் மாமா வீட்டில இருந்தபோது ஒவ்வொரு நொடியும் அப்பா மேல வெறுப்பு அதிகமாகிட்டே இருந்தது. அவருக்கும் என் மேல இருக்கிற கோபம் அடங்கவேயில்லைனு தோணியது. ரொம்ப மனக்கொந்தளிப்பான நாட்கள். எனக்குள்ளேயே என்னோட செயலுக்கு சால்ஜாப்புகளும் வசவுகளும் மாறி மாறி கொடுத்துக்கொண்ட நாட்கள். பொங்கி மாமா வழியா கொஞ்சம் கொஞ்சமா வீட்டு விஷயங்கள் வரத்தொடங்கின. சின்ன அம்மாவை அப்பா வீட்டை விட்டுத் துரத்திவிட்டுட்டார் எனக் கேள்விப்பட்டதும் ஒரு முறை வீட்டுக்கு கிளம்பி வர பஸ் ஸ்டாண்டு வரை வந்துட்டேன்..தயக்கத்துல கொஞ்ச நேரம் சுத்திட்டு திருவண்ணாமலைக்கே திரும்பப் போயிட்டேன்..`

அவன் திருவண்ணாமலையில் இருந்த நாட்களில் அவனது வீட்டு விபரங்கள் கல்லூரியில் என்னுடன் படித்த அதே தெரு பையன் வழியாக என்னை வந்து சேர்ந்திருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது குடும்பம் உள் சுருங்கத் தொடங்கியது. சாமியார், பூஜையெல்லாம் நின்றுபோய் அவனது அப்பா குற்ற உணர்ச்சியில் தனியராக ஆகியிருந்தார். திடீரெனக் காணாமல் போய்விட்டு நாள்சென்று வருவார். மேலும் மேலும் அவருக்குள் பல புது அறைகள் திறக்கப்பட்டு உள்ளுக்குள் ஒடுங்கத்தொடங்கியிருந்தார்.

`எனக்கு உள்ளிருந்து ஏதோ ஒண்ணு அரிக்கத் தொடங்கியது..திருவண்ணாமலைக்குள்ளே அங்குமிங்கும் ஓடினேன்..நரகத்தில இருந்தாமாதிரி ஓட்டம்..எதையும் முழுசா செய்ய முடியலை. நேரடியா வீட்டுக்கு வரவும் ஏதோ ஒண்ணு தடுத்தது..நீங்கள்ளாம் கிண்டலா சொல்றது மாதிரி அங்கிருந்தும் ஓட்டம் எடுத்தேன்.. ஒரு எடத்துல நிலையா இருக்க முடியாதோன்னு பயம்..ஒரிசாவில் வேலை கிடைத்ததும் அங்கே ஒளிஞ்சுகிட்டேன்..`

தப்பித்தல் என்பதே ஒன்றிலிருந்து மற்றொன்றை நோக்கி ஓடுவதுதான் என்பதால் அவனது கதையைக் கேட்கும்போது பெயர்தெரியாத அவனது பிள்ளைகளை நினைத்து வருத்தமாக இருந்தது. ஆனாலும், எனக்குள் ரொம்ப நாட்களாக பொங்கிக் கொண்டிருந்த கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லை.

`அன்னிக்கு நாங்க வீட்டுக்கு வந்தபோது உன்னோட அம்மா ஒண்ணுமே சொல்லலியே..அப்புறமாச்சும் எதாச்சும் செஞ்சாங்களா?`

`அவங்க என்ன செய்வாங்க? நாம தான் என்னவோ பெண்மை, பூமி மாதாங்கறோம். சின்ன அம்மா வீட்டைவிட்டுப் போனபிறகு அம்மா ரொம்ப சந்தோஷமா ஆகிட்டாங்க..தெம்பா நடமாடத்தொடங்கி நாலு வருஷம் முன்னாடி தூக்கத்தில போய் சேர்ந்துட்டாங்க`, என்றான் புத்தன்.

எனக்கு செங்குத்தான மேம்பாலத்தை ஏறி இறங்கியது போல பாரமாக இருந்தாலும் புத்தனின் ஓட்டம் தற்காலிக முடிவுக்கு வந்ததே என ஆறுதலாகவும் இருந்தது.

முந்தைய கட்டுரைஅப்பாவின் குரல் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைநாம் புரிந்துகொள்கிறோமா?