3. கடலாழம் – கிறிஸ்டோபர்

மீண்டும் புதியவர்களின் கதைகள்தைமாசி சீசன். கடலில் அலை அதிகமில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் ஆறுபோல் கிடந்தது. இன்று காலை பத்து மணிவரை தாக்குப் பிடிக்கவேண்டும். பத்துமணி என்பது ஒரு நம்பிக்கை. இன்னும் இரண்டு மூன்று மணி நேரம். நான் அவர்கள் மூவரையும் பார்ப்பதையே தவிர்த்திருந்தேன். அனைவரின் கண்களும் கலங்கியிருந்தன.

பிளைவுட் எனக்குச் சொந்தமானது. மொத்தம் மூன்று லட்சம் செலவானது. சுசுகி 9.9 ஹார்ஸ்பவர் வெளிப்பொருத்து என்ஜின். எஞ்சின் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. மீனவர் சங்கத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருக்க வேண்டும். மாதாமாதம் மிகக் குறைவான எண்ணிக்கையில் சிறிது சப்சிடியுடனான எஞ்சினை அரசாங்கம் மீனவர் சங்கம் வழியாக வினியோகிக்கும். நான் வாங்கும்போது நாற்பதாயிரம். அதன் உண்மையான தொகை இதைவிட அதிகம். நாம் நினைத்த நேரத்தில் என்ஜின் வேண்டுமென்றால் வெளிமார்க்கெட்டில்தான் வாங்கவேண்டும். அதன் உண்மையான தொகையைவிடவும் அதிகமாகக் கொடுத்து. அவ்வாறு வாங்கினால் குறைந்தவிலை மண்ணெண்ணெய் கிடைக்காது. எனவே யாரும் வெளிமார்க்கெட்டில் வாங்குவதில்லை.

பிளைவுட்டும் என்ஜினும் வாங்குவதற்கான மொத்த பணமும் நான் கடன் வாங்கியது. இரண்டு ரூபாய் வட்டிக்கு. பாதியளவிற்கு கடன் தீர்த்துவிட்டேன். பிளைவுட் வாங்க கண்ணனாகம் ஸ்டேட் பேங்கில் லோன் கிடைக்குமா என்று அப்பா விசாரிக்கச்சென்றிருந்தார். ஆனால் மீனவர்களுக்கு பிளைவுட்/விசைப்படகு வாங்க எந்த வங்கியும் லோன் கொடுப்பதில்லை என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார்கள். திருப்பிக் கட்டமாட்டார்கள் என்ற பயம். ஆனால் அப்பா பல வருடங்களுக்கு முன்பு பத்தாயிரம் ரூபாய் வலை லோன் எடுத்து அதை முழுவதும் திருப்பி கட்டியிருக்கின்றார். அந்த அக்கவுண்டு புத்தகத்தை காட்டியபிறகும் லோன் கிடைக்காதென்று மறுத்துவிட்டார்கள். அப்பாவிற்கு லோன் கிடைத்தபோது ஆயிரம் ரூபாய் பிடித்தம் போக ஒன்பதாயிரம் ரூபாய்தான் கொடுத்தார்கள். அப்பா அந்த காசில் வலை வாங்கவில்லை. அண்ணனின் மேற்படிப்பிற்கு செலவிட்டார். அண்ணா இப்போது பாம்பேயில் சிறு வேலையிலிருக்கின்றார். அவருக்குக்கிடைக்கும் வரதட்சிணையில்தான் தங்கையை திருமணம் செய்து கொடுக்கவேண்டும்.

நேற்று மதியம் எங்கள் பிளைவுட் கரையில் அணைந்தபோது நானே டெக்கைத் திறந்து மீன்கள் உலராமலிருப்பதற்காக ஊற்றி வைத்த தண்ணீரை வாரி வெளியில் இறைத்து துணியால் துடைத்தெடுத்தேன். பிளைவுட்டின் அடிப்பகுதியில் ஏதேனும் லீக் இருந்தால் தண்ணீரின் அளவை வைத்தே கண்டுபிடுத்துவிடுவேன். அதுபோல் என்ஜினை வீட்டில் கொண்டுவந்தபிறகு ப்ளக்கை மாற்றி சுத்தம் செய்துவிட்டு கிணற்றுத்தண்ணீர் நிரப்பிய மண்ணெண்ணை பேரலில் என்ஜினை இணைத்து அதன் மூடியை கழற்றி அரைமணி நேரம் ஓடவிடுவேன். என்ஜினின் சத்தத்தை வைத்தே அதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் கணித்து விடுவேன். சிறிய பிரச்சனையை நானே சரிசெய்வேன். முடியாவிட்டால் விழிஞ்சம் ஒர்க் ஷாப்பிர்க்கு கொண்டுசெல்வேன். தினமும் என்ஜினின் உட்பகுதியை மண்ணெண்ணையாலும் வெளிப்பகுதியை குடிதண்ணீராலும் கழுவி சுத்தம் செய்து வைப்பேன்.

நாங்கள் இன்று அதிகாலை நான்கு மணிக்கே மீன்பிடிக்கக் கிளம்பிவிட்டோம். எஞ்சின் ஓட்டுவது நான்தான். எங்கே செல்லவேண்டுமென்று முடிவெடுப்பதும் நான்தான். கடலில் சில இடங்களில் மீன்கள் இனப்பெருக்கம் செய்து வளர்வதற்கு ஏதுவாக சில பாறைகள் அடியாழத்தில் இருக்கும். அது போன்ற இடங்களுக்கு நாங்கள் பெயர் வைத்திருப்போம். முக்கியமாக மஞ்சப்பாரு, தம்பான்கெட்டு, பரலுப்பாரு, மோதப்பாரு. இதுபோல் பலதுண்டு. [தம்பான், பரலு, மோதை என்பவை மீன்வகைகள்] இந்த இடங்களை அடையாளம் கண்டுபிடிப்பது ஆழம் மற்றும் வெள்ளி அடையாளம் வைத்து. வெள்ளி அடையாளம் வைத்துச்செல்லும்போது வருடத்தில் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் இரண்டு மூன்று வாரங்கள் மட்டுமே சரியான இடத்திற்குச்செல்லமுடியும். அதன் பிறகு வெள்ளி அடையாளம் மாறிவிடும். அடுத்த வருடம்வரை காத்திருக்கவேண்டும். வெள்ளி அடையாளங்களை எனக்குச்சொல்லிக்கொடுத்தது அப்பாதான். ஆனால் நாங்கள் இப்போது இந்த இடங்களைத் தாண்டி நீண்ட தொலைவில் வந்தாகிவிட்டது.

அப்பா விசைப்படகில் வந்ததில்லை. கட்டுமரம்தான். என்னையும் அண்ணனையும் படிக்கவைக்க வேண்டுமென்பதில் கவனமாக இருந்தார். நான் எப்படியோ தப்பி வந்துவிட்டேன். அண்ணாவை ஒரு நாள் அவராகவே மீன்பிடிக்க கொண்டுசென்றுவிட்டு ஆழ்கடல் வந்ததும் துளவாயை ஒளித்து வைத்துவிட்டு அது கைநழுவிச்சென்றதாக பொய்சொல்லி கரைக்கு திரும்பமுடியாதென்று பயம் காட்டியிருக்கின்றார். அன்று அண்ணா கடலிலிருந்து பயந்து ஓடியவர்தான். இப்போது அவர் கடலுக்குள் சென்றால் வாந்தி மயக்கம்தான். அப்பா இறந்து இரண்டுவருடமாகின்றது.

“லேய் மத்தியாஸ், என்ன ஒத்தத்தூண்ட போடுவோமா?” – பத்றோஸ் சத்தமிட்டார்.

சூரியன் கடலிலிருந்து உதித்து மேலெழும்பிக்கொண்டிருந்தது. கரை கண்ணில் படவில்லை. மீனவர்களுக்கு கண்பார்வை சற்று அதிகம். நான் இப்போதுதான் கவனித்தேன் சூரியன் சற்று அதிர்ந்துகொண்டிருந்தது. இதை நான் சிறுவயதில் கவனித்திருக்கின்றேன். எங்கள் வீட்டுக் கூரை நிழல் திண்ணையில் விழும் அளவை வைத்துத்தான் நான் நேரம் கணித்து பள்ளிக்குச்செல்வது. திண்ணையில் ஒன்பது மணிக்கு அடையாளமாக ஒரு கோடு ஒன்றை ஆணியால் வரைந்திருப்பேன். அவ்வாறு திண்ணையில் அந்தக் கோடு அடையாளத்தில் நெருங்கிவரும் நிழலை கூர்ந்து பார்த்தால் நிழல் சூரிய ஒளியில் இணையும் பகுதி மென்மையாக அதிரும்.

படகு சூரியனிலிருந்து விலகிச் சென்றுகொண்டிருந்தது.

“போடுமி. எர அறுத்தாச்சா?” – நான் மறுகுரல் கொடுத்தேன் கண்ணைக்கசக்கிக்கொண்டு.

படகிலிருந்த எங்கள் நான்கு பேரில் மூத்தவர் பத்றோஸ். அவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகளுண்டு. பெரிய விசைப்படகில்தான் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுகொண்டிருந்தார். இருபது முப்பது நாட்கள் தொடர்ந்து ஆழ்கடலில் தங்கி சுறா, கேரைச்சூரை, நெய்மீன் போன்ற பெரிய மீன்கள் பிடிப்பது வழக்கம். அவரது உயரம் ஆறடியை விட அதிகம். உடல் திண்ணென்றிருக்கும். கறுத்த தேகம். வயிற்றில் வரை வரையாக இருக்கும். அதிகமும் சுறா பிடிப்பது கையால்தான்.

அதெற்கென்று “மட்டு” என்ற மீன்பிடி சாதனத்தை பயன்படுத்துவார்கள். இரண்டு மீட்டர் நீளமுள்ள நைலான் கயிற்றுத்துண்டுகளின் ஒருமுனையில் மிகப்பெரிய 15/0 அளவு அல்லது அதைவிட பெரிய தூண்டிலை இணைத்து மறுமுனையை பத்து பதினைந்து கிலோமீட்டர் நீளமுள்ள குட்டிவிரல் அளவு தடிமனுள்ள நைலான் கயிற்றில் நான்கு அல்லது ஐந்து மீட்டர் இடைவெளியில் தோரணம் போல் கட்டித் தொங்கவிடுவார்கள். நீண்ட நைலான் கயிற்றின் இடையிடையே பிடிக்கப்படும் மீனை கருத்தில்கொண்டு விதவிதமான எடைகொண்ட இரும்புத் துண்டுகளை கட்டியிருப்பார்கள். அனைத்து தூண்டிலிலும் சிறிய இரையை கொளுவி மொத்த தூண்டில்களையும் நீளமாக, விசைப்படகை மெதுவாக நகர்த்தி, கடலில் இறக்குவார்கள். நீண்ட நைலான் கயிற்றின் ஒருமுனை விசைப்படகிலிருக்கும். மறுமுனையில் ஒரு பெரிய மிதப்பானை கட்டியிருப்பார்கள். அது பத்துப் பதினைந்து கிலோமீட்டருக்கு அந்தப்பக்கம் அனாதையாக மிதந்துகொண்டிருக்கும்.

மறுநாள் கையால் “மட்டை” ஐந்தாறுபேர் சேர்ந்து இழுப்பார்கள். படகில் பத்திற்கும் அதிகமானபேர் இருப்பார்கள். விசைப்படகும் மெதுவாக ஓடி ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். அதிர்ஷ்டத்தைப் பொறுத்து அதிகமாகவோ குறைவாகவோ மீன்கள் தூண்டில்களில் சிக்கியிருக்கும். சுறாபோன்ற பெரிய மீன்களை அடித்துக் கொல்வதற்கு குறுந்தடியும், கொழுவி எடுப்பதற்கு கொக்கியும் உண்டு. சுறாவை தூக்கி மேலே கொண்டுவரும்போது அதன் தலையில் குறுந்தடியால் அடித்து அதன் இறப்பை உறுதி செய்துவிட்டு அதன் கழுத்துப்பகுதியில் கொழுவி, அதன் வால்பகுதியை இன்னொரு சுருக்குக்கயிற்றால் கட்டி அதை குறுக்காக விசைப்படகினுள் தூக்கிப்போடவேண்டும். மீன்களை போட்டுவைக்க விசைப்படகில் பெரிய ஐஸ் ரூம் உண்டு. விசைப்படகின் மப்ளரில் வலை அல்லது மட்டு அகப்பட்டால் பத்றோஸ்தான் கடலில் குதித்து அதை மப்ளரிலிருந்து அறுத்து விடுவார்.

விசைப்படகில் மீன்பிடிப்பதன் முக்கிய பிரச்சனையே இரவு நேரத்தில் அவ்வழியாகச்செல்லும் கப்பல்கள் விசைப்படகு மீது மோதிவிடும் அபாயம்தான். எனவே பொதுவாக அவ்வழியாகக் கப்பல்கள் கடக்கும் நேரத்தை ஓரளவிற்கு கணித்து வைத்திருப்பார்கள்.

பத்றோஸ் ஒரு நாள் ஒரு பெரிய சுறாவை மற்றவர்களுடன் சேர்ந்து தூக்கியபோது மயங்கி விழுத்திருக்கின்றார். அவரை கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்த இன்னொரு விசைப்படகை ஒயர்லெஸ் வாயிலாக கண்டுபிடித்து கரைக்கு அனுப்பியிருக்கின்றார்கள். ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றபோது அவருக்கு வந்திருப்பது ஒருவித வாதநோய். அளவுக்கதிகமாக சோகமாகவோ அல்லது சந்தோசமாகவோ இருக்கும்போது உடல் முழுவதும் வியர்த்து கைகால் தூக்க முடியாமல் மயங்கி விழுந்துவிடுவார். இதை சரிசெய்ய முடியாது. இதை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமென்றால் தியானம் செய்ய வேண்டும்.

எனவே எங்கள் ஊர் பங்குத் தந்தையின் சிபாரிசின் பேரில் கொச்சிக்குப் பக்கத்திலுள்ள சாலக்குடியில் பல மாதங்கள் தியானம் செய்துவிட்டு கடந்த வாரம்தான் எனது படகில் மீன்பிடிக்க வந்தார். வாதநோய் கட்டுப்பாட்டிலிருந்தது. எங்கள் படகின் வசதி என்னவென்றால் காலையில் மீன்பிடிக்கச்சென்றுவிட்டு மதிய நேரமே கரைக்கு திரும்பிவிடுவோம். இந்தத் தொழில்தான் அவருக்கும் வசதியாகப் பட்டது.

அவருக்கு இப்போதும் “மட்டு” போன்ற ஒன்றால் மீன்பிடிப்பதில்தான் மிகுந்த விருப்பம். ஆனால் எங்களது படகு சிறிதாகையால் நாங்கள் ஒற்றைத் தூண்டில் மட்டும் பயன்படுத்துவதுதான் வழக்கம். நீண்ட நைலான் கயிற்றில் ஒரு பெரிய தூண்டில் மட்டுமே இணைத்து அதில் சிறு மீனை இரையாக கொழுவி கடலில் தூக்கி எறிய வேண்டும். தூண்டில் பக்கத்தில் ஒரு இரும்புத்துண்டும் கட்டப்பட்டிருக்கும். மறுமுனையை படகின் குறுக்குப்படியில் கட்டிவைத்துவிட்டு நாம் போகும் திசையில் படகை ஓட்ட வேண்டும். இந்தத் தூண்டிலில் பெரிய மீன்கள்தான் சிக்கும். மீன் சிக்கியதா இல்லையா என்பது படகு ஓட்டத்தின் விசைமாற்றத்திலிருந்தே நான் தெரிந்துகொள்வேன். அதுபோல் நைலான் கயிற்றின் இழுவிசையிலிருந்தும்.

“ஆ…அறுத்தாச்சு…லேய் கிளீடா தூக்கி எறியிலே” பத்றோஸ் குரல் கொடுத்தார்.

கிளீடன் தூண்டிலை எனக்குப் படாதவாறு படகுக்குப் பின்னால் தூக்கி எறிந்தான்.

கிளீடன் எனது சிறு வயது நண்பன். எனக்கும் கிளீடனுக்கும் திருமணமாகவில்லை. ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்புவரை ஒன்றாகத்தான் படித்தோம். அதன் பிறகு கடலுக்கு வந்துவிட்டோம். கிளீடனின் அப்பாவிற்கு சொந்தமாக கரமடி உண்டு. இந்த மீன்பிடி உத்தி போர்சுக்கீசியர்களால் இந்திய கடற்கரைப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. இதை எனக்குச்சொன்னது என் அப்பாதான்.

கரமடி என்பது சுமார் ஐம்பதடி நீளத்திற்கும் இருபதடி அகலத்திற்கும் பெட்டிபோல் தலைகீழ் ‘ப’ வடிவில் பட்டு நூல் அல்லது பஞ்சு நூலால் செய்த வலையால் பின்னியிருப்பார்கள். வாய்ப்பகுதி மட்டும் திறந்திருக்கும். இதனுள் ஒரு சிறு சுருக்கும் உண்டு. மடி என்பது ஆயிரம் மனிதர்களை ஒரே நேரம் உண்ணும் திமிங்கலம். சுருக்கு அதன் தொண்டை. மடியின் உள் செல்லும் மீன்கள் சுருக்கு காரணமாக வெளியில் வரமுடியாது. மடியின் வாய் பகுதியின் இரண்டு பக்கமும் ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள சிறு நீள் வலையை இணைத்திருப்பார்கள். நீள் வலையின் இடையிடையே மிதப்பானும் சிறு கற்களும் கட்டியிருப்பார்கள். கடலில் கிடக்கும் மிதப்பான்கள் முத்து மாலைபோல் வளைந்து கிடக்கும். வலைகளின் மறுமுனையை ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள தேங்காய் நாரிலிருந்து செய்யப்பட்ட வடத்தை இணைத்திருப்பார்கள். மடியின் வாய்ப்பகுதியின் இரண்டு பக்கமும் இணைக்கப்பட்ட நீள் வலை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட வடமும் ஒரே நீளமுள்ளதாக இருக்கும். கடலில் மீன் மண்டலிடும் தூரத்திற்குத் தகுந்ததுபோல் நீள்வலை மற்றும் வடத்தின் நீளம் மாறுபடும்.

மடியை நீள் வலை மற்றும் வடத்தோடு இணைத்து அதை ஒரு பெரிய வள்ளத்தில் ஏற்றி கரையிலிருப்பவர்களிடம் வடத்தின் ஒரு முனையை கொடுத்துவிட்டு, வள்ளத்தை ஆழ்கடல் நோக்கி தண்டுவலித்துச்செல்வார்கள். இந்த வடத்தின் முனையை பதினைந்திலிருந்து இருபத்தைந்து பேர் பிடித்திருப்பார்கள். வள்ளத்தின் நடுவில் இரண்டுபேர் நின்று வடத்தை தூக்கி எறிந்துகொண்டிருப்பார்கள். வடம் தீர்ந்தபிறகு சிறு நீள் வலையை வள்ளத்திலிருந்து வெளியில் வீசிக்கொண்டிருப்பார்கள். வலையும் தீர்ந்து மடியை கடலில் போடும்போது வள்ளம் கரையிலிருந்து விலகி ஆழ்கடலில் வந்துவிட்டிருக்கும். மடியை கடலில் வீசியதும் வள்ளத்தை மீண்டும் கரை நோக்கி தண்டுவலித்து நகர்த்திக்கொண்டு வருவார்கள். வள்ளம் கரையில் அணையும்போது வடத்தின் ஒரு பகுதி மட்டுமிருக்கும். இதன் முனையையும் பதினைந்திலிருந்து இருபத்தைந்து பேர் பிடித்திருப்பார்கள்.

கரமடி பார்ப்பதற்கு பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் மிகப் பெரிய அட்டியல் அல்லது ஒற்றைக் குரிசுள்ள தங்கச்சங்கிலிபோலவும், அதை அவள் கழுத்திலிருந்து பல எறும்புகள் வரிசையாக நின்று கழுத்து நோக்கி இழுப்பது போலவுமிருக்கும். அல்லது, மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள நார் இணைக்கப் படாத மிகப்பெரிய பூமாலையை கடலிலிருந்து அதன் இரண்டு நார் பகுதியையும் கரையிலிருந்து இழுப்பதுபோல்.

கரைப்பகுதியில் இருக்கும் இரண்டு வடத்தின் முனைகளுக்கும் குறைந்தது 500மீட்டர் இடைவெளியாவது இருக்கும். அப்போதுதான் அதிகமான மீன் கிடைக்க ஏதுவாக இருக்கும். இரண்டு பக்க வடத்தையும் கரையிலிருந்து ஓரே வேகத்தில் இழுக்கவேண்டும். அது மடி கரை நோக்கி வந்துகொண்டிருப்பதிலிருந்தே தெரியும்.

கிளீடன் வடம் இழுத்திழுத்து அவனது கைகள் காய்ப்பு காய்ந்திருக்கும். மஞ்சள் நிறத்தில். கையை விரித்தால் பலகைபோலிருக்கும். வடம் முடிந்து நீள்வலை கரையில் வரத்துவங்கியதும் கிளீடன் கடலினுள் நீந்தி மடி நோக்கிச்செல்வான். அவன் மடியின் மேல்பகுதில் அது கரைசேர்வதுவரை நீந்திக்கிடந்து மடியினுள் மீன்கள் செல்கின்றதா என்று கவனமாக நீரினுள் பார்த்து கரையிலிருப்பவர்களுக்கு தன் தலையில் கட்டியிருக்கும் துவர்த்துத்துண்டை எடுத்து கையால் ஆட்டி சைகை செய்வான். இவன் சைகையின் பொருளறிந்து சிலர் இரண்டு நீள்வலைகளுக்கும் இடையில் கடலில் குதித்து சத்தமாக இரண்டு கைகளாலும் பேய்பிடித்தவர்கள்போல் “ஓம்…ஓம்” என்று அசுரத்தனமாக கடலை அறைவார்கள். இந்த சத்தம் கேட்டு மடியினுள் செல்லாமல் தயங்கி நிற்கும் மீன்கள் மடியினுள் செல்லும். உள் சென்றால் உட்பகுதியிலிருக்கும் சுருக்கு காரணமாக மீன்களுக்கு வெளிவரமுடியாது. மடியில் ஏதேனும் பிரச்சனை என்றால் கிளீடனே மடியின் வெளிப்பக்கத்தில் குளித்துச்சென்று அதை சரிசெய்வான். தவறுதலாக மடியினுள் அகப்பட்டு வெளிவர முடியாமல் இறந்தவர்களுமுண்டு. நான் அவனோடு செல்ல முயன்றால் கூட மறுத்துவிடுவான். எனக்கு ஏதாவது விபரீதம் நடக்குமோ என்று அவனுக்கு பயம்.

இப்போது மென்மையான கரைக்காற்று வீசிக்கொண்டிருந்தது. படகு எதிர்கொண்ட சிறு அலைகளை கிழித்துக்கொண்டு சீறிப்பாய்ந்துகொண்டிருந்தது. நேரம் செல்லச்செல்ல படகின் ஓட்டம் தடைபட்டது. கிளீடன் வந்து தூண்டில் கயிற்றை தொட்டுப்பார்த்தான். மீன் அகப்பட்டதன் அறிகுறியில்லை. நான் எஞ்சினை பயத்தில் நிறுத்திவிட்டேன்.

ஸ்டெபின் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தான். ஸ்டெபினிற்கு பதினைந்து வயதிருக்கும். மஞ்சள் நிறம். கடலுக்கு வந்த பிறகு நிறம் மங்கியிருத்தது. நெற்றியில் சிறு தழும்புண்டு. இரண்டு மூத்த சகோதரிகள். வீட்டில் ஒரே பையன். இவனது வருவாயில்தான் அவர்களிருவருக்கும் சீட்டு பிடித்து திருமணம் நடத்த வேண்டும்.

பத்றோஸ் “எனக்க ஏசுவே” என்றலறிக்கொண்டு படகின் இரண்டு பக்கமும் எட்டி எட்டிப் பார்த்தார். அவருக்கு பிடிகிடைத்தது. டெக்கைத்திறந்து பார்த்தபோது நீர் முழுக்க நிரம்பியிருந்தது.

“கிளீடா இது தப்பாது பாத்துக்கோ. வெள்ளம் மொத்தமும் முங்கியாச்சு.” பத்றோஸின் தொண்டையடைத்தது. எனக்கு கைகால் ஓடவில்லை.

கிளீடன் குறுக்குப்படியில் கட்டியிருந்த தூண்டில் கயிறை அவிழ்த்து கடலில் எறிந்து விட்டு ஸ்டெபினின் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தான்.

“ஸ்பீடக் கூட்டி கரயப்பாத்து ஓட்டு.” பத்றோஸ் சத்தமிட்டார்.

சிறிது தூரம் ஓட்டினேன்.

“ஓய், வள்ளம் இனியும் ஓடாது. வள்ளத்த மறிச்சிலாமா?” என்றேன்.

படகை மறித்துவிட்டால் அதன்மேல் அனைவரும் உட்கார்ந்திருக்கலாம். பத்றோஸ் என்னைத் தேடி பின்னோக்கி வந்து மண்ணெண்ணை இருந்த கன்னாசைத் திறந்து மண்ணெண்ணையை வெளியில் கொட்டினார். கிளீடனும் ஓடிவந்து டீசலிருந்த கன்னாசைத் திறந்து அதையும் வெளியில் ஊற்றினான். மண்ணெண்ணை கன்னாசை விடவும் டீசலிருந்த கன்னாஸ் சற்று சிறிது.

படகை கவிழ்த்துவதற்காக அனைவரும் ஒருபக்கம் சாய்ந்ததும்தான் தாமதம் படகு நீரினுள் மூழ்கிச்சென்றது.

அப்போதுதான் எனக்குத் தோன்றியது தண்ணீர் இருந்த கன்னாசை நான் எடுத்திருக்கலாம். அது டெக்கினுள் இருந்தது. ஆனால் அதற்கு நேரமில்லை. அனைத்தும் ஒன்றிரண்டு நிமிடங்களிலேயே நடந்து விட்டது.

படகிலிருந்து குதித்த நான் மூழ்கி மேலெழும்பியபோது ஸ்டெபின் நீந்திக்கொண்டிருந்தான். பத்றோஸிடமும் கிளீடனிடமும் மண்ணெண்ணையும் டீசலுமிருந்த கன்னாசுகள் கையிலிருந்தது. படகு தரை நோக்கி ஓடி மறைந்தது. எவ்வாறு படகின் அடிப்பகுதில் சேதம் ஏற்பட்டதென்று தெரியவில்லை. நேற்று படகை கடற்கரையில் இழுத்து மேலேற்றியபோது அடியில் பெரிய கல் ஏதாவது கிடந்திருக்கும். அது உரைந்து சேதமாகியிருக்கும். அதுதான் ஒரே காரணமாகப்பட்டது. பயத்தில் யோசிக்கமுடியவில்லை.

நாங்கள் நான்குபேரும் வட்டமாக நீந்திக் கொண்டிருந்தோம். வானம் தெளிவாக இருந்தது. கடல் தங்கம்போல் மின்னிக்கொண்டிருந்தது.

கிளீடன் என்னை கெட்டவார்த்தையால் திட்டிக்கொண்டிருந்தான்.

“லேய் பேசாதேல…உயிரு தப்புதேக்கொள்ள வளியப்பாருல” – பத்றோஸ் அவனை இடைமறித்தார்.

“பின்ன…, ஓய் கரயத்தேடி நீஞ்சலாமா?” கிளீடன் பத்றோஸைப் பார்த்துக் கேட்டான்.

எனக்கு அதுதான் சரியென்று பட்டது. ஆனால் எந்தக் கரையைத் தேடி? கரை எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. ஆனால் எங்களுக்குத் தெரியும் எங்கள் உள்ளுணர்வு கரை எங்கே என்று சொல்லிவிடும். எல்லாம் முடிந்தது. சுறாமீன் வந்து எப்போது வேண்டுமானாலும் காலைக் கடித்து இழுத்துச்செல்லலாம். எத்தனை சுறாக்களையும் அதன் குஞ்சுகளையும் கொன்றிருப்போம். என் கண்ணிலிருந்து கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டியது. என்னைக்கண்டு ஸ்டெபினும் அழுதுகொண்டிருந்தான். எவ்வளவு நேரம் நீந்துவது?

எனக்கு பல பல எண்ணங்கள் ஓடி மறைந்த ன. கட்டுமரத்தில் அப்பாவிடம் தேம்பியழும் அண்ணா, தலைவிரி கோலமாக ஒப்பாரிவைக்கும் அம்மா, அடுக்களையில் படுத்திருக்கும் தங்கை. அப்பா கரையிலிருந்து நீந்தி வந்து என்னை காப்பாறுவது போல், நாங்கள் நீந்திக்கொண்டிருக்கும் கடல் வற்றுவதுபோல், ஒரு பெரிய அலைவந்து எங்களை கரைக்கு கொண்டுசெல்வதுபோல், டால்பின் எங்களை அதன் முதுகில் ஏற்றிச்செல்வதுபோல், ஹெலிகாப்டர் வந்து காப்பாற்றுவது போல், ஏசு தண்ணீரில் நடந்து வருவதுபோல், இளநீரும் தண்ணீரும் நிரம்பிய விசைப்படகுகள் எங்களைக் காப்பாற்ற வருவதுபோல். ஏதேதோ நினைவுகள்.

கிளீடனும் பத்றோஸும் கன்னாசில் படுத்திருந்தனர். நானும் ஸ்டெபினும் நீந்திக் கொண்டிருந்தோம்.

“ஆ…நீந்துவோம். கிளீடா, நாள புதனாழ்ச்ச. காலத்த அந்த வளியாட்டு ஒண்ணுரெண்டு கப்பலு போவும். கப்பலில்லேங்கி வேற ஏதாவது வள்ளம் வரும். இந்த ரெண்டு கன்னாசையும் பிடிச்சிண்டு ரெண்டு மூணு நாளு கெடக்கலாம்” பத்றோஸ் நிதானமாகவே சொன்னார்.

அவர் கப்பலென்று சொன்னதும்தான் எனக்கு சிறிது உயிர்தப்புவேன் என்ற நம்பிக்கை வந்தது.

“ஓய், சிறாவு காலக் கடிச்சாதா?” எனது பயம் வெளிப்பட்டது. கடலில் நீந்தும்போது கால்பாதம் வெளுத்திருக்கும். அதை மீனென்று கருதி சுறா வந்து கடிக்கும். அப்படியென்றால் நான் அணிந்திருக்கும் சட்டையை கிழித்து காலில் கட்டிக்கொள்ளலாம்.

“இல்ல பிள்ள, ரெத்த வாட உண்டெங்கித்தான் வரும். இண்ணு நெலவுண்டு. நம்ம காலு வெளிச்சம் அதுக்கு தெரியாது. அதனால பேடியில்ல.” பத்றோஸ் விளக்கினார்.

பத்றோஸ் அவரிடமிருந்த கன்னாசை ஸ்டெபினிற்குக் கொடுத்துவிட்டு அவன் பக்கத்திலிருந்தார். நான் கிளீடனையே பார்த்துக்கொண்டிருந்தேன். என் பார்வையின் அர்த்தம் அவனுக்குப் புரியும்.

“இந்தால, சோறு, சோறு, வயிறா இந்தால” என்று சொல்லிவிட்டு கிளீடன் கன்னாசை என்னைப்பார்த்து தள்ளிவிட்டான். நான் பழய சோறு நிறயச்சாப்பிடுவேன். அதனால் என்வயிறும் சற்று பருத்திருக்கும். அதனால் என்னை ஒத்த வயதுடைய நண்பர்கள் என்னை சோறு அல்லது வயிறன் என்று பட்டப்பெயர் சொல்லி அழைப்பது வழக்கம்.

நான் கன்னாசில் ஏறியதும் எனது வயிறு கலங்கியது. நான் சிறிது தூரம் கன்னாசில் நீந்திச்சென்று அதிலிருந்து இறங்கி கன்னாசைப்பிடித்துக்கொண்டு கழுத்தளவு நீரில் நின்றேன். சிறிது நேரத்தில் என்னைச்சுற்றி சிறுசிறு மீன்கள். அவற்றின் தேவை முடிந்ததும் அவை ஓடி மறைந்தன. என் இடது கையை பின்னாலிருந்து எடுத்து கன்னாசில் ஏறி அவர்கள் பக்கதில் நீந்திச்சென்றேன்.

சிறு அலைகள் கன்னாசில் மோதும் “சக்..சக்…” சத்தத்தைத் தவிர நிசப்தம். எல்லையில்லாது பரந்த வெள்ளிப் பளிங்குத் தரையில் நான்கு தலை சிற்பங்கள் மட்டும் ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்டிருந்தன. கண்களில் உயிரிருந்தது. வெள்ளைத் தரையுள்ள மிகப்பெரிய மாதாகோயிலின் தலைவாசலில் பீடம் நோக்கி நிற்கும் நான்கு எறும்புத் தலைகள். பச்சைச்சேலை உடுத்திய மாதா. என்னை நோக்கி கைவிரித்து நின்றாள். என்னை அழைப்பதுபோல். நான் சிறுவனாக, மொட்டையடித்து தலையில் வட்டவடிவில் பட்டம் வைத்திருந்தேன். என் கழுத்தில் ஜெபமாலையுண்டு. நான் அவளை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தபோது கிளீடன் என் முகத்தில் தண்ணீரை உள்ளங்கையை குவித்து அடித்தான். என் தலைமுடி முழுக்க தண்ணீரில் நனைந்து, தண்ணீர் முகம் வழி வடிந்தது. திடுக்கிட்டு நெற்றியில் படர்ந்திருந்த முடியை மேல் நோக்கி நீவிவிட்டேன். இரண்டு மாதங்கள் வெட்டாத முடி. கண் எரிந்தது.

aivazovskiy_georgiyevskiy_monastry_cape_fiolent

கிளீடன் என்னோடு நீந்தி வந்துகொண்டிருந்தான். கரை நோக்கி மெதுவாக நீந்திக்கொண்டிருந்தோம். சில மாதங்களுக்கு முன்பு சின்னத்துறை கிராமத்தில் மூன்று பேர் நீந்தி கரைசேர்ந்த ஞாபகம் வந்தது. நீந்தி கரை சேர்ந்துவிடலாம். நம்பிக்கை கடல்தொடும் வானம்போல் எங்கள் முன் நகர்ந்துகொண்டிருந்தது. இல்லை, நகராமல் அது அங்கேயே நிலைத்திருந்தது.

சூரியன் உச்சிக்கு வந்திருந்தது. கடலைப்பார்க்கும் போது என் கண்கள் கூசியது. கண்ணை மூடி என்னைக் கடக்கும் அலைகளை எண்ணிக்கொண்டிருந்தேன். மீனவர்கள் கடலலையை எண்ணுவது அவர்களது பால பாடம். கடலலை அதிகமாக இருக்கும் ஆனியாடி காலத்தில் கட்டுமரத்தை சேதமின்றி கடலுக்குள் செலுத்தவேண்டுமென்றால் அலைகளின் இடைவெளியை சரியாக கணிக்கவேண்டும். சில நேரங்களில் இரண்டு அலைகளின் இடைவெளி நீண்டிருக்கும். அந்த நேரம் பார்த்து கட்டுமரத்தை கடலில் செலுத்தவேண்டும். அந்த நேரத்தை சரியாக கணிக்க அலைகளை எண்ணவேண்டும்.

எனக்கு முன்னிருந்த வானம் வெளிர்நீலமாக இருந்தது. கன்னாசின்மேல்படுத்து என் நெஞ்சு சிவந்திருந்தது. சற்று எரிச்சலிருந்தது. எனது முழுக்கை சட்டையக் கழற்றி, சட்டையின் ஒரு கை நுனியை கன்னாசின் கைப்பிடியிலும் மறுகையை என் இடுப்பைச்சுற்றி கட்டிவிட்டு நீந்தினேன். என்முன்னால் இரண்டு தோள்பகுதியோடு சேர்ந்த தலைகள் எந்த அசைவுமின்றி முன்னகர்ந்துகொண்டிருந்தன. தலைகளின் நடுவே சிறிய கன்னாசில் ஸ்டெபின். ஒரு சிறிய கறுத்த மீன்போல் கன்னாஸ் என்னைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. அது எப்போது வேண்டுமென்றாலும் என்னை விழுங்கலாம். சில நேரம் கன்னாஸ் என்னை முந்தியது. அதிலிருந்து காற்றின் திசையை யூகித்துக்கொண்டேன். சரியான திசையில்தான் நீந்திக்கொண்டிருக்கின்றோம்.

சூரியன் எங்கள் பின்னாலிருந்தது. அம்மாவின் ஞாபகம் வந்தது. நான் இறந்துகொண்டிருப்பது அவளுக்குத் தெரியுமா? தெரியும். அழுகையாக வந்தது. இப்போது அடுப்பில் விறகு வைத்து சோறு சமைக்கும் நேரம். இப்போது அவள் வைக்கும் விறகில் தீ பிடிக்காது. ஆமாம் அடுப்பெரியாது. அதிலிருந்தே அவள் புரிந்துகொள்வாள். இதைப்போல் இதுக்கு முன் நடந்ததுண்டு. என்னுடைய மூன்று மாமாக்கள் விழிஞ்சம் துறைமுகத்தில் அவர்களுக்குச்சொந்தமான விசைப்படகு வைத்து மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். சனிக்கிழமை சாயங்காலம் வீட்டுக்கு வந்து விட்டு ஞாயிறு மாலையில் மீண்டும் விழிஞ்சம் செல்வார்கள். அவர்கள் வரும்போது பூவார் வரை பேருந்தில் வந்துவிட்டு, பூவாரிலிருந்து பொழியூர் கொல்லங்கோட்டுக்கு வள்ளத்திலோ, பொழி ஓடவில்லையென்றால் நடந்தோ வருவார்கள். அங்கிருந்து எங்களூர் ஐந்தாறு கிலோமீட்டர்தான்.

ஒரு நாள் அவர்கள் பூவார் வந்து சேரும்போது இருட்டி விட்டிருந்தது. பொழி ஓடிக்கொண்டிருந்தது. நெய்யாறு கடலில் இரைச்சலோடு கலந்துகொண்டிருந்தது. அப்போது ஆற்றில் வள்ளம் இல்லை. எனவே பொழியைக் கடக்க மூவரும் சேர்ந்து நீந்தியிருக்கின்றார்கள். பொழியின் மையத்தில் சென்றவுடன் ஒரு மாமா சுழியில் சிக்கி பொழியில் அடித்துச்செல்லப்பட்டார். பொழியின் சுழியில் அகப்பட்டு கடலில் அடித்துச்செல்லப்பட்டால் சாவு உறுதி. மற்ற இருவரும் பொழிகடந்து கடற்கரையில் அமர்ந்து அழுதுகொண்டிருக்கும்போது இவர்களைத்தேடி இறந்தவர் நடந்து வந்துகொண்டிருந்தார். வந்தவர் இவர்களின் சகோதரர்தான் என்று உறுதிசெய்துகொண்டு ஆச்சரியத்தில் அவரை விசாரித்தபோது அவர் சொன்னார்:

“லேய், நான் சுழியில சிக்கினதும் பொழிச்ச போக்கில போனேன். கடலப்பாத்து நீஞ்சினேன். பொழி கடலில சேருத இடம் வந்ததும் எனக்க மூச்ச பிடிச்சிண்டி குளிச்சு போயி மண்ணப்பிடிச்சு காலால சவுட்டி, மண்ணோட சேந்து மூச்சிருக்கித வர உந்தி போனேன். மூச்சு முட்டி மேலவந்து பாத்தா சுழியெல்லாங் களிஞ்சு கடலுக்க வெலங்க வந்தாச்சு. வெள்ளத்த குடிச்சு பாத்தேன். நல்ல வெள்ளம். இப்படி ஒரு வெள்ளத்த நான் இதுவர குடிச்சதில்ல.”

“இப்பிடி நீந்த ஆரு சொல்லித்தந்தா? நானெங்கி செத்தேன்.”

“யாரு சொல்லித்தர. அந்த நேரம் பாத்து தோணிச்சு.”

“லேய், அதுக்கு பொழிச்ச நடுக்க ஒரு பாற உண்டுல. அது இடிச்சங்கி….”

“இப்பம் அந்த பேச்ச விடு. வா..நம்ம லூசியாளுக்க வீட்டில போயி ஆளுக்கு ஒவ்வொர குப்பி சூடு சாராயம் அடிச்சிலாம்ல.”

இது நடக்கும்போது அம்மா மாமாக்களுக்கு சமைத்துக்கொண்டிருந்தாள். திடீரென்று அடுப்பில் தீ அணைந்தது. சிரமப்பட்டுதான் அடுப்பு ஊதி ஊதி பத்தவைக்கவேண்டியிருந்தது. மாமாக்கள் வர நேரமாவதனால் அவர்களுக்கு ஏதோ விபரீதம் நடப்பதாக அப்போது என்னிடம் அம்மா சொன்னாள்.

இப்போதும் அம்மா அதே அடுப்பை ஊதிக்கொண்டிருந்தாள். ஊதி ஊதி கண்களில் நீர்வடிந்து இருமிக் கொண்டிருந்தாள். வானம் இருட்டியிருந்தது. நிலவு மேலெழுந்து வந்தது. எனக்கு இப்போது கை சற்று தளர்ந்திருந்தது. காற்று திசைமாறியடித்தது. ஒரு இனம்புரியாத நாற்றம். ஸ்டெபின் வாந்தியெடுத்தான். மஞ்சள் நீரும் அதோடு கொஞ்சம் கபமும் வந்தது. பத்றோஸும் கிளீடனும் அவன் பக்கத்திலிருந்தனர். என்னை அவர்கள் பக்கத்தில் செல்லவேண்டாமென்று சொல்லிவிட்டார்கள். எனக்கும் வாந்திவருமென்று. எனக்கு வாந்தி வருவதன் அறிகுறியில்லை. ஸ்டெபினுக்கு கன்னாசில் கிடக்க முடியவில்லை. தளர்ந்திருந்தான். அவனை அவர்கள் இருவரும் கன்னாசை அவன் நெஞ்சுப்பகுதியில் அமிழ்த்தி வைத்து அவனை மெதுவாகப் பிடித்திருந்தனர். இப்போது கிளீடன் மற்றும் பத்றோஸின் புஜங்கள் நீரில் அமிழ்ந்து கழுத்து வரை, தாடைக்குக் கீழ்வரை, நீரிருந்தது. நான் சிறிது நேரம் கன்னாசை கிளீடனுக்கு கொடுத்தபோது வேண்டாமென்று சொல்லிவிட்டான். நேரம் செல்லச்செல்ல அவன் என் பக்கத்தில் வருவதை தவிர்த்தான்.

எனது தலைவலிக்க ஆரம்பித்தது. இப்போது இந்த கடல் வற்றாதா? வானத்தில் எங்கோ தொலைவில் ஊர்ந்து செல்லும் மேகங்கள். பல வடிவங்களில். கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு யானை. தும்பிக்கை நீண்டிருந்தது. அது கடல் நீரை தொடுவானத்தில் கீழிறக்கி உறிந்து குடித்துக்கொண்டிருந்தது. இப்போது வானம் முழுக்க யானைகள். துதிக்கையை நீட்டி கீழிறங்கி வந்துகொண்டிருக்கின்றன. இன்னும் சிறிது நேரத்தில் கடல் நீர் முழுவதையும் குடித்துவிடும். தப்பிவிடலாம்.

the-wreck-of-a-transport-ship.jpg!Blog

யானைக்கூட்டத்தின் நடுவில் ஒரு வெள்ளை யானை. என்னது வெள்ளையானையா? என் மனம் அதிர்ந்தது. இந்த வெள்ளையானையை எனக்குத் தெரியும். மிக நெருக்கத்தில். அப்பா கதை சொல்லிக்கொண்டிருந்தார்.

“கேட்டியா மக்கா…புனித சவுரியாரிக்க கதை சொன்னேனிலே. அவரு ஆளு கொறச்சு குள்ளமாக்கும். நம்ம பொக்கந்தான் வரும். ஒரு குட்டி ஆனயப்போல…பின்ன ஆளு நல்ல செவப்பாக்கும்”

“பின்ன நீங்க வெள்ள ஆனயெண்ணு சொன்னி? அப்போ செவப்பானயா?” நான் சற்று சந்தேகத்தோடு கேட்டேன். எனக்கு கதையின் துவக்கம் சரியாகப்படவில்லை.

அப்பாவின் பக்கத்தில் படுத்திருந்தேன். என் தலையை தடவிவிட்டு தொடர்ந்தார்.

“மக்கா அது வெள்ளயான தாம்பில.”

“யாரு, சவரியாரா?”

“சும்மாயிரி மக்கா. சரியாட்டு சொன்னா…பரிசுத்த சவரியாரு இந்தியாவில வந்து கிறுத்தியமாட்டு ஒரு பத்து வர்ஷம் கழிஞ்சாக்கும் இந்த சம்பவம் நடந்தது. சத்தியமாட்டு நடந்ததாக்கும்.

“அப்பமெல்லாம் போர்ச்சுகீசணும் நம்ம இந்தியாவுக்கு வர கொறஞ்சது பந்த்ரெண்டு பதிமூணு மாசமாகும். இப்பம் உள்ளதுபோல வலிய கப்பலொண்ணும் இல்ல. தோணியாக்கும். வலிய தோணி. பதினஞ்சு இருவது வலிய ஆனய அதில ஏத்தி கொண்டுபோலாம்.

“போர்ச்சுகீசிலி ஆன இல்ல. ஆனய பாக்க அங்குள்ள ராஜாவுக்கு ஆச. ராஜா ஆசிச்சா பின்ன வேற பேச்சொண்டா? இந்தியாவணும் ஒரு ஆனய கொண்டுபோக அவரு ஆடறிட்டாரு.

“ஒடனத்தானே இங்கு ஒரு ஆனய ரெடி பண்ணியாச்சு. ஒரு குட்டியான. வெள்ளக் களறாக்கும். முயலுக்க களறு. அதுக்க கூட அத பாத்துக்க ரெண்டு பாகம்மாரும் உண்டு.”

“அப்போ அதுக்க தள்ள யான?”

“இல்ல மக்கா, குட்டிய மட்டுந்தான் கொண்டுபோனானுவ.”

எனக்கு அழுகையாக வந்தது. நான் அப்பா அம்மாவைப் பிரிந்து அனாதையாக செல்வதை என்னால் நினைத்துப்பார்க்க முடியவில்லை.

“அதுக்க பேரெனுத்த?”

“ஓம்…அத மறந்தேன். அதுக்க பேரு ராஜா.”

“பேரு கொள்ளாம். பெறவு?”

“பின்ன ஒரு நாளு, நல்ல நேரம்பாத்து, பூசவச்சு, ஆனச்ச நெத்தியில குறுக்காட்டு மூணு வரையிட்டு, தோணியில ஏத்தி யாத்ற தொடங்கினானுவ.”

“கடலில போனா அதுக்கு சர்த்தலு வராதா?”

“வராதா பின்ன…அத கெவனிச்சத்தானே பாகம்மாரு. பின்ன அதச்சொல்லெண்டாம்…அவம்மாரு ரெண்டுபேருக்கும் சர்த்தலும் பேதியும். வெள்ளக்காறம்மாராக்கும் பாகம்மாருக்க பீய அள்ளுதது. எப்படியும் ஆன போய் சேரணுமில்ல. அல்லங்கி ராஜாவுக்கு ஆரு பதிலு சொல்ல. இருந்தாலும் சர்த்தலும் பேதிக்கும் மருந்துண்டு. எப்படியோ ஒருவளியாட்டு ஒரு வருஷம் கழிஞ்சு போர்ச்சுகீசிலி ஆன போய் சேந்தாச்சு. அங்கு போனா இதப்பாக்க வலிய கூட்டம். ரோட்டில ஆளு நிக்க எடமில்ல. இந்த ராஜா ஆனயப் பாத்தபெறவு ஸ்பெயினு ராஜாவுக்கு இந்த ஆனயப் பாக்க ஒரு கொதி. அது இந்த ராஜாவுக்க சொந்தக்காறனாக்கும்.”

“எந்த ராஜாவுக்க சொந்தக்காறன்? நம்ம ஆன ராஜாவுக்க சொந்தக்காறனா?”

“இல்ல மக்கா போர்ச்சுகீசு ராஜாவுக்க சொந்தக்காறன். பின்ன யானய ஒரு தேரில வச்சு அந்த தேர அம்பது அறுவது குதிர இளுத்துக்கொண்டு ஸ்பெயினுக்கு போச்சு. அது ஒரு டிசம்பர் மாசமாக்கும். ஏசு பெறக்குத மாசம். நல்ல குளிரு. தறையெல்லாம் வெறும் ஐசாட்டாக்கும் கெடக்கும். அது நம்ம ஆன ராஜாவுக்கு சரிபெட்டில்ல. அதுக்கு நல்ல அசுகம். பின்ன போற வளியெல்லாம் நல்ல கூட்டமாக்கும். கொறச்சு நாளு ஆனய ஒரு ஹோட்டலுக்க கிட்ட நிறுத்தி வைத்தியம் பாத்திட்டிருந்தானுவ நம்ம பாகம்மாரு. அந்த ஹோட்டலுக்கு நல்ல வருமானம். ஒடனத்தானே ஹோட்டலுக்க பேர ‘இங்கிளீசிலி ஆன’ – யெண்ணு மாத்தினானுவ.”

“இங்கிளீசிலி ஆனச்ச பேரு எலிபண்டு.”

“மண்ணிட்டா மண்ணு கீள விளாது மக்கா. அப்படி ஆனயப்பாக்க ஆளு கூட்டம். ஆனச்ச ரோகம் கொறச்சு சரியானப்பம் ஸ்பெயினுக்கு யாத்திர தொடங்கியாச்சு. போற வளியில ஒரு தள்ள அவளுக்க கையில கொழந்தையையும் வச்சுக்கொண்டு கூட்டதில யானய பாக்க வந்தா. அவ நிண்ணது கொறச்சு ஒயரத்திலயாக்கும். யான இவளுக்க கிட்ட வந்ததும் இவளுக்க கையிலிருந்த குழந்த கீழ விழுந்தது. தறயில விழுந்தா கொழந்த பெளச்சாது. இவ ஓரே கூப்பாடு. இதக்கண்ட ஆன அதுக்க தும்பிக்கைய வச்சு கொளந்தயப் பிடிச்சது. ஆனச்ச கண்ணில தண்ணி வடியிது.”

“எதுக்கு ஆன கரயுது?”

“பின்ன, அதும் ஒரு குட்டிதானே. அதுக்க தள்ள ஆனச்ச ஓர்ம வராதா?.”

எனக்கு அழுகையாக வந்தது.

“பெறவு?”

“குளந்தய மூணு சுத்து சுத்தி ஆசீர்வதிச்சு பாகனுக்க கையில குடுத்தது. இது நடந்த அடுத்த வர்ஷம் அதுக்கு இனியும் ரோகம் வந்து செத்துப்போச்சு. அது மரிச்சது செரியாட்டு பரிசுத்த சவரியாரு மரிச்ச ஒரு வருசம் களிஞ்சு. ஒரேபோல டிசம்பர் மாசம். பரிசுத்த சவரியாரப்போல நம்ம ஆனயயும் இப்பொளும் ஒரு இடத்தில பாடம் பண்ணி வச்சிருக்குதாம்.”

“எந்த இடத்தில?”

“அது செரியாட்டு தெரியெல்ல மக்கா.”

“அப்போ அந்த ரெண்டு ஆனப்பாகம்மாரும்?”

“அங்க வல்லதும் வெள்ளக்காரிய கல்லியாணங்கெட்டிக்காணும். இப்போ அவுங்க ரெண்டுபேருக்க சந்ததிகளும் வெள்ளக்காறங்கதான்.”

இப்போது கடலில் தண்ணீர் எதுவும் வற்றியிருக்கவில்லை. வானத்தில் யானைகள் ஒன்றுமில்லை. நன்கு இருட்டிவிட்டிருந்தது. என்னால் கண்திறந்து பார்க்க முடியவில்லை. வானத்தில் சோத்துமீனும், ஆறாமீனும், கப்பல்வெள்ளியும், குரிசுவெள்ளியும், விடிவெள்ளியும் ஒவ்வொன்றாக எங்களைக் கடந்து வானத்தில் மறைந்தது.

நேரம் விடிந்திருந்தது. எனது கால்கள் தளர்ந்திருந்தது. நான் கன்னாசின் கைப்பிடியைப் பிடித்திருந்தேன். என்னால் கன்னாசின் மேல் ஏற முடியவில்லை. உடல் பாரமாக இருந்தது. கை நடுங்கிக்கொண்டிருந்தது. நான் கன்னாசின் பிடியை விட்டால் தண்ணீரில் மூழ்கிவிடுவேன். நேற்று நான் மூழ்கி மூழ்கிப் பார்த்தேன். என்னால் மூழ்க முடியவில்லை. ஸ்டெபின் என்னைப்போல் கன்னாசைப் பிடித்துக்கொண்டிருந்தான். பத்றோஸும் கிளீடனும் வாயிலேறும் தண்ணீரை துப்பிக்கொண்டிருந்தனர். பத்றோஸின் கண்களில் எந்தவித பயமுமில்லை. ஆனால் கிளீடன் அழுதுகொண்டிருந்தான். பத்துமணிவரை அவர்கள் இருவரும் தாக்குபிடிக்க முடியுமா? இன்னும் இரண்டு மூன்று மணி நேரங்கள். இன்னும் ஒரு பத்து நிமிடம் அவர்களால் நீந்த முடியுமா என்று சந்தேகமாக இருந்தது.

கிழக்கிலிருந்து ஒரு கறுத்த எறும்பு ஊர்ந்து வந்தது. தூத்துக்குடியிலிருந்து கொச்சிக்கு செல்லும் சரக்குக் கப்பல். சரியாக அதன் பாதையில் வந்திருக்கின்றோம். அது எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தது. நான் இன்னும் மூன்று மணி நேரெமென்ன கப்பல் வரும் நம்பிக்கையில் இன்று முழுவதும் கன்னாசைப் பிடித்துக் கொண்டிருப்பேன். அது இன்னும் எங்கள் பக்கம் வர ஒரு மணி நேரமாவது ஆகிவிடும்.

திரும்பி கிளீடனின் கண்களைப் பார்தேன். என்னிடம் ஏதோ சொல்லவருவதுபோல். என்னிடம் பிரியாவிடை கேட்பதுபோல். அழுகையோடு மூக்கிலிருந்து சளியும் நீர்போல் வடிந்துகொண்டிருந்தது. கை தூக்கித் துடைக்க அவனுக்கு சக்தியில்லை. தலையை அசைக்கின்றான். மெதுவாக இமைக்கின்றான். அவன் கண்ணை மூடிக்கொண்டால் கீழே சென்றுவிடுவான். இதோ எல்லாம் முடிந்ததென்கின்றான். கடைசி கணம். என் சக்தியை திரட்டி கன்னாசை அவனிடம் தள்ளி விட்டு நான் கீழே சென்றேன்.

(முற்றும்)

=================
சில வட்டார வழக்குச்சொற்கள்:

1. கன்னாஸ் – போத்தல்
2. துளவா – மூங்கிலை இரண்டாக கிழித்து செய்த துடுப்பு. ஏழு அல்லது எட்டடி நீளமிருக்கும்
3. வெலங்க – தொலை தூரத்தில்
4. தூண்ட – தூண்டில்
5. போடுமி – போடுங்கள்
6. எர – இரை மீன்
7. கரயப்பாத்து – கரையைத் தேடி
8. வளியாட்டு – வழியாக
9. பிடிச்சிண்டு – பிடித்துக்கொண்டு
10. சிறாவு – சுறாமீன்
11. வாட – மணம்
12. பேடி – பயம்
13. பொழி – பொழிமுகம். ஆறு கடலில் சேருமிடம்
14. பொக்கம் – உயரம்
15. தள்ள – தாய்
16. களறு – நிறம்
17. சர்த்தல் – வாந்தி

முந்தைய கட்டுரைபூ – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகாட்சன்