5. கதாபாத்திரங்களின் பிரதேசம் – துரோணா

[மீண்டும் புதியவர்களின் கதைகள்]

கதாபாத்திரங்களின் பிரதேசம் என்றுதான் குருதாஸ் அந்த இடத்தை குறிப்பிட்டார். ஒரு வருடத்திற்கு முன்பாக ஆற்றோடு அடித்துவரப்பட்ட அவனை குருதாஸ் தன்னுடன் சேர்த்துக்கொண்ட பின்னர் அவனும் அவரைப் போலவே நாடோடியாக ஊர் சுற்றியே தனது காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறான்.மூன்று வகையான நிலவியல்களை உடைய அப்பிரதேசத்திற்கு வெளியே ஆற்றின் கரையில் சிதிலமடைந்து இடிபாடுகளோடிருக்கும் யட்சன் மண்டபம்தான் இருவருக்குமான வாசஸ்தலம்.

தொலைதூரத்தில் எந்நேரமும் பனி மென் திரையாய் கவிந்த மலையிலிருந்து கிளைவிட்டு பாயும் இந்த ஆறு இரண்டாய் பிளவுண்டு இப்பிரதேசத்தைச் சுற்றி ஓடுகிறது. அதன் தொடக்க விளிம்பில்தான் செக்கச் சிவந்த மண்ணும் வெயில் ஊறிய காற்றும் கொண்ட, முன்னர் மக்கள் வாழ்ந்து பிறகு முற்றிலுமாக கைவிட்டு விட்ட இப்பிரதேசத்தின் முதல் பகுதியான அந்த தொன்மையான கிராமம் இருக்கிறது.அங்கு இப்பொழுது மனித நடமாட்டமே கிடையாது.வெம்மையின் சாபம் பீடித்த அந்நிலம் முழுமையாய் வறண்டுப் போனதில் அங்கிருந்தவர்கள் அனைவரும் நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே வெவ்வேறு இடங்களுக்கு தொழில் தேடி இடம் பெயர்ந்துவிட்டார்கள். இப்பிரதேசத்தின் மையமான இரண்டாவது பகுதியில்தான் தன்னுள் ஐந்து பெரு நகரங்களை உள்ளடக்கிய கூட்டுநகராட்சி இருக்கிறது. நீண்டும் அகன்றும் இருக்கிற கட்டிடங்களும் அவற்றின் ஊடே அடர்கருப்பில் விரிகிற சாலைகளும் அங்கே இருக்கின்றன.அதற்கடுத்த மூன்றாவது பகுதி சிறுநகரங்களினாலும் விவசாய நிலங்களினாலும் ஆனது. பூர்வீக கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்களில் ஒரு பகுதியினர் மழையின் வளமும் வனப்பும் பெற்ற இந்த நிலத்தை திருத்தி உழுது விவசாயத்திற்கு ஏற்றதாய் உருமாற்றினார்கள். மீதமிருப்பவர்கள் சிறுநகரங்களை நிர்மாணித்தும் பெருநகரங்களுக்கு வேலை தேடிச் சென்றும் தங்கள் வாழ்வை ஸ்திரப்படுத்திக் கொண்டார்கள் என குருதாஸ்தான் இந்த பிரதேசத்தின் மொத்த கதையையும் அவனுக்கு சொன்னார். ஆனால் இவற்றை விடவும் இதற்கு அப்புறம் அவர் சொன்ன விஷயம்தான் அவனை அதிகம் ஆச்சரியம் கொள்ள வைத்தது.

இப்பிரதேசமே ஒரு கற்பனையான இடம் என்றும் இந்நிலங்களில் வாழ்கிற மக்கள் கதைப் பிரதிகளில் தமது வாழ்க்கையை தொடர்கிற கதாபாத்திரங்கள் என்றும் இந்த உண்மையை அவர்கள் அறிவதேயில்லை என்றும் அவர் கூறினார்.

அன்றைக்குத்தான் அவன் ஆற்றோடு அடித்து வரப்பட்டு யட்சன் மண்டபம் அண்டையாய் கரையொதுங்கியிருந்தான். அவனது உடல் ஜீரத்தில் ஒடுங்கியிருந்தது. குருதாஸ் அவனை தனது மடியில் கிடத்தி ஏதோவோர் மூலிகை மருந்தின் சாறை அவனுக்கு பருகக் கொடுத்தார்.உருவெளிக் காட்சிகளாய் நினைவுகள் சிக்கி கொண்டிருந்த அவனது மனதினுள் குழப்பமான எண்ணவோட்டங்கள் ஊறின. அவனால் வாயை திறந்து பேசக்கூட இயலவில்லை. அவனுடைய பழைய ஞாபகங்கள் முழுமையாக தொலைந்து போய்விட அவனது உடலெங்கும் குளிரெடுத்து கண்களில் தெளிவற்ற பிம்பங்கள் அசைந்தபடியிருந்தன. நிலவின் பிரகாசத்தில் ஆற்று மீன்கள் துள்ளி நனைந்தபடி இருந்த அந்த இரவில்தான் குருதாஸ் இந்த பிரதேசத்தின் கதையை அவனிடம் கூறினார்.

பின்னர் சிறிது காலம் கடந்து தன்னுடைய பழைய வாழ்க்கையை பற்றி யோசித்து தோற்று ஓய்ந்து நெஞ்சில் மண்டி உறுத்திய வலிகள் அடங்கி இந்த பிரதேசத்திற்கு தன்னை ஓரளவிற்கு பழக்கிக் கொண்டதும் குருதாஸ் சொன்ன கதையில் தோன்றிய தனது சந்தேகங்களை அவன் அவரிடம் கேட்டான்.

இவர்கள் எல்லோரும் வெறும் கதாபாத்திரங்கள் தான் எனில், இவர்களை சிருஷ்டித்த எழுத்தாளன் யார்?; இவர்கள் எல்லோரும் ஒரே எழுத்தாளனால் சிருஷ்டிக்கப்பட்டவர்களா இல்லை வெவ்வேறு எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்டவர்களா?; இவர்கள் எல்லோரும் ஒரே எழுத்தாளனின் கதாபாத்திரங்கள் எனில், அந்த எழுத்தாளனது ஒரே கதையை சேர்ந்தவர்களா அல்லது வெவ்வேறு கதையை சேர்ந்தவர்களா?; இவர்கள் எல்லோரும் ஒரே எழுத்தாளனின் வெவ்வேறு கதைகளை சேர்ந்தவர்களாகவோ அல்லது வெவ்வேறு எழுத்தாளர்களின் வெவ்வேறு கதைகளை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள் எனில், இவர்களிடையே இருக்கும் கால வெளி ஒழுங்கானது எப்படி சாத்தியமாகியிருக்கிறது?; குருதாஸும் ஒரு கதாபாத்திரம்தானா?; எனில் நான் யார்?;

மண்டபத்தினுள் எண்ணெய் விளக்கு கருமை தீண்டிய ஓரங்களோடுக் கூடிய மஞ்சள் ஒளியினை சோகையாய் எரித்துக் கொண்டிருந்தது.உருச்சிதைந்த கருங்கல் சிற்பங்களும் உடைந்து சாய்ந்த தூண்களும் அச்சிறிய வெளிச்சத்தில் அசாதாரணமாய் பொலிவு பெற்று மின்னின.

ஒரு எழுத்தாளன் தன் வாழ்நாளெல்லாம் ஒரே கதையைத்தான் திரும்ப திரும்ப எழுதிக் கொண்டிருக்கிறான். உண்மையில் அனைத்து எழுத்தாளர்களுமே ஒரே கதையைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அது முடிவிலியாய் நீண்டுக் கொண்டேயிருக்கிறது- பிரபஞ்சத்தைப் போல.எனவே அனைத்துக் கதைகளும் ஒரே மையத்தில்தான் சிருஷ்டிக்கப்படுகின்றன.பின்னர் அதே மையத்தில் மரித்து கதைகளின் சுழற்சியில் அங்கிருந்தே திரும்பவும் உயிர்பெற்று நீள்கின்றன.இதில் காலமும் வெளியும் மனிதர்களும் மாயையே. எல்லாமே கதை. யாவருமே கதாபாத்திரங்கள்.

அவர் முகம் ஒரு கணம் சுருங்கி மீண்டது. முன்பைவிடவும் அவர் பார்வையில் அடர்த்தி கூடியது போலிருந்தது அவனுக்கு.நீளமான வெள்ளைத் தாடியும் தோள்வரை புரண்ட வெள்ளை முடியும் காற்றில் அலைந்தன.

இவ்வுலகம் ஒரு பைத்தியக்காரனின் குழப்பம் பிடித்த கதை

அவன் மெல்லிய குரலில் கேட்டான். அப்படியானால் நீங்களும் நானும்கூட கதாபாத்திரங்கள் தாமா? நான் என்ன வழி தவறி வந்த கதாபாத்திரமா?

அவர் அவனது கேள்வியை பொருட்படுத்திய மாதிரி தெரியவில்லை. கால்களை நீட்டி படுத்துக் கொண்டார்.அவனை பார்த்து விளக்கை அணைக்கும்படி சைகை செய்வது நிழல் போல் தெரிந்தது.

அவர் கூறியவற்றை அவன் எப்படி முழுமையாக நம்பினான் என்பதை அவனாலயே சரியாக விளங்கிக் கொள்ளமுடியவில்லை. எனினும் அவரோடு அப்பிரதேசம் முழுக்க சுற்றித் திரிகிற நாட்களின்போது கண்களில் பார்க்கிற மக்கள் அனைவரையும் கதாபாத்திரங்கள் என்றே அவனது மனம் புரிந்துக் கொண்டது. தன்முன்னே நடக்கிற நிகழ்வுகளை ஏதோவோர் கதையின் பகுதி என்று நினைப்பது அவனுக்கு சுவாரஸ்யமாகவும் இருந்தது.

O

நகரத்தில் பெருமழை பெய்து சாலைகள் எங்கும் நீர் அலையலையாக நுரையிட்டு ஓடிய தினத்தில்தான் அவன் முதல்முறையாக மரணத்தை மிக அருகில் சந்தித்தான். இப்பிரதேசத்தை ஒரு கதைநிலம் என்று எடுத்துக் கொண்டால் இதன் எழுத்தாளன் வன்மம் மிக்கவனாகவும் குரூரம் உடையவனாகவுமே இருக்க முடியும் என்று அவனுக்கு அன்றைக்குத்தான் தோன்றியது. மரணத்திற்கு இப்பிரதேசத்தில் மனித உரு இருக்கிறது என்பதையும் அவன் அப்பொழுதுதான் தெரிந்துக் கொண்டான்.

மழை வானிலிருந்து ஆயிரமாயிரம் துளிகளாய் பெருகி நிறைந்து கொண்டிருந்தது. இவனும் குருதாஸும் சாலையோரத்தில் ஒரு தகரக்கூரைக்கடியே நின்றுக் கொண்டிருந்தார்கள். இவர்களுக்கருகே ஆறு அல்லது ஏழு வயது கணிக்கத்தக்க ஆண் பையன் ஒருவன் தனது அம்மாவுடன் நின்றுக் கொண்டிருந்தான்.மழையின் வலுக்கூடிய யாவரும் அசட்டையான ஒரு கணத்தில் அவனை மரணம் வந்து கழுத்தை பிடித்து நெரித்தது. கோமாளித் தொப்பியும் சாம்பல் நிற முகமூடியும் தொளதொளத்த கிழித்து ஒட்டுப்போட்ட சட்டையும் கால்சராயும் அணிந்திருந்த மரணம். பையனுக்கு கை கால்கள் வலிப்பில் இழுத்து வெட்டின.மூக்கிலிருந்தும் கடவாய் ஓரத்திலிருந்து ரத்தம் வழிந்தது.சில நிமிடங்களில் அவனது கண்கள் வானை நோக்கி குத்திட்டுவிட்டன.அவனது அம்மா மண்டியிட்டு பையனை மடியில் தாங்கிக் கொண்டு மாரில் அடித்து அழுதாள்.அவர்களைச் சுற்றி குழுமியிருந்த கூட்டத்தில் துக்கத்தின் முணுமுணுப்புகள் கூடின. மழையின் பேரிரைச்சலும் அந்த அம்மாவின் அழுகுரலும் ஒருசேர கேட்கின்றன. ஆனால் அந்த பையனை கொன்றுவிட்டு அங்கிருந்து சாவுகாசமாய் நடந்துப் போய்க்கொண்டிருக்கிற மரணத்தை யாரும் கவனிக்கவில்லை. அது தனது கால்சராயுக்குள் கை நுழைத்தப்படி மழைக்குள் சென்று மறைந்தது. ஒருவேளை வேறு யார் கண்களுக்கும் அது தென்படவில்லையோ என்னவோ. அவன் குருதாஸை திரும்பி பார்த்தான். மூடியிருந்த அவரது இமை விளிம்புகளில் கண்ணீர் துளிகள் சேர்ந்திருந்தன.

அன்றைக்கு ராத்திரி அவரிடம் தான் மரணத்தை பார்த்தது பற்றி இவன் வருத்தம் தொனிக்க கூறியபோது அவர் அமைதியாக “மரணம் ஒரு கதாபாத்திரம்” என்று பதில் சொன்னார்.

அதன் பிற்பாடு இரண்டு வாரங்கள் கழித்து ஒரு ஆரஞ்சு நிற மாலைப் பொழுதில் அவன் திரும்பவும் மரணத்தை வெகு சமீபத்தில் பார்த்தான். அதுவொரு நெடுஞ்சாலை. குறுக்கிலும் நெடுக்கிலுமாக சாலைகள் பிரிந்தும் இணைந்தும் இருந்தன. குருதாஸும் அவனும் சாலையோரத்தில் இருந்த பெரிய வேம்பு மரத்தினடியில் அமர்ந்திருந்தார்கள். அப்பொழுது எதிரெதிர் திசையில் வந்த லாரியும் காரும் ஒன்றோடு ஒன்று மோதி சாலையில் தேய்ந்து தீப்பொறிகள் உண்டாக பெரும்சப்தத்துடன் சரிந்து கவிழ்ந்தன. கண்ணாடி சில்லுகள் நொறுங்கி வண்டியின் பகுதியில் இடிந்து சப்பி அவற்றுள் இருந்த மனிதர்களும் விபத்து நடந்த இடத்திலேயே மாண்டுப் போனார்கள். சில நொடிகளுக்கு உயிர் போகும் அலறல்களும் வலியின் கேவல்களும் கோரமாய் எங்கும் எதிரொலித்தன. அப்பொழுதுதான் அவன் காரின் ஓட்டுநர் இருக்கையில் இருந்தும் லாரியின் ஓட்டுநர் இருக்கையில் இருந்தும் மரணங்கள் இறங்கி நடந்து வருவதைப் பார்த்தான். இரண்டு மரணங்களும் ஒரே மாதிரிதானிருந்தன. இரண்டும் கைகளை கோர்த்துக் கொண்டு ரத்தம் அப்பியிருந்த சாலையில் நடனமிடுவது அவன் பார்வைக்கு மட்டுமே தெரிந்தது.அவனுக்கு முகத்தை பொத்திக் கொண்டு அழவேண்டும் போலிருந்தது.

இந்நிகழ்விற்கு பிறகு அவன் தொடர்ச்சியாக மரணத்தை சந்தித்தபடியே இருந்தான். அவன் மரணத்தை பார்க்கவே கூடாது என்று எவ்வளவோ பிராயசைப்பட்டும்கூட அவனால் அதனிடமிருந்து தப்ப முடியவில்லை. முன்பெல்லாம் தினமும் ஒரு சாவைதான் பார்த்துக் கொண்டிருந்தான்.ஆனால் இப்பொழுதெல்லாம் மூன்று சாவுகளையாவது பார்க்காமல் அவனது ஒரு நாள் முடிவடைவதேயில்லை. சாலையில் மூளை சிதற நிகழும் விபத்துகள், உடலை துண்டு துண்டாக வெட்டும் கொலைகள், தண்டவாளத்தில் குடல் தெறிக்க நடக்கும் தற்கொலைகள் என அவனது நினைவெங்கும் மரணமும் மாம்ச நாற்றமுமே நிரம்பியிருக்கின்றன. அன்றைக்கு ஒரு நாள் நள்ளிரவு வேளையில் குருதாஸ் தூங்கிக் கொண்டிருந்தபோது இவன் உறக்கம் பிடிக்காமல் சாலையில் காற்று வாக்கில் நடந்தான்.சாலைக்கு வெளியே அகன்றிருந்த புதர் மண்டிய காலி மனையில் ஏதோ சத்தம் கேட்டு அந்த பக்கம் நகர்ந்தவன் அங்கு ஒரு பெரிய பேருந்து நின்றிருப்பதை கண்டு அதனருகே போனான்.பேருந்தினில் மங்கலாய் வெள்ளை வெளிச்சம் கசிந்திருந்தது.அவன் பேருந்திற்குள்ளே மெதுவாய் எட்டி பார்த்தபோது அங்கே நான்கு பேர் சேர்ந்து ஒரு பெண்ணை கற்பழிப்பதை கண்டு திடுக்கிட்டு உடல் விதிர்த்தான். அவர்கள் இருட்டில் செடிகளுக்கு ஊடே மறைந்திருந்த அவனை கவனிக்கவில்லை.அந்த நான்கு பேருடன் மரணமும் நின்றிருந்தது. அந்த பெண்ணை கண்ணெடுத்து பார்க்க முடியவில்லை. துணிகளை கிழித்து அவளை முழு நிர்வாணமாக்கி பலவந்தமாய் இரண்டு பேர் அவளது கை கால்களை அழுத்தி பிடித்திருந்தார்கள். அவளது துடைக்களுக்கிடையே ரத்தப் போக்கு ஏற்பட்டிருந்தது. அந்த காட்சியை ஒருவன் தனது அலைபேசியில் படம்பிடித்துக் கொண்டிருந்தான்.அழுக்குத் துணியால் வாய் கட்டியிருந்த அப்பெண்ணின் கண்களில் சிவப்பாய் கண்ணீர் கட்டியிருந்தது. அப்பொழுது மரணம் ஒரு இரும்பு கம்பியை எடுத்து அவளது பிறப்புறுப்பில் செலுத்தி விகாரமாய் சிரித்தது. சாம்பல் நிற முகமூடியில் ஒலித்த சிரிப்பு சத்தத்தை கேட்டு அவன் மூத்திரம் போய்விட்டான். அங்கிருந்து ஓசையெழுப்பாது ஓடி அவன் குருதாஸ் இருக்கிற இடத்திற்கு வந்ததும் நிறுத்தாமல் அழுகையும் வாந்தியும் மாறி மாறி வந்தன.

O

மரணம் அவனை எந்நேரமும் துரத்திக் கொண்டேயிருந்தது. இனி எங்கேயும் போய் ஓடி ஒளிய முடியாது என்று புரிந்து கொண்டதும் அவன் யட்சன் மண்டபத்தை விட்டு வெளியே வரவே மறுத்துவிட்டான்.மாதத்தில் இரண்டு நாட்கள் மட்டும் யட்சன் மண்டபத்தில் இருக்கும் குருதாஸ் தன் முதுமையான வரிவரியாய் சுருக்கங்கள் கொண்ட கையினால் அவனது தலையை தடவி ஆசீர்வதித்துவிட்டு அங்கிருந்து பயணப்பட்டார்.அவன் யட்சன் மண்டபத்தின் குளிர்ந்த கற்பாறைகளோடு தனித்திருந்தான்.

O

யட்சனின் மண்டபத்திற்கு மனிதர்கள் (குருதாஸின் வார்த்தையில் கதாபாத்திரங்கள்) யாருமே வருவதில்லை. அது பற்றி அவன் ஒரு முறை குருதாஸை கேட்டப்போது அவர் “கதாபாத்திரங்கள் கதை அனுமதிக்கிற எல்லைக்குள்தான் இயங்க முடியும்” என்று கூறினார்.
O

பலநூறு வருடங்களுக்கு முன்னர் இதே இடத்தில்தான் மலைக்காட்டு யட்சன் தன் பேராலயத்தில் நீலிகளோடு குடிக் கொண்டிருந்தது.அப்பொழுது மலை விளிம்பில் இருந்த கிராமத்தில் பசுமைக்கும் போகத்திற்கும் பஞ்சமில்லை.அவர்களது காவல் தெய்வம் யட்சன்தான். ஊர்த் தலைவரின் கடைசி மகள் செல்லம்மாளுக்கு திருமணம் நிச்சயமாகியிருந்த தினம் யட்சன் கோவிலில் படையலிட்டு வழிப்பாடு விமர்சையாக நடைபெற்றிருந்த போது செல்லம்மாளின் அழகு கண்டு மோகம் கொண்ட யட்சன் சிற்பங்களில் இருந்து தேவலோக சுகந்தத்தை பரப்பச் செய்து விக்கிரக அறையிலிருந்து வெளிப்பட்டான். ஊர் மக்கள் யட்சன் கால்களில் பணிந்தனர். அவனது விருப்பத்தை கேட்ட ஊர்த் தலைவர் அப்படியே நொடிந்து தளர்ந்துவிட்டார். அடுத்த பௌர்மணியன்று செல்லம்மாளை மணப்பதாக சொல்லி மறைந்த யட்சனின் சொற்களில் மூர்க்கமும் காதலும் விரவியிருந்தன. செல்லம்மாளுக்கும் யட்சனின்மீது பெருங்காதல் பூத்துவிட்டது.ஆனால் தாபம் கொண்ட யட்சனுக்கு மனிதப் பெண்ணை திருமணம் செய்துவைத்தால் பெரிய கேடு வந்து ஊரே நாசமாகிவிடும் என்றார் நாடோடியாய் வந்திருந்த சந்நியாசி. உடன் சிவபெருமானுக்கு வேள்வி செய்து செல்லம்மாளை பலி கொடுப்பதே சரியான பரிகாரம் என்றும் அவர் சொன்னார். ஊர் பெண்கள் ஒப்பாரியிட்டு கதற அன்றைய இரவே சிவபெருமானுக்கான பூஜை தொடங்கியது. தலை முழுக்க சிரைக்கப்பட்ட செல்லம்மாள் தீக்குழியில் பாதி எரிந்துக் கொண்டிருந்தபோது அங்குத் தோன்றிய யட்சன் சந்நியாசியை தலையை வெட்டிக் கொன்றுவிட்டு கருகிப் பிணமான செல்லம்மாளைத் தூக்கி தோளில் சுமந்தபடி மலையாற்றுக்குள் பாய்ந்து தன்னை அழித்துக் கொண்டான். அதன் பிறகு நீலிகள் அந்த கிராமத்தை சபித்ததில் அந்த நிலம் மலடாகி வானம் நீர்த்துப் போனது. பின் நீலிகள் அந்த ஆலயத்திலிருந்து வெளியேறி திரும்பவும் மலைக்காடுகளுக்கே சென்றுவிட்டன.

O

யட்சன் மண்டபத்தின் புராதன தோற்றமும் நிசப்தத்தில் அலையடித்த மரணத்தின் உருவமும் அவனை பயமுறுத்தின. உடைந்து கிடந்த சிற்பங்களில் பிரமை கொண்டிருந்த நீலிகளின் கண்களும் அங்கங்கே சிதறியிருந்த வாள் கேடயங்களும் தீப விளக்குகளும் கருமையில் பளிச்சிடுவதை கண்டபோது அவனுக்குள் செல்லம்மாளின் முகம் கனலாய் எரிந்தது. மண்டபத்தைவிட்டு வெளியே வந்து இருட்டினுள் ஆழ்ந்து விகசித்து நெளியும் ஆற்றின் அருகே சென்றான்.

O

பூர்வீக கிராமத்திற்கு அவன் வந்தபோது அனல் கொதித்த காற்று சூறையாய் ஊரை சுற்றி நிறைந்துக் கொண்டிருந்தது. கண்களில் படுகிறவை எல்லாம் வெறும் சிதிலங்களாகவே இருந்தன- கரையான் அரிந்த மண் வீடுகள்; இலைகளை உதிர்ந்த மொட்டை மரங்கள்; காய்ந்த மரப்பட்டைகள் போல் அங்கங்கே தென்படும் மனித எலும்புகள்;கூடுதலாய் வயிறை குமட்டும் செத்த மிருகங்களின் துர்வாடை.சட்டென்று எங்கிருந்தோ வந்த சில எலிகள் மூச்சென்று கத்தியப்படி அவனது கால்களின் இடையே புகுந்து ஓடின. தீய்ந்துப் போய் பாளங்களாய் வெடித்திருந்த நிலம் மோனமாய் கேவுகிற மாதிரி அவன் உணர்ந்தான். அவனுக்குள் நலிந்து வதங்கிய நினைவொன்று தன் மீது படிந்த சாம்பல் புழுதியை அகற்றிக் கொண்டு துளிர்விட்டு முளைத்தது.

நெருப்பு நீரில் அடங்கி குளிர்கிறது. தோல் எரிந்து கருகிய இடங்களில் எலும்புகள் முட்டிக் கொண்டு தெரிகின்றன. முகத்தில் கண்கள் சிறிய உருண்டைகளாக ஒட்டிக் கொண்டிருக்க உடலெங்கும் சதை பிய்ந்து கிழிந்து வருகிறது. பயத்தில் செல்லம்மாளின் உடலை நழுவவிடுகிறான் யட்சன்.அது நீருக்கடியே எங்கேயோ புதைந்து மறைந்துவிடுகிறது.அவனுக்குள் ஞாபகங்கள் சுழல்கின்றன. தொலைவிலும் அருகிலுமாக பசைக் கூடிய ஸ்பரிசமுடைய சின்னஞ்சிறிய நீர்த்தாவரங்கள் அவனை உரசி விலக அரக்கம் கொண்ட ராட்சஸர்கள் கால்களை பிடித்து இழுப்பது போலிருந்தது அவனுக்கு.தனக்கு கீழே ஆழத்தில் பெருகிய விசையை எதிர்த்து கால்களை எம்பி உந்தினான்.கைகள் நீரை உள்வாங்கி வெளித் தள்ளியதில் ஆற்றின் மேல்பரப்பில் வட்ட அதிர்வுகள் எழுவது தெரிந்தது.கரையை கண்டுபிடித்து கால்கள் மணலில் தட்டியபோது அவன் முழுமையாய் சோர்வுற்றிருந்தான்.அவனது கண்கள் சிவந்து காந்தின.கண்களை மூடும் முன்பு யாரோ ஒரு வயதானவர் தன்னை நோக்கி ஓடி வருவதை பார்த்தான்.

செல்லம்மாளை தீயிட்ட இடத்தை அவன் அடைந்தபோது இரவாகியிருந்தது. பலவாறான நினைவுகள் குமிழியிட்டு அவனை வதைத்தன.சடுதியில் அவனைச் சுற்றி மரணத்தின் பேய்த்தனமான சிரிப்பு கேட்டது. வண்ணக் கலவையிலான கோமாளித் தொப்பிகள் தொலைவில் தெரிந்தன. அவற்றைத் தொடர்ந்து மண்ணை பிளந்து மரணங்கள் வெளியேறுவதைப் பார்த்து அவன் உடல் நடுங்கினான். பல்லாயிரக்கணக்கான சாம்பல் முகமூடிகளில் தெரியும் சாம்பல் சிரிப்புகள் அவனை நெருங்கின. அவன் வேரிட்டதுப் போல் தரையோடு பதிந்துவிட்ட கால்களை வெகுவாய் சிரமப்பட்டுத் தூக்கி வேகம் பிடித்து ஓடினான்.

O

யட்சன் மண்டபத்தில் இருந்த குருதாஸ் துவண்டு விழுந்த அவனை தாங்கி பிடித்தார். தனக்கு பின்னே மரணம் துரத்தி வருகிறது என்று சொல்லி அவரை முதுகோடு சேர்த்து அணைத்தபடி அவன் விக்கித்து அழுதான். தவ்வி குதித்து நடனமிட்டபடி அவர்கள் பக்கமாய் வாயில் கத்தியை கேந்திய மரணம் வந்து கொண்டிருந்தது.

அவன் கண்களை அழுத்தமாய் மூடிக் கொண்டான். கைகளில் சூடாய் ரத்தம் பரவுவதை உணர்ந்து ஓலமிட்டப்படி அவன் கண் திறந்த போது குருதாஸின் கழுத்தின் பக்கவாட்டில் நெட்டுக்குத்தாக கத்தி சொருகப்பட்டிருந்தது.குருதாஸின் முதுகை பற்றியிருந்த தனது கைகளை விடுத்து அவன் பதறியெழுந்தான். குருதாஸ் கீழே சரிய வெட்டுப்பட்ட நரம்பிலிருந்து ரத்தம் பிரவாகமாய் நிரம்பிக் கொண்டிருந்தது.

தூரத்தில் மரணம் ஆற்றுக்குள் இறங்குவதுக் கண்டு அவன் அங்கே ஓடினான். அவனது காது மடல்களில் வெம்மையேறி வியர்வை சொட்டியது.மரணத்திற்கு பின்னாலிருந்து ஆத்திரம் மேலிட வெறியோடு பாய்ந்து அதன் தொப்பியையும் முகமூடியையும் பலம் மட்டும் கொண்டு அவன் பற்றியிழுத்தான். தடுமாறி திரும்பிய மரணத்தின் முகம் குருதாஸினுடையதாய் இருப்பதைக் கண்டு அவன் அதிர்ந்த நொடியில் மலையாறு மூர்க்கத்துடன் பொங்கி அவனை உள்ளிழுத்துக் கொண்டது

முந்தைய கட்டுரைகடலாழம் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைபூ- கடிதங்கள்