இரண்டாயிரத்து ஐந்து டிசம்பரில் குமரிமாவட்டக் கடலோரங்களை சுனாமி தாக்கியது. மறுநாள் நான் சில நண்பர்களுடன் அங்கு அடிப்படைச் சேவைகளுக்காகச் சென்றிருந்தேன். நினைத்தால் இன்றும்கூட மனம் பேதலிக்க வைக்குமளவு நினைவில் நீடிக்கும் சித்திரங்களைக் கண்டேன். அழியிக்கல் என்ற கடற்கரையில் (குளச்சல் அருகே) மீனவக் குடியிருப்பு உள்ளது. அதைவிடத் தாழ்வாக அனந்தன் கால்வாய் என்ற கைவிடப்பட்டு சேறு மண்டிய பெரிய ஓடை. அதற்கும் கீழே பெரிய தென்னந்தோப்புகள். தோப்புகளெங்கும் தேங்காய் மட்டை ஊறப்போட்டு மட்க வைத்து நாராக்குவதற்கான பெரிய குழிகள். சுனாமி அலை மொத்தக் குடியிருப்பையும் அப்படியே அள்ளி சேற்றுக்கால் வாயிலும் கீழே உள்ள தோப்புகளின் சேற்றுக்குழிகளிலும் புதைத்துவிட்டது.
சுனாமி சென்று முன்றாவது நான்காவது நாளில் கூட பிணங்கள் கிடைத்தபடியே இருந்தன. பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும்தான். புதர்களில் சிக்கி உடைகள் கிழிந்து முக்கால் நிர்வாணமான உடல்கள் சேற்றில் மூழ்கி மட்கி உப்பிப் பெருத்து விரைத்து நின்றன. மணலும் சேறும் வாய் வழியாக உடலுள் நுழைத்து அடைத்திருந்தன. மண் அள்ளும் இயந்திரம் வைத்து பிணங்கள் அள்ளப்பட்டன.
பெரும்பாலான பிணங்களின் வயிறு உப்பி தொப்புள் ஒரு பெரிய கறைபோல விரிந்து நீருக்கும் சேற்றுக்கும் வெளியே தெரியும். அருகே சூழ்ந்துள்ள குப்பைகளையும் தேங்காய் நெற்றுக்களையும் விலக்கினால் கையோ காலோ அகப்படும். அதில் கயிறு போட்டு சுருக்கிட்டு கட்டி இயந்திரம் மூலம் தூக்கும்போது பிணம் சேற்றைப் பிளந்து மேலெழும். பலசமயம் அந்தப் பிணத்தை புரட்டியபடி வேறு ஒரு பிணம் அடியிலிருந்து கிளம்பிவரும். பெரும்பாலான பெண் பிணங்களின் பிடியில் குழந்தைப் பிணங்கள் இருந்தன.
குழந்தைப் பிணங்களைப் பார்ப்பது ஒரு தகப்பனுக்கு நெஞ்சைப் பிளக்கும் அனுபவம். தன் குழந்தைகளை தூங்கும்போது வெகுநேரம் லயித்துப் பார்க்காத பெற்றோர் இருப்பதில்லை. குழந்தைகள் பிணமாகக் கிடக்கையிலும் குழந்தைத்தன்மையுடன் கிடந்தார்கள். சிறிய மதலைகளின் கைகளை நான் ஒருவித சுயவதை மனநிலையுடன் மீண்டும் மீண்டும் பார்த்தேன். குட்டிக்கைகளின் அமைப்பே தனி. புறங்கைகள் மெத்தென்றிருக்கும். விரல் சந்திப்புகளில் சிறிய குழிகள் விழும். விரல்கள் மென்மையாக ஒட்டி பாதிவிரிந்த வாழைப்பூவின் புல்லிகள் போலிருக்கும். தூங்கும் குழந்தைகள் பெரும்பாலும் எதையாவது இறுகப் பிடித்திருக்கின்றன. இறந்த குழந்தைகளும் அப்படித்தான். நாள்கணக்கில் என்னைத் தூங்கவிடாது செய்தன அக்காட்சிகள்.
இரவின்தனிமையில் எழுந்து அமரும்போது அப்போதும் சேற்று வாசனையை நாசியில் உணர்வேன். பிணங்களின் விசித்திரமான அமைதியைக் கேட்பேன். நான்கு நாட்கள் கழித்து மதுரை நண்பர் சண்முகம் தன் வண்டி நிறைய நிவாரணப் பொருட்களுடன் வந்தார். அவருடன் மீண்டும் அழியிக்கல் சென்றேன். அப்போதும் சில பிணங்கள் எடுக்கப்படாமல் விடுபட்டுவிட்டன. அவை அழுகி சாராய ஊறல் போல் வீச்சம் எடுத்தன. அனந்தன் கால்வாயின் சேறு முழுக்க அள்ளி கொட்டப்பட்டு, அது கருமையாக வெயிலில் உலர்ந்து ஆவியை கிளப்பிக்கொண்டிருந்தது. பிணங்களின் மீது காலெடுத்து வைப்பது போலிருந்தது சேற்றில் நடக்கும்போது. சதையின் வெம்மையும் மென்மையும் கொண்ட சேறு.
மனம் அர்த்தமில்லாத சொற்களாக ஒடிக்கொண்டிருந்தபோது திடீரென்று அந்தக் கீதை வரி நினைவில் வந்தது. ‘அர்ஜுனா, வெப்பத்தையும் மழையையும் பஞ்சத்தையும் நானே கட்டுப்படுத்துகின்றேன். நித்தியம் நானே. மரண உருவமும் நானே. இருப்பவையும் இல்லாதவையும் அனைத்தும் என்னிலேயே இருக்கின்றன.’ அந்த வரிகளை நான் கூர்ந்து படித்திருந்தேன். ஆராய்ந்திருந்தேன். ஆனால் அந்தக் கணத்தில் அவை அளித்த பொருள் விரிவை எப்போதுமே அளித்ததில்லை. நாட்கணக்காக அவ்வரிகள் என்னைத் தொடர்ந்து என் சிந்தனைகளை மூழ்கடித்து நிறைந்தன.
கவிதைகளை வாசிக்கும் வழக்கம் உடையவர்களுக்கு நான் சொல்லவருவது புரியலாம். கவிதைகளை நாம் உள்வாங்குவதில் பல்வேறு படிநிலைகள் உள்ளன. கவிதையை படித்ததுமே நம் மனதில் உருவாகும் அதிர்வு முக்கியமானது. இதன்மூலமே நாம் கவிதைகளை அடையாளம் காண்கிறோம். கவிதை நம்மை ‘எப்படியோ’ கவர்ந்துவிட்டிருக்கிறது என்று உணர்கிறோம். ‘இனம்புரியாத’ ஒரு பரவசம் நமக்கு அக்கவிதை மூலம் உருவாகிறது. கூர்ந்து பார்த்தால் அக்கவிதை முன்வைக்கும் படிமங்கள், வடிவம், மொழி ஆகியவற்றுக்கும் நம் ஆழமான மனப்படிமங்கள், அந்தரங்க மொழி ஆகியவற்றுக்குமான இசைவே இதற்குக் காரணம் என்று அறியலாம்.
அடுத்தபடியாக நாம் அக்கவிதையை பற்றி யோசிக்க ஆரம்பிக்கிறோம். அது கூறும் பொருளைப்பற்றி தர்க்கபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் யோசிக்கிறோம். அக்கவிதையின் வடிவம் குறித்து பிற கவிதைகளுடன் ஒப்பிட்டு யோசிக்கிறோம். இவ்வாறாக அக்கவிதையை நாம் தரம்பிரிக்கிறோம். மிக நல்ல கவிதை, சுமாரான கவிதை என்று வகைப்படுத்துகிறோம். இதன்பின் அக்கவிதையைப் பற்றிக் கூறுவதற்கு நமக்குரிய சில சொற்றொடர்களை நாம் உருவாக்கிக் கொள்கிறோம். அனேகமாக, சாதாரணநிலையில், நம் கவிதை வாசிப்பு இங்கே முடிவடைகிறது.
ஆனால் ஒரு கவிதை நம்மில் நிகழ்வதன் மிகச்சிறந்த தளம் ஒன்று இனிமேல்தான் உள்ளது. எங்கோ எப்போதோ ஒர் அனுபவத்தில் நாம் மூழ்கியிருக்கையில் ஒரு கவிதை– பலசமயம் எந்தக்கவிதையில் உள்ளது என்று தெரியாத ஒரு வரி– இயல்பாக நம் நினைவில் எழுகிறது. நம் மனம் அந்தக் கவிதை வரிகளை ஓயாது புலம்ப ஆரம்பிக்கிறது. பித்துபோல, பேதலிப்பு போல அந்த வரிகளில் ஒன்றிவிடுகிறோம். அந்த வரிகள் அப்போது அவை எழுதியவரின் வரிகள் அல்ல, அவை நம்முடைய வரிகள் அப்போது. அதன் அர்த்தங்களும் உணர்வுநிலைகளும் முழுக்க முழுக்க நம்முடையவை. அந்தக் கவிதையின் அனுபவம் நாம் ‘பெறும் அனுபவம்’ அல்ல; ‘நம்மில் நிகழும் அனுபவம்’ அப்போது.
ஏன் அந்தவரியை நம் மனம் நினைவு கூர்ந்தது? ஏன் அந்தவரியை அப்படி விரித்துக் கொள்கிறது? நம் ஆழ்மனம் வாழ்வை எப்படி எதிர்கொள்கிறது என்பது சார்ந்தது இது. ஆகவே அந்தத் தருணம் முற்றிலும் நம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது. விசித்திரமான முறையில் தன்னிச்சையானது. விபரீதமான முறையில் என்றுகூட கூறலாம். பெரும் கொடுமை ஒன்றின் முன் நம் ஆழம் குதூகலம் அடையலாம். பெரிய அழிவு ஒன்றின் போது அது ஆறுதல் கொள்ளலாம். புறக்கணிக்கத்தக்க ஒரு சிறு விஷயம் ஓயாது உளைந்து பெருகிப் பல்கலாம். அதையொட்டி நினைவில் எழும் வரிகள் பலசமயம் நம்மைக் குழப்பவும் அதிரவும் வைக்கும். இந்த வரி இங்கே எப்படி வந்தது என்று மனம் பிரமிக்கும், எரிச்சல்படும். ஆனால் அவையெல்லாம் கண்காணாத ஆழ்மன ஒட்டத்தினால் இணைக்கப்பட்டுள்ளன என்று பிறகு நம்மால் கண்டு உணர முடியும். இவ்வாறு நம்மில் முளைத்தெழும் கவிதை வரிகளின் ஒரு தொகுப்பு நம்மிடம் இருக்கும். நாம் ஆயிரக்கணக்கான கவிதைகளை வாசித்திருக்கலாம். நாம் அடைந்தவை அத்தகைய சில வரிகள் மட்டுமே.
‘நித்யமும் நானே மரண உருவமும் நானே’ (அமிர்தம் சைவ மிருத்யுஞ் சைவ:) என்று மனம் புலம்பியபடியே இருந்தது. நான் நாளெல்லாம் அலைந்தேன், சாப்பிட்டேன், தூங்கினேன், எழுந்தேன். ஆனால் அவ்வரி கூடவே ஒலித்தது. அவ்வரிகள் நீரோடையாக சுழித்தோடிய மனதின் அடித்தரையாக இருந்தன. மெல்ல ‘சன்னதம்’ அடங்கி நான் மீண்ட போது அவ்வரிகள் தெளிந்து துல்லியமாகத் தெரிந்தன. வியப்புடன் நான் ஒன்றைக் கண்டு கொண்டேன். கீதையில் அவ்வரிகளை நான் முற்றிலும் எனக்குரிய பொருளில் எடுத்துக் கொண்டிருந்தேன். கீதையில் ஒன்பதாம் அத்தியாயத்தில் பத்தொன்பதாம் சுலோகம் அது. அங்கு கிருஷ்ணன் தன்னைப் பற்றி அர்ஜுனனிடம் கூறுகிறார். நானோ, அங்கு இறந்து கிடக்கும் உடல்களும், இறப்புக்காக ஏங்கி நிற்கும் என் சுயமும், இறப்பாகி வந்து விரிந்த பெருங்கடலும் எல்லாம் நானே என்று அவ்வரிகளை எடுத்துக் கொண்டிருந்தேன். அந்த துணுக்குறலை சிந்தனைமூலம் தாண்டியபோது அந்தப் புரிதல்கூட முற்றிலும் கீதையின் சாரமே என்று கண்டுகொண்டேன்.
கீதையைப் பயில்வதில் இந்த ‘திறப்பு’ ஒரு முக்கிய அம்சமாக நம்முடைய குருகுலக் கல்விமுறைகளில் வலியுறுத்தப்படுகிறது. ஒரு கட்டுரையையோ, அறிக்கையையோ, விளக்கத்தையோ, சமன்பாட்டையோ பயில்வது போன்றதல்ல கீதையைப் பயில்வது. அதற்கு கீதையின் வடிவத்தைப் பற்றிய ஒரு தெளிவு நமக்குத் தேவை. கீதை ஓர் உபநிடதம். உபநிடதங்கள் ஒருவகை நாடகப் பாங்கு கொண்ட புனைவுகள். உச்சகட்டம் ஒன்றில் இருந்து உரையாடலாக விரிபவை. இப்படி விரியும் உரையாடலின் சொற்கள் சகஜமான இயல்புடன் அமைந்திருக்காது. அவை சூத்திர வடிவில் அமைந்திருக்கும். நெடுங்காலமாகவே இந்திய ஞானமரபில் சூத்திரம் என்ற நூற்பா அமைப்பு இருந்து வந்துள்ளது. ஒரு நீண்ட விவாதத்தின் இறுதியில் வந்தடைந்த கருத்தை சுருக்கமான சொற்களில் ஒலியமைதியுடன் வகுத்துரைப்பதே சூத்திரம் ஆகும். சூத்திரத்தின் பயனே அது நினைவில் நிற்கவேண்டும் என்பதே – அதாவது அது மனனம் செய்வதற்குரிய வரி. மத்வாச்சாரியார் பத்மபுராணத்தில் இருந்து சூத்திரம் என்றால் என்ன என்பதை விளக்க ஒரு வரையறையை எடுத்துக் கொடுப்பதை தன் பிரம்ம சூத்திர உரையில் அ.வே.சுகவனேச்வரன் மேற்கோள் காட்டுகிறார்.
அல்பாக்ஷரமஸம்திக்தம் ஸாரவத் விச்வதோ முகம்
அஸ்தோபமன வத்யம் ச ஸ¥த்ரம் விதோ விது:
(குறைந்த எழுத்துக்கள் கொண்டதாகவும், ஐயம் எழாதபடி கூறப்பட்டதாகவும், மையக்கருத்தை கூறுவதாகவும், வாதங்களின் முடிவாகவும், பல வேறு நோக்குகளுக்கு இடம் கொடுப்பதாகவும், திரும்பத் திரும்ப கூறாததாகவும் பிழையற்றதாகவும் இருப்பதை அறிவுடையோர் சூத்திரம் என்பர்.)
இதே கருத்தை பவணந்தி முனிவர் நன்னூலில் குறிப்பிடுகிறார்.
‘சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருளை
செவ்வன் அடியில் – செறிந்து இனிது விளக்கி
திட்ப நுட்பம் சிறந்தன சூத்திரம்’
பழங்காலத்தில் கல்வி என்பது பெரும்பாலும் செவிவழிக்கல்வியே. ஏடு ஒரு துணைப்பொருள் மட்டுமே. ஆகவே அடிப்படைக் கருத்துக்களை மனதில் நிறுத்தவும், தேவையானபோது எடுத்துக்காட்டவும் சூத்திரம் என்ற அமைப்பு உதவியது. பெரும்பாலான இலக்கண நூல்கள் சூத்திரங்களே. தொல்காப்பியம், நன்னூல் போன்றவை உதாரணம். அதேபோல ஒரு துறையின் மூலநூலாக உருவாகும் நூல்களும் சூத்திர வடிவிலேயே காணப்படுகின்றன. ‘பிரம்மசூத்திரம்’ ‘நியாய சூத்திரம்’ போன்ற நூல்கள் உதாரணம்.
சூத்திரங்களைக் கற்பதற்கு உகந்த வழியாகக் கருதப்படுவது முதலில் அதை மனப்பாடம் செய்வதும் பிறகு அதை வரிவரியாக நினைவில் மீட்டி ஆழமாகச் சிந்திப்பதுமாகும். பெரும்பாலான குருகுலங்களில் சூத்திரங்கள் கற்பிக்கப்படும்போது ஒரு நாளுக்கு ஒரு சூத்திரம்தான் கற்பிக்கப்படும். சிலசமயம் ஒரு வாரத்திற்கு ஒன்று. பிறகு அடுத்த சூத்திரம் கற்பிக்கப்படும் வரை எதுவுமே படிக்கக்கூடாது. எதையும் கேட்கவோ எழுதவோ பேசவோ கூடாது. முற்றான தனிமையில் அந்த வரிகளை மட்டும் நெஞ்சில் சுமந்தபடி தனித்திருக்க வேண்டும். சில குருகுலங்களில் அந்த சூத்திரத்தை முன்வைத்து சீடர் நடுவே ஆழமான ஒரு விவாதம் ஊக்குவிக்கப்படுகிறது. அதன்பின் அவர்கள் அனைவரும் தனித்தனியாக முழுமையான தனிமைக்கும் மௌனத்திற்கும் திரும்புகிறார்கள். இதை ‘மனன காலம்’ என்கிறார்கள்.
இந்த காலகட்டத்தில் அந்த வரியின் மீது மனம் முழுமையாகப் படிகிறது. தொடர்ந்து சிந்திக்கிறது. சிந்தித்து சிந்தித்து சலித்து அப்படியே விட்டு விட்டு வேறு திசைகளுக்குச் செல்கிறது. அப்படி திசைமாறிச் செல்லுவது போதமனம்தான். ஆழ்மனம் அவ்வரியிலேயே நீடித்திருக்கும். சட்டென்று ஆழ்மனம் அவ்வரியில் ஒரு திறப்பை நிகழ்த்தி பரபரக்கச் செய்யும். சிலசமயம் சிந்தனை ஓட்டம் இயந்திரத்தன்மையாகவே அவ்வரிகளை மீளமீள வந்தடைந்தபடி இருக்கும். இவ்வாறு அவ்வரி அந்த மனதில் உள்ள ஈரத்தை உறிஞ்சிக் கொண்டு வேர்பரப்பி முளைத்தெழுகிறது.
உபநிடதங்கள் ஒரேசமயம் புனைவுத் தன்மையும் சூத்திர இயல்பும் உடையநூல்கள். அவற்றுக்கு இன்னும் நுட்பமான கவனம் தேவைப்படுகிறது. ஐயமின்றி அவை இந்திய ஞானமரபின் உச்சத்தில் உள்ள நூல்கள், தத்துவ உச்சம் தேடும் வாசகர்களுக்கு மட்டும் உரியவை. அவை கோரும் நுண்வாசிப்பை கொடுக்க முடியாத வாசகன் அவற்றை வாசிப்பது பயனற்றதும் தீமை பயப்பதுமாகும். உபநிடதங்கள் முன்வைக்கும் அந்தப் புனைவு நிலையில் இருந்து தீவிரமான கற்பனை மூலம் முன்னகர்ந்து சென்று அந்த மொத்த உரையாடலையும் கற்பனையில் தன் அகத்துள் நிகழ்த்திக் கொண்டபடியே ஒரு வாசகன் அவற்றை வாசித்தறிய வேண்டும். இது முதல்படி.
கூடவே உபநிடத வரிகளை சூத்திரங்களாக எடுத்துக்கொண்டு ஆழமான மனன காலகட்டம் ஒன்றை அவன் தாண்டிவரவேண்டும். சொல் சொல்லாக கீதைச் சூத்திரங்களை பிரித்துப் பகுத்து அறிவதுடன் ஒவ்வொரு சொல்மேலும் தனக்கே உரிய மனத்திறப்பு ஒன்றை அவன் அடைந்தாகவேண்டும். அதாவது உயரிய கற்பனையும் தூய தர்க்கமும் இணையக்கூடிய ஒரு தளம் இவ்வாசிப்பிற்குத் தேவையாகிறது.
இதற்கடுத்த நிலை ஒன்று உண்டு. கீதையை ஒர் ஆன்மிக வழிகாட்டி நூலாக மட்டுமே கருதுபவர்களுக்கு இது உவப்பளிக்காமலிருக்கலாம் – ஆனால் என் குருநாதர்கள் இந்தக் கோணத்தை முன்வைத்தனர். என் சுய அனுபவத்தில், ஒர் இலக்கிய ரசிகனாகவும் இலக்கியவாதியாகவும் நான் அதை வழிமொழிகிறேன். கீதையை நாம் ஒரு கவிதையாகவும் வாசிக்க வேண்டும்.
முந்தைய வாசிப்புக்கும் கவிதை வாசிப்புக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதைச் சுருக்கமாகச் சொல்கிறேன். ஒரு அறிவியல் சூத்திரத்தையும் கவிதை வரியையும் ஒப்பிட்டால் இதை நாம் காணலாம். அறிவியல் சூத்திரம் அமைப்பிலும் சொல்லழகிலும் கவிதை போலவே இருக்கலாம்.
‘ஆற்றலை உருமாற்றலாம்
அழிக்க இயலாது’
இது ஓர் அறிவியல் தேற்றம். இங்கு கூறப்படும் கருத்தில் நம் கற்பனையைக் கலப்பதற்கே இடமில்லை. இதன் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு சொல்லிணைப்பும் கேட்பவர் சொல்பவர் இருவருக்கும் பொதுவாக திட்டவட்டமாக வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆகவே இதை கூறுபவர் பெறுபவர் இருதரப்பிலும் ஒரே பொருளே உள்ளது. பொருள்மயக்கம் என்பது இங்கு பிழை என்றே பொருள்படும்.
‘என் கரங்களின் ஆற்றலில்
ஆற்றப்படுகின்றது
என் பிரபஞ்சம்!’
இது ஒரு கவிதை வரி. இங்கு கூறப்படும் உணர்வும் சரி கருத்தும் சரி வாசகனின் கற்பனையினாலேயே முழுமைப் படுத்தப்படுகின்றன. வாசகனின் கற்பனையைத் தூண்டும்போதே இவ்வரி தன் அர்த்தங்களை உருவாக்க ஆரம்பிக்கிறது. இதில் உள்ள ஒவ்வொரு சொல்லையும் வாசகன் தன் கற்பனை மூலம் விரித்தெடுக்க வாய்ப்பு உள்ளது. ‘கரங்கள்’, ‘ஆற்றல்’, ‘பிரபஞ்சம்’ ஆகிய சொற்களுக்கு அவன் தன் அனுபவம் சார்ந்து தனக்குரிய பொருள் தரலாம். ஆகவே இது நமக்களிக்கும் அனுபவம் நம்முடையது. அவ்வனுபவம் மற்றும் அர்த்தங்களின் சாரமே ஆசிரியன் அளிப்பது. கவிதையில் பொருள்மயக்கம் (Ambiguity) என்பது ஓர் உயரிய அழகியல் தன்மை.
கீதையை ஒரு சூத்திரமாக எடுத்துக்கொண்டு நுண்பொருள் தேடிக் காண்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு அதை கவிதை வரியாக எடுத்துக் கொண்டு உச்சப்பொருள் காண்பதும் முக்கியம். முதல் வாசிப்பில் அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்று தேடுகிறோம். இரண்டாம் வாசிப்பில் அதிலிருந்து எவ்வளவு பெறலாம், அதன் வழியாக எவ்வளவுதூரம் செல்லலாம் என்று பார்க்கிறோம். நம் மரபில் நெடுங்காலமாகவே இந்த வாசிப்புக்கு இடமிருந்தது. அரவிந்தர் உட்பட பல அறிஞர்கள் கவித்துவ வாசிப்பை கீதைக்கும் உபநிடதங்களுக்கும் அளித்துள்ளார்கள். முன்னரும் அந்த வாசிப்பு இருந்துள்ளது.
இரு உதாரணங்களைச் சொல்லலாம். ஓஷோவின் பெரும்புகழ் பெற்ற கீதைப்பேருரையில் எடுத்த எடுப்பிலேயே கீதை நிகழும் புனைவுத் தருணத்தை கவித்துவக் குறியீடாகக் கண்டு தன் வாசிப்பை அளிக்கிறார். அது கண்தெரியாத ஒருவருக்கு [திருதராஷ்ட்ரன்] சொல்லப்பட்டது. சொன்னவன் [சஞ்சயன்] அதைக் காணவுமில்லை. பருவடிவக் காட்சியின் உதவியில்லாமல் தூயஅறிவால் அறியப்பட்ட நிகழ்வு அது என்கிறார் ஓஷோ. அதை பலவகையில் விளக்கிச் செல்கிறார். நித்ய சைதன்ய யதி தன் பகவத்கீதை ஸ்வாத்யாயம் என்ற நூலில் முதல் செய்யுளில் திருதராஷ்டிரன் ‘மாமேகம்’ [நம்முடைய] என்ற சொல்லை பயன்படுத்தியிருப்பதை ஆழமான கவித்துவ வாசிப்புக்கு ஆளாக்குக்கிறார். ‘பாண்டவர் படைகளும் என்னுடைய படைகளும்’ என்கிறார் அவர். ஆகவே கீதை முழுக்கமுழுக்க உலகியல் சார்ந்த பற்றிலும் அதன் விளைவான பாகுபாடு நோக்கிலும் உழலும் ஒருவருக்குச் சொல்லப்பட்டது என்று பொருள் கொள்கிறார். இத்தகைய வாசிப்புகள் கீதையின் சாரத்தை கவித்துவமாக மேலே கொண்டு வருகின்றன.
தர்க்கம் கற்பனை அதாவது தத்துவம் கவிதை என்னும் இரு தளங்களிலும் வாசகன் தன் தியானத்தை கீதையின் வரிகளுக்கு அளித்து அவ்வரிகள் தன்னில் நிகழ இடமளித்தாக வேண்டியுள்ளது. கீதையிலோ உபநிடதங்களிலோ அப்படி அனைத்து வரிகளும் நம்மில் முளைக்கும் என்று கூறவே முடியாது. நம் ஆழ்மனம் சில வரிகளை தேர்வு செய்கிறது. குழந்தை பொம்மை தெரிவு செய்வது போல, இயல்பாக, தன்னிச்சையாக. அந்த தெரிவே எப்போதும் சரியானது. அவ்வரிகள் வழியாக நம் அகமனம் பயணம் நிகழ்கிறது. வெளியே இருக்கும் கீதை என்ற நூல் அந்நிலையில் நம்முள் நிகழ்கிறது. கீதை நம் அகமாக மாறுகிறது.
இவ்வாறு நம் மனம் தெரிவு செய்யும் வரிகளில் ஒன்று நம் ‘ஆப்தவாக்கியம்’ ஆக இருக்கும் என்பது நம் ஞானமரபின் கண்டடைதலாகும். அனைவருக்கும் பொதுவாக ‘முழக்கங்கள்’ தான் இருக்க முடியும். ஆப்த வாக்கியம் என்பது மிக மிக அந்தரங்கமானது. ஆகவே அது ஒருவர் தானே கண்டடைவது. அவரது ஆளுமைக்கும் வாழ்வுச்சூழலுக்கும் பொருந்துவது அது. அந்த ஆப்த வாக்கியத்தில் அவர் அதுவரை கற்றறிந்த ஞானம் முழுக்க குவியும் என்பது தியானமரபின் கூற்று. அந்த ஆப்த வாக்கியம் ஒரு சாவி போல. அம்மனிதர் கற்று உள்வாங்கி தன் ஆழத்தில் தன்னையறியாமலேயே சேர்த்து வைத்துள்ள எல்லா மெய் ஞானங்களையும் திறக்கும் சாவி அது. ஆப்த வாக்கியத்தை தியானம் செய்வதற்குரிய ஒலியாக மாற்றிக்கொள்ள நம் தியான மரபுகள் கற்பிக்கின்றன.
தியானத்தில் ஒருவன் ஒரு வரியை மீண்டும் மீண்டும் தன்னுள் ஒலிக்கவிடும்போது அவனுள் அது வளர்கிறது. முடிவிலாத அர்த்தங்களை உருவாக்குகிறது. பின்பு அர்த்தங்களை இழந்து வெறும் அதிர்வாக மாறுகிறது. ஞானமே ஞானத்தைக் கடந்து செல்லும் பாதையை உருவாக்கித்தரும் வழியாகும் இது. இங்கு அதைப்பற்றி விளக்கத் தருணம் இல்லை. அத்தகைய ஆப்தவாக்கியங்களைக் கண்டடையும் ஒரு களமாக உபநிடதங்களும் கீதையும் நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளன. பல நூற்றாண்டுகளாக பற்பலக் கோணங்களில் விளக்கப்பட்டு உரை வகுக்கப்பட்டு பயிலப்பட்டும்கூட பிரம்மசூத்திரம் முதலிய நூல்கள் அப்படிக் கருதப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கீதையைப் பயில்வதில் – அதாவது சுயகல்வியில் – இந்த நுண்வாசிப்பு முறை முக்கியமானது. மூளையால் மட்டுமில்லாது கற்பனையாலும் நுண்ணுணர்வாலும் நாம் கீதையைக் கற்க வேண்டும். கீதை குறித்த எந்த உரையும் – அது எந்த மெய்ஞானியால் எழுதப்பட்டதாக இருப்பினும் – கீதையைக் கற்பதற்கு மட்டுமே நமக்கு உதவும். அதை உள்வாங்குவதற்கு சுயகல்வி ஒன்று மட்டுமே உதவும்.
***
முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை
கீதையை எப்படிப் படிப்பது? ஏன்?