புறப்பாடு II – 18, கூடுதிர்வு

என் அப்பா வீட்டைவிட்டு முதல்முறையாக கிளம்பிச் சென்றபோது அவருக்கு ஒன்பது வயது. பாட்டியை நோக்கி கையை ஓங்கி ‘ச்சீ போடி!’ என்று பல்லைக்கடித்துச் சொல்லிவிட்டு இடுப்பில் ஒற்றைத்துண்டு மட்டும் அணிந்தவராக படியிறங்கி ஓடி ஆற்றுக்குச் செல்லும்பாதையில் கைதைப்புதர்களுக்குள் புகுந்து காணாமலானார். பாட்டி அதை பெரியதாக எடுக்கவில்லை. வந்துவிடுவார் என்றுதான் மாலை வரை நினைத்திருந்தாள். இரவில்தான் கொஞ்சம் கவலை வந்தது. பக்கத்துவீடுகளிலும் கோயில்களிலும் தேடிப்பார்த்தாள். காணவில்லை என்று ஆனபோது திகில் ஏற்பட்டது. ஒருமாதம் கழித்துத்தான் அப்பா கிடைத்தார். அதற்குள் பாட்டிக்கு ஊரில் தீராத அவச்சொல் உருவாகிவிட்டிருந்தது.

வாழ்நாள் முழுக்க அப்பாவுக்கும் பாட்டிக்கும் இடையே கண்களின் சந்திப்பே இருந்ததில்லை. அவர்கள் நேருக்குநேர் பேசிக்கொண்டதை நான் பார்த்ததே இல்லை. அப்பாவின் காதில் விழும்படி சுவரை நோக்கி பாட்டி சொல்லும் சிலவரிகளுக்கு பாட்டியின் காதில் விழும்படி அப்பா பதில்சொல்வார். இருவரும் வெவ்வேறு திசைகளைப் பார்ப்பார்கள். அவர்கள் இருவருக்கும் உடனடி முன்னிலை போல அம்மா நின்றுகொண்டிருப்பாள். இருவரும் கோபம் கொள்ளும்போது அம்மாவைத்தான் திட்டுவார்கள்.

எங்கள் வீட்டின் உள்ளறையில் உயர்தரமான பனையோலைப்பாயும் மெத்தையும் போர்வையும் சுருட்டப்பட்டு கொடியில் தொங்கும். அது பாட்டிக்குரியது. அதைப் பார்க்கும்போதெல்லாம் ‘பாட்டிக்க பாயி’ என்று சின்னவயதில் நான் சுட்டிக்காட்டுவேன். அதுதான் எனக்கு பாட்டி என்றாலே நினைவுக்கு வரும் இருப்பு. பாட்டி எங்கள் வீட்டுக்குவருவது வருடத்தில் அதிகபட்சம் இருமுறை. வந்த அன்று காலை அந்த சுவர்நோக்கிய உரையாடல் நடக்கும். அதிகம்போனால் மறுநாளே அது சண்டையாகி பாட்டி கிளம்பிச் சென்றுவிடுவாள்.

என் அப்பா அடிமுறை வித்வான் சங்குஆசானின் மகன். அவர் அப்பா கைக்குழந்தையாக இருக்கையிலேயே மறைந்தார். அதன்பின் பாட்டிக்கு மேலும் பலபிள்ளைகள். அவர்களில் இரண்டுபேர் தங்கினர். தம்பி அப்பாவை விட ஐந்துவயது இளையவர். தங்கை எட்டுவயது சின்னவள். அப்பா அவரது நினைவறிந்த நாளிலேயே அந்த வீடு தனக்குரியதில்லை என்று கண்டுகொண்டார். அவர் தன் அப்பாவை கண்டதே இல்லை என்றாலும் அவரது மகன் என்ற அடையாளத்தை கெட்டியாகப்பிடித்துக்கொண்டார். யாராவது கேட்டால் தன்னை வயக்கவீட்டு சங்குஆசானின் மகன் என்றுதான் சொல்வார். ஆசானை அனேகமாக எவருமே ஞாபகம் வைத்திருக்கவில்லை என்ற போதிலும்.

அப்பா ஒருமுறை தன் தம்பியை மூர்க்கமாகத் தாக்கினார். நெற்றி உடைந்து ரத்தம் கொட்டியது. தம்பி தாக்குதலை வாங்கிக்கொண்டு ‘அண்ணா அடிக்காதே அண்ணா’ என்று கத்திக்கொண்டு அண்ணாவை நோக்கித்தான் ஓடி வந்தான். தன்னைவிட மிகவும் மூத்த அண்ணனின் நல்லெண்ணத்தையும் அன்பையும் ஈட்டுவதற்காக ஏங்கிய சிறுவன். அப்பா பயந்துவிட்டார். சற்றுமுன்புதான் கோயிலில் இருந்து வந்த சர்க்கரைப்பாயசத்தை தம்பிக்கு அம்மா ஊட்டிவிடுவதை அப்பா பார்த்திருந்தார். அவர் கோயிலிலேயே சாப்பிட்டிருப்பார் என்று பாட்டி நினைத்திருந்தாள். அப்பா கோயிலுக்குப் போகவில்லை. வயலுக்குத்தான் போயிருந்தார். கோபத்தை அடக்கிக்கொண்டு சிலநிமிடங்கள் பேசாமல் நின்றபின் புல்செதுக்கியை கையிலெடுத்து மீண்டும் வயல்பக்கமாகச் செல்ல அவர் கிளம்பியபோதுதான் தம்பி அவரைநோக்கி ஏதோ சொல்லிக்கொண்டு ஒடிவந்தான். அப்பா புல்செதுக்கியின் இரும்புநுனியால் ஓங்கி அடித்தார்.

ரத்தத்தைக் கண்டதும் அப்பா திகைத்து நின்றார். திண்ணையிலிருந்த பாட்டி கூச்சலிட்டுக்கொண்டு இறங்கி ஓடிவருவதைக் கண்டதும் அப்பா வெளியே பாய்ந்து ஓட ஆரம்பித்தார். ஆற்றங்கரை வழியாக தோட்டங்களுக்குள் புகுந்து ஓடி ஆற்றூர் சென்றிருக்கிறார். குழித்துறை சிவன்கோயிலின் முகப்பில் கிடந்தவருக்கு அங்கே பிரசாதம் கிடைத்திருக்கிறது. அங்கிருந்து மீண்டும் ஓடி நெய்யாற்றங்கரைக்குச் சென்றார். அங்கிருந்து பாறசாலைக்கோயிலுக்குச் சென்றார். பாறசாலையில் பெரிய ஊட்டுபுரை உண்டு. அங்கேயே சமையலுக்குக் குற்றேவல்செய்துகொண்டு சாப்பிட்டுக்கொண்டு தங்கிவிட்டார்.

பாட்டிக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் கோயிலைச் சேர்ந்தவர்கள்தான். யானைக்காரன் பிறுத்தா நாயர் பாறசாலைக்கு வரும்போது அப்பா அங்கே சமையல்பாத்திரங்கள் கழுவுவதைக் கண்டார். அப்படியே கையோடு பிடித்து யானைமேல் ஏற்றி திரும்பக்கொண்டுவந்தார். ஊரே அப்பா யானைமேல் அமர்ந்து திரும்பி வந்ததை தெருவில் கூடிநின்று வேடிக்கை பார்த்தது. ‘ திரும்பிவந்தா ஆனைப்புறத்திலே வரணும்னு ஒரு சொல்லு உண்டு பாத்துக்கோ’ என்று சித்தப்பா சொன்னார்.

அப்பா அதன்பின்பு பெரும்பாலும் கோயிலிலேயே தங்கிக்கொண்டார். கோயிலில் இருந்து வீட்டுக்கு குடும்ப உரிமையாக எட்டு கட்டி சாதம் கொடுக்கப்படும். அதில் ஒன்றை காலையிலேயே வாங்கி பாதியைச் சாப்பிட்டுவிடுவார். மிச்சத்தை வாழையிலையில் சுருட்டி எடுத்துக்கொண்டு நடந்து மார்த்தாண்டம் மிஷன் பள்ளிக்கூடம் செல்வார். மாலையில் கோயிலில் கிடைக்கும் பிரசாதத்தை சாப்பிட்டுவிட்டு மண்டபத்திலேயே தூங்கிக்கொண்டார். உடைகளும் படிப்புக்கான பணமும் பாட்டியால் யாரிடமாவது கொடுத்தனுப்பப்படும். இல்லாவிட்டால் அப்பாவே தோட்டத்தில் புகுந்து தேங்காய் பறித்து கடைகளுக்குக் கொடுத்து பணம் வாங்கிக்கொள்வார்.

பாட்டி காலையில் ஆற்றில் குளித்து ஈர உடையும் கையில் துளசியும்பூவுமாக காலையில் கோயிலுக்கு சாமிகும்பிட வரும்போது அப்பா மண்டபத் தூண்களில் ஒளிந்து கொள்வார். பாட்டி அப்பாவை அவர் தன்னைப்பார்ப்பதற்கு முன்னதாகவே பார்த்துவிட்டிருப்பாள். ஆனால் தலைதிருப்பிப்பார்ப்பதோ கண்களால் அப்பாவைத் தேடுவதோ கிடையாது. வீட்டுக்குச் சென்றபின் கோயில் காவலரை வரவழைத்து ‘அவன் முட்டில என்னது காயம்? ஓடுறப்ப விழுந்தானா? மேலக்கோணம் வைத்தியர் குடுத்த எண்ணை இருக்கு. போட்டுக்கச் சொல்லு…நான் குடுத்ததாச் சொல்லாதே’ என்பாள்.

அப்பாவின் தம்பியும் தங்கையும் அப்பாவின் மீது பெரும் பிரியத்துடன் இருந்தார்கள். அவர் வீட்டில் இல்லாத வாழ்க்கை வாழ்வது அந்தக் கவர்ச்சியை மேலும் அதிகரித்தது. அவர் சாலையில் செல்லும்போது இருவரும் வேலியில் ஒளிந்து நின்று பார்த்தனர். அவர் அவர்களிடம் ஒரு வார்த்தைகூடப் பேசுவதில்லை. ‘வெட்டுபோத்து போறதுமாதிரியாக்கும் போக்கு…நானும் தங்கச்சியும் அண்ணாண்ணு விளிப்போம். திரும்பிப்பாக்காம போவார். மறுபடியும் அண்ணாண்ணு விளிப்போம். கோவத்தோட திரும்பினாருண்ணா ஒற்றை ஒரு ஓட்டம்…அப்படி ஒரு பயமாக்கும்’

அப்பாவும் பாட்டியும் மாநிறம். ஆனால் இரு சின்னக்குழந்தைகளும் நல்ல வெள்ளைநிறம். அப்பா இருவரையும் வெள்ளாரங்கல்லுகள் என்றுதான் சொல்வார். ஒருமுறை தம்பிக்கு கடுமையான விஷக்காய்ச்சல் வந்து குலசேகரம் மிஷனாஸ்பத்திரியில் கொண்டுசென்று வைத்திருந்தார்கள். அப்பா எட்டுநாட்களும் ஆஸ்பத்திரி திண்ணையிலேயே அரைப்பட்டினியுடன் அமர்ந்திருந்தார். ஆனால் உள்ளே சென்று ஒருமுறைகூட தம்பியைப் பார்க்கவில்லை. ‘உள்ள போயி பாருடா’ என்று சொன்ன பங்கிப்பாட்டியிடம் ‘போடி…அடிச்சு பல்ல எளக்கீருவேன்’ என்றார் அப்பா ‘எளக்குகதுக்கு எனக்கினி பல்லு இல்லியே மக்களே’ என்று சொல்லி பங்கிப்பாட்டி போனாள்.

அப்பா முதல்முயற்சியிலேயே மெட்ரிகுலேஷன் பரீட்சையில் வென்றார். அந்தச்செய்தியை பாட்டியிடம் சொல்வதற்காக தம்பியை கையசைத்துக் கூப்பிட்டார். ‘டே வெள்ளாரங்கல்லு….வாடா இங்க’ தம்பி அருகே வந்ததும் ‘உனக்க அம்மை இருக்காளாடா வீட்டிலே?’ என்றார்.

‘இருக்காங்க….ஏடு படிக்காங்க’

‘அந்த ஏட்டை அவள கட்டையிலே ஏத்துறப்ப சேத்துவச்சு கொளுத்தணும்….நீ போயி நான் பாஸாயிட்டேன்னு சொல்லு. இனிமே எனக்கு ஆருக்க பிச்சையும் தேவை இல்லை. இத்தனைநாள் போட்ட சோற்றுக்கு உண்டான காசை சம்பாதிச்சு குடுத்திடறேன்னு சொல்லு…போ’

‘அண்ணா…’

‘டேய் போடா’

அதைச் சொன்னபோது ‘நல்லது, அந்த மூச்சுக்கனம் இருந்தா எங்க போனாலும் பொழைச்சுக்கிடுவான்…. ஆதிகேசவன் துணை இருக்கட்டும்’ என்று பாட்டி சொன்னாள்.

அப்பா திருவட்டாறிலிருந்து கிளம்பி குலசேகரம் சென்று ஒரு மாடியறையை வாடகைக்கு எடுத்து அதில் தங்கினார். அன்று திருவிதாங்கூர் அரசில் வேலைபார்ப்பவர்களுக்கு அடிப்படை ஆங்கிலம் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும் என்று ஓர் அரசாணை வந்திருந்தது. பிரவர்த்தியார் என்னும் கிராமஅலுவலர்கள், திருவிதாங்கூர் நாயர் பிரிகேட் போலீஸ்காரர்கள், அலுவலகக் குமாஸ்தாக்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள அலைந்தார்கள். அப்பா தன்னுடைய அறையில் ஆங்கில வகுப்பு ஆரம்பித்தார். அதற்கு பதினைந்துபேர் வந்தார்கள். இதுபோக இரண்டுபேருக்கு வீட்டுக்குச் சென்று ஆங்கிலம் கற்றுக்கொடுத்தார்.

அப்பா மல்மல் வேட்டியும் சட்டையும் வாங்கிப் போட்டுக்கொண்டார். சட்டைப்பித்தான்களை வெள்ளியில் செய்து மாட்டிக்கொண்டார். ஏகாதசிக்கு கோயிலுக்கு வந்து மண்டபத்தில் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார். ‘என்னடே தங்கப்பா நீ தெளிஞ்சுபோட்டியே’ என்றார் காவலர் வாமதேவன்.

‘தெளியணுமே மாமா…கொஞ்சநாள் கண்ட கண்ட எருமையெல்லாம் வந்து கலக்கின குளமாக்குமே…தெளியாம முடியுமா?’ என்றார் அப்பா.

தீபாராதனைக்கு வந்த பாட்டியைக் கண்டதும் கால் மேல் காலை வைத்துக்கொண்டு உரக்கப்பேசிக்கொண்டிருந்தார் அப்பா. பாட்டி எதுவும் நடக்காததுபோல உள்ளே சென்றாள். கும்பிட்டுவிட்டு திரும்பும்போது வாமதேவனை சைகையால் அழைத்துவிட்டு முன்னால் சென்றாள்.

‘சொல்லுங்க அம்மிணி’

‘டேய் காலுக்குமேலே காலு எந்த ஆம்புளைக்கும் ஏறும்…ஏத்தின கால எறக்காம இருக்கப்பட்டவன் ஆணத்தம் உள்ள ஆம்புள..’

‘சரி அம்மிணி’

‘அத அந்த மண்டபத்தில நின்னு மூணுதடவ சத்தமா சொல்லு…உனக்கு நாலணா தாறேன்’

மெல்லச் சிரித்தேன். சித்தப்பா ‘இவனுக்கு அந்த மூப்புகொணம் உண்டா அண்ணி?’ என்றார்.

‘என்ன கொணமோ? வீணாப்போனவன்… என்னத்தை எடுக்கிறதுக்காக புறப்பட்டுப் போறானோ? கேட்டா ஒண்ணும் சொல்லுறதில்ல…நீ கொண்டுபோயி கேட்டுப்பாரு’ அம்மா சொன்னாள்.

சித்தப்பா திரும்பும்போது ‘டேய் வாடா’ என்றார். நான் கூடவே போனேன். அவர் மாமியார் வீட்டுக்கு வந்திருந்தார்.

‘நீ என்னத்துக்காக்கும் ஓடிப்போறே?’ என்றார் ‘உனக்கும் அப்பாவுக்கும் என்ன சண்ட?’

‘சண்டையெல்லாம் ஒண்ணுமில்ல’

‘எனக்க கிட்ட வெளையாடாதே…எனக்க அண்ணனுக்க சொபாவம் எனக்கு நல்லாவே தெரியும்…கரடி தங்கப்பன்னு பதினாறுவயசிலேயே பேருவாங்கினவராக்கும்’

‘சித்தப்பா, நான் முதல்ல வீட்ட விட்டு போனது அப்பா திட்டினதினாலத்தான். ஆனா இப்ப போனது அதனால இல்ல’

‘அந்த மத்த பய செத்துப்போன துக்கத்தினாலயா?’

‘போனது அதனாலத்தான் சித்தப்பா…ஆனா துக்கத்தினால இல்ல’

‘பின்ன?’

‘தெரியல்ல…இங்க இருக்கமுடியல்ல, அவ்ளவுதான்’

‘எங்கெங்க போனே?’

நான் ஒன்றும் சொல்லவில்லை.

‘நாடு நாறியிருக்கு கேட்டியா? நீ பங்கரப்பிச்சக்காரனா நெய்வேலியில நம்ம ஜான் ஜெஸ்டினுக்க மச்சினனைத் தேடிப்போயி பைசா வாங்கியிருக்கே’

‘அதை திருப்பி குடுத்தாச்சு’

‘அவன் என்னமோ உன்னைய கரைசேத்தவன் மாதிரில்லாடே சொல்லீட்டு திரியுதான்?’

பேசாமல் தலைகுனிந்து வந்தேன்.

‘நான் சொல்லுதேண்ணு நினைக்காதே… நீ சாகித்ய வாசிப்புள்ளவன். உனக்கே எல்லாம் தெரியும். நான் இப்பம் வந்தது அண்ணனை பாக்கிறதுக்காக்கும்…என்னைப் பாத்ததும் நேரா எறங்கிப்போயி விளையிலே நிக்கிறாரு….முகம்பாத்து ஒரு வார்த்த எங்கிட்ட பேசினதில்ல…தெரியுமா?’

‘ம்’

‘நான் சன்னலுவழியா பாத்துகிடுவேன்னு அவருக்கும் தெரியும்…எப்பமும் இப்டித்தான்….பத்து இருபது வருசமாட்டு இப்டியாக்கும்…அண்ணிகிட்ட ஒரு மணிக்கூர் பேசிட்டு நான் போவேன்…என்ன சொன்னேன், எதுக்கு வந்தேன்னு கேக்கமாட்டாரு. அண்ணி சொன்னா ஒரு உம் கூட சொல்லமாட்டாரு…ஆனா எனக்கு துணையா சொடலமாடசாமி இருக்கிற மாதிரி எப்பமும் இருந்திருக்காரு…அந்த நெனைப்பு எனக்குண்டு… நான் பதினொண்ணில தோத்தப்பம் ஈஸ்வரபிள்ளை சாரு வந்து என்னைப்பாத்தாரு…டே, உனக்க அண்ணன் சொன்னான் நீ கவலைப்படுதேண்ணு…வந்து உனக்கு ஆறுதல்சொல்லி பாஸாக்க வைக்கணும்னு சொல்லி அம்பது ரூவா கைநீட்டம் குடுத்தான் பாத்துக்கோன்னு சொன்னாரு…அன்னைக்கு நான் கோயில் மண்டபத்திலே ஏறி இருந்து அளுதேன்….’

நான் அவரைப்பார்த்தேன். சாதாரணமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்.

‘எப்பமும் எனக்கு ஒப்பம் உண்டு ஆளு. வலிய ஏலா சண்டையிலே சட்டம்பி வில்சன் என்னைய அடிப்பேன் கொல்லுவேன்னு நாலுமுக்கிலே வச்சு சொன்னான். நான் பயந்து வீடுவிட்டு வரல்ல. அன்னைக்கு சாயங்காலம் வில்சன் வீட்டுக்குப்போயி லே வில்சா, நீ ஆணா இருந்தா கொல்லவோ அடிக்கவோ வேண்டாம், இனி ஒரு வார்த்தை அவனைப்பத்தி பேசிப்பாரு. தாயோளி உன்னையும் உன் குடும்பத்தையும் வெட்டி நாலுமுக்கிலே வைப்பேன்லேன்னு சொல்லியிருக்காரு. சொன்னா செய்யுத ஆளாக்கும்….வீடு கேறி வந்து ஒராள் அப்பிடிச் சொன்னா எந்தக் கேடியும் நடுங்கிருவான்….என்னைப்பாத்தா அவன் பத்து வருசம் வழிமாறி நடப்பான், பாத்துக்க’

நான் பெருமூச்சு விட்டேன்.

‘சில ஆளுக அப்பிடியாக்கும்…நான் என்ன சொல்ல?’ சித்தப்பா சொன்னார் ‘அவங்க சொல்லாம விட்ட வார்த்தையெல்லாம் நாம சொர்க்கத்தில போறப்ப சொல்லுவாங்கண்ணு தோணுது…அதுக்கு நாமளும் அவங்ககூட சொர்க்கத்துக்குப் போகணும் பாத்துக்க….நரகத்துக்குப் போறமாதிரி நாம நடந்துக்கிடக்கூடாது…கேட்டியா?’

அவர் சென்றபின் தனியாகத் தலைகுனிந்து நடந்து வந்தேன். அவரிடம் என்ன சொன்னாலும் அவர் எனக்கும் அப்பாவுக்குமான முரண்பாடாக மட்டுமே அதை எடுத்துக்கொள்ளப்போகிறார். நான் கிளம்பிச்சென்ற நான்காவது நாள் அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்க்கவேண்டியிருந்தது. நான்குநாளும் எதுவுமே பேசாமல் வழக்கம் போல எல்லா வேலைகளையும் செய்துகொண்டு இருந்திருக்கிறார். ஆனால் சரியாகச் சாப்பிடுவதில்லை. சாப்பாட்டுத்தட்டுமுன் அமர்ந்தால் கையால் அளைந்துகொண்டே இருப்ப்பார், பிறகு எழுந்து சென்றுவிடுவார். அம்மா ‘சாப்பிடல்லியா?’ என்று கேட்டால் ‘எடுத்துட்டு போடி நாயே’ என்று கத்துவார்.

வாழைக்குமுன்னால் விழுந்துகிடந்தவரை தூக்கி எடுத்து மயக்கம் தெளியவைத்தபின் குலசேகரம் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். ரத்த அழுத்தம் அபாயகரமாக ஏறியும் இறங்கியும் அலைக்கழித்தது. மூன்றாம் நாள் திரும்பினாலும் அடுத்த ஏழுமாதத்தில் பதினெட்டுமுறைக்குமேல் ஆஸ்பத்திரியில் சேர்க்கவேண்டியிருந்தது. நன்றாக மெலிந்து வெளிறிவிட்டார்.

‘வாயத்தெறந்து ஏதாவது பேசவைங்க….சாவமாட்டாரு’ என்றார் டாக்டர் செல்வின்.

நாராயணன்போத்தியிடம் அம்மா ‘என்னமாம் சொல்லுதாரா போத்தியே?’ என்று அழுதுகொண்டே கேட்டாள்.

‘அதெல்லாம் ஆனை மாதிரியாக்கும் வெசாலமே…ஆனைக்கு நோவிருந்தா அலறாது, சவிட்டாது….கண்ணில மட்டும்தான் நோவு தெரியும்’

‘எனக்கு பயமா இருக்கு போத்தியே’

‘எனக்கும் பயம்தான்….பாப்பம். இவன் சாவப்பிடாதுன்னு விதியிருந்தா பய திரும்பி வருவான்’

நான் நள்ளிரவில் திரும்பிவந்தேன். நாகர்கோயிலில் இருந்து திருவனந்தபுரத்துக்குத்தான் பேருந்து இருந்தது. குழித்துறையில் இறங்கினேன். சாலையில் நாய்களன்றி உயிரசைவே இல்லை. கடுமையான பசி. அதுவரை பசிபற்றிய நினைப்பே இல்லாமலிருந்தேன். நெல்லையில் இருந்து நாகர்கோயில் வரும்வரைக்கும் திரும்பத்தான் வேண்டுமா என்ற எண்ணம் மட்டும்தான் இருந்தது. நெல்லையில் இருந்து வேறெங்காவது சென்றுவிடலாமா என்று பேருந்துகளின் ஊர்ப்பெயர்களை பார்த்துக்கொண்டே இருந்தேன். ஒருகட்டத்தில் அனிச்சையாகவே நாகர்கோயில் பேருந்தில் ஏறி அமர்ந்துவிட்டேன். அனிச்சை என் அகம் செய்த பாவனை என உடனே அறிந்தேன்.

உண்ணாமலைக்கடையில் சாலையோரம் ஒரு மாமரம் நின்றிருந்தது. பருவம்தவறி அது காய்த்திருப்பதை கவனித்தேன். அப்போது பரவ ஆரம்பித்திருந்த உயரமில்லாத ஒட்டுமாமரம். கீழே கிடந்த கல்லை எடுத்து வீசி ஒரு மாங்காயை வீழ்த்தினேன். அதைத்தின்றுகொண்டே நடந்தேன். திருவட்டாறு வந்தபோது ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்தேன். புளிப்பு அமிலமாகத் திகட்டி வாயில் எழுந்தது.

திருவரம்புக்குள் நுழைந்தபோது பின்னிரவின் ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன. தொலைவில் திற்பரப்பு அருவியின் மெல்லிய ஒலி. வீட்டை நெருங்குவதற்குள்ளேயே ஹு ஹு என்ற தீனமான ஒலியுடன் டைகர் கால்நகங்கள் தரையில் பிராண்ட பாய்ந்து ஓடிவந்தது. ஒரே பாய்ச்சலில் என்மீது தாவியது. நிலைதடுமாறி கோயில்சுவரைப்பற்றிக்கொண்டேன். டைகருக்கு என்னசெய்வதென்றே தெரியவில்லை என்று தோன்றியது. அதனுள் பொங்கிய வேகத்தை அதன் உடலால் தாளமுடியவில்லை. துள்ளியது. சுற்றிச்சுற்றி ஓடியது. எம்பிக்குதித்தது. வீட்டைநோக்கி அதிவேகத்தில் ஓடி அதே வேகத்தில் திரும்பி வந்தது.

குனிந்து அதன் முகத்தைப்பார்த்தேன். என் மூக்கையும் கன்னங்களையும் அதன் வெம்மையான நாக்கு வந்து வருடி வருடிச் சென்றது. நாய்கள் முத்தம் கொடுக்கும், ஆனால் பாடல்களில் வருவதுபோல முத்தமழை சொரியும் என்று அப்போதுதான் உணர்ந்தேன். அதை இறுக அணைத்துக்கொண்டேன். ங்ங்ங்ங் என்றது. துள்ளிமறிந்தது.

வீட்டுக்கதவை தட்ட பலமுறை கையை எடுத்தேன், தட்டமுடியவில்லை. உள்ளே பனையோலை விசிறி அசையும் ஒலிக்காக, கட்டிலில் புரண்டுபடுக்கும் ஒலிக்காக, கமறும் ஒலிக்காக செவிகூர்ந்தேன். கேட்கவில்லை. ஆனால் அதற்குள் கதவு உள்ளே திறக்கும் ஒலி. அண்ணா என்னைப்பார்த்ததும் திகைத்து நின்றார். பின்னர் ‘நாயே!’ என்றபடி ஓங்கி என் கன்னத்தில் அறைந்தார். பொத்தியபடி சுவரில் சாய்ந்து அமர்ந்தேன்.

‘நாயே நாயே…போடா போய்ச்சாவுடா’ என்று சொல்லியபடி அண்ணா என்னை அறைந்துகொண்டே இருந்தார். ஆனால் அறை என் கைகளிலும் தோள்களிலும் இலக்கில்லாமல் பட்டது.

அம்மா வந்து அப்படியே பார்த்துக்கொண்டு நின்றாள். தங்கை மண்ணெண்ணை விளக்கை ஏற்றிக்கொண்டுவந்து அம்மாவின் பின்னால் நின்றாள். பின் ஒளியில் அம்மா கோயிலுக்குள் தெரியும் யட்சி சிலை மாதிரி இருந்தாள்.

சமநிலையுடன் இருந்தது துணைக்குவந்து தங்கியிருந்த பங்கஜாட்சி மாமிதான். ‘என்ன இது? அவனை உள்ள கூப்பிடு…டேய் உள்ளவா…டேய் ராஜா போதும்…நிப்பாட்டு..டேய் உள்ள வா….விசாலம் நீ கஞ்சியோ சோறோ இருக்காண்ணு பாரு…ராத்திரி கொஞ்சம் சோறிலே வெள்ளம் விட்டு வச்சேன்…ஒரு சம்மந்தி அரைக்கேன்’

கஞ்சி குடிக்கும்போது என்னைச்சுற்றி அம்மாவும் தங்கையும் இருந்தார்கள். அண்ணா மூச்சுவாங்க நின்றுவிட்டு சட்டென்று திரும்பி அறைக்குள் சென்றுவிட்டார். ஆவேசத்துடன் கஞ்சியைக் குடித்தேன். அம்மா அதைக்கண்டு சட்டென்று ‘எனக்க மக்களே’ என்று விம்மிவிட்டாள்.

அப்பாவை ஆஸ்பத்திரியில் வைத்திருந்தார்கள். மீண்டும் ரத்த அழுத்தம். ‘பாதிசெத்தாச்சு மக்களே…நீ இன்னும் ஒரு மாசம் வரல்லேண்ணா ஆளை பாத்திருக்க மாட்டே’ தங்கையைப் பார்த்தேன். அவளும் அழுதுகொண்டிருந்தாள்.

‘மூத்தவன் நீ போனதிலே இருந்து மனுஷனா இல்ல பாத்துக்கோ. எப்பமும் கிறுக்கன் மாதிரி இருக்கான்’

அன்று தூங்கமுடியாதென்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் சாப்பிட்டு முடித்ததுமே படுத்து உடனே தூங்கிவிட்டேன். காலையில் எழுந்தபோது என்னை சுற்றி அம்மாவும் தங்கையும் மண்ணெண்ணை விளக்கு எரிய அப்படியே அமர்ந்திருப்பதையும் அப்பால் பங்கஜாட்சி மாமி தூங்கிக்கொண்டிருப்பதையும் கண்டேன். அம்மா பெருமூச்சுவிட்டு ‘டீ குடிக்கிறியாடா மக்களே?’ என்றாள்.

எங்கே சென்றிருந்தேன், எப்படி வாழ்ந்தேன் எதையும் என் வீட்டில் எவருமே கேட்கவில்லை. குலசேகரம் போவதற்காக நின்றிருந்தபோது தஙகையன் மெம்பர்தான் அருகே வந்து ‘வந்தாச்சா? என்னவாக்கும் டிரிப்பு? பாம்பே உண்டுமா?’ என்றார்.

‘என்னத்த டிரிப்பு? இங்கிண குண்டிநிக்காம போற பயக்கள்லாம் செய்யுகது ஒண்ணுதான்…டேபிள்கிளீன்!’ என்றான் சவரக்கடை கண்ணன்.

தலைகுனிந்து பேசாமல் நின்றிருந்தேன். குலசேகரம் செல்லும்போது சன்னலோர இருக்கை கிடைத்தது. மார்பு படபடவென்று அடித்துக்கொண்டே இருந்தது. அப்பா கண்டிப்பாக ஒன்றும் சொல்லப்போவதில்லை. திரும்பிப்பார்த்தாலே அதிகம்.

அப்பாவின் முகமே என் மனதில் எழவில்லை. நான் அவர் முகத்தைப் பார்த்ததைவிட உடம்பைப்பார்த்ததே அதிகம். நரைத்த மயிர்மண்டியமார்பு. கனத்த கைகள் முடிநிறைந்து இருப்பதனால்தான் அவருக்கு கரடி என்றே பெயர். அவர் சிறுவயதில் என்னை சிலசமயம் அடித்திருக்கிறார். அடிக்கவரும்போது அவரிடம் எழும் அந்த மூர்க்கத்தைக் கண்டு நான் மனம்செயலிழந்து நின்றுவிடுவேன்.

அப்பாவின் கைகள் கொலைகாரனின் கைகள்.அவர் கொல்லக்கூடியவர் என்று எனக்கு உள்ளூரத்தெரியும். கொல்லநேரவில்லை என்றால் அது விதியால் மட்டுமே. கொலைத்தொழிலில் திளைத்திருந்த ஒரு வம்சத்தின் கடைசிக்கண்ணி அவர். என்றும் ரத்தக்கவிச்சி மாறாத குடும்பம். அப்பாவின் பெரியமாமா ஒருவர் ஒரு தேங்காய் எண்ணிக்கையில் குறைகிறது என்பதற்காக கோபம் கொண்டு அரிவாளால் மருமகனை சீவி எறிந்திருக்கிறார்.

ஆனால் மறுநாள் என் நினைவில் நீடிப்பது அப்பாவின் கைகளின் தொடுகை மட்டுமே. காய்த்த கனத்த கரங்களின் உறுதி. அவர் என்னைத் தொட்டது மிகக்குறைவு. தொட்ட தருணங்கள் ஒன்றுகூட என் நினைவிலிருந்து அழியவில்லை. காய்ச்சலின்போது. கையில் வாதம் வந்தபோது சிகிழ்ச்சை செய்தபோது. ஒருமுறை ஆடும் தென்னைமரத்தடிப்பாலத்தில் ஒரு கணம் என் மனம் நடுங்க கால்கள் நிலைபதறின. பின்னால் வந்துகொண்டிருந்த அப்பா அவரது கையை என் தோளில் வைத்தார். கால்கள் நிலைகொண்டதும் எடுத்துவிட்டார். நெடுநாட்கள் அந்த கைவெம்மை அங்கேயே இருந்தது.

அப்பா நோயாளிகள் நிறைந்த வார்டில் தனிமையாகப்படுத்திருந்தார். சுற்றிலும் இருப்பவர்களிடமிருந்து வெகுவாக விலகி. ஜன்னல் வழியாக எதைப்பார்க்கிறார் என்று தெரியவில்லை. அண்ணா இரவே கிளம்பி நடந்தே குலசேகரம் சென்று அவரை எழுப்பி நான் திரும்பி வந்ததைச் சொல்லிவிட்டிருந்தார். நாங்கள் வரும் ஓசை கேட்டதும் திரும்பிப்பார்த்தார்.

அசைவிழந்து நின்றேன். அப்பாவின் கண்கள் பழுத்திருந்தன. முகம் வெளிறி, மூக்கைச் சுற்றி ஆழமான கோடுகள் விழுந்து, கண்களின் அடித்தோல் கருகி வேறு எவரோ போலிருந்தார். முள்ளம்பன்றி முடிபோல கருமையும் வெள்ளையும் கலந்த ஒருவாரத்தாடி. மார்பு மெலிந்திருக்க நரம்பு வேர்கள் புடைத்த கைகள் கூட்டி வைக்கப்பட்டிருந்தன.

அப்பாவின் தலை மெதுவாக நடுங்கியது. கழுத்துச்சதைகள் இழுத்துக்கொண்டன. உதட்டைக் கடித்தபின் பார்வையை விலக்கிக் கொண்டார். அம்மாவிடம் என்னை கண் காட்டி ‘சாப்பிட்டானா?’ என்றார்.

‘ம்’ என்றாள்.

நின்றுகொண்டே இருந்தேன். ஆனால் அப்பா கண்களை மூடிக்கொண்டுவிட்டார்.

மாலையிலேயே அப்பாவை கூட்டிச்சென்றோம். காருக்கு அவரே நடந்து சென்றார். பாத்திரங்கள் இருந்த பையை எடுத்துக்கொண்டேன். அப்பா காரில் ஏறும்போது அவரது கை என் தோளில் படிந்தது. திடுக்கிட்டு அவர் முகத்தைப்பார்த்தேன். அவர் வேறு எதையோ பார்த்தார். உள்ளே அமர்ந்ததும் கை விலகியது. முன்னிருக்கையில் ஏறிக்கொண்டேன்.

என் மனதுக்குள் உக்கிரமான கூச்சலுடன் கண்ணீருடன் நாடகக் காட்சிகள் ஓடின. அவர் காலில் விழுவதுபோல. இனி ஒருகணமும் அவரைவிட்டுப்பிரிவதில்லை என்பதுபோல. ஆனால் வெளியே வெறுமே பார்த்துக்கொண்டிருந்தேன். எவருமே பேசவில்லை. வீட்டுக்குச் சென்றதும் அப்பா இறங்கி நேராக தொழுவத்துக்குச் சென்று சிவப்பியையும் கருப்பியையும் தடவிக்கொடுக்க ஆரம்பித்தார்.

இரண்டே நாட்களில் எல்லாம் சாதாரணமாகிவிட்டது. என்றென்றும் நான் அங்கேயே இருந்துகொண்டிருப்பவனைப்போல, இனி எப்போதும் இருந்துகொண்டிருக்கப்போகிறவனைப்போல. வெயில் வெறித்த மதியங்களில் கோயில் வாசல் கல்படிகளில் அமர்ந்து மடியில் ஒரு புத்தகத்துடன் ஆற்றையே வெறித்துக்கொண்டிருந்தேன். மணலை அள்ளி சருகுகள் மீது பெய்யும் காற்றின் சீறல் ஒலி. நீரின் நீலநிற அலைகள் மேல் எழுந்து எழுந்து அமரும் கொக்குகள்.

‘என்ன பிரச்சினை உனக்கு?’ என்றார் சித்தப்பா. ‘நீ டிகிரிய எழுதினா என்ன? அரியர்ஸ் ரெண்டு இருக்கு. ஒரு செமஸ்டர், எல்லாமா சேத்து மார்ச்சில எழுதிரலாமே’

‘ம்’

‘ஒரு டிகிரி இந்தக்காலத்திலே லேசுபட்ட விஷயம் இல்ல. அது இருந்தா என்ன பிரயோசனம்னு தெரியல்ல…இல்லேன்னா அதுக்க குறவு ரொம்ப பெரிசாக்கும்’

‘ம்’

‘நீ என்ன நினைக்கிறே சொல்லு’

பெருமூச்சுடன் ‘ஒண்ணுமில்ல’ என்றேன்.

‘இங்க இருக்கபிடிக்கலியா?’

என்னை விட மிகச்சிறிய சட்டை போலிருந்தது வீடு. ஆனால் அதை எப்படி அவரிடம் சொல்வது என்று தெரியவில்லை.

‘வேணுமானா நீ நாகர்கோயிலிலே நம்ம கோவாலகிருஷ்ணன் வீட்டிலே போயி நில்லு. அவ உனக்க அக்காதானே? அங்க நின்னு பரீட்சை எழுது’

‘ம்’

‘பொறப்பட்டு போறது எளுப்பம்…போனவன் ஒருநாளும் திரும்பி வந்து அமைய முடியாது’ என்றார் சித்தப்பா. ‘…உனக்க அப்பா நான் ஒம்பதில படிக்கிறப்ப ஒருநாள் எனக்க ஸ்கூலுக்கு வந்தாரு… அப்ப இங்கிலீஷ் டியூஷனெல்லாம் இல்லாம ஆயிட்டுது. வேலை இல்லை. கொஞ்சநாள் என்னென்னமோ செஞ்சு ஒப்பேத்தினாரு. எனக்கு ஆளுவந்து சொன்னாங்க, ஆரோ தேடிவந்திருக்காருன்னு. வந்து பாத்தா அண்ணா. மாமரத்தடியிலே நின்னுட்டிருக்காரு…பழைய கம்பீரம் ஒண்ணும் இல்ல. பக்கத்திலே போனேன். ‘என்னண்ணா?’ன்னு கேட்டேன். என்னை திரும்பியே பாக்கல்ல. தலைகுனிஞ்சு கொஞ்சநேரம் நின்னுட்டு மெதுவா ‘உனக்க அம்மைகிட்ட நான் கேட்டேன்னு ஒரு விஷயத்த போயி சொல்லு’ன்னு சொன்னாரு’

பேசாமல் பார்த்து நின்றேன்.

‘அவருக்க முகம் மட்டுமில்ல உடம்பே சிவந்து போயிருக்கதா தோணிச்சு. ’இப்பம் கொஞ்சம் கஷ்டமாக்கும். வேலைக்கு அப்ளை பண்ணி ஒண்ணும் செரியாகல்ல. ஒரு ஆறுமாசம் எனக்கு வீட்டிலே சோறு தரமுடியுமான்னு கேட்டுச் சொல்லு’ன்னு சொன்னாரு. எனக்கு என்ன சொல்லுகதுண்ணே தெரியல்ல. ’செரிண்ணா’ன்னு சொன்னேன். சாயங்காலம் அம்மைகிட்ட சொன்னப்ப ‘இது அவனுக்க வீடு. அவனுக்க சோறு’ண்ணு மட்டும் சொன்னாங்க’

‘வந்து சாப்பிட்டாரா?’

‘வீட்டுக்கு வரல்லை…கோயிலுக்குப்பக்கத்தில உள்ள மடத்தில கொண்டுபோயி குடுக்கச் சொன்னாரு. கொண்டுபோனேன். தட்ட வச்சு சோறு விளம்பினேன். சோறில கைய வைக்கல்ல…அப்டியே பாத்திட்டிருந்தார். பிறகு கைய உதறிட்டு எந்திரிச்சு போய்ட்டாரு…சாப்பிடவேயில்ல’

‘பிறவு?’

’பிறவு அவரு மதுரைக்குப் போனதா கேள்விப்பட்டேன். மதுரையிலே ரேஷன்கடையிலே வேலைபாக்கிறப்பதான் சர்க்கார்வேலை கிடைச்சுது’

பேச்சிப்பாறை பேருந்து சிவப்பாக மரங்களிடையே தோன்றியது ‘நான் வாறேண்டே…நாளைக்கே போறேன்…இவ இங்கதான் இருப்பா. பிள்ளைக்கு நாப்பத்தெட்டு முடிஞ்சா வந்தாப்போரும்னு சொன்னேன்…வரட்டா?’ என் பையில் ஐந்து ரூபாய்த்தாளை வைத்துவிட்டு ஏறிக்கொண்டார்.

அதற்குமேல் பதினாறுநாட்கள்தான் வீட்டில் இருந்தேன். ஒருநாள் வழக்கம்போல சொல்லாமல் கிளம்பி நாகர்கோயில் சென்று அக்காவுடன் கொஞ்சநாள் இருந்தேன். பெங்களூர் சென்று அக்காவின் தம்பியின் லாரி கடையில் கொஞ்சநாள் வேலைபார்த்தேன். மீண்டும் அக்காவீட்டுக்கே வந்தேன். அதன்பின் ஒருநாள் மீண்டும் கிளம்பிவிட்டேன். இம்முறை காவியுடை அணிந்த துறவியாக.

பதினொரு மாதம் கழித்து காவியைக் கழற்றிவிட்டு காசர்கோட்டில் தொலைபேசித்துறையில் வேலைக்குச் சேர்ந்தேன். அதன்பின்னும் நிலையின்றி அலைந்துகொண்டேதான் இருந்தேன்.

மூன்றாம்முறை கிளம்பியபோது உள்ளூரத் தெரிந்திருந்தது, மீண்டும் அந்த வீட்டுக்குப்பிள்ளையாக திரும்பி வரமாட்டேன் என்று. அதன்பின் மூன்று முறைதான் வீட்டுக்கு வந்தேன். வேலைகிடைத்தபின் அதைச் சொல்லி சாமான்களை கொண்டு செல்வதற்காக ஒருமுறை. அம்மா இறந்தபின் ஒருமுறை. அப்பா இறந்தபின் கடைசியாக. மூன்றுமுறையும் இரவு தங்கவில்லை.

அப்பாவின் சிதைமூடல் சடங்குக்குப்பின் அன்றே காசர்கோட்டுக்குக் கிளம்பியபோது கோயில்முக்குச் சாலையில் நின்று வீட்டை திரும்பிப்பார்த்தேன். தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது, அந்த வீடு எப்போதைக்குமாக என்னிடமிருந்து விலகிச்சென்றுவிட்டதென்று. அதை அப்பாவும் உணர்ந்திருந்தார் என்று நினைத்துக்கொண்டேன். கடைசியாக நான் கிளம்பிச்சென்றபோது அவர் கவலைப்படவேயில்லை.

[புறப்பாடு முற்றும்]

முந்தைய கட்டுரைஉயிர் தெளிவத்தை ஜோசப்
அடுத்த கட்டுரைநமக்குத் தேவை டான் பிரவுன்கள்