அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம். தி இந்து நாளிதழில் உங்களுடைய ‘சமூக வலைத்தளங்கள் ஜனநாயகக் களமா’ என்ற கட்டுரையை (செப்ட் 30) ஆர்வத்துடன் படித்தேன். என்னுடைய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
1. அச்சிட்ட புத்தகங்கள் இந்தப் புரட்சியை ஏற்கனவே கொண்டு வந்து விட்டன. ஒரு கையெழுத்துப் பிரதியிலிருந்து இன்னொரு கையெழுத்துப் பிரதியை நகல் எடுத்த கால கட்டத்தில் அச்சுத்தொழில் நூற்றுக்கணக்கில் பிரதிகளை எடுத்து பலருக்கும் எழுத்தைச் சென்றடையச் செய்தது. கையெழுத்துப் பிரதிக்கும் அச்சுக்குமான இடைவெளி, அச்சுக்கும் இணைய தளத்துக்குமான இடைவெளியை விடப் பெரியது. தமிழ் மொழி பேசுபவர்கள் பெரும்பாலும் அச்சுப் பிரதிகளால் எட்டக்கூடிய தூரத்திலேயே வசிப்பதால், ஆங்கிலம் போன்ற உலகளாவிய மொழிகளோடு ஒப்பிடும்பொழுது, அச்சால் தமிழில் ஏற்பட்ட தாக்கம் இணைய தளத்தால் ஏற்பட்ட தாக்கத்தை விட ஆழமானது.
சாமானியர்கள், சாமானியர்களுக்காகவே எழுதும் வாரப்பத்திரிகைகள், அவற்றில் சிறுகதைகள், துணுக்குகள், குறு நாவல்கள் வெளிவரத் தொடங்கி சுமார் 60 ஆண்டுகளாகி விட்டன. இணையம் இந்த வேகத்தை அதிகரித்திருக்கிறது என்று சொல்லலாம்.
2. சாமானியர்களின் ஊடக அலையில் எல்லா நிபுணர்களும் வெளியே தள்ளப்படுவதில்லை. டெண்டுல்கருக்கு தங்களை விட நன்றாக கிரிக்கெட் மட்டையை கையாளத்தெரியும் என்று ஒப்புக் கொள்கிறார்கள். அவர் விளையாடுவதை பணம் கொடுத்துப் பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள். தெருவோரத்து டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியை பார்க்க விரும்புவதில்லை. மருத்துவம், பொறியியல் போன்றவற்றில் நிபுணத்துவம் தேவை என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், அரசியல், பொருளாதார, சமூகவியல் நிபுணர்களுக்கு இதே கௌரவத்தைத் தர மறுக்கிறார்கள். விஞ்ஞானத்தில் தகுதி, திறமையை மதிக்கிறார்கள். ஆனால், நுண்கலைகளும், மானுடவியலும் ஜனநாயகப்படுத்தப்படுகின்றன.
3. அச்சு, இணைய தள, தொழில்நுட்பங்களின் வணிகப் பரிணாமங்களிருந்துதான் நிபுணர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். நுகர்வோர் உலகம் நிபுணர்களுடைய தகுதியை அங்கீகாரம் செய்யும் என்று எக்காலத்திலும் உறுதியாக சொல்ல முடிந்தததில்லை. இன்றைய நிலை புதிதல்ல. உலகெங்கிலுமுள்ள நிபுணர்களுக்கிடையே கேளிக்கையைத் தாண்டிய கருத்துப் பரிமாற்றத்துக்கும் இந்தத் தொழில்நுட்பமே காரணமாக இருக்கிறது.
நடுவில் 40 வருடங்கள் தமிழில் எழுதாதலால் குறைகள், பிழைகள் இருக்கலாம். மன்னிக்கவும்.
உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கட்டுரையுடன் பிரசுரித்து மின்னஞ்சல் அனுப்ப வாய்ப்பளித்தமைக்கு நன்றி
– கே ஆர் வைகுண்டம்
*
சமூக வலைத்தளங்கள் ஜனநாயகக் களமா’
இதுநடந்து இருபதாண்டு இருக்கும்.ஒரு பெரிய குடும்பத்திருமணத்துக்குச் சென்றிருந்தேன்..மிகப்பெரிய பந்தலில் இரவு ஒன்பது மணியளவில் குழந்தைகளும் பெண்களும் பாட்டிகளும் தாத்தாக்களுமாக பெரிய கூட்டம் கூடிவிட்டது. ஒரு பெண்ணைபாடும்படிச் சொன்னார்கள். அவள் ரொம்பக்கூச்சப்பாட்டுக்கொண்டு ஒரு சினிமாப்பாட்டைப்பாடினாள்.
அதன்பின்பு கூச்ச்சம் விலகி எல்லாருமே பாட ஆரம்பித்தனர். சிறுமிகளும் சிறுவர்களும் ஆடினர். ஒரு தாத்தா ஓட்டன்துள்ளல் என்ற நையாண்டிநடனத்தை ஆடிக்காட்ட சிரித்து உருண்டார்கள். ஒருவர் விகடக்கச்சேரி மாதிரி ஏதோ செய்தார்.
அப்போது கமுகறை புருஷோத்தமன் பந்தலுக்கு வந்தார். முறையாக சங்கீதம் படித்தவர். ஐம்பது அறுபதுகளில் மலையாள சினிமாவில் வெற்றிகரமான பாடகர்..மணப்பெண்ணின் அப்பா அவரை கூட்டிவந்து நடுவே நாற்காலி போட்டு அமரச்செய்து பாடும்படி கட்டாயபடுத்தினார். கமுகறை புருஷோத்தமன் பாட ஆரம்பித்தார். அற்புதமான ஓங்கிய குரல். நுணுக்கமான உணர்ச்சிகள் வெளிப்படும் பாடும் முறை. அவரே பாடிய அமரத்துவம் வாய்ந்த பாடல்கள்
ஆனால் மெல்ல மெல்ல கூட்டத்தில் உற்சாகம் வடிந்தது. பிள்ளைகள் படுத்து தூங்கிவிட்டன. கொஞ்சநேரத்தில் பாதிப்பேர் எழுந்து சென்றார்கள். அவரும் அந்த மனநிலையை ஊகித்து பாட்டை நிறுத்திவிட்டார். . நானும் உற்சாகமாக பாடிக்கொண்டிருந்தேன் என்றாலும் அன்று அந்த மகாகலைஞனுக்காக மிகவும் வருத்தப்பட்டேன்.
அங்கே இருந்தவர்களின் உணர்ச்சிகளை என்னால் மிகத் தெளிவாகவே ஊகிக்கமுடிகிறது. அங்கே அதுவரை பாடப்பட்டவற்றை பாட்டு என்று சொல்லுவதே மிகை. ஒரு பெரும்பாடகர் பாடியதும் அப்பாடல்கள் சாதாரணமாக ஆகிவிட்டன. அங்கே அத்தனைபேரும் உற்சாகமாகப் பாடியமைக்குக் காரணம் அங்கே தனித்திறமையோ பயிற்சியோ தேவையில்லை , எவரும் எதையும் பாடலாம் ஆடலாம் என்ற சூழல் இருந்ததுதான்.
பத்தாண்டுகளுக்கு முன்னர் ஓர் உரையாடலில் என் நண்பரான தொலைக்காட்சி தயாரிப்பாளர் சொன்னார் ‘நிபுணர்களை ஒழிப்பதுதான் வரும்கால தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் தனித்தன்மையாக இருக்கும்’”
”எப்படி?’ என்றேன்.
‘யார் பார்வையாளர்களோ அவர்களிடமிருந்தே கலைஞர்கள் வரட்டும். பேச்சாளர்கள் வரட்டும். அவர்களே பாடி, அவர்களே பேசி அவர்களே ரசிக்கட்டும்’
எனக்கு சந்தேகம் ‘அதெப்படி? ஒரு நிகழ்ச்சியை தொடர்ந்து ரசிக்கவேண்டும் என்றால் அதில் ஒரு தேர்ச்சியும் நுட்பமும் தேவை அல்லவா? அதை ஒரு நிபுணர்தானே கொடுக்கமுடியும்? பாடகரே அல்லாத ஒருவர் பாடினால் எத்தனைநேரம் அதை கேட்டுக்கொண்டிருப்போம்?’
‘கேட்பார்கள்’ என்றார் தயாரிப்பாளர் ‘அந்த உளவியலே வேறு….இன்று சாமானியன் தொலைக்காட்சியில் ஏராளமான நிபுணர்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறான். அவர்களுக்கு கிடைக்கும் புகழை மட்டும்தான் அவன் அறிகிறான். அதற்குப்பின்னால் உள்ள கடும் உழைப்பையும் தனித்திறமையையும் அவன் உணர்வதில்லை. தான் சாமானியன் என்று அவனுக்குத் தெரியும் பொறாமையால் அவன் புகழ்பெற்றவர்களை வசைபாடுவான். அலட்சியமாகத் தூக்கி எறிந்து கருத்து சொல்வான். கிண்டலடிப்பான். நாம் அவனிடம் சொல்கிறோம், சரி நீயே வா. வந்து பாடு ஆடு பேசு… தன்னைப்போன்ற ஒருவனை தொலைக்காட்சியில் பார்த்தால் அவனுக்கு நிபுணர்களிடம் ஏற்பட்ட மன விலக்கம் ஏற்படுவதில்லை.”
அந்நிகழ்ச்சி தொலைக்காட்சியில் வந்து பெருவெற்றி பெற்றது. பின்னர் அதைப்போன்ற நிகழ்ச்சிகளின் அலை ஆரம்பித்தது. இன்று தொலைக்காட்சிகளில் ஒருநல்ல பாடலை நம்மால் கேட்கமுடியாது. கத்துக்குட்டிகள் வந்து நின்று கூவுகிறார்கள். அவர்களைப்போல கோடிக்கணக்கானவர்கள் பார்த்து மகிழ்கிறார்கள். இன்று நிபுணர்கள் பேசினால் கேட்க ஆளில்லை. எதைப்பற்றியும் மேலோட்டமாகக்கூட தெரியாதவர்கள் கூடி அமர்ந்து மாறி மாறிக்கூச்சலிட்டுப் பேசும் விவாதநிகழ்ச்சிகள்தான் அனைவருக்கும் பிடிக்கின்றன
அவற்றைப்பார்ப்பவர்களின் மனநிலையை கூர்ந்து ஆராய்ந்திருக்கிறேன். பாட்த்தெரியாதவர் பாடும்போது இவர்களும் கூடவே பாடுகிறார்கள். ஒரு சாமானியன் அரசியலையும் சமூகவியலையும் பற்றி ஏதாவது சொல்லும்போது இவர்களும் அதில் பங்கெடுத்துக்கொண்டு தங்கள் தரப்பைச் சொல்கிறார்கள்:. நிபுணர்களின் நிகழ்ச்சிகளில் இவர்கள் வெறும் பார்வையாளர்கள், ஆனால் இவற்றில் இவர்கள் பங்கேற்பாளர்கள்.
பார்வையாளர்களைப் பங்கேற்பாளர்களாக ஆக்கியதுதான் இணையத்தின் வெற்றி என்று சொல்லலாம். இதழியலில் எழுத்தாளர் வாசகர் என்ற பிரிவினை இருந்தது. இணையத்தில் இருவரும் ஒருவரே. எழுத்தாளனாக ஆவதற்குப் திறமையும் பயிற்சியும் தேவைப்பட்டது. இணையத்தில் எழுத எதுவுமே தேவை இல்லை. இன்று ஃபேஸ்புக் போன்ற தளங்களில் எல்லாரும் எதையாவது ஒன்றை எழுதுகிறார்கள். தங்களைப்போன்றவர்கள் எழுதுவதை மட்டும் படிக்கிறார்கள்
இதை ஒருவகை ஜனநாயகமயமாதல் என்று ஆரம்பத்தில் சொல்லிவந்த சிந்தனையாளர்கள்கூட இன்று மாற்றி யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் ஜனநாயகத்தின் அடிப்படையான ஓர் அம்சம் உண்டு என்பதில் ஐயமே இல்லை. சாமானியனின் குரல் இன்று ஊடகங்களை நிறைத்திருக்கிறது. அவனுடைய எண்ணங்களும் உணர்ச்சிகளும் நேரடியாகவே பதிவாகின்றன. .
ஆனால் இதற்கு ஒரு மறுபக்கம் உண்டு.ஒரு துறையின் நிபுணன் என்பவன் ஒரு சமூகத்தில் நிகழ்ந்த ஓர் உச்சப்புள்ளி. அச்சமூகத்தில் பரவலாக உள்ள ஒரு திறமையை ஒரு மனிதன் தன் தனித்தன்மையாகக் கொண்டு அதில் தன்னை அர்ப்பணித்து அதன் மிகச்சிறந்த சாத்தியத்தைத் தொட்டுவிடுகிறான். அவனைத்தான் அச்சமூகத்தில் உள்ளவர்கள் முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டும். அவனைநோக்கிச் செல்லத்தான் அத்தனைபேரும் முயலவேண்டும். அடுத்த தலைமுறை அவனைத் தாண்டிச்செல்லவேண்டும். அப்போதுதான் அச்சமூகத்தின் ஒட்டுமொத்தமான திறமை தொடர்ந்து வளர்ச்சியடையும்.
ஆனால் இன்றைய சாமானியர்களின் ஊடகஅலையில் நிபுணர்களும் கலைஞர்களும் வெளியே தள்ளப்படுகிறார்கள். ஒரு சமூகமே தனக்கு ஏற்கனவே என்ன தெரியுமோ அதை மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருக்கிறது. எது எல்லாராலும் முடியுமோ அதையே செய்து ரசித்துக்கொண்டிருக்கிறது. ஒரு வட்டத்திற்குள் கண்ணைமூடிக்கொண்டு முடிவில்லாமல் சுற்றிவருவதுபோன்றது இது
இன்று தொலைக்காட்சியின் இசைநிகழ்ச்சிகளை பார்க்கும் குழந்தைகளின் இசையறிவு முழுமையாகவே மழுங்கிவிடும். தான் பாடுவதே இசை என்ற அசட்டுத்தன்னம்பிக்கையையும் அக்குழந்தை அடையும். ஃபேஸ்புக் வாசகர்களை கவனித்தால் தெரியும். அவர்கள் ஒருநாளில் ஐந்துமணிநேரம்கூட வாசிக்கிறார்கள். ஆனால் எந்தத் தேர்ச்சியும் இல்லாத, எந்த நுட்பமும் இல்லாத உரைநடையை மட்டும்தான் வாசிக்கிறார்கள். அவர்களை விட எந்த வகையிலும் அறிவுபூர்வமாக மேம்பட்டதை வாசிப்பதில்லை. விளைவாக அவர்களின் ஆளுமை மிகமிகத் தட்டையானதாக உள்ளது. ஆனால் மிக அதிகமாக வாசிப்பவர்கள் என்ற போலிப்பிரமையும் அவர்களிடமிருக்க்கிறது
ஊடகத்தின் இந்த போலிஜனநாயகம் நிபுணர்களை அடித்து வெளியே துரத்திவிட்டதைக் காணலாம். சமூகவலைத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்ட நாட்களில் அதற்குள் வந்த உலகின் முதல்நிலைச் சிந்தனையாளர்களான ஜாரேட் டயமண்ட், டெஸ்மண்ட் மோரிஸ், ரிச்சர்ட் டாக்கின்ஸ் போன்றவர்களெல்லாம் விரைவிலேயே அதிலிருந்து அகன்றுவிட்டார்கள். அதில் சாமானியர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ள மட்டுமே இடம் என அவர்கள் அறிந்துகொண்டார்கள். இன்று இணையம் , தொலைக்காட்சி ஆகியவற்றுக்கு அப்பால் தங்கள் அறிவியக்கத்தை வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைக்கும் சிந்தனையாளர்களே அதிகம்
தொலைக்காட்சியும் சமூகவலைத்தளங்களும் எல்லாம் நம் வீட்டு வரவேற்பறைக் கொண்டாட்டங்கள் மட்டுமே என புரிந்துகொள்ளவேண்டும். உண்மையான அறிவுக்காகவும் உண்மையான கலையனுபவத்துக்காகவும் நாம் நிபுணர்களைத் தேடிச்செல்வோம். அந்தப்புரிதல் இன்றைய அவசியத்தேவை.