புறப்பாடு II – 17, பின்நின்றவர்

மதுரையை ரயில் தாண்டியபிறகுதான் நான் விழித்துக்கொண்டேன். அதுவரை எந்த சுயபோதமும் இல்லாமல் தூங்கியிருக்கிறேன் என்பது அப்போதுதான் தெரிந்தது. எச்சில் என் தோளிலும் மடியிலுமாக வழிந்திருந்தது. சன்னலோர இருக்கை என்பதனால் நன்றாகவே சாய்ந்துகொள்ள முடிந்தது. கால்களை நீட்டி சோம்பல் முறித்தேன். எதிரே இருந்த தெற்றுப்பல்காரர் ‘நல்ல தூக்கம் என்ன தம்பி?’ என்றார்.

‘ஆமா…’ என்றேன்.  ‘பாத்துக்கங்க’ என்று சொல்லிவிட்டு சென்று முகம் கழுவி கழிப்பறை சென்றுவந்தேன்.

‘இப்ப இனிமே டீக்காரன் எவனும் வரமாட்டான். சிலசமயம் கோயில்பட்டீல ஏறுவான்’

‘கோயில்பட்டியா? மதுர தாண்டியாச்சா?’

‘எப்பவோ தாண்டியாச்சே…விருதுநகர் வந்திட்டிருக்கு தம்பி…நீங்க மதுரையில எறங்கணுமா?’

‘இல்ல…திருநவேலி’

‘திண்ணவெலியிலே எங்க?’

‘நாகர்கோயில் போகணுங்க…’

‘அப்ப என்ன? பேசாம படுத்து இன்னொருவாட்டி நல்லா தூக்கத்தப்போடுங்க’

‘பரவால்ல’

’தம்பிக்கு நாகருகோயிலிலே எங்க?’

’அந்தப்பக்கம், கேரளா சைடு’

‘நெனைச்சேன்….சோலியா போனீங்களோ?’

’ஆமா’

’என்ன தொளில் செய்றீங்க?’ என்றார். ‘எதுக்குக் கேக்கிறேன்னா கையில பை பெட்டி ஒண்ணியும் காணுமே?’

அவரைப்பற்றி நான் உடனே புரிந்துகொண்டேன். தாழ்வுணர்ச்சி கொண்டவர். அவரது தோற்றம் காரணமாக இருக்கலாம். குள்ளமான வெளிறிய உருவம். துவைத்துச் சிவந்த வேட்டி சட்டை, மஞ்சள்பை. வாழ்க்கையில் எதையுமே அடையாதவர். அதனால் வந்த தாழ்வுணர்ச்சியாக இருக்கலாம். அல்லது தாழ்வுணர்ச்சியாலேயே எதையும் அடையாதவராக இருக்கலாம். தன் வாழ்க்கையை தன்னிடமிருந்தே மறைக்க மிதமிஞ்சி பிறரது வாழ்க்கையில் ஈடுபடுகிறார். எல்லாவற்றையும் கேட்டுத்தெரிந்துகொள்கிறார். நினைவில் அவற்றைப்பெருக்கி பிறரிடம் பேசுகிறார். வம்புகளைச் சொல்பவர் என்பதனாலேயே அவருக்கு பிறர் செவிகொடுப்பதை ஒருவகை முக்கியத்துவமாக கருதிக்கொள்கிறார். அவரது கண்களின் ஒளி வம்புக்காரர்களுக்கே உரியது. ஆர்வமும் மனவிலக்கமும் தந்திரமும் அசட்டுத்தனமும் சரிசமமாக கலந்த முகபாவனைகள்.

நான் ‘தொளிலெல்லாம் இல்லீங்க’ என்றேன்.

‘அப்பால?’

‘படிச்சிட்டிருக்கேன்’

ஒ…என்னா படிக்கிறீங்க?’

‘பிகாம்’

‘பெரிய படிப்புல்லா? அப்பாம்மா என்ன பண்றாங்க?’

என் மனதுக்குள் ஒரு புன்னகை மலர்ந்தது. ‘அப்பா எங்கூட இப்ப இல்லீங்க…’

‘ஓகோ’ என்றார் கவனமான கண்களுடன் சாதாரணமான குரலில். ‘இப்பல்லாம் வூட்டுக்குப்பெரியவங்க பலபேரு அப்டித்தான்…கண்ட மாதிரி தொடுப்பு வச்சுக்கறது…’

‘ரெண்டு தொடுப்புங்க….’

‘ரெண்டா?’

‘ஆமா…செவப்பி கருப்பீன்னு ரெண்டுபேரு’

‘உங்கம்மா போட்ட பேரு போல இருக்கு’

‘ஆமாங்க… அப்பா எந்நேரமும் அவங்ககூடத்தான் இருக்கிறது. வீட்டுக்கு சாப்பிடுறதுக்கு மட்டும்தான் வருவார். அவங்கள கொஞ்சுறது, அவங்ககிட்ட பேசிட்டே இருக்கிறது. காலம்பற குளிப்பாட்டிக்கூட விடுறாருன்னா பாத்துக்கிடுங்க’

‘அய்யய…என்ன தம்பி இது?’

‘என்னங்க பண்றது? அவருக்கு அதெல்லாம் புடிச்சிருக்கு…’

அவர் என்னை கூர்ந்துபார்க்க ஆரம்பித்தார்.

‘ஆனா அப்பாவுக்கு வேலை இருக்கறதனால வீடு ஒருமாதிரி போவுதுன்னு வைங்க.. ’

‘அம்மா இருக்காங்கல்ல?’

‘இருக்காங்க…சின்னவயசிலே அம்மாவுக்கு யாரோ சூனியம் வச்சுட்டாங்க’

‘என்ன தம்பி சொல்லுறீங்க?’

‘ஆமாங்க…அப்ப அம்மாவுக்கு பதினெட்டு வயசு…நல்ல அழகா இருப்பாங்க. அப்ப அவுங்க வீட்டிலே ஒருத்தரு வந்து தலைமறைவா தங்கியிருக்காரு. பெரீய மலையாள மாந்திரீகர்’

‘ஆமாமா, அவனுங்கள்லாம் பெரிய மாயாஜாலக்காரனுக…சொள்ளமாடன் கதையிலே சொல்லியிருக்கே’

‘இவுரு நம்பூதிரி….எளங்குளத்து சங்கரன் நம்பூதிரீண்ணு பேரு…கொஞ்சம் வயசானவரு…அவருக்கு ஏகப்பட்ட சிஷயனுங்க கேரளத்திலே உண்டு. அம்மாவோட ரெண்டாவது அண்ணாக்குகூட மந்திரத்திலே ரொம்ப பிரியம்…அதான் பெரியவர கூட்டிட்டு வந்து தங்கவச்சிருக்காரு. அப்ப கேரளா சர்க்காரு பெரியவருக்கு தலைக்கு வெலைவச்சிருந்த காலம்’

‘எதுக்கு?’

‘ஆள அடிக்கிற மந்திரம் செஞ்சா விடுவாங்களா? ஒரு இது இருக்குல்ல?’

‘ஆமா…பின்ன மயித்துகதுக்கா சர்க்காருன்னு வச்சிருக்கான்…அதெல்லாம் சர்க்காரு விடாது பாத்துக்கிடுங்க…’

‘ஆமாங்க….அப்ப எங்கம்மா அவர பாத்திருக்கு. எங்கம்மாவுக்கு என்னமோ மந்திரம்போட்டுட்டு போய்ட்டாரு…இப்ப முப்பது வருசமா அந்த கட்டுக்குள்ளதான் கெடக்கு’

‘என்ன பண்ணுது?’

‘ஒண்ணும் உபத்திரவம் கெடையாது….எப்ப பாத்தாலும் என்னமாம் தாள எடுத்து வச்சு படிச்சினே இருக்கிறது’

‘ஓகோ’

’ராப்பகலா படிப்புதான் போங்க…ஊடு முழுக்க இருக்கப்பட்ட தாளையெல்லாம் சேத்துவச்சு அது கெடக்கு மலைமாதிரி’

‘இது அந்தமாதிரித்தான் தம்பி…எங்க வடக்கூரு சித்தப்பாகூட அப்டித்தான். அவருபாட்டுக்கு ஏதாவது கம்பு கட்டைன்னு எடுத்து வச்சு செதுக்கீட்டே இருப்பாரு…பத்துநாப்பது வருசமா இதான் சோலி’

‘எளவு சாவட்டும்னு விடலாம்னாக்க நமக்கு தம்பி ஒருத்தன் கெடக்கான். அவனுக்கும் அந்த சீக்குல்லா?

‘நீங்க ரெண்டுபேரா?’

’ஆமா…இவனுக்கும் அம்மைட்ட இருந்து தொத்தியிருக்கு…இவனும் ராப்பகலா ஒக்காந்து படிச்சினே இருக்கிறது…’

‘தம்பிக்கு நாவருகோயிலுல்லா?’

’ஆமா’

’ஆனா பேச்சு ஒரு மாதிரி இருக்கு….அதான்’

’அது ஊரூரா கொஞ்சநாளு சுத்தினேன்லா, அதாக்கும்’

‘ஊருசுத்தினா சித்தப்பன மாமான்னு கூப்பிட்ர முடியுமா? நானும் பலதண்ணி கண்டவந்தான்…ஆனா நம்ம பேச்ச விடுகதில்ல…இது நம்ம அப்பனுக்க குண்டித்தடம் மாதிரில்லா?’

‘பின்ன…’

‘தம்பி என்ன செய்யுதான்?’

’இப்பம் வீட்டிலதான் இருக்கான்…ஒருமாதிரி படிச்சிட்டிருந்தான்… எஸெல்ஸியிலே நல்ல மார்க்கு உண்டு.. காலேஜுக்குப் போனான். அங்க படிச்சிட்டிருப்பதான் ரொம்ப களண்டுபோச்சு’

’பெறவு?’

’சொன்னா கேக்கிறதில்ல. வீட்டுக்கு வாறதில்ல…எந்நேரமும் என்னெளவையோ ஒக்காந்து படிக்கிறது…எங்கியாம் போயி ஒக்காந்து மரம் மட்டைன்னு பாத்துக்கிட்டிருக்கது’

‘மத்தது உண்டோ?’ கையை கொக்கி மாதிரி காட்டி ’குட்டிகள்?’

‘அதெல்லாம் ஒண்ணில்ல…அதுக்கெல்லாம் இவனுக்கெங்க ஊற்றமிருக்கு…? கேனப்பய…ஒருநாள் அப்பா என்னமோ கேட்டாருண்ணு சொல்லி நேரா போயி அவன் கூட்டுக்காரங்ககூட தங்கியிருக்கான்…’

‘இருப்பானுகளே….சேக்காளிங்க இருப்பானுகளே…தம்பி நல்லா கேட்டுக்கிடுங்க சேக்காளிதோசம் மூதேவிதோசத்தைவிட கெடுதலு’

’ஆமா…அங்க என்னமோ அடிதடி ஆச்சுண்ணு சொல்லி கெளம்பி வந்துட்டான்’

’அடிதடியெல்லாம் உண்டா? நல்லாருக்கே’

’அடிதடிக்கு இவனுக்கெங்க கோப்பு? சும்மா சகவாசம்தான்….வந்தவன் கொஞ்சநாளு ஒருமாதிரி மப்பா இருந்தான். ஒரு மூணுமாசம். அப்பதான் இவனுக்க கூட்டுகாரன் ஒருத்தன் பனையிலே இருந்து விளுந்து செத்தான்’

’பனையிலே என்னத்துக்கு ஏறினான்? தொளிலோ?’

’தொளில் ஒண்ணும் இல்ல அண்ணாச்சி… எல்லாம் கொளுப்புதான். ராத்திரி போயி ஆத்தங்கரையிலே புதைச்சுபோட்டிருக்கிற ஊறல எடுத்து குடிக்கிறது. மப்புல என்னாம் செய்யவேண்டியது. ஆத்தங்கரையிலே ஒத்தக்கரும்பனை நின்னிருக்கு. இடிவிளுந்து மொட்டைகருகின பனை… இந்தா நிக்கே இந்தமாதிரி’

‘அசிங்கம்…மொட்டப்பனமரத்திலே மூதேவி உண்டுண்ணுல்லா சொல்லு…’

‘அதிலே உச்சிவரைக்கும் ஏறிக்காட்டுறேன்னு அந்தப்பெய வாது வச்சிருக்கான். கேறினா அஞ்சுரூவான்னு இவன் சொல்லியிருக்கான். நல்ல இருட்டு பாத்துக்கிடுங்க. மப்பும் உண்டு. அவன் சரசரன்னு மேலே ஏறினானாம். இருட்டுல மேலே ஏறிப்போய்ட்டே இருந்தவன் நுனி வரைக்கும் போய்ட்டான். மேக்கொண்டு ஏறுறதுக்கு பனை இல்லைங்கிறது தெரியாம அப்டியே மேலே ஏறியிருக்கான்…’

’அய்ய’

’இருட்டுல புடிச்சு ஏறியிருக்கான் அண்ணாச்சி’

’பிறவு?’

’இவன் என்ன சொல்லுதான்னா அவன் இருட்டபுடிச்சு மேலே ஏறி அப்டியே காணாமப்போய்ட்டான்னு’

‘அப்பம் வட்டுல்லா?’

’ஆமா…பின்ன வட்டில்லாம? இவன் ஒரு முப்பதுநாளு வீட்டுக்குள்ள ரூமை அடைச்சுக்கிட்டு இருந்தான். கேட்டா இருட்டுன்னு சொல்லுதான்’

‘என்ன இருட்டு?’

‘அண்ணாச்சி அவன் வாய்க்குள்ள இருட்டு இருக்காம்…’

’தம்பி எல்லா வாய்க்குள்ளயும் இருட்டுதானே? இதென்ன கூத்தாட்டு இருக்கு?’

‘சொன்னா கேக்காண்டாமா அண்ணாச்சி? வாய்க்குள்ள டார்ச்ச அடிச்சு காட்டி பாருலேன்னா நான் வாய மூடினபெறவு இருட்டு இருக்கேங்கிறான். வயத்துக்குள்ளயும் காதுக்குள்ளயும் இருட்டா இருக்காம்…’’

’செரிதான், எளகி மறிஞ்சாச்சு’

‘ஆமா…பின்ன நவரக்கிழி, நாசியம்னு எல்லா சிகிச்சையும் உண்டு. ஒண்ணும் கேக்கல்ல…ஏன் தெரியுமா?’

‘ஏன்?’

‘பிரச்சினை வட்டில்ல…வேற’

’என்னது?’ என்றார் முகம் வெளிறிவிட்டது.

‘அதான் அண்ணாச்சி, உங்க வயசுக்கு நீங்க எவ்ளவோ கண்டிருப்பீக. நான் சொல்லி தெரியவேண்டியதில்ல. அறியாப்பயக்க கிட்ட சொன்னா சும்மா ரீலு சுத்துகான்னுதான் சொல்லுவானுக’

‘நாம பலதும் கண்டவனாக்கும் தம்பி….இப்ப கேட்டீங்கன்னா–’

‘இவனுக்கு எழுத்து வாதையாக்கும். ராப்பகலா எழுதுகான்… எப்பம் பாத்தாலும் எளுத்துதான். அப்டி என்னதான் எளுதுகான்னு பாத்தாக்க ஒண்ணுமில்ல. காலம்பற போயி ரூம்புக்குள்ள பாத்தாம் ஒரு எளுத்துகூட இல்ல. எல்லாம் வெள்ளத்தாளாக்கும்’

‘பேனா வச்சா எளுதுகான்?’

’ஆமாண்ணாச்ச்சி…ஒருநாளுக்கு அரக்குப்பி மை ஆயிடும்லா? பிறவு நான் நல்லா பாக்க ஆரம்பிச்சேன். ராத்திரி எளுதுறப்ப ஆரிட்டயோ பேசுறமாதிரி சத்தம். சட்டுன்னு கதவத்தெறந்து உள்ள போனா இவந்தான் பெருச்சாளி மாதிரி முளிக்கான்…ஆருமில்ல. சரீடேன்னு ஒருநாள் கதவு ஓட்டை வளியாட்டு பாத்தேன்’

அவர் என் கண்களை பீதியுடன் பார்த்தார்.

’உள்ள ரெண்டாளு அண்ணாச்சி’

’ய்யோ’ என்று சற்று எழுந்தே விட்டார்.

’ஆமண்ணாச்சி…இவன் இருந்து எளுதுகான். பொறத்தால ஒரு ஆளு நடந்துக்கிட்டே இருக்கான். சாதா நடை இல்லண்ணாச்சி, இந்த கெட்டிப்போட்ட நரி சுத்திவருமே அந்த நடை. நெலைகொள்ளாம ஒரு நடை..’

’ஆராக்கும்? ’அவர் மூச்சு போதாமல் மெல்ல கேட்டார்.

‘தெரியல்ல…அறிஞ்ச ஆளு இல்ல…வேற…’

’எப்டி வந்தாரு?’

’அதாக்கும் நானும் பாத்தது. பாத்துக்கிட்டே இருந்தா அவரு திரும்பினப்ப கண்ண பாத்துட்டேன். அண்ணாச்சி இந்த எருமைக்கெல்லாம் ராத்திரி இருட்டுலே கண்ணு மின்னும்லா?’

’ஆமா’

’அதேமாதிரி நீலமா மின்னிச்சு அண்ணாச்சி அந்தாளு கண்ணு’

அவர் அமைதியாக பார்த்தார்.

’அந்தால ஓடி நேரா ஆலங்கோடு ஆசானுக்க கிட்டபோயி அப்டியே காலில விளுந்துட்டேன். ஆசானே என்னையும் என் தம்பியையும் நீங்கதான் ரெட்சிக்கணும்னு சொல்லி நெலைவிளிச்சு அழுதேன்’

அவர் தலையசைத்தார்.

’அவருதான் சொன்னார், அது யாருண்ணு’

’யாரு?’

’அத வெளியச் சொல்லப்பிடாது அண்ணாச்சி’

’ஓ’

’அவன் எளுதி வச்ச ஒரு தாளை எடுத்துக்கோ. நடுராத்திரி பன்னிரண்டுமணிக்கு கெளம்பி நேராட்டு நடந்து போயிரு. வந்தவரு உன்பின்னால வந்திருவாருண்ணு சொன்னாரு’.

’பிறவு?’

’நான் அதேமாதிரி அவன் எளுதின தாளு ஒண்ண எடுத்து வச்சுகிட்டேன். அதில ஒண்ணுமில்ல அண்ணாச்சி வெள்ளத்தாளாக்கும். ராத்திரி பன்னிரண்டு மணிக்கு சஞ்சிய எடுத்துக்கிட்டு வெளிய எறங்கி இருட்டுக்குள்ள நடந்தேன்’. அவரை கூர்ந்து நோக்கி ‘எனக்க பொறத்தால அவரு வாற சத்தம் கேட்டுது…’

இடைவெளிவிட்டேன்.

‘நடக்குற சத்தம்னா அது இல்ல. நின்னு கேட்டா சத்தம் கெடையாது. திரும்பிப்பாத்தா ஆளும் இல்ல. ஆனா.. நான் கால வைக்கிறப்ப ஒரு சத்தத்துக்கு பதில் ரெண்டு சத்தம் கேட்டேன்….அச்சொட்டு அண்ணாச்சி. அப்டியே சிலுத்துப்போச்சு…

அவர் பெருமூச்சுவிட்டார்.

’அந்த காகிதத்தப்பாத்து அதில எளுதியிருக்கிற ஊருக்குப் போயி நடுச்சாமத்தில தனியா போயி அந்த காகிதத்த அந்த தீர்த்தத்திலே போட்டு முளுகி எந்திரிச்சு திரும்பிப்பாக்காம ஓடிவந்திருன்னாக்கும் ஆலங்கோடு ஆசான் சொன்னது. நான் அதை எடுத்து வாசிச்சுப்பார்த்தா திருவட்டாறு ஆறுண்ணு எளுதியிருந்தது’

அவர் கண்ணிமைக்காமல் கேட்டுக்கொண்டிருந்தார்.

‘அண்ணாச்சி கேக்குறியளா?’

’ஆ…ஆமா…சொல்லுங்க’

’திருவட்டாறிலே போயி ஆதிகேசவன் கோயிலிலே தங்கினேன்….நீங்க திருவட்டாறு வந்திருக்கியளா?’

‘எங்க நம்ம பொளைப்பே….நான் இந்தா மருதைகோயிலுக்குக்கூட….’

’திருவட்டாறு கோயில் மண்டபம் அப்டியே நெல்லையப்பர் மண்டபம்தான்னு வையிங்க. ஊர்த்துவ வீரபத்ரன் அகோரவீரபத்ரன் காளி கூளீன்னு பல செலைங்க. எல்லாம் எட்டடி பத்தடீன்னு கன்னங்கரேல்னு இருக்கும்….நான் ஒருநாலஞ்சுபேரோட நடுவிலே படுத்துக்கிட்டேன். ராத்திரி எந்திரிச்சு ஆத்தில காகிதத்த போட்டிரணுமுன்னு நினைச்சுகிட்டேன்…ஆனா நல்லா தூங்கிட்டேன். பாத்தா யாரோ காலால ஒதைச்சு எளுப்பிவிட்டாங்க. எந்திரிச்சு பாத்தா சுத்தி எல்லாரும் தூங்கிட்டிருக்கானுக. சரீண்ணு எந்திரிச்சு வேட்டியக் கட்டிக்கிட்டிருந்தப்ப பலபேரு என்னைய பாக்குற மாதிரி இருந்திச்சு. சுத்திச்சுத்திப்பாக்குறேன்….அண்ணாச்சி சொன்னா நம்ப மாட்டீங்க…செலைகளோட கண்ணெல்லாம் உசிரோட என்னைய பாக்குது அண்ணாச்சி. வீரபத்ரரு கால தூக்கி என்னைய மிதிச்சிருக்காரு….காலு நல்லா நீண்டிருக்கு’

சிலகணம் அமைதி. அவர் அசைந்து அமர்ந்தார்.

‘இத உங்கள மாதிரி கொஞ்சம் விஷயம்தெரிஞ்ச ஆளுகளிட்டதானே சொல்லமுடியும்? சத்தியமா இத நான் பாத்தேன்…சரீண்ணு ஆதிகேசவா பெருமாளேன்னு மனசில நினைச்சுக்கிட்டு எறங்கி கீளே போனேன். ஆனால் அங்க ஆறு இல்ல’

’ஆ….ஆறு இல்லேன்னா?’

’ஆத்தில ஒரு சொட்டு தண்ணி இல்ல அண்ணாச்சி….காலியா கெடக்கு. அந்தமட்டும் இந்தமட்டும் நடந்தாச்சு. ஒரு சொட்டு தண்ணி கெடையாது…என்ன செய்றது?’

’டாமிலே செக்கு போட்டுட்டானோ’

’என்னெளவோ யாரு கண்டா? ஓடி அந்தால கரைக்கு வந்தா எனக்கு முன்னால ஆரோ போற மாதிரி…இருட்டுல ஆளு தெரியல்ல. ஆனா ஆளுக்கு பத்துபத்தர அடி உசரமிருக்கும்….அண்ணாச்சி அப்பதான் நான் நினைச்சுக்கிட்டேன். ஊர்த்துவ வீரபத்ரருக்கு பக்கத்தில நின்ன அகோர வீரபத்ரர எந்திரிச்சி பாக்கிறப்ப காணுமேன்னு’

‘…அதுவா? ‘ என்று மிக மெல்ல கேட்டார்.

‘சொள்ளமாடன்லாம் ராத்ரிசஞ்சாரத்துக்குப் போவும்லா அண்ணாச்சி?

’ஆமா’

‘நீங்க பாத்திருக்கேளா?’

‘இல்ல நான்….எங்க மாமா ஒருத்தரு பாத்திருக்காரு…வாசுதேவநல்லூர்லே அவருக்கு–

’அப்றம்தான் தாள எடுத்துப்பாத்தேன். அண்ணாச்சி அதில இப்ப என்ன எளுதியிருந்ததுன்னு நெனைக்கிறீய? பாத்தேளா, ஊகிச்சுப்போட்டீக.. அண்ணாச்சி காசீன்னு போட்டிருந்திச்சு’

’ஓகோ’ என்று சுரத்தே இல்லாமல் சொன்னார்.

‘நான் வீரபத்ர சாமியப் பாக்குறப்ப என் பின்னால மத்தவரு காலடிச்சத்தம் மறைஞ்சிட்டுது பாருங்க. நான் பஸ்ஸிலே ஏறினப்ப எனக்குப்பின்னாடி அவரு நிக்கிற மாதிரி ஒரு இது….பிறவு எங்க போனாலும் அவரு பின்னாடி உண்டு. இந்த நாயி பூனை பண்ணி இதுக்கெல்லாம் அவர கண்ணுல தெரியும்…மனுசங்களுக்கு தெரியாது. ஆனா அப்டியும் சொல்லீர முடியாது. திருவனந்தபுரத்திலே ஒரு போலீஸ்காரன் என்னைய அடிக்கவந்தான். வந்தவன் அப்டியே தெகைச்சு நிக்கிறான்….கண்ணு முளிச்சு கோலிகணக்கா நின்னுபோச்சு. அப்டியே திரும்பி ஓடியே போய்ட்டான்’

’ஏன்?’

’ஏன்னு நான் என்னத்த கண்டேன் அண்ணாச்சி…உங்கள மாதிரி வெவரம் தெரிஞ்சவுங்க சொன்னா புரிஞ்சுக்கிடலாம்’

’அது மத்தவராக்கும்’

’அப்டியா அண்ணாச்சி? சத்தம் காட்டாம பின்னாடி வந்து நிக்கிறாரு இல்ல?’

‘ஆமா…அது அந்தமாதிரி ஐட்டங்களுக்க சொபாவம்லா?’

’எங்க விட்டேன்? நேராட்டு காசி…நான் ரயிலிலே டிக்கெட்டு எடுக்கல்ல பாத்துக்கிடுங்க. ஒருத்தன் நம்ம கிட்ட டிக்கெட்டு கேக்கமாட்டான். பாப்பான் அப்டியே பீதியடிச்சு பின்னாடி நவுந்திருவான். நேரா காசிக்கு போனேன். போய் எறங்கினா என்னையப் பாத்ததுமே ஒரு சாமியாரு வந்து ஒரு பிடி விபூதிய அள்ளி குடுத்தாரு. சாமீன்னு கும்பிட்டேன். பின்னாடி நிக்கிறவரு யாரு அண்ணனான்னு தமிழ்ல கேட்டாரு. நான் ஒண்ணுமே சொல்லல. நேரா போயி கங்க்கைகரையிலே நின்னேன். ரெண்டுகரையும் முட்டி கங்கை அப்டியே கடலு மாதிரி போய்ட்டிருக்கு. அண்ணாச்சி கங்கைய பாத்திருக்கேளா?’

‘ஆம எங்க? நாம இங்க தாம்ரர்ணியே…’

‘ஒரு அம்பது இல்ல நூறு தாமிரர்ணி வெள்ளத்தை நெனைச்சுக்கிடுங்க அதான் கங்கை’ என்றேன். ‘அப்டியே பாத்துட்டே இருந்தேன். கப்பலுமாதிரி போட்டெல்லாம் சங்கூதிக்கிட்டு பொக விட்டுகிட்டு போய்ட்டிருக்கு அண்ணாச்சி. ராத்திரி ஆயிடுச்சு…நடூராத்திரி வரைக்கும் காத்திருந்தேன். நல்லா இருட்டியாச்சு. படித்தொறையிலே நல்ல இருட்டா இருந்த எடத்தப்பாத்துப்போயி வேட்டிசட்டைய களட்டீட்டு கையில அந்த காகிதத்தோட எறங்கீட்டேன். அண்ணாச்சி, சத்தியமா நான் சொல்றத சாதாரணமா ஒருத்தனும் நம்பப்போறதில்ல….ஆனா இது சத்தியம்…கங்கையிலே தண்ணியே இல்ல அண்ணாச்சி..’

‘இல்லேன்னா?’

‘இல்லேன்னா என் கணுக்காலுக்குக் கூட தண்ணிவராது பாத்துக்கிடுங்க. சித்திரையிலே தாமிரவருணி ஓடுமே அதுமாதிரி…மணலில்ல, சேறு. எப்டி முங்கிறது? நடந்து நடந்து போறேன். நடூ ஆத்துக்கு வந்தாச்சு. இந்தால காசியில இருக்கப்பட்ட கோபுரம் கோட்டையெல்லாம் சின்னதா ஆயாச்சு. ஆனா தண்ணி கணுக்காலுக்குமேலே ஏறல்ல. எப்டி முங்கறது.?’

அவர் என்னைக் கூர்ந்து நோக்கிக்கொண்டு பேசாமலிருந்தார்.

‘அந்தக்கரைக்குப் போய்ட்டேன் அண்ணாச்சி. அப்றம் அப்டியே திரும்பிவந்தேன். கரையில ஏறி ஒக்காந்தப்ப அளுகையா வந்திட்டுது. என்னத்தச் சொல்ல? என்னாண்ணு திரும்பிப் போக? செத்திரலாம்னு நினைச்சேன். ஆனால் கங்கையில நான் சாகணுமானாக்கூட தண்ணி கெடையாதே. அப்டி ஒக்காந்தா என் பக்கத்திலேயே அவரும் ஒக்காந்திருக்கிற மாதிரி ஒரு இது….அண்ணாச்சி, அந்தால போற குடும்பம் ஒண்ணு அங்க இருந்த பிச்சக்காரங்களுக்கும் சாமிகளுக்கும் சில்லறைய குடுத்திட்டுப் போனாங்க. நான் இருந்த எடத்தில நான் மட்டும்தான். ஆனா அவங்க எனக்கு இருபத்தஞ்சு பைசா போட்டுட்டு பக்கத்தில ஆளில்லாத மண்ணிலயும் இருபத்தஞ்சு பைசா போட்டுட்டு போனாங்க…அண்ணாச்சி கேக்கிறியளா?

’ம்’

’காகிதத்த எடுத்துப்படிச்சா அதில ஹரித்துவார்னு எளுதியிருந்தது. நேரா அங்க போனேன். காசியிலயே கங்கையில கணுக்காலுக்குமேலே தண்ணி இல்லேன்னா ஹரித்துவாரிலே என்னாண்ணு இருக்கும்? அந்தால ரிஷிகேஷ் போனேன். அங்கயும் இல்ல. சரீன்னு அங்க இங்க அத்து அலைஞ்சுட்டு ஒருநாள் வண்டி ஏறி நேரா மெட்ராஸுக்கே வந்துட்டேன். மெட்ராஸிலே ஏது தண்ணி? கூவம்தான். கோவம் வந்து அந்த தாளச் சுருட்டி கூவத்திலே எறிஞ்சாச்சு. சனியன் நாசமாப்போவட்டும், எக்கேடா ஒளியட்டும்னு எல்லாத்தையும் மறந்துட்டு அங்கிணயே ஒரு வேலைக்குச் சேந்துட்டேன்’

’என்னவேல?’

’அரிசீல கல்லுபொறுக்குற வேலை அண்ணாச்சி’

’கல்லப்பொறுக்கறதா?’

‘கையால இல்ல. மிசினு பொறுக்கும்…நயம் அரிசீல அரிசிமாதிரியே கல்லு இருக்கும்லா? அதை பொறுக்கி எடுக்கிறதுக்குன்னு ஒரு மிசினு உண்டு. பொம்புளையாளுக வேலைபாப்பாங்க. அரிசிக்கடைக்காரன் நம்மகிட்ட கொண்டாந்து அரிசியக்குடுப்பான். நாம கல்லப் பொறுக்கி சுத்தம்பண்ணி குடுத்தா அத அவன் நயம் அரிசீன்னு விப்பான். அந்தக்கல்லை எல்லாம் கம்பெனிக்காரங்க ரைஸ்மில்லுகாரனுக்கு வித்திருவான்’

‘அது எதுக்கு?’

’என்னண்ணாச்சி கேக்குறீக? மறுபடியும் அரிசீல கலக்கணும்ல? அதுக்கு நயம் வெள்ளைக்கல்லுக்கு எங்க போவான்? அதேகல்லுதான் திரும்ப எங்க கிட்ட வந்துசேரும். மறுபடி பொறுக்குவோம். அண்ணாச்சி நெறைய கல்லு பல தலைமொறையா இப்டி சுத்திக்கிட்டே கெடக்கு தெரியுமா?’

அவர் வெளியே பார்த்தார்.

‘திருணவேலி இன்னும் வரலே அண்ணாச்சி…சொல்றத கேளுங்க…நான் கூவத்தில கிளிச்சு எறிஞ்சேன்லா, அந்த காகிதம் ஒருநாளைக்கு எனக்கு போஸ்டிலே வந்திட்டுது….போஸ்டிலயான்னு கேக்காதீங்கண்ணாச்சி. தபால பிரிச்சா அதே காகிதம். அதில ஒண்ணுமே எளுதல்லை. என்ன செய்றது சொல்லுங்க’

அவர் அசைந்து அமர்ந்தார். கண்கள் அசைந்துகொண்டே இருந்தன.

‘என்னைய வேலையிலே இருந்து போகச்சொல்லிட்டாங்கண்ணாச்சி… என்னையப்பாத்தா பொம்புளையாளுங்களுக்கு பயமா இருக்காம். என் பின்னாடி செலசமயம் ரெண்டு நெழல் விழுதுன்னு சொல்றாளுக. நாலஞ்சுபேரு பாத்திருக்காளுக’

அவரைக் கூர்ந்து நோக்கிக்கொண்டு சொன்னேன் ‘ஒருநாள் ராத்திரி தாளை எடுத்துப்பாத்தா எங்க ஊரு பேரு எளுதியிருக்கு. சரீண்ணு கெளம்பிட்டேன்’ சட்டையில் இருந்து காகிதத்தை எடுத்து ‘பாருங்கண்ணாச்சி….இதான் தாளு’

‘இல்ல…’

‘சும்மா பாருங்கண்ணாச்சி…’

’வேண்டாம் தம்பி’

‘பாருங்கண்ணாச்சி..’. மேலும் நீட்ட அவர் விலகி அமர்ந்தார்.

‘வேண்டாம் தம்பி’ என்று உடைந்த குரல்.

‘.வெள்ளையாத்தான் தெரியும்…உங்க குடும்பத்தில இதமாதிரி பிரச்சினை இருந்தாத்தான் எளுத்து தெரியும்’

‘இல்லதம்பி…வேண்டாம்….நான் இப்ப மருந்து சாப்பிட்டுட்டிருக்கேன்….சித்தா மருந்து’

’இப்ப ஊருக்கு போறேன்….ஊரிலே தம்பி எப்டி இருக்கானோ என்னமோ… இவரு வேற கூடவே வாறாரு…’ பின்னால் கைகாட்டி ‘படுபாவி, என்ன நெனைச்சிட்டிருக்காருண்ணு ஆருக்குத் தெரியும்?’

அவர் பின்னால் பார்த்துவிட்டு என்னைப்பார்த்தார்.

‘நம்ம கையிலே என்ன இருக்கு அண்ணாச்சி? அவரு போற வளியிலே நாம போறம்…நேரா போயி கன்யாகுமரி கடலிலே எறங்கினா நாமளும் எறங்கீரவேண்டியதுதான்’

அவரையே கூர்ந்து நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தேன். என் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்தார். கைநகங்களைப் பார்த்தார். மஞ்சள்பையைத் திறந்து ஒரு சிறிய கணக்குபுத்தகத்தைப் பிரித்து நுணுக்கமாக வாசித்தார். மீண்டும் என்னைப்பார்த்தார்.

சங்கர்நகர் வந்தது. எல்லாரும் எழுந்தார்கள். அவர் பரபரவென்று பையில் எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு எழுந்தார்.

‘அண்ணாச்சி, என்ன சொல்லாம போறீக?’

‘போய்ட்டு வாறேன் தம்பி’ என்று என்னைப்பாராமல் சொல்லிவிட்டு கூட்டத்தில் கலந்து இறங்கினார்.

சன்னல்வழியாகப் பார்த்தேன். ‘அண்ணாச்சி என்னது அவரு ஒங்ககூட வாறாரு’ என்று சொல்லலாமென வாயெடுத்தேன். பாவம் வேண்டாம் என்று தோன்றியது.

முந்தைய கட்டுரைவான்மீகி ராமாயணம்
அடுத்த கட்டுரைநூறுநிலங்களின் மலை-கடிதம்