இருமண்வெட்டிகள்

திரு ஜெய‌மோக‌ன் அவ‌ர்க‌ளுக்கு, வ‌ண‌க்க‌ம்.

தங்களுடைய பதிவு ஒன்றில் மண்வெட்டியை பற்றி எழுதியிருந்தீர்கள். நெடுநாட்களாய் என் மனதில் இருக்கும் ஒரு கேள்விக்கு விடை கண்டுபிடிக்க முயன்று இன்னும் சரியான பதில் கிடைக்கவில்லை. தாங்கள் மண்வெட்டியை அவதானித்து எழுதியிருப்பதால் தங்களிடம் கேட்கத்தோன்றியது. விடை கிடைத்தால் மகிழ்ச்சி. “இல்லை என்ற பதில்” கிடைத்தாலும் மகிழ்ச்சியே…

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் (தற்போதைய தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்) வயல்வெளிகள் மற்றும் கட்டுமானம் செய்யும் இடங்களில் பயன்படுத்தப்படும் மண்வெட்டியை தாங்கள் கண்டிருக்கக்கூடும். சோழமண்டலத்தின் மருமகனானதால் கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன். மண்வெட்டியின் கைப்பிடி சற்றே நீளமாகவும், இலைக்கும் கைப்பிடிக்கும் உள்ள இடைவெளி சற்றே அதிகமாகவும் இருக்கும். ஆனால் மற்றப்பகுதிகளில் பயன்படுத்தப்படும் மண்வெட்டியின் கைப்பிடி நீளம் குறைவாகவும், இலைக்கும் கைப்பிடிக்கும் உள்ள இடைவெளி குறைவாகவும், மிகவும் குனிந்து பயன்படுத்த வேண்டிய நிலையிலும் உள்ளதே, இதற்க்கு ஏதாவது தனித்துவ காரணங்கள் உண்டா? ஆம் எனில், தெரிவிக்க இயலுமா?

ந‌ட்புட‌ன்,
யோகேஸ்வ‌ர‌ன்
வழிப்போக்கன் – யோகேஷ்
http://vazhippokkann.blogspot.in/

அன்புள்ள யோகேஸ்வரன்

ஆம், அந்த வேறுபாட்டைத்தான் நான் பதிவுசெய்திருந்தேன்

தஞ்சையிலும் நாகர்கோயிலிலும் உள்ள மண்வெட்டி ஒரேபோலத்தான் இருக்கும். கோயில்பட்டி சிவகாசி மண்வெட்டிதான் அலகுக்கும் பிடிக்குமான இடைவெளி குறைந்து குனிந்து வேலைசெய்வதுமாதிரி இருக்கும்

தஞ்சைக்கும் நாகர்கோயிலுக்கும் உள்ள ஒற்றுமை இங்கே மண் களியாக இருக்கும் என்பதுதான். நெல்விவசாயம் அதிகம். களிமண்ணை நின்றபடி வெட்டி நெம்பி புரட்டவேண்டும். அதற்காகத்தான் இந்த மண்வெட்டி

கோயில்பட்டி கரிசல் பகுதிகளில் மண் குமுகுமுவென்றுதான் இருக்கும். மிளகாய் போன்ற புஞ்சை பயிர்களே அதிகம். மண்ணில் களையைச் செதுக்கிப்போடத்தான் அதிகமும் மண்வெட்டியைப் பயன்படுத்துகிறார்கள். வாய்க்காலில் நீர் அடைக்கவும். அதற்கு அந்த மண்வெட்டி வசதியானதாக இருக்கலாம்

ஜெ

முந்தைய கட்டுரைகுமரி உலா – 6
அடுத்த கட்டுரைபுறப்பாடு – கடிதங்கள்