புறப்பாடு – கடிதங்கள் 1

அன்பு ஜெயமோகன்,

இற்றைவரை வெளிவந்த “புறப்பாடுகள்” அனைத்தையும் (உ.வே.சா. அவர்களின் மொழியில்) “மாந்தி” மகிழ்கிறேன். உங்கள் பட்டறிவும், நூலறிவும், மொழியறிவும், கலையழகும் வியக்கத்தக்கவை. புறவய நோக்கிற்கும், நேரிய வார்ப்புக்கும், ஏளிதச்சுவைக்கும் உங்கள் “புறப்பாடுகள்” தலைசிறந்த எடுத்துக்காட்டுகள். குறிப்பாக “தோன்றல்,” “சண்டாளிகை,” “காற்றில் நடப்பவர்கள்” போன்றவற்றில் ஏனைய சிறப்புகளுடன் ஏளிதச்சுவை மேலோங்கியுள்ளது. தொடரட்டும் உங்கள் “புறப்பாடுகள்!”.

மணி வேலுப்பிள்ளை

அன்புள்ள ஜெ,

புறப்பாடு I ஒரு சுவாரசியமான அனுபவத்தொடராக இருந்தது. அனுபவங்களில் தன்னிச்சையாகக் கூடிவரும் ஆழமும் காணப்பட்டது. அதிலும் இரண்டு கட்டுரைகள் நுட்பமானவை. ஒன்று, கோயில்கொண்டிருப்பது. அதில் இந்துபூசாரியும் கிறித்தவப்பூசாரியும் பேசிக்கொள்ளும் அந்த சுபாவமான தன்மை மிக நுட்பமான இடம். அதேபோல கருத்தீண்டல். அந்தக்கதையில் ஒருவரின் கனவுக்குள் இன்னொருவர் கைநீட்டி தொடுவது அற்புதமான இடம்.

அந்த இரு இடங்களின் நுட்பமான தளம் புறப்பாடு II முழுக்கவே இருந்துகொண்டிருந்தது. இரண்டாம்பகுதிக்கதைகளில் உதிரி அனுபவங்களை தொகுக்கக்கூடிய உள்ளோட்டம் வெளியே தெரியாமலேயே ஓடுவதுதான் அதன் சிறப்பு என்று தோன்றியது. ‘எண்ணப்பெருகுவது’ தனிமையின் காத்திருப்புதான் என்று தெரிந்த பின்புதான் சட்டென்று ஒருவர் எழுந்து ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பதே தெரியும். அதுவும் கூட காத்திருப்புதான். கதையின் தொடக்கத்தில் சாப்பிடுவதற்குக் காத்திருந்த அதே வரிசையில் காத்திருக்கிறார்கள்.

ரணம் அச்சகத்தில் நடக்கிற கதையில் வழிதவறிப்போகிற அந்தப்பெண் ஏன் கதையில் ஒருபெண் காதலனை நினைக்கும்போது அப்படி எதிர்க்கிறாள் என்ற கேள்விதான் எனக்கு முக்கியமானதாகத் தோன்றியது. ‘கற்புடன்’ இருப்பவள் வழிதவறுவதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறாள். மற்றவள் இப்படி இருக்க விரும்புகிறாளா என்று நினைத்துக்கொண்டேன். அதில் பெண்களுடைய அந்தரங்கமான பேச்சுலகை எழுதியிருந்தீர்கள். தமிழிலே அனேகமாக இதுதான் முதல்முறை என்று நினைக்கிறேன்.

எல்லா கட்டுரை-கதைகளைப்பற்றியும் நிறையவே சொல்லலாம். வாழ்த்துக்கள்.

செம்மணி அருணாச்சலம்

முந்தைய கட்டுரைநமக்குத் தேவை டான் பிரவுன்கள்
அடுத்த கட்டுரைகுமரி உலா – 1