இமயம் – கடிதம்

அன்புள்ள ஜெ ,

இமயத்தை காண வேண்டும் என்ற தீராதஆசையை ஏக்கத்தை உருவாக்கி விட்டீர்கள். உங்கள் பயண அனுபவங்களை புத்தகமாக பின்பு வாசிக்கலாம் என்று படிக்காமல் விட்டிருந்தேன். அது பெரிய தவறு என்று இப்போது புரிந்து கொண்டேன். இது வெறும் பயண அனுபவம் மட்டுமல்ல, அதனூடாக அப்பகுதியின் வரலாறு,மதம்,அரசியல் என்று எல்லாவற்றையும் பேசுகிறது .

புனைவாளனின் எழுத்தில் வரும் பயண அனுபவம் என்பதே இதன் முக்கியமான சிறப்பம்சம் , நீங்கள் பெரிய பெரிய டைனோசர்கள் படுத்திருந்தது போல் இருந்தன மலைகள் என்பதை வாசித்த பிறகு புகைபடத்தை பார்க்கும்போது முதலில் டைனோசரின் உடலைதான் பிறகுதான் அதனை மலையாக பார்த்தேன். இது போன்று எண்ணற்ற வரிகள், அதுவும் ரங்துன் மடாலயம்பற்றி வரும்வரிகள், நான் அதை நேரடியாக கண்டிருந்தாலும் இந்தளவு அனுபவித்து ரசித்திருக்க மாட்டேன். உங்கள் எழுத்துக்களை படிப்பதை பொக்கிஷமாகவே கருதுகிறேன் .

இந்த பதிவில் வந்த உங்களின் ஒரு தியான அனுபவம் உண்மையில் எனக்கு ஒரு திறப்பு, தியானம் என்பதை கண் மூடி மனதினை கவனித்து அதை களைந்து இருக்க முயல்வது என்று நினைத்திருந்தேன்,அதற்கு சிலசமயம் முயன்று தோற்றிருக்கிறேன், இந்த பதிவில் வரும் ரங்துன் மடலாயம் அதன் பின்பான நிலபகுதிகள் ரசித்து அதன் வழியாக நீங்கள் கொள்ளும் இந்த அனுபவத்தை என்னால் தொட முடியும் ( கனவு)என்ற நம்பிக்கை உருவாகிறது . இயற்கையில் நாம் கரைந்துவிடுவது, மெய்மறந்து நிற்பது என்பதையெல்லாம் இதன் வழியாக புரிந்து கொள்கிறேன்.விஷ்ணுபுர வேத தத்தன் , இரவு நாவலில் வரும் கடலனுபவம்(கடலும் காயலும் சேரும் இடத்திற்கு மீன் பிடிக்க செல்லும் மீனவருடன் கடலில் இருக்கும் தருணம்),. பறக்கும் அணிலை கண்டு மனமற்று நிற்கும் தருணங்கள் எல்லாம் இதன் நீட்சியாகவே இப்போது பார்க்கிறேன்.

மலைகள் நம்மை சிறுதுகளாக உணர செய்பவை, அந்த உணர்வை அடைவது பெரும் வரம். அதன்பிறகு இகஉலகின் மூலம் அடைந்தவற்றை எல்லாம் தலையிலிருந்து உதறி பஞ்சாக பறக்க முடியும்,இயற்கையில் கலக்க முடியும். அதை இந்த பதிவின் ஒவ்வொரு வரியிலும் காண்கிறேன். விதவிதமான மலைகளை அதுவும் ஒரு பயணத்தில் காண்பது என்பது பேரனுபவம், நாம் வெள்ளை நிற மலையை நீண்ட நேரம்பார்த்து கொண்டிருந்தேன். குழந்தைகளை ”அப்படியே பிடித்து தின்னடலாம்போல இருக்கு,அவ்வளவு அழகா இருக்கு” என்று சொல்வார்களே ,அது போல அதனுடன் செல்லமாக சண்டையிட, புரண்டுஎழஆசையாக இருந்தது.

காஷ்மீர அரசியல் பற்றி நீங்கள் பகிர்ந்து கொண்டவை எல்லாம் மிக முக்கியமானவைகள் . பவுத்த வரலாறுகளை இப்போதுதான் கவனிக்க ஆரம்பித்திருக்கிறேன்.இதில் திபெத்திய பவுத்தம் ,மைத்ரேய புத்தர்,பரதசம்பவர், தாராதேவி என நிறைய அறிந்து கொண்டேன்.

உங்கள் பூடான் பயண அனுபவங்களை அடுத்து படிக்க இருக்கிறேன்.

ராதாகிருஷ்ணன்

முந்தைய கட்டுரைகுமரி உலா – 3
அடுத்த கட்டுரைராஜமார்த்தாண்டன்