களப்பிரர்

அன்புள்ள ஜெ,

நம் தமிழ் வரலாற்று நூல்களில் 300 வருட வரலாறு என்பது ‘களப்பிரர் காலம் இருண்டகாலம் ‘என்ற ஒற்றை வரியால் க்டந்துசெல்லபப்டுகிறது

இந்த தளத்தில் புதிய ஆய்வுகள் ஏதேனும்செய்யப்பட்டுள்ளனவா? நூல்கள் ஏதேனும் உள்ளனவா? 300 வருடம் என்பது ஒரு வம்சம் அல்லது அரசாங்கம் முற்றிலும் வரலாற்றில் இருந்து மறைந்து போக முடியாத அளவுக்கு நீண்டது அல்லவா?

முகையூர்
அசதா

 

அன்புள்ள அசதா

களப்பிரர் காலத்தைப் பற்றி இப்போது அத்தகைய ஒற்றைவரி சொல்லப்படுவதில்லை– அதாவது அறிஞர் நடுவே. இப்போது ஏராளமான ஆய்வுகளும் புதிய ஊகங்களும் உருவாகி வந்துள்லன

ஆரம்பகாலத்தில் தமிழ்நாட்டில் வரலாற்றை எழுதியவர்கள் சைவ அறிஞர்கள். அவர்களுக்கு சமணம் மீது ஒரு கசப்பு எப்போதும் இருந்தது. தமிழ்நாட்டில் நடந்த சமண சைவ பூசல்கள் அதற்கு முக்கியமான காரணம். தமிழ்கச் சைவர்களில் பெரும்பாலானவர்கள் முன்னாள் சமணர்கள்.

ஆகவே அவர்கள் பொதுவாக இரு விஷயங்களைச் செய்தார்கள் ஒன்று, சமணநூல்களை சைவநூல்கள் என விளக்கும் பெரும் விளக்கநூல்களை எழுதினார்கள். சிறந்த உதாரணம் கா.சு.பிள்ளை எழுதிய திருக்குறள் உரைவிளக்க நூல் இரண்டாவதாக சமண மதத்தின் வரலாற்று பங்களிப்பை பெரும்பாலும் வெற்றிடமாகவே விட்டுவிட்டார்கள்

களப்பிரர்கள் சமணர்கள் என்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக சமணர்கள் அக்காலத்தில் பெரிய ஆலயங்களை எழுப்பியதோ அவற்றில் கல்வெட்டுகளை பொறித்ததோ இல்லை. ஆரம்பகால தமிழ் வரலாறு பெரும்பாலும் நிவந்தங்களைப்பற்றிய கல்வெட்டுகளை சார்ந்தே எழுதபப்ட்டது. ஆகவே களப்பிரர் வரலாறு என்பது அனேகமாக அறியப்படாத ஒன்றாகவே இருந்தது. அதாவது அன்றைய வரலாற்றாய்வின் வழிகளில் அதை அறிய முடியவில்லை. ஆகவேதான் களப்பிரர் காலம் இருண்டகாலம் என்ற வரி தோன்றியது

பின்னர் வரலாறு அரசியலுக்கான கருவியாக ஆகியது. தமிழர் என்ற அடையாள உருவாக்கத்துக்கு வரலாறு பயன்படுத்தப்பட்டது. அப்போது களப்பிரர்கள் மறக்கப்பட்டார்கள். மறுக்கவும் பட்டார்கள்

ஆனால் சமீப காலமாக பழைய சைவ ஆய்வாளர்களில் இருந்து முரண்படும் புதிய தலைமுறை ஆய்வாளர்கள் உருவாகிவந்தபோது களப்பிரர் குறித்த புதிய நோக்கு உருவாகி வந்தது. களப்பிரர் காலகட்டத்தை அறிய மிகச்சிறந்த ஆவணங்கள் அக்காலகட்ட இலக்கிய நூல்களே. பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நீதிநூல்கள் அக்காலகட்டத்தில் உருவானவை. திருக்குறளும் அவற்றில் ஒன்று

களப்பிரர் காலகட்டத்தைச் சேர்ந்த பல சமண குடைவரைக் கோயில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. உதாரணம் சிதறால் மலை [குமரிமாவட்டம்] அப்பாண்டநாதர் கோயில் [ உளுந்தூர்பேட்டை] . அவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு புதிய வரலாறு விரிவாக இனிமேல்தான் எழுதபப்டவேண்டும்

மேலும் நமது வரலாற்றாய்வு என்பது கடந்த ஐம்பதாண்டுக்காலமாக தமிழ் மொழிக்குள்ளும் தமிழ் நிலத்துக்குள்ளும் சுருங்கி விட்டது. பிறமொழியும் பிற பண்பாடும் அறிந்த வரலாற்றாசிரியர்கள் மிகவும் குறைவே. ஆகவே சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ல சமண மரபைச் சேர்ந்த நூல்களைக் கணக்கில் கொன்டு தமிழக வரலாறு இன்றுவரை எழுதப்படவில்லை

இருப்பினும் சில முக்கியமான நூல்கள் வந்துள்ளன. முனைவர் க.ப.அறவாணன் களப்பிரர் காலம் குறித்து சில முக்கியமான ஆய்வுகளைச் செய்திருக்கிறார். அவரது ‘களப்பிரர்காலம் பொற்காலம்’ என்ற நூல் முக்கியமான ஒன்று.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதிக்கு அருகிலுள்ள பூலாங்குறிச்சியில், இவர்களது கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்துள்ளனர்.  காலம் கி.பி 442 எனக் கருதப்படுகிறது. கோச்சேந்தன் கூற்றன் என்னும் மன்னனது பெயரில் இக்கல்வெட்டு உள்ளது.

மதுரை முதல் புதுக்கோட்டை வரை இவர்கள் ஆண்டிருந்த நிலப்பகுதி என்றும் இப்பகுதியில் உள்ள பல ஊர்பெயர்கள் சாதிகளின் ஆசாரங்கள் ஆகியவற்ரைக் கோன்டு களப்பிரர் வரலாற்றை ஆராயலாம் என்றும் சொல்கிறார்கள்.

சைவர்களின் வெறுப்பு எவ்வாறு இருந்தது என்றால் களப்பிரர் காலகட்டத்தில் ஏராளமான நீதி நூல்கள் எழுதப்பட்டதற்குக் காரணம் அக்காலத்தில் அவர்களின் கொடுங்கோல் ஆட்சியால் நீதி வழுவி சமூகம் சீர்குலைந்ததுதான் என மீண்டும் மீன்டும் எழுதியிருக்கிறார்கள்! அப்படியானால் பக்தி காலகட்டத்தில் ஏன் அத்தனை பக்தி நூல்கள் எழுந்தன? பக்தி வழுவி நாத்திகம் மேலெழுந்தமையாலா? என்ன அபத்தமான பேச்சு!

ஆனால் அப்படித்தான் நம் ஆரம்பகால வரலாறு முற்றிலும் அடிபப்டைகள் இல்லாமல் எழுதப்பட்டது. அதற்குக் காரணம் அப்போது வரலாற்றை காலவரிசைப்படி எழுதுவது என்ற அளவிலேயே வரலாற்றெழுத்து நின்றுவிட்டிருந்தது. வரலாற்றின் கோட்பாடுகள் எவையும் முன்வைக்கப்படவில்லை.

இந்திய வரலாற்றாய்வில் முக்கியமான கோட்பாட்டு சட்டகங்கள் அக்காலகட்டத்தில்தான் முன்வைக்கபப்ட்டன. டி.டி.கோசாம்பியின் மரபு உருவாகி வந்தது.ஆனால் தமிழ்க அறிஞர்கள் அவற்றை எல்லாமறிந்திருந்தார்கள் என்பதற்கான தடையமே இல்லை

களப்பிரர் காலத்தில் தமிழகத்தில் சமணம் செழித்தது. சமணம் பல்வேறு இனக்குழு மக்களை அகிம்சை வழியில் ஒன்றாகத் திரட்டிய மதம். தமிழ்நாட்டில் நாக வழிபாடு அதிகமாக இருந்திருக்கலாம். ஆகவே ஐந்துதலை நாகம் தலைக்குமேல் நிற்கும் தீர்த்தங்காரரான பார்ஸ்வநாதர் இங்கே சமணர்களால் முன்னிறுத்தப்பட்டார். மக்கள் அதிகமாக அவரையே வழிபட்டிருக்கிறார்கள்.

சம்ணம் மருத்துவம், கல்வி ஆகிய இரு வழிகளில் மக்களிடம் சென்றடைந்தது. ஆகவே மருத்துவநூல்கள், நீதிநூல்கள், இலக்கணநூல்கள் ஆகியவையே அவர்களால் அதிகமும் எழுதபப்ட்டன. தமிழகத்தில் கல்வி பரவலாக அவர்கள் பெரும்பங்கு வகித்தார்கள். சித்த மருத்துவத்தின் பிதாமகர்கள் அவர்களே.

சமணம் வணிகத்தின், வணிகர்களின் மதமும் கூட. தமிழகத்தை ஒன்றிணைக்கவும் விரிவான வணிக வழிகளை உருவாக்கவும் அது உதவியது. இது தமிழகத்தின் பொருளியல் வளார்ச்சிக்கு பெரும்பங்கு வகித்தது. பலநூற்றாண்டுக்காலம் தமிழ் பண்பாட்டின் முகமாக சமணமே விளங்கியது.

களப்பிரர்கள் எங்கும் செல்லவில்லை. அவர்கள் இங்குள்ள மக்களுடன் ஐக்கியமாகிவிட்டிருக்கக் கூடும். தமிழ்கத்தில் உள்ள பலசாதிகள் [குறிப்பாக முத்தரையர் போன்ற சாதிகள்] களப்பிரர் வழித்தோன்றல்களாக இருக்கலாம். அவர்களின் வரலாற்றை நாம் இன்று தெளிவாக பகுப்பாய்வுசெய்ய முடியாது. நெடுங்காலம் ஆகிவிட்டது.

 

ஆனால் அவர்களின் குலதெய்வங்கள் ஆசாரங்கள் ஆகியவற்றை வட இந்திய — குறிப்பாக ஆந்திர, கனன்டநாட்டு– குலதெய்வங்கள் ஆசாரங்களுடன் ஒப்பிட்டு ஆய்வுசெய்தால் புதிய வெளிச்சங்கள் கிடைக்கலாம்

 

களப்பிரர்காலகட்டம் தமிழகத்துக்கு முக்கியமான அரசியல்-பொருளியல்-பண்பாட்டுக்  கொடைகளை வழங்கியது என்றே நான் எண்ணுகிறேன். வரும்காலத்தில் விரிவான ஆய்வுகள் வழியாக இது மேலும் நிறுவப்படக்கூடும்
ஜெ

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D

முந்தைய கட்டுரைகாந்தி கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅ.மார்க்ஸ்,காந்தி