புறப்பாடு II – 16, ஜோதி

வடலூர் எந்தப்பக்கம் என்று எனக்குத்தெரியாது. நெய்வேலியில் என் பக்கத்து வீட்டுக்காரரின் சொந்தக்காரர் ஒருவர் இருந்தார். அவர் பேச்சிலிருந்து அது நெய்வேலி அருகே என்று தெரியும். ஆனால் நெய்வேலி எந்தப்பக்கம் என்று தெரியாது. என்ன விசேஷமென்றால் அருளப்ப சாமிக்கும் அதெல்லாம் தெரியாது என்பதுதான். நானும் அவரும் நடக்க ஆரம்பித்தபோது அவர் ரயில்நிலையத்துக்குத்தான் போகிறார் என்று நினைத்தேன். அதன்பின்பு அவர் ஒருவேளை பேருந்தில்போக திட்டமிடுகிறாரோ என்ற சந்தேகம் வந்தது. அப்படியென்றால் அவரிடம் பணமிருக்கவேண்டும். என்னிடம் ஒரு பைசாகூட இல்லை.

ஆனால் அருளப்ப சாமி சாலையோரம் நின்ற ஒருவரை நோக்கி வணங்கி ‘சாமி, வடலூர்க்கு எப்பிடிப்போகணும்?’ என்றார்.

‘கடலூரா? பீச்சாங்கையாண்ட திரும்பு…நேராபோ. ரயில்வேடேசன் வரும்….பாசஞ்சரு உண்டு’

‘இல்ல சாமி….ரயிலிலே எல்லாம் போறதில்லீங்க….’

‘பஸ்சா…பஸ்ஸுன்னாக்க…’

‘பஸ்ஸிலயும் போறதில்லீங்க’

அவர் முகவாயைத் துடைத்தபடி கூர்ந்துபார்த்தார். விளையாடுகிறாரா என்று யோசிப்பதாகத் தெரிந்தது. ‘நீங்க எங்க போவணும்?’

‘வடலூரு…வள்ளலார் சமாதிக்கு…தைப்பூசம் வருதுலீங்களா?’

’வடலூரா? அது எங்க இருக்கு? டேய்..’

ஒரு அழுக்குப்பையன் வந்தான் ‘இன்னா?’

‘இந்த கடலூரு…இல்ல…சாமி எந்தூரு சொன்னீங்க?’

’வடலூரு. வள்ளலாரு சமாதியான ஊரு’

‘யாரு?’

வள்ளலாரு…வள்ளலாரு ராமலிங்கசாமி’

‘அது யாரு? அவரு அங்க என்ன பண்றாரு?

’சமாதியாயிட்டாரு’

’சமாதின்னா?”

‘செத்துட்டாரு’

‘ஓகோ…அவரு உனுக்கு இன்னா ஓணும்?’

‘சாமிங்க’

ஓடிவிடலாம் போலிருந்தது. சென்னைத்தொலைக்காட்சி நகைச்சுவை போலிருந்தது. ஆனால் மூவரும் தீவிரமாகவே இருந்தனர். ‘இந்தா ராஜு…டைவர கூப்பிடு. சாமி இன்னவோ கேக்குது பாரு’

‘இன்னா சாமி?’

‘வடலூருக்கு எப்டி போறது?’

‘எந்த வடலூரு?’

’வள்ளலாரு சமாதியான எடம்’

‘அத்தக் கேக்கிறியா? நீ எப்டிப்போறே?’

‘நடந்துதான்…’

‘நடந்தா…என்ன பேசுறே?’

‘நான் எல்லா எடத்துக்கும் நடந்துதான் போறது…’

ராஜு மற்ற இருவரையும் பார்த்துவிட்டு ’நடந்துபோற வளி எனக்குத்தெரியல்ல சாமி. நான் டாக்ஸி ஓட்டினுதான் போறது…’

‘எப்டி போறீங்க?’

’நேரா பாண்டிச்சேரி போயிரு…பீச்சாண்ட ரோடு இருக்கு பாத்தியா? மகாபலிபுரம் அப்பால அப்டியே பாண்டிச்சேரி…அதுக்கப்பால கடலூர்…அங்கேருந்து நெய்வேலி ரூட்ல போனா வடலூரு’ என்றபின் என்னை அரைக்கணம் பார்த்துவிட்டு ‘அம்மாந்தூரம் நடந்தா போறே?’

‘போயிடலாம் சாமி…தைப்பூசத்துக்குத்தானே போகணும்?’

’பஸ்ஸுக்கு காசு குடுக்கறேன் சாமி…பஸ்ஸிலேயே போயிரு’ என்றார் முதல் ஆள்.

‘இல்லீங்க..பஸ்ஸிலே போறதில்லீங்க…. இது என்னாது?’

அவர் தன் கையில் இருந்த இரும்புச்சாமானைப்பார்த்துவிட்டு ’லிவரு…மிசினுக்குள்ள உள்ளது….ஏன் சாமி நடந்தேதான் போவணும்னு வெரதமா?’

‘இல்லியே..நடந்துபோனா புடிச்சிருக்கு’ என்றார் அருளப்ப சாமி ‘இத்த வச்சுட்டு என்னா பண்ணுவீங்க?’

‘சாமிக்கு காணிக்க குடுத்தா வாங்கிக்குவீங்களா?’

‘இல்லீங்க…காசெல்லாம் வாங்குறதில்லீங்க…’

‘அப்ப சாப்பிட்டுட்டுப்போங்க சாமி…’

நான் ‘சாமி வாழப்பழம் தேங்கா மட்டும்தான் சாப்பிடுவாரு…’

‘அப்ப வாழைப்பழமும் தேங்காவும் வாங்கிக்குடுக்கலாமுங்களா?’

‘குடுங்க’ என்றார் அருளப்பசாமி.

ராஜூ ஓடிப்போய் இரண்டு தேங்காயும் இரண்டுசீப்பு வாழைப்பழமும் வாங்கி வந்தான்.

‘இது என்னத்துக்கு? நாங்க ரெண்டுபேருதான்’ என்று நான்கு வாழைப்பழத்தை வைத்துக்கொண்டு மிச்சத்தை அவர்களுக்குக் கொடுத்தார் ‘நீங்க சாப்பிடுங்க’

‘இல்லீங்க சாமி’

‘டேய் வாங்குடா….சாமி பிரசாதம் குடுக்குது’ என்றார் முதல் ஆள்.

அவர்கள் வாங்கிக்கொண்டார்கள்.

’சாமி புள்ளகுட்டிகள ஆசீர்வாதம் பண்ணணும்’

‘எல்லாம் சந்தோசமா இருங்க…நல்லபடியா எல்லாம் நடக்கும்…வரட்டுமா?’

அவர்கள் கைகூப்பியபடி நிற்பதை பார்த்தேன். நாங்கள் திரும்பி நடக்கும்போது பின்பக்கம் ’சிஷ்யனாக்கும்…பாத்தா படிச்சவன் மாதிரி இருக்கான்’ என்ற குரல் கேட்டது.

அருளப்பசாமி மிகமெதுவாக நடப்பவர். மதியவெயிலிலும் தென்றலில் நிலவில் உலவுபவர் மாதிரி இருந்தார். அவருக்கு எந்த அவசரமும் இல்லை. எல்லாவற்றையும் ஆர்வத்துடன் வேடிக்கைபார்த்து, பிடித்தவற்றைப்பார்த்து சிரித்து, சிலரிடம் சில கேள்விகள் கேட்டு என்ன ஏது என்று தெரிந்துகொண்டு நடந்தார். நான் கொஞ்ச தூரம் சென்றபின் அவருக்காக காத்திருக்கவேண்டியிருந்தது

கடற்கரைக்கு ஒருமணிநேரத்தில் வந்துவிட்டோம். அந்நேரத்திலும் கடற்கரையில் ஆளிருந்தார்கள். சாலையோரமாக சுண்டல் பொரி கடலை விற்பவர்கள் கூடைகளுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க காற்று மிதமாக வீசிக்கொண்டிருந்தது.

கடற்கரை ஓரமாக சிறிய சாலை மணல்மூடிக்கிடந்தது. மணல் விலகிய இடங்களுல் தாரின் கருமை தெரிந்தது. மேலும் இரண்டுமணிநேரத்தில் நகரை விட்டு வெளியே வந்துவிட்டோம். மணல்மேடுகள் நடுவே இடங்களுக்கு மூங்கில்நட்டு வேலிபோட்டிருந்தார்கள். இருபக்கமும் காற்றாடிமரக்காடுகள். இலைகளுக்கு அப்பால் ஒளி அலையடிக்கும் கடல்.

மகாபலிபுரத்துக்கு வந்தபோது மாலை நேரம். கடலுக்குமேல் வானம் சிவக்க ஆரம்பித்திருந்தது. சாலையோரமாக ஒரு சின்ன கோயில் ’சாப்பிட்டிருவோம்…நான் சூரியன் அணைஞ்சபிறகு சாப்பிடமாட்டேன். குரு சொல்லியிருக்காரு’ என்றார்.

முழுத்தேங்காயையும் உடைத்துத்தின்று பழத்தையும் சாப்பிட்டோம். அருகே ஒரு பெட்டிக்கடையில் இருந்து வயிறுமுட்ட தண்ணீர் குடித்தபின் கடற்கரைக்குச் சென்று அமர்ந்திருந்தோம். கடல் நிறம்மாறி இருண்டு வானமும் இருள்வது வரை இருந்தோம். அருளப்ப சாமி ஒன்றுமே பேசாமல் இருந்தார். ஒரு கண்ணிலிருந்து மட்டும் கண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது.

இருட்டியபின் எனக்கு குழப்பம் ஏற்பட்டது. என்ன உத்தேசிக்கிறார்? கிளம்பப்போகிறாரா, அங்கேயே தங்கவிருக்கிறாரா? ‘சாமி போலாமா?”

’ஆ?ஆ?யாரு? என்ன?’

‘சாமி இது நாந்தான்…சாமி’

‘என்ன? யாரு?’

என்ன இது வம்பு என்று திகைத்து நின்றேன். கொஞ்ச நேரம் கழித்து அருளப்ப சாமி ‘அய்யோ…’ என்றார்.

‘ஏன் சாமி’

‘ராத்திரி ஆயிடுச்சே’

‘என்ன பண்ணலாம்?’

’ராத்திரி நடந்தாத்தான் நல்லாருக்கும்…ஒம்பது மணிக்குமேலேதானே படுக்க எடம் கெடைக்கும்’

கடலோரச் சாலையில் எப்போதாவது ஒரு லாரிபோவது தவிர சந்தடியே இல்லை. இருபக்கமும் வெறும் உப்புமணல் சதுப்புகள், மணல்மேடுகள், காற்றாடிமரத்தோட்டங்கள். சில இடங்களில் மீனவக்குப்பத்துக்குச் செல்லும் அகலமற்ற வெண்ணிற மணல்பாதைகள் பிரிந்து சென்றன. சாலையோரத்தில் இளநீரும் பதநீரும் விற்பவர்கள் மாலைக்குள் முடித்துக்கொண்டு செல்ல அவர்கள் விட்டுச்சென்ற குப்பைமலைகள் மட்டும் கிடந்தன. டீக்கடைகள்கூட அந்திக்குப்பின் கிடையாது.

பத்தரை மணிவாக்கில்தான் ஒரு சாலையோரக் கோயிலை அடைந்தோம். புதியதாகக் கட்டியிருந்தார்கள். சிமிண்ட் போட்ட முன்மண்டபத்தில் காற்று மணலை அள்ளிக் கொட்டியிருந்தது. சாலைக்கு மறுபக்கம் காற்றாடிமரத்தோப்புக்கு அப்பால் கடலின் அலைகளின் வெண்மை எவரோ இருளில் துணியை வீசி வீசிக்காட்டுவதுபோலத் தெரிந்தது. காற்று உந்தித்தள்ளுவதுபோல வீசியது.

அருளப்ப சாமி துண்டை எடுத்து சிமிண்ட் தரையைத் துடைத்தார். கையை தலைக்கு வைத்து படுத்துக்கொண்டார். ‘நல்ல காத்துல்ல?’

‘ஆமா, கடல்காத்து’

நான் அமர்ந்துகொண்டேன். மேலே அவர் ஏதோ பேசப்போகிறார் என்று நினைத்தேன். அவர் தூங்கிவிட்டார் என்பது குறட்டை ஒலி கேட்டபோது தெரிந்தது. கடலையே பார்த்துக்கொண்டிருந்தேன். சென்று பார்த்தாலென்ன? ஆனால் அவ்வளவு தூரம் நடந்ததனால் காலும் இடுப்பும் வலித்தது. மல்லாந்து படுத்தேன். எதற்காக இந்தச் சாமியாருடன் இவ்வளவு தூரம் வந்தேன்? ஓரிரு வரிகள்கூட சிந்தித்திருக்க மாட்டேன். அதிகாலையில் அருளப்ப சாமி என் காலைப்பிடித்து ‘தம்பி…தம்பி’ என்று அழைத்தபோதுதான் விழித்துக்கொண்டேன். என் உடம்பு முழுக்க மணலாக இருந்தது. வாய்க்குள்ளும் மணல்.

‘குளிச்சுட்டு கெளம்பலாமே தம்பி’

நல்ல இருட்டாகவே இருந்தது. தலைக்குமேல் நட்சத்திரங்கள் மிக அருகே என்பதுபோலத் தெரிந்தன. இரவில் ஒரு நட்சத்திரம் கூட இல்லை. கடற்காற்றும் இல்லை. நல்ல குளிர். அருளப்ப சாமி பையை எடுத்துக்கொண்டு விடுவிடுவென நடந்தார். நான் பின்னால் சென்றேன்.

சாலையோரம் ஒரு அடிகுழாய் இருந்தது அருளப்ப சாமி வேட்டியையும் மேலாடையையும் கழற்றிவிட்டு கோவணத்துடன் அதன் கீழே அமர்ந்து கொண்டார். ‘அடிங்க தம்பி’

நான் அடிக்க நீர்கொட்டியது. அதன் கீழே கிட்டத்தட்ட படுப்பதுபோல குனிந்து அமர்ந்தும் கையால் அள்ளி விட்டுக்கொண்டும் குளித்தார். அங்கேயே மணலை அள்ளி மேலே பூசி நரநரவென்று தேய்த்துக்கொண்டார். குளித்தபின் வேட்டியையும் துண்டையும் நீரில் நனைத்து கும்மி துவைத்தார். பிழிந்து படார் படாரென்று உதறிவிட்டு கொண்டுசென்று இரு மரங்களிடையே கட்டினார். அவை மெல்லியகாற்றில் நெளிந்தன.

கோவணத்துடன் நின்று அவர் தண்ணீரை அடிக்க நான் குளித்தேன். பாண்டை துவைக்கவில்லை. சட்டையை மட்டும் துவைத்துவிட்டு திரும்ப அணிந்துகொண்டேன். அவரது பைக்குள் இன்னொரு வேட்டியும் மேலாடையும் இருந்தன. அவற்றை அணிந்துகொண்டார்.

இருவரும் விடியும்வரை நடந்தபோது முதல் டீக்கடையைக் கண்டோம். அருளப்ப சாமி டீக்கடை நோக்கிச் சென்று கும்பிட்டபடி ’வணக்கம் சாமி, சாமிகளுக்கு தர்மமா டீ குடுப்பீங்களா?’ என்றார்.

கடைக்காரர் கிறித்தவ மீனவர் என்று தெரிந்தது. ஏதோ சொல்லப்போகிறார் என்று எண்ணி நான் மானசீகமாக பின்னால் திரும்பி ஓடிவிட்டேன். ஆனால் அவர் கண்கள் சுருங்க பார்த்துவிட்டு ’ரெண்டா சாமி?’ என்றார்.

‘எனக்கு வேணாங்க…நான் டீல்லாம் குடிக்கிறதில்ல..இந்த சாமிக்கு கேட்டேன்’

‘எனக்கும் வேண்டாம்’ என்றேன். ’நானும் உங்கள மாதிரி சாப்பிடறேன்’

‘அப்டியா தம்பி? அப்ப டீ வேணாங்க’ என்றபின் புன்னகையுடன் ‘சந்தோசமா இருங்க சாமி…வாரேன்’ என்றார்.

‘என்ன சாமி, மொதப்போணி…சாமிக்கு குடுக்கலாம்னு நெனைச்சேன்…வேணாண்ணு சொல்றீங்க’

‘அப்ப குடுங்க…’ என்றார் அருளப்ப சாமி ‘குடிக்கிறேன்’

அவர் கொடுத்த இன்னொரு டீயை வாங்கி எனக்குக் கொடுத்தார். டீயை ஊதி ஊதி வெகுநேரம் குடித்தார்.

‘சூடா சாமி?’

‘ஆமா’

‘ஆத்திக்குடுக்கவா?’

அவர் ஆற்றிக்கொடுத்தபின்னரும் ஊதிக்கொண்டிருந்தார். நான் ‘சாமி எளநீ பழம் மட்டும்தான் சாப்பிடுவார். சூடான ஒண்ணும் சாப்புடுறதில்லை’ என்றேன்.

‘அப்டீயா சாமி?’

‘இல்லீங்க…டீ நல்லாருக்கு…வாரேன்’

கடைக்காரர் வெளியே வந்து கும்பிட்டார். அருளப்ப சாமி கூட நடக்கும்போது ஆச்சரியத்துடன் நினைத்துக்கொண்டேன். உலகில் இவருக்குக் கிடைக்காத ஏதாவது இருக்குமா என்று. அவரில் எதைத்தான் காண்கிறார்கள்?

பயணம் முழுக்க அருளப்பசாமி அவ்வப்போது பார்ப்பதைப்பற்றி மட்டும்தான் பேசினார். அவருக்கு எல்லாமே ஆச்சரியம்தான். பலூன் விற்பவனைக்கண்டுகூட நின்றுவிடுவார். ஒருவன் ஒரு ஆட்டுக்குட்டியை சைக்கிள்பின்னால் அமரச்செய்து சென்றபோது மகிழ்ச்சி தாளாமல் கைதட்டிச் சிரித்தார். வழியில் தென்பட்ட எல்லா பிள்ளைகளிடமும் சிரித்துப்பேசினார்.

நடுவே சற்றே தீவிரமாக என்னிடம் ‘ஏன் தம்பி அப்ப நமக்கு நெத்திக்கண்ணே கெடையாதா? நெஜம்மாவா?’ என்றார்

நான் ஒன்றும் சொல்லவில்லை

‘அதெல்லாம் யோகத்திலே அமர்ந்தாத்தான் வரும், என்ன?’

‘ஆமா’

‘சரியான குரு கிடைக்கணும். வாசிய அடக்கணும்’

‘எதையாவது எக்குதப்பா அடக்கீரப்போறீங்க…’

‘இல்லல்ல…அதெல்லாம் சரியாத்தான் செய்யணும்…அதென்னது?’

ஒருவன் ஒரு பெரிய கண்ணாடியை பைக்கில் பின்னால் அமர்ந்து கொண்டு சென்றான்

அருளப்ப சாமி சாப்பிடுவதற்கு அரைமணிநேரம் முன்புதான் கேட்கவே ஆரம்பிப்பார். அதிகபட்சம் இரண்டுபேர். அதற்குள் தேங்காயும் வாழைப்பழமும் கிடைத்துவிடும். இரண்டுவேளைதான் உணவு. அதில் நேரம் காலமெல்லாம் கிடையாது. பசிக்கும்போது. பெரும்பாலும் காலை பத்துமணிக்குள் ஒருமுறை. மாலை ஆறு மணிக்குள் இன்னொருமுறை. ஒருநாளுக்கு ஒரு தேங்காய், ஏழெட்டு வாழைப்பழங்கள். அல்லது கொய்யாப்பழங்கள்.

அருளப்ப சாமி என்னிடம் சொன்னதை பலமுறை நேரில் கண்டேன். எல்லா உயிர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டன. குரைக்கும் தெருநாய்கள் சட்டென்று பக்கவாட்டில் நின்று வாலை விர்ர் என நடுங்கச்செய்தபடி நெளிந்தன. நாய்களின் முகத்தில் சிரிப்பு வரமுடியும் என்று அப்போதுதான் கண்டேன். அவர் பின்னால் தங்கள் எல்லை வரை வந்தபின் அங்கே நின்று ஆதுரத்துடன் முனகிக்கொண்டன. சாலையோரம் கட்டப்பட்டிருந்த பசுக்கள் கயிற்றின் எல்லைவரை இழுத்து அவரை நோக்கிக் குரலெழுப்பின.

சாலையில் இருந்து பிரிந்துசென்ற ஒரு மண்பாதையில் புதிய சிமிண்ட் கோபுரத்துடன் நின்ற கோயிலில் காலையில் சென்று நின்றோம். நான் ஈரச்சட்டையுடன் நடுங்கிக்கொண்டிருந்தேன். உள்ளே அய்யர் சிலைக்கு அலங்காரம் செய்துகொண்டிருந்தார். என்ன சாமி என்று தெரியவில்லை. அருளப்ப சாமி முன்மண்டபத்தில் தூணில் சாய்ந்து காலை தொங்கபோட்டுக்கொண்டு அமர்ந்தார்.

அய்யர் உள்ளிருந்து சீறிக்கொண்டு வந்தார். ‘டேய் எந்திரிடா…எந்திரிடா கபோதி…யாரக்கேட்டுடா உள்ள வந்தே?’

’சாமி, பிரசாதம் சாப்பிடலாம்னு வந்தேன்’ என்றார் அருளப்ப சாமி.

‘வெளியே போடா…பிச்சக்கார கபோதி, மண்டபத்திலே சட்டமா ஏறி ஒக்கார்ரியா? போடா’

‘மன்னிச்சுக்கங்க சாமி’ என்று அருளப்ப சாமி எழுந்து விலகி நின்றார் ‘பிரசாதம் இல்லீங்களா?’

‘டேய் போ..போ வெளியே’

‘அவரு சாமியாரு’ என்றேன்.

‘எவண்டா சாமி? இப்டியே கெளம்பிடுறது என்ன? போடா’

’வாங்க சாமி’ என நான் அருளப்பரை வெளியே அழைத்தேன்.

‘கோவமா இருக்காரு’ என்று அருளப்ப சாமி புன்னகை செய்தார். ‘வேற எடம் போவம் என்ன?சாமி நாங்க போய்ட்டு வாரோம் சாமி’

சாலைக்கு வந்ததும் எனக்கு ஒரு எண்ணம் வந்தது ‘சாமி ஒரு நிமிஷம்..’ என்றபின் திரும்பி வந்தேன்.

அய்யர் என்னைக்கண்டதும் ‘என்னடா?’ என்றார், ஈரக்கையை வேட்டியில் துடைத்தபடி வெளியே வந்தார்.

‘Do you know who he is? He is a saint…A great Yogi, and now he is going to put his spell on you…’

‘புரியல்லை’ என்றார், அதற்குள் முகம் வெளுத்து கைகால்கள் நடுங்க ஆரம்பித்தன.

‘அவரு பெரிய ஞானி…பரமஹம்சர்…அதான் பத்திரிகையாளனா இருந்த நான் எல்லாத்தையும் விட்டுட்டு அவரு கூட போய்ட்டிருக்கேன். அவரோட சாபம் உன் குடும்பத்துமேலே விழுந்தாச்சு’

‘அய்யோ’

‘நாசமா போவப்போறே’

‘என்ன பண்றது சாமி? தெரியாம…’

நான் திரும்பி ஓடிவந்து அருளப்ப சாமியுடன் சேர்ந்துகொண்டேன்.

‘பிரசாதம் குடுத்தாரா ?’

‘இல்லேன்னுட்டார்’

‘பாவம்…இப்பதான் வந்திருப்பாரு போல’

கொஞ்சநேரம் எனக்குள் புன்னகை செய்துகொண்டிருந்தேன். அதன்பின் அடப்பாவமே என்று தோன்றியது. இன்னும் கொஞ்ச நேரத்தில் தாளமுடியாத வெட்கம். என்னைப்போன்ற ஒருவன் அருளப்பருடன் செல்வதே தவறு என்று நினைத்தேன். அவர் மீது என்னுடைய அழுக்கை பூசிக்கொண்டிருக்கிறேன். அவரிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடவேண்டும். ஆனால் சொல்லவும் துணிவு வரவில்லை. கொஞ்ச நேரம் கழித்து சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சமம்தான் என்று தோன்றியது.

மறுநாள் மதியம் வடலூர் சென்று சேர்ந்தோம். அதற்கு மறுநாள்தான் தைப்பூசம். அங்கே சென்றபின்னர்தான் தைப்பூசநாளில்தான் வள்லலார் ஜோதியானார் என்று தெரியவந்தது. வடலூர் சிறிய ஊர். அன்று காலை முதலே கூட்டம் வர ஆரம்பித்திருந்தது. பேருந்துகளை வெகுவாக தள்ளி நிறுத்தி ஆட்களை இறக்கிவிட்டுக்கொண்டு திரும்பிச்சென்றனர். வந்தவர்கள் பெரும்பாலும் குடும்பத்துடன் இருந்தனர். பைகளும் பெட்டிகளுமாக வந்து ஆங்காங்கே திறந்தவெளியிலேயே தங்கிக்கொண்டார்கள். எல்லாருமே வெளியூர்க்காரர்கள். சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து அதிகம்பேர் வந்திருப்பதுபோலத் தோன்றவில்லை.

‘சாமி அன்னதானம் நடந்திட்டிருக்கு…போய்ச்சாப்பிடுங்க’ என்று யாரோ சிரித்த முகத்துடன் உபசரித்தார்கள். அக்கணமே எனக்கு பசி கிளம்பியது. சூடான சோற்றின் வாசனை மனதை நிறைத்தது. ஒரு நிமிடம்கூட சோறில்லாமல் இருக்கமுடியாது என்று தோன்றியது.

‘நான் போய் சாப்பிட்டுட்டு வந்திடறேன் சாமி’ என்றேன்.

‘சாப்பிடுங்க தம்பி’

அன்னதானம் வழக்கமாக அதற்கான கொட்டகையில் நிகழும். அன்று திறந்தவெளியில் இலைபோட்டு நூற்றுக்கணக்கானவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். நான் அமர்ந்ததும் இலைபோட்டு அலுமினிய டம்ப்ளரில் தண்ணீர் வைத்தார்கள். சன்ன அரிசிச்சோறு. பருப்புக்குழம்பு. பீன்ஸ் பொரியல். சோறு என் முன் விழுந்தபோது அப்படி ஒரு ஆசையை அடைந்தேன். அதன் மணம், அதன் நிறம்….ஓரிரு வாய் சாப்பிடுவது வரை வேறு நினைப்பே இல்லை. பின்புதான் நான் சோறு சாப்பிடாமலாகி ஒருவாரம்தான் ஆகியிருக்கிறது என்பதை உணர்ந்தேன்.

சாப்பிட்டுவிட்டு வந்தபோது அருளப்ப சாமியைக் காணவில்லை. எங்கிருக்கிறார் என்று சுற்றிலும் பார்த்தேன். அப்பகுதியில் அவர் இருப்பதுபோலத் தெரியவில்லை. அவர் என்னை விட்டுவிட்டுப்போய்விட்டார் என அறிந்தேன். அவரால் அப்படித்தான் இருக்கமுடியும். அவர் எவருக்காகவும் காத்திருக்கமுடியாது. எதை நம்பியும் வாழமுடியாது. நான் சென்றபோது அங்கே வீசிய காற்று அங்கேயே இருக்கும் என்று நினைப்பதுபோலத்தான்.

எதைநம்பி அந்தமாதிரி ஒரு வெகுளிமனிதரை நம்பி வந்தேன் என்று என்னையே கேட்டுக்கொண்டேன். அவர் காகங்களை வரவழைத்தது என்னை அசைத்துவிட்டது. ஆனால் அது ஒன்றும் பெரிய அமானுட விஷயமாக பிறகு தோன்றவில்லை. மிருகங்களுடனும் பறவைகளுடனும் மனிதர்களுக்கு இருக்கும் உறவுக்கு எவ்வளவோ புரியாத பக்கங்கள் உள்ளன. எங்கள் வீட்டில் வேலைபார்க்கும் சிண்டனின் அப்பா பக்கி மாடுகளுடன் நுட்பமாக உரையாடுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கொக்குகளை மந்திரம் சொல்லி அருகே வரவழைக்கும் மந்திரவாதிகளைப்பற்றி சொல்லி அறிந்திருக்கிறேன்.

கூட்டத்தில் முட்டிமுட்டி வழிகண்டு அலைந்தபடியே அருளப்ப சாமியைப்பற்றி மட்டும்தான் யோசித்தேன். அவர் ஒரு வெள்ளைமனிதர், அவ்வளவுதான். இயல்பிலேயே அவர் அப்படி. அல்லது சிறுவயதில் அவருக்கு ஏற்பட்ட மனப்பாதிப்பினால் அப்படி ஆகியிருக்கலாம். ஒரு நல்ல உளவியல் நிபுணர் அவருக்கு என்ன நரம்புச்சிக்கல் என்று சொல்லி குணப்படுத்தி சாதாரணமானவராக ஆக்கினால்கூட ஆச்சரியமில்லை. நான் அவரை மிகைப்படுத்தியாகவேண்டிய மனநிலையில் இருந்திருக்கிறேன்.

ஏன்? அதைத்தான் நான் யோசிக்கவேண்டும். எனக்கு நானே கண்டிப்பதுபோல, ஆணையிடுவதுபோல பேசிக்கொண்டேன். நான் யோசிக்கவேண்டியது அதைத்தான். இதுவரை நான் யோசித்ததெல்லாம் எண்ணங்களை அதன்பாட்டுக்கு விட்டுவிடுவது மட்டும்தான். எங்காவது தறிகெட்டு அலைந்து முட்டிநின்று பின்பு திரும்பி வருகிறேன். இனி அப்படி இல்லை. நான் சிந்தித்தாகவேண்டும்.

கால் ஓய்ந்தபின் ஓர் இடத்தில் அமர்ந்துகொண்டேன். இதுவரை என்ன செய்தேன்? எதற்காக இந்த விசித்திரமான வெகுளிமனிதருடன் வந்தேன்? அவருக்கு நான் ஒரு பொருட்டே இல்லை. அவர் வேடிக்கை பார்க்க விரும்பக்கூடியவர், அவ்வளவுதான். வேடிக்கைபார்க்கும் குழந்தைமனதை நரம்புச்சிக்கல் காரணமாக தாண்ட முடியாமலானவர். நான் அவரைத் தொடர்ந்து வந்ததற்கு ஒரே காரணம் சென்னையில் நான் வாழ்ந்த வாழ்க்கைமீது எனக்கிருந்த சலிப்பு.

ஆம், சலிப்பு. அதுதான். சென்னையில் நான் செய்ததெல்லாம் அந்தச் சலிப்பை வெல்வதற்காகச் செய்துகொண்ட தந்திரங்கள் மட்டும்தான். நகரத்தில் அலைந்தது, குடிசையில் தங்கப்போனது, தற்கொலைமுயற்சிகூட அதற்காகத்தான். இவரைப்பார்த்ததும் இவர் என் சலிப்பை வெல்ல உதவுவார் என்று என் மனம் கணக்குப்போட்டது. ஆகவேதான் கிளம்பினேன். அவர் வடலூருக்கு நடந்துதான் செல்லப்போகிறார் என்று தெரிந்ததும் பதற்றம் கலந்த பரபரப்பைத்தான் அடைந்தேன். இந்த ஏழுநாள் பயணத்திலும் நான் அந்த பயண அனுபவங்களை உற்சாகமாக நடித்துக்கொண்டிருந்தேன். நான் சாதாரணமாக நடக்கவில்லை, நடப்பதை உள்ளூர அவதானித்துக்கொண்டிருந்தேன்.

எழுந்து நின்றுவிட்டேன். அந்தக் கண்டுபிடிப்பு என் உடலையே பதறச்செய்தது. நான் எல்லாவற்றையும் நடித்துக்கொண்டிருக்கிறேன். வீட்டைவிட்டுக் கிளம்பியது முதல் ஒன்றைக்கூட நான் முழுமையாக ஈடுபட்டுச் செய்யவில்லை. எதிர்காலத்தில் நான் நினைவுகூரவேண்டிய ஒருவாழ்க்கையை இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்ற பிரக்ஞை எனக்குள் இருந்துகொண்டே இருக்கிறது. என்னைச்சுற்றி இயல்பாக வாழ்ந்துகொண்டிருந்த எவரும் அவர்களை வேவுபார்க்கும் ஒருவன் உடனிருப்பதை உணரவில்லை.

ஏமாற்றமும் எரிச்சலுமாக நடந்தேன். ’நடிப்பு நடிப்பு நடிப்பு’ என்ற சொல்லோட்டமாக இருந்தது மனம். கையில் ஒரு பைசாகூட இல்லை. இதைக்கூட நான் வேண்டுமென்றேதான் செய்துகொள்கிறேனா? பணமில்லாமலிருக்கையில் வாழ்க்கை இன்னும் சிக்கலாக ஆகிறது. இன்னும் பெரிய சவால். ஆனால் உண்மையில் எனக்குத்தெரியும், நான் பட்டினிகிடக்கப்போவதில்லை என்று. அதிகபட்சம் இரண்டுமணிநேரத்தில் என்னால் சாப்பாட்டை சம்பாதித்துவிடமுடியும் என்று. அதை உள்ளூர உறுதிசெய்துவிட்டபின்பு பட்டினியுடன் அடுத்தகணம் என்ன என்று தெரியாமல் அலையும் நாடோடியாக என்னை உருவகித்துக்கொண்டு அலைகிறேன். அயோக்கியன். இல்லை மடையன். இன்னொருவனை ஏமாற்றுவதுதான் அயோக்கியத்தனம். தன்னைத்தானே திறமையாக ஏமாற்றுவது முட்டாள்தனம் மட்டும்தான்.

மாலை அடங்கிக்கொண்டிருந்தது. ஒரு இடத்தில் அப்படியே வெறும்மண்ணில் படுத்துவிட்டேன். அழவேண்டும் போலிருந்தது. ஆனால் அடுத்து இன்னும் விசித்திரமான ஓர் எண்ணம் வந்தது. நல்லவேளை, அங்கே கூடியிருந்த எவருக்கும் நான் இந்தவாழ்க்கையை நடிக்கிறேன் என்று தெரியாது என்று. என்னை ஓரு சுதந்திரமான நாடோடி என்று அவர்கள் நினைப்பார்கள். துறவி என்று நினைப்பார்கள். மறுகணம் அந்த நினைப்பையே கவனித்து இன்னும் கூசினேன்.

அப்படியே தூங்கிவிட்டேன். என்னைச்சுற்றி ஒலித்துக்கொண்டிருந்த மனிதக்குரல்களை வாகனங்களின் இரைச்சலை, கனவுக்குள் கண்டுகொண்டிருந்தேன். கங்கைக்கரை இரைச்சல் அது. கங்கைமீது பெரிய தோணிகள் சங்கொலி எழுப்பின. மனிதர்கள் கூச்சலிட்டுக்கொண்டு அதில் ஏறினார்கள். கங்கை கொந்தளித்தது. படகுகள் பிரம்மாண்டமான அலைகளில் ஏறியிறங்கின. படகுகளில் இருந்தவர்கள் கூச்சலிட்டார்கள். ஒருவர் ஓடிவந்து என்னிடம் ஏதோ சொன்னார். நான் எழுந்துசென்று படகின் சுக்கானைப் பிடித்தேன். படகு சமப்பட்டது.

விழித்துக்கொண்டபோது இருட்டு பரவியிருந்தது. அப்பகுதியே ஒரே சந்தடியாக இருந்தது.சாதாரணமான கிராமத்திருவிழாக்கள் போல என்னென்னவோ விற்கப்பட்டன. என்னென்னவோ தின்னப்பட்டன. எதிரும்புதிருமான திசைகளில் மனிதக்கூட்டங்கள் உற்சாகமும் பரபரப்புமாக அலைந்தன. ஒலிபெருக்கிகளில் என்னென்னவோ சொல்லப்பட்டன. காற்று வீசியபோது தூசி எழுந்துபறந்தது.

என்னைச் சூழ்ந்துசென்ற கூட்டம் வழியாக அனிச்சையாக நானும் நடந்தேன். வடக்கத்திக் கோயில்களை நினைவுபடுத்திய ஒரு கட்டிடம்தான் சத்தியஞானசபை. வளைவுவளைவான வாசல்கள். மாடியாக எழுந்த கோபுரம். உள்ளே செல்லாமல் வெளியே நின்றுகொண்டேன். உள்ளே சென்று இந்த மக்கள் என்ன சத்தியஞானத்தை அறியப்போகிறார்கள்? அங்கே ஒருரூபாய்க்கு கைப்பிடி விபூதியை விற்று அதுதான் சத்தியஞானம் என்று சொன்னால் அதை வாங்கப்போகிறார்கள். சட்டென்று சிரிப்பும் வந்தது, அங்கே எங்கோ நான் எழுதிய சைவசித்தாந்த மெய்ஞானநூல்கள் விற்கப்பட்டுக்கொண்டிருக்கும்.

வள்ளலார் கோயிலுக்குச் சென்றபோதும் அருகே செல்லவேண்டுமெனத் தோன்றவில்லை. சாதாரணமான ஒரு கிராமத்துச் சிவன்கோயில்போலத் தோன்றியது. ஆனால் கோயிலாக இல்லாமல் கட்டிடமாகவும் இருந்தது. கருவறைக்கு முன்னால் திரையிடப்பட்டிருந்தது. அங்கே ஏதோ செய்துகொண்டிருந்தார்கள். இருபக்கமும் நூற்றுக்கணக்கானவர்கள் வரிசைகட்டி காத்து நின்றார்கள். சிலர் இரு கைகளையும் இறைஞ்சுவதுபோல விரித்து வேண்டிக்கொண்டார்கள். சிலர் முணுமுணுவென ஜெபித்தார்கள்.

திரைவிலகியது. உள்ளே கரியமேனி கொண்ட சிவாச்சாரியார் ஒருவர் இருந்தார். உள்ளே ஒரு விளக்கு தெரிந்தது. யாரோ ‘அருட்பெரும் சோதி! தனிப்பெருங்கருணை!’ என்று உச்சத்தில் கூவினார்கள். கூட்டம் சேர்ந்து அதைச்சொல்ல ஒருபெரிய அலைபோல அந்தக் கூட்டு முழக்கம் என்னைச்சூழ்ந்தது. நான் அந்தச்சுடரைப்பார்க்கையில் அது சம்பந்தமில்லாமல் எரிவது போலிருந்தது. ஆனால் என் மனம் சிந்தனையில்லாமல் கல்போல கிடந்தது.

வள்ளலார் ஏற்றிவைத்த ஜோதி. அதை இன்றுவரை அணையாவிளக்காக வைத்திருக்கிறார்கள்.அதைத்தான் வழிபடவேண்டும் என்று அவர் சொல்லியிருக்கிறார். பிரபஞ்சம் முழுக்க நிரம்பியிருக்கும் ஆற்றல் என்பது ஒரு பெரும் சோதியாக அவருக்குத் தெரிந்தது. மண்ணிலும் விண்ணிலுமுள்ள எல்லா சோதிகளும் அதன் வடிவமே என்று உணர்ந்தார். அதன் அடையாளமாக ஒரு தீபத்தை ஏற்றிவைத்து அதை வழிபடும்படி அறிவுறுத்தினார். அவரே ஏற்றிவைத்த தகரவிளக்கு அங்கே இருக்கிறது. ஆனால் அதுதானா, இல்லை இன்னும் விலைமதிப்புள்ள அலங்கார விளக்காக மாற்றிவிட்டார்களா? கொஞ்சநாளில் அதை பொன்னாலான விளக்காக ஆக்குவார்கள். அதன்பின் அந்தச் சுடரையே ஒரு கற்சிலையாக ஆக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

என் மனதின் சலிப்புதான் சொற்களாக மாறிக்கொண்டிருக்கிறது என்றுபட்டது. அங்கே ஏதோ வழிபாடுகள் ஆரம்பித்தன. நான் கூட்டத்தை விலக்கி வெளியே சென்றேன். வள்லலார் கடைசியாக உள்ளே சென்று மறைந்த வாசல் நிரந்தரமாகப் பூட்டப்பட்டிருக்கிறது. அருகே உள்ள சன்னலை தைப்பூசத்தன்று மட்டும் திறப்பார்களாம். அதற்குத்தான் அத்தனை கூட்டம். அதன்வழியாக எதைப்பார்ப்பார்கள். வள்ளலார் அங்கே சென்று மறைந்தார் என்பார்கள். வள்ளலாரின் இல்லாமையை அங்கே பார்ப்பார்கள். அது அவ்வளவு புனிதமானதா என்ன?

எல்லாவற்றையும் விட பெரும் கும்பல் சென்றுகொண்டிருந்த திசையில் சென்றேன். அது சமைலறை. அருகே பெரிய பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. வந்திருந்தவர்கள் காணிக்கையாகக் கொண்டுவந்திருந்த அரிசியையும் காய்கறிகளையும் அவற்றுக்கான பெட்டிகளில் போட்டுக்கொண்டிருந்தார்கள். நான் அங்கே நின்றபடியே பார்த்தேன். அப்பால் பெரிய தகரப்பாத்திரங்கள் கோட்டையடுப்பு மீது அமர்ந்து கொதித்துக்கொண்டிருந்தன. கீழே செந்நெருப்பு கொப்பளித்துக் கொண்டிருந்தது. விறகுக்குவியல்கள். சட்டைபோடாத சமையற்காரர்கள். விதவிதமான பாத்திரங்கள்.

’இன்னிக்குதான் இப்டி வெளியே சமையல்…’ என்றார் ஒருவர்.

அதைப்பார்க்க என்னைப்போலவே ஒரு கூட்டம் நின்றுகொண்டிருந்ததை உணர்ந்தேன். இருளுக்குள் நெருப்பைப்பார்ப்பது ஈர்ப்பு மிக்கதாக இருந்தது. கண்களை திருப்ப முடியவில்லை.

‘இதுவும் அங்க உள்ள இருக்கிற தீயக்கொண்டாந்து கொளுத்தறதுதான்….’ என்றார் இன்னொருவர்.

‘எந்தத் தீ?’ என்றேன்.

‘வள்ளலாருசாமி நூறுவருசம் முன்னாடி அவரு கையால கொளுத்தின அடுப்பு தம்பி…அன்னியிலே இருந்து இன்னிக்கு வரை அணையாம அந்த அடுப்ப வச்சிருக்காங்க…அந்தத் தீதான்’

சட்டென்று திரும்பிப்பார்த்தபோது அத்தனை தழல்களும் சேர்ந்து நடனமாடுவதுபோலத் தோன்றியது. சுடர்களின் அசைவில் தாள ஒருமை இருப்பதுபோல.

‘எங்கப்பாரு சொல்வாரு, வள்ளலாரு இங்க இருந்தப்ப இந்த எடம் இப்டி இல்ல. சரியான முள்ளுக்காடு…அன்னிக்கெல்லாம் இங்க பெருசா வெள்ளாமை கடையாது. பம்புசெட்டுல்லாம் இல்லல்ல? கமலைஏத்தம்தான். கெணத்தில தண்ணி இருந்தா உண்டு, இல்லேன்னா இல்ல. வள்ளலாரு இங்க குடிசபோட்டு தனியா இருந்தாரு. ஊர்ல ஒரு வீட்ல இருந்து வாரத்துக்கு ஒருவாட்டி அஞ்சுகைப்பிடி அரிசியும் ஒரு கருணைக்கெழங்கும் கொண்டுவந்து குடுப்பாங்க. அதைத்தான் சாப்பிட்டு இருந்திருக்காரு’

’கருணைக்கெழங்கா?’

‘அதான் யோகிகள் சாப்பிடுவாங்க… யோகம் பண்ணினா வர்ர மூலச்சூடுக்கு கருணைக்கெழங்குதான் சாப்புடணும்…அதான் அதை கருணைக்கெழங்குன்னு சொல்றங்க’ அந்தவரி என்னுடைய புத்தகத்திலும் எழுதப்பட்டிருந்தது என நினைத்துக்கொண்டேன்.

‘அப்பதான் பெர்ரிய பஞ்சம் வந்திச்சு. பட்டினி தாங்காம சோத்துக்கத்தாழையயும் கொட்டிக்கிழங்கையும் சாப்பிட்டாங்கன்னு எங்கப்பாரு சொல்வார். நெறையசனம் செத்துப்போச்சு. நெறையபேரு ஊரவிட்டே போய்ட்டாங்க. கிராமம்லாம் ஆளில்லாம காலியாயிடுச்சு… தாதுவருசத்துப் பஞ்சம்னு சொல்லுவாங்க’

‘எடைக்காடர் காலத்திலயும் ஒரு பஞ்சம் வந்திச்சே’ என்றார் ஒரு கிழவர்.

‘அது மொத பஞ்சம்….எடைக்காடர் கதை தெரியும்ல? ’ பேசுபவர் ஒரு நாட்டுவைத்தியர் என அதற்குள் ஊகித்துவிட்டிருந்தேன்.

‘எடைக்காடருக்கு தெரிஞ்சுபோச்சு பஞ்சம் வரப்போகுதுன்னு. அவருக்கும் நம்ம வள்ளலாருசாமி மாதிரி ஊருக்காரங்கதான் பிடியரிசி குடுத்திட்டிருந்தாங்க. அவரு அவங்ககிட்ட கேட்டு ஒரே ஒரு ஆட்டுக்குட்டி வாங்கிக்கிட்டாரு. அதை நாலுநாள் பட்டினிபோட்டுட்டு தழையோட நாலு எருக்கம் எலையும் சேத்துக் குடுத்திருக்காரு. அது சாப்பிட்டுட்டு தலசுத்தி விளுந்துட்டுது.’

‘வெஷமுல்ல?”

“ஆனா அவரு விடாம குடுத்திருக்காரு…மறுபடியும் குடுத்தாரு. கொஞ்சம் கொஞ்சமா பழக்கினபிறவு எருக்கம் எலைய மட்டும் குடுத்து அத வளக்க ஆரம்பிச்சாரு. பிடியரிசீல பாதிய எடுத்து செம்மண்ணோட சேத்துக் கொழைச்சு குடிசைக்கு சுவரு கட்டினாரு…பஞ்சம் வந்தப்ப எல்லாரும் ஊரைவிட்டு போய்ட்டாங்க. எடைக்காடர் அங்கியே இருந்தார். காட்டில வேற எந்தத் தழையும் இல்ல. எல்லாமே மழையில்லாம கருகிப்போச்சு. எருக்கு வாடாதுல்ல. இவரோட ஆடு மட்டும் எருக்கெலையத் தின்னுட்டு கொளுப்பா இருந்திச்சு. ஆட்டுப்பாலைக் கறந்துக்குவார். சுவரில கொஞ்சத்த உடைச்சு அந்த அரிசிய எடுத்து பொடிச்சு ஆட்டுப்பாலிலே கலந்து குடிப்பார். பன்னெண்டு வருசம் பஞ்சம் முடிஞ்சு ஊருக்கு ஆளு திரும்ப வந்தப்ப பாத்தா எடைக்காடர் நல்லா ஆரோக்கியமா குடிசையிலே இருந்திட்டிருக்காரு’

‘சுவரிலே எதுக்கு வைக்கணும்?’

‘இல்லேன்னா எறும்பு தேடிவந்திராது? டேய், காட்டில ஒண்ணுமில்லேன்னா எறும்பு எங்க போவும்? கூட்டம் கூட்டமா தேடி அலையும்ல?’

‘ஆமா’

நான் ‘வள்ளலாரு பஞ்சத்திலதான் இந்த அடுப்ப ஆரம்பிச்சாரா?’ என்றேன்.

‘ஆமா தம்பி….பஞ்சம் தாளாம செத்துடலாம்னு ஒரு அம்மா நாலு புள்ளைங்கள தூக்கீட்டு காட்டுக்கு வந்திருக்கு.அங்கதான் சாமி குடிலுகட்டி இருந்திருக்காரு. சாமி எம்புள்ளைங்கள காப்பாத்துங்கன்னு அந்தம்மா காலில விளுந்திருக்கு. சாமி அவங்களுக்காக அவரு கையில இருந்த அரிசியையும் கருணைக்கெழங்கையும் போட்டு கஞ்சி காய்ச்சுறதுக்காக அடுப்பு மூட்டியிருக்கார். அப்ப மூட்டின அடுப்புதான்’

‘வேற மாதிரி கேள்விப்பட்டேனே’ என்றேன்.

‘இது எங்கப்பாரு சொன்ன கதை…அவங்கப்பாரு சாமிய நேரில பாத்து வைத்தியம்லாம் கத்துக்கிட்டிருக்காரு’

‘ஓ’

‘அன்னிக்கு ஆரம்பிச்ச அன்னதானம். நூறுவருசமா அடுப்பு அணைஞ்சதேயில்ல…. அப்பல்லாம் தெனம் ஐயாயிரம் பத்தாயிரம்னு வந்து சாப்பிட்டிருக்காங்க… ஆனா அந்தக்காலத்திலே இந்தமாதிரி அரிசிச்சோறெல்லாம் இல்ல. கம்பு கேழ்வரகு கெழங்கு கீரை எல்லாத்தையும் ஒண்ணாசேத்து கஞ்சி வைப்பாங்க…அதான்’

’அதெல்லாமே காணிக்கையா?’

‘காணிக்கை விளாட்டியும் சாமி குடுப்பாரு…அவரு அகண்ட சச்சிதானந்தத்த நேரில பாத்தவருல்ல? இது என்ன சும்மா எரியற அடுப்பா? யோகசக்தியால எரியற அடுப்புல்ல?’

சட்டென்று எனக்கு உடம்பு சிலிர்த்தது. இது என்ன அசட்டுத்தனமான சிலிர்ப்பு என நானே நினைத்துக்கொண்டாலும் அந்த உணர்வெழுச்சி என்னை மூடிக்கொண்டது. மேற்கொண்டு அந்தக்குரல்களைக் கேட்கமுடியாது என்று பட்டது. மெல்ல முன்னகர்ந்து தரையிலேயே அமர்ந்துகொண்டேன். எரியும் தீச்சுவாலைகளை விழிவிரிய பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.

’எங்கள் வேள்விக் கூட மீதில்
ஏறுதே தீ! தீ! ’

என்ற வரி நினைவுக்கு வந்தது. எங்கே பெரிய நெருப்பைக் கண்டாலும் முன்னர் எப்போதோ மனப்பாடம் செய்த பாரதிபாடல்களில் இருந்து அந்த வரி நினைவுக்கு வருவதுண்டு. ஆனால் அப்போது அந்த உணர்வுக்கொந்தளிப்பின் வடிவமாக இருந்தது. ஆவேசமாக மனதில் அதைச் சொல்லிக்கொண்டே இருந்தேன். ஒருகட்டத்தில் அந்த ஒருவரியை மட்டுமே சொல்வதை உணர்ந்து அடுத்த வரியை நினைவுகூர்ந்தேன். நினைவுக்கு வரவில்லை.

பெருமூச்சுடன் எழுந்து நடந்தேன். கூட்டம் இன்னும் பெரிதாகிவிட்டிருந்தது. வாயுவிளக்குகள் சீறி எரியும் பொரிகடலை விற்பனைச்சாலைகள். மண்ணெண்ணைத் திரி புகை கக்கி எரியும் பேரீச்சம்பழ வியாபாரிகள். வளையல், பலூன், மரப்பொம்மை வியாபாரங்கள்…சட்டென்று அருளப்ப சாமியைக் கண்டேன். ஒரு மரப்பாச்சிக் கடை முன் நின்றுகொண்டிருந்தார்.

முதல்கணம் பரபரப்புடன் கையைத் தூக்கிவிட்டேன். அதன்பின் கையை தாழ்த்தி பார்த்துக்கொண்டே நின்றேன். அவர் சிரித்துக்கொண்டே ஒவ்வொரு பொருளாக எடுத்து கூர்ந்து பார்த்து திரும்ப வைத்தார்.

நான் திரும்ப நடந்தேன். அன்றிரவே அங்கிருந்து கிளம்பினேன். நாலைந்துநாளில் நாகர்கோயிலுக்கு வந்துவிட்டேன்.

வள்ளலார்

முந்தைய கட்டுரைபுறப்பாடு – கடிதங்கள்
அடுத்த கட்டுரைதிருவரம்பு – புறப்பாடு