பண்பாடு கடிதங்கள்

 

வணக்கம் குரு.,
வழக்கமாக கடிதத்திற்கு பதில் மின்னஞ்சலில் அனுப்பிய பிறகே தங்கள் இணையதளத்தில் வெளியிடுவீர்கள் ஆனால் வாசிப்பறை சார்ந்த என் கடிதத்திற்க்கான பதில் இன்று உங்கள் இணையத்தில் வெளிவந்த பிறகு தான் வாசிக்க நேர்ந்தது.
நீங்கள் விளக்கியது முற்றிலும் சரியான கோணம்.ஆனால் நம் சமூகத்தில் முக்கால்வாசி நன்கு படித்த இளைஞர்கள் கூட இலக்கிய வாசிப்பிற்க்காக பணம் செலவழிப்பதை நினைத்து கூடபார்க்க வாய்ப்பில்லை (அதிகம் போனால் இந்தியா டுடே,விகடன்,குமுதம்) சில நபர்களுக்கு வாசிக்கும் ஆர்வம் இருந்தாலும் பணம் செலவழித்து வாங்கி வாசித்து அதை சேகரித்து வைத்து வரும் தலைமுறைகளுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க எந்த ஆர்வமும் இல்லை! நான் உங்களிடம் என் முதல் தொலைபேசியின் போது “உங்களை போன்ற பெரிய எழுத்தாளர்கள் வெளிநாடு செல்ல இருக்கும் தமிழர்களுக்கு ஒரு விழிப்புணர்வுக்காக, மோசடி செய்யபடாமல் இருக்க ஒரு கட்டுரை எழுதுங்க சார், நிறைய பேருக்கு பயனுள்ளதா இருக்கும்” என்று சொன்னேன். “என்ன மகி பெரிய எழுத்தாளர், ஒரு நூல் வெளியிட்டு 1000 காப்பி விக்கிறதுக்கு 1வருஷத்துக்கு மேல ஆகுது” என கூறியதாக நினைவு. அதற்க்கு நான் அன்று ஏதும் பதில் சொல்லமுடியவில்லை ஆனால் ஒரு உண்மை, வாசிக்கும் பழக்கம் இருந்தும் செலவழித்து வாசிக்கும் மனம் பாதிபேருக்கு கிடையாது. எங்கோ படித்ததாக நினைவு “நூலுக்கும் எழுத்தாளருக்கும் நாம் அளிக்கும் மரியாதை அதை விலை கொடுத்து வாங்கி படிப்பதே”.
என் நண்பன் பொறியியல் துறை சார்ந்தவன் விஷ்ணுபுரம் மற்றும் உள்ளுணர்வின் தடத்தில், உப பாண்டவம்
வாங்கி சென்று நான்கு மாதம் ஆகிறது தொலைபேசியில் கூட அது பற்றி மணிக்கணக்கில் பேசுவான் விலை கொடுத்து வாங்குவதை தவிர! வாசித்து முடித்த பின் என்ன செய்வது?என்பது கேள்வி,நான் ஒருபோதும் பதில் சொன்னது இல்லை,என்றாவது ஒரு நாள் வாசிப்பே அந்த பக்குவத்தை அளிக்கும் என்ற நம்பிக்கையில்! இக்கடிதத்தை கூட வாசிக்க நேரிடும்!
ஒரு பேட்டியின் போது கூட நீங்கள் “எழுத்தாளன் எழுத்தை நம்பி பிழைக்க கூடிய சூழ்நிலை இருக்க வேண்டும்,ஆனால் நம் சமூகத்தில் அது சாத்தியமே இல்லை எனவே தான் வேறு துறையை சார்ந்து இருக்கவேண்டியதாயுள்ளது” என குறிப்பிட்டுள்ளீர்கள். அவ்வாறு நிகழ்ந்திருந்தால் அசோகமித்ரன் பூங்காவில் அமர்ந்து, பட்டினியோடு, காகிதத்திற்க்குகூட நெருக்கடியில்லாமல் எழுதி இருப்பார்! அந்த சூழ்நிலை உருவாக யார் காரணம்? 12 கிலோ மீட்டர் காரில் வந்து நூலை இரவல் வாங்கி செல்லும் அல்லது 500ரூபாய் டிக்கெட் கொடுத்து சிவாஜி படம் பார்பவர்கள் தான் காரணம்.. மிகுந்த வேதணையான செய்தி தான்.
இவையனைத்திற்க்கும் ஒரே காரணம் நம்மில் உள்ள “அள்ளி பதுக்கும் மனநிலை” தான் வேறு எப்படி குறிப்பிடுவது? அவர்கள் அடைவது நீங்கள் சென்ற கட்டுரையில் பதிந்த வெற்றிகரமான லெளகீக வாழ்க்கை இறுதியில் வெறுமை இவை தான்!.
மகிழவன்
அன்புள்ள மகிழவன்

அமெரிக்க பயணம் முடிந்து கடிதம் எழுதுகிறேன். நலம்தானே?

நீங்கள் சொன்ன விஷயங்களைப்பற்றி நான் என் அமெரிக்க உரையாடல்களில் பலமுறை சொல்லும்படி நேர்ந்தது. நம் பெற்றோர்கள் நம்மை லௌகீக முன்னேற்றம் மட்டுமே போதும் என்று சொல்லித்தான் வளர்க்கிறார்கள். சென்ற பல வருடங்களில் நம்முடைய பண்பாட்டுக்கூறுகள் அனைத்தையும் நாம் கைவிடும்படியும் வெறும் பிழைப்புக்கான படிப்பு வணிகம் போன்றவையே போதும் என்று எண்ணும்படியும் அவர்கள் நம்மை வளர்த்திருக்கிறார்கள். அதன் மூலம் நம் மனம் உருவாகி இருக்கிறது. நம்முடைய பாரம்பரியமான கலைகள் எல்லாமே அழியும் நிலையில் உள்ளன. நாட்டுப்புறக்கலைகள் கிட்டத்தட்ட அழிந்தே விட்டன. நமக்கு ஒரு கோயிலுக்குப் போனால் அக்கோயிலின் சிற்பம் தொன்மம் வரலாறு எதுவுமே தெரிவதில்லை. அக்கோயிலில் சென்று லௌகீக லாபத்துக்காக முறையிட மட்டுமே தெரிகிறது. ஆம், நாம் பிழைப்புவாதிகளாக வளர்க்கப் பட்டுக் கொண்டிருக்கிறோம்

ஆனால் நம் பெற்றோர்களை நாம் இதற்காக குற்றம் சாட்டலாகாது. அவர்கள் ஒரு பெரும் நெருக்கடிக் காலத்தால் உருவாக்கப் பட்டவர்கள். பட்டினிக்                    காலங்கள் ஒரு தலைமுறைக்கு முன்னர் நம்மை மூடியிருந்தன. ஆகவே நாம் கலைகளை ரசிக்க வேண்டுமா சாப்பிட வேண்டுமா என்ற தேர்வே அவர்களுக்கு இருந்தது. சாப்பாட்டை அவர்கள் தேர்வுசெய்தது இயல்பே

ஆனால் நாம் அவர்களின் அச்சங்களில் இருந்து விடுபட்ட தலைமுறையாக ஆக முடியும்.நாம் நம் பண்பாட்டின் செழுமைகளை நோக்கி திரும்ப முடியும். அதையே நம்ம்மிடம் இந்த காலகட்டம் எதிர்பார்க்கிரது

ஜெ

 

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு!
வணக்கம்!
இந்தியர்கள் பார்த்தால் சாப்டாச்சா என்று கேட்பது உணவு அரிதான மற்றும் கடின உழைப்பின் மூலமே கிடைக்கவேண்டிய ஒன்று  என்ற வகையில் உருவானது என்று நீங்கள் தெளிவு படுத்தி இருந்தீர்கள். நான் தென்கொரியாவில் இருந்த முனைவர் பட்ட ஆராய்ச்சி  செய்து கொண்டிருந்தபோது, கொரியர்கள் என்னைப்பார்த்தால்  சாப்டாச்சா என்று எல்லா வேளையும் ketparkal. கொரியர்களும்  நீண்ட காலம்  போரினால் பாதிக்கப்பட்டு, அதனால் தாங்க இயலாத கொடுமையான பசியை அனுபவித்தவர்கள். இப்போதும் உணவை வீணாக்குவது என்பது அவர்கள் ஒரு பெருங்குற்றமாக கருதுகிறார்கள். மேலும் பலவகையில் அவர்கள் நம் கலாச்சாரத்தோடு ஒத்துப்போகிறார்கள்.
நன்றிகள்!
தண்டபாணி


Best wishes!
Dhandapani

 

அன்புள்ள தண்டபாணி,

அமெரிக்கா சென்றிருந்தபோது கவனித்தேன். பெரும்பாலானவர்கள் தட்பவெப்பநிலை பற்றி ஏதேனும் சொல்கிறார்கள்– முகமன் ஆக. அல்லது இரவு நன்றாக தூங்கினீர்களா என்கிறார்கள். அங்கே குளிரும் தூக்கமும் பெரிய பிரச்சினையாக இருந்திருக்கின்றன போலும்

ஜெ

முந்தைய கட்டுரைஏ.கே.லோகிததாஸ்:நீண்ட உரையாடல் 2
அடுத்த கட்டுரைமலையாளவாதம் மேலும் கடிதங்கள்