புறப்பாடு II – 15, நுதல்விழி

சித்ரா அச்சக விலாசத்துக்குச் சென்று என்னைப்பற்றி விசாரித்து கடைசியாக என்னைத்தேடி வந்து பசவராஜுவிடம் பேசிக்கொண்டிருந்தார் அருளப்பசாமி. அப்போது நான் கொல்லைப்பக்கமிருந்த பெஞ்சில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தேன். ‘இதோ வந்திடறேன்’ என்று சொல்லிவிட்டு முன்வாசல்வழியாக வெளியே சென்று சந்துவழியாக பின்பக்கம் வந்து அங்கே படுத்துத் தூங்குவது என் வழக்கம். பசவராஜு நான் எங்கோ வேலையாகச் சென்றிருப்பதாகத்தான் நினைப்பார். அதற்குமேல் யோசிக்கும் திறன் அவருக்கு இல்லை. நான் கனத்த தூக்கமுகத்துடன் திரும்பிவருவதைக் கண்டாலும் அவரது மூளையில் கிளிக் ஒலிக்காது.

அருளப்பசாமி பொறுமையாக இரண்டுமணிநேரம் காத்திருந்தார். நான் உள்ளே நுழைந்ததும் பசவராஜு ‘இவுருதான்…’ என்றார்

‘இவரா?’ என்றார் அருளப்பசாமி” சின்னப்பையனா இருக்காரு?’

‘நல்லா படிச்சு எளுதுவாரு…’ என்றபின் பசவராஜு என்னிடம் ‘இவுரு உன்னைய தேடிட்டு வந்திருக்காரு…அப்பவே வந்தாச்சு’ என்றார்.

அருளப்பசாமி ‘நான் சித்ரா அச்சகம் போனேன்…சிவகுரு உங்கள ஸ்டார் பிரஸ்ஸிலே பாக்கலாம்னு சொன்னார். அவங்கதான் இங்க வரச்சொன்னாங்க’ என்றார.

‘நீங்க?’

‘உங்க புத்தகம் படிச்சேன்…’ என்றார். ‘அதை வாசிச்சுட்டு உங்கள பாத்தே ஆகணுமுன்னு வந்தேன்’

நான் பீதியுடன் மற்றவர்களைப் பார்த்துவிட்டு ’என்ன புத்தகம்?’ என்றேன்.

‘பிரம்மவசியமும் மலையாள மாந்திரீகமும்னு ஒரு புத்தகம்…நீங்கதான் அச்சுதன்குட்டீங்கிற பேரிலே எழுதினீங்களாம்’

‘ஆமா…அது சும்மா…’

‘அதைப்பத்தி உங்ககிட்ட பேசணும்’

‘இல்ல….நான் அவரு கேட்டாருன்னு..’

‘நல்ல புத்தகம்….அதிலே நமக்கு நெறைய பேச இருக்கு…’

‘மாடியிலபோயி பேசலாமே…டேய் குப்பு சாமிக்கும் தம்பிக்கும் டீ அனுப்புரா’

வேறுவழியே இல்லை. நானும் அவரும் மாடிக்குச் சென்றோம். நான் அந்நூலை தொழில்முறை மாந்திரீகரான என்னுடைய பெரியப்பா மகன் பரமேஸ்வரபிள்ளை வெற்றிலைபாக்கு கடையில் எடுத்துவிடும் பீலாக்களின் அடிப்படையில் எழுதியிருந்தேன். எதையாவது என்னிடம் செய்துகாட்டச் சொல்வாரா?

அருளப்பசாமி மெலிந்த வெள்ளை நிற உடலில் நரம்புகள் நீலமாகத் தெரிய சற்றே முன்வளைந்தவராக இருந்தார். மொட்டைபோட்டு பதினைந்து நாளாகியிருக்கும். முடி கறுப்பும் வெள்ளையுமாக முளைத்திருந்தது. தாடி முளைக்க முடியாத முகம். மோவாயிலும் மேலுதட்டிலும் மட்டும் கொஞ்சம் முடி. வெள்ளை வேட்டி கட்டி வெள்ளை மேலாடையை உடலைச்சுற்றி போர்த்தியிருந்தார். ஒரு வெள்ளைத்துணிப்பை. பழைய ஆடை. ஆனால் சுத்தமாகக் துவைக்கப்பட்டது.

அருளப்பசாமிக்கு நல்ல கணீர்க்குரல். தெளிவான உச்சரிப்பு. மகத்தான சொற்பொழிவாளராக ஆவதற்கான உடல்ரீதியான தகுதிகள் கொண்டவர். மேலே சென்றதும் என்னிடம் ‘நல்லது, நாம பேசலாமா?’ என்றார்.

‘இங்க பாருங்க…அந்த புத்தகம்…’

’அதப்பத்தித்தான் பேசணும்னு வந்தேன்… அதை நான் வாங்கினது சிதம்பரத்திலே…என்ன ஒரு பொருத்தம் பாருங்க. சித் அம்பரம். சித்தமென்னும் வானம்….கையிலே அப்ப பைசா இல்லை. ஒரு பக்தர்ட்ட அந்தப்புத்தகத்தை வாங்கிக்குடுங்கன்னு கேட்டேன். சரீன்னு வாங்கிக்குடுத்தார். சாமி வேற புத்தகம் வேணுமானாலும் வாங்கிக்கிடுங்கன்னார். இல்ல எனக்கு இது ஒண்ணே போரும்னு சொல்லிட்டேன்…’

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ‘அது வந்து…’

அவர் பையிலிருந்து அந்தப் புத்தகத்தை எடுத்தார். ‘நான் கேக்கவந்த விஷயம் தோ இந்தப்பக்கத்திலே இருக்கு’ என்று பக்கங்களைப் புரட்டினார் ‘….இதிலே நெத்திக்கண்ணப்பத்தி சொல்லியிருக்கு. நெத்திக்கண்ணுங்கிறது சித்தக்கடலோட சுழீன்னு சொல்றீங்க. விபாசனை மூலம் அதை தெறக்கவைக்கிறதுக்கு ஒம்பது வழி இருக்குன்னு சொல்றீங்க….அதாவது’

அவரது பரபரப்பை பார்த்ததும் எனக்கு சட்டென்று எரிச்சல்தான் வந்தது. ‘…இதோ பாருங்க சாமி…இதெல்லாம் சும்மா டுபாக்கூர். நான் ஏதோ பொழைப்புக்காக எழுதினேன். அந்த பிள்ளைவாள் அவருபொழைப்புக்காக அச்சடிச்சு வித்தார்…’

‘இருந்தாலும்…’

‘எனக்கு இதையெல்லாம் பத்தி ஒண்ணுமே தெரியாது. நானே மனசில வந்ததையெல்லாம் புளுகி வச்சேன். அவரு போட்ட அடிமுறை, சமையல் எல்லாமே இந்தமாதிரி புக்குதான்…’

‘ஆனா உங்களுக்கு இந்த வார்த்தையெல்லாம் எப்டித் தெரியும்? மந்திரங்கள்லாம் சரியாத்தானே இருக்கு? சுழிமுனை, நாடி எல்லாமே சரியாச் சொல்லியிருக்கு’

‘அதெல்லாம் எனக்கே தெரியும். நான் எங்க குடுமபத்திலே உள்ள மாந்திரீகங்க கிட்ட கேட்டு ஞாபகம் வச்சுகிட்டது. ஒண்ணுரெண்டு பழைய சுவடியும் படிச்சிருக்கேன். ஆனா இதெல்லாம் சும்மா…. எனக்கு இதிலே எல்லாம் நம்பிக்கை இல்ல’

‘உங்களுக்கு நம்பிக்கை இல்லேன்னா சத்தியம் சத்தியமில்லேன்னு ஆயிருமா?’

‘உங்களுக்கு இப்ப என்ன வேணும்? எனக்கு வேற வேலை இருக்கு’

‘நீங்க எழுதியிருக்கிற விஷயங்கள் எனக்கு ரொம்பச் சரியா வருதே’

‘ஓ’ எனக்கு ஆயாசமாக இருந்தது. அவரைப்பார்த்தால் முட்டாள்மாதிரி தெரியவில்லை. ஒருமாதிரி வெள்ளையான ஆளாக இருக்கலாம். ‘சாமி, இதையெல்லாம் நம்புறதானா நம்புங்க. உங்க சொந்த விஷயம் அது. எனக்கு நம்பிக்கை இல்லை. நான் இதையெல்லாம் சும்மா கப்சா விட்டேன்…’

‘ஆனா நீங்க எழுதினீங்களே’

‘சாமி, நான் பக்கா செக்ஸ்புக்கும் எழுதியிருக்கேன்…அதும் எனக்கு ஒரு மயிரும் தெரியாது’

‘அதுவேற…இது ஞானம். இது உங்களுக்குத்தெரியாம இருக்கலாம். ஆனா இந்த ஞானம் உங்க குடும்பப்பாரம்பரியமா உங்ககிட்ட வந்திருக்கு…உங்க வார்த்தையிலே உங்கள அறியாம அந்த சத்தியம் வந்து ஒக்காந்திருக்கு’

‘சரிதான்…சாமி கெளம்புங்க…நான் வெளிய போகணும்’

‘ஒருநிமிசம், நான் சொல்றதச் சொல்லிடறேன். நீங்க இதிலே சகஸ்ரபத்ம சுழிமுனை பத்திச் சொல்லியிருக்கிறத நான் அனுபவபூர்வமா உணர்ந்திருக்கேன். எனக்கு அது நடந்திருக்கு’

‘என்னது, நெத்திக்கண்ணு தொறந்திருக்கா?’

‘நெத்திக்கண்ணு இருக்குன்னு நான் உணர்றேன்….’

‘அப்ப நீங்க திரயம்பகன்…போயி எங்கியாம் ஆசிரமம் கட்டி குறி சொல்லுங்க’

‘அதில்ல, தம்பி இங்க பாருங்க…நீங்க எழுதியிருக்கீங்க. புறக்கண்ணை பாக்கிற மனுஷங்களால அகக்கண்ணான நுதல்விழியை பாக்க முடியாதுன்னு. ஆனா மிருகங்கள் பட்சிஜாலங்கள்லாம் பாக்கும்னு….ஞாபகமிருக்கா?’

‘உங்க கண்ண பட்சிகள் பாத்துட்டுதாக்கும்?’ காக்காய் ஏதாவது அவரைத் துரத்தி கொத்தியிருக்குமென நினைத்தேன்.

‘உண்மையிலேயே….உண்மையாவே அப்டித்தான்…பாருங்க’ அவர் மொட்டைமாடி விளிம்புக்குச் சென்று பார்த்தார். கீழே செந்நிறமான ஓட்டுக்கூம்புமேல் ஒரு காகம் அமர்ந்திருந்தது. அதை நோக்கி கைநீட்டினார்.

காகம் தலை சரித்துப்பார்த்தது. இருமுறை சிறகை விரித்துச் சுருக்கி சரியாக இடுக்கிக்கொண்டது. பின்பு நாலைந்துமுறை தலையைத்தாழ்த்தி வாலைப்பரப்பி கா கா என்றது. எம்பி எழுந்து சிறகடித்து வந்து எங்கள் கட்டிடத்தின் சுவரில் அமர்ந்து அவரைப்பார்த்தது. மீண்டும் எக்கி எக்கி கா கா என்றது. வேறு எங்கோ காகங்கள் கரைந்தன. அவர் அசையாமல் கைகளை விரித்துக்கொண்டு நின்றார்.

காகம் மெல்ல எழுந்து அவர் அருகே வந்து தரையில் அமர்ந்தது. கா கா என்று கரைந்தபோது அது ஏதோ சொல்லவருவது போலிருந்தது. பின்பு எழுந்து அவரது கையின் மேல் அமர்ந்துகொண்டது.

ஆச்சரியம் தாளாமல் நான் அப்படியே நின்றேன். அது ஏதோ தற்செயல் என்று நம்ப விரும்பினேன். ஆனால் தெளிவாக மூளைக்குத் தெரிந்தது, அங்கே ஒரு அசாதாரணவிஷயம் நடந்துகொண்டிருந்தது. இன்னொரு காகம் வந்து கைபிடிச்சுவரில் அமர்ந்தது. இருகாகங்களும் பேசிக்கொண்டன. அதுவும் அருகே வந்தது. மூன்றாவது ஒரு காகம். இன்னும் ஒன்று.

ஐந்து நிமிடங்களில் அவரது நீட்டப்பட்ட கைகளில் நான்கு காகங்கள் அமர்ந்திருந்தன. கீழே தரையிலும் சுவரிலும் கம்பிக்கொடியிலுமாக பதினைந்துக்கும் மேல் காகங்கள். அவை கரைந்தபடியே இருந்தன.

‘போதும்…’ என்றேன் ‘எனக்கு ஒருமாதிரி இருக்கு’

காகங்கள் சட்டென்று என்னை தாக்க ஆரம்பித்துவிடும் என்ற அச்சம் எனக்கு இருந்ததுதான் என் திணறலுக்குக் காரணம் என உணர்ந்தபோது எனக்கே என் மீது கசப்பு வந்தது.

‘நாம கீழே போயிருவோம்….’ என்றார். ‘இல்லேன்னா வந்துகிட்டே இருக்கும்’

படிகளில் கீழே இறங்கியபோது மொட்டைமாடியில் காகங்கள் கரைந்துகொண்டே இருந்தன.

‘காக்காய்கள இப்டி கூப்பிடுற ஒருத்தர் எங்கூர்ல இருந்தார்னு சொல்லுவாங்க’

‘நான் கூப்பிடலை தம்பி…’

ஆமாம், அவர் ஒலியே எழுப்பவில்லை.

‘அப்ப என்னதான் பண்ணினீங்க?’

‘காக்காயைப்பாத்தேன்…எங்கிட்ட வரமாட்டியா கண்ணூன்னு நெனைச்சேன்’ என்றார். ‘என் கண்ணுக்கு நடுவிலே உள்ள நுதல்விழிய அதுக பாத்திருதுக’

‘காக்கா மட்டும்தானா?’

‘இல்ல…கிளி மைனா எல்லாமே…பசு பண்ணி எல்லாமே நான் பாத்தா நெருங்கிடுது தம்பி…’

அது உண்மை என்று எனக்கு உடனே தெரிந்தது. என் கைகள் நடுங்கிக்கொண்டே இருந்தன. கால்சட்டைக்குள் கைகளை நுழைத்துக்கொண்டேன். பையன் டீயுடன் மேலே வந்தான்.

‘டீ குடிப்பீங்களா?’

‘நான் அதெல்லாம் குடிக்கிறதில்லை….’

‘பின்ன?’

‘நான் வேகவைக்காத காய்கறிகளையும் பழங்களையும் மட்டும்தான் சாப்பிடுறேன்…கிடைச்சதுன்னா தேங்கா சாப்பிடுவேன்’

‘வாழைப்பழம் கொண்டுவரச்சொல்லவா?’

‘வேண்டாம்தம்பி…எங்கிட்ட வாழைப்பழம் இருக்கு’ என்று பைக்குள் இருந்து எடுத்துக்காட்டினார்.

நான் ஒரு டீயை எடுத்துக்கொண்டேன். ‘அத ஓனர்ட்ட குடு’ என்று பையனை அனுப்பினேன். சாமியை கொல்லைப்பக்கம் அழைத்துச் சென்றேன். அங்கே நீர் வறண்டு நெடுநாளான ஒரு கிணறு உண்டு. அதனருகே ஒரு பெஞ்சு, நான் தூங்குவதற்காக போடப்பட்டது. அதில் அமர்ந்துகொண்டோம்.

‘இதான் தம்பி, நான் உங்ககிட்ட பேசவந்தது…ஒரு மாசமா இதெல்லாம் எனக்கு நடக்குதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன்… கொஞ்சம் பயமா இருந்திச்சு…அப்றம்தான் உங்க புத்தகத்த படிச்சேன். இதெல்லாம் குப்தயோகம்னு நீங்க சொல்றீங்க’

‘இப்பதான் ஆரம்பிச்சதா?’

‘இல்ல….எனக்கு சின்னவயசிலேயே எல்லா ஜீவஜாலங்களையும் புடிக்கும்…சின்னவயசிலே எங்கம்மா எனக்கு கோழிக்குஞ்சு சூப் வச்சு குடுத்தா. அந்தக்கோழிக்குஞ்ச நான் அதுக்கு முன்னாடி கையிலே எடுத்து கொஞ்சியிருக்கேன். சூப்ப பாத்ததும் அப்டியே மயக்கம்போட்டு விழுந்திட்டேன். முழிச்சபிறவும் உடம்பு நாலஞ்சுநாள் நடுங்கிட்டே இருந்தது. அதுக்கு மேலே என்னால எதுவுமே சாப்பிட முடியலை. நாலஞ்சுநாளிலே சாகிற மாதிரி ஆயிட்டேன். எது சாப்டாலும் வாந்தி. எங்கூர் சித்தவைத்தியர் எனக்கு தேங்காப்பால் குடுக்கச்சொன்னார். அது உடம்புல நின்னதினால பிழைச்சேன்…அப்ப நான் ரெண்டாப்பு படிச்சிட்டிருந்தேன்.’

‘அப்றம்…’

’அப்றம் எனக்கு ஸ்கூலுக்குப் போகப் புடிக்கலை…தினம் கெளம்பி ஏரிக்கரை கரட்டுமேடுன்னு சுத்துறது. பட்சிகள் மிருகங்கள் மரங்கள்னு எல்லாத்தையும் வேடிக்கைபாத்துட்டு இருக்கிறது. என்னத்தை பாக்கிறேன்னு தெரியாது. ஆனா பாக்கப்பாக்க புடிக்கும். பரவசமா இருக்கும். கண்ணில கண்ணீரா வரும். பாக்க ஆரம்பிச்சு அப்றம் நிப்பாட்டணுமானா யாராவது என்னை கண்டுபுடிச்சு உசுப்பினாத்தான் உண்டு. சிலசமயம் ரெண்டுநாள்கூட ஆயிரும்…’

ஆச்சரியமாக இருந்தது. மனநோயாளியாக இருந்திருப்பார் என்று தோன்றியது.

’நீங்க நெனைக்கிறது சரி. குற்றாலத்திலே ஒரு ஆசிரமத்திலே கொண்டுபோயி உட்டாங்க. அங்க என்னைய மாதிரி பைத்தியக்காரங்க இருபத்தஞ்சுபேரு இருந்தாங்க. காலம்பற நல்லா எண்ணை தேச்சுட்டு அருவியிலே கொண்டுபோயி ஒருமணிநேரம் நிப்பாட்டுவாங்க. அப்றம் தோட்டத்தில விட்டிருவாங்க. எனக்கு புடிச்சிருந்தது. அங்க தோட்டத்திலே எல்லாமே உண்டு. மேயறதுக்கு மாடுங்க வரும்…நெறைய பூச்சிகள் பறவைகள் எல்லாம் உண்டு. பாத்துகிட்டே இருப்பேன்… குளிச்சப்பிறவு எல்லாமே பிரகாசமா தெரியும். பட்டாம்பூச்சி ரெக்கையில உள்ள பூப்பொடி கூட தெளிவா தெரியும்…குத்தாலத்திலெ வெயிலு நல்ல அழகா இருக்கும். பச்சையா… தூரத்திலே மலை. மழைக்காலத்திலெ மலை ஈரமா பளபளன்னு இருக்கும்”

‘எவ்ளவு வருஷம் அங்க இருந்தீங்க?’

‘என்ன, ஒரு பத்துவருசம் இருந்திருப்பேனா?’ என்று என்னைக் கேட்டார் ‘…அப்பா செத்துப்போனப்பிறவு அண்ணாவால காசு அனுப்ப முடியல…. பணமில்லாம எப்டி என்னைய வச்சுக்கிடுவாங்க? கஷ்டம்ல? அதான் என்னைய போன்னுட்டாங்க. அட்ரஸ் சொன்னாங்க. நானே கெளம்பி சிவகாசிக்கு போனேன்’

‘அங்கதான் ஊரா?’

‘ஆமா. அப்பா அங்க வாத்தியாரா இருந்தார். அண்ணாவும் வாத்தியார்தான். அம்மாவும் இருந்தாங்க. அண்ணா சொன்னார் டேய் நீ இங்க இருந்தா எம்புள்ளைங்க கெட்டுப்போவும், நீ கெளம்புன்னு….பாவம் அண்ணா…அவருக்கு ரெண்டு பசங்க. ரொம்ப கஷ்டம்…அம்மாவுக்கு வைத்தியம் பாக்க காசு கெடையாதுன்னு சொன்னார். அம்மா என்கூட வர்ரேன்னு சொன்னா. நான் அம்மாவைக் கூட்டிட்டு கெளம்பி விருதுநகருக்குப் போனேன். அங்க ஒரு மளிகைக்கடையிலே வேலைபாத்தேன்…’

‘எவ்ளவு வருசம்?’

‘அது இருக்கும் ஒரு நாலு வருஷம்….’

‘புடிச்சிருந்திச்சா?’

‘ரொம்ப புடிச்சிருந்திச்சு…’ என்று புன்னகை செய்தார் ‘எவ்ளவு சாமான்….மனுஷன் எவ்ளவு சாமான் கண்டுபிடிச்சு வச்சிருக்கான். எவ்ளவு ஆளுங்க வந்து அதையெல்லாம் சந்தோசமா வாங்கிட்டுப்போறாங்க…அந்த ஓனர் ரொம்ப நல்லவர். நாந்தான் காலம்பற அஞ்சுமணிக்கு கடைய தெறப்பேன். ராத்திரி பன்னிரண்டுமணிக்கு மூடி சாவிய நானே கொண்டுபோய்ட்டு காலம்பற வந்திருவேன். அம்மா சந்தோசமா இருந்தாங்க…அப்றம் செத்துட்டாங்க’’

‘அப்றமாத்தான் கடையிலே இருந்து நின்னுட்டீங்களா?’

‘இல்ல…ஒருநாள் ஒரு சாமியாரு வந்து என்னைப்பாத்துட்டே நின்னாரு. சாயங்காலம் வரை நின்னுட்டு எங்கியோ போய்ட்டாரு. நான் கடையச் சாத்திட்டு போறப்ப பின்னால வந்து நீ எங்கூட வாடான்னாரு. போலாம்னு தோணிச்சு. சாவியக் கொண்டுட்டுபோயி ஓனர எழுப்பி குடுத்தேன். ‘

‘அவரு ஒண்ணும் சொல்லலியா?’

‘சாமீன்னுதான் அவரு என்னைய கூப்பிடுவாரு…சாமி இம்புட்டுநாள் நின்னதே அதிசயம்…கெளம்புங்கோ…மிச்ச சம்பளம் நாநூறு இருக்கே..குடுக்கட்டான்னு கேட்டாரு… சரீன்னு வாங்கிட்டு வெளியே போனேன். அந்த சாமியாரு எச்சியக் கொண்டுட்டு வாறியா, குடுத்துட்டுவாடா கம்னாட்டீன்னு சொன்னாரு. நேரா திருப்பிக்கொண்டுபோயி குடுத்துட்டேன். என்னபண்றது, திருச்செந்தூரு உண்டியலிலே போடவான்னாரு. போடுங்கன்னு சொல்லிட்டு கெளம்பிட்டேன்’

ஆச்சரியப்படுவதை விட்டுவிட்டிருந்தேன். நானறியாத இன்னொரு உலகம்.

’அப்றம் எங்க போனீங்க?’

‘எங்கியோ…அவரு போற எடங்களுக்கெல்லாம் போறதுதான். அவரு சொல்றதச் செய்றது. என்னைய கம்னாட்டீன்னுதான் கூப்பிடுவார்… திருவண்ணாமலைக்குத்தான் மொதல்ல போனம். அங்க ஒரு நாலுமாசம். அப்றம் சிவசைலம். அப்றம் அப்டியே ஓங்காரேஸ்வர்…காசியிலே கொஞ்ச வருஷம் இருந்தோம்…’

நான் ’காசியில எங்க?’ என்றேன்.

‘படித்தொறையிலதான்’என்றார். ‘அப்றம் ஹரித்வார், அங்கேருந்து ரிஷிகேஷ்…கொஞ்ச நாள் உத்தரகாசி ருத்ரபிரயாக்னு போனோம்…’

பெருமூச்சுவிட்டேன்.

‘ரிஷிகேசிலே குரு சமாதியாயிட்டார்’

‘குருவா?’

‘ஆமா….அவருதான் சொன்னாரு அவர அப்டிச் சொல்றதுக்கு’

‘அவரு உங்களுக்கு என்ன சொல்லிக்குடுத்தார்?’

‘ஒண்ணுமே சொல்லிக்குடுக்கலை…சேந்து அப்டியே போயிட்டே இருக்கிறதுதான். எங்கியாம் சாப்பாடு கெடைச்சிரும். காலப்புடிச்சுவிடுடா கம்னாட்டீம்பாரு. புடிச்சு விடுவேன்.’

‘கடைசியா என்ன சொன்னாரு?’

’ஒண்ணும் சொல்லலை. படுத்தாரு…டேய் எங்காலைப்புடிச்சு பத்மாசனத்திலே வைடான்னாரு. வச்சேன். நான் போயிடுவேண்டான்னாரு, அப்டியே என்னையத் தூக்கி கங்கையிலே போட்டிருடான்னாரு. அப்றம் என் தலையிலே கைவச்சு சந்தோசமா இருடா கம்னாட்டீன்னாரு. போய்ட்டாரு’

‘இது எப்ப?’

‘இதுவா இது ஒரு ஆறுவருசமிருக்கும்… ’என்றார் அருளப்ப சாமி.

‘நீங்க அப்பவே சாமியா?’

‘இல்லியே…நான் நேரா ஊருக்குள்ள வந்தேன். சண்டிகரிலே கொஞ்சநாள் இருந்தேன். அங்கேருந்து அப்டியே கீழ வந்தேன். ஊரூரா சுத்துறது’

‘அருளப்பசாமீன்னு ஏன் பேரு?’

‘அது வடலூரிலே ஒரு சாமிபோட்ட பேரு. அவரு பேரு ஒளியப்பர். வடலூர் ராமலிங்கசாமியோட பக்தர். வருசத்திலே தைப்பூசத்தன்னிக்கு மட்டும் வடலூர் வந்திருவார். நான் அங்க போனப்பதான் அவரைப்பாத்தேன்…அவருகூடவே இருந்தேன். அவருதான் டேய் நீ இனிமே அருள்ளப்பண்டான்னார். சரீன்னுட்டேன்…’

நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவரைப்பற்றி எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. மொத்தமே இருபத்தைந்து கிலோ எடை இருக்கமாட்டார். ஆனால் உடம்பில் நல்ல வலு உண்டு என்று கைகளைப்பார்த்தால் தெரிந்தது.

‘சாமி, இப்ப எதுக்கு என்னைத்தேடிவந்தீங்க?’

‘இல்ல இந்த புத்தகத்திலே–’

‘சாமி இது ஒரு குப்பைப் புத்தகம். இதையெல்லாம் நம்பாதீங்க’

‘சரியாப்போட்டிருக்கே’

‘சாமி இதுக்குமுன்னாடி என்னென்ன புத்தகங்கள படிச்சிருக்கீங்க?’

‘நானா’?’

’ஆமா’

‘ஒண்ணுமே படிச்சதில்லியே’

‘அதான்….’ என்றேன் ‘இதெல்லாம் எல்லா புக்கிலயும் உள்ள விஷயங்கள்தான்….நான் ஒண்ணும் பெரிசா எழுதல்லை’

‘சரி…’என்றார் ‘ஆனா நீங்க சொல்லித்தானே எனக்கு இதெல்லாம் என்னான்னு தெரியுது…அதான் உங்க கிட்ட கேக்கலாம்னு வந்தேன்’

‘என்னது?’

‘இதை நான் முழுசா தெரிஞ்சுகிடணும்…உங்களுக்குத் தெரிஞ்சதை எல்லாம் சொல்லுங்க. நான் வாசிய அடக்கி வசியத்தை எடுக்கிறதுக்கு என்னவேணுமானாலும் செய்யறேன்’

‘எடுத்து?’

‘ஒண்ணுமில்ல’

‘பெரிய ஞானியா ஆகணுமா நீங்க?’

வாயைத்திறந்து ‘அப்டீன்னா?’

‘இந்த ஷிர்டிசாய்பாபா, ரமணர் அந்தமாதிரி’

‘அவங்கள்லாம் இதெல்லாம் பண்ணினவங்களா தம்பி?’

எனக்கு அயர்ச்சியாக இருந்தது. உண்மையிலேயே இவருக்கு அவர்களைப்பற்றி ஒன்றும் தெரியாதா என்ற எண்ணம் ஏற்பட்டதுமே தெரிந்தால் அதை மறைக்கக்கூடியவரல்ல அவர் என்ற எண்ணம் ஏற்பட்டது. மறுகணமே குரூரமான ஒரு சிந்தனை உருவாகியது.

‘சரி, சாமி நான் சில கேள்விகள் கேக்கிறேன்’

‘கேளுங்க…நீங்க எனக்கு குரு மாதிரி’

‘உங்களுக்கு பொம்புளைங்கள புடிக்குமா?’

‘ரொம்ப புடிக்குமே? ஏந்தம்பி இப்டி கேட்டுட்டீங்க?’

பல்லைக் கடித்து என்னை அடக்கிக் கொண்டேன் ‘அவுங்க அழக ரசிப்பீங்களா?’

‘ஆமா….’ முகம் மலர்ந்து ‘எம்புட்டு அழகா இருக்காளுக’

‘எல்லாருமா?’

‘ஆமா…’

‘சரி…பொம்புளைங்களிலே எந்த இடத்த பாப்பீங்க?’

‘எல்லா எடத்தையும்தான்’

‘மார்ப பாப்பீங்களா?’

’ஆமா…பாப்பேன்’

‘புடிக்குமா?’

‘ரொம்ப புடிக்குமே…’

‘பெரிசா இருந்தா புடிக்குமா சின்னதா இருந்தா புடிக்குமா?’

யோசித்து ‘ரெண்டுமே புடிக்கும்’

விளையாடுகிறாரா என்று ஒரு எண்ணம் வந்தது. ஆனால் அப்படி விளையாடினாரென்றால் அவர் மாபெரும் நடிகர்.

‘பொம்புளைங்களோட ஒதடு தொப்புள் எல்லாம் பாப்பீங்களா?’

‘ஆமா’

கடும்சினம் எழுந்து என் தலையில் சில நரம்புகள் நறுநறுத்தன. ‘பொம்புளைங்க கூட படுக்கணும்னு தோணுமா?’

‘எங்கம்மாகூட நான் படுப்பேனே’

‘அதில்ல….வேற பொம்புளைங்ககூட படுக்கணும்னு தோணுமா?’

‘நாந்தான் கோயில் வாசலிலே படுக்கிற ஆளாச்சே?’

’சாமிக்கு காமமே வந்ததில்லியா?’ என்றேன்.

அவர் என்னைப் பார்த்து ‘லிங்கோத்தாரணத்தைச் சொல்றீங்களா?’ என்று கேட்டார்.

’ஆமா’

‘அது அடிக்கடி உண்டு….திருவண்ணாமலையிலே மலைய விடிகாலை வெளிச்சத்தில பாத்தப்ப அப்டியே விடைச்சு நின்னுது…குரு பாத்துட்டு ஏண்டான்னார். பரவசமா ஆனாக்க அப்டி ஆயிடுதுன்னு சொன்னேன்….அப்டியே விட்டுரு…அது சிவம்னு சொல்லிட்டார்….அழகா எதைப்பாத்தாலும் சிவோத்தாரணம் உண்டு…..கொஞ்சநாளா இல்ல…..அதான் நான் கேக்கவந்ததே. அப்டி இல்லாம ஆனபிறகுதான் இந்தமாதிரி நெற்றிக்கண்ணு திறந்திருக்கு…நீங்க உங்க புக்கிலே சொல்றீங்க…’ புத்தகத்தை எடுத்து பக்கங்களைப்புரட்ட ஆரம்பித்தார்.

நான் அதை பிடுங்கி வீசினேன். ‘அதை விடுங்க சாமி…அது ஒரு மண்ணு புக்கு’

‘இல்லே’

‘அதில ஒண்ணுமில்ல…அத எழுதின நான் சொல்றேன். இனிமே நீங்க அதை படிக்கக்கூடாது. இனிமே ஒரு புத்தகமும் படிக்கக்கூடாது’

’ஒண்ணுமே படிக்கக்கூடாதா?’

‘வேண்டாம்’

‘சரி’ என்றார்.

‘ஏன் தெரியுமா?’

‘ஏன்?’

‘உங்க குரு சொன்னார்ல, சந்தோஷமா இருன்னு’

‘ஆமா’

‘அதான் உபதேசம்…அதுக்குத்தான்’

‘அப்ப இதெல்லாம் ஏன் நடக்குது?’

‘சாமி நீங்க சந்தோஷமா இருக்கீங்க…அதான்’ என்றேன். ‘சந்தோஷமா இருந்தா பட்சிமிருகங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருமோ என்னமோ’

‘அப்டியா?’ என்றார்.

‘இனிமே எங்க போறீங்க?’

‘தைப்பூசம் வருதே….வடலூர் போகணும்’

‘போங்க….சாப்பிடுங்க, வேடிக்க பாருங்க. ஜாலியா இருங்க’

‘ஜாலியா?’

‘ஆமா’

‘சரி’ என்றார்.

பெருமூச்சுடன் ‘பாக்கலாம் சாமி’ என்றேன்.

அருளப்பசாமி எழுந்துகொண்டார். செல்லும் வழியில் அச்சக யந்திரத்தைப்பார்த்து வியந்து பரவசமடைந்து நின்றார் ‘இது என்னது?’

‘இது அச்சாபீஸ்…இந்த மிஷின்தான் புக்கெல்லாம் அடிக்குது’ ஓர் எழுத்துருவை எடுத்துக்காட்டினேன் ‘இந்த மாதிரி எழுத்துக்களை சேத்துச்சேத்து கட்டைவச்சு அடுக்கி அப்டியே மையிலே தோச்சு தாளிலே பதிச்சா அச்சாயிரும்’

‘நடந்துபோறப்ப செருப்போட தடம் பதியற மாதிரி…’ என்றார்.

ஒவ்வொரு எழுத்தும் யாரோ ஒருவர் நடந்துசென்ற தடம் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

‘டே கஞ்சிவெள்ளம், இது யாரு மொட்ட?’ என்றாள் மாரியம்மாள்.

‘ஒரு சாமி’

‘பாக்க நல்லாத்தான் இருக்காரு…’ அவள் ஏதோ சொல்ல பெண்கள் சிரித்தார்கள்.

அருளப்பசாமி அவரும் சிரித்து ‘நல்ல பொண்ணுகள்…அழகா இருக்காங்க’ என்றார். ‘இவங்கதான் புத்தகம்லாம் அச்சுபோடுறாங்களா”

‘நாங்க ரூபா நோட்டுகூட அச்சுபோடுவோம்’

‘அப்டியா?’என்றார் அருளப்பசாமி வியந்து.

‘சும்மா ஓட்டுறாளுக சாமி வாங்க’ என அவரை மீட்டு கொண்டுசென்றேன்.

பசவராஜு ‘தம்பி, அந்த நாலாம் ஃபாரத்த பாத்துக்குடுத்தீங்கன்னா அச்சு ஏறும்’ என்றார்.

‘பாப்பம் சாமி’

‘பாப்பம்’ என்று கும்பிட்டு பசவராஜிடம் ‘வாரேன்…சந்தோஷம்’ என்று சொல்லிவிட்டு தோள்பையை தூக்கி மாட்டிக்கொண்டு அருளப்பசாமி கிளம்பினார்.

‘நாலாம் ஃபாரம்னா?’ என்றேன்.

‘அதான்…துடிக்கும் துப்பாக்கி’

நான் தாளை வாங்கிக்கொண்டு பென்சிலை கையிலெடுத்து அமர்ந்தேன். சிலகணங்கள் அதையே பார்த்துக்கொண்டிருந்தேன். சட்டென்று எழுந்து வெளியே சென்றேன். பசவராஜு எந்திரம் அருகே இருந்ததனால் திரும்பிப்பார்ப்பதற்குள் சென்றுவிட்டேன்.

அருளப்பசாமி சாக்கடையோரமாக சென்றுகொண்டிருந்தார். தலையைத் திருப்பித் திருப்பி சாலையை வேடிக்கை பார்த்துக்கொண்டு சென்றார்

‘சாமி…’ என்றேன். அவர் கேட்கவில்லை. மூச்சிரைக்க அவரை நோக்கி ஓடி அவர் அருகே நின்றேன். ‘சாமி’

‘தம்பி’ என்றார்.

‘நானும் உங்ககூட வாரேன்’

‘எங்க?’

‘வடலூர் போகணும்னு சொன்னீங்க?’

‘ஆமா இல்ல?’

‘ஆமா…நானும் வாரேன்…’

அருளப்பசாமி ‘வாங்க தம்பி’ என்றார். நான் என் கையில் பென்சில் இருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன். தூக்கிப்போடப்போனவன் சட்டைப்பையில் வைத்துக்கொண்டேன்.

முந்தைய கட்டுரைதிரைப்பாடல்கள் எழுபதுகள்….
அடுத்த கட்டுரைபொன்னொளிர்தடங்கள்