மலையாளவாதம், கடிதங்கள்

அன்புள்ள ஜெ

மலையாள வாதம் என்ற கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ரவி என்பவர் எழுதியது உண்மை அல்ல. அவரது இங்கே உள்ள மிகச்சிறிய ஒரு குழுவின் கருத்தாக இருக்கலாம். உங்களுக்கு இங்கே மிக அதிகமான வாசகர்கள் உள்ளனர். நீங்கள் தமிழரின் பெருமைகளியும் குறைகளையும் ஒரே சமயம் சுட்டிக் காட்டுகிறீர்கள். பிரமைகளை உருவாக்குவதை விட இம்மாதிரியான விமரிசன அணுகுமுறையே சிறந்ததாகும். அதையேத் தொடருங்கள்

ராஜேந்திரன்
அன்புள்ள ராஜேந்திரன்,

நன்றி

நான் அக்கட்டுரையை என்னுடைய வாசகர்களை நோக்கியே எழுதினேன். அவர்களிடம் கேட்கப்படும்போது அவர்கள் பதில் அளிப்பதற்காக. ஓர் எழுத்தாளன் மீது பற்றோ மதிப்போ இல்லாமல் அவனுடைய விமரிசங்களை ஒட்டி அவன் மீது மத இன மொழி காழ்ப்பு கொள்ளும் கும்பலுக்கும் இலக்கியத்துக்கும் தொடர்பே இல்லை

ஜெ

.

அன்புள்ள ஜெ

ரவி என்பவர் மலையாளி என உங்களை முத்திரைகுத்தி எழுதிய கடிதத்தை வாசித்து ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தேன்.  குவைத்தில் உள்ள வாசகர்கள் நீங்கள் தமிழ் விரோத எழுத்தை எழுதுவதாக அவருக்கு எப்படித்தெரியும்? இது இத்தகைய மக்கலின் பிரச்சினை. இவர்கள் இவர்களைப்போன்ற சிலருடன் சேர்ந்துகொண்டு குழுவாகச் சிந்தனைசெய்யப் பழகிவிடுகிறார்கள். தாங்கள் மொத்தத் தமிழ்நாட்டையுமே பிரதிநிதித்துவம்செய்வதாக எண்ணிக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். இது இவர்களின் தரத்தையே காட்டுகிறது

அவர் குவைத் தமிழர்களைப்பற்றி கட்டும் சித்திரம் முழுக்கவே பிழையானது.  மாறாகா இங்கே நீங்கள் எழுதும் கட்டுரைகளை ஆழமாக வாசித்து அர்த்தபூர்வமாக ஆராயும் பெரிய வாசகர் கூட்டம் இங்கே உள்ளது. நான் இதுவரை அக்கடிதத்தில் கண்டவை போன்ற மனப்பான்மைகளை இங்கே கண்டதில்லை. உங்கள் மேல் அதீத மரியாதையையே கண்டிருக்கிறேன்.  அவர்க்கு நீங்கல் அளித்த பதில் என்பது மிகப்பொருத்தமான ஒன்றே

நீங்கள் இம்மாதிரி எதிர்மறையான விஷயங்களால் பாதிப்படையப்போவதில்லை என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.  எதிர்மாகாலத்தில் இம்மாதிரியான கடிதங்களாஇ புறக்கணிக்கவும். இது ஒரு வீண்வேலை. .உங்கல் கட்டுரைகள் பலவகையான தகவல்களை அளிக்கின்றன. பல கதவுகளை திறக்கின்றன. அதற்காக நாங்கள் நன்றியுடையவர்கள்.

மாதவன் பிள்ளை

[இந்த கடிதம் வெளிவந்தால் என்னையும் ஒரு மலையாளி என்பார்கள். இங்கே பெரும்பாலானவர்களுக்கு தமிழர் பற்றியே பெரிதாக ஒன்றும் தெரியாது, நான் நாகர்கோயில்காரன். குவைத் எண்ணை நிறுவன ஊழியன்]

அன்புள்ள மாதவன்பிள்ளை

நன்றி. எனக்கும் அது தெரியும். ஏனென்றால் எனக்கு வரும் பல கடிதங்கள் வளைகுடா நாடுகளைல் இருந்துதான். நான் எழுதியது, அப்படி உண்மையிலே ஒரு பெரும்பகுதி நினைத்தால்கூட நான் கவலைப்படப்போவதில்லை என்றுதான்.

அமெரிக்கா பயணம் முடிந்துவந்து பதில்போடுகிறேன். மிகவும் தாமதித்து. நாகர்கோயிலில் நல்ல காற்று. ஆடி முடிந்து நீளும் சாரல் இல்லாத காற்று. இரவில் குளிர் ஆரம்பித்துவிட்டது. நாகர்கோயிலின் இரண்டாவது நல்ல பருவநிலை ஆரம்பமாகப்போகிறது

ஜெ

 

அன்புள்ள ஜெ,

மலையாள வாதம் பற்றி என் நண்பர்களிடம் பேசினேன். அவர்களில் ஒருசாரார் தீவிர தமிழ்வாதம் பேசுபவர்கள். அன்னியர் தமிழில் எழுதினால் தமிழ் அழியும் என்றார் ஒருவர். அப்போது கூடவே இருந்த தமிழாசிரியர் ஒருவர் கடுமையாகச் சொன்னார். தமிழர் என்றால் யார் என்று கேட்டார். தமிழ்நாட்டில் உள்ள சாதிகளில் பாதியை இந்த தமிழ்வாதிகள் தமிழர் என்று சொல்லமாட்டார்கள். தெலுங்கு கன்னடம் முதலிய மொழிகளை பேசுபவர்கள். உருது பேசுபவர்கள் தனி. பிராமணர் வேரு கூட்டம். கட்டக்கடைசியில் சில இடைநிலைசாதியினர் மட்டுமே தமிழர்கள் என்பார்கள். அதாவது இந்த தமிழ்வாதம் என்பது ஒரு சாதிவாதம் மட்டும்தான். அந்த கீழ்த்தர அரசியலுக்கு மொழியை போர்வையாகப் போர்த்திக்கொள்கிறார்கள்’ என்றார். அது உண்மைதான் என்ற எண்ணம்தான் ஏற்பட்டது

அன்பு குமரேசன்

அன்புள்ள அன்பு

எல்லா ஃபாஸ்ஸ அமைப்பும் ஒருவகை முற்போக்கு — சீர்திருத்த முகமூடியுடன் மட்டுமே வரும். மொழி- மத- இன- அடையாள அரசியலே ஃபாஸிசம். நவீன அரசியலில் எங்குமே அது ஒரு சக்திதான்
ஜெ

வணக்கம் ஜெயமோகன்,

குவைத்திலிருந்து சித்தார்த். அமெரிக்க பயணம் எப்படி சென்றுகொண்டிருக்கிறது? Enjoy.

குவைத்திலிருந்து யாரோ ரவி என்பவர் எழுதிய கடிதத்தை முன்வைத்து நீங்கள் எழுதி இருந்த “மலையாளவாதம்” பதில் படித்தேன். அந்த கடிதத்திற்கு அத்தனை முக்கியத்துவம் தந்திருக்க வேண்டியதில்லை என்று தோன்றுகிறது. பொதுபுத்தியில் உருவாக்கப்படும் பிம்பங்களோடு மட்டுமே பேசிக்கொண்டிருப்பவர்களையே இங்கே அதிகம் பார்க்கிறேன். தமிழன் யார் என்ற அடையாளம் வகுக்கப்படுவதையும் அதன் வகுத்தல் முறைகளையும் பார்க்கும் போது, அ. மார்க்ஸ் (காந்தியும் தமிழ் சனாதனிகளும்) சொன்னதை போல, இப்போதைய தமிழ் தேசியவாதிகளுக்கும் பழைய சனாதனிகளுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. நீங்கள் ’யாதும் ஊரே யாவரும் கேளீர்’ பற்றிய சங்கச்சித்திர கட்டுரையில் ஒன்றை குறிப்பிட்டிருந்தீர்கள். சைதன்ய யதி சொன்னதாக. எல்லா சமூகத்திலும் நாம், பிறர் என்ற இரு வட்டங்கள் இருக்கும். நாம் விரிந்து பிறர் சுருங்குவதே மேம்பட்ட சமூகத்தின் அடையாளம், ஒரு லட்சியப்புள்ளியில் பிறனே அற்றுப்போகவேண்டும் என்று.

இ.எம்.எஸ் எழுதிய காந்தியும் அவரது இசமும் புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதில் ஒரு இடத்தில் காந்தி சொன்னதாக ஒரு விஷயத்தை இ.எம்.எஸ் கூறுகிறார். (உத்தேசமான வரி) “ஒழுக்கக்கேடுகளால் வரும் நோய்களுக்கு மருந்து கண்டடைவது அந்த ஒழுக்கக்கேடுகளை வளர்க்கவே செய்யும்”. இந்த வரியை படித்த பொழுது உங்களின் “ஐந்தாவது மருந்து” கதை நினைவிற்கு வந்தது, எனக்கும் காயத்ரிக்கும். இந்த வரியிலிருந்து தான் அந்த கதை முளைத்ததா?
அ. மார்க்ஸின் காந்தியும் தமிழ் சனாதனிகளும் நூலினை வாசித்தீர்களா? அது குறித்த உங்கள் கருத்து என்ன? அந்த நூலை வாங்கும் போது காந்தி குறித்த அத்தனை நேர்மறையான ஒரு பிம்பத்தை அது முன்வைக்க போகிறது என எனக்கு தெரிந்திருக்கவில்லை. ஆச்சரியமாக இருந்தது.
சித்தார்த்

அன்புள்ள சித்தார்த்

நான் அந்த நூலை இன்னமும் வாசிக்கவில்லை – வாசிக்க வேண்டும். அ.மார்க்ஸ்
காந்தி குறித்து எழுதிய பல கட்டுரைகள் எனக்கு ஆச்சரியத்தை அளித்தன.
அவரிடமிருந்து நான் அவற்றை எதிர்பார்க்கவில்லை. அவர் சொல்லிவந்த
காழ்ப்புகொண்ட கோட்பாடுகளுக்கு அவை எதிரானவை. அனேகமாக அவர் காந்தி
குறித்து எழுதப்பட்ட சில ஆங்கில நூல்களை வாசித்திருப்பார் என
எண்ணிக்கொன்டேன். எப்படியானாலும் அது நல்லதே.

காந்தியின் ஒழுக்கக் கோட்பாடுகளில் எனக்கு பல இடங்களில் நம்பிக்கை
வரவில்லை. ஓர் யோக சாதகனின் ஒழுக்கத்தை சாதாரண மக்களுக்கு நாம்
பரிந்துரைக்கக் கூடாது. ஒழுக்க மீறல் என்பது சாமானியன் வாழ்க்கையில்
எப்போதும் நிகழக்கூடியது. அவன் அதில் இருந்து மீள்வதற்கான எல்லா வழிகளும்
எப்போதும் திறந்திருக்க வேண்டும்

ஒழுக்கம் என்பது காந்திக்கு அறத்துடன் பிரிக்க முடியாதபடி
சம்பந்தப்பட்டிருக்கிறது. எனக்கு அப்படி அல்ல. நான் அதை ஒரு சமூக
ஏற்பாடாகவே காண்கிறேன். அறம் ஒழுக்கத்தின் நீட்சி அல்ல.அது மானுடம்
தழுவியது
ஐந்தாவது மருந்துக்கும் காந்தியின் வரிகளுக்கும் இடையே உள்ல தொடர்பை நான்
நீங்கள் சொன்னபின்னர்தான் கவனித்தேன்
ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன்,

‘மலையாளவாதம்’ பதிவை பார்த்துவிட்டு அதற்க்கு நீங்கள் அளித்துள்ள பதிலை முழுமையாக பார்க்கும் பொறுமைகூட இல்லாமல் இதை எழுதுகிறேன்.

‘சங்க சித்திரங்கள்’ ஒன்றே போதும் இவர்களுக்கு பதில் சொல்ல. அந்த புத்தகத்தை படித்த பின்பு உங்கள் மேல் ஒரு பொறாமையே ஏற்பட்டது.  ஒரு மலையாளிக்கு உள்ள தமிழறிவு தமிழ் எழுத்தாளர்களுக்கு இல்லியே என தோன்றியது (மலையாளி என பிரிப்பது தவறு என்று தோன்றினாலும், அந்த எண்ணம் தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை).

இன்று தமிழ் இலக்கியவாதிகளாக அறியப்படுபவர்கள் பலர் எவனுக்குமே புரியாதவகையில் எழுதுவதுதான் இலக்கியம் என்று எண்ணுகிறார்கள்.. ‘கதவை மூடு’ என்று எழுதுவதை ‘மூடிய கதவு என்ற படிமம், திறந்த கதவின் உள்ளீட்டை விட முற்போக்கானது என்பதே ஆழ்மன வெளிப்பாட்டு யதார்த்தம்’ என்று எழுதினாலே இலக்கியமென  நிறுவுகிறார்கள்.  இந்தக் கேணத்தனத்தை யாரும் மறுப்பதாக தெரியவில்லை.  புரியும்படி எழுதிய சுஜாதாவை சாகும்வரை கூட இவர்கள் இலக்கியவாதியாக ஒத்துக்கொள்ளவில்லை.  இவர்களை நினைத்துதான் ‘தமிழினி மெல்லச்சாகும்’ என்று பாரதி எழுதியிருப்பாரோ என்று கூட தோன்றுகிறது.   நீங்கள் எழுதிய சிலவற்றை பார்க்கும்போது மலையாளிகளுக்கு இவர்மேல் கோபம் வருமே என்று கூட எண்ணியிருக்கிறேன் (அது உண்மைதான் என்பது உங்கள் பதிலில் தெரிந்து கொண்டேன்).

நான் ஒரு புத்தக கண்காட்சியில் நா. கதிரைவேல்பிள்ளையின் தமிழ் அகராதி வேண்டும் என்று கேட்டவுடன் அந்த விற்பனையாளர் பரபரப்படைந்து தனது முதலாளியை அழைத்தார். இதற்கு ஏன் இந்த பரபரப்பு என்று எனக்கு முதலில் புரியவில்லை.  அந்த முதலாளி கையில் ஒரு மைக்குடன் வந்தார். மைக்கை என்னிடம் கொடுத்து ‘தமிழ் வாழ்க’ அப்படின்னு இதில் மூணு தடவை சொன்னால் அது இந்த கண்காட்சி முழுவதும் ஒலிபெருக்கியில் கேட்கும். உங்களுக்கும் புத்தகத்தில் இருபது சதவிகிதம் தள்ளுபடி என்றார்.  அவரிடம் ‘நான் ஒரு தமிழ்ப் பிரியன், வெறியனல்ல. இப்படியெல்லாம் செய்தால் தமிழ் வளராது. அகராதி வாங்க வந்த தமிழ்ப் பிரியனை நீங்கள் அவமானம் செய்துவிட்டீர்கள், எனக்கு தள்ளுபடி வேண்டம்’ என்று சொன்னேன். அவர்கள் இருவரும் என்னை ஏதோ பாகிஸ்தான் தீவிரவாதியை பார்ப்பதுபோல் பார்த்தார்கள்.  இதுதான் இன்றைய தமிழ்ச் சூழல். 

சென்ற ஞாயிறு, மதுரையில், குளித்து, புத்தாடை உடுத்தி, மாலை போட்டிருந்த தமிழன்னை  சிலையை பார்த்தபோது, இதையெல்லாம் செய்வார்கள், ஐந்து திருக்குறள் கேட்டல் தெரியாது என்று தோன்றியது.   மொழியை கடவுளாக பாவித்து, சிலையெல்லாம் செய்து கும்பிடும் ‘பகுத்தறிவு’ வேறு எந்த இனத்திலும் இருப்பதாக தெரியவில்லை.  உலகின் ஆகச்சிறந்த வழிகாட்டிப்  புத்தகமாகும் தகுதி உள்ள திருக்குறளையும், ஆகச்சிறந்த கவிதையாகும் தகுதி உள்ள ‘யாதும் ஊரே’ பாடலையும் தந்த தமிழை காப்பதற்கு  இன்று பள்ளிப்படிப்பை தாண்ட இயலாத லும்பன்கள் “தமி’ல’ ப’லி’ச்சவான  தாய் தடுத்தாலும் விடேன்” என்று கிளம்பி இருக்கிறார்கள். ‘டாமில்’ எல்லாம் வசிக்க நேரமில்லாத படித்த கும்பல்  ஏ சி அறைகளில் இருந்து கொண்டு, ஏழைகளையும், உருப்படாத எழுத்தாளர்களையும், திருத்தக் கிளம்பி இருக்கிறது. 

தமிழ் இலக்கியம் இனி அவ்வளவுதான் என நினைத்திருந்த போது உங்களின் ‘சங்கசித்திரங்களும்’, வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசமும்’ எனக்கு ஒரு நம்பிக்கையை அளித்தன (கள்ளிக்காட்டு இதிகாசம் உங்களுக்கு பிடிக்குமா என தெரியவில்லை, மேலும் வைரமுத்துவை இலக்கியவாதி என்றல் சிலர் அடிக்கவரக்கூடும் !).   எதிர்காலத்தில் வாழ்க்கைத் தேவைகளுக்காக ஆங்கிலம் எங்கள் குழந்தைகளின் தமிழ் இலக்கிய வாசிப்பை விழுங்கும் போது ‘சங்க சித்திரங்களின்’ மூலம் அவர்களை மீட்க எண்ணியுள்ளேன்.

எதையாவது எழுதி தங்களை மனச்சோர்வுக்கு ஆளாக்குபவர்களை கடந்துவரக் கற்றிருப்பீர்கள் எனினும் ஒரு சகோதரனின் மென்மையான, கையைப்பிடித்து தொடுதல் ஒன்றிலேயே எல்லா ஊக்கத்தையும் அளிக்கும் உணர்வை கொடுக்க விரும்புதே இந்த கடிதத்தின் நோக்கம். மேலும் ஊக்கமாக எழுதுங்கள்!

அன்புடன்,

கணேசன்.

அன்புள்ள கணேசன்

மொழிவெறி இந்த அளவுக்கு இருக்கும் நம் சூழலில் தமிழுக்குச் செய்யவேண்டிய எந்த வேலையுமே உருப்படியாக நடக்காமல் இருப்பது ஏன் என்ற எளிய வினாவில் இருந்தே நீங்கள் சொன்ன விஷயங்களை அறிந்துவிடலாம். இந்த மொழிவெறி ஓங்குவதற்கு முன்னர், இந்த மொழிவெறிக்கூச்சல்களை எதையுமே எழுப்பாதவர்களால் உருப்படியான தமிழ்ப்பணிகள் செய்யபப்ட்டன. உ.வே.சாமிநாதய்யர், கி.வா.ஜகன்னதன் முதல் சொல்லலாம். தமிழுக்கு ஒருகலைக்களஞ்சியத்தை அளித்த பெரியசாமி தூரனோ ஒரு பேரகராதியை உருவாக்கிய வையாபுரிப்பிள்ளையோ ஆட்சிமொழிச்சொல்லகராதியை உருவாக்கிய அவினாசிலிங்கமோ மொழிவெறியர்கள் அல்ல. அவர்கள் செய்த சேவைகளை அறிந்து வைத்திருக்கும் நபர்களே இன்றில்லை.

இங்கே மொழி வெறி என்பது எப்போதும் ஓர் எதிரியை உருவாக்கி அவனை வெறுக்க அவதூறு செய்ய பயன்படும் ஒன்றாக மட்டுமே உள்ளது. மொத்த ஆற்றலும் அதற்கே சரியாகிவிடுகிறது. தமிழ்ப்பற்றாளன் என்ன செய்யவேண்டுமென்றால் தமிழ் எதிரிகளை வையவேண்டும் என்றாகிவிட்டிருக்கிறது. தமிழ் எதிரி யார்? சொந்த எதிரிதான்

ஜெ

 

மலையாளவாதம்

முந்தைய கட்டுரை“அநங்கம்”
அடுத்த கட்டுரைபுல்வெளிதேசம் 18, நதிக்கரையில்