புறப்பாடு – கடிதங்கள்

ஜெ,

நீங்கள் எழுதிய நூல்களில் விஷ்ணுபுரம், கொற்றவை, பின்தொடரும் நிழலின்குரல்,இன்றைய காந்தி, காடு ஆகியவற்றைத்தான் தர அடிப்படையிலே வரிசைப்படுத்துவேன். அவ்வரிசையில் காடு நாவலுக்கு முன்னதாகவே வைக்கக்கூடிய ஒரு கிளாசிக் என்று புறப்பாடு வரிசையைச் சொல்லுவேன்.

புறப்பாடு என்ற தலைப்பே முக்கியமானது. கருவறைக்குள் கோயில்கொண்டிருக்கும் தெய்வம் உற்சவமூர்த்தியாக ஊருக்குள் செல்வதன் தொடக்கத்தைத்தான் நாம் புறப்பாடு என்று சொல்கிறோம்.

பைபிளில் உள்ள இரண்டாவது நூல் புறப்பாடு.எகிப்தில் பாரோ மன்னர்களின் கீழ் அடிமைகளாக இருந்த யூதர்கள் அங்கிருந்து கடவுளின் வழிகாட்டலால் தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட பூமியைத் தேடிச்செல்வதை அந்த அத்தியாயத்தில் சொல்லியிருக்கிறது. அவர்களை அசரீரி வழிநடத்துகிறது.அவர்கள் செல்லுமிடத்தில் கடல் விலகி வழிகொடுக்கிறது. தேவையான உணவு வானத்திலிருந்து மன்னா என்ற வடிவில் உதிர்கிறது.

இரண்டு அர்த்தத்திலும் அழகாகக் பொருந்துகிறது தலைப்பு. உங்களுடைய பயணத்தின் சித்திரம். வழக்கமாக நீங்கள் உங்களுடைய அகப்பயணத்தை அதிகமாகச் சொல்வீர்கள். இதில் அகம் தேங்கி அசையாமலிருப்பதுபோலவும் புறத்திலே நிகழ்ந்துகொண்டிருப்பவற்றை அகம் அவதானிப்பதுபோலவும் தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைத்தீர்கள், என்ன பெற்றுக்கொண்டீர்கள் என்று சொல்லாமலேயே நிகழ்ச்சிகளைக் கடந்துசெல்கிறீர்கள். சரிதான், நீங்கள் பெற்றுக்கொண்டதெல்லாம் உங்கள் கதைகளில் பிற்பாடு வந்திருக்கிறது அல்லவா?

புறப்பாடு முதல்பகுதி வெளியுலகின் அன்பையும் குரூரத்தையும் அறியக்கூடிய ஓர் இளைஞனை மட்டும் காட்டுகிறது. இரண்டாம்பகுதி அந்த அன்பும் குரூரமும் எப்படி உலகமாக மாறியிருக்கிறது என்ற தரிசனத்தை அளிக்கிறது. இரண்டாவது பகுதி வராவிட்டால் ரொம்பவும் லைட்டாக போயிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். இந்த ஒவ்வொரு அத்தியாயத்திலும் உள்ள மையப்படிமம் அந்நிகழ்ச்சிகளை இழுத்து ஒன்றாக்கி மிகச்சிறந்த புனைவுக்குச் சமானமான ஒருமையை அளிக்கிறது.

முதல்கட்டுரையில் வாழ்க்கைமீதான ஆசையின் அடையாளமாக lust ன் ஸ்தூலமாக ஆண்குறி இருக்கிறது. இன்னும் இன்னும் என்று துடிக்கும்போதே வாழ்க்கை அறுந்துவிடுகிறது. அந்த ஆசையில் இருந்து வாழ்க்கைதான் என்ன ,ஏன் அந்த ஆசை என்று தேடிக்கிளம்புவதுபோல ஆரம்பிக்கிறது புறப்பாடு இரண்டு.

அடுத்த அத்தியாயத்தில் வாழ்க்கையின் அடித்தளமாகிய காலம். காலத்தை நாம் உணர்வது பலவடிவங்களில்தான். மனசு ஒரு காலவடிவம். அப்புறம், மரணம். இன்னொன்று சிந்தனை. காலத்தின் பெரிய அவஸ்தையே அதன் முடிவில்லாமைதான். ஜெ, உங்களுக்குத்தெரியும் தொண்ணூறுகளில் நானும் இந்த அவஸ்தையை அடைந்தவன். வாசிப்புதான் என்னைக் காப்பாற்றியது. எனக்கு இன்றும்கூட வாசிப்பு என்பது அந்த ஒளியிலிருந்து கரியை வெளியேற்றக்கூடிய ஒன்றுதானா என்று சந்தேகமுண்டு.

ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு மையத்திலே தொகுக்கப்பட்டிருப்பதை யோசித்து யோசித்து விரிவு பண்ணிக்கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் தலைப்பே சொல்லிவிடுகிறது. எண்ணப்பெருகுவது என்றால் காத்திருப்புதான். அந்தக்கதை முழுக்க காத்திருக்கிறார்கள். பாம்பணை என்றால் விஷத்தின்மீது படுத்து தூங்கும் தூக்கம். அவ்வளவுபேர் கால்நீட்ட முடியாமல் குறுகித்தவிக்கும்போது கால்நீட்டிக்கிடக்கிறார் பெருமாள். அவருக்குக் கீழே விஷம்தான். நீங்கள் சொல்லாதது, அந்த பாம்பும்கூட காலரூபம்தான் என்றுதான். எருமையும் காலம்தான். காலனின் வாகனம். மெதுவாக நடக்கக்கூடிய சென்ற காலம் காலரூபம் என்ற இன்னொரு கதை அதைச் சொல்கிறது. அடுக்கடுக்காக கதைகள் வந்துகொண்டே இருக்கின்றன

ஆனால் மிகச்சிறந்த கதை, உச்சம் என்று நான் நினைப்பது மதுரம்தான். தட்டுபாதி இனிப்புபாதி என்று வாழ்க்கையைப் பிரித்துக்கொண்ட அவர்கள் காட்டிய வழிதான் உங்களுக்கும் எனக்குமெல்லாம் சரிப்படும். தட்டு என்பது இனிப்பை வைப்பதற்கு மட்டும்தான். அதை வாசித்த அன்று இரவு முழுக்க பாட்டுகேட்டுக்கொண்டிருந்தேன். எல்லாமே எழுபதுகளின் சினிமாப்பாட்டுக்கள். நான் கல்லூரியிலே படித்தகாலத்தில் வந்தவை. சரியாக அத்தனைபாட்டுக்களையும் சொல்லக்கூடிய உப்புநீரின் வடிவிலே வந்துவிட்டது. தட்டில் நிறைய இனிப்பு இனியும் மிச்சமிருக்கிறதே என்று நினைத்துக்கொண்டேன்

நன்றி ஜெ

சண்முகம்

மதிப்பிற்குரிய ஐயா,

புறப்பாடு – 2, ​​எங்​கெங்​கோ சுற்றி சுழன்றடிக்கிறது… கங்​கைக்க​​ரையிலிருந்து திடீ​ரென உடன்குடி​யை ​தொட்டுச் ​செல்கிறது.

‘தம்பி வாங்க….மருதையா?’

’நமுக்கு ஒடங்குடீண்ணே….இங்கிண முறுக்குசுட்டு விக்கிறோம்…செத்த தள்ளினேள்னாக்க காலுக்கும் அமைய எடம் கெடைக்கும்…குண்டிக்கு எடம்குடுத்துட்டு கால அந்தால விட்டுரப்பிடாதுல்லா? ரெண்டும் சேந்துபொறந்ததாக்கும் பாத்துக்கிடுங்க’

இ​டை​யே எவ்வளவு தூரம்? எழுத்தின் ​வேகம் பிரமிக்க ​வைக்கிறது. ‘​போங்கடா இனி எழுதுறதுக்கு ஒரு மயிரும் இல்ல..’ என்று மட்டு​மே ​சொல்ல முடிகிறது.

ஏ​தோ ​வேகமாகச் சுழலும் ராட்டினத்தில் ஏறி இறங்கியது​போல் உணர ​வைக்கிறது.

அன்புடன்,

ஆசீர்

முந்தைய கட்டுரைகாந்தியின் லண்டன்
அடுத்த கட்டுரைபுறப்பாடு II – 16, ஜோதி