அன்பின் ஜெ ,
நலந்தானே? 70களின் தமிழ்த்திரைபாடல்களுக்கு ஒரு அஞ்சலி போல் அமைந்த உப்புநீரின் வடிவிலே படித்தேன். எவ்வளவுதான் தமிழ்த்திரைப்படங்களை, அதில் பாடல்கள் இடம் பெறும் அபத்தத்தை கிண்டல் செய்தாலும், தமிழ் திரையிசைப்பாடல்களை விட்டு விலகவே முடிவதில்லை இல்லையா? எப்போதோ யாருக்காகவோ எழுதப்பட்டு பாடப்பட்டு இருந்தபோதிலும் அந்தப் பாடல்கள் அவற்றைக் கேட்ட ஒவ்வொரு மனிதருக்குள்ளும் அவரவர்க்கான ஒரு பிரத்யேக அர்த்தத்தையும் கனவினையும் ஏற்படுத்தி அவரவர்க்கே ஆன சொந்த பாடல்களாக மாறியிருப்பதை நான் கவனித்து வருகிறேன். சமீபத்தில் நம் ஏற்காடு காவிய முகாமின்போது கூட, நண்பர்கள் விரும்பிக் கேட்ட சில பாடல்கள் பாடப்பட்டபோது, அந்தப் பாடல்களின் பொதுவான திரைப்படம் சார்ந்த அர்த்தங்கள் பின்னுக்குப் போய் அவரவர் தனிப்பட்ட அனுபவமும் உணர்ச்சிகளும் மேலெழுந்து அவர்கள் முகங்கள் ஒளிர்ந்ததும் சில குறிப்பிட்ட பாடல்களில் எல்லோரும் சேர்ந்து கொண்டதும் நினைவில் ஓடுகிறது. ஒரு பரவச அலை அங்கே எல்லோரையும் ஆட்கொண்டது.
மேலும் இந்த அத்தியாயம் 70களைப்பற்றிய கலவையான உணர்வுகளை என் மனதில் மீண்டெழ வைத்தது. 70கள் ஒரு விதத்தில் இந்திய/தமிழக மக்களின் கலைந்த கனவுகளுக்கும் தொலைத்த களங்கம் இன்மைக்கும் சாட்சியாக நின்ற ஆண்டுகள். குறிப்பாக அதன் முதற்பகுதி! சுதந்திரப் போராட்ட காலகட்டத்தின் லட்சியவாத அலை வடிந்து, பற்றாக்குறையும், நிராசையும், ஏக்கமும் மக்களை பற்றிக்கொண்ட ஆண்டுகள்! நவீன தமிழகத்தின் முக்கிய சிற்பிகளான ராஜாஜி,பெரியார்,காமராஜர் ஆகியோர் அடுத்தடுத்து மறைந்தனர்.லட்சியவாதம் மறைந்து சுயநலமும் பிழைப்புவாதமும், பொது வாழ்வில் நேர்மையின்மையும் தலை தூக்கிய காலம். மழை பொய்த்து தண்ணீர் பஞ்சமும் தலைவிரித்தாடியது. மன்னவன் வந்தானடி படம் எனக்கும் தனிப்பட்ட ஞாபகங்கள் கொண்டது. 1975-இல் இதே நாளில் (Oct-2) அந்தப் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் காமராஜர் மறைந்த செய்தி வந்து படத்தை பாதியில் நிறுத்தினார்கள். இடதுசாரியும் தொழிற்சங்கவாதியுமான என் தந்தையின் கண்களில் நீர் மல்கியதைக் கண்டேன். இந்த ஆண்டுகளில் நசுக்கப்பட்ட மனிதர்களே கதை நடக்கும் 80களில் நீங்கள் காட்டுபவர்கள். இவர்களின் அத்தனை துயரங்களிலும் ஒரு ஆறுதலாக அந்த காலகட்டத்தின் திரைப்பாடல்கள் இருந்துவந்ததைக் காணமுடிகிறது. ஆனால் இதிலும் ஒரு முரண் உள்ளது. 70களின் இந்தப் பாடல்கள் (MSVயினுடயவை) அப்போது தமிழகத்தின் நகரங்களில் அவ்வளவாக ரசிக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. ஆராதனா, பாபி, யாதோங்கி பாராத், ஷோலே போன்ற இந்தி படங்களும் அவற்றின் பாடல்களுமே தமிழ்த் திரையரங்குகளில் முழங்கிக் கொண்டிருந்தன. 1976-இல் அன்னக்கிளி வெளிவந்து இளையராஜா நிலை பெற்ற பின்னரே இந்த நிலை மாறியது என்று நினைவு. ஆனால் இப்போது இந்தப் பாடல்களையெல்லாம் கேட்கும்தோறும் எப்படி இந்தப் பாடல்கள் கொண்டாடப்படாமல் இருந்திருக்க முடியும் என்ற வியப்பே எழுகிறது.
ரயிலில் வரும் நசுங்கிய மனிதர்களின் சொல்ல முடியாத ஆசைகளை, ஏக்கங்களை, துயரங்களை, பிரார்த்தனைகளை அந்தப் பாடல்கள் சொன்னது போல், அந்தப் பாடல்களை ரசித்துக் கொண்டிருக்கும் என் போன்ற எத்தனையோ பேர்களின் மன உணர்வுகளுக்கு உங்கள் அற்புதமான வார்த்தைகளில் வடிவும் அளித்ததற்கு நன்றி ஜெ. நீர்கங்கை, மதுரம், சண்டாளிகை, உப்புநீரின் வடிவிலே என்று உச்சங்களிலேயே தொடர்ந்து பயணம் செய்கிறது புறப்பாடு II. மீண்டும் நன்றிகள் பல.
சுரேஷ் கோவை.