புறப்பாடு II – 14, ரணம்

சென்னையில் அச்சகம் என்பது பெரும்பாலும் பெண்களின் உலகம். அச்சுகோர்க்கும் ஆண்கள் அனேகமாக இல்லை என்றே சொல்லலாம். ஆண்கள் கம்பாசிட்டர் வேலைதான் செய்வார்கள். எடைகூடிய அச்சுப்பலகையை எந்திரத்தில் ஏற்றுவதும் இறக்குவதும், மின்சாரம் நின்றுவிட்டால் அவசரத்துக்கு டிரெடிலை இயக்குவதும் எல்லாம் அவர்கள்தான் செய்யவேண்டும். அது ஆண்மை மிக்கவேலை என்பதனாலேயே அச்சுகோர்ப்பது பெண்மைமிக்கவேலை என்றாகிவிட்டது. அச்சுகோர்க்கும் ஆண்களும் நான் பார்த்தவரை பெண்களின் பேச்சு மற்றும் அசைவுகளைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அதிகமாக பெண்களிடம் பேசிக்கொண்டே இருப்பதனால் அப்படி வந்திருக்கலாமென நான் ஊகித்தேன்.

சென்னையில் தியோசஃபிகல் சொசைட்டிதான் பெண்களுக்கு சிறுதொழிலாக அச்சுக்கோப்பை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தது. பின்னர் அந்தப் பெண்களிடமிருந்து மற்றபெண்கள் கற்றுக்கொண்டு அந்த வம்சம் பெருகியது. அச்சுகோர்க்கும் ஒரு பெண் திடீரென்று இன்னொரு சிறுபெண்ணை கூட்டிவருவாள். அவள் ஆரம்பத்தில் திருதிருவென விழித்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருப்பாள். பின்பு தலைப்புகள் மட்டும் அச்சு அடுக்குவாள். அதை பெரியவள் சரிபார்த்து திருப்பி அடுக்குவாள். அனேகமாக ஒருமாதத்தில் இவளும் பேசிக்கொண்டே அச்சு அடுக்க ஆரம்பித்துவிடுவாள்.

அச்சுஎழுத்துருக்களில் எப்போதும் மை இருக்கும். கறுப்புவெள்ளைப் புகைப்படம் கழுவும் நீரின் ரசாயனவாடை கொண்ட மை. ஈய எழுத்துக்கள் அடிக்க அடிக்க தேய்ந்து அந்தமையுடன் ஈயமும் இருக்கும் என்றார்கள். அச்சுக்கோர்ப்புத்தொழிலின் முக்கியமான பிரச்சினை அந்த மை நக இடுக்குகளில் இருந்து போகாது என்பதுதான். காலப்போக்கில் கையைப்பார்த்தாலே தெரியும், நிரந்தரமாகவே மைக்கறை படிந்துவிட்டிருக்கும்.

ஆரம்பத்தில் எல்லாம் கைகளை உரசி உரசிக் கழுவுவார்கள். சோப்புபோட்டு தேய்ப்பார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அந்த அக்கறை அகலும். சரஸ்வதியக்கா ஒருமுறை வேகமாக கையை அரைடம்ளர் நீரில் நனைத்துவிட்டுச் சென்று அமர்ந்து தூக்குவாளியைத் திறந்ததைக் கண்டு ‘என்னக்கா இது, கையெல்லாம் மை’ என்றேன்.

‘சர்த்தான் போடா…வயிறு முழுக்க இந்த மைதான் …அப்றமென்ன’ என்றாள்.

‘அக்காவுக்கு கொழந்தைகூட மைக்கறையோடத்தான் பொறந்திருக்கு’ என்றாள் மாரியம்மாள்.

பெண்கள் சிரித்தார்கள். சரஸ்வதியக்கா சிரிக்கமாட்டாள் என எனக்குத்தெரியும். அவள் நல்ல சிவ்ப்பு நிறம். அவள் குழந்தை கரிநிறம்.

அவர்கள் மீண்டும் சினிமாபற்றிய பேச்சில் இறங்கிவிட்டார்கள். சினிமாபற்றித்தான் அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியும். ஆனால் அவர்களுடன் சென்று நின்று அச்சுக்கோப்பு கற்க ஆரம்பித்தபோதுதான் அவர்கள் மிகமிகக் குறைவாகவே சினிமா பார்த்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அச்சகம் வரும்போது பார்த்த சினிமாச் சுவரொட்டிகள் மட்டும்தான். அவற்றிலுள்ள சிறுநடிகர்களைக்கூட தெரிந்துவைத்திருந்தார்கள். எல்லா நடிகர்களின் அந்தரங்க வாழ்க்கையும் அவர்களுக்குத் தெரியும். பேச்சு முழுக்க அதைப்பற்றித்தான். பெரும்பாலான செய்திகளை மாரியம்மாள்தான் கொண்டுவந்து விவரிப்பாள்.

மாரியம்மாள் மொத்தமே பத்துபடம்கூட பார்த்ததில்லை. அவள் அப்பா சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுகிறவர். சின்னப்பெண்ணாக இருந்தபோதே அவள் வேலைக்குப்போக ஆரம்பித்துவிட்டாள். வீட்டுவேலை. அதன்பின் ஒரு அக்கா வழியாக அச்சுவேலை. ஒடுங்கிய கன்னமும் ஆழமான கழுத்துப்பள்ளமும் மூக்கின்மேல் ஒரு மச்சமும் சிறிய கூந்தலுமாக அவள் எல்லா வீட்டுவேலைக்காரப் பெண்களையும் போலத்தான் இருப்பாள். கண்களுக்கு மைதீட்டி அச்சுகோர்க்க வருபவர்கள் அவளும் சரஸ்வதியக்காவும் மட்டும்தான். மாரியம்மாளின் குரல் வெளியே கேட்காது. மெல்லிய குரலில் அடித்தொண்டையில் பேசிக்கொண்டே இருப்பாள். அவள்பேச்சை கேட்டு சிரிப்பதோ பதில்சொல்வதோதான் மேலே எழுந்து கேட்கும். பசவராஜு சத்தம்போடும்போது முகபாவனை மாறாமலேயே மாரியம்மாள் அமைதியாகிவிடுவாள்.

அச்சகங்களுக்கு பொதுவாக விடுமுறை விடுவதில்லை. வேண்டுமென்றால் விடுமுறை எடுக்கலாம், ஆனால் காசு போகும். பெரும்பாலானவர்கள் வருடக்கணக்காக ஒருநாள்கூட விடுமுறை எடுக்காதவர்கள். ஆகவே சினிமா பார்க்க நினைத்தாலும் முடியாது. இரவில் ஒலிச்சித்திரம் கேட்கலாம். ஆனால் அதுகூட அனேகமாக சாத்தியமில்லை. வீடுதிரும்பியதும் தண்ணீர் பிடிப்பது சமைப்பது துவைப்பது என ஏராளமான வேலைகள் இருக்கும். அவ்வப்போது கொஞ்சம் பாட்டுகேட்பதோடு சரி.

அக்காலத்தில் தொலைக்காட்சி கிடையாது. பணக்காரவீடுகளில் கறுப்புவெள்ளை தொலைக்காட்சி உண்டு. அதில் அலையலையாக படம் தெரியும். அந்த தொலைக்காட்சிநிலையம் கடலருகே இருப்பதனால்தான் அப்படி என்ற நகைச்சுவைத்துணுக்கை நான் பலமுறை வார இதழ்களில் பார்த்திருக்கிறேன். நான் சென்னை வந்தபின்னர் ஒரே ஒருமுறை ஒரு ஓட்டலில் கறுப்புவெள்ளை தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். மின்சார அழுத்தக்குறைவால் படம் நீர்ப்பிம்பம் போல நெளிந்துகொண்டிருந்தது. செய்தி சொல்லிக்கொண்டிருந்த பெண் வேடிக்கையாக உருமாறிக்கொண்டே இருந்தாள்.

அதை அச்சகத்திற்கு வந்து சொன்னபோது நானே அதை நடித்தும் காட்டினேன். பெண்களெல்லாம் அச்சுகோப்பை நிறுத்திவிட்டு பீரிட்டுச்சிரித்தனர். ‘அங்க என்ன சிரிப்பு? ஏண்டி சரசு?’என்று பசவராஜு அதட்டினார். அனைவரும் விதவிதமாக முகபாவனை வழியாக அவரை பழிப்புக் காட்டிவிட்டு வேலையைத் தொடர்ந்தனர். மாரியம்மாள் வாயை ஒருவிதமாக அசைத்தாள். பசவராஜுவுக்கு பெண்களின் உலகில் பழம் என்று பெயர். அவர் வாயை நீட்டி நீட்டி பேசுவதனால். பெண்கள் சிரிப்பை அடக்கிக்கொண்டார்கள்.

ஏன் அவர்கள் அவ்வளவு பேசிக்கொள்கிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாகவே இருக்கும். பேச்சு எப்போதும் அதுவரை பேசியதன் தொடர்ச்சியாகத்தான் இருக்கும். ஆகவே எனக்கு என்ன ஏது என்று புரிவதில்லை. மாரியம்மாள் வளவளவென்று பேசக்கூடியவளும் அல்ல. சுருக்கமாகவும் நுணுக்கமாகவும்தான் பேசுவாள். தொடர்ந்து கவனித்தால்தான் எல்லா அர்த்தங்களும் புரியும். ஆனாலும் பகலெல்லாம் பேசுவதற்கு அவளுக்கு விஷயமிருந்தது.

‘தாம்பூலத்து சுண்ணாம்பு போட நேரமாச்சு போல…’ என்று மோவாயால் சரஸ்வதியைக்காட்டி மாரியம்மாள் சொன்னாள். தாம்பூலம் என்பது சரஸ்வதியின் குழந்தை. ஒரு கிராமத்துக்கதையில் கறுப்புத் தம்பதிக்கு வெள்ளைவெளேரென்ற குழந்தை பிறக்கிறது. கணவன் பஞ்சாயத்துக்குச் செல்கிறான். பஞ்சாயத்துக்காரர் அவனிடம் வெற்றிலை போட்டு துப்பச் சொல்கிறார். பச்சை வெற்றிலையும் வெள்ளைச்சுண்ணாம்பும் மஞ்சள்நிறப்பாக்கும் சேர்ந்து எப்படி சிவப்புநிறமான தாம்பூலம் வந்தது என்று கேட்கிறார். அதேபோலத்தான் குழந்தை என விளக்குகிறார். சரஸ்வதியின் கணவன் மாநிறம். ஆனால் குழந்தை கரிநிறம் என்பது மாரியம்மாள் உத்தேசிக்கும் அர்த்தம்.

சரஸ்வதி பின்பக்கம் சென்றாள். ’டேய் உங்கூர்ல பசு வளக்கிறீங்களா?’

‘ஆமா’

‘யாரு கறப்பாங்க?’

‘நானும் கறப்பேன்…’

‘ஆகா…ஆளிருக்கே’ எல்லா பெண்களும் சிரித்தனர். நான் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். அதன்பின் அவர்கள் பேசிய எதுவுமே எனக்குப்புரியவில்லை.

‘என்னது?’ என்றேன்.

‘இவன் ஒருத்தன் என்னது என்னதுன்னு….டேய் ஒளுங்கா அச்சுபோடுறியா இல்ல கூப்ட்டுச்சொல்லவா?’

அச்சுகோர்த்தல் எனக்குச் சரிவராது என்று அதற்குள் புரிந்துகொண்டுவிட்டேன். எவ்வளவு முயற்சிசெய்தாலும் என்னால் இடவல எழுத்துக்களை திருப்பி கற்பனையில் வாசிக்காமலிருக்கமுடியவில்லை. மொழியை வெறும் அடையாளங்களின் குவியல்களாக ஆக்க முடியவில்லை.

சரஸ்வதியக்கா திரும்பிவந்தாள். மாரியம்மாள் ‘யக்கா, கட்டுங்க…’ என்றாள்.

’என்னது?’என்றேன்

‘ஆவின்’ என்றாள் மாரியம்மாள். நான் வாய் திறந்து மாறிமாறிப்பார்த்தேன். சிரிப்புடன் பெண்கள் குலுங்கினார்கள்.

மாரியம்மாள் ஆரம்பித்தாள் ‘இவளுக்கு என்னகேடு? இவ மூஞ்சியப்பாத்தா எனக்கே பேதி புடுங்கினுபோற மாதிரி இருக்கு….கமல் எப்டி சகிச்சுக்குவாரு? கண்ணாடியில பாக்கமாட்டாளா? சொம்மா மேக்கப்பு பவுடருண்ணு அள்ளிபோட்டுனு… சிமிண்டு. அவளப்பாத்தா சிமிண்டுல வேலபாக்கிற சித்தா கணக்கால்ல இருக்கா….ஏண்டி அவள சிமிண்டுனு சொன்னா என்னடீ….சிமிண்டுக்கு வந்த வாழ்வ பாத்தியா? ஸ்ரீதேவின்னா அவளுக்கு ஒரு இது இருக்குல்ல? என்னா மாதிரி இருக்கா’

‘அவ மூக்கு கூட ஒருமாதிரி பெருசாத்தானே இருக்கு?’ என்றாள் அனுராதா.

‘மூக்கு பெருசா இருந்தாத்தாண்டி எல்லாமே பெருசா இருக்கும்… சும்மாவா கமல் அவள ஈரோயினா போட்டு சினிமா எடுக்கறாரு?’

‘இளமை ஊஞ்சலாடுகிறதுலே இவதானே?’

‘சிமெண்டைப்பத்தி பேசினே உன்னுதுல சிமிண்ட ஊத்தி மூடிருவேன்….ஏண்டி, வாழ்வேமாயத்திலே அவள தேவ்டியான்னுதானே காட்டியிருந்தாரு கமலு? அவமூஞ்சியும் அவளும்…’

அப்படியே மதியம் தாண்டி மாலை ஆகிவிடும். ‘நாளைக்கு வந்து வச்சுக்கறேன் இவளே…நீ என்னடி சிமிண்டுக்கு தோஸ்தா? உம்மூஞ்சிகூடத்தான் மாவுல குதிச்ச எலிமாதிரி இருக்கு….’

‘போடி’

‘நீ போடி…மல்லியப்பூ சிங்காரி…ரோட்ல நிக்காத….அஞ்சுரூவா வச்சுனு ரிக்சாக்கார கபோதி கூப்டிரப்போறான்’

அந்த சினிமா விவாதத்தில் சரஸ்வதியக்கா அதிகம் கலந்துகொள்வதில்லை. அவளுக்கு அதெல்லாம் என்ன ஏது என்று பெரிதாகப்புரியவில்லை என்று தோன்றும். அந்த ஐந்துபேருக்குள் நடந்துகொண்டிருக்கும் விவாதத்தில் தொடர்ச்சியாக உள்ளே இருந்தால்மட்டும்தான் அதை புரிந்துகொள்ளமுடியும். எனக்கே ஓரங்கள்தான் பிடிகிடைக்கும்.

‘அவமூஞ்சியும் அவளும்…மூணாம்பிறையாமே….அசிங்கமா பேரு வச்சிருக்கானுக சினிமாவுக்கு…ஏண்டி அவல்லாம் முளுப்பிறைதானே?’புதிய போஸ்டர்களைக் கண்டதும் மாரியம்மாள் மாறிவிட்டாள். ‘எலி கத்துறமாதிரி கத்துறா….கீச்சுகீச்சுன்னு. முஞ்சூறு…மூஞ்சியும் அவளும். இந்தக் கமலுக்கு என்ன கேடு? நாட்டிலே பாக்கச்சகிக்கிறமாதிரி மூஞ்சியா இல்ல? பத்துரூவாத்தேவ்டியா மாதிரி இருக்கா…தூத்தெறி’

சரஸ்வதியக்கா எப்போதுமே தாமதமாகத்தான் வருவாள். ‘இங்க என்ன தேரோட்டமா நடக்குது ஆடியசைஞ்சு வாரதுக்கு? யம்மா தாயே இது ஆப்பீஸு. தொளிலு நடக்கிற எடம்’ என்று பசவராஜு ஆரம்பிப்பார்.

‘அண்ணே, கொழந்தை அழுதுச்சுண்ணே’

‘அது வாயில ஒரு பப்புருமுண்ட வச்சுப்போட்டு வா…அதெல்லாம் சொன்னா தொளிலுக்காவுமா?’

ஆனாலும் தாமதமாகத்தான் வருவாள். ஒருநாள் அவள் கணவன் வந்துவிட்டான். மாரியம்மாள் சொன்னது போலில்லாமல் அவன் கருப்பாகத்தான் இருந்தான். காக்கி உடைபோட்டிருந்தான். நகரப்பேருந்தில் நடத்துனர்.

‘சரசு வரிலேயே நாகப்பா…’ என்றார் பசவராஜு.

‘ஊட்லேருந்து அப்பவே கெளம்பிட்டாளே….இன்னாசார் நான் சொல்றது…புள்ளைக்கு ஒடம்புசரியில்ல…அம்மாவுக்கும் காச்சலு. இவதான் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோவணும்.. சொல்லினு போலாம்னு வந்தேன்….அம்மாவுக்கு காச்சலானா நடக்கமுடியறதில்ல…இன்னா சார் நான் சொல்றது . நடக்கமுடியாததனால இந்தமாதிரி என்னையக் கூப்டு இந்தா நாகப்பா உன் பெஞ்சாதி மேனாமினுக்கிக்கிட்ட சொல்லு. அவ கூட்டினு போவட்டும். என்னால முடியாதுன்னு சொன்னா. நான் இவளப்பாத்தா காணும்…இன்னா சார் நான் சொல்றது?. கேட்டா அச்சாபீஸு கெளம்பிட்டான்னு அம்மா சொன்னா. அம்மாக்கு காச்சலு வேற. நடக்கமுடியாது. இன்னாசார்? அப்டியே சைக்கிளை எடுத்தினு இங்கவந்தேன்…அப்பதான் நீ சொல்றே அவ இங்கியும் வர்லேன்னு. இன்னா சார் நான் சொல்றது? அவள பாத்துனுதான் நான் ஆபிஸாண்ட போணும்…எனுக்கு பத்துமணி டூட்டி. எங்க ஆபீசரு ஒருத்தன் இருக்கான் தேவசகாயம்னு பேரு…தெக்குத்தி ஆளு. குண்டா லம்பா இருப்பான்… இன்னா சார் நான் சொல்றது?’

மேலும் முக்கால்மணிநேரம் கழித்து வியர்த்துவழிந்தபடி சரஸ்வதியக்கா வந்தாள். வரும்போதே கணவனைத் திட்டிக்கொண்டிருதாள் ‘என்னய்யா உனக்கு? நாந்தான் சொன்னேனே, சீட்டுக்காச எடுக்கணும். முருகையனப் பாத்துட்டுதான் வருவேன்னு? அதுக்குள்ள என்ன அத்து விளுதுன்னு கெளம்பி வந்து நின்னிட்டுருக்கே?’

‘முருகையன் சொல்லலியே’

‘ஆமா உங்கிட்ட சொல்றான்…இப்ப என்ன?’

‘புள்ளைக்கு உடம்புசரியில்ல…பாலுகுடிச்சாப்ல அப்டியே வாந்தி…அம்மா சொல்றா அவளுக்கு காச்சலு….அந்த மேனாமினுக்கிகிட்ட சொல்லுன்னு சொல்றா. நான் என்ன சொல்றேன்னா’

‘சரி சரி நீ கெளம்பு…நான் அண்ணன்கிட்ட பர்மிசன் கேட்டுட்டு வந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோறேன்’

‘நீ வேணா அப்றமா…’

யோவ் கெளம்புய்யா’

‘சரி நான் வாறேன் எனக்கு இப்ப பத்துமணிக்கு டூட்டி’

‘யோவ் பொறையிலே செவப்பா ஒரு மாத்திர இருக்கு…அதில பாதிய புட்டு பொடிச்சு பாலோட புள்ளைக்கு குடுத்திட்டு போ..நான் வந்திடறேன்’

‘செவப்பு மாத்திரையா? சின்னதா இருக்குமே’

‘அய்யோ அது கெளவியோட மாத்திர…நீ ஒண்ணியும் செய்யவேண்டாம்…நான் பாத்துக்கறேன்’

‘நான் வேணுமானா..’

’நீ மொதல்ல போய்யா….’ என்று உள்ளே வந்துவிட்டாள்.

அன்று அவள் கொல்லைப்பக்கம் போனதும் மாரியம்மாள் ‘எங்கியோ எலிசெத்திருக்கே’ என்றாள்.

நான் ‘எங்க? எனக்கு நாறல்ல?’ என்றேன்.

‘எனக்கு நாறுது…’

அதன்பின் எலி என்ற சொல் அடிக்கடி அடிபட்டது. எலிமூஞ்சி என்றால் அது நடிகையைக் குறிக்கும். எலி என்றால் அது சரஸ்வதியக்காவின் விவகாரம். ஆனால் அது என்ன என்று எனக்குப்புரியவில்லை.

‘எலிசெத்தா அதுவே சொல்லும்…இங்கேருக்கேன் இங்கேருக்கேன்னு…எறும்பு தேடிப்போவும்…வரட்டும்’

எப்டிடீ கண்டுபுடிக்கிறது?’

‘புடிப்போம்…புடிப்போம்…புடிக்காம எங்கபோறம்? வாங்கக்கா….அண்ணன் உங்கள இப்பம்தான் கேட்டாரு’

என்னுடைய கதை ஒன்று விகடனில் வந்தது. நான் அதை அச்சகத்தின் மேஜையில் போட்டிருந்தேன். பசவராஜு ‘என்ன குடுக்கான் கதைக்கு? இங்க இந்தமாதிரி ஒண்ண எளுதி நாவலுன்னு குடுத்து காசு வாங்குறே’ என்றார்.

‘அதுக்காக நீங்களும் விகடனும் ஒண்ணா? சும்மா பெனாத்தப்பிடாது’

அது ஒரு கள்ளஉறவின் கதை. கணவனுடன் இருபதுவருடம் ஒழுக்கமாக வாழ்ந்தபெண் அவன் இறந்துபோனபின்னர் ஒருமாதம் கழித்து தன் பிறந்த வீட்டுக்குப்போய் தன் காதலனின் பழைய படம் ஒன்றை எடுத்துப்பார்க்கிறாள். அதை மார்போடு அணைத்து அழுகிறாள். ‘இவ என்னத்துக்கு அழுறா?’ என்றாள் செல்வி.

‘கொளுப்பு…’ என்றாள் மாரியம்மாள் ‘வேணுமானா அந்தாளை தேடிப்போயி படுத்துக்கிட வேண்டியதுதானே?’

மதியம் சாப்பிடும்போதுதான் சரஸ்வதியக்கா அதை வாசித்தாள். மற்றவர்கள் சாப்பிடும்போது என்னிடம் வந்து ‘என்ன இது , இப்டி எளுதிருக்கே?’ என்றாள்.

‘ஏன்?’

‘அவ என்ன பொம்புளையா இல்ல வேசியா?’

‘என்னக்கா இப்டிச் சொல்றீங்க?’

‘மானமுள்ள பொம்புள ஒருநாளைக்கும் இப்டிச்செய்யமாட்டா…. அப்டீன்னா அவ அந்தாளை நெனைச்சுட்டுல்ல இவன்கூட இருந்திருக்கா….தேவ்டியா’

‘அதில்ல…’

‘நீ ஒண்ணும் சொல்லவேணாம்….நல்ல பொம்புள அப்டி ஒருநாளைக்கும் செய்யமாட்டா’ அதற்குள் அவள் கண்கள் கலங்கிவிட்டன.  ‘ஒரு தேவ்டியாள வச்சு நீ எல்லா பொம்புளைங்களையும் பாக்கப்பிடாது’

‘அதில்லக்கா’

’நீ என்ன சொன்னாலும் சரி, இந்தமாதிரி எழுதுறதெல்லாம் தப்பு’ என்று திரும்பிசென்றுவிட்டாள்.

நான் பின்னர் அவள் கண்களைப் பார்ப்பதையே தவிர்த்தேன். அவளும் என்னிடம் பேசாமலானாள். கட்டை வைக்க தேடியபோது என்னருகே நின்றிருந்தவள் கட்டையை என்னை நோக்கி நீக்கிவைத்தாள், என்னைப்பார்க்காமல்.

அதை மாரியம்மாள் கவனித்திருப்பாள். கொஞ்சநேரம் கழித்து தாள் எடுக்க நான் அறைக்குச் சென்றபோது பின்னால் வந்து ‘என்ன போண்டா கூட சண்டையா?’ என்றாள்.

‘இல்லையே’

‘டேய் …நான் எல்லாத்தையும் பாத்தேன்…நீ அவள என்ன சொன்னே?’

‘அய்யோ….நானா?’

‘இல்லேன்னா என்ன சண்ட?’

‘இல்லக்கா…அவங்கதான் என் கதைய தப்புண்ணு சொல்லி பேசாம இருக்கிறாங்க’

என் வாயிலிருந்து திறமையாக விஷயத்தை எடுத்துவிட்டாள் மாரியம்மாள் என சொன்னபின் உணர்ந்தேன். மாரியம்மாள் ‘ஆமா இவ பெரிய பத்தினி….ரயில்வேஸ்டேஷனே நாறுது’ என்றாள்.

‘என்னது?’

‘கேன்டீன் வச்சிருக்கிற ராவு தெனம் போண்டா சாப்புடறாராமே’

நான் அதிர்ந்துபோனேன்.மாரியம்மாள் பேச்சின் ரீதிப்படி அவள் என்ன சொல்கிறாள் என்பது எனக்குப்புரிந்தது. சட்டென்று கடுமையான கோபம் என் தலைக்கு ஏறியது. அப்படியே சென்று கட்டையைத்தூக்கி அவள் தலையில் அறைந்துவிடவேண்டும் போலிருந்தது.

ஆனால் நான் கொந்தளிப்புடன் அச்சுகோர்க்கமட்டுமே செய்தேன். என் கையிலிருந்து பலகை நழுவி அச்சுகோத்தது முழுக்கச் சிதறியது. எல்லாரும் திகைத்து என்னைப்பார்த்தார்கள்.

‘அங்க என்ன? யாரு கீழபோட்டது?’

‘நான்தான்’ என்றேன்.

‘எழுத்து காணாமப்போனா யாரு வாங்குறது? இதெல்லாம்–’

‘யோவ், நான் எழுதறத வச்சு சம்பாரிக்கிறேல்ல, அதில வாங்குய்யா’ என்றேன்.

பசவராஜு திகைத்துப்போனார் ‘இல்ல நான் சொல்லவாறது’

‘நீ ஒண்ணும் சொல்லவேண்டாம்…’

பசவராஜு தலைகுனிந்து மெய்ப்பு பார்க்க ஆரம்பித்தார்.

சாயங்காலம் கிளம்பும்போது மாரியம்மாள் என்னிடம் ரகசியமாக ‘அப்ப உள்ளுக்குள்ள அதான் நினைப்பு, என்ன?’ என்றாள்.

‘என்ன நினைப்பு?’

‘இல்லேன்னா எதுக்கு கோவம்?’

‘என்னடீ?’

‘போண்டாக்கு உனுக்கு வயசாகலியே தம்பி’

நான் அவளைத் துரத்திச்சென்று வெட்டிப்போட ஆசைப்பட்டேன். என்ன ஒரு விஷக்கிருமி என்று நினைக்கநினைக்க ஆறவில்லை. இவள் வாழ்க்கையில் வேறு எதைப்பற்றியாவது நினைப்பாளா? யாரைப்பற்றி வேண்டுமானாலும் பழிசொல்வாள். எந்த வாழ்க்கை அழிந்தாலும் கவலையில்லை. நான் கதைகளில்தான் அவளைப்போன்ற பெண்களை கண்டிருக்கிறேன்.

இரவு திண்ணையில் படுத்திருக்கையில் கொதித்துக்கொண்டே இருந்தேன். தூக்கமே வரவில்லை. இரவு வெகுநேரம் கழித்து மிக அந்தரங்கமாக ஒன்றை உணர்ந்தேன். நான் அச்சகத்தில் சரஸ்வதியக்காவை மட்டும்தான் பார்ப்பேன். அதை மாரியம்மாள் கவனிக்காமலிருந்திருந்தால்தான் ஆச்சரியம். அதை நினைத்தபோது மாரியம்மாள் மீது இன்னும் வெறி எழுந்தது.

மறுநாள் மாரியம்மாளை ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். எதிலாவது மாட்டிவிடவேண்டும். அவமானப்பட்டு அவள் அழவேண்டும். என்ன செய்வது? விதவிதமாக கற்பனைசெய்தேன். ஒவ்வொரு கற்பனையும் என்னை வன்மம் மிக்க களிப்புக்கு ஆளாக்கின.

மாரியம்மாள் வெளியே செல்லும்போது நான் பின்னால் சென்றேன். கையில் ஒரு பிடி எழுத்துருக்கள் இருந்தன. அவற்றை அவளுடைய பையில் அவள் அறியாமல் போட்டுவிட்டு அவற்றை அவள் திருடிக்கொண்டு போய் பையில் போடுவதைப்பார்த்தேன் என்று சொல்லவேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால் அவள் கொல்லைப்பக்கம் திண்ணையில் காலெடுத்துவைத்து எதையோ செய்வதைக் கண்டு ஓரமாக நின்று பார்த்தேன்.

அவள் முழங்காலில் ஒரு பெரிய ரணம் இருந்தது. வட்ட வடிவமாக குழிந்து விளிம்புகட்டிய ரணம். அதனுள் சதை வெண்மையாக இருந்தது. அதில் அவள் ஏதோ களிம்பை பூசிக்கொண்டிருந்தாள்.

அதைப்பற்றி முன்னரே பலமுறை அவர்கள் பேசிக்கேட்டிருந்தேன். மூன்றுவருடங்களுக்கும் மேலாகவே அந்த ரணம் இருக்கிறது. பலமுறை டாக்டரிடம் காட்டிவிட்டார்கள். ஊசிபோட்டால் கொஞ்சம் குணமாகும். மீண்டும் ஆரம்பிக்கும். ஹோமியோ டாக்டர் சந்தனக்குமார் அது அச்சாபீஸ் ஈயம் அவள் உடலில் ஊடுருவியிருப்பதனால்தான் என்று சொன்னாராம்.

அது உண்மைதான் என்று கம்பாசிட்டர் அருமைராஜ் சொன்னார். அவருக்கும் பல வருடங்களாக இரண்டு ரணங்கள் இருந்தன. ‘இந்த தொளிலுக்குண்டான கூலி அது….ஒண்ணும் செய்யமுடியாது’ . மாரியம்மாள் வேலைக்குவந்து இருபத்திரண்டு வருடங்களாகின்றன. அச்சாபீஸ் பெண்களில் அவளுக்குத்தான் அதிக அச்சக அனுபவம்.

நான் மெல்ல வெளியே சென்றேன். என்னைக்கண்டதும் அவள் பாவாடையை தாழ்த்தினாள். ‘புண்ணா?’ என்றேன்.

அவள் முகம் மிகவும் தீ பட்டதுபோலச் சுருங்கியது. கண்களில் ஒரு வினோதமான இடுக்கம். அதைக்கண்டதும் எனக்குள் குரூரமான ஓர் எழுச்சி உருவானது. ‘அப்ப இந்த புண்ணு ஆறின பிறகுதான் உனக்கு ஒரு கலியாணம் நடக்கணும் இல்ல?’ என்றேன்.

அவள் நடுக்கத்துடன் ஏதோ சொல்ல வருபவள்போல வாய் திறந்தாள். நான் சட்டென்று உள்ளே வந்துவிட்டேன்.

படபடப்பாக இருந்தது. ஒருவரை கொலைசெய்துவிட்டு வந்ததுபோல உணர்ந்தேன். கிளர்ச்சியும் சுயவெறுப்பும் சரிசமமாகக் கலந்த நிலை. சில நிமிடங்களுக்குப்பின் கசப்பு நிறைந்தது. கணம் கணமாக கசப்பு வளர்ந்து சென்றது. அவள் வருவதை எதிர்பார்த்து நின்றேன்.

அவள் நெடுநேரம் வரவில்லை. நேரம் செல்லச்செல்ல என் பதற்றம் ஏறி வந்தது. ‘எங்கடிபோனா இவ?’ என்றாள் மீனாட்சி.

சரஸ்வதியக்கா திரும்பாமல் ‘தூரமோ என்னமோ’ என்றாள்:

மீனாட்சி ‘இல்லியே’ என்றாள்.

‘ஆமா இவ கண்டா’

மேலும் நேரம் சென்றது. நான் பதற ஆரம்பித்தேன். மாரியம்மாள் வந்ததும் அவளிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். என்ன பேசுவது? நான் எதையும் உத்தேசிக்கவில்லை என்றா? அது இன்னமும் மோசமாகிவிடும். பகிரங்கமாக கேட்கக்கூடாது. தனிமையில் கேட்கவேண்டும். ஆனால் அவள் அதை நாடகமாக்கிவிட்டால்? என்னை அவமதித்துவிட்டால்?

ஆனால் அதை அவள் இப்போதுகூடச் செய்யமுடியும். வெளியே வந்ததும் என்னை அவமதிக்கமுடியும். ஆனால் அவள் அதை அப்படிச்செய்யமாட்டாள். ஞாபகத்தில் வைத்திருப்பாள். என்னை கவனித்துக்கொண்டே இருப்பாள். சரியான இடம் அமைந்ததும் நஞ்சைக் கக்குவாள். என் மிஞ்சிய வாழ்நாள் முழுக்க நான் அதை நினைத்து எரிந்துகொண்டிருக்கும்படி எதையாவது செய்வாள்.

மாரியம்மாள் உள்ளே வந்தபோது சாதாரணமாக இருந்தாள். ‘என்னடி லேட்டு?’ என்றாள் மீனாட்சி.

‘ம்ம்? தும்மலு…சூப்பரா ஒரு தும்மலு எடுத்துட்டு வந்தேன்’

‘என்ன தும்மலு?’என்றாள் சரஸ்வதியக்கா.

‘பொடியில்ல….மூக்குப்பொடி…அதவச்சா வருமே அது’

பெண்கள் சிரிக்க ஆரம்பித்தார்கள். சிரிப்பு நின்று மீண்டும் ஆரம்பித்தது. பின்பு மீண்டும். நினைத்து நினைத்துச் சிரிக்க அதிலென்ன இருக்கிறதென்று புரியவில்லை. அவள் கண்களைச் சந்திப்பதை தவிர்த்தேன். மதியம் தற்செயலாகச் சந்தித்தபோது கண்கள் நட்புடன்தான் இருந்தன. ‘என்னவே, நல்லா இருக்கீராவே?’ என்றாள்.

ஒருவாரம் வரை எனக்கு ஒரு தவிப்பு இருந்துகொண்டுதான் இருந்தது. பின்பு மறந்துவிட்டேன். ஒருநாள் காலையில் கம்பாசிட்டர் அருமைராஜ் பாய்ந்தோடி வந்தார்.’மொதலாளி…டேசன்ல அடி…ஓடிப்போங்க..கொலை நடந்திரும்னு தோணுது’

‘என்னடா? என்னடா?’ என்றார் பசவராஜ்.

காண்டீன் நடத்தும் ராவை சரஸ்வதியக்காவின் கணவன் அடிக்கப்போயிருக்கிறான். கம்பியால் தலையில் தாக்க காண்டீன் ஆட்கள் அவனைப்பிடித்து அடித்திருக்கிறார்கள். கையில் கம்பியுடன் கொலைசெய்துவிட்டுத்தான் போவேன் என்று நின்றிருக்கிறான்.

‘ஏண்டா?’

‘இவ, இந்த மிண்ட உள்ள இருந்திருக்கா…ராவ்கூட’

‘ராவுகூடவா…இவளா?’

‘அது ஓடீட்டிருக்கே மொதலாளி நாலுமாசமா’ அருமைராஜ் சொன்னார் ‘நீங்க இப்ப போனீங்கன்னா கொலை நடக்காம பாக்கலாம்…இல்ல கவிச்சிதான்’

பசவராஜ் பயந்து ‘நான் என்னத்தக் கண்டேன்…எனக்கு எதுக்குடா அதெல்லாம்…’ என்று பதுங்கினார்.

‘நான் போயி பாத்துட்டு வாரேன்’ என அருமைராஜ் மீண்டும் கிளம்பினார்.

‘டேய் உள்ள போய்டாதே… உன்னைபாத்துட்டு இங்க வந்திரப்போறான்’

ஆனால் அருமைராஜ் போகும்போது எல்லாம் முடிந்துவிட்டிருந்தது. கணவன் சரஸ்வதியக்காவை கூட்டிக்கொண்டு சென்றுவிட்டானாம்.

‘அவள அந்தாள் வெட்டிருவான்….இன்னிக்கே பொலி போட்டிருவான்’

’போலீஸ்ல சொல்லவேண்டாமா?’ என்றேன்.

‘சாவட்டும் சவத்து மிண்ட’ என்றார் பசவராஜ்.

எனக்கு பீதியாக இருந்தது. கொலை நடந்துவிடுமா? கைகள் அச்சில் நகரவில்லை. மாரியம்மாள் என்னிடம் மெல்ல ‘கொன்னிருவான்னு நெனைக்கறியா?’

‘கொல்லமாட்டானா?’

‘போண்டாவ எவனாவது தூரப்போடுவானா? அந்தாளுக்கு காஞ்ச வத்தலே அதிகம்…’

நான் அவள் கண்களைப்பார்க்கவில்லை.

‘எனக்கு என்னான்னு நெனைக்கிறே…ஆமா , எனக்கு எரியுதுதான். சனியனுக்கு ஒண்ணுக்கு ரெண்டால்ல அமையுது…’ அவள் சட்டென்று எல்லா அச்சுக்களையும் தரையில் வீசினாள். முகம் சிவந்து போயிருந்தது. நான் அன்று கண்ட அதே முகச்சுளிப்பு.

அவள் சொன்னது சரிதான். சரஸ்வதியக்கா மீண்டும் வேலைக்கு வரவில்லை, பசவராஜ் காசைக்கொடுத்தனுப்பி வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஆனால் ஒருவாரம் கழித்து சாலையில் அவளும் கணவனும் குழந்தையுடன் சிரித்துப்பேசிக்கொண்டே செல்வதைக் கண்டேன்.

முந்தைய கட்டுரைஇரு கடிதங்கள்
அடுத்த கட்டுரைகடல் – கொரிய திரைவிழாவில்