உமிழ்தல்

பேராசிரியர் ஜி.குமாரபிள்ளையை நான் முதலில் சந்தித்தது 1986-இல் சுந்தர ராமசாமிக்கு ஆசான் விருது கிடைத்ததை ஒட்டி திரிச்சூரில் ஆற்றூர் ரவிவர்மா ஏற்பாடு செய்திருந்த பாராட்டுக்கூட்டத்தில்தான். நிகழ்ச்சிக்கு அவர்தான் தலைவர். அன்று திரிச்சூரில் பெரும்பாலான இலக்கியக்கூட்டங்களுக்கு தலைவராக அவரைத்தான் வைப்பார்கள். அவர் இடதுசாரிகள் வலதுசாரிகள் இரு சாராரின் மதிப்பையும் பெற்றவர். கறாரானவரும்கூட. நிறுத்தா பிரசங்கிகளையும் ‘கலகக்காரர்களை’யும் அவர் மட்டும்தான் கட்டுப்படுத்த முடியும்.

நான் முதன்முதலாக மலையாளத்தில் மேடையேறிப் பேசியது அன்றுதான். உரையை எழுதித் தயாரித்து மனப்பாடம் செய்து நினைவிலிருந்து சரளமாகவே பேசிவிட்டேன். தமிழிலக்கியத்தின் வரலாற்றை சுருக்கமாகச் சொல்லி அதில் ராமசாமியின் இடமென்ன என்பதை விளக்கினேன்.

ஜி.குமாரபிள்ளை நிகழ்ச்சி முடிந்தபின் என்னிடம் ‘பேச்சை எழுதிக்கொண்டு வந்தாயா?’

‘ஆமாம்’ என்றேன்.

‘அது நல்லது. பேச்சு தேவையின்றி நீளாது….கடைசிவரை அதையே செய்துகொண்டிரு..ஒரளவு பேச்சு வர ஆரம்பித்ததும் அதைவிட்டுவிடாதே’

நான் இன்றும் அதைத் தொடர்கிறேன். திரிச்சூருக்கு வரும்போது தன்னை வந்து பார்க்கும்படிச் சொன்னார். ஆனால் பெரும்பாலும் அவர் பயணத்தில்தான் இருப்பார். நான் அவரை நாலைந்து கூட்டங்களில் சந்தித்தேன். ஒருமுறை கூட வீட்டுக்குச் சென்று சந்திக்கமுடியவில்லை.

1923 ஆகஸ்ட் 22-ஆம் தேதி கோட்டயத்திற்கு அருகே உள்ள வெந்நிமலை என்ற ஊரில் பிறந்தார். பெரிந்தர பி கோபாலபிள்ளை தந்தை. பார்வதியம்மா தாய். சங்கனாச்சேரி எஸ்பி கல்லூரியில் மலையாள இலக்கியத்தில் பட்டம் பெற்றார். பல்கலைக்கழகக் கல்லூரிப் பேராசிரியராக திருச்சூரில் பணியாற்றினார்.

இளமையிலேயே காந்தியத்தில் ஈடுபாடுகொண்ட குமாரபிள்ளை கடைசி வரை சலிப்படையாத சர்வோதயச் செயல்பாட்டாளராக இருந்தார். பிறவிப்போராளி என்று அவரை அடையாளப்படுத்துவதுண்டு. அரைநூற்றாண்டுகாலம் அவர் பங்கெடுக்காத மனித உரிமைப்போராட்டங்கள், சுற்றுச்சூழல் போராட்டங்கள் கேரளத்தில் நிகழ்ந்ததில்லை. மதுவிலக்கு, ஆதிவாசிகள் நலன் ஆகியவற்றுக்காக கடைசிநாள் வரை களத்திலிருந்தார்.

கேரளத்தின் மரபுக்கவிஞர்களில் குமாரபிள்ளை முக்கியமானவர். அரளிப்பூக்கள், பாலைவனத்தில் கனவுகள். நினைவின் நறுமணம்,சப்தஸ்வரம் ஆகிய கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. கேரள சாகித்ய அக்காதமி விருது பெற்றார். 2000 செப்டெம்பர் 17-இல் மறைந்தார்.

ஜி.சங்கரப்பிள்ளையின் கவிதைகளைப்பற்றிய ஒரு இலக்கியவிமர்சனக்கூட்டம் நடந்தது. சங்கரப்பிள்ளை கேரள தீவிர இடதுசாரிகளின் கவிஞர். கூட்டம் ஆரம்பிக்க இன்னும் நேரமிருந்தது. ஒரு நண்பரின் பைக்கின் பின்னால் அமர்ந்து குமாரபிள்ளை வந்து சேர்ந்தார். கதர் ஆடை. நரைத்த தலை. பிரியமான புன்னகை. என்னைக் கண்டதும் தழுவிக்கொண்டு ‘என்னா தமிழுபுலீ?’ என்றார். நான் அன்று விடுதலைப்புலிகளை ஆதரித்து மலையாளத்தில் எழுதிக்கொண்டிருந்தேன்.

நாற்காலிகளில் அமர்ந்துகொண்டோம். நாலைந்து நண்பர்கள் கூடவே இருந்தார்கள். ஒரு தீவிர இடதுசாரி அறிவுஜீவி மெல்லிய மதுவாசனையுடன் குமாரபிள்ளையைத் தேடிவந்தார். சதானந்தன் என்று பெயர். அழுக்கு ஜிப்பா, பங்கரையான தோற்றம். நக்சலைட் இயக்கத்தில் இருந்து போலீஸால் வேட்டையாடப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகி வாழ்க்கையை இழந்தவர். பின்பு அவ்வியக்கத்திலும் அவநம்பிக்கை கொண்டு தனியாளாக மாறியவர். குடிதான் அவரை நடமாடச் செய்தது.

‘ஆசானே, ஆசான் அய்யந்தோளில் மதுவிலக்கு கோரி சாலைமறியல் செய்வதாக சுவரொட்டியில் பார்த்தேனே’ என்றார்.

‘அது முடிந்துதான் வருகிறேன்’ என்றார் குமாரபிள்ளை.

‘ஆசானுக்கு பைத்தியம். காந்தி செத்துப்போய் அவரது எலும்பும் மட்கிவிட்டது. காந்தி யார்? தெரியாமல் கேட்கிறேன். அவர் ஒரு பூர்ஷுவா தரகர். இந்த நாட்டு ஏழைகள் புரட்சி செய்யாமலிருப்பதற்காக ஏவப்பட்டவர்…அவரது பொருளாதார திட்டமெல்லாம் வெறும் கனவு….ஃபேபியன் சோஷலிசம்…காந்தியின் போராட்டம் என்பது வெறும் பம்மாத்து…’

சதானந்தன் முழங்கிக்கொண்டே இருந்தார். பேசப்பேச புதிய புதிய வாதங்கள் கிளம்பிவந்தன. ஒருகட்டத்தில் அவரே களைத்துப்போய் அமர்ந்துவிட்டார். குமாரபிள்ளை புன்னகையுடன் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தார்.

”காந்தியை நான் வெறுக்கிறேன்….மனிதர்களிலேயே நான் வெறுக்கக்கூடிய ஒரே ஆள் அவர்தான்….த்தூ….ஆஅய் த்தூ’ என்று சதானந்தன் காறித்துப்பினார்.

‘சதானந்தா, இன்றைக்கு காந்தி இங்கே ஒரு கருத்துத் தரப்பே இல்லை. அவரை முன்வைத்துப்பேசக்கூடிய எவரும் இங்கே அதிகாரத்தில் இல்லை. அப்படியென்றால் நீ யாரிடம் இதையெல்லாம் சொல்லி வாதிடுகிறாய்?’ என்றார் குமாரபிள்ளை.

சதானந்தன் ‘காந்தி ஒரு அயோக்கியர், ஒரு தீயசக்தி’ என்றார்.

‘சதானந்தா, உனக்குள் இருக்கும் காந்தியை இப்படி கஷ்டபட்டுதான் நீ வாந்தி எடுக்கமுடியும்…ரத்தமே கக்கினாலும் கொஞ்சம் மிச்சமிருப்பார்…ஏனென்றால் நீ ஒரு இலட்சியவாதி’

சதானந்தன் புரியாதவர் போல பார்த்துக்கொண்டே இருந்தார். பின்பு சட்டென்று எழுந்து சென்றுவிட்டார்.

‘ஐம்பது வருடங்களாக எதிர்ப்பவர்களால் நிலைநாட்டப்பட்டு வரும் ஒரு சக்திதான் காந்தி’ என்றார் குமாரபிள்ளை.

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் முதல்வாசிப்பு – ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைபுறப்பாடு II – 13, காற்றில் நடப்பவர்கள்